Saturday, March 31, 2012

Ram Vijaya- Introduction and Chapter-1

 ராம விஜயம்
அன்பானவர்களே ,
அனைவருக்கும் ராமநவமி தின வாழ்த்துக்கள்
பாபாவின் இந்த வலைத்தளம் மூலம் இன்று முதல் ''இராம விஜயம்'' என்ற புனிதப் புத்தகத்தை நீங்கள் படித்து மகிழும் வகையில் வெளியிடுவதில் மிக்க பெருமைப்படுகிறேன். இந்த புனிதப் புத்தகத்தின் மகிமையை அனைவரும் அறிவீர்கள். ஸ்ரீ ராம சரித்திரத்தை ஸ்ரீ ராமாரின் பக்தர்கள் படித்து மகிழ்கிறார்கள். தசரா எனப்படும் விஜயதசமி அன்று முக்கியமாக அவருடைய சரித்திரத்தைப் படிக்கின்றார்கள்.

பாபாவின் குழந்தைகளான நாம் அவருடைய போதனைகளை நமது தினசரி வாழ்கையின் ஒரு அங்கமாகவே கொண்டு உள்ளோம். அவர் ஸ்ரீ சாயி சரித்திரத்தில் கூறி உள்ளவற்றை முடிந்தவரை கடை பிடிக்கின்றோம். அதில் கூறி உள்ளவற்றைத் தவிர பாபா தம்முடைய பக்தர்களை விஷ்ணு சஹஸ்ர நாமம், ஏக்நாத் மகாராஜின் கதை, பாகவத் அல்லது பவர்த்த ராமாயணம் , ஞானேஸ்வரி மற்றும் ராம் விஜயா போன்றப் புனிதப் புத்தகங்களையும் படிக்குமாறு வலியுறுத்தி வருகிறார்.

இந்தப் புனிதப் பணியில் என்னுடன் பங்கு கொள்ள இன்னொரு சாயி பக்தரான சங்கர்குமார்ஜி என்பவரை ஜெயராமன்ஜி மூலம் பாபா அனுப்பி உள்ளார். கடவுளின் ஆசி பெற்ற ஜெயராமன்ஜி எனும் சாந்திப்பிரியா என்பவர் சீரடி சாயி வலைதளத்தின் வெளியிடப்படும் ஆங்கிலக் கட்டுரைகளை நீங்கள் அனைவரும் தமிழ் மொழியில் படித்திட மொழிபெயர்த்து வெளியிட்டு வந்துள்ளார். அவருக்கு உதவிடும் வகையில் தற்போது அந்தப் பணியில் தற்போது சங்கர்குமார்ஜி அவர்களும் அவருடன் இணைத்து உள்ளார்.

சங்கர்குமார்ஜி அவர்கள் ராம விஜயத்தை தமிழாக்கம் செய்து தர விரும்புவதாக ஜெயராம்ஜி என்னிடம் கூறியதும் அதைக் கேட்ட நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. பிரமித்து நின்றேன். இந்த புத்தகத்தை வெளியிட நான் பல ஆண்டுகளாக ஆசை கொண்டு இருந்தேன். ஆனால் அதை இப்போதுதான் பாபா நிறைவேற்றித் தந்து உள்ளார். இந்தப் புத்தகம் அனைவரது ஆசைகளையும் தணிக்கும் என நினைக்கின்றேன்.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பகுதியாக இதை வெளியிட ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. ராம விஜயம் குறித்து சாயி சரித்திரத்திலும் பிற புத்தகங்களிலும் காணப்படும் செய்தி இது:

:- புனிதப் புத்தகங்களை இரவும் பகலுமாக ஒரு வாரத்துக்குள் படித்து முடிக்க வேண்டும் என்பது பாபாவின் அறிவுரை {(பாகம் 31) . விஜயானந்த் ஸ்வாமியை பாகவதத்தின் மூன்று சப்தாக்களை ஒரு வாரத்தில் படிக்குமாறு பாபா கூறி உள்ளார். அது போலவே ராம விஜயத்தையும் பற்றிக் கூறி உள்ளார். வாடாவில் இருந்தபோது பாபா தன் முன்னிலையில் பல பக்தர்களை புனிதப் புத்தகங்களை படிக்குமாறுக் கூறுவார். ராதாகிருஷ்ண ஆயி ராம நவமியில் நாமசப்தா சங்கீத நிகழ்ச்சியை நடத்துவார்.

