Friday, August 16, 2013

My seven Years Problem Got Solved-Sai Devotee.


( Translated into Tamil by Dr. Sankarkumar, U.S.A )

அனைவருக்கும் இனிய பாபாநாள் வாழ்த்து. பாபாவின் முடிவிலும், அவரது அருளிலும் பூரண சரணாகதி அடையும் பக்தருக்கு எல்லாமே நன்மையாக முடியும் என்பதை விளக்கும் ஒரு அனுபவத்தை இங்கு அளிக்கிறேன் . 
ஜெய் ஸாயிராம்.  
-- மனிஷா.
 --------------------------------
இந்த அற்புதமான‌த் தளத்தை எனக்குக் காட்டிய பாபாவுக்கு வந்தனம். இதில் வரும் அனுபவங்கள் ஊக்கமளிப்பவை. பூரண நம்பிக்கை, பொறுமை இவையிரண்டும் இன்னமும் எனக்கு வரவில்லையெனினும், இந்த அனுபவங்கள் என்னை அவற்றின்பால் இட்டுச் செல்கின்றன என்பது உண்மை.
முடிந்த அளவுக்கு என் பிரச்சினையை இங்கு சொல்ல முனைந்திருக்கிறேன். என் பெயரை வெளியிட வேண்டாம்.
'ஏழரைச் சனி' என்பதைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். இந்தக் காலத்தைப்பற்றி அனைவருமே பயப்படுவர். 2002-ல் இது எனக்கு ஆரம்பித்தபோது, இதைப் பற்றி எனக்கு அதிகம் தெரிந்திருக்கவில்லை.  பிரச்சினைகள் அதிகமில்லாமலும், கடவுளிடம் அதிகமாக வேண்டக்கூடிய நிலைமை இல்லாமலும் அதுவரை என் காலம் போய்க்கொண்டிருந்தது. நல்ல குடும்பத்தில் பிறந்து, நல்ல நண்பர்களுடனேயே என் வாழ்க்கை இருந்தது. என் குடும்பமும் ரொம்பவுமே கட்டுக்கோப்பான குடும்பம் என்பதால், அதிகத் தைரியம் இல்லாமலும், சுதந்திரம் இல்லாமலும் இருந்தேன்.

