Tuesday, June 29, 2010

Sai baba and Upasini Maharaj.

சாயிபாபாவும் உபாசினி மகராஜும்

சீரடி சாயிபாபாவின் சரித்திரத்தில் உபாசினி மகராஜைப் பற்றிக் கூற முடியாவிடில் அந்த சரித்திரம் நிறைவு பெறாது. அவரை எந்த வழிகளில் எல்லாம் சாயி பாபா தன்னுடைய வாரிசாக உருவாக்க நினைத்தார் என்பது வியப்பான செய்தி. இனி உபாசினி மகராஜின் கதையைப் படியுங்கள் .
மனிஷா


உபாசினி மகராஜ்
1870 ஆம் ஆண்டு மே மாதம் பதினைந்தாம் தேதியன்று நாசிக்கிற்கு அருகில் உள்ள சதானா என்ற கிராமத்தில் பிறந்தவரே காசிநாத். பின்னர் அவர் சத்குரு நாராயண மகராஜ் மற்றும் சீரடி சாயி பாபா மூலம் சத்குருவானார். அவருடைய தந்தையின் பெயர் கோவிந்தா சாஸ்தரி மற்றும் தாயாரின் பெயர் ருக்மிணிபாய் என்பது. பெரும் பண்டிதரான அவருடைய தாத்தாவின் பெயர் கோபால் சாஸ்தரி. காசிநாத் தன பெற்றோருக்கு இரண்டாவது மகன்.

காசிநாத் மற்ற குழந்தைகளைப் போல இல்லை என்றாலும் பெரிய புத்திசாலி என்பதும் இல்லை. சற்றே வயதான பொது அவர் இரண்டு விஷயங்களில் தனிக் கருத்தைக் கொண்டு இருந்தார். பள்ளியில் சென்று படித்து முன்னேறுவது வேறு எதற்கும் அல்ல, மாறாக உணவிற்காக என்றே நினைத்தார். மூன்று வருட காலம் பள்ளியில் படித்தவருக்கு அவருடைய ஆசிரியர் பிரம்படி தந்து கல்வி போதிப்பதில் உடன்பாடு இல்லை. அது அவருக்குள் ஒரு மாற்றத்தை தந்தது. அடுத்து துன்பத்தைத் தருவதே இந்த உடம்பு என்று எண்ணினார். ஆகவே அவர் ஆசனங்கள் செய்வதிலும் யோகக்கலை செய்வதையும் வாழ்க்கையாக வைத்துக் கொள்ள ஆரம்பித்ததினால் அவருடைய குடும்பத்தினருக்கு தலை வலியானார்.

அடிக்கடி பக்கத்தில் இருந்த காட்டுப் பகுதிக்குள் சென்று தவம் இருக்கலானார். அதனால் கவலைக் கொண்ட அவருடைய பெற்றோர்கள் அவருக்கு பதினாலு வயதான போதே ஒரு எட்டு வயது இளம் பெண்ணான துர்கா என்பவளுக்கு அவரை மனம் செய்து வைத்தனர். அது அவருடைய வாழ்கையில் இந்த மாற்றத்தையும் கொண்டு வரவில்லை. மாறாக ஒரு குறிப்பு எழுதி வைத்துவிட்டு ஒருநாள் வீட்டை விட்டு ஓடிவிட்டார். ஆனால் நெடு நாட்கள் அவரால் தன பெற்றோரை மறந்துவிட்டு இருக்க முடியவில்லை. வீடு திரும்பினார். பரிதாபமாக அவருடைய மனைவி மரணம் அடைந்தாள். மீண்டும் ஆத்மா சிந்தனையில் ஈடுபடத் துவங்கியவருக்கு 1885 ஆம் ஆண்டு மீண்டும் திருமணம் செய்து வைத்தனர்.

வருமானத்திற்கு வழி தேடி பூனா போன்ற இடங்களுக்கு சென்றாலும் அவருக்கு படிப்பு அறிவு இல்லாததினால் எங்கும் வேலை கிடைக்கவில்லை. கூலி வேலை செய்தும் பிச்சை எடுத்தும் காலத்தை ஓடினாலும் தங்க இடம் இல்லாமல் வெப்ப மரத்தடிகளிலும் பாதை ஓரங்களிலும் படுத்து உறங்க வேண்டி இருந்தது. அந்த நேரத்தில் ஒரு சாது அவருக்கு பிரும்மச்சரியத்தை கடை பிடிக்குமாறு அறிவுறுத்தினார் .ஆகவே அவர் பூனாவில் இருந்து கிளம்பி கான் என்ற எடத்தை அடைந்து அங்கும் பிச்சை எடுக்கத் துவங்கினார். பல நாட்கள் தண்ணீரை குடித்தே வாழ வேண்டி இருந்தது. நாசிக்கிற்கு அருகில் இருந்த போர்காத் என்ற மழைப் பகுதியில் இருந்த குகை ஒன்றில் சென்று ஒன்பது மாதங்கள் தனிமையில் இருந்தார். அந்த குகையில் சில காலம் தங்கி இருந்த பொது கவல்வாடி என்ற கிராமத்தினர் அவருக்கு உதவி செய்து உணவும் தந்தனர். மீண்டும் நாசிக் வழியாக 1890 ஆம் ஆண்டு அவர் சதானாவுக்குத் திரும்பினார். அந்தோ பரிதாபம், ஒரே வருடத்தில் அவருடைய தத்தா, தந்தை மற்றும் இரண்டாவது மனைவி என அனைவரும் இறந்து விட்டனர். ஆகவே அவருடைய உறவினர்கள் அவருக்கு மூன்றாம் திருமணம் செய்துவைத்தனர்.

