Friday, November 2, 2012

Sri Radhakrishna Mai -Shirdi Saibaba Mandir –Korhale- Shirdi.


  
( Translated into Tamil by Sankarkumar, USA )
 
அனைவருக்கும் இனிய புண்ய திதி மற்றும் விஜயதசமி வாழ்த்துகள். ஸாயி மா அனைவரையும் ஆசீர்வதித்து, வழிநடத்தி, நம்மை அவரது அருளுக்கு உரியவராக்கட்டும்.
இந்தப் புனித நன்னாளில் பாபாவால் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஆசீர்வதிக்கப்பட்ட ஒரு நல்லடியாரைப் பற்றி எழுதுவதில் பெருமை கொள்கிறேன்.
இவரைத் தேர்ந்தெடுத்து, தன் மகளை தனக்கு அருகிலேயே வைத்துக்கொண்டு, அவர் மூலம் தனது வழியில் பலரையும் நடத்திச் செல்ல இவரைப் பணித்திருக்கிறார். பாபாவின் 'கர்ம பூமி'யான ஷீர்டிக்கு நான் செல்லும் போதெல்லாம் இவரைச் சந்திப்பதும், இவரோடு இணங்கி இருப்பதும் எனக்குக் கிடைத்த பாக்கியம். இவரை நான் தீதி என்றே அழைக்கிறேன்.
இவரைச் சந்திக்குப்போது, எனது பக்தி உணர்வு மேலும் அதிகமாகிறது. பாபாவின் மீதான அன்பு இன்னும் கூடுகிறது. நேரம் போவதே தெரியாமல் எனது ஆணவமும் கரைந்து போகிறது. எனது உள்ளுணர்வைத் தூண்டிவிட்டு, என்னைப் பற்றிய சுயவிமரிசனத்துக்கு இவருடனான சந்திப்பு துணை புரிகிறது. பாபாவின் கர்ம பூமி இப்போது இவருடைய கர்ம பூமியாகி விட்டது. 'தீதி' என நான் அழைத்தாலும், எனக்கும், இன்னும் பலருக்கும் இவர் அதற்கும் மேலானவராகிறார்.
'மாயி' என அன்புடன் அழைக்கப்படும் இவர் பாபா சேவையில் தன்னை முழுதுமாக ஈடுபடுத்திக்கொண்டு, இன்னும் பலரையும் ஒவ்வொரு அடியாக சேவையில் ஈடுபடுத்தி உதவி செய்கிறார். இப்போதைக்கு நான் 'தீதி' என்றே அழைத்து, இந்தப் பதிவைப் படிப்பவர்களே இவர் யார்? இவரது பெருமை என்ன? என்பனவற்றைப் புரிந்து கொள்வார்கள் என நம்புகிறேன். இவரைப் பற்றிய ஒரு சிறு குறிப்பை முதலில் அளிக்கிறேன். அதனைத் தொடர்ந்து, சகோதரி. ஆஷாலதா இவரைச் சந்தித்ததைப் பற்றிய அனுப‌வத்தையும், இவரது தன்னலமற்ற சேவையைப் பற்றியும் எழுதுகிறார். இந்தத் தளத்தின் மூலம் அவர் இதைப் பகிர்ந்து கொள்வதற்காக அவருக்கு எனது வந்தனங்கள்.
அதிகம் மேலே சொல்லாமல், நீங்களே தீதி செல்லும் பாதையில் பயணியுங்கள்.
-- மனிஷா.
------------
'ஷீர்டியில் அமிர்தம்!'
[தமிழ்நாடு, நீலகிரி மாவட்டத்திலுள்ள அரவங்காடு என்னும் ஊரில் 1943-ல் நான்கு குழந்தைகளில் இளையவராகப் பிறந்தவரைப் பற்றிய சுய‌ குறிப்பு.]
என் தந்தை ஒரு தீவிர நாத்திகர். என் பாட்டி இறையன்பு மிக்கவர். நான் பிறந்தது முதல் என் தாய் மிகவும் நோய்வாய்ப்பட்டு, சாவின் விளிம்பில் இருந்து வந்தார். பல மருத்துவர்களிடம் காட்டியபின், இறுதியாக வேலூரில் இருக்கு கிறுஸ்தவ மருத்துவமனையில் சேர்த்தோம். அங்கே அவறுக்கு வயிற்றில் அறுவை சிகிச்சை செய்து, பல பரிசோதனைகளுக்குப் பின், வீட்டுக்கு எடுத்துச் செல்லச் சொல்லிவிட்டார்கள்.
