Tuesday, October 23, 2012

Believe In Sai -Experience By Anonymous Sai Devotee.

'ஸாயி மீது நம்பிக்கை கொள்' 

(Article slightly condensed and translated into 
Tamil by Sankarkumar, U.S.A)

ஸாயிராம். அனைவருக்கும் இனிய பாபாநாள் வாழ்த்து!
பெயரிட விரும்பா ஒரு அடியவரின் அனுபவம் இன்று வெளிவருகிறது. அடியவரின் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் பாபாவின் விசேஷ ஆசிகள் கிடைப்பதை இது விவரிக்கிறது. ஸாயி மாதா எப்படி தம் அடியவரைக் காத்தருள்கிறார்; எப்படி பாபாவின் ஆலோசனையை நாம் பெறுவது என்பதையெல்லாம் இது விரிவாகச் சொல்கிறது. ஜெய் ஸாயிராம்.
-- மனிஷா.
-------------------------------

'அனந்தகோடி ப்ரம்மாண்ட நாயக ராஜாதிராஜ யோகிராஜ் பரப்ரம்ம ஸ்ரீ ஸச்சிதானந்த ஸத்குரு ஸாயிநாத் மஹராஜ் கி ஜெய்'
[06/09/12 வியாழக்கிழமை]
அன்புள்ள மனிஷா'ஜி,
ஓம் ஸாயிராம்.
இந்த அருமையான தளத்துக்கும், "ராம் விஜய்" தொடருக்கும், பல்வேறு அன்பர்களின் அனுபவங்களுக்கும், குறிப்பாக 'வீரேந்த்ர தார்க்கட்' அவர்கள் பகிர்ந்த அனுபவத்துக்கும் எனது வந்தனங்கள். பாபாவின் நெருங்கிய அடியாராக நீங்கள் இருப்பதற்கு அதிர்ஷ்டம் செய்திருக்கிறீர்கள். எனது ஒருசில அனுபவங்களை இங்கே பகிர்ந்துகொள்ள விழைகிறேன். எனது பெயர் முதலிய தகவல்களை வெளியிட வேண்டாம்.
மிகவும் செல்லமான, சுட்டித்தனம் செய்யும் ஒரு குழந்தையாக, அதே சமயம், அந்தக் குழந்தையின் தவறுகளை மீண்டும் மீண்டும் மன்னித்து, மூடி மறைத்து, அதைப் பற்றி எப்போதும் பெருமை பாராட்டும் ஒரு தாய்க்குக் குழந்தையாக இருப்பதுபோல நான் என்னை உணருகிறேன். நம் வாழ்வில் நிகழும் தெய்வீகச் செயல்கள் அனைத்தையும் விவரிக்க முடியாது. ஒரு சிலர் இவற்றை மூட நம்பிக்கை எனச் சொல்லலாம் ஆனால், இவற்றை உணர்ந்தவர்க்கு அப்படி தோன்றாது. என் அனுபவங்களை நான் இங்கே சுருக்கமாகவே தருகிறேன். எவற்றையாவது நான் மறைத்திருந்தால், எங்கும் நிறை, எல்லாம் அறிந்த ஸாயி என்னை மன்னிக்கட்டும்.
