Wednesday, July 25, 2012

Shirdi Sai Baba's Grace-Experience Of Sai Devotees-Part 45.

"ஷீர்டி ஸாயி பாபாவின் கருணை
  
(Translated into Tamil by Sankarkumar)


ஸாயிராம்.
அனைவருக்கும் இனிய பாபா நாள் வாழ்த்துகள். பாபாவின் அற்புத லீலைகள் உலகெங்கிலும் இருக்கும் அடியார்களால் உணரப்படுகின்றன. மஹாஸமாதிக்குப் பிறகும் தனது லீலைகள் தொடரும் என ஸ்ரீ ஸாயி ஸத் சரிதத்தில் சொன்ன வாசகங்களுக்கு இவை சாட்சியாக விளங்குகின்றன. வாழும் தெய்வமான பாபா தனது குழந்தைகளை அன்புடன் பாதுகாக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே. பாபாவின் மேல் தீவிர நம்பிக்கையும், உறுதியும் கொண்ட அன்பர்கள் இத்தகைய அனுபவங்கள் மூலம் அவரது கருணையையும், ஆசிகளையும் தங்களுக்கு நேரும் கஷ்ட கலங்களில் அனுபவ பூரணமாக உணர்கின்றனர். அத்தகைய பல அன்பர்களின் அனுபவங்களை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.
ஜெய் ஸாயிராம்.
மனிஷா 


"இளவயது அனுபவம்"

தனியார் நிறுவனமொன்றில் மனிதவளத் தேர்வு அதிகாரியாக, 26 வயதான நான் பணி புரிகிறேன். எனது குழந்தைப் பருவத்தில் நிகழ்ந்த ஒரு அனுபவத்தை இங்கே பகிர்ந்து கொள்கிறேன். அப்போது எனக்கு 3 வயது இருக்கும். பெற்றோருடன் மும்பயில் இருக்கும் எனது அத்தை வீட்டுக்குச் சென்றிருந்தோம். அங்கே மகிழ்ச்சியாகச் சிறிது நாட்கள் கழித்த பின்னர், ஸாயி தரிசனம் காண வேண்டி ஷீர்டிக்குச் செல்ல நினைத்தோம். டோம்பிவலி பேருந்து நிலையத்தில் நானும், எனது பெற்றோரும், எனது அத்தையின் கணவரும் [மாமா] காத்திருந்தோஒம். பயணச் சீட்டு வாங்க என் தந்தை செல்ல, என் தாய் எனது தம்பியைக் கவனித்துக்கொண்டு, மாமாவுடன் பேசிக் கொண்டிருந்தார். எனது தந்தையைப் பின்தொடர்ந்து சென்ற நான், அவரைக் காணாமல், அவர் ஏதோ பேருந்தில் ஏறிவிட்டார் என நினைத்து கல்யாண் செல்லவிருந்த ஒரு பேருந்தில் ஏறி உட்கார்ந்து விட்டேன். அந்தப் பேருந்து உடனே அங்கிருந்து கிளம்பிவிட்டது. அதற்குள் என் தந்தை திரும்பி வந்து, என்னைக் காணாமல் தேடத் தொடங்கினார். என் தாய் அழத் தொடங்கி விட்டார்! நானும் பேருந்தில் தனியாக அழுது கொண்டிருந்தேன். ஏதோ பேருந்தில்தான் நான் ஏறிவிட்டேன் என உணர்ந்து, அங்கிருந்து கிளம்பிய கடைசிப் பேருந்தைப் பற்றி என் தந்தை விசாரித்து, உடனே ஒரு ஆட்டோவில் 'கல்யாண்' பேருந்து சென்ற வழியில் கிளம்பினார். உடனே அந்த பேருந்தையும் தொடர்பு கொண்டு, விவரத்தைச் சொல்லி, அடுத்த நிறுத்தத்தில் பேருந்தை நிறுத்தச் சொல்லி வேண்டினார். மிகவும் கருணையுள்ளம் கொண்ட அதன் நடத்துநர் உடனே பேருந்தைத் திருப்பி, முந்தைய நிறுத்தத்துக்கே கொண்டுசெல்லப் பணித்தார். என்னைக் கைகளில் தாங்கியபடியே, 'இது யாருடைய குழந்தை?' என அவர் கேட்க பாபாவை விடாமல் பிராத்தித்துக்கொண்டு வந்த என் தந்தை, எனது சிவப்பு நிற ஆடையைப் பார்த்ததும், முண்டியடித்துக்கொண்டு முன்னால் வந்து, என்னைக் கைகளில் வாங்கிக் கொண்டார். அன்று முதல் எங்கள் குடும்பமே பாபாவின் அடியார்களாக ஆகிவிட்டோம். அவரது ஈடற்ற கருணையை என்னால் மறக்கவே இயலாது. எனது தந்தை இன்றும் அதைச் சொல்லிச் சொல்லி பாபாவை வாழ்த்துவார். பாபாவின் கருணையினாலேயே நான் இன்று என் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருக்கிறேன். என் மீதும், எங்கள குடும்பத்தினர் மீதும், மற்றும் உங்களைப் போற்றும் அனைவர் மீதும் உங்களதகருணை மழையைப் பொழிந்துகொண்டே இருக்க வேண்டுகிறேன், பாபா!
ஜெய் ஸாயி ராம்.