ஒருநாள் [ஹிந்து' நாளிதழில் பூஜ்யஸ்ரீ. நரசிம்ம ஸ்வாமிஜி என்பவர் கோயம்புத்தூரில் இருக்கும் நாகஸாயி ஆலயத்துக்கு வருவதாகச் செய்தி வந்திருந்தது. பாபாவின் அருளால் இவ‌ர் செய்துவ‌ரும் அற்புத‌ங்க‌ளைப் ப‌ற்றியும், குறிப்பாக‌ நோயைக் குண‌மாக்குவ‌தைப் ப‌ற்றியும் விரிவாக‌ப் போட்டிருந்த‌ன‌ர். என‌து த‌ந்தை என் தாயை அங்கே கூட்டிச் செல்வ‌தென‌ நிச்ச‌யித்தார். என்னையும் உட‌ன் கூட்டிச் சென்றார்.
இது 1949-ல் நிகழ்ந்தது. அதற்கு முன்னிரவில் என் தாய் வெண்ணிறத் தாடி வைத்த ஒரு பெரியவர் பல அன்பர்கள் சூழ்ந்திருக்க, கஃனியும், குர்தாவும் அணிந்து ஒரு பல்லாக்கில் உட்கார்ந்திருப்பது போல‌ ஒரு கனவு கண்டார். மறுநாள் நடக்கப்போவதை அறியாத அவர் என் தந்தையிடம் இந்தக் கனவைச் சொன்னார்.
'உனக்கு என்ன வேண்டும்? பதவி உயர்வா? பணமா? குழந்தியா? அல்லது புகழா?' என அவர் என் தந்தையைக் கேட்க, என் தாயைக் காட்டி, 'இதோ, இவள் மிகவும் நோய்வாய்ப்பட்டிருக்கிறார். இவளைக் குணப்படுத்துங்கள். எனக்கு வேறொரு மனைவி கிடைப்பாள். ஆனால் என் பிள்ளைகளுக்கு ஒரு தாய் கிடைக்க மாட்டாள்' என வேண்ட, ஸ்வாமிஜியும் தன் அருகிலிருந்த சாரி என்னும் மருத்துவரை அழைத்து என் தாயைப் பரிசோதிக்கச் சொன்னார். அது சரியாக இல்லையென மருத்துவர் சொன்னதும், ஸ்வாமிஜி தன் கைகளை என் தாயின் தலை மீது வைத்தார். 'ஜில்லென்று குளிருகிற‌தே' என‌ என் அம்மா சொல்ல‌, மீண்டும் த‌ன் கைக‌ளை வைக்க‌, 'இப்போது சூடாக‌ இருக்கு' என்றாள் என் தாய். 'ஆஹா!' எனச் சொன்னவண்னம் பாபாவின் உதியை அவள் கைகளில் தந்து, 'அச்சுதா, அனந்தா, கோவிந்தா' எனும் மந்திரத்தை நாளொன்றுக்கு 21 தடவை வீதம் 21 நாட்களுக்கு உச்சரித்து, உதியை நெற்றியில் அணிந்து, சிறிதளவைத் தண்ணீரில் கலந்து குடிக்கும்படி உபதேசித்தார்.
இதெல்லாம் நிகழ்ந்து கொண்டிருக்கும்போது, நான் கதவருகே நின்றிருந்து அந்த வெண்தாடி வேந்தரையே பார்த்துக் கொண்டிருந்தேன். ஒரு கிருஸ்துமஸ் தாத்தாவைப்போல் அவர் காட்சியளித்தார்! அவரது தாடியை வருட வேண்டுமென ஒரு அவா என்னுள் எழுந்தது. அப்போது அவர் என்னை அழைத்து, தன் மடியில் உட்கார்த்திக் கொள்ள, நானும் செல்லமாக அவர் மார்பில் சாய்ந்துகொண்டு, அந்தத் தாடியை லேஸாக வருடினேன்! அவர் என் தலை மீது கை வைத்து என்னை ஆசீர்வதித்தார். அவரது ஆசியாலும், பாபாவின் அருளாலும் என் தாய் விரைவில் குணமுற்றார். என் தந்தையும் ஒரு தீவிர பாபா பக்தர் ஆனார்.
