Thursday, January 26, 2012

Shirdi Sai Baba's Grace-Experience Of Sai Devotees-Part 28.



அன்புடையீர்,
இனிய பாபா நாள் வாழ்த்து!
நமது ஷீர்டி ஸாயிபாபா கருணையின் உறைவிடம். தமது குழந்தைகளிடம் அவர் ஆழமான அன்புள்ளவராகவும், அவர்களுக்குத் தேவையான நேரங்களில் உடனுறைபவராகவும் அவர் திகழ்கிறார். உயிருள்ள, உயிரற்ற அனைத்துப் பொருட்களிலும், ஒவ்வொரு அணுவிலும் அவர் இருக்கிறார். அளவற்ற நம்பிக்கையுடனும், அவரது தரிசனம் கிடைக்கவேண்டும் என்னும் அசைக்கமுடியாத பிரேமையுடன் வேண்டுபவரால் அவரைப் பார்க்கவும், உணரவும் முடிகிறது. இன்றைய நேரங்களில் அவரது பக்தர்களுக்கான ஒரே துணை பாபா ஒருவரே. அவரது தரிசனத்தின் மூலம், மனிதர்களின் உலக வாழ்க்கைத் துயர்களையும், பயத்தையும், வலிகளையும் அவர் நீக்குகிறார்.
ஸாயிபாபா தமது குழந்தைகளின் மீது கொண்டிருக்கும் அன்பினைக் காட்டும் 6 - 7 ஸாயி லீலைகளை அவரது உலகளாவிய பக்தர்கள் சொல்லியவண்ணம் இன்று உங்களுடன் பகிர்ந்து கொள்ளுகிறேன். இந்த அனுபவங்களுக்குள் நாம் செல்லும் முன்னர், பெயர் தெரிவிக்க விரும்பாத ஒரு பக்தர்  http://www.shirdisaibabakripa.org/2008/10/sai-vachanthe-absolute-truth.html என்னும் தளத்தில் விடுத்த ஒரு கேள்வியை உங்கள் முன்னர் வைக்கிறேன். இந்த அடியவர் கண்ட கனவினைப் பற்றிய உங்களது கருத்துகளை வரவேற்கிறேன். அந்த அடியார் அனுப்பிய செய்தியை இங்கே அளிக்கிறேன். படிக்கும் அன்பர்கள் தங்களது கருத்துகளை அந்த அன்பரும் படித்துப் புரிந்துகொள்ளும் வண்ணம், 'கருத்துகள்' பகுதியில் வந்து சொல்லுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
"சென்ற வாரம் நான் பாபாவை என் கனவுகளில் கண்டேன். பாபாவின் சிறிய சிலை ஒன்று ஒரு துண்டால் மூடப்பட்டிருந்தது. அதை நான் விலக்கியபோது, பாபா உயிருடன் தோற்றமளித்தார். ஏதோ நான் அவரைத் தூக்கத்திலிருந்து எழுப்பியதுபோலக் காணப்பட்டார். அவரது கண்ணிமைகள் மிக வேகமாக அடித்துக் கொண்டன. பயந்துபோன நான் சற்று பின்னால் நகர்ந்தேன். தன்னுடலைத் திருப்பி பாபா என்னைப் பார்த்தார்.
இன்று மீண்டும் பாபா கனவில் வந்தார். எங்களால்[ எனது அக்கம்பக்கத்தினர், மேலும் நான் வசிக்கும் அடுக்கு வீட்டில் வசிப்பவர்கள்]பாபாவின் ஆரத்தியை நிறைவு செய்ய இயலவில்லை. இருமுறை இப்படி தடைபட்ட பின்னர், விளக்கைக் கையில் வைத்திருந்த நான், பாபாவின் கண்களை நேரடியாக உற்றுப் பார்த்தேன். சென்ற முறை கனவில் செய்தது போலவே தன் கண்களை வேகமாகச் சிமிட்டினார் பாபா! இந்த முறை கூடவே புன்னகைக்கவும் ..... முழுமையான சிரிப்பு இல்லை; உதடுகளின் ஓரத்தில் ஒரு சிறிய அசைவு.....செய்தார். நான் என்ன செய்ய வேண்டும்? இந்தக் கனவின் பொருள் என்ன? எனத் தயவு செய்து எனக்குச் சொல்லுங்கள் என வேண்டிக் கொள்கிறேன். --- ஒரு ஸாயி அடியவர்.
இந்த அன்பருக்கான உங்களது கருத்துகளை/ அபிப்பிராயத்தை இங்கே அளிக்கவும்.  மனிஷா