1892 ஆம் ஆண்டில் வருமானத்திற்கு வேலை வேண்டும் என்பதினால் ஆயுர்வேத மருத்துவத்தைப் படித்து 1895 ஆம் ஆண்டு சதானா மற்றும் அமராவதி போன்ற இடங்களில் மருத்துவத் தொழில் செய்தார். அப்போது மராத்திய இதழ் 'பேஷாஜ் ரத்னாவளி' என்ற ஒன்றின் ஆசிரியாராகவும் மூன்று வருடங்கள் இருந்தார். அதற்கு இடையே அவர் ஆயுர்வேத மருத்துவ நிபுணராக பெரும் பெயர் பெற்று நிறைய சம்பாதித்தார். குவாலியருக்கு அருகில் நூற்றுகணக்கான ஏக்கர் நிலங்களை வாங்கி விவசாயம் செய்தார். ஆனால் அடுத்த இரு வருடங்களில் பல வழக்குகளை சந்திக்க வேண்டி வந்தது. அதன் பின் ஒரு வரி வசூலிக்கும் பணியில் அமர்ந்தார்.

அவருடைய அனைத்து வேலைகளிலும் தோல்வியே கண்டார். உடம்பும் நலிவுறத் துவங்கியது. பிராயனத்தை செய்து வந்ததினால் மூச்சு விடக் கூட கஷ்டம் ஆயிற்று. 1908 ஆம் ஆண்டு அமராவதிக்கு திரும்பி வந்தார். உலக இன்பங்கள் அனைத்திலும் வெறுப்பு ஏற்படத் துவங்க உள்ளத்தில் ஆன்மீக தாகம்பிறந்தது.

ஒரு நாள் அவர் காடேகாவ்ன் என்ற இடத்தில் இருந்த சத்குரு நாராயண மகராஜ் என்பவர் அங்கு வருவதை அறிந்தார். அவர் வரிசையில் நின்று அவரை சந்திக்கச் சென்ற போது சத்குரு நாராயண மகராஜ் அவருடைய பெயரான காசினாதைக் கூறி அவரை அழைத்தார். அதைக் கேட்டதும் அவரது காலடியில் அப்படியே கஷிநாத் விழுந்துவிட அவரை தூக்கி எழுப்பிய சத்குரு நாராயண மகராஜ் அந்த பெரும் கூட்டத்தின் முன்னாலேயே தன் கழுத்தில் இருந்த மாலையை எடுத்து அவருடைய கழுத்தில் போட்டார். அப்படிப்பட்ட பரிசு கிடைப்பது அபூர்வம்.

சத்குரு நாராயண மகராஜ் சந்திப்பின் பின் துலியா , பைத்தான் மற்றும் அஹமத் நகர் போன்ற இடங்களுக்கு சென்று மூச்சு விட கஷ்டப்படும் தனது வியாதிக்கு வைத்தியம் செய்தும் குணமாகவில்லை என்பதினால் மாந்தரீக உதவியை நாடினார்.

ரகூரி என்ற இடத்தில் அவர் சந்தித்த யோகி குல்கர்னி மகராஜ் என்பவர் அவரை சீரடிக்குச் சென்று சாயி பாபாவை சந்திக்குமாறு கூறினார். ஆனால் அவர் ஒரு முஸ்லிம் என்பது தெரிந்ததினால் அவருக்கு அவரை சென்று வணங்க இஷ்டம் இல்லை என்பதினால் அவர் மீண்டும் சத்குரு நாராயண மகராஜை சென்று சந்தித்தார். அவர் காஷினாதுக்கு வெற்றிலைப் பாக்கு தந்து அதை மென்னக் கூறியும் அவருடைய மனதில் ஆன்மீகத்தை ஏற்றினார். அதன் பின் மீண்டும் ரகூரிக்குசென்று

குல்கர்னி மகராஜை சந்திக்க அவர் முன்பு போலவே சீரடிக்கு சென்று சாயி பாபாவை சந்திக்குமாறு கூறினார். அவர் ஜாதி மதங்களுக்கு அப்பாற்பட்டவர் என்றும் கூறினார்.

ஒருநாள் காசிநாத் ரகூரியில் நடந்து சென்று கொண்டு இருந்தபோது ஒரு வயதானவர் அவரிடம் வந்து குளிந்த தண்ணீர் குடிப்பதற்கு பதிலாக வெந்நீரை குடிக்குமாறு சம்பந்தமே இன்றி சொல்லிவிட்டுப் போனார். ஆகவே அதை அவர் பொருட்படுத்தவில்லை. அவர் ஏதாவது ஒரு ஹிந்து மதத்தை சேர்ந்த யோகி கிடைப்பாரா எனத் தேடி அலைந்தார். ஒருநாள் அவர் ஜாசுரி என்ற இடத்தை அடைந்த போது தன்னை அறியாமலேயே சமாதி நிலைக்கு சென்றுவிட்டார். கண் விழித்து எழுந்தவருக்கு தாகம் ஏற்பட்டது. ஆகவே அருகில் இருந்த அருவி ஒன்றில் தண்ணீர் குடிக்கச் சென்றார்.

அந்த எடத்திலும் முன்பு அவருக்கு வெந்நீர் குடிக்குமாறு அறிவுரை செய்த அதே மனிதர் வந்து கோபமாக முன்னர் க்கொரியதையே கூறிவிட்டு எங்கோ சென்றுவிட, அந்த நேரத்தில் காசிநாத் அவருடைய அறிவுரையை ஏற்றார். வெந்நீர் குடித்த சில மணி நேரத்திலேயே அவருடைய உடல் நலம் அதிசயமான செயல் போல நன்கு ஆகிவிட்டது. அதன் பின் மீண்டும் நாராயண மகராஜை சந்திக்கச் சென்றவரை வழியில் யோகி குல்கர்னி சந்தித்து காசிநாத் சீரடிக்கு செல்லும் வழியில் சென்று கொண்டு இருபதினால் சாயிபாபாவை சென்று தரிசிக்குமாறு மீண்டும் வலியுறித்தினார் . கடைசியாக ௧௯௧௧ ஆம் ஆண்டு ஜூன் இருபத்தி எழாம் தேதியன்று ஆரத்தின் போது சாயிபாபாவை சந்தித்தார். ஆனால் அது அவருடைய வாழ்கையில் பெரிய திருப்பத்தைக் கொண்டு வரப் போகின்றது என்பது தெரியாது.

