Sunday, May 25, 2014

Sai Charita - 13


"ஸ்ரீ ஸாயி ஸத்சரிதம்."  
[மராத்தி மூலம்: ஸ்ரீ கோவிந்த்ராவ் ரகுநாத் தாபோல்கர்]
[தமிழ் மூலம்: ஸ்ரீ சொக்கலிங்கம் சுப்பிரமணியன்.]

(Converted into Two line  Tamil verse  by : Dr. Sankarkumar, USA)

இலம்பகம் – 13 


அதிகமான ஸாயி லீலைகள் - வியாதிகள் குணமாக்கப்படுதல்- 1. பீமாஜி பாடீல், 2. பாலா சிம்பி, பாபுஸாஹேப் புட்டி, 4. ஆலந்தி சுவாமி, 5. காகா மஹாஜனி, 6. ஹர்தாவைச் சேர்ந்த தத்தோபந்த்.
*******

'மாயையின் அளவறியாச் சக்தி::

சுருக்கமும், மிருதுவும், ஆழமும் பொருளும்
திறமும் சமமும் கொண்டவைபாபா நன்மொழிகள்

மனநிறைவுடனே கவலையேயின்றி எப்போதும்அவர் வாழ்ந்திருந்தார்
'பக்கிரியாயினும் வீடோமனையோ இல்லாதிருப்பினும் மாயையென்னைத்துரத்திடுது

யானெனைமறக்கினும் என்னாலவளை மறந்திடமுடியா நிலையினில்இருக்கின்றேன்
பரமனின்மாயையாம் தோற்றசக்தியும் எங்கும் எவரையும் துரத்திடுங்கால் [690]

ஏழைப்பக்கிரி யானென்னவிலக்கோ? பரமனைச்சரணெனப் புகுதலேமார்க்கம்'
மாயையைப்பற்றியே பாபாசொன்னவை! ஞானிகள்தனது உயிருடைவடிவம்

எனவேகண்ணன் உத்தவருக்கு பாகவதத்தில் சொன்னதுபோல
அடியவர்நலனைக் கருதியபாபா சொன்னதையிங்கே கவனிப்போம்!

'பாவமொழிந்து புண்ணியம்செய்தவர் என்னைவழிபட வருகின்றார்.
ஸாயி,ஸாயி என்றேசொன்னால் ஏழ்கடல்தாண்டி கூட்டிச்செல்வேன்.

நம்பிக்கைகொண்டவர் நலமேயடைவார்! அஷ்ட,ஷோடச என்றிடும்வகையில்
முறையானபூசனை எதுவும்வேண்டேன். பக்தியிருப்பின் அங்கேஅமர்வேன்'

இவ்விதமாகத் தம்மைத்தாமே முழுவதுமாக ஸாயிநாதனைச்
சரணெனக்கொண்டோர் பெற்றிட்ட நன்மையைப் பார்த்திடுவோம்

'பீமாஜி பாடீல்'::

பூனேஜில்லா ஜுன்னர்தாலுகா நாரயண்காவ் நகரைச்சேர்ந்த
பீமாஜிபாடீல் காசநோயினால்அவதியுற்று இறைவனைவேண்டினார்

நலமாய்இருக்கையில் நினைக்காக்கடவுளை வருந்தும்போதே நினைக்கின்றோம்
ஸாயிபக்தராம் நானாஸாஹேப் சந்தோர்க்கருக்குக் கடிதமெழுதினார்

பாபாபாதம் கதியெனச்செல்வதே இருப்பதில்நல்வழி எனப்பதில்வந்தது
அதனைநம்பி ஷீர்டிவந்து பாபாமுன்னர் வைக்கப் பட்டார்

நானா,ஷாமா இருவருமங்கே பாபாசபையில் அமர்ந்திருந்தார்
முந்தையவினையின் காரணம்இதுவென பாபாஇதனில் தலையிடவில்லை

'நீயேகதியென வந்தேன்பாபா! காத்திடவேண்டும்!' எனப்பாடீல்அலறினார்
உள்ளமுருகிய ஸாயிபாபா 'கவலையைவிட்டொழி! துன்பங்கள்யாவும் [700]

முடிந்துபோயின! எத்தனைவேதனைப் பட்டவன்எவனும் மசூதியுள்ளே
காலடிவைத்ததும் மகிழ்வினைஎய்துவான். இங்கேயுள்ள பக்கிரிமிகவும்

அன்புடனுன்றன் நோயினைத்தீர்ப்பார். ஆசையுடனவர் நலமேபுரிவார்'
என்றேசொன்னதும் ரத்தவாந்தியாய் எடுத்தவர்நிலையில் குணமும்தெரிந்தது

வசதிகளில்லா 'பீம்பாய்' வீட்டில் தங்கிடபாபா கட்டளையிட்டார்
கனவுகள்இரண்டின் மூலம்பாபா காசநோயினைக் குணம்செய்தார்