"பாபாவின் ஆசீர்வாதங்கள்
நம்பிக்கையும், பொறுமையும்"

பாபாவின் ஆசியினால் தாங்கள் அடையும் இனிய அனுபவங்களைத் தங்கிவரும் இந்த வலைதளத்தை நான் கண்டதும் அவரது ஆசிகளாலேயே. காலையில் தினமும் முதன் முதல் கணினியைத் திறந்து பார்ப்பதும் இதையே. இவற்றை இங்கே பகிர்ந்துகொள்ளும் அனைவருக்கும் எனது வந்தனங்கள். வாழ்க்கையின் கடினமான சோதனை நேரங்களில் எனது நம்பிக்கையை உறுதிப்படுத்த இவை பெரிதும் துணை புரிகின்றன. எனது இந்த அனுபவத்தையும் தயவுசெய்து பிரசுரிக்க வேண்டுகிறேன். 2012 ஃபிப்ரவரி மாதத்தில் ஒருநாள், எங்களது தாய் உடல்நலமில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் எனும் சேதியை எனது சகோதரன் சொன்னான். மறுநாள் பாபா கோவிலுக்குச் சென்று வந்ததும், எனது கணவர் அவரைத் தொடர்புகொண்டு தாயின் உடல்நலம் குறித்து விசாரித்தார். நான் அருகில் இல்லாமல் என் கணவர் தனியாக இருக்கும்போது சொல்வதாக எனது சகோதரன் கூறியதும், என் அன்னைக்கு ஏதோ தீவிரமான ஒரு நோய் வந்திருக்கிறது என நான் கவலையடைந்தேன். நுரையீரலில் புற்றுநோய் சற்று முற்றிய நிலையில் வந்திருப்பதாக அவன் அவரிடம் தெரிவித்தான். கூடவே சர்க்கரை நோயும அதிகமாகி, உணவு செல்வதே குறைந்து போனது என்றும், அதிக பட்சமாக இன்னும் ஒரு ஆண்டுதான் உயிரோடு இருப்பார் எனவும் கூறினான். அவர்கள் இருவரும் தனியே பேசிக்கொண்டிருக்கையில் நானும் இதைக் கேட்டேன். துக்கம் தாங்காமல் அழுது இரண்டு நாட்கள் தூக்கம் பிடிக்காமல் போயிற்று. வியாழக்கிழமையன்று ஸாயி ஸத் சரிதம் படிக்கத் தொடங்கினேன். சனிக்கிழமையன்று ஆலயத்துக்குச் சென்று வேண்டினேன். அடுத்த புதன் கிழமையே, அவரது நிலையில் முன்னேற்றம் கண்டிருப்பதாகவும், சர்க்கரை குறைந்து வருவதாகவும், அரைத் துண்டு ரொட்டி கூட சாப்பிட்டதாகவும் எனது சகோதரன் தகவல் சொன்னான். வயது கரணமாக 'கீமோதெரபி' கொடுக்க இயலாது என மருத்துவர்கள் சொல்லி, ஏத மருந்து மாத்திரைகள் மட்டும் கொடுத்து 2 மாதம் கழித்து, மீண்டும்வரச்சொல்லி அனுப்பிவிட்டார்கள். பாபாவின் உதியை என் தாய்க்கு அனுப்பி, தினமும் நெற்றியில்இட்டுக்கொள்ளுமாறும், சிறிது தண்ணீரில் கலந்து குடிக்குமாறும் எனது தாயிடம் கேட்டுக் கொண்டேன். அடுத்த முறை பரிசோதனைக்குச் சென்றபோது, அவரதுபுற்றுநோய் 75% குணமாகிவிட்டது என மருத்துவர் சொன்னதுமே இது பாபாவின்லீலையே என நான் மகிழ்ந்துபோனேன். யாருடைய உதவியும் இல்லாமலேயே நடக்கவும் ஆரம்பித்து விட்டார். இப்போது அவரது நிலை சாதாரணமாக இருக்கிறது. முழுதுமாக என் தாயின் நோயைக் குணப்படுத்தி,'ஸாயி, ஸாயி' என தினமும் அவர் ஜபிக்க வேண்டுமென நான் பாபாவை தினமும் வேண்டுகிறேன். அவரை நம்பினவர்கள அரவணைத்து, எல்லா நேரங்களிலும் கூடஇருக்கும் பாபா உண்மையிலேயேஉயர்ந்தவரே.
அனந்தகோடி ப்ரஹ்மாண்டநாயக ராஜாதிராஜ் யோகிராஜ் பரப்ரஹ்ம ஸ்ரீசச்சிதானந்த
ஸத்குரு ஸாயிநாத் மஹராஜ் கீ ஜெய்!"