சாயிபாபாவிடம் விடை பெற்றுக்கொண்டு கிளம்பியபோது எண்ணமும் சில நாட்கள் அங்கு தங்கிவிட்டு செல்லுமாறு கூறியும் காசிநாத் அங்கிருந்து சென்று விட்டார். ஆனால் அடுத்த ஒருவாரத்திலே மீண்டும் சீரடிக்கு வரவேண்டி இருந்தது. தனக்கு தட்சிணை ஏதும் தரவேண்டும் என சாயிநாதர் கேட்க காசிநாத் பழைய காசு ஒன்றைக் கொடுத்தார். அதை பெற்றுக்கொண்ட சாயிநாதர் நீ பழைய காசை தந்தாலும் நான் உனக்கு புதிய நாணயம் போன்ற அனுபவத்தைத் தருகிறேன் என்றார். அன்று முதல் தினமும் சாயிணாதர் அவருக்கு போதனைகளை செய்தார். அதில் தன்னுடைய பழைய காலத்தைப் பற்றிய செய்திகளை அவர் கூறியது காசினாதுக்கு சங்கடமாக இருந்தாலும் சாயிணாதர் உண்மையிலேயே ஒரு பகிர்தான் என்பதைப் புரிந்து கொண்டார்.

இரண்டு மூன்று நாட்கள் ஆனதும் அங்கிருந்து கிளம்ப முடிவு செய்தார். ஆனா சாயிநாதர் அவரை அங்கிருந்து செல்ல அனுமதிக்கவில்லை. மற்றவர்கள் சாயிநாதர் அப்படிக் கூறியதற்கு ஏதேனும் அர்த்தம் இருக்கும் என்று எவ்வளவு கூறியும் காசிநாத் அதை ஏற்கவில்லை. முடிவாக சாயிநாதர் மீண்டும் எட்டே நாட்களில் திரும்பி வருவதானால் அவரை அங்கிருந்து செல்ல அனுமதி தருவதாகக் கூறினார். காசினாதருக்கு அப்போதும் சாயிநாதர் மீது முழு நம்பிக்கை இல்லை. சாயிநாதர் கூறினார் ' சரி, நீ கிளம்பிப் போ. ஆனால் அதற்குப் பிறகு என்ன செய்வது என்று எனக்குத் தெரியும்'.

மகிழ்ச்சியாக அங்கிருந்து கிளம்பிச் சென்ற காசிநாத் தன வீட்டிற்கு செல்லக் கிளம்பி அங்கும் இங்கும் சுற்றி எட்டு நாட்களுக்குப் பிறகு சீரடியில் இருந்து எட்டு கல் தொலைவில் இருந்த கோபெர்கோன் என்ற இடத்தையே வந்து அடைந்து இருந்தார். அப்போதுதான் அவருக்குத் தெரிந்தது எட்டு நாட்களாக நடந்து நடந்து எட்டு கல் தொலைவே வந்துள்ளேன் என. ஆகவே எண்ணமும் சில பக்தர்களுடன் சேர்ந்து கொண்டு வேறு வழி இன்றி சீரடியை அடைந்தார்.

சாயிநாதரிடம் சென்று அவரை வணங்க இருவருக்கும் இடையே எப்படி சம்பாஷனை நடந்தது.
சாயிநாதர்:- மீண்டும் வந்து விட்டாயா. சரி நீ இங்கிருந்து எப்போது கிளம்பிச் சென்றாய்.
காசிநாத்:- வியாழக் கிழமை கிளம்பிச் சென்றேன்
சாயிநாதர்:-எத்தனை மணிக்கு?
காசிநாத்:- மூன்று மணிக்கு
சாயிநாதர்:-அது என்ன கிழமை
காசிநாத்:-வியாழக் கிழமை
சாயிநாதர்:-நீ சென்று எத்தனை நாளாகியது?
காசிநாத்: ஒரு வாரம். என்று எட்டாம் நாள்
சாயிநாதர்:-அது சரி. நீ கிளம்பிச் சென்ற போது எட்டு நாட்களுக்குள் வர முடியாது என்றாய் அல்லவா
காசிநாத்: எனக்குத் தெரியவில்லை இது எப்படி நடந்தது என்பது. நீங்கள்தான் இதை செய்து இருக்க வேண்டும்
சாயிநாதர்:-நான் உன்னுடன்தான் இந்த எட்டு நாட்களும் இருந்தேன். போ நீ சென்று வாடாவில் தங்கு. ( வாடா என்பது ஒரு குறிப்பிட்ட இடத்தில் உள்ள ஒருகட்டிடம்)
காசிநாத்: அது முதல் அவர் அங்கே தங்கினார். காசிநாதிற்கு பாபா பற்றிய ஆவல் அதிகமாக மற்றவர்களிடம் அவரைப் பற்றி கேட்டு அறியலானார். ஒரு நாள் சாயிநாதர் எப்போதும் போல பிரசங்கம் செய்து கொண்டு இருந்தபோது அதில் ஒரு கதையைக் கூறினார்.