சில காலம் கழித்து சென்னை சென்று அவருக்கு நன்றி கூறினோம். அப்போது அவர், 'நான் செய்தது ஒன்றுமில்லை. எல்லாம் பாபாவின் அருளே! அவருக்கே உங்களது நன்றியறிதலைக் கூறுங்கள். அதிருக்கட்டும், ஓ பிரபு, நீங்கள் மத்திய இந்தியாவுக்குச் சென்று அங்கு பாபாவின் புகழைப் பரப்புங்கள்' எனச் சொல்லி, உதியும், பாபா படத்தையும் கொடுத்தனுப்பினார். அவர் சொன்னதன் அர்த்தம் புரியாமல் என் தந்தை சற்று குழம்பினார். ஆனால், சிறிது நாட்களிலேயே மத்திய பிரதேசத்தில் இருக்கும் ஜபல்பூருக்கு என் தந்தை மாற்றலானார். அங்கே நாங்கள் வியாழக் கிழமை பூஜையை ஆரம்பித்தோம். சிறிது காலத்தில் என் தந்தை ஒரு பாபா ஆலயம் கட்டினார்.
அடிக்கடி பாபாவின் அறிவுரைகளை என் தந்தை எங்களுக்கு நினைவூட்டுவார். கடுகளவு செய்யும் பாபா பிரசாரமும் மலையளவு ஆகும் என்பார். அடிக்கடி ஷீர்டி சென்றும், பாபாவைப் பற்றி கட்டுரைகள் எழுதியும், ஸத் சங்கம் நடத்தியும் வந்தார்.
பள்ளிப் படிப்பை முடித்து ஜபல்பூர் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தேன். 1963-ல் ஷீர்டி சென்றோம். ஸாயிநாத் மருத்துவமனை அப்போதுதான் கட்டப்பட்டுக் கொண்டிருந்தது. அங்கே இலவச சேவை செய்வதாக உறுதி பூண்டேன். மருத்துவ மேல் படிப்பை தில்லியில் இருக்கும் கலாவதி சரண் மருத்துவ மனியில் தொடர்ந்தேன். பின்னர், அமெரிக்கா சென்று, குழந்தை நல மருத்துவராகப் பணியாற்றினேன். இதற்கிடையில் பாபாவுக்கு நான் கொடுத்த வாக்கை சுத்தமாக மறந்து போனேன். ஆண்டுகள் உருண்டோடின. என் உள்மனதில் 'இதெல்லாம் தேவையா?' எனும் ஒரு குரல் ஒலித்துக்கொண்டே இருந்தது. என் தந்தை சொன்ன அறிவுரையும் அவ்வப்போது வந்து போனது. இரண்டையும் அலட்சியப் படுத்தினேன். ஆனால் தொடர்ந்து ஒலித்த இந்த குரலுக்குக் கட்டுப்பட்டு, என் பணியின் உச்சத்தில் இருந்தபோது, ஒருநாள் அதை உதறிவிட்டு ஷீர்டி திரும்ப முடிவெடுத்தேன்.
1994-லிருந்து ஷீர்டியில் தங்கினேன். மருத்துவ மனையில் என்னால் தொடர்ந்து பணியாற்ற முடியவில்லை. ஒரு சில சேவைகளைச் செய்தாலும் அதையெல்லாம் பிரசாரம் எனச் சொல்ல இயலாது. பாபாவின் அடியார்களின் ஒருசில புகைப்படங்களை நான் காண்பித்தபோது போஸ் அண்ணா என்பவர் 'நாம் ஏன் ஒரு புகைப்படக் கண்காட்சி நடத்தக்கூடாது? எனக் கேட்டார். அதிலிருந்து தொடங்கிய என் பணி இன்னமும் தொடர்கிறது.
-சேகரித்தவர்: ஸாயி பக்த வினய்.