:- நாம் மரணம் அடையும் முன்னால் நாம் நம்முடைய மனதை ஆன்மீகத்தில் செலுத்த வேண்டும். அப்போதுதான் வருங்காலத்தில் அனைத்தும் நல்லமுறையில் நடைபெறும். எவர் ஒருவர் தனது இறுதி வாழ்கையை எட்டி விட்டாரோ அவர்களை ஸ்ரீ ராம விஜயா புத்தகத்தைப் படிக்குமாறு பாபா கூறுவார். திரு வேஸ் என்பவரை பாபா ஸ்ரீ ராம விஜயத்தை மூன்று முறை படிக்குமாறு கூறினாராம். முதல் முறை அதை ஒரு வாரத்திலும், இரண்டாவது முறை மூன்று நாட்களிலும், மூன்றாம் முறை மீண்டும் மூன்று நாட்களிலும் அதைப் படிக்குமாறு கூறினாராம். (பாகம் 43 /44 ).

:- நாம் மரணத்தைக் கண்டு அஞ்சாமை என்ற நிலையை எப்போது எட்டுவோம்? அதை திரு நரசிம்ம சுவாமிஜி மற்றும் திரு ராதாகிருஷ்ண சுவாமிஜி மூலம் பாபா நமக்கு காட்டி உள்ளார். பாபா மரணம் அடையும் முன்னால் தசராவின் 9 தாவது, 10 வது மற்றும் 11 வது நாட்களில் ராம விஜயாவை படிக்குமாறுக் கூறி உள்ளார். அப்போது இன்னொரு முஸ்லிம் துறவிக்கு பாபா இப்படியாக செய்தியை அனுப்பினார் '' அல்லா ஏற்றி வைத்த விளக்கை அவரே எடுத்துக் கொண்டு செல்கிறார்''.

அன்பானவர்களே, நான் உங்கள் அனைவருக்கும் சங்கர்குமார்ஜி பற்றி கூறாவிடில் இந்த முன்னுரை முடிவு பெற்றதாகாது. பாபாவின் பூரண ஆசிகளைப் பெற்றுள்ள அவர் ராம விஜயத்தை மொழிபெயர்த்து நமக்கு அளிக்கின்றார். அவர் இன்று ஸ்ரீ ராம விஜயாவை எழுதிய ஆசிரியரான ஸ்ரீ ஸ்ரீதர் ஸ்வாமியைப் பற்றியும், ஸ்ரீ ராம விஜயத்தின் முதல் பாகத்தையும் அனுப்பி உள்ளார்.

இந்தப் புனித புத்தகத்தை என்னுடைய இணையத்தளம் மூலம் வெளியிட்டு அதை பாபாவின் பக்தர்கள் படித்து பயன் அடைய எனக்கு அருள் புரிந்துள்ள சாயியின் பாதங்களில் என் தலையை வைத்து வணங்குகிறேன். இந்தப் பணியில் அயராது தம்மை இணைத்துக் கொண்டு உள்ள ஜெயராம்ஜி மற்றும் சங்கர்குமார்ஜி அவர்களுக்கும் என் நன்றி.
அனைவருக்கும் ஜெய் சாயி ராம்
இதே  கட்டுரை ஆங்கிலத்திலும் வெளியாகின்றது. ஆங்கிலத்தில் படிக்க இங்கே கிளிக்  செய்யவும்.

மனிஷா



ஸாயிராம். ஒரு ஸாயி அடியவன் என மட்டுமே என்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறேன். 'ஸாயிபாபாவைக் கேளுங்கள்' என்னும் வலைதளத்திற்கு அவ்வப்போது சென்று என் சந்தேகங்களுக்கு விடை கேட்பது என் வழக்கம். அப்படி ஒருமுறை சென்று கேட்டபோது,' ராம விஜயம் படி. 14 நாட்களுக்குள் உன் பிரச்சினை சரியாகிவிடும்' என வந்தது.