முதலாம்கனவில் மராத்திச்செய்யுள் மனனம்செய்யாத் தவறுக்காக
ஆசான்கையால் பிரம்படிபட்டார். இரண்டாம்கனவில் பாறாங்கல்லால்

நெஞ்சினில்யாரோ உருட்டியேவேதனை மிகுந்திடச்செய்ய அவர்துடித்தார்
இத்துடன்சிகிச்சை முடித்தபாடீலும் இல்லம்திரும்பி நலமடைந்தார்

அடிக்கடிஷீர்டி வந்தபீமாஜி சாயியின்பதங்களில் தெண்டனிட்டார்
நன்றியைமறவா நினைப்பும்பக்தியும் ஸாயிகோரிய இருசெயல்களாம்

'ஸாயிஸத்ய விரதம்'எனுமோர் முறைமையை வகுத்து பீமாஜி பாடீலும்
நன்றியறிதலைக் காட்டிவந்தார். இன்றும்பலரும் இதனைச்செய்கின்றார்.

'பாலா கண்பத் ஷிம்பி'::

'மலேரியாவெனும் நோயின்கடுமையால் 'பாலாகண்பத் ஷிம்ப்பி'யென்பவர்
மிகவும்தவித்துப் பலவிதமருந்துகள் எடுத்தப்பின்னரும் குணமெதுமின்றி

ஷீர்டிஓடி பாபாபதங்களில் சரணம்நீயெனத் தஞ்சமடைந்தார்.
தயிரும்சாதமும் கலந்தஉணவினை லக்ஷ்மிகோவிலின் முன்னாலிருக்கும்

கருப்புநாய்க்குக் கொடுத்திடச்சொன்னார். எங்ஙனம்இதனைச் செய்வதுஎன்றே
திகைத்த'ஷிம்ப்பி'யும் இல்லம்திரும்ப, தயிரும்சாதமும் இருக்கக்கண்டார் [710]

இரண்டையும்கலந்து கோவில்சென்றிடக் கருப்புநாயொன்று வந்திடக்கண்டார்
உணவினைநாய்க்குப் படைத்திடநாயும் வாலைஆட்டியே உண்டுசென்றது

ஜுரமும்குறைந்து நோயும்தீர்ந்து ஷிம்ப்பிஇவ்விதம் நலமுற்றார்.
பாபாசொன்னது நடந்திடக்கண்டு ஷிம்ப்பியும்மிகவே மகிழ்வுற்றார்.

'பாபு ஸாஹேப் பூட்டி'::

கனவான்’பூட்டி' வாந்திபேதியால் அவஸ்தைப்பட்டு மிகவும்நலிவுற்றார்
மருந்துகளுண்டும் குணமொன்றும்இன்றி மசூதிசெல்லவும் முடியாதிருந்தார்

ஆள்விட்டனுப்பி அவரையழைத்துத் தன்முன்அமரச் செய்தபின்பாபா
'இதனைக்கவனி வெளிநீபோகாதே! வாந்தியும்உடனே நின்றிடவேண்டும்'

என்றவர்சொன்னதும் இரண்டும்ஓடியொளிந்தன. நலமாய்ப்'பூட்டி'யும் தேறிமகிழ்ந்தார்
மற்றொருசமயம் காலராவினால் 'பூட்டி'மிகவும் தாகமடைந்தார்

'பிள்ளை' கொடுத்த மருந்துகளெதுவும் 'பூட்டி'யின் தாகம் தீர்க்க வில்லை
பாபாவைப்பணிந்து தாகம்தீர்ந்திட வழியொன்றுசொல்லிட அவர்கேட்டார்

பேரீச்சம்பழமும் வால்நட்பிஸ்தாவும் சர்க்கரைகலந்தப் பாலில்வேகவைத்து
அந்தக்கலவையைக் குடித்திடச்சொன்னார். மருத்துவம்ஒவ்வா திந்தக்கலவையைக்

குடித்துவந்திடப் பூட்டியின்தாகம் உடனேதீர்ந்து நோயும்நகர்ந்தது
பாபாசொல்லே மருத்துவமான அதிசயம்கண்டு 'பூட்டி'மகிழ்ந்தார்

'ஆலந்தி ஸ்வாமி'::

சாமியாரொருவர் 'ஆலந்தி'யிலிருந்து பாபாவைத்தரிசிக்க ஷீர்டிவந்தார்
காதுவலியால் வருந்தியஅவர்க்கு இரணசிகிச்சையும் பலன்தரவில்லை

வலியின்கடுமையால் திரும்பிடஎண்ணி பாபாவைமீண்டும் காணச்சென்றார்
அருகிலிருந்த 'ஷாமா'பாபாவை ஏதேனும்செய்திட வேண்டிக்கொண்டார் [720]

'அல்லாஅச்சாகரேகா' எனுமொருமொழியை பாபாசொல்லி அனுப்பிவைத்தார்
சிலதினம்கழிந்து ஆலந்திசுவாமி ஷீர்டிக்குஅனுப்பிய கடிதமொன்றில்

சிகிச்சைக்கெனத்தாம் பம்பாய்சென்று மருத்துவரைக் கண்டிட்டபோது
காதுவலியும் பூரணகுணமே! ரணசிகிச்சையும் தேவையேயில்லை!

