Wednesday, May 28, 2014

Sai Charita - 18 & 19


"ஸ்ரீ ஸாயி ஸத்சரிதம்."  
[மராத்தி மூலம்: ஸ்ரீ கோவிந்த்ராவ் ரகுநாத் தாபோல்கர்]
[தமிழ் மூலம்: ஸ்ரீ சொக்கலிங்கம் சுப்பிரமணியன்.]

(Converted into Two line  Tamil verse  by : Dr. Sankarkumar, USA)

இலம்பகம் – 18 and 19


[ஹேமாத்பந்த் எவ்வாறு ஏற்றுக்கொள்ளப்பட்டு ஆசீர்வதிக்கப்பட்டார் - திருவாளர் சாதே, திருமதி தேஷ்முக்கின் கதைகள் - நல்ல எண்ணங்களின் அவா நிறைவேற்றத்தை ஊக்குவித்தல் - உபதேச வகைகள் - அவதூறு பேசுவது பற்றியும், உழைப்புக்கு ஊதியம் கொடுப்பது பற்றியும் போதனைகள்.]
**************

முன்னுரை:

அடியவர்தகுதியை முதலில்கண்டு அவர்மனம்குழம்பாச் செயல்வகைதந்து
ஆத்மானுபூதியை எய்திடும்வழியில் நடத்திச்செல்வதும் ஸத்குருவருளே.

ஸத்குருஅருளிடும் போதனைமொழிகளைப் பலருமறிந்திடச் சொல்லுதல்கூடா
எனுமோர்கருத்தினை ஒருசிலர்நினைப்பர்; ஆயினுமதுவே சரியானதன்று. [900]

பருவமேகம்தன் மழையினைப்பொழிதல் போலேஸத்குரு அனைவரும்பயனுற
ஆன்மீகமொழியை பொதுவில்மொழிவதை மற்றவருடனே பகிர்ந்திடல்வேண்டும்.

நனவிலும்கனவிலும் ஸத்குருஅருளிடும் நன்மொழியாவும் இவ்வகைசாரும்.
புதகௌசிக முனிவர்கனவினில் கண்டதன்பயனே ராமரக்ஷாதோத்திரமாகும்.

தம்மக்கள்நலமுற கசப்பாயிருப்பினும் ஏற்றதோர்மருந்தை வலியப்புகட்டும்
தாயவள்பாசம் போலேஸாயியும் அடியவரிடத்தில் போதனைசெய்தார்.

இரகசியமெதுவும் அதனிலில்லை; அனைவர்க்கும்பொதுவாய் பாபாஅருளினார்
அதனைக்கேட்டு அதன்படிநடந்தோர் அவரவர்வேண்டிய குறிக்கோளடைந்தார்.

அகக்கண்திறந்து அதனுள்ளிருக்கும் ஆன்மவழகினை சத்குருகாட்டுவார்.
புலன்சுவைமறைந்து பகுத்துணர்தல் பற்றறுத்தலெனுமிருக் கனிகள்கிட்டும்.

உறங்கிடும்போதும் ஞானமென்னும் ஒளிச்சுடர்நம்முள் ஒளிர்ந்திடச்செய்வார்.
ஸத்குருவருளால் கிட்டிடும்யாவும் நம்துயரகற்றி நன்மைகள்பயக்கும்.

ஸத்குருவுருவில் வந்திடுமிறைவன் இவரென்றுணர்ந்து பாதம்பணிந்து
அவரதுகதைகளை அன்புடன்கேட்டு தொண்டுகள்புரிந்திட மெய்யருள்விளங்கும்.

'திருவாளர் ஸாதே'::

மும்பையில்வசித்த 'ஸாதே'என்னும் பெருந்தகையொருவர் வாணிகம்செய்து
நட்டமடைந்து கவலையில்வாடி தளர்ச்சியடைந்து மனமுடைந்திருந்தார்.