'ஒருமுறை தான் (சாயிநாதர்) பயணம் செய்து கொண்டு இருந்தபோது வழியில் கர்பிணிப் பெண் ஒருவளை சந்தித்ததாகவும் அவளுக்கு சுகப் பிரசவம் ஆகா வேண்டும் என்றால் வெந்நீரை குடிக்குமாறு கூறியதாகவும், அவர் பேச்சைக் கேட்காமல் அவள் மீண்டும் மீண்டும் குழிந்த நீரைப் பருகி வந்ததாகவும், ஆனால் அவர் கூறியதைப் போல வெந்நீரைக் குடித்த பின்னரே அவளுக்கு பிரசவம் ஆனதாகவும்' கூறினார். அப்படி கதையை சொல்லிக் கொண்டு இருக்கையில் அடிக்கடி காசிநாதைப் பார்த்தார். அதைக் கேட்டதும் காசிநாதருக்கு தன்னிடம் வயதானவர் உருவில் வந்து வெந்நீர் குடிக்குமாறு கூறியது சாயிநாதரே என்பதைப் புரிந்து கொண்டார். அதைக் கேட்டு விக்கி விக்கி அழுதார். அவரை தேற்றிய சாய்நாதர் அவருக்கும் தனக்கும் பூர்வ ஜென்மத் தொடர்பு உள்ளது என்ற உண்மையைக் கூறினார்.

ஆகவே அவருக்கு ஆன்மீக ஞானம் தந்து அவரை மாற்ற அவரை கண்டோபா ஆலயத்தில் சென்று அமர்ந்து இருக்குமாறும், அங்கு அடுத்த நான்கு வருடத்தில் கண்டோபா அவருக்கு அருள் புரிவார் என்றும் கூறி அனுப்பினார். அணு சென்று தவன் இருந்தவர் மெல்லிஉடம்பானார். அங்கு தேளும் பாம்பும் சுற்றி சுற்றி வந்தன. அங்கு அவர் உபாசனை செய்ததிநாளோ என்னவோ அவருக்கு உபாசினி என்ற பெயர் ஏற்பட்டது. 1912 ஆம் ஆண்டு அவருடைய மூன்றாவது மனைவியும் மடிந்து விட்டாள் என்ற செய்தி கிடைத்தது. அது அவருக்கு எந்த சலனத்தையும் ஏற்படுத்தவில்லை. என் எனில் அவர் வாழ்கையின் வேறு மார்கத்தில் முழுமையாகச் சென்று விட்டிருந்தார்.

அவருக்கு சாயிபாபா முழு துணையையும் தந்தார். அது குறித்து பொறாமை அடைந்தவர்கள் சாயிபாபாவிடம் கேட்ட பொழுது அவர் கூறினார் ' அவர் நல்லவரோ இல்லை கெட்டவரோ எனக்கு அது குறித்து கவலை இல்லை. நானும் அவரும் வேறு வேறானவர்கள் அல்ல. அவரை காப்பது என் பொறுப்பு. காசிநாதுக்கு சாயிநாதரின் பேச்சு புரியவில்லை. அது பற்றி அவரைக் கேட்டபோது ' நீ கடவுள்தான். உனக்கே விரைவில் எல்லாம் தெரியும் என்றார்.'

சத்குருவின் அருள் பெரும் சக்தி வாய்ந்தது. அவருடைய அருள் கல்லைக் கூட தங்கமாக மாற்றும் சக்தி கொண்டது. ஆகவே சில நேரத்தில் சற்குருவும் கூட தன்னுடைய சிஷ்யர்களின் தயவில் இருக்க வேண்டும் .ஏன் எனில் அவரை தன்னுடைய நிலைக்கு கொடு வர வேண்டும் அல்லவா?
சாயிநாதர் ஒரு முறை தன்னுடைய நெருங்கியவர்களிடம் கூறினாராம் ' சில மனிதர்களை நிறைவான மனிதர்களாக ( சத்குருவாக) ஆக்க வேண்டி உள்ளது. ஏன் எனில் இந்த ஜீவாத்மாவில் உள்ள பல ஆயிரக் கணக்கானவர்களை சிவாத்மாக்களாக ( நிறைவான ஜீவன்களாக) அவர்கள் மூலமே மாற்றவேண்டி உள்ளது. எப்படி ஒரு கல்லில் அற்புதமான சிற்பத்தை ஒரு சிற்பி செதுக்குகின்றானோ அது போலத்தான் ஒரு சத் குருவும் தம் சீடரை நிறைவான மனிதனாகுகின்றார். அதற்க்கு சாயி பாபா கடை பிடிக்கும் வழி சற்று கடினமானதாக இருந்தாலும் வேறு வழி இல்லை என்று காசிநாதர் கருதினார்.

சாயிநாதர் காசினாதரிடம் கூறினார் ' அமைதியாக ஒரு இடத்தில் அமர்ந்து இரு. வேறு எதுவுமே செய்ய வேண்டாம்.' காசினாதும் தன்னுடைய குருவின் அறிவுரைப்படி இருக்க அவரிடம் பல மாறுதல்கள் தோன்றத் துவங்கின.

தான் அனைத்து இடங்களிலும் இருப்பதை காசிநாதருக்கு உணர்த்த வேண்டும் என விரும்பிய சாயிநாதர் தான் ஒரு முறை கண்டோபா ஆலயத்துக்கு வருவேன் என்றும் தன்னை அவரால் அடையாளம் கண்டு பிடிக்க முடியுமா என்று பார்க்கலாம் எனவும் காசிநாதிடம் கூறினார். தன்னுடன் புகை பிடிக்கும் குழாயையும் வைத்திருப்பேன் என்றார். ஒரு நாள் காசிநாத் தனது ஆசானுக்கு உணவை எடுத்துக் கொண்டு துவாரகாமாயிக்குச் சென்றார்.