அந்தண குலத்தில் பிறந்ததால் ஆரம்பம் முதலே எனக்கு தெய்வ பக்தி நிறையவே உண்டு. சிவனும், துர்க்கையும் எனது இஷ்ட தெய்வங்கள். நன்றாகப் படிப்பேன். பள்ளிப்படிப்பு முடிந்ததும், பொறியியல் கல்லூரியில் சேர விரும்பினேன். இடம் கிடைக்கவில்லை. என் வீட்டுப் பூஜையறையில் இருந்த தெய்வங்களுக்கு முன் சென்று அழுது வேண்டினேன். எனது தந்தை நன்கொடை கொடுத்து ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் கணினித் துறையில் இடம் வாங்கி என்னைச் சேர்த்தார். [1989]
நான் இருந்த இடத்திலிருந்து 2 1/2 மணி நேரப் பயணத் தொலைவில் ஷீர்டி இருந்தது. எனது சக மாணவர்கள் என்னையும் அங்கு செல்ல அழைத்தனர். பாபாவைப் பற்றி அதிகம் தெரியாததால் முதலில் தயங்கினாலும், பலரும் சென்றதால் நானும் உடன் சென்றேன். அங்குதான் ஸாயி ஸத் சரிதம் நூலை வாங்கினேன். படிப்பதற்கு சுவாரசியமாக இருந்தது. மற்ற புனித நூல்களைப் போலல்லாமல், இதைப் படித்ததும்தான், இறைவன் என ஒருவர் இருக்கிறார் எனப் புரிந்தது. பிற நூல்களில் சொல்லப்பட்டிருந்த கதைகளும் உண்மையே என உணர்ந்தேன். பாபாவின் பக்தையாகி தினமும் அவர் படத்துக்கு முன்பு வேண்டிக் கொள்வதை வழக்கமாகக் கொண்டேன்.
அதன் பிறகு, ஒரு முறை 'கேள்வி உனது; பதில் பாபாவினுடையது' என்னும் ஒரு புத்தகத்தை வாங்கினேன். இந்தக் கால கட்டத்தில் எனக்குப் படிப்பின் மீது நாட்டமில்லாமல் போனது. நான் விரும்பிய கல்லூரி இதுவல்ல. பிரசித்தி பெற்ற இன்னொரு கல்லூரியில் படித்திருக்கலாமே என்னும் நினைப்பில், தேர்வு எழுதக்கூடச் செல்லாமல் போனது. வேறு துறையில் சேர்ந்தால் இன்னும் நன்றாகப் படிப்பாளோ என எண்ணி, என் பெற்றோர் செய்த முயற்சிகள் வீணாயின. என் கூடப் படித்தவர்கள் எனக்குப் பிடிக்காமல் போனதாலும், நான் விரும்பிய கல்லூரிக்குச் செல்ல முடியாததாலும், நான் அசிரத்தையாக, ஆணவமாகச் செயல்பட்டேன். எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்கவில்லை.
பாபாவைக் கேட்கும்போதெல்லாம், 'இது முன் ஜென்ம வினை; கவலைப்படாதே; உன் தாயின் நல்ல கர்மாவினால் உன் வேலை நிறைவு பெறும்' எனப் பதில் வந்தது. எனது பெற்றோரும், மற்றோரும் எவ்வளவோ சொல்லியும் நான் கேட்கவில்லை. எனது சக மாணவர்களும், எனக்குக் கீழே படித்தவர்களும் தேர்ச்சி பெற்று சென்ற பின்னும் நான் இன்னும் படிப்பை முடிக்கவில்லை. இந்த நேரத்தில் நான் பாபாவின் தீவிர பக்தையாகி, தினமும் ஒரு அத்தியாயம், அல்லது ஒரு பத்தி ஸத் சரிதம் படித்து வந்தேன். ஏதேனும் வேலை நிமித்தம் செல்லும்போதெல்லாம், எங்காவது பாபாவின் படத்தைப் பார்த்தால், அந்தக் காரியம் வெற்றியாவதைக் கண்டு, பாபாவின் தரிசனத்துக்காக ஏங்கலானேன்.
மூன்றாமாண்டு படிப்பிலிருந்து நான் விடுதியில் தங்காமல், வெளியில் தங்கினேன். அருகே ஒரு ஸாயி அன்பர் தன் வீட்டில் ஒரு சிறிய பாபா ஆலயம் கட்டியிருந்தார். அதில் நடக்கும் ஆரத்தியில் கலந்து கொண்டேன். இறுதியாண்டை ஒரே வருடத்தில் முடித்து, முறையாகப் படிக்காதபோதும், தேர்விலும் வெற்றி பெற்றேன்.[2003]. தேர்வு முடிவுகள் வருவதற்கு முன்னர், ஷீர்டி ஆலயத்தில் ஆரத்தியில் கலந்து கொள்வதுபோலக் கனவு கண்டேன். இதே போன்ற கனவு எனக்கு அடிக்கடி முன்னதாகவே நிகழ்ந்திருக்கிறது. எனது அன்றாட அனுபவங்களை விரித்தால் அது மிகவும் பெரியதாகிப் போகும் என்பதால், ஒரு சில முக்கிய நிகழ்வுகளை மட்டும் இங்கே பதிகிறேன்.