வீட்டைத்துறந்து வேறிடம்சென்று நிம்மதிதேடிட எண்ணங்கொண்டார்.
தீவினையாவும் முடிவுறும்வேளையில் குருவருள்கிடைத்திட இறையவனருள்வார்.

ஷீர்டிசென்று ஸாயியைவணங்கிட நண்பர்களுரைத்திட அதன்படிசெய்தார்.
ஆயிரத்தொள்ளா யிரப்பதினேழில் ஷீர்டிவந்து குருமுகம்கண்டார். [910]

முன்வினைச்செய்த நல்வினைப்பயனே இதுவெனத்தெளிந்து மனமிகமகிழ்ந்தார்
மனவுறுதியுடனே குருசரித்திரம் எனுமோர்நூலினை ஓதிடமுனைந்தார்.

ஏழுதினங்களில் பூர்த்திசெய்ததும் பாபாஅவரது கனவினில்வந்தார்.
புனிதநூலினைக் கரங்களிலேந்தி முன்னேஅமர்ந்த 'சாதே'வுக்கு

நூலின்பொருளை பாபாவிளக்கிடும் அற்புதக்காட்சியைக் கனவினில்கண்ட
'ஸாதே'மகிழ்ந்து உள்ளொளிபெருக்கிடும் குருவருள்நினைந்து உவகையுற்றார்.

மறுநாட்காலையில் காகாஸாஹேப் தீக்ஷித்திடமிந்தக் கனவினையுரைத்து
பாராயணத்தைச் செய்ததுபோதுமா? மேலும்தொடர்ந்திட வேண்டுமாயென்றே

கனவின்பொருளை ஸாயிநாதரிடம் அணுகிக்கேட்டிட வேண்டிக்கொண்டார்.
தக்கதோர்சமயம் பார்த்தேதீக்ஷித்தும் ஸாயியைவணங்கிக் கேட்டிடபாபா,

'மீண்டுமொருமுறை பாராயணத்தைக் கவனத்துடனேச் செய்திடவேண்டும்.
அப்படிச்செய்யின், தூயவராகி பரமனினருளால் நன்மையடைவார்.

உலகப்பந்தம் அனைத்தும்விடுத்து ஆண்டவனவரைக் காத்தேயருள்வார்'
என்றேகூறிய அருளுரைகேட்டு அருகேயமர்ந்து கால்பிடித்திருந்த

'ஹேமாத்பந்த்'தின் மனதுக்குள்ளே எண்ணமொன்று இப்படிப்பிறந்தது:
'ஏழேநாட்கள் பாராயணத்தால் ஸாதே'இங்கே பரிசினைப்பெற்றார்

ஏழாண்டுகளாய் நானிதையோதியும் எவ்விதப்பலனும் இங்கெனக்கில்லையே!
மழைநீர்வேண்டும் சாதகப்பறவைபோல் நானுமிங்கே காத்திருக்கின்றேனே!..'

இவ்விதவெண்ணம் உதித்திட்டகணமே பாபாஅதனைத் தாமேஉணர்ந்தார்.
ஷாமாவிடம்போய் பதினைந்துரூபாய் தக்ஷிணையாகப் பெற்றுக்கொண்டு [920]

அவருடனமர்ந்து கலந்துரையாடி திரும்பவந்திடக் கேட்டுக்கொண்டார்.
ஹேமாத்பந்தும் உடனேகிளம்பி ஷாமாயில்லம் சென்றடைந்தார்.

குளித்துமுடித்து வெளியேவந்த தேஷ்பாண்டே[ஷாமா] அவரைக்கண்டு
'சோர்வுற்றவராய் மசூதிவிட்டு இங்கே வந்தது ஏனெனச்சொல்லும்.

பூஜைமுறைகளை முடித்துவிட்டு நான்வரும்வரைக்கும் திண்ணையிலமர்ந்து
வெற்றிலைசுவைத்து இளைப்பாறுங்கள்' எனச்சொல்லியே உள்ளேசென்றார்.