''ஷீர்டி ஸாயி ராம் 
என்னை விஷ்ணு ஸஹஸ்ரநாமம் 
படிக்கச் செய்தார்"
அன்புள்ள மனிஷா,
ஷீர்டி ஸாயி அடியார்கள் தங்களுடைய அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள இப்படி ஒரு வலைதளம் அமைத்துக் கொடுத்ததற்காக முதலில் உங்களுக்கு என் வந்தனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஸாயிநாத் உங்களுக்கும், உங்களது
குடும்பத்தினர்க்கும் தமது ஆசிகளைப் பொழியட்டும். இப்போது நான் சொல்லப்போகும் இந்த அனுபவத்தைப் பிரசுரிக்க வேண்டுகிறேன்.
பாபாவின் பரிபூரண அருளை நானும், எனது குடும்பத்தினரும் பல வருடங்களாக அனுபவித்து வருகிறோம். அமெரிக்காவில் ஒரு பெருமை வாய்ந்த கல்லூரியில் படித்துவந்த எனது மகள் 2011-ல் வேலைக்காக கல்லூரியிலேயே நடத்தப்படும் நேர்முகத் தேர்வுகளில் கலந்து கொண்டாள். அவளுடைய ஜாதகக் கோளாறால் சுமார் 10 தேர்வுகளில் அவளால் வெல்ல முடியவில்லை. அவளது தன்னம்பிக்கை இதனால் மிகவும் குலைந்து போகவே, திக்கற்ற நாங்கள் பாபாவை வேண்டிப் பிரார்த்தித்தோம். உள்ளிருப்பு தேர்வுகளே நல்ல வேலை கிடைப்பதற்கான சிறந்த வழி என நாங்கள் உணர்ந்திருந்தோம். தினமும் ஒரு அத்தியாயம் ஸாயி ஸத் சரிதம் படிப்பதுடன், ஸாயி விரதமும் மேற்கொண்டோம். இது நிகழும்போது, அக்டோபர் மாதம் 29-ம் தேதி நடக்கவிருக்கும் தேர்வு ஒன்றைத் தவிர மற்றெல்லாவற்றிலும் எனது மகள் தோல்வியே அடைந்தாள். இப்போது நடக்கப்போகும் தேர்வில் வென்றால் அமெரிக்காவில் பிரசித்தி பெற்ற நிறுவனத்தில் அவளுக்கு நல்ல வேலைகிடைக்கும் வாய்ப்பு இருந்தது. ஆனால், இதுவரை நிகழ்ந்ததை வைத்து, நாங்கள் நம்பிக்கை இழந்து போனோம். எனது பிரார்த்தனைகளை மேலும் தீவிரமாக்கி, எனது மகளையும் நம்பிக்கையுடன் தேர்வை எதிர்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டேன்.அந்தத் தேர்வு நிகழ ஒரு சில நாட்கள் இருக்கும்போது, விஷ்ணு ஸஹஸ்ரநாமம் பாராயணம் செய்ய வேண்டுமென பாபா கட்டளை இடுவதாக ஒரு கனவு கண்டேன். எனது வீட்டில் அதன் பிரதி ஒன்று இருந்த நினைவு இருந்ததால், அதைத் தேடலானேன். பல மணி நேரங்கள் தேடியும் அது எனக்குக் கிடைக்கவில்லை 29/11/2011 அன்று நான் பங்களூர் வழியாக அமெரிக்கா சென்று, என் மகளுடன்  மாதங்கள் தங்கிவிட்டு, அவளது விடுமுறையின் போது, அவளையும்அழைத்துக்கொண்டு திரும்புவதாக ஏற்பாடு. அன்றுதான் அவளுக்கான தேர்வும் நடக்கவிருந்தது. அந்த நாளில் பயணம் செய்ய