'சகோதரி ஆஷாலதாவின் விவரணை'::
2012, ஆக. மாதம் 15-ம் தெதியன்று நமது ஸத்குரு ஸ்ரீஸாயியின் புனித தரிசனம் கிடக்கும் பேறு பெற்றோம். தமது முழு ஆசிகளையும் எங்களுக்கு வழங்கி 17-ந் தேதி வரை எங்களைத் தங்கச் செய்தார். இந்தப் புனிதப் பயண‌த்தின்போது, தம்மைத் தவிரவும் இன்னொரு ஸாயி அடியாரின் கூட்டத்தில் எங்களை ஸாயி மகிழ்வித்தார். ராமநாதன் அண்ணாவுக்கும், மனிஷா தீதிக்கும் இவரைப் பற்றி அறியத் தந்தமைக்கு எனது வந்தனங்கள்.
ஸ்ரீ ராதாகிருஷ்ண மாயியையே தீதிஜி உருவில் நான் கண்டேன் எனத் தெளிந்த மனத்துடன் என்னால் சொல்லமுடியும். இது என் கற்பனை அல்ல. ஷீர்டியில் அவருடன் தங்கியிருந்தபோது இந்த எண்ணம் உதிக்கவில்லை. ஆனால், இப்போது இந்த நொடியில் இதனை எழுதும்போது ஸாயியின் அருளால் என்னால் இதை உணர‌ முடிகிறது. இப்படி எண்ணும்போதே என் உடலெங்கும் மயிர்க்கூச்செடுத்து நடுங்குகிறது. மிகவும் ஆனந்தமாக இருக்கிறேன் இப்போது!
ஸ்ரீ ராதாகிருஷ்ண மாயி பற்றி நான் படித்து மகிழ்ந்து, பொறாமையும் பட்டிருக்கிறேன். அவரைப்போல இன்னொருவரை இந்தப் பூமியில் காண இயலுமா எனச் சிந்தித்திருக்கிறேன். அவர் காட்டிய அன்பு, குரு பக்தி, கீழ்ப்படிதல், கடின உழைப்பு, ஸாயி புகழைப் பரப்புதல், இதற்கெல்லாம் மேலாக ஒரு கண்டிப்பான தாயன்பு இவற்றையெல்லாம் தீதியிடத்திலும் நான் உணர்ந்தேன். பூஜ்யஸ்ரீ நரசிம்ஹ பாபாவிடமிருந்து நேரடியாக ஆசி பெறும் பொன்னான வாய்ப்பை இவர் பெற்றிருக்கிறார் என்பதை முன்னர் படித்திருப்பீர்கள். ஸாயி இவருக்கு உறுதியையும், ஆசிகளையும் தர வேண்டுமென நான் முழு மனதுடன் பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
இந்தப் பூதவுடலில் ஸாயி இருந்தபோது அனைவரையும் மாயியிடம் அனுப்பி வைப்பாராம். இப்போது, வின்னி சிட்லூரி என்னும் தீதிமா, தம்மிடம் வரும் அனைவருக்கும் இங்கிருக்கும் அனைத்து புனித இடங்களையும் சுற்றிக்காட்டி, ஸாயி நடந்த, உரையாடிய, நின்ற, குளித்த பல இடங்களையும் காட்டித் தருகிறார். இவையெல்லாம் ஷீர்டியில் இப்போது அழியும் நிலையில் இருக்கின்றன. [புனித‌ இடங்கள் எல்லாம் இடிக்கப்பட்டு வியாபாரத் தலங்களாக மாறும் அவலத்தைக் கண்டு மனம் நொந்தேன்.] . கோரலே மந்திரை ஸ்ரீ ராதாகிருஷ்ணமாயி எனப் பெயரிடும்படி ஸாயிதான் வின்னி தீதிக்கு குறிப்பு தந்திருக்க வேண்டுமென நினைக்கிறேன். அவரைப் போலவே இவரும் செய்துவரும் சேவையில்தான் என்னவொரு ஒற்றுமை!
