Thursday, January 3, 2013

Shirdi Sai Baba's Grace-Experience Of Sai Devotees-Part 49

 'ஷீர்டி ஸாயிபாபாவின் அருள்' - 'அடியார்களின் அனுபவங்கள்' - பகுதி-49 

(Translated into Tamil by Sankarkumar, USA)


ஜெய் ஸாயிராம். அனைவருக்கும் இனிய பாபா நாள் வாழ்த்துகள்.
பாபாவுடனான தங்களது தனித்துவமான அனுபவங்களை பின்வரும் நிகழ்வுகளின் வழியே சில அடியார்கள் பகிர்ந்து கொள்கின்றனர். ஜெய் ஸாயிராம்.
மனிஷா.


'ஜூன் 2012-ல் ஷாங்காயில் [சைனா]நிகழ்ந்த அனுபவம்.'

ஸாயிராம் மனிஷா'ஜி.
என் பெயர் ஸ்யூ பாடில். என் கணவரின் வேலை காரணமாக, தற்போது சீனாவில் இருக்கும் ஷாங்காயில் வசிக்கிறோம். சென்ற மே மாதம் விடுமுறையில் எங்களது சொந்த நாடான அமெரிக்காவுக்குச் சென்றோம். அங்கே கண் பரிசோதனைக்குச் சென்றபோது, என் கணவரின் வலது கண் அழுத்தம் அதிகமாக இருப்பதாகக் கூறி, கண் சொட்டு மருந்தும், சில மருந்துகளும் கொடுத்தனர். பாதி அளவுக்கு குணமாயிற்று. பிறகு விடுமுறை கழிந்து ஷாங்காய் திரும்பினோம். அங்கே போனதுமே மீண்டும் கண் வலி அதிகமாக, மருத்துவரைப் பார்த்தபோது, அவர் உடனடியாக சிங்கப்பூர் சென்று ஒரு அறுவை சிகிச்சை செய்யப் பரிந்துரைத்தார். ஆனால், அலுவல் விதிமுறைகளைக் காட்டி, ஹாங்காங் சென்று அறுவை சிகிச்சை செய்யச் சொல்லிவிட்டனர்.
பாபாவை வேண்டிக்கொண்டே ஹாங்காங் சென்று மருத்துவரைப் பார்த்தோம். அவர் பரிசோதனை செய்துவிட்டு, மருந்துகள் மூலமே இதைக் குணப்படுத்திவிடலாம் என முதலில் சொன்னார். பிறகு மேலும் சில ரத்தப் பரிசோதனைகள் செய்த பின்னர், அறுவை சிகிச்சையே சிறந்தது எனச் சொல்லிவிட்டார். உள்ளூர் திருவிழா காரணத்தால், இதைச் செய்ய மூன்று தினங்களுக்குப் பின்னரே முடிந்தது. அதுவரை என் கணவர் வலியால் துடித்துப் போனார். கடைசியில் அறுவை சிகிச்சை நாளன்று என் கணவர் தனது பாக்கெட்டில் பாபா படம் ஒன்றை எடுத்துச் சென்றார். 2 1/2 மணி நேரம் நடந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது. பாபா எங்களது பிரார்த்தனைக்குச் செவி மடுத்து அருள் செய்தார். தனது அடியார்களை எப்போதும் அவர் கவனித்துக் கொள்கிறார்... அவர்கள் எங்கிருப்பினும்! அவர் எங்கும் இருக்கிறார். பாபாவுக்கு என் வணக்கம். எப்போதும் எங்களுடனேயே இருந்து ஆசீர்வதியுங்கள் பாபா! மறவர்களுக்கு சேவை செய்யும் புத்தியையும் கொடுங்கள். ஜெய் ஸாயிராம்.
அன்புடன்,
ஸ்யூ பாடில்.


'என் மீது பாபா காட்டிய கருணை!'