எனக்கு அரை மனதாகவே இருந்தது. அன்று மாலை 5 மணிக்கு நான் பங்களூரு செல்ல, ரயிலைப் பிடிப்பதற்காக வாசலில் வாடகை வண்டி நின்றுகொண்டிருந்தது. கிளம்பும் முன், பாபாவை வணங்கிஉதி இட்டுக்கொள்ள நான் பூஜையறைக்குச் சென்றேன். ஒரு சிறு அலமாரிக்குள் இருந்த உதியை எடுக்க அதைத் திறந்தபோது அதில் மேலும் சில புத்தகங்கள்
இருக்கக் கண்டேன். அவற்றுள் ஒன்று நான் தேடிக்கொண்டிருந்த விஷ்ணு ஸஹஸ்ரநாமம்! தமிழ் மொழியில் இருந்த அதைத்தான் நான் இத்தனை நாளாய்த் தேடினேன். அன்பு மிகுதியில் நான் பாபா காட்டிய கருணையை எண்ணி உருகினேன். தேர்வு பற்றி புது நம்பிக்கையும் பிறந்தது. உதி எடுக்க மட்டும் நான் போகாதிருந்தால், எனக்கு அது கிடைத்திருக்காது. அது இல்லாமலேயே நான் அமெரிக்கா சென்றிருப்பேன்.ரயிலிலேயே பாராயணத்தைத் தொடங்கி விட்டேன். மறுநாள் பங்களூருவிலும், விமானப் பயணத்திலும் அதையே படித்துக் கொண்டிருந்தேன். இதற்குள்ளாக, எனது மகள் மூன்று நிலைத் தேர்வுகளை நம்பிக்கை இல்லாமலேயே முடித்திருந்தாள். ஆனால் எனக்கென்னவோ உள்மனத்தில் இது நிகழும் என்றே பட்டது. அதேபோலவே நிகழ்ந்தது! மூன்று தேர்வுகளிலும் வென்று, அதைத் தொடர்ந்து ௨௦௧௨ ஜனவரியில் நடந்த மேலும் 2 தேர்வுகளிலும் வென்று அந்த வேலைக்கெனத் தெரிவு செய்யப்பட்ட முதல் மூன்று பேர்களில் ஒருத்தியாக வந்தாள். பொருள் தெரியாமல் படிக்கிறோமே என பாராயணத்தின் போது நினைத்தேன். பாபா இதையும் தனது அதிசய வழியில் தீர்த்து வைத்தார். டிசம்பரில் [2011] இந்தியா திரும்பியதும், எனது தந்தை என் கனவில் வந்து விஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயணம் செய்யுமாறு கூறினார். அவர் சேகரித்து வைத்திருந்த ஆன்மீகப் புத்தகங்களில் தேடியபோது, ஸ்வாமி சின்மயாநந்தர் எழுதிய ஆங்கில உரையின் பிரதியும் இருந்தது. அந்தப் புத்தகத்தைப் புரட்டியபோது, எனது தந்தையின் ஒரு பழைய ஃபோட்டோ அதில் இருக்கக் கண்டு ஆச்சரியம் அடைந்தேன். இந்த நிகழ்வை சாதாரணம் என நினைத்து என்னால் ஒதுக்க இயலவில்லை. பாரயணம் முடிந்ததும் தினமும் ஒரு பாரா அந்த உரையையும் படித்து வருகிறேன். இப்படிச் செய்வதில் அளவில்லா அனந்தம் அடைகிறேன்.இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் எனது மகள் இந்தப் புது வேலையில் சேரவிருக்கிறாள். அவளுடன் கூட இருந்து, அவளை வழி நடத்திச் செல்ல, பாபாவை வேண்டுகிறேன்.
ஓம் ஸ்ரீ ஸாயி ராம்.