ராம விஜயம் என்னும் நூலைப் பற்றி நான் கேள்விப்பட்டிருக்கிறேன். விஜயானந்த் என்னும் சென்னைத் துறவியின் கடைசிக் காலத்தில், அதனைப் பாராயணம் செய்யுமாறு பாபா சொன்ன நிகழ்வு ஸாயி ஸத்சரிதத்தில் 31-வது அத்தியாயத்தில் இருக்கிறது. இன்னும் சில அத்தியாயங்களிலும் இதனைப் பற்றிய குறிப்பு இருக்கிறது. பாபாவே இந்தப் புனித நூலை ஒரு அன்பரை விட்டு, தனது அந்திம காலத்தில் பாராயணம் செய்யச் சொல்லிக் கேட்டதாக அத்: 42-ல் படித்திருக்கிறேன்.

எனவே இந்தப் புனித நூலை இணையத்தில் தேடினேன். இறுதியில் ஒரு சுட்டியின் மூலம் இதன் ஆங்கில மொழியாக்கம் எனக்குக் கிடைத்தது. 14 நாட்களில் அதனைப் படித்து முடித்கேன். மன நிறைவாக இருந்தது. அப்படிப் படிக்கையில், மூல நூலான வால்மீகி ராமாயணம், கம்ப ராமாயணம், துளஸி ராமாயணம் முதலானவற்றை நான் படித்திருந்தாலும், அவற்றில் எல்லாம் இங்கும் அங்குமாகச் சொல்லியிருந்த பல நிகழ்வுகள் ஒரே கோர்வையாக, ஒரு தெளிவான ராமாயண நூலாக இது இருக்கிறது என எனக்குப் பட்டது.

ஜனவரி மாதம் நான் ஷீர்டி சென்று, அங்கிருந்து பண்டரிபுரம் சென்றேன். பல எளிய மராட்டியர்கள் கவனத்துடன் ஏதோ ஒரு நூலைப் படிப்பதைக் கண்டேன். அது என்னவென வினவ, 'ராம விஜயம்' என அறிந்து ஆச்சரியமடைந்தேன். இந்த நூலின் தமிழ்ப் பதிவு ஏதும் இல்லாததால், இதனைத் தமிழில் மொழிபெயர்க்கலாமே என நினைத்து பாபாவைக் கேட்க, அதற்கான சம்மதமும் கிடைத்தது. அதன் விளைவுதான் இந்தத் தமிழாக்கம்.
சங்கர்குமார்

இந்த நூலைப் பற்றி 

இந்த நூலை எழுதியவர் பெயர் ஸ்ரீ ஸ்ரீதர ஸ்வாமிகள்.

ஸமர்த்த ராமதாஸர் என்னும் மஹான் தனது 73-ம் வயதில் [1681-ல்] மறைந்தார். அதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், புனிதத் தலமான பண்டரிபுரத்துக்கு அருகிலிருக்கும் 'நஸ்ரே' என்னும் ஒரு சிற்றுரில் இன்றைய மராத்திய உலகமே போற்றிக் கொண்டாடும் .....மராட்டியக் கவிகளிலேயே மிகவும் உயர்ந்த இடத்தில் வைத்துக் கொண்டாடும்,..... ஸ்ரீதர என்பவர் ஒரு அந்தணக் குலத்தில் பிறந்தார். பண்டிதர்களிலிருந்து பாமரர் வரை அனைவராலுமே போற்றப்படும் இவருக்கு ஒப்பான கவி அந்த மாநிலத்தில் வேறெவருமே இல்லை. மோரோபந்த் என்பவரை அந்தணர்கள் கொண்டாடலாம்; குன்பி இனத்தவர் துக்காராமைப் போற்றலாம்; ஆனால் அந்த இரு சமூகங்களுமே இவரைத்தான் இன்னமும் போற்றி, மற்றவரை விடவும் முதன்மையாகக் கொள்வர்.

கொங்கண தேசத்திலிருக்கும் எந்தக் கிராமத்துக்குக்,.... குறிப்பாக மழைக்காலத்தில்,.....சென்றாலும் இறையுணர்வுள்ள மராத்தியர்கள் தங்கள் குடும்பங்களுடனும், நண்பர்களுடனும், ஸ்ரீதர ஸ்வாமிகளின் புனித நூல்களைப் பாராயணம் செய்வதை இயல்பாகவே காணலாம். அவ்வப்போது எழும் லேஸான சிரிப்பொலி, பெருமூச்சு, கண்ணீர் இவற்றைத் தவிர, அவர்களது கவனத்தைக் கலையச் செய்யும் ஒரு சிறிய சத்தத்தைக் கூடக் அங்கே கேட்க முடியாது! உணர்ச்சிப் பெருக்கு தாங்கமுடியாமல், ஒருவர் பெருத்த குரலிட்டு அழத் துவங்க, கூடியிருக்கும் அனைவரும் அவருடன் சேர்ந்து குரலெழுப்ப, பாராயணம் செய்பவரை சற்று நேரம் நிறுத்தி வைக்கும். இன்றும் நிகழும் இந்தக் காட்சிகள் இந்தப் பெரும் புலவரின் கவித்திறமைக்குச் சான்றாக விளங்குகிறது. அதற்கு முன்னால், இந்த மஹானைப் பற்றி வேறெவர் சொல்லும் எதிர்க் கருத்தும் இருக்குமிடம் தெரியாது மறைந்து போகும்.