கடந்த ஜூன் மாதம் கன்னூரில் இருக்கும் என் அன்புச் சகோதரியின் இல்லத்துக்கு ஒரு பூஜையில் கலந்துகொள்ளவெனச் சென்றேன். ஏதேனும் ஒரு வழியில் பாபா எனக்குக் காட்சி தர வேண்டுமெனக் கிளம்பும் முன் பிரார்த்தித்துக் கொண்டேன். திருநந்தன்குன்று என்னும் இடத்தில் பூஜை நிகழவிருந்ததால் ஜூன் மாதம் 25-ம் தேதியன்று நாங்கள் அனைவரும் ரயிலில் பிரயாணம் செய்தோம். ஒரே கூட்டமாக இருந்ததால் எனக்குச் சற்று எரிச்சலே வந்தது. ரயில் வண்டி ஒரு நிலையத்தில் நின்றபோது தேநீர் அருந்த முடிவெடுத்தோம். என் தாயிடம் தேநீர் கோப்பையை கொடுத்தபோது அது கை தவறி என் தொடை மீது கொட்டி தாளாத எரிச்சல் ஏற்பட்டது. ஏன் என்னை இப்படி பாபா தண்டித்தார் எனக் குழம்பினேன்.
அப்போது எங்கிருந்தோ 'அல்லா மாலிக்' என ஒரு குரல் கேட்டது. அதைக் கேட்டு ஆச்சரியத்தால் திடுக்கிட்ட நான் வெளியே பார்த்தபோது, 'அவர்' என்னைப் பார்த்து, 'சாப்பாடு வாங்க 6 ரூபாய் கொடு' எனக் கேட்டார். அவசர அவசரமாக நான் பணத்தை எடுக்கும்முன் அவர் நகரத் தொடங்க, நான் 'பாபா! இந்தாங்க' என பணத்தைக் கொடுத்ததும், 'இதுவே போதும்' எனச் சொல்லிவிட்டு, பணத்தைப் பெற்றுக்கொண்டு நகர்ந்து விட்டார். அங்கிருந்த வேறு எவரிடமும் அவர் இப்படிக் கேட்கவில்லை! இந்த இன்ப அடிர்ச்சியால் எனக்கு என் எரிச்சலே மறந்து போனது. அவருடைய கருணையில் மன மகிழ்ந்தேன்.
என் எரிச்சலைப் போக்கவென பாபா வந்து அருளிய இந்தக் காட்சி எப்போதும் என் நினைவில் இருக்கும். உங்களை மிகவும் நேசிக்கிறேன் பாபா! எப்போதும் என்னுடனேயே இருங்கள்.
இது நிகழ்ந்த ஒரு வாரத்துக்குப் பின்னர் ஜூலை 3-ந் தேதியன்று குரு பூர்ணிமா தினம் வந்தது. அன்று எனது வழக்கமான பூஜைகளைச் செய்ய இயலவில்லை. பெங்களூருவில் இருக்கும் பாபா ஆலயத்துக்கும் செல்ல முடியவில்லை. மிகவும் வருத்தத்துடன் இருந்தேன்.
ஆடைகளைத் துவைத்த என் தாயார் அவற்றைக் காயப்போடச் சொன்னார். அவற்றை எடுத்துக்கொண்டு, நான் சென்றபோது, வாசல் கேட்டின் அருகே தாடி வைத்த ஒரு முதியவர், கையில் ஒரு ஜோல்னா பையை மாட்டிக்கொண்டு ஒன்றும் பேசாமல் நின்றுகொண்டிருப்பதைப் பார்த்தேன். நான் உடனே உள்ளே சென்று சிறிது பணத்தை எடுத்துவந்து அவரிடம் கொடுத்தேன். அதை வாங்கிக்கொண்டு அவர் உடனே சென்று விட்டார். இந்த விஷயத்தை நான் எனது சகோதரியிடம் சொன்னபோது, 'இந்தப் பகுதியில் பிச்சைக்காரர்கள் வருவதே இல்லை. நீ இப்படி ஒருவரைக் கண்டது ஆச்சரியமே!' எனச் சொன்னார். ஆலயத்துக்குச் செல்ல இயலாமல் வருந்திய என்னைப் பார்ப்பதற்காக பாபாவே நேரில் வந்து காட்சி தந்த இந்த ஆச்சரியத்தை எண்ணி மகிழ்ந்து, அவர் எப்போதும் என்னுடனேயே இருக்கிறார் என உணர்ந்து கவலையை விட்டொழித்தேன். எவ்வளவு கருணையுள்ளம் கொண்டவர் பாபா!
ஜூலை 6-ம் தேதியன்று, என் கணவரின் சகோதரர் எங்களை கன்னூரில் இருக்கும் பாபா ஆலயத்துக்கு கூட்டிச் சென்றார். கருணையுள்ளம் கொண்ட பாபா எங்களை ஆரத்தி முடிவடைய ஒரு சில நிமிடங்களுக்கு முன்னதாகவே 7 மணிக்குள் அங்கு கொண்டு வந்து சேர்த்தார். வழக்கமாக போக்குவரத்து நெரிசல் காரணமாகக் கூட்டமாக இருக்கும் அந்தச் சாலை அன்று வெறிச்சோடிக் கிடந்ததால்தான் இவ்வளவு சீக்கிரமாக வர முடிந்தது என என் மைத்துனர் கூறியபோது, பாபாவின் கருணை மிக நன்றாகப் புலப்பட்டது.
'முகநூலில்' [Facebook] வருவதுபோலவே, எனது அலைபேசியிலும் பாபாவின் அன்றாட போதனைகளைப் பெறும் ஏற்பாடைச் சமீபத்தில் செய்துகொண்டேன். ஜூலை 2-ம் தேதியன்று, எனது வேலை, திருமணம் என எல்லாவற்றுக்குமாகக் கவலைப்பட்டு சோர்ந்து போயிருதேன். அப்போது என் அலைபேசியில் 'நானிருக்க பயமேன்?' என ஒரு செய்தி வந்து என்னை உற்சாகப் படுத்தியது. ஆனால், முகநூலில் பார்த்தபோது, ' ஆயிரம் மைல்களுக்கு அப்பாலிருந்தாலும்கூட, இறக்கும் தருவாயில் நான் என் அடியார்களை என் பக்கம் இழுக்கிறேன்' எனச் செய்தி வந்திருந்தது! இப்படி இரு வேறு செய்திகள் மூலம் பாபா காட்டிய கருணை என்னை மெய் சிலிர்க்க வைத்தது.
உங்களது பொன்னடிகளை என்றும் மறவாமல் இருக்கும் வரம் தர வேண்டுகிறேன் பாபா. ஓம் ஸாயிராம்.
சுதா.