"நான் உன்னுடன் எப்போதும் 
இருக்கிறேன் என்பதை நிச்சயமாக நம்பு' 
எனும் ஸாயிபாபாவின் கூற்றை 
நான் முழுமையாக நம்பிய நாள்"

ஸாயிராம்.
என் பெயர் ஸ்மிதா. மும்பையைச் சேர்ந்த நான் சென்னையில் கடந்த இரு ஆண்டுகளாகப் பணி புரிந்து வருகிறேன். என்னுடைய அனுபவம் சற்று நீண்டதாக இருக்கலாம். முடிந்தவரை, சுருக்கமாகக் கூறுகிறேன்.
பாபாவை எப்போதிலிருந்து நான் நம்பத் தொடங்கினேன் எனச் சரியாக நினைவில்லை. 2003-ல் ஒருநாள் எனக்கு அதிகம் நெருக்கமில்லாத ஒரு நண்பர் என் வீட்டுக்கு வந்து, [அவருக்கு எப்படி என் வீடு தெரியும் எனக்குத் தெரியவில்லை. நான் அவரை என் வீட்டுக்கு அழைத்ததே இல்லை!] ஸாயி ஸத் சரிதத்தை என் பெற்றோரிடம் கொடுத்துச் சென்றார். அப்போதிலிருந்து எனக்குத் தொல்லைகள் நேரிடும்போதெல்லாம் அதைப் படிப்பேன். அது எனக்கு மன அமைதியைத் தந்தது.
நான் தனிமையில் இருந்து மனம் வாடியபோது, எப்படி பாபா தனது இருப்பைக் காட்டினார் என்பதை இப்போது சொல்ல விழைகிறேன். நான் பணி புரிந்த வேலையில் எனக்கு தினமும் காலை 5 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் பணி புரிய வேண்டியிருந்தது. மீதி நேரங்களில் பாபா புத்தகங்களைப் படிப்பதில் செலவிட்டு 2 மணி நேரம் தூங்குவேன். பலத்த சோதனைகள் தாக்கியதால் ஒருநாள் மிகவும் கலங்கி எனது வாழ்க்கையைப் பற்றி வருந்திய ஒருநாளில் பாபா ஆலயத்துக்குச் செல்ல வேண்டுமென விரும்பினேன். ஆனால், எனது மாதவிடாயின் 4-வது நாள் அது என்பதால் எப்படிச் செல்வது எனத் தயங்கினேன்.
அப்போது எனது விடுதிச் சொந்தக்காரரின் மகள் [பொதுவாக யாருடனுமே அவள் பேச மாட்டாள்!] மைலாப்பூர் பாபா கோவிலுக்கு வருகிறாயா என என்னிடம் வந்து கேட்டாள். இத்தனைப் பேரை விட்டு, என்னை வந்து எப்படிக் கேட்டாள்? என நான் ஆச்சரியமுற்றேன். எனினும், எனக்கு அது 4-வது நாள் என்பதால் வர இயலாது எனச் சொன்னேன். 'உனது இதயம் சுத்தமாகத்தானே இருக்கிறது?' என பதிலுக்கு அவள் என்னைக் கேட்டுவிட்டு, ' உனக்கு பாபாவைப் பார்க்க விருப்பம்தானே? மாலை 3.30 மணிக்கு நான் உனக்காகக் கீழே காத்திருப்பேன்' எனச் சொல்லிச் சென்றுவிட்டாள்.
அப்போது மதியம் 1.30. அசதியாக இருந்த நான் உடனே தூங்கிவிட்டேன். சரியாக 3.300 மணிக்கு களைப்பாக இருந்தாலும், எப்படியோ ஏதோ ஒரு உந்தலில் எனக்கு விழிப்பு வந்துவிட்டது! என் கைகளை உலுக்கி, 'எழுந்திரு. மணி 3.30 ஆகிவிட்டது. நீ பாபாவைப் பார்க்கச் செல்ல வேண்டும்' என யாரோ எழுப்புவதுபோல உணர்ந்து எழுந்தேன். இருந்தாலும், மிகவும் ஆசாரமான எனக்கு அன்று செல்ல மனமில்லாமல் இருந்தது. 4.30 மணிபோல மெதுவாகக் கீழே சென்றபோது, அந்தப் பெண் இன்னமும் எனக்காகக் கீழே காத்திருந்தாள்! 'நீ எப்படியும் வந்துவிடுவாய் என எனக்குத் தெரியும்!' எனச் சொல்லிவிட்டு தனது 'பைக்'கில் என்னை அழைத்துக்கொண்டு பாபா கோவிலுக்குக் கூட்டிச் சென்றாள். ஆலயத்தில் அன்று சரியான கூட்டம். அன்றுதான் பாபாவின் மஹா ஸமாதி தினம் எனப் பிறகே அறிந்தேன். அந்தப் புண்ணிய தினத்தில் எனக்குத் தரிசனம் கொடுக்க பாபா விரும்பி இருக்கிறார்!

'பாபாவின் அமுத மொழிகள்'
'கருணையும், தயையும் நிரம்பிய பாபா மசூதியில் அமர்ந்து பலமுறை இதைச் சொல்லியிருக்கிறார்: " எவர் என்னை மிகவும் விரும்புகின்றனரோ, அவர் எப்போதும் என்னைக் காண்பர். நானில்லா உலகம் அவர்க்கு எவருமில்லாத் தனிமையாகத் தோன்றும். எனது லீலைகளைத் தவிர வேறெதையும் அவர் பேசுவதே இல்லை. இடைவிடாமல் என்னைத் தியானம் செய்துகொண்டும், எப்போதும் என் பெயரை உச்சரித்துக் கொண்டுமே அவர் இருப்பார். என்னிடம் முழுமையாக்ச் சரணடைவோருக்கும், என்னையே நினைத்துக் கொண்டிருப்போருக்கும் நான் மிகவும் கடன் பட்டிருக்கிறேன். 'தன்னையறிதல்' எனும் விடுதலையை அவருக்கு அளித்து அந்தக் கடனை நான் திருப்பித் தருவேன். என்னையே எண்ணி, என்னையே யாசித்து, எதை உண்டாலும் அதை முதலில் எனக்கு அளித்த பின்பே தான் உண்ணுவோரை நான் எப்போதும் நம்பியிருக்கிறேன். இவ்வாறு என்னிடம் வருவோருடன் நானும் ஒன்றாகிக் கலக்கிறேன். ஆறு ஓடிவந்து கடலுடன் கலப்பதுபோல இது நிகழ்கிறது. எனவே, வீண் பெருமையையும், ஆணவத்தையும் விடுத்து, அதன் அடையாளம் சிறிது கூட இல்லாமல், உங்களது இதயத்தில் அமர்ந்திருக்கும் என்னை நீங்கள் முழுமையாகச் சரணடையுங்கள்."
ஓம் ஸாயி ராம். 