திண்ணையிலமர்ந்தவர் ஜன்னலருகே 'நாதபாகவதம்' நூலைக்கண்டார்.
பாகவதத்தின் பதினோராம்காண்ட விளக்கம்கூறும் ஏக்நாதரின்புனிதநூலிது.

'பாபுஸாஹேப் ஜோக்'என்பாரும் 'காகாஸாஹேப் தீக்ஷித்'தும்
பாபாயிட்டக் கட்டளைப்படியே பகவத்கீதையும் பாவார்த்ததீபிகாவும்

நாதபாகவதமும் பாவார்த்தராமாயணமும் தினந்தோறும் படித்துவந்தனர்.
விளக்கம்நாடி வந்திடும்பக்தரை இந்தநூல்களில் ஒருஅத்தியாயத்தைப்

படித்திடச்சொல்லி பாபாஅனுப்புவார். அவர்தம்கேள்வியின் விடையாயிதுவும்
அமைந்திடக்கண்டு வந்தபக்தரும் வியந்தேபோவது ஷீர்டிவழக்கம்!

ஹேமாத்பந்தும் ஒவ்வொருநாளும் நாதபாகவத நூலைக்கொஞ்சம்
படிப்பதுவழக்கம். ஜன்னலருகே கிடந்தநூலைப் பிரித்துப்பார்த்திட

அன்றவர்படிக்கும் அத்தியாயமே திறந்திடக்கண்டு அதிசயமுற்றார்.
பாராயணத்தைப் படித்திடவேதான் பாபாஅனுப்பினார் என்றேயெண்ணி

அன்றையப்பகுதியைப் படித்துமுடித்ததும் நித்தியக்கடனை முடித்தஷாமாவும்
உடன்வந்தமர்ந்திட இருவருக்குமிடையே பின்வருமாறு பேச்சுநடந்தது.:: [930]

ஹேமாத்பந்த்:
'தங்களைக்கண்டு பதினைந்துரூபாய் தக்ஷிணைபெற்று உரையாடிவர
பாபாயென்னைக் கேட்டுக்கொண்டு மசூதியினின்று இங்கேயனுப்பினார்.'

ஷாமா:
'கொடுத்திடப்பணமும் என்னிடமில்லை பதினைந்துவணக்கம் பதிலாய்த்தருகிறேன்
அவற்றினைக்கொண்டு தக்ஷிணையாகப் பாபாவிடமே எடுத்துச்செல்லவும்.'

ஹேமாத்பந்த்:
'அவ்விதமேநான் ஏற்றுக்கொள்கிறேன். பாவம்தீர்த்திடும் பாபாகதைகளை
லீலைகள்சிலதை எனக்குச்சொல்லி என்னிடம்சற்றே உரையாடுங்கள்.'

ஷாமா:
'அருந்தகைஅவரது அதிசயம்மிகுந்த லீலைகளனைத்தும் நீரேயறிவீர்
அறிவெதுமில்லா நானுமெங்ஙனம் அறிஞர்நுமக்குச் சொல்லிடவியலும்?

முடிவெதுமில்லா அவரதுபெருமைகள் யாருமறிந்திட முடியாதிருக்கும்.
நிகழும்லீலையைத் தாமேநிகழ்த்தி, ஆயினுமதனினும் தள்ளியேநிற்பார்.

கருதுதற்கியலா கதைகளைஅவரே சொல்லாதிருந்து அறிவிலிஎன்னிடம்
தங்களையனுப்பி இங்கேயிவ்விதம் ஏதோசெய்கிறார் என்றேநினைக்கிறேன்.

ஆயினும்நீங்கள் கேட்பதாலெனக்குத் தெரிந்தவோர்கதையை இங்கேசொல்லுவேன்.
பக்தனினுறுதியைப் பொறுத்தேபாபாவின் பிரதிச்செயலும் நிகழ்ந்திருக்கும்.