'என் இதயக் கதை'‌

ஒரிஸ்ஸா மநிலத்தில் கட்டாக் நகரில் வசிக்கிறேன். ஸாயிபாபாவைப் பற்றி என்னவென்று சொல்ல! அவர் ஸர்வ வல்லமை பொருந்தியவர். எங்கும் இருப்பவர். அவரை நினைத்துக் கண்களை மூடி, 'ஓம் ஸாயிநாதாய நமஹ' என ஒருமுறை சொன்னதுமே, அவர் உங்களது அனைத்துத் துயரங்களையும் போக்கிடுவார்.
கடவுள் அருளால் எனக்குக் கிடைத்த நல்லதொரு வங்கி வேலையை [ஆக்ஸிஸ் வங்கி] ஒரே வாரத்தில் ராஜிநாமா செய்துவிட்டு, இதை விடவும் நல்ல வேலை கிடைக்குமென இறுமாந்திருந்தேன். ஆனால், அதன் பின்னர் 3 ஆண்டுகள் மிகவும் கஷ்டப்பட்டேன். எங்கு சென்றாலும், வேதனையும், வருத்தமும், விரக்தியுமே மிஞ்சியது. பலராலும் நான் ஏமாற்றப்பட்டேன். அவர்களுக்காக நான் வருந்தி உழைத்தபோதும், அவர்கள் என்னை வஞ்சித்தனர். மிகவும் வேதனையால் துடித்தேன். அப்போதெல்லாம் எனக்கு பாபா மீது எந்தவொரு நம்பிக்கையும் கிடையாது. ஆனால், பாபாவை நான் நம்பத் தொடங்கியதுமே, ஒரு பெரிய பன்னாட்டு நிறுவனத்தில் பொறுப்பாளர் வேலை கிடைத்தது! இனி என் வாழ்க்கை முழுவதும் ஸாயிநாதனுக்கே அர்ப்பணித்து விட்டேன். அவருக்காக எதையும் செய்வேன்.
போலோ அனந்தகோடி ப்ரம்மாண்ட நாயக ராஜாதிராஜ யோகிராஜ ஸாயிநாத் மஹராஜ் கி ஜெய்!
ராஜேஷ்.