"பகலுணவுக்கு பாபா என் 
இல்லம் வந்தார்!"

ஸாயிராம் மனிஷா'ஜி,
நீங்கள் செய்துவரும் அனைத்துக்கும் எனது வந்தனங்கள். என் பெயரைப் பிரசுரிக்க வேண்டாம்.
தமக்கு அளிக்கப்பட்ட உணவை பாபா ஏற்றுக் கொண்ட அதிசய லீலைகளைப் பலமுறை படித்திருக்கிறேன். தனக்கே அது நிகழும்போது, அது இன்னமும் ஒப்பற்றதாகி விடுகிறது!
இந்தியாவுக்குத் திரும்பிச் செல்லும் என் தோழியின் தாயை என் வீட்டுக்கு விருந்துக்கு அழைத்திருந்தேன். அப்படியே பாபவையும், அனைவருக்கும் முன்னதாகவே வந்து என் வீட்டு உணவை ஏற்றுக்கொள்ள வேண்டுமென வேண்டிக் கொண்டேன். எப்படி வருவாரென எனக்குத் தெரியாது. எனது தோழியும், மற்றவர்களும் இன்னும் 20 நிமிடங்களில் வருவதாக அன்று மதியம் தெரிவித்தனர். இன்னமும் பாபா வரவில்லையே என வருத்தமடைந்தேன். அப்போது, நான் அடிக்கடி கடைகளுக்குச் செல்லும்போது சந்திக்கும் ஒரு வயதான பெண்மணி என்னைத் தொலைபேசியில் அழைத்து, அவர் தயார் செய்திருந்த இட்லிகளை வந்து தரப்போவதாகச் சொன்னார். இதுவரையில் அவர் என்னை அழைத்ததோ அல்லது என் வீட்டுக்கு வந்ததோ இல்லை. அவ்வப்போது பேசுவதோடு சரி. எனவே, இது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. விருந்தினர் வரவிருப்பதால், நானே பிறகு வந்து வாங்கிக்கொள்வதாக முதலில் அவரிடம் சொன்னேன். பிறகு, ஏதோ ஒரு உந்துதலில், இதுவே பாபாவின் வருகைக்கான சமிக்ஞையாக இருக்குமோ என நினைத்து, அவரையும் விருந்துக்கு வரச்சொல்லி அழைத்தேன். முதலில் வேண்டாம் என்றும், பிறகு வாங்க எனவும் சொன்னதுதான் என் தவறு என நினைக்கிறேன்.
வீட்டுக்கு வந்து இட்லிகளைக் கொடுத்தவர் எதுவும் சாப்பிட மறுத்துவிட்டார். நான் மிகவும் கெஞ்சிக் கேட்டுக்கொண்ட பின்னர், ஒரு வாய் தண்ணீர் குடித்துவிட்டு சென்றுவிட்டார். உடனே நான் பாபா படத்துக்கு முன் சென்று அவரது மன்னிப்பைக் கோரினேன். எனது செயல் பாபாவுக்குத் திருப்தி அளிக்கவில்லை என எண்ணுகிறேன். விருந்து முடிந்ததும் மீதமிருந்த உணவை சிறு சிறு பாத்திரங்களில் போட்டு, அவர்கள் எடுத்துச் செல்லவென வைத்திருந்தேன். அந்த மூதாட்டி கொடுத்த இட்லிப் பாத்திரமும் அங்கேதான் இருந்தது. வந்தவர்களில் ஒருவர் தவறுதலாக அதை எடுத்துச் சென்றுவிட்டார். எல்லாரும் கிளம்பிச் சென்ற பின்னரே அதைக் கவனித்தேன். மிகவும் மனம் வருந்தி, பாபாவிடம் மீண்டும் மன்னிப்பு கோரினேன்.
அந்தப் பெண்மணியை அழைத்து, நிகழ்ந்ததைச் சொன்னேன். அவர் சொன்னது பாபாவே சொன்னதுபோல் இருந்தது...." எல்லாம் பாபாவின் விருப்பம். அந்த உணவைச் சாப்பிட அவளுக்குக் கொடுப்பினை போலும்!" இதைக் கேட்டதும், பாபாவிடம், 'தொடர்ந்து 7 நாட்கள் ஸத் சரிதம் படிக்கிறேன். ஏழாம் நாளன்று மீண்டும் அனைவரையும் விருந்துக்கு அழைப்பேன். அப்போது நீங்கள் கண்டிப்பாக அவர்களுக்கு முன்பே வரவேண்டும்' என பாபாவிடம் வேண்டினேன்.
அதேபோல ஏழாம் நாளன்று அவர்களை அழைத்தேன். பாபா வரக் காத்திருந்தேன். வாத்துகள் ரூபத்தில் அவர் வந்தார். எங்கள் வீட்டுக்கு அருகில் சில வாத்துகள் திரியும். எப்போதாவதுதான் அவற்றைப் பார்ப்போம். அப்படியே வீட்டருகில் வந்தாலும், அவை கத்தவும் கத்தாது. நான் இருந்த இந்தப் 10 வருடங்களில் அவை அருகில் கூட வந்ததில்லை. ஆனால், அன்று அவற்றுள் ஒரு வாத்து என் வீட்டு ஜன்னல் அருகே வந்து பலமாகக் கத்தத் தொடங்கியது! ஒரு ரொட்டியை அதன் பக்கம் வீசினேன். அதை உண்டுவிட்டு, அது சத்தம் போடாமல் சென்றுவிட்டது. இது நிகழ்ந்து மூன்று மாதங்கள் ஆகிறது. இன்றுவரை, ஒரு வாத்து கூட வரவே இல்லை. மெதுவாக அதற்கு முன் ரொட்டியை வைக்காமல், வீசி எறிந்துவிட்டேனே என மனம் வருந்தினேன்.ஆனால், அவற்றுக்கு வீசித்தான் கொடுக்க வேண்டும். வாத்துகளுக்கு அருகில் செல்லக்கூடாது. நம்மைத் துரத்த ஆரம்பித்துவிடும். எனவே சற்று சமாதானம் அடைந்தாலும், கொஞ்சம் கொஞ்சமாகக் கொடுத்து, பாபா உண்ணும் அழகைப் பார்க்காமல், அடுப்பில் ஏதோ வைத்திருந்தேன் என்று உள்ளே போய்விட்டேனே எனப் பட்டது.
ஆனால், இந்தத் தவறு எனக்கு நல்ல பாடம் கற்பித்தது. அடுப்பிலிருந்த பாயசம் தீய்ந்துபோய் விட்டது. அடுத்த முறை குரு சரித்ரம் படிக்கலாமென இருக்கிறேன். அப்போதும் பாபாவை அழைப்பேன். அந்தச் சமயம் மிகவும் கவனமாகவும், அன்பாகவும் இருப்பேன் எனச் சங்கல்பித்துக் கொண்டேன்.
இதனைப் படித்தமைக்கு என் வந்தனங்கள்