தீவிரச்சோதனை நிகழ்த்தியபின்னரே பாபாஅவர்க்கு செய்முறைக்கட்டளை
அளிக்கிறாரென்பது அனுபவத்தில்யான் கண்டுணர்ந்த பேருண்மையாகும்.'

'திருமதி ராதாபாய் தேஷ்முக்'::[ஷாமா சொல்வது]

காஷாபாதேஷ்முக் என்பாரின்தாய் ராதாபாயெனும் பெருமூதாட்டி
ஸாயிபாபாவின் புகழினையறிந்து அவரைக்கண்டிட ஷீர்டிவந்தாள்.

தரிசனம்கண்டு மனமிகமகிழ்ந்து உபதேசமொன்றினைப் பெற்றிடவிழைந்தாள்.
அருளுபதேசம் கிடைத்திடும்வரையில் உண்ணாவிரதம் இருந்திடமுனைந்தாள். [940]

இதனைக்கண்டு கலக்கமடைந்து பாபாவிடம்நான் பரிந்துபேசினேன்:
'இவ்வாறாகத் தாங்களிங்கே தொடங்கியிருப்பது என்னதான்,தேவா?

கிழவியினுறுதியால் ஏதேனும்நிகழ்ந்திடின் தங்களின்மீதே பழியும்வந்திடும்
கருணைகூர்ந்து அவளையழைத்து அறிவுரைகூறி ஆசீர்வதியுங்கள்'

என்னுரைகேட்டு அவளையழைத்தே பின்வருமாறு போதனைசெய்தார்::
'தேவையில்லாத சித்திரவதைக்கு இப்படிநீங்கள் செய்வதுமேனம்மா?

தாயைப்போன்ற உங்களிடமிந்தக் குழந்தைசொல்வதைக் கொஞ்சம்கேட்பீர்!
இங்கேசொல்லிடுமென் சொந்தக்கதையை நீங்கள்கேட்டால் நன்மையேவிளையும்!

கருணைநிறைந்த முனிவரொருவர் எனக்குக்குருவாய் முன்னமிருந்தார்
நெடுங்காலமாய்ச் சேவைகள்செய்தும் மந்திரமெதுவும் ஓதிடவில்லை.

அவருடனிருந்து சேவைகள்செய்து மந்திரம்பெற்றிட எனக்குள்ளார்வம்
நிறைந்தேயிருந்தும் அவருக்கென்றொரு வழிமுறைதனியே இருந்திருந்தது!

என்றன்தலையை மொட்டையடித்து இரண்டுபைசாக்கள் தக்ஷிணைகேட்டார்!
மனநிறைவுடனே நானுமவற்றை அவரிடத்திலே உடனேயளித்தேன்

முழுமையானவர் குருவெனிலவர்க்குப் பணத்தேவையோ ஏனிருந்தது?
அப்படியாயின் பற்றற்றவரென்று அவரையெங்ஙனம் அழைத்திடவியலும்?

எனுமொருகேள்வி நீங்கள்கேட்கலாம்! நான்கொடுத்த இரண்டுபைசாக்கள்
முழுநம்பிக்கையும் விடாமுயற்சியெனும் பொறுமையும்மட்டுமே அவர்க்குத்தந்தது!

மகிழ்வுடனதையென் குருவுமேற்றதும் பனிரெண்டாண்டுகள் அவரிடமிருந்தேன்.
உணவுமுடையும் எனக்களித்து அன்பும்பரிவும் காட்டிவளர்த்தார். [950]

பார்த்திடும்வேளையில் தியானநிலையில் ஆழ்ந்தவர்இருந்திட நானுமவரையே
பசிதாகம்மறந்து ஆழ்ந்துநோக்கியே தியானத்திலமிழ்ந்து இன்பம்துய்த்தேன்.

அவரென்பொருளாய் அடைக்கலமடைந்துப் பணிவிடைசெய்தலே வழக்கமாய்க்கொண்டேன்.
மேலேகூறிய இருபைசாக்களை நிறைவாயளித்து சேவைகள்செய்தேன்.