எனது மூத்த சகோதரிக்கு ஒரு 7 வயதுப் பெண் இருக்கிறாள். ஒரு மகன் வேண்டுமென அவள் விரும்பியபோது, ஷீர்டிக்கு சென்று வந்தால், உடனே அவளுக்கு ஒரு மகன் பிறப்பான் என நான் சொன்னேன். படிப்பை முடித்ததும் என்னையும் அழைத்துக்கொண்டு ஷீர்டி வருவதாக வேண்டிக் கொண்டிருந்த என் தாயுடன் நான் செல்லும்போது, என் அக்காளையும் அழைத்துச் சென்றோம். அடுத்த ஆண்டே அவளுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது!
அதேபோல, '11 நாட்களுக்கு கற்கண்டு நிவேதனம் செய்; என்ன நடக்கிறதெனப் பார்' எனும் பதிலுக்கு ஏற்ப, அதன்படியே செய்ததும், என் இன்னொரு சகோதரியின் திருமணமும்
நிகழ்ந்தேறியது. சொன்னவண்ணமே அனைத்தும் நிகழ்ந்தன.
30 வயதைத் தாண்டிவிட்ட எனக்கு திருமணம் செய்ய பெற்றோர் விரும்பி பொருத்தம் பார்த்தனர். வயது அதிகம் என்பதாலும், இன்னும் ஒரு நல்ல வேலையில் அமராததாலும் இது கடினமாகிப் போனது. 2005-ல் நானே எதிர்பார்க்காத விதத்தில் ஒரு நல்ல வேலை கிடைத்தது. 6 மாதங்களுக்குப் பிறகு எனது ஜாதி, படிப்பு, வயது இவற்றுடன் கூடிய ஒரு வரன் வந்தது. ஆனால் என் ஆணவத்தின் காரணமாக, பார்ப்பதற்கு அவர் அழகாக இல்லை என்பதால் [எங்கள் வீட்டில் எல்லாரும் நல்ல நிறம்!] நான் தயங்கினேன். அவர்கள் வீட்டில் உடனே சரி என்று சொல்லிவிட்டனர். என் தந்தைக்கும் இது விருப்பமே என்றாலும், நான் இது வேண்டாம் என மறுத்துவிட்டேன். அவர்கள் சென்றபிறகு, புத்தகத்தைப் பிரித்துப் பார்க்க, 'யாரேனும் உனக்கு குங்குமமிட வந்தால், வேண்டாமெனச் சொல்லாதே' என வந்தது. ஆனால் நான் அதை சாதாரணமாக எடுத்துக்கொண்டு, என் முடிவில் உறுதியாக நின்றேன். அது தடைப்பட்டுப் போனது!
அதன் பிறகு, 2006-ல் அதே போல ஒரு வரன் வந்தது. சுருங்கச் சொல்வதானால், அவர்கள் சொன்னதெல்லாம் பொய் என்பது நிறையப் பணம் செலவழித்து, நிச்சயதார்த்தம் வரை சென்றபின்னரே தெரிய வந்தது. மாப்பிள்ளை ஒரு மனநோயாளி. பாபாவின் அருளால் கடைசி நேரத்தில் நான் காப்பாற்றப் பட்டேன். அப்போதுதான் எனக்கு என் தவறு புரிந்தது. அதே சமயம் எனக்கு ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலையும் கிடைத்தது. 'உன்னிடம் இருப்பதில் நீ திருப்தி அடை' என பாபா வாசகம் எச்சரித்தது. அதையும் அலட்சியப்படுத்தியதால், மூன்றே மாதங்களில் நான் வேலையிலிருந்து தூக்கியடிக்கப்பட்டேன். மீண்டும் பாபாவிடம் மன்னிப்பு கோரினேன். பண நஷ்டத்துடன் எனது இரண்டாவது வரனும் இல்லாமல் போனது. என் ஜாதியிலேயே பார்க்காமல், அதன் உட்பிரிவுகளிலும் பார்க்கலாமென முனைந்தபோது, நான் மனமுடைந்து போனேன். அப்போதுதான் அனைத்தும் பொருந்திவந்த அந்த முதலாவது வரனைத் தவறவிட்டதன் குற்றத்தை நான் உணர்ந்தேன். இந்த நேரத்தில் வருத்தமுற்ற நான் ஸத் சரிதம் படிப்பதையும் நிறுத்தி இருந்தேன்.
கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் ஸத் சரிதம் படிக்க ஆரம்பித்தேன். கெட்ட காரியங்கள் நிகழும்போதெல்லாம் பாபாவைக் கேட்டுப் புத்தகத்தைப் புரட்டும்போதெல்லாம், அனேகமாக 'போன ஜென்மக் கடன் இது: கலங்காதே' எனவே வரும். திருமணத்தைப் பற்றிக் கேட்கையில், 'அதிசயம் உனக்கு நிகழும்' 'அக்டோபர் மாதம் நிகழும்' 'நல்லதொரு துணையுடன் நீ மகிழ்வாக வாழ்வாய்' என வரும்.


2008-ல் மற்றுமொரு வரன் வந்தது. நிறையவே படித்திருந்தபோதிலும், அவர் வேறு ஜாதிப் பிரிவைச் சேர்ந்தவர். அண்டை மாநிலத்தில் பிறந்த இவர் தற்போது அமெரிக்காவில் வேலை பார்க்கிறார். எனக்கும் 35 -க்கும் மேலாக வயது ஆகிவிட்டது. அவருக்கும் அதே வயதே. என்னுடைய கட்டுப்பெட்டி மனப்பான்மையே இதற்கு இப்போது தடங்கலாக இருந்தது. என் சகோதரி நூலில் விடை கேட்டபோது, 'கிடைத்ததைக் கொண்டு திருப்தி அடை' என வந்தது. எனவே, உடனே நான் இதற்கு சம்ம்மதம் சொல்லிவிட்டேன். ஏப்ரல் மாதத்தில் [2008] அவர் இந்தியா வரப்போவதாகத் தெரிய வந்தது. அந்த மாதம் ஒருநாள், பாபா சிம்மாசனத்தில் அமர்ந்திருக்க நான் ஒரு சிவப்புத் துணியை தலையில் அணிந்தபடி இருக்க, அப்போது ஒரு பெண்மணி என்னை நவராத்திரி சமயத்தில் துர்க்கை ஆலயத்துக்குச் செல்லுமாறு சொல்வதுபோல் ஒரு கனவு கண்டேன்.
என்னைப் பெண் பார்க்க வந்தவர், என்னைப் பற்றிய [படித்து முடிக்க ஏன் தாமதம்? திருமணம் இன்னும் செய்யாததேன்? இன்னும் பல!] விவரங்கள் எதுவும் கேட்காமல், தன்னைப் பற்றியும், தான் வாழ்க்கையில் எவ்விதம் முன்னேற விரும்புகிறார் என்பது பற்றியுமே பேசினார். உலகில் எல்லாருமே பொல்லாதவர், என்னை ஏமாற்றவே வந்திருக்கின்றனர் என்னும் எண்ணம் கொண்டிருந்த எனக்கு இது ஒரு இன்பமான அதிர்ச்சி தந்தது. வெளிநாட்டில் இருப்பது சற்று உறுத்தலாக இருந்தாலும், சரி எனச் சம்மதம் சொல்லிவிட்டோம். அவர்கள் குடும்பத்தைப் பற்றி அதிகம் தெரியாவிட்டாலும், என் வயது காரணமாக நாங்களும் அதை நம்ப வேண்டியதாயிற்று.