"பாபாவின் குணமாக்கும் ஆற்றல்" 

என்னுடன் பணிபுரிபவரின் அனுபவத்தை [அவர் சொன்னவண்ணம்] இங்கே தருகிறேன். அவரும் ஒரு தீவிர பாபா அடியவர். பாபாவைப் பற்றியே நாங்கள் இருவரும் எப்போதும் பேசிக் கொண்டிருப்போம்.இந்த மடலை உங்கள் வரிசைப்படி இடவும்.
"வாழும் தெய்வம்" - நம்பிக்கையுடனும், தீனமாகவும் அழைத்தால் உடனே ஓடி வருபவர்!
இப்படித்தான் நான் ஷீர்டிவாலே ஸாயி பாபாவை உணர்கிறேன். நேற்று எங்கள் வீட்டு வளர்ப்பு நாய், என்ன காரணத்தாலோ வாந்தி எடுத்துக்கொண்டே இருந்தது. எதைச் சாப்பிட்டாலும் உள்ளே தங்கவில்லை. அன்று ஞாயிற்றுக்கிழமை என்ற போதிலும், உடனே நாயை எடுத்துக்கொண்டு அருகிலிருக்கும் ஒரு கால்நடை மருத்துவரைப் பார்த்தோம். நாயைப் பரிசோதித்து, 400 டாலர்களுக்கான மருந்துகளை எழுதிக் கொடுத்துவிட்டு, மறுநாளே ஒரு அறுவை சிகிச்சையும் செய்ய வேண்டுமென மருத்துவர் சொன்னதும் அனைவரும் திடுக்கிட்டோம்.
'பிரபஞ்ச வைத்தியர்' என்னுடன் இருக்கும்போது எதற்காகக் கவலைப்பட வேண்டுமென ஒரு எண்ணம் உடனே என் மனதில் பட்டது. நாய் கண்டிப்பாகக் குணமாகும் என என் குடும்பத்தாரிடம் சொல்லிவிட்டு, நாயை வீட்டுக்குக் கொண்டுவந்து, அதை நன்றாகக் குளிப்பாட்டி, அதன் முகத்தில் 'உதி'யைப் பூசி, சிறிது நாக்கிலும் தடவினேன். புதிதாக சாதம் வடித்து, கூடவே சிறிது பருப்பையும் வேகவைத்து அவற்றை பாபாவுக்குப் பிரசாதமாகப் படைத்துவிட்டு முழு நம்பிக்கையுடன் அதைக் கலந்து நாய்க்குக் கொடுத்தேன். அவ்வளவுதான்! எங்கள் நாய் குணமடைந்தது! அதற்கு முன்னால் தண்ணீர் குடித்தால் கூட வாந்தி எடுத்துக் கொண்டிருந்த நாய் அதன் பின் வாந்தியே எடுக்கவில்லை.
ஒரு மாதத்துக்கு முன் என் கணவர் கடுமையான தொடை வலியால் அவதிப்பட்டார். யாரோ கம்பால் அடித்ததுபோலக் குடைச்சல் வலி! அவரும் பாபாவின் 'உதி'யால் பூரணக் குணமடைந்தார். அவரை பாபா பஜனைக்கு வரவும் வற்புறுத்தி அழைத்துச் சென்றேன். மறுநாள் காலையே அவர் பூரணமான நலத்துடன் இருக்கிறார். ஸாயியைத் தவிர வேறெவரால் இப்படிக் குணமடையச் செய்ய இயலும்!
வணக்கத்துடன்,
ஒரு ஸாயி அடியவர்.