மாயியை நான் இவர் வடிவில் கண்டேன் என்பது என் நம்பிக்கை. அவரது அன்பை, தூய அதிர்வலைகளை இவர் மூலம் நான் உணர்ந்தேன். ஸாயி என் மீது தயவு வைத்து, என் பாவங்களை மன்னித்து, இவரிடமிருக்கும் நற்குணங்களில் ஒரு சிறு பகுதியையாவது எனக்கு அருள வேண்டுமென வேண்டுகிறேன். எங்களுக்கு விடை கொடுக்கும்போது, சாவடி முன்னால் தீதிமா கொடுத்த அணைப்பின் போது இதையே நான் வேண்டினேன். இப்போது இந்தத் தளத்தின் மூலம் அவரது அரிய சேவைகளைப் பகிர்ந்துகொள்ளும் நல்வாய்ப்பினைப் பெற ஸாயி என்னை அனுமதித்திருக்கிறார்.

நான் கண்டு உணர்ந்ததையே இங்கு நான் எழுதுகிறேன்; இதைப் படிப்பவர்கள் தாங்கள் என்ன செய்ய வேண்டுமென அவரவர் முடிவுக்கே விடுகிறேன் -- இதுவே இதைப் படிக்கும் அனைவருக்கும் நான் சொல்லும் செய்தி. ஸாயி சொல்வதுபோல, ' பெறுபவரின் தகுதி என்னவெனப் பாராமல் முழு மனதுடன் கொடு. முடியாவிட்டால், பணிவாக இல்லையெனச் சொல்; பொல்லாத வார்த்தைகள் எதும் சொல்லாதிரு.' என்பதே இங்கும் பொருந்தும். இதைப் படித்தபின் எவருக்கேனும் இந்த நற்பணிக்கு உதவி செய்ய வேண்டுமனத் தோன்றினால், தயவு செய்து கீழே கொடுத்திருக்கும் முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள். சேவை மனப்பான்மை உள்ள மருத்துவர்கள் தங்களால் இயன்ற மருத்துவச் சேவைகளைச் செய்ய இந்த நிலையத்துக்கு முன் வாருங்கள் என அழைக்கிறேன். பார்வைக் கோளாறு மற்றும் காது சரியாகக் கேட்காமல் இந்தப் பகுதியில் இருக்கும் பல குழந்தைகள் பள்ளிப் படிப்பில் சரிவரக் கவனம் செலுத்த முடியாமல் தவிக்கின்றனர். எனவே கண் மருத்துவர்களும், காது நிபுணர்களும் இந்தப் பணியைச் செய்ய வரவேண்டும் என வேண்டிக் கொள்கிறேன்.

ஸ்ரீ ராதாகிருஷ்ண மாயி - ஷீர்டி ஸாயிபாபா மந்திர் - கோரலே, ஷீர்டி.'
பாபாவின் பிரதிமை தாங்கிய ஆலயமல்ல இது. ஒரு சாவடி, த்வாரகா மாயி மற்றும் ஒரு பெரிய கூடத்தில் 'குடையின் கீழே பாபா நின்றிருக்கும்' படமும் இருக்கின்றன. இந்தக் கூடத்தில் கிராம மக்களுக்கான பல்வேறு சேவைகளும் நிகழ்கின்றன. அரசின் சிவப்புநாடாக் கொள்கையினால், இன்னும் இதற்கு வரி விலக்கு கிட்டவில்லை.
'அன்னதானம்' -- வயிறார அவலுணவும், தேநீரும் இங்கு வந்துபோகும் யாத்ரீகர்களுக்குத் தரப்படுகிறது. ஸாயியைத் தரிசிக்க உள்ளன்போடு வரும் இவர்களில் ஒரு சிலர் இங்கே இரவில் தங்கிச் செல்கின்றனர். அவர்களுக்கு இரவு உணவும் கிடைக்கிறது. இதைத் தவிர, விழாக் காலங்களில் கிராமத்தினருக்கு பிரசாதமும் வழங்கப் படுகிறது.
'முதலுதவி' -- ஸ்ரீராம நவமியின்போது மும்பையிலிருந்து ஷீர்டி வருகின்ற பாத யாத்ரீகர்களுக்கும், கிராமத்தினருக்கும் முதலுதவி தரப் படுகிறது. சமீபத்தில் காலராவால் பாதிக்கப்பட்டு, மருத்துவ மனைக்குக்கூடச் செல்ல இயலாத கிராமத்தினருக்கு, மருத்துவர்களை வரவழைத்து, இந்தக் கூடத்திலேயே தேவையான மருத்துவ வசதி தரப்பட்டது.