ஆனால், இந்த முறை நான் பாபா மீது மிகவும் உறுதியாக இருந்தேன். அவர் என்னைப் பார்க்க வந்த வீட்டின் முன்னறையில் ஒரு பாபா படம் இருந்தது. அவர்கள் சென்ற பிரகு, என் தந்தை என்னை அருகிலிருக்கும் ஒரு சிவன் கோவிலுக்கு கூட வரச் சொன்னார். பொதுவாக கோவிலுக்குச் செல்வதில் நம்பிக்கை வைக்காத என் தந்தையே அழைத்ததும் மகிழ்வுடன் அனைவரும் சென்றோம். அன்று மாலை அங்கு ஏதோ ஆராதனை நடந்து கொண்டிருந்தது. ஆனால், எனக்கென்னவோ துவாரகா மாயியில் இருப்பது போலவே உணர்ந்தேன். 2008, மே மாதம் 1-ம் தேதியன்று எங்களது நிச்சயதார்த்தம் நடந்தது. சிகையலங்காரத்துக்கு சென்றபோது, அங்கிருந்த ஒரு கடையில் சிவ நாம ஜபம் ஒலிப்பெட்டியில் கேட்டது. அது எனக்கு 'ஓம் ஸ்ரீ ஸாயிநாதாய நம:' என ஒலித்தது.
உடனே திருமணம் நடத்த நாங்கள் விரும்பினாலும், அவர்கள் விருப்பப்படி அக். 13 அன்று [அதுவே பாபாவின் விருப்பமும்!] எங்களது திருமணம் நிகழ்ந்தேறியது. என் கணவரும், அவர்கள் குடும்பத்தாரும் மிகவும் நல்லவர்கள். என் கணவருக்கு அலுவலில் நல்ல பெயர். யாரிடமும் [ஏன், என்னிடம் கூட!] எதுவுமே கேட்க மாட்டார். எல்லாருக்கும் உதவி செய்யவே விரும்புவார் [அதில் எனக்கு முழு சம்மதம் இல்லையெனினும்!] பாபா என்னை மன்னிக்கட்டும்!
நல்ல காரியம் நடக்க நான் விரும்பினால் ஸாயி ஸத் சரிதத்தை 7 நாட்களில் படித்து முடிப்பேன். அதேபோல செய்ததும், எனக்கு விஸா கிடைத்து, டிச. 31 அன்று நாங்கள் இருவரும் அமெரிக்கா வந்தோம். உடனே நான் கர்ப்பமானேன். ஆண் குழந்தை வேண்டும்; அவனுக்கு அபிமன்யு, அபி....எனப் பெயரிட வேண்டுமென 'அபிலாஷை' கொண்டு நூலைப் பிரித்தபோது, 'அபிலாஷை உனக்கு நன்மையாகவே நிகழும்' என வந்தது. குழந்தை பிறக்க 20 நாட்கள் இருக்கும்போது, 'நல்ல நேரம் எதுவும் பார்க்காமல் உடனே 'ராம் விஜய்' படிக்கத் துவங்கு; அன்னதானம் செய்' என வந்தது. அப்போது என்னிடம் அந்தப் புத்தகம் இல்லாததால், இணையதளத்தில் கிடைத்த ஒரு சுருக்கமான பகுதியைப் படித்தேன். என் புக்ககத்தாருடன் சில வாக்குவாதங்கள் நிகழ்ந்தன. 'அனைவரிடமும் அடக்கமாகவும், நல்லபடியாகவும் இரு' என வந்தது!
