Friday, August 23, 2013

My Shirdi Experience-Sai Devotee



(Translated into Tamil by Dr. Sankarkumar, U.S.A.)

ஜெய் ஸாயிராம். அனைவருக்கும் இனிய பாபாநாள் வாழ்த்துகள்!
ஸாயிபாபா தம் அடிவர்க்கு பல வழிகளிலும் அன்பையும், ஆசியையும் அளிக்கிறார் என நாம் அறிவோம். அவரது கர்ம பூமியான ஷீர்டியில் அத்தகைய அனுக்கிரஹம் கிடைக்கும்போது பக்தர்கள் இன்னும் அதிகமாகவே மகிழ்கிறார்கள். அவரது அருளாசியைப் பெற பூரண பக்தியும், தீவிர நம்பிக்கையும் அவசியம். பாபாவின் விசேஷ அன்பை ஷீர்டியில் பெற்ற ஒரு அன்பரின் அனுபவங்கள் இங்கே தரப்படுகின்றன. 
ஜெய் ஸாயிராம்.
 -- மனிஷா. 
----------------

ஸாயிபாபாவின் பொற்கமலப் பாதங்களுக்கு என் பணிவன்பான வணக்கம். எனது பெயரைக் குறிப்பிட வேண்டாம். 
ஜெய் ஸாயிராம்.