'ரத்த தானம்' -- கொடுக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
'கல்வி' -- பள்ளியில் படிக்கும் சிறார்களுக்குத் தேவையான பென்சில், நோட்டுப் புத்தகம், சீருடை போன்றவை தேவைப்படுகின்றன. தானமளிப்பவர் இவற்றைத் தரலாம். 5 மாணவிகள் இந்த நிலையத்தால் தத்தெடுக்கப்பட்டு கல்வியும், உடல் நல வசதிகளும் தரப்படுகின்றன.
'மருத்துவ ஊர்தி சேவை' -- கிராமத்தினருக்கு பாம்புக்கடி போன்ற நேரங்களில் உடனடியாக மருத்துவ மனைக்குக் கூட்டிச் செல்லவும், வேறு பல அவசர சிகிச்சைக்காகவும் இது பயன்படுகிறது. அறுவடைக் காலத்தில் தங்களது நன்றியறிதலை கிராமத்தினர் காணிக்கையாகத் தருகின்றனர். வறட்சிக் காலத்தில் லாரிகளில் தண்ணீர் கொண்டுவந்து இவர்களுக்குக் குடிநீர் வசதி தரப்படுகிறது.
13000 முதல் 14000 வரையிலான பக்தர்களுக்கு மாதந்தோறும் அன்னதானம் நடக்கிறது. இவர்களில் 6000 பேருக்கு முழு உணவும், 7000 பேருக்கு சிற்றுண்டியும் தரப்படுகிறது. சுமார் 200 பேர் இரவில் தங்கிச் செல்கின்றனர்.
ஸாயி தொடர்பான புனித இடங்களுக்கு மேலும் மேலும் பக்தர்களை வரச்செய்து, அவர்களுக்கான சேவை செய்ய வேண்டுமென்பதே வின்னி தீதியின் பேரவா.
'தேவைகள்' ::
இப்போதைய உடனடித் தேவை தொண்டர்களே. சேவை மனப்பான்மை உள்ள எந்தவொரு மருத்துவரும் தீதிமாவை அணுகலாம். எந்த ஒரு சிறு உதவியும் ஏற்றுக் கொள்ளப்படும். வரி விலக்கு கிடைக்கவில்லை என்பதை மனதில் கொள்ளாமல், உதவிசெய்ய வேண்டுகிறேன். யாத்ரீகர்கள் தங்க அறைகளும், கழிப்பறை வசதியும் தேவைப்படுகிறது.
ஷீர்டிக்கு வரவழைத்து, ஸாயிமாதாவின் பொன்னடியில் தலை வைக்கவும், அருகிலுள்ள ரஹதா, நேம்காவ் போன்ற இடங்களுக்கு தீதிமாவின் உதவியுடன் சென்று காணவும் வழிசெய்த ஸாயிக்கு எங்கள் வந்தனங்கள். இதற்கெல்லாம் மேலாக, கோரலே மந்திரில் தீதியிடமிருந்து அரிய படிப்பினைகளைப் பெறவும் அவர் வழி வகுத்தார். தன்னலமற்ற அவர் சேவையைக் கண்டு எங்கள் கண்கள் குளமாயின.
ஸாயி உலகத்தினருக்கு தீதிமாவை அறிமுகம் செய்து வைத்ததில் ஏதேனும் பிழையிருந்தால், அதற்காக அவரது மன்னிப்பைக் கோருகிறேன். அவரைப் பற்றி நான் புகழ்ந்து எழுதிய வாசகங்கள் அவர்க்குப் பிடிக்காமல் போகலாம். அவ்வளவு எளிமையானவர் அவர்! ஆனால், இதனைப் படிக்கும் அனைவரும் அவரது பெருமையை உணர்வார்கள் என நான் நம்புகிறேன்.
ஷீர்டி ஸாயி கோரலே மந்திரில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை இத்துடன் இணைத்திருக்கிறேன்.
ஸாயி எப்போதும் நம்முடனிருந்து நம்மையெல்லாம் ஆசீர்வதித்து வழி நடத்த வேண்டிக் கொள்கிறேன்.
ஸாயிராம் ஆஷாலதா. ஆர்.

ஸ்ரீ ராதாகிருஷ்ண மாயி ஷீர்டி ஸாயி மந்திர், கோரலே - புகைப்படங்கள்.







Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.