"ஸாயி பாபாவின் கிருபை" 

எங்கிருந்து தொடங்குவேன்! ஸாயி பாபா என் மீதும், என் குடும்பத்தின் மீதும் தனது அருளாசியைப் பல ஆண்டுகளாகவே வழங்கி வருகிறார். ஒரு ஹிந்துக் குடும்பத்தில் பிறந்த நாங்கள் அனைத்துக் கடவுள்களையும் வணங்குவோம். ஆனால், பாபா எப்போதுமே எங்களுடன் இருந்து வருகிறார். அதிலும், கடந்த ஓராண்டாக எங்களது ஸாயி பக்தி மேலும் வலுவடைந்திருக்கிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக நான் முயன்று வந்த [சொல்லப்போனால் இது ஒன்பதாவது முறை!] தேர்வில் நான் தேர்ச்சி பெற்றதும் என் நம்பிக்கை பாபா மீது உறுதிப்பட்டது. எனது பெற்றோருடன் சென்ற ஆண்டு ஷீர்டி சென்றபோது, எல்லாம் நல்லபடியாக நடந்து, பாபாவின் அருமையான தரிசனமும் கிடைத்தது. நீ எங்கு சென்றாலும் நானும் உன்னுடனேயே இருப்பேன் என பாபா சொல்வதுபோல் எனக்குப் பட்டது. மனதுக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது.
கடந்த 5 ஆண்டுகளாக நான் ஆஸ்திரேலியாவில் வசிக்கிறேன். பல ஏற்றத் தாழ்வுகளைச் சந்தித்து விட்டேன். நாளை என்ன நிகழுமோ என்னும் அச்சத்தில், கைரேகை, ஜாதகம் என எல்லாமும் பார்ப்பேன். ஆனால், ஸாயி ஸத் சரிதத்தைப் படிக்கத் தொடங்கியதும், 'நிகழ்வது எல்லாமே பாபாவின் ஆணைப்படியே நடக்கிறது, நடக்கும் எனும் நம்பிக்கை என்னுள் பிறந்திருக்கிறது.
தனது அடியவர்களை அவர் வழி நடத்திச் செல்கிறார். அவரது கட்டளைப்படியே எந்தச் சந்திப்பும் நிகழ்கிறது. எனது சொந்த வாழ்க்கையில், கடந்த ஒரு வருடமாக நான் பல சோதனைகளைச் சந்தித்தேன். அப்போதெல்லாம் எனது துயரங்களை வாங்கிக்கொண்டு, எனக்கு ஆறுதல் மொழி சொன்னவர் பாபாவே! நம்பிக்கையும், பொறுமையும் இருந்தால் எல்லாமும் சரியாகும் எனும் உண்மையை அவர் நமக்கு உணர்த்துகிறார். அவரது கருணையால் நான் மிகவுமே மாறிவிட்டேன் எனவே சொல்ல வேண்டும். அவர் என்னையும், என் குடும்பத்தையும் எப்போதும் கைவிட மாட்டார் என்றும், அவர் செய்வதெல்லாம் நமது நன்மைக்கே எனவும் நான் நம்புகிறேன். இதையே மற்ற ஸாயி அடியவர்களுக்கும் கூறி, நம்பிக்கையுடனும், பொறுமையுடனும் இருந்தால் உங்களது விருப்பங்களை அவர் பூர்த்தி செய்வார் எனத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஓம் ஸாயிராம் ஓம் ஸாயிராம் ஓம் ஸாயிராம் ஓம் ஸாயிராம் ஓம் ஸாயிராம் ஓம் ஸாயிராம் ஓம் ஸாயிராம் ஓம் ஸாயிராம் ஓம் ஸாயிராம் ஓம் ஸாயிராம் ஓம் ஸாயிராம்
ஸாயி க்ருபா.

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.