ஸம்ஸ்கிருத மொழி அறியாத எளிய மக்களை..... 'பலவீனமான சமூகம்' என ஆங்கிலேயர்களால் இகழப்பட்ட எளிய மக்களை..... மனதில் கொண்டே இந்த நூல்களைத் தான் இயற்றியதாக ஸ்ரீத்ர ஸ்வாமிகள் சொல்கிறார். படித்தறிந்த பண்டிதர்களுக்கும், வடமொழி பாண்டித்தியம் படைத்த ஒரு சிலருக்கு மட்டுமே சொந்தமாக இருந்த பல அரிய புராணங்களை எளிய மக்களும் செவ்வனே படித்தறிந்து அதில் திளைக்கச் செய்ததில் இவருக்கு மிகப் பெரிய பங்கு உண்டு. அவர்களது தாய்மொழியான மராத்தி மொழியிலேயே, அவர்கள் அனைவரும் உணரும் வகையில் ராமாயணம், மஹாபாரதம், சிவ புராணம் போன்ற நூல்களை இயற்றி, பெரும் சேவை செய்திருக்கிறார். துக்காராம், ராமதாஸர் போல, சொந்தமாகவே நூல்களை இயற்றவில்லை என்றாலும், இவரது பணி மகத்தானதே.

ராம விஜயத்தின் முதல் அத்தியாத்தின் இறுதியில், மராத்தி மொழியில் இந்தப் புனித நூல்களைப் படிப்பது பற்றிய சில தகவல்களை அவர் சொல்லியிருக்கிறார். 'பண்டிதர்கள் இந்த நூலை, இது மராத்திய மொழியில் எழுதப் பட்டிருக்கிறது என்பதாலேயே அலட்சியப்படுத்தி ஒதுக்கிவிடக் கூடாது. எந்த மொழியில் இயற்றப் பட்டிருந்தாலும், அதன் பொருள் சரியாகச் சொல்லப் பட்டிருக்கிறதா என மட்டுமே கவனிக்கப்பட வேண்டும். ஒரே நதியின் ஒரு கரை 'கிருஷ்ணா' எனவும், மறு கரை 'வேணா' எனவும் அழைக்கப்பட்டாலும், நடுவில் பாயும் நீர் ஒன்றேதான் என உணர வேண்டும். எளியவர்களும், பெண்களும் ஸம்ஸ்கிருதம் அறிய மாட்டார்கள். ஒரு ஆழ்ந்த கிணற்றருகே தாகத்துடன் நிற்கும் ஒருவனைப் போன்றவர்கள் இவர்கள். ஒரு கயிறும், பானையும் அவர்களிடம் இல்லாவிட்டால், எப்படி அவர்களால் தங்களது தாகத்தைத் தீர்த்துக் கொள்ள இயலும்?