ஆனால், 2002-ல் என் வாழ்க்கை அடியோடு மாறியது. என்னை விடவும் 6 வயது இளையவரான என் சக பணியாளர் ஒருவர் என் மீதான தன் காதலை வெளிப்படுத்தினார். ஆரம்பத்தில் அதை ஒதுக்கினாலும், நாளடைவில் அது மிகவும் தீவிரமானது.  தனது கையிலும், மார்பிலும் கத்தியால் கிழித்துக்கொண்டும், நள்ளிரவு வேளையில் என்னைத் தொலைபேசியில் அழைத்தும், ஓடும் ரயில் முன் விழுந்து தற்கொலை செய்யப்போவதாகவும் மிரட்டினார். ஒருமுறை தற்கொலை செய்துகொள்ளவும் முயன்றார். காலை முதல் இரவு வரையிலும் அவரது தொல்லை தாங்க முடியவில்லை.
என் குடும்பத்தாரிடமோ, நண்பர்களிடமோ இதைச் சொல்ல எனக்குத் தைரியமில்லை. நானே இதை சமாளித்துவிடலாம் எனத் தப்புக் கணக்குப் போட்டு, கொஞ்சம் கொஞ்சமாக இந்த வலையில் நானே போய் சிக்கிக் கொண்டேன். அதிலிருந்து மீளவும் வழி தெரியவில்லை. 7 ஆண்டுகள் இந்தக் கொடுமையை அனுபவித்தேன். மனவலியின் காரணமாக இங்கே இதை விரிவாகச் சொல்ல இயலவில்லை.
இருமுறை வேலை இழந்தேன்; திருமணம் செய்துகொள்ள முடியவில்லை; 24 மணி நேரமும் பயத்திலேயே வாழ்ந்தேன்; நான் கண்காணிக்கப்பட்டு, அடித்துத் துன்புறுத்தப்பட்டேன். சுதந்திரப் பறவையான நான் ஒரு கூண்டுப் பறவையானேன்.
இந்தக் காலத்தில், வழியிலிருக்கும் பாபா ஆலயத்தைப் பார்ப்பேன். 'நான் இதற்காகவா பிறந்தேன்?' எனக் கேட்டிருக்கிறேன். ஆனால், உள்ளே சென்றதில்லை. ஏனெனத் தெரியவில்லை. அவரிடமிருந்து இன்னமும் அழைப்பு வரவில்லையோ? எனது கர்மாவை இன்னும் நான் தொலைக்க வேண்டுமோ? தெரியாது.
2005-06-ல் ஒருமுறை 'நம் எல்லாருக்கும் தலைவன் ஒருவன்' [Sab kaa maalik eek] எனச் சொல்லும் விதமாகத் தன் ஒரு விரலை உயர்த்திக் காட்டும் நிலையில், பாபா என் கனவில் காட்சி தந்தார். 'இப்போது என்ன செய்யப் போகிறாய் பெண்ணே?' எனக் கேட்பதுபோல் உணர்ந்தேன். ஆனால், எனது அன்றாடக் கொடுமைகளைப் பற்றியே நினைத்துக்கொண்டிருந்த நான் அதை அப்போது அலட்சியப்படுத்தினேன்.
இதற்கு மேலும் என்னை துன்புறுத்தினால், தற்கொலை செய்துகொள்வதென முடிவெடுத்தேன். இந்த நிலையிலேயே மேலும் 2 ஆண்டுகள் கழிந்தன. நான் நடைப் பிணமானேன். மற்றவர் எதிரில் இன்னமும் இதைக் காட்டிக்கொள்ளாமல் நடித்தேன். 2009-ல் என சக ஊழியர் ஒருவர் என் மீது அன்புகொண்டு நண்பராகி, எனது இரகசியங்களை எல்லாம் அறிந்ததும், எனக்கு பாபாவைக் காட்டினார். இவரே உன் பாதுகாவலர் எனவும் நம்பிக்கை தந்தார்.  எனது இன்னொரு தோழியும் பாபாவையே உனது நண்பராக, அன்பராக, பெற்றோராகக் கொள் என அறிவுறுத்தினாள்.  காலை முதல் மாலை வரை செய்யும் அனைத்துச் செயல்களையும் பாபாவுக்குச் சொல்லிவிட்டே தான் செய்வதுபோல், என்னையும் மாறச் சொன்னாள். நானும் அதன்படியே நடந்தேன்.  ஆரம்பத்தில் ஒரு படத்திடம் பேசுவது ஒரு மாதிரியாக இருந்தாலும், நாளடைவில் இது பழக்கமானது.
எனது நண்பர் காட்டிய வழியில் ஒருசில சேவை நிறுவனங்களையும், நம்பிக்கை தரும் செய்திகளையும் படித்து, ஒரு பெண் எப்படித் தன்னைத் தற்காத்துக்கொள்ள முடியும் என அறிந்துகொண்டேன்.  இவையெல்லாம் பாபாவின் அருளே. இவரே என்னை இந்த தேவதூதர்களிடம் அனுப்பி நம்பிக்கை ஊட்டியிருக்கிறார். இதன் மூலம், இறுதியில் என் குடும்பத்தாரிடம் நடந்த அனைத்தையும் சொல்லும் தைரியம் வந்தது. ஆச்சரியப்படும் விதமாக,அவர்கள் என்னைக் கடிந்துகொள்ளாமல், எனக்குப் பக்கபலமாக வந்தனர்.
2009-ல் காவல்துறையில் புகார் செய்தபின், இப்போது என் பிரச்சினை தீர்ந்து விட்டது. இந்த நிகழ்வுக்குப் பின் எனக்கு பாபா மீதான ந‌ம்பிக்கை உறுதிப்பட்டுவிட்டது. எத்தனையோ விதத்தில் அவர் எனக்கு உதவி செய்த போதிலும், இன்னமும் என் நம்பிக்கை அவ்வப்போது சறுக்கத்தான் செய்கிறது. ஆனால், பாபா எனக்கு மன வலிமையைத் தந்து என்னைக் காக்க வேண்டுமென அவரிடம் வேண்டிக் கொள்கிறேன். நம் அனைவருக்கும் அவர் ஆதரவாய் எப்போதும் இருக்க வேண்டுமென வேண்டிக் கொள்கிறேன்.
ஓம் ஸாயிராம்.

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.