என்றவர்சொல்லிய நல்லசேதியை மகிழ்வுடன்சொல்லி வணக்கம்சொன்னார்.
ஸாயிசொல்லே மந்திரமான லீலையைநினைந்து அவர்வியந்தார்.

'காகா மஹாஜனி'::

'காகாமஹா ஜனி'யெனுமன்பர் வயிற்றுப்போக்கினால் அவதியுற்றார்
பாபா சேவையில் குறையுறாவண்ணம் மூலையில்நீரை வைத்திருந்து

பாபாதன்னை அழைத்திடும்போது உடனேஓடிப் பணியினைச்செய்வார்
மசூதிமுன்னர் தாழ்வாரவேலை பாபாசொல்லியே நடந்துவந்தது

ஆனால்பணிகள் தொடங்கிடும்வேளையில் பாபாகடிந்து மக்களைவிரட்டினார்
அனைவரும்ஓடிடும் அந்தநேரத்தில் மஹாஜனியை மட்டும்நிறுத்தி

அங்கேகிடந்த கடலைப்பருப்பினை தோலினைஊதித் திருக்கரமளித்தார்
பாபாவும்கூடவே கடலைப்பருப்பினைத் தாமும்உண்டு தாகம்மேலிடத்

தண்ணீர்க்கூஜாவைக் கொணரச்சொன்னார் நீரினைக்குடித்து மஹாஜனியையும்
தண்ணீர்பருகிட பாபாபணித்தார் நீரைக்குடித்ததும் அவரைப்பார்த்து

'வயிற்றுப்போக்கும் நின்றுபோனது. இனிநீர்நுமது பணிக்குச்செல்க'
என்றேசொல்லி தாழ்வாரப்பணிக்குத் திருப்பியனுப்பிட அனைவரும்திரும்பினர்

வயிற்றுப்போக்கினை அதிகமாக்கிடும் கடலைப்பருப்பே மருந்தெனமாறிட
அன்பரின்நோவும் தீர்ந்துபோனதே பாபாமொழிகளே மேலான மருந்தாம்! [730]

'ஹரிதாவைச் சேர்ந்த தத்தோபந்த்'::

பதினான்காண்டாய் சிகிச்சையெதிலும் குணமுறாநிலையில், ஸாயியின்புகழைக்
கேள்விப்பட்டு ஹர்தாவிலிருந்து வந்தவோர்அன்பர் 'தத்தோபந்த்'தின்

வயிற்றுப்போக்கும் பாபாஅவரது சிரஸின்மீதுக் கைகளைவைத்து
ஆசிவழங்கி உதியையளித்திட அடியோடகன்றுத் தீர்ந்துபோனதே!

'அத்யாய முடிவில் அடிக்குறிப்பில் காணும் நிகழ்வுகள்'::

1.மூலவியாதியால் அவதிப்பட்ட ஷாமாவுக்கு சோனமுகியின்
கஷாயம்தந்து குணமுறச்செய்தார் மீண்டும்ஒருமுறை இவ்விதம்நிகழ

பாபாவுக்குத் தெரியாமலேயே கஷாயம்தானே வைத்துக்குடித்திட
நோயின்கடுமை மிகவாய்ப்போனது பாபாஅருளால் அதுவும்தீர்ந்தது.

2.மஹாஜனியின் தமையனார்'கங்காதர்' வயிற்றுவலியால் நீண்டகாலமாய்
அவதிப்பட்டு பாபாவைநாடிட வயிற்றைத்தொட்டு 'கடவுள்காப்பார்'

எனஆசீர்வதிக்க அதுமுதல்அவரது நோயும்தீர்ந்து வயிற்றுவலியும்
ஏதுமில்லாது முழுவதுமாக ஸாயியினருளால் குணமாகியதே.

3.பர்ஃபிஎன்னும் இனிப்பினைத்தந்து நானாஸாஹேப் சந்தோர்க்கரின்
வயிற்றுவலியினை நலமுறச்செய்தார் நெய்யுடன்சேர்த்து உண்டிடத்தீர்ந்தது!

மருந்தோமாத்திரை எதுவுமின்றியே தனதருள்மொழியால் மட்டுமேபாபா
நோயினைத்தீர்த்திட்டக் கருணைஇதுவெனப் புரிந்தவர்பதமே பணிந்துமுடிப்பேன். [738]

ஸ்ரீ ஸாயியைப் பணிக! அனைவர்க்கும் சாந்தி நிலவட்டும்!
[நீ யுணர்த்த உணர்ந்தே சொல்வது அல்லால், என்னறிவால் சொல்ல வல்லேன் அன்றே!]
(To be continued)

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.