Sunday, April 1, 2012

Rama Vijaya- Chapter-2

"ராம விஜயம்" -- 2


கைலாஸத்திலிருந்து கிளம்பிய ராவணன் மத்ய பிரதேசத்தை ஆண்டுவந்த ஸஹஸ்ரார்ஜுன் எனும் பேரரசனிடம் [மஹாவிஷ்ணுவைக் குறித்து கடுமையான தவம் செய்து அவரது வரத்தால் ஆயிரம் கைகளையும், அளப்பிலா வலிமையையும் பெற்றவன் இவன்] சென்று தன் பலத்தைக் காட்டிப் பெருமை பேசினான். அவனை அப்படியே அலாக்காகத் தூக்கிய ஸஹஸ்ரார்ஜுன் தனது கரங்களில் அவனை ஏந்திக் கொண்டான்.
அவமானமடைந்த ராவணன், அபார வலிமை பெற்ற பலி மஹாராஜாவின் ராஜ்ஜியத்தை அடைந்து, அங்கும் தனது வீர,தீர பராக்கிரமத்தைப் பற்றிப் பெருமை பேச, அவனது வலிமையைச் சோதிக்க விரும்பிய மஹாபலி, ராவணனைப் பார்த்து, 'பிரஹ்லாதனைக் காக்கவென நரஸிம்ஹரால் அழிக்கப்பட்ட ஹிரண்யகசிபுவின் காதுக் குண்டலங்கள் அதோ, அங்கே கிடக்கின்றன. அவற்றை இங்கே கொண்டு வா' எனப் பணித்தான். அதைக் கொண்டுவரச் சென்ற ராவணனால் அவற்றைத் தூக்கக் கூட முடியவில்லை!
அப்போது பலி மஹாராஜா, 'சரி, அதைக் கொண்டுவர முடியவில்லையெனில் பரவாயில்லை; நானும் என் மனைவியும் சொக்கட்டான் ஆடும்போது, இதோ இங்கே கீழே விழுந்துவிட்ட இந்த தாயக் கட்டானையாவது எடு, பார்க்கலாம்' எனச் சொன்னான். அதன்படியே அதனை எடுக்கச் சென்ற ராவணனே ஆச்சரியப்படும்படியாக, அவனால் அதை அசைக்கக்கூட முடியவில்லை. ராவணனது நிலைமையைக் கண்டு மஹாபலியும், அவனது மனைவியும் வயிறு குலுங்கச் சிரித்தனர்.
இப்படியாக அவமானப்பட்ட ராவணன் அங்கிருந்து இலங்கையை நோக்கிக் கிளம்பினான். ஆனால், அவன் செல்லும் வழியில், அவனது ஆடை, ஆபரணங்கள் களவாடப்பட்டு, அவனது பத்து முகங்களிலும் சேறு பூசப்பட்டு, கைகள் அனைத்தும் ஒரு கைதியைப் போல பின்னால் பிணைத்துக் கட்டப்பட்டு, சாலையில் விடப்பட்டான்.
வழியில் சென்ற அனைவராலும் அவன் மிகவும் துன்புறுத்தப்பட்டான். சிலர் அவன் மீது புழுதி வாரித் தூற்றினர்; சிலர் அவனை முகத்தில் அறைந்தனர்; அவனது தாடியைப் பிடித்துச் சிலர் இழுத்தனர்; சாணம் நிரம்பிய மடுவில் அவனை அமரச் செய்தனர். மஹாபலியின் பணிப்பெண் ஒருத்தி அவனைப் பிடித்த பிடியில், அலறிப்போய், தனக்கு உயிர்ப்பிச்சை அளிக்குமாறு ராவணன் கதறினான்.
வைஸ்ரவர் அப்போது அங்கே வந்து மஹாபலியிடம் இந்த அசுரனைத் தனக்குப் பரிசாக அளிக்குமாறு கெஞ்ச, மஹாபலியும் அவ்வாறே ராவணனை விடுதலை செய்தான். அவமானத்துடனும், குழப்பத்துடனும் ராவணன் இலங்கை திரும்பினான்.
[தொடரும்]

(Translated by Sankarkumar and uploaded by Santhipriya)

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.