சபூரியென்னும் பொறுமையைக்கொண்டால் உலகவாழ்க்கை என்னும்கடலின்
அக்கரைசேர்த்திடும் தோணியாயதுவும் நமக்குதவியே நன்மைபுரிந்திடும்.

பாவம்நீக்கிடும் வேதனைபோக்கிடும் ஆபத்தில்காத்திடும் வெற்றியளித்திடும்
நற்குணச்சுரங்கம் ஆண்மையேசபூரி நிஷ்டாயென்னும் நம்பிக்கையினுடன்பிறப்பு!

என்னிடமிருந்து எதுவும்வேண்டா, என்னைவிட்டு அகன்றபோதிலும்
காட்டிடுமன்பினில் குறையெதுமில்லா குணநலன்மிக்கவர் என்குருநாதர்.

அக்கரையிருப்பினும் கூடவேயிருப்பினும் குட்டிகள்மீது அக்கறைகொண்டு
அன்புப்பார்வையால் ஊட்டிவளர்த்திடும் ஆமையைப்போல என்னைக்காத்தார்.

இவ்விதமெல்லாம் என்னைக்காத்தவர் மந்திரமெதுவும் தந்திடவில்லை!
எவ்விதம்யானும் மந்திரமொன்றைத் தந்திடவியலும்? சொல்லுகதாயே!

குருவருட்பார்வை ஒன்றேபோதும் மந்திரபோதனை எதுவும்வேண்டாம்!
என்னையேஉங்கள் எண்ணம்செயல்களின் குறியாய்க்கொண்டால் மேன்மையுறுவீர்!

என்னைநோக்கிட யானும்நோக்குவேன்! சத்தியமிதுவே! நம்பிடநலம்வரும்!
மசூதியிலமர்ந்து சொல்லிடும்யாவும் உண்மையேயன்றி வேறெதுமில்லை!

சாதனையெதுவும் தேவையுமில்லை; சாத்திரஞானம் அவசியமில்லை!
குருவின்மீதே பற்றுடன்நம்பியே நடக்குமனைத்தும் அவரருளென்னும் [960]

பெருமையையுணர்ந்தவர், மும்மூர்த்தியவரெனும் உண்மையையுணர்ந்தவர் வணங்கத்தக்கவர்.'
இவ்விதம்பாபா அருளிடக்கிழவியும் உண்ணாநோன்பினை உடன்கைவிட்டாள்.

ஷாமாசொல்லிய கதையினைக்கேட்ட ஹேமாத்பந்த்தும் அதன்பொருளுணர்ந்து
வியப்பிலாழ்ந்து மயிர்க்கூச்செறிந்து மனமிகவுருகிக் கண்ணீர்மல்கினார்.

அதனைக்கண்ட ஷாமாபதறி 'என்னநேர்ந்தது? ஏனிந்தமௌனம்?
இன்னும்நம்குருவின் எண்ணற்றலீலைகள் சொல்லிடவேண்டுமோ?' என்றுவினவினார்.

மதியமானதால் ஆரத்திதுவங்கும் மணியினோசையும் காதினிலொலித்திட
இருவருமுடனே மசூதிவிரைந்து 'ஜோக்'நடத்திய ஆரத்தியிற்கலந்தனர்.

வழிநெடுகிலும் மக்கள் நின்றிட, இருவரும்சென்று இருபுறமமர்ந்தனர்
ஷாமாகொடுத்த தக்ஷிணைதந்திட ஹேமாத்பந்த்திடம் பாபாகேட்டார்.

ஷாமாகொடுத்த பதினைந்துவணக்கத்தை தக்ஷிணையாக அன்பரும்கொடுக்கவே
அங்கேபேசிய விவரமனைத்தும் விரிவாய்ச்சொல்லிட பாபாபணித்தார்.

ஷாமாகூறிய கிழவியின்கதையை விவரமாய்ஹேமாத் பந்த்தும்சொல்லிட
'கதையின்மூலமாய்த் தெரிந்துகொண்டது என்னவென்றெனக்குச் சொல்லிடவேண்டும்!'