அவர் சமைக்கும்போது அவர் செய்வதையே பார்த்துக் கொண்டு இருந்த கரிய நிற நாய் ஒன்றும் அவரைத் தொடர்ந்து அங்கு சென்றது. அங்கு சென்றதும் சாயிநாதர் அவரிடம் ' இந்த கடும் வெய்யிலில் ஏன் உணவை எடுத்து வந்தாய்?, நான்தான் அங்கேயேஇருந்தேனே ' எனக் கடிந்து கொண்டார்.

அதைக் கேட்ட காசிநாத் ஆச்சரியம் அடைந்தார். சாயிநாதர் எப்போது கண்டோபா ஆலயத்துக்கு வந்தார்? காசிநாத் அவரிடம் 'ஆச்சரியமாக உள்ளதே, ஒரு கரிய நிற நாயைத் தவிர வேறு எவருமே அங்கு இல்லையே' என்று கூற சாயிநாதர் 'தான்தான் அந்த நாய்' என்று கூறினார். அதைகேட்ட காசிநாதர் அழுதே விட்டார். இனி தான் ஜாக்கிரதையாக இருப்பதாகக் கூறினார். மறுநாள் முதல் அவர் அங்கு வரும் அனைத்தையும் கவனமாகப் பார்கலானார். அப்போது கீழ் ஜாதியை சேர்ந்த ஒரு பிச்சைகாரன் அங்கு வந்து தூணில் சாய்ந்து நின்றிருந்தபடி அவர் சமைப்பதைப் பார்த்துக்கொண்டு இருந்தான். காசிநாத் உயர் ஜாதியை சேர்ந்தவர் என்பதினால் அவனை அங்கிருந்து விரட்டினார். அதன் பிறகு சாயினாதரை பார்க்கச் சென்ற காசிநாதிடம் சாயிநாதர் கூறினார் ' நேற்று நீ சமைக்கையில் அங்கு நான் வந்தேன். எனக்கு ஒன்றும் கொடுக்காமல் என்னை துரத்தி விட்டாய். இனி நீ எனக்கு உணவு எடுத்து வர வேண்டாம்' . அதைக் கேட்ட காசிநாதருக்கு அப்போதுதான் புரிந்தது, கடவுள் முன்னிலையில் எந்த பேதங்களையும் வைக்ககூடாது என்பது.

1913 ஆம் ஆண்டு. தன்னிடம் வந்த பக்தி சந்திரா பாயி என்பவரிடம் சாயிபாபா தன்னை பூசிப்பது போலவே காசிநாதிடம் சென்று அவரையும் பூஜிக்குமாறு கூறினார். அவளும் கண்டோபா ஆலயத்துக்கு சென்று அவரை பூஜிக்க முயல காசிநாத் அதை தடுத்துவிட்டார். தன்னை பூஜிப்பதை தான் விரும்பவில்லை என்று அவளை தடுக்க, அந்த பெண்மணியோ தான் பூஜிக்க இருக்கும் அவருடைய உடல் கூட அவருடையது அல்ல. அதை தன்னுடையது என என அவர் நினைப்பது தவறு என்று கூறி பிடிவாதமாக தன்னுடைய காரியத்தை செய்து முடித்தாள். அன்று முதல் அவர் தன்னுடைய தேகத்தின் மீதான சிந்தனையை ஒழித்தார். சாயிநாதர் அன்று முதல் அவரை உபாசினி மகராஜ் என்று மாற்றினார். தொடர்ந்து சூரியனையே நோக்கிக் கொண்டு இருந்தவருக்கு தன் கண்களுக்குள் பலவிதமான ஆன்மீக காட்சிகள் வருவதைக் கண்டார். ஒரு ஒளி வட்டம் சிறியதாகத் துவங்கி மெல்ல மெல்ல பெரிதாகி தன்னுள் சென்றதைக் கண்டார். சற்று நேரத்தில் தான் மேலுலகில் சூரிய சந்திரன்கள் மற்றும் பிற நட்சத்திரங்களுக்கு இடையே உள்ளதை உணர்ந்தார். அதன் பின் மெல்ல மெல்ல அனைத்து காட்சிகளும் மறைய காசிநாதருக்கு புரிந்தது இந்த உலகே ஒரு மாயை. அதுவே அவருடைய ஆன்மீக வாழ்வில் அவர் பெற்ற பெரிய பாடம்.

சிறு வயது முதலிலேயே காசிநாதருக்கு தாம் செய்யும் தவறுகள் அனைத்திற்கும் தன்னுடைய உடலே காரணம் என்ற நினைப்பு உண்டு. அப்போதெல்லாம் அதை தண்டிக்க வேண்டும் என எண்ணியவர். அந்த சிந்தனையை ஆன்மீக பார்வையிலும் அவருக்கு சாயிநாதர் காட்டினார். ஒரு முறை உபாசினி மகராஜின் கனவில் சாயிநாதர் வந்தார். இருவரும் ஒரு கட்டிடத்தின் முன் நின்று கொண்டு இருந்தனர். அப்போது சாயிநாதர் அவரை தன அருகில் அழைத்து அவருடைய காதில் எதோ மந்திரம் ஒதுவதாகக் கூறி அவர் காதைப் பிடித்து தன் அருகில் கொண்டு வந்தார். அப்போது காசினாதைப் போலவே இருந்த ஒரு பயங்கரமான உருவம் சாயினாதரின் பக்கத்தில் வர அதை பிடித்து எரியும் நெருப்பில் தள்ளி விட்டார் சாயிநாதர். அது எரிந்து போயிற்று. சற்று நேரத்தில் ஒளி மயமான தன் உருவை காசிநாதர் கண்டார். இது எப்படி வந்தது என அவர் சாயிநாதரிடம் கேட்க, அவர் அது அவருடைய மற்றொரு உருவம் என்றார். அது பற்றி விளக்குகையில் சாயிநாதர் அவருக்கு கூறினார் ' நீ இந்த இரண்டுக்கும் அப்பாற்பற்றவன் . உன்னுடைய உண்மையான உருவமும் என்னைப் போன்ற தூய நிலையில் நிலையில் உள்ள ஒன்றே ' அந்த ஞானம் பெற்றது முதல் அவருக்கு சித்திகள் கைகூடின. ஒருவரைப் பார்த்த மட்டிலேயே அவர்களுடைய பூர்வ ஜென்மம், நிகழ்காலம், வரும் காலத்திய உண்மைகள் என அனைத்தும் தெரியத் துவங்கின. ஆகவே அவரை பல பக்தர்கள் சுற்றி வரத் துவங்க அவருக்கும் ஒரு தனிக் கூட்டம் உருவானது.