ஐயப்ப ஸ்வாமியாக வந்த பாபா



அனைவருக்கும் இனிய பாபா நாள் வாழ்த்துகள்.
ஸாயி ஸேவக் மனிஷாஜி,
பல்வேறு பக்தர்களின் ஸாயி லீலைகளையும், புதிய பாடல் தொகுப்புகளையும், 'கோவில்கள்' வலைதளத்தில் கொண்டுவரும் தகவல்களையும் எங்களுடன் பகிர்ந்து கொள்வதற்காகத் தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றியறிதலைச் சொல்லிக் கொள்கிறேன். ஸாயி அடியார்களுக்கும் எனது நன்றியறிதலைச் சொல்லிக்கொள்கிறேன். அவர்களது பங்களிப்பு மட்டும் இல்லையெனில், சோதனைகள் நம்மைச் சூழும் நேரங்களில், இப்படியொரு ஆன்மீக உணர்வினை நமது ஸாயி குடும்பம் பெற இயலாது, எப்போதும் போலவே பாபா நம்மை ஆசீர்வதிக்கட்டும்.

'பாபாவின் அருள்' [இது எழுதியவரின் புனைப்பெயர்] கீழ்க்கண்ட லீலையை இங்கே பகிர விரும்புகிறேன். இதனுடன் இணைக்கப்பட்ட ஒரு புகைப்படங்களையும் தயவு செய்து வெளியிடவும். நமது அடியார்கள் அனைவரும் படித்திருக்கும் ஸாயி சத்சரிதம், 20-வது அத்தியாயத்தில் 'காகா அவர்களின் பணிப்பெண்ணால் எங்ஙனம் தாஸ் கணுவின் பிரச்சினை தெளிவாகியது' என்பதில் வரும் கீழ்க்காணும் வரிகள்.....
"...அங்கிருந்த மக்கள் பாபா இப்படிச் சொன்னதைக் கேட்டு, அவர் வேடிக்கையாகச் சொல்கிறார் என்றே நினைத்தனர். 'இது போன்ற ஒரு பெரிய பிரச்சினைக்கு எப்படி ஒரு சாதாரண, படிப்பறிவற்ற பணிப்பெண்ணால் விடை தர இயலும்?' என அவர்கள் நினைத்தனர். ஆனால், தாஸ் கணு வேறுவிதமாக எண்ணினார். 'பாபா என்ன சொன்னாலும் அவை சத்தியமாக நிகழும்; பாபாவின் சொற்கள் இறைவனின் ஆணை' என அவர் உறுதியாக நம்பினார். 'போதுமெனும் பொன்மனத்தின் இயல்பினைத் தெளிவாக்கும் பாடத்தை' அந்தப் பணிப்பெண் மிகச் சாதாரணமாக நடத்திக் காண்பித்தாள்..... தமது அடியவர்களுக்குத் தேவையான அறிவுரைகளை, வழிமுறைகளை பாபா வெளிப்படுத்தும் வழிகளை எவராலும் இன்னதெனக் கணித்துக் கூற இயலாது என்பதே பாபாவின் தனித்துவமான போதனையாகும். இந்தக் குறிப்பிட்ட சம்பவத்தில், பாபா, தாஸ் கணுவை வில்லே பார்லேவுக்கு அனுப்பி, அங்கிருந்த ஒரு பணிப்பெண்ணின் மூலம் அவரது பிரச்சினைக்குத் தீர்வு கண்டார். இதற்காக தாஸ் கணுவை வெளியே அனுப்பியிருக்க வேண்டுமா? பாபாவே ஒரு தீர்வைச் சொல்லியிருக்க முடியாதா? என்றெல்லாம் கேட்பவர்க்கு, பாபா சரியான, மேலான வழியையே காட்டினார் எனத்தான் நாம் கூற முடியும். இல்லையென்றால் அந்த ஏழைப் பணிப்பெண்ணும், அவளது புடவையும் கடவுளின் கிருபையே என்னும் அற்புதமான படிப்பினையை எங்ஙனம் தாஸ் கணுவால் வேறுவிதமாகப் பெற்றிருக்க முடியும்?"