'பாபாவின் அன்பு'
பூரி ஜகன்னாதரின் மாநிலமான ஒரிஸ்ஸாவைச் சேர்ந்தவன் நான்.
2008 வரை எனக்கு பாபாவைத் தெரியாது. ஒரு நண்பர் எனக்கு ஒரு சிறிய பாபா சிலையை அளித்தார். அதை அவரது பக்தையான என் மனைவியிடம் நான் கொடுத்துவிட்டேன்.
ஒருநாள், தினப் பத்திரிகை ஒன்றில் ஒரு ஸாயி அடியவர் எழுதியிருந்த நிகழ்வைப் படித்தேன். ஸாயி அவரது இல்லத்துக்கு வந்து, அவரது மனைவியிடம் குடிக்கத் தண்ணீர் கேட்டாராம். கதவைத் திறக்காமலே [வீட்டில் ஆண்கள் இல்லையென்பதால்] பூட்டிய கதவு வழியே அந்தப் பெண்மணி அவருக்கு தண்ணீர் கொடுக்க, அதைக் குடித்துவிட்டு, அவள் படும் வேதனையைப் பற்றி விரிவாக எடுத்துரைத்தாராம். அவர்களது கஷ்டம் விரைவிலேயே தீருமென்று ஆசீர்வதித்து, அவளது கணவனை ஷீர்டிக்கு அனுப்பி வைக்குமாறும் சொன்னாராம். அவருக்கு தக்ஷிணையாக அந்தப் பெண்மணி பணம் கொடுத்தபோது, அதை ஷீர்டியிலேயே கொடுக்கமாறு சொல்லிவிட்டு, திடீரென மறைந்து விட்டாராம். அவர் சொன்னதுபோலவே விரைவில் அவர்களது கஷ்டங்கள் தீர்ந்து, இப்போதெல்லாம் அடிக்கடி ஷீர்டி சென்று வருகின்றனராம்.
மாலை இல்லம் சென்றதும் இந்தச் செய்தியை என் மனைவியிடம் சொல்லத் தொடங்கியதுமே, அவளும் இதே நிகழ்வு எங்கள் இல்லத்திலும், பத்திரிகையில் சொன்னதுபோலவே அப்படியே நிகழ்ந்தது எனச் சொன்னாள். அப்போதே நான் பாபாவைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டுவிட்டேன். என் வாழ்க்கையை அவர்தான் இப்போது நிர்வகிக்கிறார்.
ஸ‌த்குரு ஸாயிநாத் ம‌ஹ‌ராஜ் கி ஜெய்! ஜோதி.


'ஸாயிபாபா சமத்கார்'