என்றேபாபா மீண்டும்வினவிட, மனத்துளெழுந்த உணர்ச்சிப்பெருக்கை ஹேமாத்பந்தும்
உருக்கமாயுரைத்திட அதனைக்கேட்டு பாபாமகிழ்ந்து, 'கதையின்கருத்து

மனதிற்பதிந்ததா? அதனைச்சரியாய்ப் பிடித்துக்கொண்டீரோ?' என்றதும்நெகிழ்ந்து,
'ஆமாம்பாபா! மனதிற்கிளம்பிய சலனமெல்லாமும் மறைந்தேபோனது.

சாந்தியுமமைதியும் மனதிற்நிறைந்தது! மெய்வழியறிந்தேன்!' என்றாரடியவர்!
இவ்விதம்சொன்னதைக் கேட்டவர்மகிழ்ந்து பின்வருமாறு போதனைசெய்தார்::: [970]

''என்செயல்பாடுகள் தனிவழியாகும்! கேட்டக்கதையை மனதிற்கொள்ளுக.
ஆத்மானுபூதி ஒருவரடைந்திட தியானமென்னும் செயல்முறையவசியம்.

முறையாய்ச்செய்திட எண்ணங்களொழியும். பற்றெதுமின்றியே பல்லுயிரிருக்கும்
பகவானைநினைந்திட மனம்நிலையடைந்து குறிக்கோளெய்துவர். பேரானந்தம்

தந்திடுமென்றன் உருவிலாநிலையை மனதிற்கொண்டுத் தியானம்புரிந்திட
முயற்சிசெய்க! இயலாவிடினோ, இங்கேகாணும் என்னுருநினைந்து

தியானம்புரிக. அனைத்தும்மறைந்து ஓர்நிலையடைந்து உயரியபிரம்மம்
அதனிற்கலந்து ஐக்கியமாவர். எங்கேயிருப்பினும் தன்னையேநினைக்கும்

குட்டிகள்மீது பரிவினைக்காட்டும் ஆமையைப்போல குருவருள்திகழும்.
குருவும்சீடனும் கொண்டிடுமுறவும் இதுபோலத்தான்' என்றவர்சொன்னதும்

ஆரத்திமுடிந்திட அங்கேயிருந்திதைக் கேட்டவரனைவரும் 'ஜெய'வொலியெழுப்பினர்.
இதனையிங்கே படித்தநாமும் அங்கேயிருப்பதாய் எண்ணிக்களிப்போம்.

ஆரத்திமுடிந்ததும் பாபுசாஹேப் ஜோக் பாபாவைவணங்கி அவரதுகையில்
நிறைந்திடும்வண்ணம் கற்கண்டுகளை அளித்ததுமதனை ஹேமாத்பந்த்தின்

கைகளில்வழங்கி, 'இந்தக்கதையை உள்ளில்நிறுத்திட கற்கண்டைப்போல்
உங்கள்நிலையும் சுவையுள்ளதாகி விருப்பம்கூடி மகிழ்ச்சியடைவீர்'

என்றவர் சொன்னதும் ஹேமாத்பந்த்தும் ஸாயியைப்பணிந்து 'இதுபோலென்றும்
என்னுடனிருந்து காத்திடவேண்டும்' என்றதும்பாபா, 'இதனுட்கருத்தை

மனதில்கொண்டிட இறையருள்ஞானம் தியானம்கூடும்' எனப்பதிலளித்தார்.
ஹேமாத்பந்த்தன்று பெற்றிட்டஆசிபோல் நாமுமிதனால் பயனைப்பெறுவோம். [980]

'நமது குணத்தைப் பற்றி பாபாவின் அறிவுரை':

'உறவோ,தொடர்போ ஒன்றில்லாமல் ஒருவருமெங்கும் செல்லுவதில்லை.
உம்மிடம்வந்திடும் அனைத்துயிர்களையும் பண்பில்லாமல் விரட்டிடவேண்டாம்.