எனது வாழ்வில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தை இந்தக் கதை ஒத்திருக்கிறது. எங்களது குடும்பத்தில் பல்வேறு சிரமங்களை அனுபவித்துக் கொண்டிருந்தோம். இப்படி நிகழ்ந்து கொண்டிருக்கும்போது, எனது சுமையை இறக்கி வைப்பதற்காக, நான் தினமும் பாபா ஆலயத்திற்குச் சென்று கொண்டிருந்தேன்.
அதிகம் படித்திருக்காத, ஒரு முரட்டுப் பெண் அங்கே பூ வியாபாரம் செய்துகொண்டிருந்தாள். எனது குடும்ப நலன் குறித்து அவள் அக்கறையோடு விசாரிப்பது வழக்கம்.
ஒரு ஆலோசகர் போலவும், அவரது தூதர் போலவுமான ஒரு பொறுப்பை பாபா அவளுக்கு அளித்திருந்தார் என நினைக்கிறேன். மிகவும் நல்ல மாதிரியான அவளிடம், பல பக்தர்கள் வந்து, பேசி, கலந்துரையாடி, அறிவுரைகளைப் பெற்றுச் செல்வர். மற்ற கோவில்களில் இருந்து கொண்டுவந்த பிரசாதங்களை அவளுக்குக் கொடுப்பதையும் செய்தனர்.
பாபாவின் வழிமுறைகளைப் பற்றி நாங்கள் இருவரும் பேசுவோம். அவளது நேரடியான போக்கினை நான் மிகுதியாகச் சுட்டிக் காட்டுவேன்; வரும் துன்பங்களை எதிகொள்ள வேண்டும் என அவள் எனக்குச் சொல்லுவாள். பாபா இருக்கும்போது எதற்காக வீணாகக் கவலைப்பட வேண்டும் எனச் சொல்லி, அவளது வாழ்வில் பாபா நிகழ்த்திய லீலைகளைச் சொல்லி எனக்குத் தைரியம் ஊட்டுவாள். கடன் சுமையோடு ஒரு ஏழைக் குடும்பத்தை அவள் நடத்தி வந்தாள்.
சென்ற மாதம், ஒரு 4 - 5 நாட்கள் விடாமல் மழை பெய்தது. நடுங்க வைக்கும் குளிரும் சேர்ந்து கொண்டது. காய்ச்சல், ஜலதோஷம், இருமல் போன்றவை வந்துவிடுமோ என்றஞ்சி, மக்கள் பொதுவாக வெளியில் வர மாட்டார்கள். கடுமையான மழை காரணமாக, அவளால் கடைத்தெருவுக்குச் சென்று, பூக்கள் வாங்கிவர இயலாமல் போயிற்று. வியாபாரம் இல்லாமலேயே ஒரு சில நாட்கள் தாக்குப் பிடித்தாள். ஒரு நாள் மாலை, அடுத்த வேளைக்கான அரிசி, மற்றும் உணவுப் பொருட்கள் இல்லாமல் போன நிலையை உணர்ந்து, இனி வரும் நாட்களை இந்தக் குளிர் காலத்தில் வியாபாரம் ஏதுமில்லாமல், எப்படிச் சமாளிக்கப் போகிறோமோ என அஞ்சினாள்.வெளியே சென்று, எவரிடமாவது உதவி கேட்கக்கூட இயலாமல், கடும் மழை அவளை வாட்டியது. இந்தக் கொடூரத்திலிருந்து தன்னைக் காக்குமாறு அவள் பாபாவை மனமுருகி வேண்டினாள்.