2009-ல் நான் ஒரு பெண் மகவை ஈன்றேன். அடுத்த மூன்றாம் நாள் நெஞ்சுவலி வந்து நினைவிழந்தேன். மருத்துவர்கள் நம்பிக்கையிழந்து கடவுளை வேண்டச் சொல்லிவிட்டனர். ஆனால், அடுத்த நாளே நான் அதிசயமாக நினைவுநிலை திரும்பினேன். கடவுள்தான் என்னைக் காப்பாற்றியதாகச் சொன்ன மருத்துவர் இதய அறுவை சிகிச்சை செய்துகொள்ள வேண்டுமெனச் சொன்னார். நவ. 5 அன்று [வியாழக்கிழமை] ஆபரேஷன் நல்லபடியாக நடந்தது. உடனே வீட்டுக்கு அனுப்பிவிடுவார்கள் என நினைத்தேன். ஆனால், அடுத்த 8-ம் நாள்தான்,[வியாழன்] அதுவும் ஷீர்டியில் இருந்து உதி பிரசாதம் வந்த பின்னரே [அன்னதானத்துக்காக நன்கொடை அனுப்பியிருந்தார்] வீடு திரும்பினேன். ஓம் ஸாயி ராம். பலவீனமாக இருந்தாலும், கணவர் வேலைக்குச் செல்வதால், நான்தான் குழந்தையைப் பார்த்துக் கொள்ளும்படி ஆயிற்று. இதனால் என் மாமியார் வீட்டினருடன் எனக்கு வருத்தம்! 'உன்னைப் பற்றி 100 விஷயங்கள் பிறர் சொன்னாலும், அடக்கமாக, நல்லவளாக இரு. எப்போதும் ஸாயியை நினை' என உபதேசம் சொல்லிற்று. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என் குழந்தை படுத்தாமல் இருந்ததுதான்! பாபா எனக்கு உதவி செய்யும்போது, நான் ஏன் பயப்பட வேண்டும் என என் மனதைத் தேற்றிக் கொண்டேன்.
2010 டிசம்பரில் மீண்டும் சில வாக்குவாதங்கள். 2011 ஜனவரியில் என் கழுத்துஇல் ஏதோ வீக்கமாக இருக்கவே மருத்துவரிடம் சென்றபோது, இது க்ஷயரோகமாக இருக்கலாம் எனச் சொன்னார். பயந்துபோன நான் பாபாவைக் கேட்க, 'எல்லாம் சரியாகும்; நோயைப் பற்றி சற்றும் கலங்காதே' எனச் சொன்னார். எல்லாவற்றையும் பாபாவிடமே விட்டுவிட்டு, குழந்தையைப் பார்த்துக்கொள்ள வேண்டியிருப்பதால், மருத்துவ மனையில் சேருமளவுக்கான வியாதியாக இதை இல்லாமல் செய்துவிடுங்கள் என வேண்டினேன்.
மறுநாள் ரத்தப் பரிசோதனைக்குச் சென்றேன். முடிவுகள் டி.பி. இருப்பதை உறுதி செய்தன ஆனால் இது தொற்று நோயல்ல எனச் சொன்னது! அதனால் வீட்டிலிருந்தபடியே மருந்துகள் எடுத்துக் கொள்ளலாம் என தைரியம் கூறினார். ஒரு நாள் இருமல் அதிகமாகி, ஏன் உயிர் வாழ வேண்டுமென நினைத்துக் கதறினேன். அப்போது படுக்கையில் படுத்தபடியே பி.பி.ஸி. நிகழ்ச்சி ஒன்றைக் கேட்டேன். பிரபல்;அ பஞ்சாபி பாடகரான குர்டாஸ்மன் என்பவரின் 'ஜோகியா வே ஜோகியா' [சாவைப் பற்றி ஏன் நினைக்கிறாய்; உலகிலுள்ள அனைவரும் சேர்ந்து உன்னைக் கொல்ல நினைத்தாலும், ஸாயி இருக்கும்வரை அது ஒன்றும் நடவாது' என்னும் பொருள் பொதிந்த பாடலைக் கேட்டதும் நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்து, பாபாவின் இந்தச் செயலை நினைத்து மனமுருகினேன். விரைவிலேயே நான் குணமடைந்தேன். பாபாவின் சமிஞைகள் இதற்கு உதவின. ஷீர்டி ஸாயி தரிசனம், ஹனுமான் உருவச்சிலை தரிசனம் எனக் கனவினிலும், 'நோயைப் பற்றிக் கவலைப்படாமல் இரு; விரைவில் குணமடைவாய்' எனும் உறுதிமொழியும் அடிக்கடி நிகழ்ந்தன.
