Monday, January 30, 2012

Shirdi Sai Baba's Grace-Experience Of Sai Devotees-Part 28 /...... continued

சாயிபாபாவுடனான


.........continued Part-4
 

பாபாவின் திருப்பாதங்களைத் தொட்டு....

அன்புள்ள மனிஷா தீதி,
நீங்கள் நலமென நம்புகிறேன். பாபாவின் திருநாமத்தை எங்களுக்குள் பரப்புகின்ற அரிய சேவைக்காக எனது வந்தனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனது பெயரையோ அல்லது மின்னஞ்சல் முகவரியையோ வெளியிட வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
ஓம் ஸாயிராம். ஸாயிபாபாவின் பூரணக் கிருபையினால், மனிஷா தீதி நடத்திவரும் இந்தத் தளத்தில் அவரது லீலையை நான் அளிப்பது இது இரண்டாம் முறை. நான் அமெரிக்காவில் வசிக்கும் ஒரு மலையாளி கிறுஸ்தவப் பெண். கடந்த சில ஆண்டுகளாக நான் பாபாவின் தீவிர பக்தையாக இருந்து வருகிறேன். இந்த புத்தாண்டு தினத்தன்று நிகழ்ந்த ஒரு அனுபவத்தை இங்கு சொல்ல விரும்புகிறேன்.
தேவாலயத்துக்குச் செல்லமுடியாத ஞாயிற்றுக்கிழமைகளில் நான் எனது வீட்டிலிருந்து 40 நிமிடத் தொலைவில் இருக்கும் பாபா ஆலயத்துக்குச் செல்வது வழக்கம். புத்தாண்டு தினத்துக்கு [ஞாயிற்றுக்கிழமை] முந்தைய வியாழனன்று, அந்த வார இறுதி எனக்கு விடுப்பு நாள் என்பதால், பாபா கோவிலுக்குச் செல்வதைப் பற்றி எண்ணிக் கொண்டிருந்தேன். வீட்டை விட்டு வெளியே வரக்கூடச் சோம்பலாக இருந்ததால், அந்த வியாழக்கிழமையன்று நான் சற்று அசதியாக உணர்ந்தேன். பாபாவைப் பார்க்க 40 நிமிடங்கள் காரோட்டிச் செல்ல வேண்டுமே என்னும் எண்ணத்தால் நான் மிகவும் குற்ற உணர்வுள்ளவளாகத் தவித்தேன். எனவே, நான் பாபாவிடம் அன்று வரமுடியாமல் போனதற்காக எனது மன்னிப்பைக் கோரிவிட்டு, கண்டிப்பாக புத்தாண்டு தினத்தன்று வருவேன் என உறுதியும் கொடுத்தேன். புத்தாண்டுக்கு முந்தைய தினம் ஒரு நண்பரின் வீட்டில் நடந்த விருந்துக்குப் போகலாமா என நினைத்த நான், செல்ல வேண்டாம் என முடிவெடுத்தேன்.
எனது பெற்றோர்களுடன் அன்றையப் பொழுதைக் கழித்து, நள்ளிரவில் பாபாவை வேண்டலாம் என முடிவு செய்தேன். அப்படியே செய்யவும் செய்தேன். சரியாக நள்ளிரவு நேரத்தில் எனது வீட்டில் நான் வைத்து வணங்கும் சிறிய பாபா சிலை முன்பு மெழுகுவர்த்திகளை ஏற்றிவைத்து, அவரது ஆசிகளையும், நல்ல ஆரோக்கியத்தையும், அனைவருக்கும் இன்பைத்தை அளிக்குமாறும் பாபாவை வேண்டிக்கொண்டு படுக்கைக்குச் சென்றேன். சரியான நேரத்தில் எழுந்து பாபாவை காண காரில் சென்றேன். ஆலயத்தை அடைந்தவுடன், உள்ளே செல்லும்போது, எனக்கு இடப்புறத்தில் எதற்காகவோ காத்திருப்பதுபோல் ஒரு நீண்ட வரிசையில் பக்தர்கள் நின்றுகொண்டிருப்பதைக் கண்டேன். நேராக பாபாவைப் பார்க்கச் செல்வதற்குப் பதிலாக நானும் அந்த வரிசையில் நின்றேன். [இந்த சமயத்தில், எதற்காகக் காத்திருக்கிறோம் என்பது எனக்குத் தெரியாது. மற்றவர்களைப் போலவே நானும் அவர்களுடன் சேர்ந்துகொண்டேன். ஆலய அர்ச்சகர் தருகின்ற பிரசாதத்துக்காக நிற்கிறார்கள் போலும் என நான் எண்ணினேன்.] எனக்கு முன்னால் இருந்த கூட்டம் அதிகமாக