அதுவே, அவர்கள் ஒரு குளத்தருகே வந்தால், அவர்களது தாகம் உடனே தீரும். இது போலத்தான், அவர்களது தாய் மொழியிலேயே அந்த விஷயத்தைச் சொன்னால், அவர்களுக்கும் நற்கதி கிடைக்க இயலும். ராமனின் கதை வடமொழியில்தான் சொல்லப் பட்டிருக்கிறது. எனவே அதை அந்த மொழியில் படிப்பது சிறந்ததே. ஆனல், எப்படி ஒரு யானையை தாமரைத் தண்டால் கட்ட முடியாதோ, அது போலத்தான் கடினமான வடமொழியின் மூலம் இந்தப் புராணங்களைப் புரிய முயல்வதும். வடமொழியை அறிந்தவர் மட்டுமே இதைப் புரிந்துகொள்ள முடியுமென்றால், எப்படி இவர்களும் நற்கதி பெறுவது? வசதி படைத்தவர்கள் பட்டாடை அணிகின்றனர். எளியவர்களோ கந்தலுடை அணிந்து வெய்யிலிலிருந்தும், குளிரிலிருந்தும் தங்களைக் காத்துக் கொள்கின்றனர். இதுவே ஸம்ஸ்கிருதத்துக்கும், தாய்மொழிக்குமான வேறுபாடு. வடமொழி ஒரு நிலவு என்றால், தாய்மொழி அதன் பிரகாசம். வடமொழியைப் போற்றும் பண்டிதர்கள் அதன் ஒளியைத் தங்கள் மொழியிலும் தர வேண்டும். இது அவர்கள் கடமை."

ராம விஜயம், பாண்டவர் பெருமை, சிவனாரின் அற்புதங்கள் எனப் பல நூல்களை இவ்வண்ணம் அவர் மராத்தி மொழியில் தந்திருக்கிறார். தனது 60-வது வயதில் 1728-ல் இந்த மஹான் மறைந்தார்.

சுமார் 19 ராமாயண நூல்களை ஒப்பிட்டு, அவற்றிலிருந்து பொருத்தமான நிகழ்வுகளத் தெரிவு செய்து, 9147 இருவரிக் கவிதைகளாக 'ஓவி' சந்தத்தில் இந்த ராம விஜயத்தை அவர் படைத்திருக்கிறார்.
இப்போது அதன் ஆங்கில, தமிழ் மொழியாக்கங்களைப் பார்க்கலாம். ஒரே நீண்ட நூலாக இது மராத்தியில் தரப்பட்டிருந்தாலும், படிப்பவரின் வசதிக்காக, இதனைச் சிறிய அத்தியாயங்களாகப் பிரித்துத் தந்திருக்கிறேன். ஸாயிராம்.
சங்கர்குமார்.



ராம விஜயம்
பாகம் - 1 
(இந்த நூலை முதலில் எழுதியவர் :- ஸ்ரீ ஸ்ரீதர ஸ்வாமிகள் )

பிரம்ம தேவரின் மகனான புலஸ்த்யர் என்னும் ரிஷி [ஸப்த ரிஷிகளில் இவரும் ஒருவர்] தேவவர்ணி என்பவரை மணந்தார். இவர்களுக்குப் பிறந்த மகனின் பெயர் வைஸ்ரவர். பாரத்வாஜ ரிஷியின் [இவரும் ஸப்தரிஷிகளில் ஒருவர்] மகளை மணந்த வைஸ்ரவருக்குப் பிறந்தவர் குபேரன். பிரம்மா லங்காபுரி என்னும் நகரை நிர்மாணித்து அதனைக் குபேரனுக்குக் கொடுத்தார் .

குபேரன் லங்காபுரியை ஆண்டுவந்தபோது, பாதாள லோகத்திலிருந்து பிராம்மண வடிவில் வந்த ஒரு ராக்ஷஸன், குபேரனைக் கண்டு பொறாமை அடைந்தான். 'இது என்னுடைய ராஜ்ஜியம். குபேரன் இதனை ஆளத் தகுதி இல்லாதவன்' என அவன் தனக்குள் சொல்லிக் கொண்டு, 'காகேஸி' என்னும் தன் மகளை வைஸ்ரவருக்குத் திருமணம் செய்து கொடுத்தான். இவ்விருவர் மூலம் பிறக்கும் குழந்தைகளைக் கொண்டு, குபேரனை லங்கையிலிருந்து விரட்டியடிப்பதே இதன் நோக்கம்.

வைஸ்ரவரின் மூலம் காகேஸிக்கு ராவணன், கும்பகர்ணன், விபீஷணன் என்னும் புத்திரர்களும், தாடகை, ஸூர்ப்பனகை என்னும் புத்திரிகளும் அசுரக் குழந்தைகளாகப் பிறந்தனர். ராவணனும் அவனது சகோதரர்களும் கோகர்ணம் என்னும் இடத்திற்குச் சென்று கடுமையான தவம் இயற்றினர். ராவணன் சிவனையும், கும்பகர்ணன் பிரம்மனையும், விபீஷணன் விஷ்ணுவையும் குறித்துத் தவமிருந்தனர்.இவர்கள் செய்த தவத்தால் மிகவும் மகிழ்ந்த பிரம்மதேவர் அவர்கள் முன் தோன்றி, வேண்டிய வரங்களைக் கேட்கும்படி ஆசீர்வதித்தார்.