உரியமுறையினில் மரியாதையுடனே அவரைநடத்தி, தாகமுற்றோர்க்குத்
தண்ணீர்கொடுத்து, பசியுற்றோர்க்கு நல்லுணவளித்து, ஆடையற்றோர்க்கு

ஆடையளித்தும் அமர்ந்திளைப்பாறிடத் திண்ணையைக்கொடுத்திட ஹரியும்மகிழ்வார்.
பொருளுதவியை நாடிவந்தோர்க்கு மனமில்லாவிடின் கொடுத்திடவேண்டாம்

ஆனாலவரிடம் நாயினைப்போலக் குரைத்திடவேண்டாம்.உங்களுக்கெதிராய்
பேசுவோரிடம் சீற்றம்கொண்டு வருத்திடவேண்டாம். இவ்விதம்நீங்கள்

சகித்துக்கொண்டால் மகிழ்வெய்திடுவீர். உலகம்மாறினும் நிலையாயிருங்கள்.
நடந்திடுமனைத்தும் கடந்திடும்காட்சியாய் உள்ளமைதியுடனே பார்த்துக்கொண்டிருங்கள்.

உமக்குமெனக்கும் இடையேயிருக்கும் வேற்றுமைச்சுவற்றை இடித்துத்தள்ளுக!
நானும்நீயும் வேறெனுமுணர்வு இல்லாதொழித்திடின் தடைகள்விலகிடும்.

கடவுளொருவரே அனைத்துலகிற்கும் சொந்தக்காரர். 'அல்லாமாலிக்'!
அறிவாலறிந்திடா, விலைமதிப்பில்லா, அவரதுமுறைமை அசாதாரணமானது.

அவரதுமுடிவே இறுதியானது. வழிகாட்டியவர் நடத்திச்செல்வார்.
விரும்பிடுமனைத்தும் அவரேதருவார். முற்பிறப்புறவால் இங்கேயிணைந்தோம்.

ஒருவருக்கொருவர் அன்பாயிருந்தும், உதவிகள்செய்தும் மகிழ்வுடனிருப்போம்.
வாழ்வினுயரிய இலக்கினையடைந்தவர் இறவாப்புகழுடன் மகிழ்ச்சியடைவான்.

மற்றவரனைவரும் மூச்சினைமட்டும் விட்டிடுமுயிராய் வீணாயிருப்பர்.'
இவ்விதம்பாபா சொல்லியகருத்தினை உள்ளில்கொண்டேசெயலிற்செய்திட [990]

என்றும்நன்மையே நமக்குவிளையும். விலைமதிப்பில்லா இதனையுணர்வோம்!
ஸாயிசொன்னதை மனதிற்கொண்டே நன்னெறியுணர்ந்து நன்மைபெறுவோம்.

'நல்ல எண்ணங்களின் அவா நிறைவேற்றத்தை ஊக்குவித்தல்':

அன்பும்பக்தியும் முழுமையாய்க்கொண்டு பாபாவிடம்நீர் சரணடைந்திட்டால்
ஒவ்வொருநிகழ்விலும் ஓடிவந்தவர் உதவிசெய்வதை உண்மையாய்க்காணலாம்!

உறங்கிவிழித்ததும் உள்ளில்தோன்றிடும் நற்சிந்தனையை நாள்முழுதினிலும்
அனுசரித்திடவே அறிவினிற்தேர்ந்து சாந்தியடையலாம்- இதுமுனிவர்வாக்கு.

இந்தக்கூற்றினைப் பரிட்சைசெய்திட ஹேமாந்த்பந்தும் தீர்மானித்து
புதனிரவன்று 'நாளைவியாழன்! குருவுக்குகந்தநாள்! இருப்பதோஷீர்டி!

நாளைமுழுவதும் ராமநாமத்தை நினைவிற்கொண்டு நாளும்போற்றுவேன்'
எனமுடிவெடுத்துப் படுத்துறங்கி மறுநாள்விழித்ததும் அதையேயுணர்ந்தார்!