இருந்ததால், பாபாவின் தலை மட்டுமே எனக்குத் தெரிந்தது. நான் அப்படியொன்றும் அதிக உயரமானவளும் இல்லை. திடீரென, ஒரு வயதான பெண்மணி பாபாவின் திருவுருவச் சிலையின் அருகிலிருந்து நகர்ந்து செல்வதைப் பார்த்தேன். இவர் எப்போதுமே ஆலயத்து அர்ச்சகருக்கு உதவியாகக் கோவில் காரியங்களைச் செய்பவர் என எனக்குத் தெரியும். பாபா சிலை இருக்கும் மேடையில் ஏறி அவருக்கு அருகில் நிற்பதற்கு இவர் எவ்வளவு அதிர்ஷ்டம் படைத்தவராக இருக்க வேண்டும் என நினைத்தேன்.
பாபாவின் திருப்பாதங்களைத் தொட்டு வணங்க வேண்டும் என்னும் ஆசை எனக்குள் இருந்தாலும், பக்தர்கள் அந்த மேடை மீது ஏற அனுமதி இல்லை என்பதால் அது இயலாத காரியம் என்பது எனக்குத் தெரியும். நான் அந்த 'உதவி செய்யும் பெண்ணாக' இருந்திருக்கக் கூடாதா எனும் எண்ணம் என்னுள் ஓடியது. அதன் பிறகு என்னைச் சுற்றி நிகழ்வதைப் பொருட்படுத்தாமல் பாபாவின் திருநாமத்தை ஜெபிக்கத் தொடங்கினேன். வரிசையின் தொடக்கத்துக்கு அருகில் செல்லும்போது, ஒரு இளைஞன் எல்லாருடைய கைகளிலும் சிறிது சுத்தம் செய்துகொள்ளும் திரவத்தை வழங்கிக் கொண்டிருந்தான். நானும் அதை வாங்கிக்கொண்டு கைகளைச் சுத்தம் செய்தபோது, எனக்கு முன்னால் இருந்தவர்கள் ஒவ்வொருவராக, பாபா சிலைக்கு அருகில் சென்று, அவரது பாதங்களைத் தொட்டு வணங்கி வேண்டிக் கொள்வதைப் பார்த்தேன். 'பாபா எனது மனஓட்டத்தைப் புரிந்துகொண்டு, எனது குறையையும் கேட்டார்! இப்போது நான் அவரது பாதங்களைத் தொட்டு வணங்கி வேண்டப் போகிறேன்' என உணர்ந்தேன். எனது முறை வந்ததும் அவர் முன்னே மண்டியிட்டு, அவரது புனிதப் பாதங்களைத் தொட்டு வணங்கி எனது கண்களிலிருந்து கண்ணீர் பெருகும் வரை பிரார்த்தனை செய்தேன்.
நீலமும், ரோஸ் வண்ணமும் கலந்த ஒரு ஆடையை பாபா அணிந்திருக்க வேண்டும் எனவும் அப்போது ஆசைப்பட்டேன். ஆனால் அன்று அவர் ஆரஞ்சு வண்ண ஆடை அணிந்திருந்தார். ஆனால், கழுத்தில் ஒரு ரோஜா மாலை அணிந்து என்னைத் திருப்திப் படுத்தினார். அந்த மேடை முழுதுமே நீல வண்ண மயில்களால் அலங்கரிக்கப் பட்டிருந்தது. மிகவும் அழகான ஒரு காட்சி அது. புத்தாண்டு தினத்தன்று அவரது திருப்பாதங்களைத் தொட்டு வணங்கி இந்த ஆண்டைத் தொடங்க வைத்தமைக்காக நான் எவ்வளவு நன்றிகளைக் கூறினாலும் போதாது. இந்த ஆண்டு மிகச் சிறப்பாக இருக்கப் போகிறது என்பதில் எனக்கு எந்த ஐயமும் இல்லை. அப்படியே ஒருசில கஷ்டங்களை நான் எதிர்கொள்ள நேரிட்டாலும் அது எனது கர்மவினையின் காரணமே எனவும் அறிந்தேன். பாபா எனது கைகளைப் பிடித்துக்கொண்டு அவற்றைச் சமாளிக்க உடனிருப்பார் எனவும் புரிந்துகொண்டேன். ஸாயி வியாழக்கிழமை விரதம் துவக்க முடிவு செய்து இதுவரை இரு வாரங்கள் அவரது அருளால் பூர்த்தி செய்து விட்டேன்.
ஸ்ரீ ஸச்சிதானந்த ஸத்குரு ஸாயிநாத் மஹராஜ் கி ஜெய்!
அனந்தகோடி ப்ரஹ்மாண்ட நாயக ராஜாதிராஜ யோகிராஜ பரப்ருஹ்ம ஸ்ரீ ஸாயிநாத் மஹராஜ் கி ஜெய்.
ஜெய் ஸாயிராம்.
...........தொடர்கிறது
(Translated into Tamil by Sankar Kumar)

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.