பாபாவின் அருளைப் பலவிதங்களில் நான் அனுபவித்திருக்கிறேன். அவற்றுள் ஒன்றை இங்கே பகிர்கிறேன்.
'ரோஹிணி'யில் இருக்கும் பாபா கோவிலுக்கு முன்பெல்லாம் அடிக்கடி செல்வது வழக்கம். ஆனால், திருமணம் ஆனபின்னர், அங்கு செல்வது படிப்படியாகக் குறைந்து விட்டது. ஆனால் ஒரு அற்புதம் நிகழ்த்தி மீண்டும் என்னை ஸாயி பக்தன் ஆக்கிவிட்டார் பாபா!
18/4/2011 நாளை என்னால் மறக்க முடியாது. அன்று என் மகனுக்குக் கடும் காய்ச்சல் கண்டது. வழக்கமாகச் செல்லும் மருத்துவரிடம் செல்லாமல் அருகிலிருந்த ஸ்ரீ ஸாயி ஹோமியோபதி மருத்தவமனைக்குச் சென்றேன். என் வீட்டிலிருந்து 5 நிமிட தூரம்தான் அது. அங்கே ஒரு பெரிய பாபா படம் மாட்டியிருந்தது. என் மகனைக் காப்பாற்றுமாறு வேண்டிக் கொண்டேன். ஒரே வேளை மருந்தில் அவன் குணமானான். அந்த நொடியிலிருந்து நான் ஸாயிராம்/ ஸாயிராம் என்றே ஜபம் செய்கிறேன். பாபா எப்போதுமே தமது குழந்தைகளைக் காப்பாற்றிப் போஷிக்கிறார் எனப் புரிந்து கொண்டேன்.
ஓம் ஸாயிராம்
ஜோதி.


'பாபா தனது இருப்பைக் காட்டி உணர்த்தினார்'


நைஜீரியாவில் ப‌ணி புரியும் நான் ஓராண்டுக்குப் பின் தாய‌க‌ம் கிள‌ம்பினேன்.விமான‌ நிலைய‌த்துக்குச் செல்லும்போது, எப்ப‌டியாவ‌து பாபாவின் பெயரை எங்காவது பார்க்க வேண்டுமென ஒரு ஆவல் பிறந்தது. இந்தியாவைப் போலல்லாது, நைஜீரியாவில் இது மிகவும் அபூர்வமே. என்னுடைய இந்த விசித்திரமான ஆசையைப் பற்றி நினைத்து எனக்குள்ளேயே சிரித்துக் கொண்டிருந்தபோது, ஒரு பெரிய எண்ணை லாரி எங்களுக்கு முன்னே சென்றுகொண்டிருந்ததைக் கவனித்தேன். அதன் பின்புறம் 'ஸாயிபெம்' [SAIPEM] என எழுதியிருந்தது! அது ஒரு இத்தாலி நாட்டு எண்ணை நிறுவனத்தின் பெயர். அந்த லாரியைக் கடந்து செல்லும்வரை வைத்த விழி வாங்காது அந்த மூன்று எழுத்துக்களையே [SAI] உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தேன். பாபா தமது அடியார்களிடம் கொண்டிருக்கும் எல்லையற்ற அன்பு எனக்குப் புலனாகியது.அவரிடம் மெய்யன்புடன் கேட்டால், அவர் தந்தே தீருவார்.
வணக்கத்துடன்,
மோஹன்.


ஸாயிபாபாவின் அற்புதம்'

எனது அனுபவத்தை இங்கே எழுத மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். 26 வயது ஆன என் ச‌கோத‌ரிக்குத் திரும‌ண‌ம் நிச்ச‌ய‌மாகாம‌ல், என் பெற்றோரை வ‌ருத்திய‌து. நானும் இது குறித்து ப‌ல‌ முறை அழுதிருக்கிறேன். கடைசியில், 9 வார‌ ஸாயி விர‌த‌ம் அனுஷ்டிக்க‌ முடிவு செய்து, மார்ச், 3, 2011 அன்று விரதத்தைப் பூர்த்தி செய்தேன். அடுத்த‌ இரு வார‌ங்க‌ளுக்குள்ளேயே அவ‌ளுக்கு நிச்ச‌ய‌மாகி, திரும‌ண‌த் தேதியும் குறித்தாயிற்று. என‌து ம‌கிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. எங்க‌ள‌து அறியாமை தெரிந்தும், பாபா எப்போதும் எங்க‌ளை ஆசீர்வ‌திக்கிறார். எல்லாருட‌னும், எல்லா நேர‌ங்க‌ளிலும் அவ‌ர் கூட‌வே இருக்கிறார்.
ஜெய் ஸாயிராம்.

சுங்க‌ரி.

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.