எனது பள்ளி நாட்களிலிருந்து நான் ஸத்ய ஸாயிபாபாவின் பக்தை. பஜனைகளுக்கு அடிக்கடி செல்வேன். ஷீர்டி ஸாயிபாபாவின் திருவுருவப் படத்துக்கு விளக்கேற்றி வைத்து பூஜை செய்வேன். திருமணமானதும், என் கணவரும் பாபா பக்தராகி, வேதம் எல்லாம் கற்று, இருவரும் தினமும் ஓதுவோம். சென்ற ஆண்டு, என் தந்தை அவரது நண்பர் நாட்டை விட்டுச் செல்லும்போது அவருக்களித்த பெரிய ஷீர்டி பாபா படத்தை எனக்குத் தந்தார். ஸாயி ஸத் சரிதத்தைப் படிக்க எண்ணி, அதைப் படித்து முடித்ததும் என் வாழ்வில் மிகப் பெரிய மாற்ற‌ங்கள் ஏற்பட்டன. அவற்றை இங்கே வரிசையாகச் சொல்ல விரும்புகிறேன்.::
1. ஸத் சரிதப் பாராயணம் முடித்த மறுநாள் அகண்ட பஜனில் என் கணவர் குழந்தைகளோடு கலந்து கொண்டேன். சற்று நேரத்துக்குப் பின், எனது இரண்டரை வயது மகன் அழுததால், அங்கிருந்து கிளம்பி வாசலில் என் கணவரின் காருக்காகக் காத்திருந்தேன். இரவு 11 மணி இருக்கும். அப்போது தனது மனைவி மற்றும் வயதான தாயுடன் ஒரு சீக்கியர் என்னை நோக்கி விரைந்துவந்து, என் கைகளில் ஏதோ ஒரு புத்தகத்தைக் கொடுத்துவிட்டு தங்கள் வாகனத்தில் ஏறி விரைந்தனர். அது என்னவென்றுகூடப் பார்க்காமல் அதை என் கைப்பையில் போட்டுக் கொண்டேன். காரில் ஏறியதும் அது ஸாயி 9 வார விரதக் கதை எனத் தெரிந்தது. பாபா எனக்கு அளித்த சமிஞ்ஞை என நினைத்து அதை முறையாகச் செய்து முடித்தேன்.
2. மாற்று வேலை தேடி முயன்றும் ஒன்றும் கிடைக்கவில்லை. நல்ல வேலை கிடைத்தால் ஷீர்டி வருவதாக வேண்டிக் கொண்டேன். ஒன்றும் அமையாததால் இந்தியா செல்லும் எண்ணத்தைக் கைவிட்டேன். அப்போது பாபாவின் பெரிய சிலை இருக்கும் ஒரு இடத்துக்குச் செல்லும் வரிசையில் நான் நிற்பதாக ஒரு கனவு கண்டு, இது பாபாவின் அழைப்பு என எண்ணி, ஷீர்டி செல்ல முடிவு செய்தேன்.
3. எனது ஷீர்டி அனுபவங்களை இப்போது சொல்லுகிறேன். இந்தத் தளம் உட்பட பல்வேறு வலைத்தளங்களில் படித்ததன் மூலம் சமாதியைத் தொடும் வாய்ப்பு கிட்டாது என்றே நினைத்தேன். நேரடி ஒளிபரப்பை தினம் பார்ப்பதால், சமாதிக்கு முன்பாக கம்பிகள் போட்டுத் தடுத்திருப்பதையும், இருந்தும் ஒரு சிலர் மட்டும் பாபா சமாதியைத் தொட்டு வணங்கும் பாக்கியம் பெறுவதையும் கண்டிருக்கிறேன்.  வியானன்றுதான் அங்கு செல்ல நான் விரும்பினாலும், கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால், செவ்வாய், அல்லது புதனன்று செல்லலாம் எனவும் முடிவெடுத்தோம். ஆனால், பாபாவின் கட்டளை வேறு விதமாக இருந்தது.  புதன் காலை 10 மணிக்கு மும்பை விமான நிலையத்தில் இறங்கினோம்.
எனது நண்பர் ஒருவரின் துணையோடு காரில் ஷீர்டி செல்ல ஏற்பாடு செய்திருந்தும், மதியம் 3 மணி வரை விமான நிலையத்திலேயே சிக்கிக் கொண்டோம். எனது பிள்ளைகளுக்கு சோர்வாக இருந்தது. இவ்வளவு தூரம் வரவழைத்த பின்னர் ஏன் பாபா என்னைக் காத்திருக்கச் செய்கிறீர்கள் என எனக்கு அழுகையே வந்து விட்டது.  ஒரு வழியாக இரவு 9 மணிக்கு ஷீர்டி சென்றடைந்தோம். கோவில் வழியாகச் செல்லும்போது உள்ளே சென்று தரிசனம் பார்த்துவிட்டு விடுதிக்குச் செல்லலாம் என என் கணவர் கூறினார். மிகவும் களைப்பாக இருந்ததால், நான் குழந்தைகளுடன் விடுதிக்குச் செல்வதாகக் கூறினேன். இருந்த போதிலும், அனைவரும் இறங்கி உள்ளே சென்றோம்.
கூட்டம் அதிகமில்லை. எங்களுக்கு முன் சென்றவர்களைப் பின்தொடர்ந்து வழி தெரியாமல் நடந்தோம். சமாதி ஹாலுக்குள் சென்று அங்கிருந்த மிகப் பெரிய பாபா உருவச்சிலைக்கு வெகு அருகில் சென்று, சமாதியைத் தொட்டு முத்தமிடும் வாய்ப்பு கிடைத்தது!  அங்கிருந்த சேவாதல் ஒன்றுமே சொல்லவில்லை. என் வாழ்க்கையிலேயே மிகப் பெரிய பொன்னாள் இது! எங்களை எப்போதும் வழிநடத்திச் செல்லுங்கள் என பாபாவிடம் வேண்டிக் கொண்டோம்.  அப்போது எங்களுக்கு முன் சென்றவர்கள் விரைவாகச் செல்வதைப் பார்த்தேன். இரவு ஆரத்திக்காக அவர்கள் செல்கின்றனர் என அறிந்து, அவர்களுடன் சென்று, முழு ஆரத்தியையும் கண்டு களித்தோம். இந்த நல் வாய்ப்பை அருளிய பாபாவுக்கு எங்களது இதயபூர்வமான வந்தனங்களைத் தெரிவித்தோம். 
4. மறுநாள் வியாழக் கிழமை என்பதால் கூட்டம் அதிகமிருக்கும் எனத் தெரிந்தும், ஒரு பெரிய ரோஜா மாலையை வாங்கிக்கொண்டு  தரிசனத்துக்குச் சென்றோம்.  பாபா அருகில் நெருங்கியபோது கூட்டம் என்னை அங்குமிங்கும் தள்ளியது.  அப்போது ஒரு வயதான சேவாதல் என்னைப் பார்த்துச் சிரிக்கவும், அவரிடம் ரோஜா மாலையைக் கொடுத்தேன். அதை அவர் சமாதியின் மீது இட்டார். ஒரு பூவை எடுக்கலாம் என‌க் குனிந்தபோது, அவர் என் தோளை இழுத்து சமாதியிலிருந்தே ஒரு ரோஜாப்பூவை எடுத்து என் கையில் தந்தார்.
எனது ஷீர்டி பயணத்தைப் பற்றி நினைக்கும்போதெல்லாம் பாபாவின் அன்பும், கருணையுமே என் நினைவில் வந்து சந்தோஷப் படுத்துகிறது. நமது கோரிக்கை நிறைவேறாதபோது, நம்மை பாபா அலட்சியப் படுத்துகிறார் என நினைக்காமல், நமது பொறுமையை அவர் சோதிக்கிறார் எனப் புரிந்து, தொடர்ந்து வேண்டினால் நிச்சயம் பாபா நமக்கு உதவி செய்வார்.
ஜெய் ஸாயிராம்.

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.