அப்படி பலரும் வந்து அவரை வணங்கிச் சென்றாலும் சீரடியில் இருந்த நாத்திகனான நனாவளி என்பவன் அங்கு வந்து அவருடைய துணிகளை பிடித்து இழுத்து அவமானப் படும் விதத்தில் பேசுவான். ஒரு முறை அவரைக் கட்டி வைத்து அடித்தான் . அவருக்கு அப்போது உதவ எவரும் முன் வர மாட்டார்கள் . ஏன் என்றால் அவன் ஒரு பயங்கரமான ரௌடி. அவருக்கு அதனால் பெரும் வருத்தம் ஏற்பட்டாலும் அவற்றை எல்லாம் தாங்கிக் கொண்டே இருந்தார். சாயிநாதரும் அவருக்கு ஆறுதல் கூறிக் கொண்டே இருந்தார். வரும் காலத்தில் அனைத்தும் சரியாகிவிடும் என்பார்.

1914 ஆம் ஆண்டு ஒரு நாள் உபாசினி மகராஜ் சாயிபாபாவிடம் சொல்லிக் கொள்ளாமல் அங்கிருந்து ஓடி விட்டார். முதலில் சிந்தி என்ற இடத்திற்கு சென்று அதன் பின் நாக்பூருக்கு சென்றார். அங்கு ஒரு மாதம் தங்கிய பின் கரக்பூர் என்ற இடத்திற்கு சென்றார். அங்கு அவரை மக்கள் வணங்கி துதிக்கலாயினார். ஆனால் அவர் அவற்றை விரும்பவில்லை. எவருடைய கண்களிலும் படாமல் ஒடுங்கி இருப்பதையே விரும்பினார். ஆனாலும் மக்கள் அவரை விடவில்லை.

1915 ஆம் ஆண்டில் ஜாதிபட்று தனக்கு இல்லை என்பதைக் காட்ட அவர் மிகவும் ஏழ்மை நிலையில் இருந்த நாம்தேவ் மகார் என்பவருடைய வீடிற்கு சென்று தங்கினார். உபாசினி மகராஜ் உயர்ந்த பிராமண வகுப்பினராகவே இருந்தாலும், தாழ்ந்த ஜாதி என அந்த காலத்தில் கருதப்பட்டவரின் வீட்டில் , மாட்டு சாணம் என சுற்றிலும் இருந்த அசிங்கமான இடத்தில் இருந்து கொண்டு அவர்கள் சாப்பிட்ட உணவையே அருந்தினார். ஆகவே உயர் ஜாதியை சேர்ந்தவர்களும் அங்கு வந்து அவரை தரிசிக்க வேண்டியதாயிற்று. நாம்தேவ் மகார் அனைவரையும் வரவேற்று உபசரிப்பார்.

அதற்குப் பிறகு அவர் நாக்பூருக்கு சென்று சில நாட்கள் இருந்தபின் சீரடிக்குச் சென்று கண்டோபார் ஆலயத்தில் தங்கினார். முன்பு இருந்ததைப் போல அல்லாமல் அப்போது அவரைக் காண நிறைய பக்தர்கள் வரத் துவங்கினர். அவர் விரும்பினாலும் விரும்பாவிடிலும் அவரைத் தேடி நிறைய பக்தர்கள் வரத் துவங்க அந்த இடத்தில் பல கடைகளும் மற்ற சாதனங்களும் வரத் துவங்கி ஆலயத்தில் கீர்த்தனைகள், அன்னதானம் போன்றவை நடைபெறத் துவங்கின. அதுபோலவே அவரைச் சுற்றி நிறைய அற்புதங்கள் நிகழத் துவங்கின.

கரக்பூரில் அவர் ஒரு வருடகாலம் தங்கி இருந்தபோது அவருக்கு பக்தர்கள் தங்குவதற்கான இடம் கட்ட ஏற்பாடு செய்ய அவர் உடனேயே அங்கிருந்து கிளம்பி நாக்பூருக்கு சென்றார். அங்கும் அவரைத் தேடி நிறைய மக்கள் வரத் துவங்க அவர் அங்கிருந்து பூனாவுக்கு சென்று அதன் பின் தன் சொந்த ஊரான சதானாவுக்கும் சென்று சில காலம் தங்கினார். அதன் பின் நான்கு வருடங்கள் ஓடி விட்டதினால் மீண்டும் சீரடிக்கு வந்து கண்டோபார் ஆலயத்தில் ஏழு மாத காலம் தங்கினார். அதற்குப் பிறகு ரஹாதா என்ற இடத்திற்கு சென்று அங்கு தங்கி நாம ஜபம், ஏழைகளுக்கு அன்னதானம் போன்றவற்றை செய்தார். மீண்டும் அங்கிருந்து அகமதாபாத்திற்கு சென்று தங்கிவிட்டு சீரடிக்கு வந்து தனது குருவுடன் மூன்று மாத காலம் தங்கினார். 1917 ஆம் ஆண்டு முடிவாக சகோரி என்ற இடத்திற்குச் சென்று தனி ஆசிரமத்தை அமைத்து சத்குருவாயினார் .