அனைத்துத் தெய்வங்களையும் சிறைப்பிடிக்கும் வலிமையையும், அளவிலாச் செல்வம் மற்றும் அறிவு இவற்றை ராவணன் வேண்டிப் பெற்றான்.

ஸ்வர்கத்தையும், பூமியையும் ஒரேயடியாக கபளீகரம் செய்யும் வரத்தை கும்பகர்ணன் பிரமனிடம் வேண்ட நினைக்க, அதைக் கேட்ட அனைத்துத் தேவர்களும் பயந்து நடுங்கி, ஸரஸ்வதி தேவியை மிகவுமே வேண்டினர். அவர்களுக்காக மனமிரங்கிய ஸரஸ்வதி தேவி, கும்பகர்ணனின் நாவில் குடியேறி, நீண்ட தூக்கத்தைக் கேட்குமாறுச் செய்துவிட்டாள். மனமகிழ்ந்த பிரமனும் அப்படியே அந்த வரத்தை நல்கி, ஆறு மாதங்களுக்கு ஒருமுறை மட்டும் தூக்கத்திலிருந்து விழித்து, நன்றாக வயிறு புடைக்க உண்டு, அனைத்துக் கேளிக்கைகளையும் அனுபவித்து, மீண்டும் உறக்கத்தில் ஆழும் வரத்தை அவனுக்கு அளித்தார்.

எப்போதும் விஷ்ணு தியானத்தில் இருக்கும் வரத்தை விபீஷணன் வேண்டிப் பெற்றான்.
வரங்களைப் பெற்ற ராவணனும், கும்பகர்ணனும், கரதூஷணர், திரிஷிரா மற்றும் அனைத்து ராக்ஷஸர்களையும் சேர்த்துக்கொண்டு, இலங்கையைக் கைப்பற்றவென குபேரனின் மீது படையெடுத்தனர். ஆனால், அசுரப் படைகளுக்கு மிகப் பெரிய சேதம் விளவித்து, குபேரன் அவர்களை விரட்டியடித்தான்.

நேராக வைஸ்ரவரிடம் சென்ற ராவணன், இலங்கையை எந்தவிதமான சண்டையும் இல்லாமல் தனக்குக் கொடுக்குமாறு குபேரனுக்கு ஆணையிடும்படி ஒரு கடிதத்தைப் பெற்றுக்கொண்டு, குபேரனிடம் சென்று அதைக் கொடுக்க, தந்தை சொல்லைத் தட்டாமல், குபேரனும் இலங்கையை ராவணனுக்குக் கொடுத்துவிட்டு, தனது விமானத்தில் ஏறி ஸ்வர்கம் சென்றடைந்தான்.

'மாயாஸுரன்' என்னும் ஒரு அசுரன் தனது மகள் மண்டோதரியை ராவணனுக்கு மணம் செய்து வைத்தான்.

'மஹாபலி'யின் பேத்தியான பிர்க்கஜ்வலா என்பவளை கும்பகர்ணன் மணமுடித்தான்.
கந்தர்வன் ஒருவனின் மகளான 'ஷர்மை' என்பவளை விபீஷணன் மணந்தான்.

எல்லா தேசங்களையும் ராவணன் வென்று, ஏராளமான அந்தணர்களையும், பசுக்களையும் கொன்றழித்தான். குபேரனை வென்று அவனது திரவியங்களைக் கொள்ளையடித்தான். அனைத்து மக்களையும் வாட்டி வதைத்தான்.