ஆகஸ்ட் மாதம் இந்தியா செல்ல முடிவெடுத்தபோது, ஷீர்டி செல்ல நினைத்து நூலைப் பிரித்தபோது, '40 நாட்கள் மகிழ்ச்சியாக இருப்பாய்!' எனப் பதில் வந்தது. ஷீர்டி ஸாயி உட்பட எனக்கு வேண்டிய அனைவரையும் பார்க்கும் வாய்ப்பு இதனால் கிடைத்தது. நேரடியாக மும்பை செல்லும் டிக்கெட்டின் விலை அதிகமாக இருந்ததால், 24 நாட்களுக்கு முன்னரே பாரிஸ் வழியாக மும்பை செல்லப் பதிவு செய்தோம். 2011 செப். 7 அன்று காலை 7 மணிக்கு கிளம்ப வேண்டும். ஆனால் 6 மணி அளவில் நாங்கள் செல்லவிருந்த விமானம் பழுதடைந்ததால், நேரடியாக மும்பை செல்லும் ஏர் இந்தியா விமானத்தில் எங்களுக்கு மாற்று வழி செய்யப்பட்டது பாபாவின் கருணையே. ஓம் ஸயி ராம்.
இந்தியாவிலிருந்து திரும்பி வந்ததும், குடல் முறுக்கு நோயால் [] அவதிப்பட்டேன். பாபா, ' மருத்துவரைப் பார்க்கத் தேவையில்லை. அன்னதானம் செய். எல்லாம் சரியாகும். ஸாயியை எப்போதும் நினைவில் வை' எனச் சொன்னார். எனவே 3, 4 மாதங்களுக்கு நான் மருத்துவரிடம் செல்லவில்லை. ஆனால், டிசம்பரில் எனது மாமனார் மறைவுக்காக இந்தியா சென்று வந்ததும் இது அதிகமாகிப் போகவே, மருத்துவரைப் பார்த்தபோது, மருந்துகள் எதுவும் கொடுக்காமல், உணவுக் கட்டுப்பாட்டின் மூலமே சரிசெய்ய ஆலோசனை சொல்ல, என் உடல்நிலை சற்றுத் தேறியது. மே மாதத்தில் [2012] நான் மிகவும் பலவீனமடைந்து இதயம் படபடக்க, கை, கால்கள் மரத்துப் போகும் நிலைக்கு ஆளானேன். ஒரு 40 நிமிடங்களுக்குப் பிறகு இது சரியானது. இதுபோல 2,3 தடவை நிகழ்ந்தது. எனவே வெளியே செல்வதைத் தவிர்த்து வீட்டிலேயே கிடந்தேன். இதற்கு பாபா, ' மளிகை சாமான்கள் தானம் கொடு; போன ஜென்மக் கடன்; 2 மாதம் பொறு; நோய் குணமாகும்' என ஆறுதல் கூறினார். எல்லாப் பரிசோதனைகளும் சரியாகவே இருக்க இதுபோல நிகழ்வதைக் கண்டு ஆத்திரமுற்ற நான், அப்படியானால் என்னை ஏன் பாபா ஷீர்டிக்கு அழைக்க வேண்டும்?' என எண்ணினேன்.