காசிநாத் என்பவர் உபாசினி மகராஜாக மாறிவிட்டார். அவருடைய செய்கைகள் விநோதமாக இருந்தன. உடை ஏதும் போடாமல் நிர்வாணமாக இருந்தார். சில நேரத்தில் சாக்கு துணியியை இடுப்புவரை கட்டிக் கொண்டு இருந்தார். அவருடைய தெய்வீகத்தைப் புரிந்து கொண்ட காந்தி வியப்பு அடைந்து அவரைக் காண வந்தார். அதற்கு முன்னர் கண்டோபா ஆலயத்தில் உபாசினி மகராஜ் உண்ணாவிரதம் இருந்தார். அப்போது அவரைக் காண சாயி பாபா வந்தார். பின்னர் அவருக்கு தன்னுடைய பக்தன் மூலம் உணவும் காபியையும் அனுப்பினார். உபாசினி மகராஜின் உபவாசம் முடிந்தது உடல் நிலை தேறியது.

மற்ற சம்பவங்கள்:

சீரடியில் அவர் தங்கி இருந்தபோது சாயிபாபா தன்னைக் காணவரும் பக்தர்களிடம் அங்கிருந்து சென்று உபாசினி மகராஜயும் வணங்கிவிட்டு செல்லுமாறு கூறுவார். அது போலவே மக்களும் பாபாவை தரிசனம் செய்தபின் அவர் கூறாவிடிலும் தாமாகவே கண்டோபார் ஆலயத்துக்கு சென்று உபாசினி மகராஜை வணங்கிச் செல்வார்கள். இப்படியாக அவர் சாயி பாபாவின் வாரிசாக உருவாகி வந்தார். அப்போது ஒரு முறை தான் ஆன்மீகத்தில் மிகப் பெரியவர் என்று இறுமாப்பு கொண்டு இருந்த ஒரு ஸ்வாமி பாபாவிடம் வந்து தம்பட்டம் அடித்துக் கொண்டார். பாபா அவரிடம் ' சரி நீங்கள் எனக்கு ஒரு உதவி செய்ய முடியுமா? உடனேயே உபாசினி மகராஜிடம் சென்று அவரிடம் இருந்து நானூறு ரூபாய் கடன் வங்கிக் கொண்டு வந்து எனக்கு தர முடியுமா? என் எனில் எனக்கு தற்போது மிகவும் அவசரமாக பணம் தேவைப் படுகின்றது என்றார்'.

அந்த ஸ்வாமிஜியும் உபாசினி மகராஜிடம் சென்றார். உடனடியாக நானூறு ரூபாயை தரும்படிக் கேட்டார். நிர்வாணமாக ஒரு மரத்தின் அடியில் அமர்ந்து இருந்த உபாசினி மகராஜ் எழுந்து வந்தார், அந்த சுவாமிஜியை பிடித்து நன்றாக உதைத்து அனுப்பினார். வந்தவர் சாயி பாபாவிடம் திரும்பிச் சென்றார். அவரை கண்ட பாபா அவருக்குக் கிடைத்த வெகுமதியை கண்டு புன்முறுவல் செய்தார்.

2) பாபுசாஹெப் ஜோக் மும்பாயிற்கு கிளம்பிச் சென்றபோது அவர் வானமான ராவை அங்கேயே இருந்து சீரடி பாபாவை சாகோரியில் தரிசனம் செய்யலாம் என்று தடுத்து நிறுத்தினார். எவர் ஒருவர் சாயிபாபாவின் சமாதிக்கு செல்கின்றனரோ அவர்கள் சாகோரிக்கு சென்று தரிசனம் செய்யாவிடில் அவர்களுக்கு அந்த பயணம் செய்தபலன் இருக்காது என்று கூறி வாமன ராவ் அங்கிருந்து கிளம்பியபோது தடுத்து நிறுத்தினார்.
வாமன ராவ் அங்கு சென்றபோது வைக்கோலினால் போடப்பட்ட ஒரு குடுசையில் உபாசினி மகராஜும், துர்காபாய் கர்மகாரும் அமர்ந்து இருந்து கொண்டு ஒரு கல்லின் மீது வைக்கப்பட்டு இருந்த சாயிபாபாவின் படத்துக்கு பூஜை செய்து கொண்டு இருந்தனர். குருஜி என அழைக்கப்பட்ட துர்காபாய் கர்மகார் சீரடியில் சென்று தவம் இருந்த உபாசினி மகராஜுக்கு சேவை செய்தவர் .

அப்போது உபாசினி மகராஜ் வாமன ராவைப் பார்த்துக் கூறினார் ' கழுதைப் போல அமர்ந்திருந்த பிடிவாதக்காரனான என்னையும் விடாப்பிடியாக சாயிநாத் கடவுளிடம் அனுப்பினார் '
3) 1915 ஆம் ஆண்டு. பூனாவை சேர்ந்த இளம் வயதான மேர்வான் என்ற பக்திமானை ஹசரத் பாபாஜன் அவருடைய நெற்றியில் முத்தமிட்டு அனுப்பினார். மேர்வான் உபாசினி மகராஜிடம் சென்ற பொது அவர் முழு நிர்வாண கோலத்தில் இருந்தார். வந்தவரை நோக்கி ஒரு கல்லை அவர் எறிய அது எந்த இடத்தில் ஹசரத் பாபாஜன் அவரை முத்தமிட்டாரோ அதே இடத்தில் பட்டு ரத்தம் வழிந்தது. அவரும் மகராஜை விழுந்து வணங்க உபாசினி மகராஜ் அவரை கட்டி அணைத்துக் கொண்டு கண்டோபா ஆலயத்திற்குள் சென்றார். எதற்காக அப்படி ஒரு வரவேற்பை மகான்கள் தருகின்றனர் என்பது அவர்களுக்கு மட்டுமே தெரியும். இருவரும் இரண்டு நாட்கள் தனிமையில் இருந்தனர். அதன் பின் அவர் ஆன்மீக நாட்டம் கொண்டு உபாசினி மகராஜ் எங்கு சென்றாலும் அவருடன் சென்று கொண்டும், அவருக்கு பணிவிடை செய்து கொண்டும் இருந்தார். வருடங்கள் ஓடின. மேர்வான் ஆன்மீகத்தின் உச்ச கட்டத்தை அடைந்தார்.