அன்று மாலை, ஒரு ஸாயி அடியவர் அவளைப் பார்க்கவென வந்து, கொஞ்சம் பிரசாதம் கொடுத்துவிட்டுப் போனார். அதில் ஒரு சில அரிசி மணிகள் ஒட்டிக் கொண்டிருந்தன! அவற்றைக் கண்டதும், தமது பக்தரின் மூலம் பாபா தமது மீட்புப் பணியைத் துவக்கி விட்டார் என அவள் புரிந்து கொண்டாள். ஆனால் நமது மனித மனமோ, இறுதியான ஒரு முடிவு வந்து நமத் பிரச்சினைக்குத் தீர்வாக அமையும் வரையில் சந்தேக மேகங்களால் எப்போதும் சூழப்பட்டுக் கொண்டிருக்கும்.
அன்றிரவு, அவளது கணவன் 15 அல்லது 20 கிலோ அளவுள்ள ஒரு அரிசி மூட்டையுடன் வீடு திரும்பினான். 'ஸாயி பிராண்ட்' என்பதால், அந்த மூட்டையில் பாபாவின் படம் பதிக்கப் பட்டிருந்தது. அதைக் கண்டதுமே, அவள் பேச்சிழந்து பாபாவுக்கு மனமார நன்றி சொல்லிக்கொண்டெ அழத் தொடங்கிவிட்டாள். எப்படி இந்த அரிசி கிடைத்தது என அவள் தன் கணவனைக் கேட்க, ஒரு ஐயப்ப பக்தர் அருகிலிருக்கும் ஒரு மண்டபத்தில் நடக்கவிருக்கும் ஐயப்ப பூஜைக்காகத் தன் உதவி வேண்டியதாகவும், [அது வழக்கமாக ஐயப்ப பூஜை நடக்கும் மார்கழி மாதம் என்பதால், அவளது கணவனும் ஐயப்ப பூஜைகளில் ஈடுபட்டு வந்தான்] இன்று நடந்த பூஜையில், அந்த ஐயப்ப பக்தர், தேவையானவர்களுக்கு அளிக்கும் அன்னதானமாக இந்த அரிசி மூட்டையைத் தனக்கு அளித்தார் எனத் தெரிவித்தான். இதுபோன்ற உயர் ரக அரிசியை தான் இதுவரையில் பார்த்ததே இல்லை என பூக்காரி மிகவும் மகிழ்ந்து போனாள்.
பாபா அன்று ஐயப்ப ஸ்வாமியாக மாறி அவர்களது நம்பிக்கையை உறுதி செய்தார். கடவுள் ஒருவரே; உண்மையான பக்தியும், அனைவரிடத்திலும் நேர்மையாகவும், அன்பாகவும் இருத்தல் எனும் பண்புகள் கடவுளின் அருளுக்கு வழி வகுக்கும்: தங்களால் இயலாவிட்டால், தான,தருமம் போன்றவற்றைச் செய்ய அவசியம் இல்லை என்னும் அற்புத போதனையை பாபா அன்று காட்டினார். ஸாயிநாதனை மனமாரத் துதித்து வேண்டினால், எந்தவிதமான கஷ்டமும் தீர்ந்து, ஒரு நல்ல தீர்வு கிடைக்கும் என்பதையும் வலியுறுத்திக் காட்டினார்.
ஸாயிபாபா நமக்கெல்லாம் அருள் செய்யட்டும்; தேவையான நேரத்தில் எல்லாம் நமக்குத் தேவையான பொறுமையையும், நம்பிக்கையையும் அருளிச் செய்யட்டும். ஸாயி சரணம். ஐயப்பா சரணம்.
ஜெய் ஸாயிராம்.

(Translated into Tamil by Sankar Kumar)                                                                 
....................To be continued
(Uploaded by : Santhipriya) 

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.