அன்றைய தினமே, அதிர்ஷ்டவசமாக, நான் உங்களது தளத்தில் திரு. வீரேந்தர் தர்கட் என்பவர் தனது தந்தை திரு. ஜயதீந்த்ராவைப் பற்றி எழுதியதைப் படிக்க நேர்ந்தது. " நீ சாவதற்காக உன்னை ஷீர்டிக்கு வரச் செய்யவில்லை, என் மருமகளே! எழுந்திரு! நீ இப்படியெல்லாம் சுலபமாக சாக மாட்டாய். ஏனெனில், நீ செய்ய வேண்டிய ஆக்கபூர்வமான பணிகள் இன்னும் நிறைய இருக்கின்றன. [இந்த சோதனையான காலத்தில், நான் பெண்களுக்கான கட்டுமானப் பணித் தேர்வு எழுத வேண்டியிருந்தது. பலவீனத்துடன் அதை எழுதி முடித்து, ஜூன் மாதத்தில் சான்றிதழும் கிடைக்கப் பெற்றேன்]" என அதில் ஒரு வாசகம் இருந்தது. அதைப் படித்ததும் நான் உணர்ச்சிவசப்பட்டு அழுதேன். எனது சுகவீனம் மறைந்து நான் பழையபடி தெம்புடன் எழுந்து வந்தால், பாபாவின் கிருபை பற்றி ஒரு புத்தகம் எழுதுவதாக மனதுக்குள் வேண்டிக் கொண்டேன்.
எனது ரத்தத்தில் வைட்டமின் 'டி' அளவு குறைவாக இருப்பதால் அநேகமாக வாழ்நாள் முழுதும் நான் மாத்திரை உண்ன வேண்டும் என ஜூன் மாதம் 27-ந் தேதி தெரிய வந்தது. என் குழந்தையை அது பயிற்சி பெறும் நிலையத்துக்கு எடுத்துச் செல்ல முடியாமல் என் கைகால்கள் மரத்துப் போனதால் எனக்கு சக்தி தருமாறு பாபாவிடம் வேண்டினேன். "இன்னும் 4 நாட்களுக்குப் பிறகு வெளியே சென்று மற்றவரைச் சந்திக்க முடியும்' என மறுமொழி கிடைத்தது. அதன்படியே மருந்து மாத்திரைகளின் உதவியுடன் நான் மீண்டும் பூங்காவுக்குச் சென்று குழந்தையுடன் பொழுதைக் கழிக்க முடிந்தது. இந்த சிகிச்சை முடிந்து நான் பூரண குணமாக ஓராண்டுக்கும் மேல் ஆகும் என்றாலும், பாபாவின் அருளால் என்னால் சுதந்திரமாக இயங்க முடிந்தது. விரைவில் குணமாவேன் என்னும் நம்பிக்கையையும் பாபா கொடுத்தார். 3 மாதங்களுக்குப் பின்னர் ஒருநாள் உங்களது ஸாயிகிருபா தளத்தில் 'என் லீலைகளைப் படித்தாலோ அல்லது கேட்டாலோ உனது நோயெல்லாம் குணமாகும்' எனும் வாசகம் இருந்தது. 2012, ஃபெப்ரவரி முதலே நான் இந்தத் தளத்தைப் படித்து வந்தாலும், கதைகளை அனேகமாகப் படிக்காமல் இருந்தேன். ஆனால் செப்டெம்பர் முதல் தொடர்ந்து படிக்கிறேன். எனது பலம் திரும்பத் தொடங்கியதும், நான் வாக்களித்தபடி, செப். 6, 2012 வியாழன் முதல் முடிந்தபோதெல்லாம் கொஞ்சங்கொஞ்சமாக இவற்றை தட்டச்சு செய்து எழுதி வருகிறேன். இன்னும் கை,கால் மரப்பு இருந்தாலும், இவற்றை எழுதும்போது அது இருப்பதில்லை.
"போன ஜென்மக் கடன்; கலங்காதே!" "மளிகைச் சாமான் அல்லது அன்னதானம் செய்" என்னும் இரு வாசகங்கள் அடிக்கடி பாபாவினால் தரப்படுகிறது என உணர்கிறேன். அவற்றைக் கடைபிடிக்கவும், எனது ஆணவம் மறையவும், அவருக்கு முழுதுமாக கீழ்படியவும், பாபாவுடனேயே எபோதும் இருக்கவும் முயற்சி செய்கிறேன். பாபா எனக்கு அருளட்டும். பாபா அனுமதித்தால் அவ்வப்போது எனது அனுபவங்களை இங்கே பகிர்ந்து கொள்கிறேன். ... ஓம் ஸாயிராம்
பாபாவின் அடியார்
[04 - 10 - 2012]

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.