அவனுக்கு எண்ணாயிரம் [8,000] மனைவியரும், ஒரு லக்ஷம் பிள்ளைகளும், ஒரு லக்ஷத்து இருபதினாயிரம் பேரப் பிள்ளைகளும் இருந்தனர். 18 அக்ஷுணி இசை வல்லுநர்கள் அவனைத் தினமும் தங்களது இசைப் புலமையால் மகிழ்வித்தனர். எல்லா அரசர்களும் அவனுக்கு அடிமைகள் ஆனார்கள். அவனது ராஜ சபையில் தினமும் எண்ணாயிரம் விளக்குகள் ஏற்றப்பட்டன.
[சுதந்திரமாக இறக்கைகளுடன் பறந்து திரிந்துகொண்டிருந்த தங்களது இறக்கைகளை வெட்டி வீழ்த்தித் தங்களைச் செயலற்று ஒரே இடத்தில் அமரச் செய்துவிட்டதால்,] இந்திரனுக்குப் பயந்த பர்வதங்கள் [மலைகள்] ராவணனிடம் அடைக்கலம் புக, அவர்களை எல்லாம் தனது யானைகளாக மாறச் செய்து தனக்கு சேவகம் செய்ய வைத்தான்.

பின்னர், பெரும் படையைத் திரட்டி, தனது மகனான மேகநாதனுடன் இந்திரன் மீது படையெடுத்தான். தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையே கடும் யுத்தம் நிகழ்ந்தது. ஆனால் அசுரப் படையே வென்றது. ஐராவதம் என்னும் வெள்ளை யானையின் மேல் அமர்ந்து போரிட்ட இந்திரனை அந்த யானையுடன் சேர்த்து சுழற்றி அடித்து வீசியதால் மேகநாதனுக்கு இந்திரஜித் என்னும் பட்டப்பெயர் கிடைத்தது.
அனைத்து தேவக் கடவுளரும் அடிமைகளாக ஆக்கப்பட்டு, தனது ராஜாங்கத்தில் ஊழியம் செய்ய வேண்டும் என்னும் நிபந்தனையுடன் விடுவிக்கப் பட்டனர். இந்திரன் சமையற்காரனாகவும், சந்திரன் ராவணனுக்குக் கொற்றக்குடை பிடிக்கும் சேவகனாகவும், அக்னி சலவைக்காரனாகவும், கபஸ்தி என்பவன் அவனுக்குப் பணியாளாகவும், பிரஹஸ்பதி என்னும் தேவகுரு அவனது சபையில் அரசு வழக்கறிஞராகவும், பிரமன் புரோஹிதராகவும், நாரதர் தம்புராவை மீட்டி எப்போதும் அவனை மகிழ்விக்கும் இசைப் பாடகராகவும் நியமிக்கப் பட்டனர்.

சிவனை ஆராதித்து அவருக்கு மிகவும் பிரியமானவராகி, அவரது அருளால் பத்து தலைகளும், இருபது கைகளும் பெற்றான். தனக்குக் கிடைத்த இந்தப் பெருமைகளால் கர்வமுற்ற ராவணன், ஒருநாள் தனது விமானத்தில் ஏறி, சிவன் உறையும் கைலாஸத்துக்குச் சென்றான். சிவனாரின் வாயிற்காப்பாளரான நந்திதேவர், ராவணன் கைலாஸத்துக்குள் நுழைவதைத் தடுத்தார். தான் அவமானமுற்றதைப் பொறுக்க முடியாமல், 'நான் உன்னையோ, அல்லது உனது தலைவனான ஈசனையோ கிள்ளுக்கீரையென மதிக்கிறேன்' என ஆணவத்தில் பிதற்றியபடியே, நந்திதேவரைத் தாண்டி கைலாஸத்துள் பிரவேசிக்க முயன்றான். இதைக் கேட்ட பரமேச்வரன் 'ஒரு மனிதப் பிறவியும், குரங்குகளுமாக உன்னைப் போரில் அழித்துக் கொல்லட்டும்' என ராவணனைச் சபித்தார்.

சாபத்தை வாங்கிய ராவணன் மேலும் கோபமடைந்தவனாகி, சிவனார் அமர்ந்திருந்த கைலாஸத்தை இலங்கைக்குக் கொண்டுசெல்ல நினைத்துத் தன் கைகளால் பெயர்த்தெடுக்க முயன்றான். பரமசிவன் தனது கால் பெருவிரலை ஊன்றி, கைலாஸ மலையின் கீழே நசுக்குண்டு ஆயிரம் ஆண்டுகள் வதையுறும் வண்ணம் செய்தார். அப்படிக் கிடந்த அந்த நேரத்தில் ராவணன் அலறித் துடித்து, சிவனைப் பலவாறுமாகத் துதித்துத் தன்னை விடுவிக்குமறு வேண்டினான். மனமிரங்கிய சிவன் அவனை விடுவித்தார்.

..........................[தொடரும்]

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.