அப்போது ஒரு நாள் உபாசினி மகராஜ் மேர்வானிடம் தாம் சாவியைத் தந்துவிட்டதாகக் கூறினார். அதாவது அவரையும் சத்குருவாக மாற்றிவிட்டார். பல இடங்களையும் சுற்றித் திரிந்த மேர்பான் அஹமத் நகருக்குத் திரும்பினார். அவரை மேஹெர் பாபா என பக்தர்கள் அழைக்கத் துவங்க அவர் ஆன்மீக இயக்கத்தை துவக்கினார். அடுத்த ஏழு வருடங்கள் கல்லால் அடித்துக் காயப் படுத்தப்பட்ட மேர்வான் தொடர்ந்து சாகோரிக்கு வந்து கொண்டு இருந்தார். சில சமயங்களில் அவர் ஆறு மாதங்கள் அங்கு இருந்துள்ளார். ஆனால் அவர் ஆன்மீக இயக்கத்தை துவக்கிய பிறகு இரண்டு சத்குருக்களும் அடுத்த இருபது வருடங்கள் நேரில் பார்த்துக் கொள்ளவே இல்லை.

அது போல உபாசினி மகராஜ் எப்போது அஹமத் நகருக்கு வந்தாலும் மேர்பானுடைய வீட்டிற்குச் செல்வதுண்டு. ஆனால் இருவரும் நேருக்கு நேர் சந்திக்கவில்லை.
பலரது வேண்டுகோளின்படி இருவரும் நேரில் சந்தித்துக் கொள்ளவேண்டும் என ஏற்பாடு ஆயிற்று. 1941 ஆம் ஆண்டு அக்டோபர் பதினேழாம் தேதியன்று அஹமத் நகர் அருகில் இருந்த கிராமத்தில் விசேஷமாக அமைக்கப்பட்டு இருந்த குடுசையில் இருவரும் சந்தித்தனர். அதற்காக மேஹெர் பாபாவை அழைத்து வர ஒரு வண்டி அனுப்பட்டது. எவரும் அந்த குடுசைக்கு அருகில் செல்வதற்கு அனுமதிக்கப் படவில்லை. சந்திப்பு முடிந்ததும் உபாசினி மகராஜ் சாகோரிக்குத் திரும்பிவிட்டார். சாயி பாபா 1918 ஆம் ஆண்டு தமது பூத உடலைத் துறந்தபோது சீரடியில் இருந்து ஐந்து கிலோ மீட்டல் தொலைவில் இருந்த சாகோரியில் வசித்தவர் அவருடைய பிரதான சிஷ்யராக இருந்து அனைத்து இறுதிக் கடன்களையும் தானே செய்தார்.

1921 ஆம் ஆண்டில் உபாசினி மஅகராஜிப் போன்ற பெரும் தேகம் கொண்டவர்கள் வசதியாக வசிக்க முடியாமல் இருந்த ஒரு மூங்கில் தடுப்புகளுக்கு நடுவில் சிறையில் உள்ளது போல இருந்து கொண்டு பக்தர்களுக்கு அருளினார். அது குறித்துக் கேட்டபோது தம்முடைய பக்தர்களின் துயரங்களை தான் ஏற்றுக் கொண்டு அப்படியொரு தண்டனையை தந்து கொண்டதாகக் கூறினார். அனைத்து நித்தியா கடமைகளையும் அதனுள் இருந்தவாறே செய்து கொண்டு சிறையில் இருந்தவர் பதிமூன்று மாதங்களுக்குப் பின் வெளியில் வந்தார். வெளியில் வந்தவரை அவரை ஆரத்தி எடுத்து வரவேற்றனர். வெளியில் வந்த அவர் தமது கழுத்தில் இருந்த மாலையை கோதாவரி என்ற சிறுமியின் கழுத்தில் போட்டு அவளை வரவேற்றார். அதை பலரும் ஆச்சர்யத்துடன் பார்த்தனர். கோதாவரி பின்னர் சாகோரியில் வந்து தங்கி ஆன்மீக ஞானம்பெற்று பெரும் ஆன்மீகவாதியானார்.

1941 ஆம் ஆண்டு டிசம்பர் இருபத்தி நான்காம் தேதியன்று சாயிபாபாவின் குழந்தையான உபாசினி மகராஜும் மறைந்தார் . அனுதினமும் தன்னுடைய வசதிகளை துறந்து ஆயிரக்கணக்கான பக்தர்களின் துயர் துடைத்தார். அவர் மறைந்த பிறகு மேஹெர் பாபாவும் எப்போதாவது சாகோரிக்கு வந்து சென்றார். அவர் உபாசினி மகராஜுடன் நெருங்கிய தொடர்பு கொண்டு இருந்தார். இருவருடைய சமாதிகளும் மிக அருகில்தான் அமைந்து உள்ளன. ஒரு கல்லை சாயி பாபா பொன்னாக மாற்றியதற்கு உதாரணம் உபாசினி மகராஜ்

(Into Tamil : Santhipriya)

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.