காலைக்கடன்களை முடித்தவர்கையில் மலர்களையேந்தி மசூதிசென்றிட
'பூட்டி'வாதாவைக் கடந்திடும்போது 'ஔரங்காபாத்கர்' என்னுமன்பரின்

இனியகுரலில் ஏக்நாத்தின் 'குருகிருபாஞ்சன் பாயோமேரேபாயி'
பாடலைக்கேட்டதும் உள்ளம்மலர்ந்தார்! 'குருவின்கடாக்ஷம் எனுமொருஅஞ்சனம்

அகத்தில்மலர்ந்து உள்ளும்புறமும் கனவிலும்நனவிலும் கிடைத்ததன்மஹிமை'யைச்
சொல்லிடும்பாடல் இந்தவேளையில் அங்கேநிகழ்ந்திட நினைவும்பலித்தது!

'உபதேசங்களின் விதங்கள் - அவதூறு பேசுவோர் கண்டிக்கப்படுதல்'::

அறிவுரைகூறிட நேரமோகாலமோ தேவையில்லாது தக்ககாலத்தில்
தேவையுற்றோர்க்கு ஸாயிபாபா வழங்கிடும்முறைமையில் தயங்கிடவில்லை.

அடியவரொருவர் ஒருமுறைதனக்குப் பிடிக்காதொருவரை இழிவுபடுத்தி
அவரதுகுறைகளை அவரிலாநேரம் மற்றவரிடத்தில் குறைத்துப்பேசினார். [1000]

பிறரைப்பழித்திடும் இந்தக்குணமின்று அதிகமாகவே இருப்பதைக்காண்கிறோம்.
'அழுக்கையகற்றிடப் பலவழியிருக்கும் வகையதுபோல குறைசொல்பவனும்

பிறரதுஅழுக்கினைத் தனதுநாவினால் திட்டித்திட்டியேச் சுத்தம்செய்கிறான்!
ஒருவகையிலவனே திட்டப்படுபவர்க்கு உதவிபுரிகிறான்' என்பார்மேலோர்.

இவனதுசெயலை நிறைபேரறிவினால் முன்னமேயறிந்த பாபாஅவனை
லெண்டித்தோட்டம் சென்றிடும்வழியில் சந்தித்தபோது அங்கேயிருந்த

பன்றியொன்றினைச் சுட்டிக்காட்டி, 'பார்!இந்தப்பன்றியை! எத்தனைச்சுவையாய்
மகிழ்வாயிந்த மலத்தையுண்டு மகிழ்வுகொள்ளுது! நீயுமதுபோல்

பிறரைத்தூற்றித் திருப்தியடைகிறாய்! முன்வினைப்பயனால் மனிதனாய்ப்பிறந்து
இவ்விதம்நீயும் செய்திடுவாயாயின் ஷீர்டியுனக்கு எவ்விதமுதவும்?'

என்றேசொன்னதும் அந்தப்பக்தரும் பாபாசொன்னதை மனதினிற்கொண்டார்.
இவ்விதமாக ஸாயிபாபா அறிவுரைபலவும் வழங்கியேவந்தார்.

நல்லுரையிதனை மனதிற்கொண்டவர் ஆன்மீகயிலக்கை விரைவினிலடைவார்.
'இருக்குமிடத்திலே யானுமிருந்திட ஹரியுமெனக்கு உணவினையளிப்பார்'

என்னும்பழமொழி ஆன்மிகநிலையில் பொருந்துவதில்லை. சாதனையெதுவும்
செய்யாதிருந்தால் வீழ்ச்சியேயடைவான். பெருமுயற்சியே பெரும்பலம்தந்திடும்.

எங்கும்நிறைந்திடும் சர்வவியாபியாம் ஸாயிபாபாவை மூன்றரைமுழத்து
மனிதனாய்ப்பார்த்திடும் ஒருசிலர்கருத்தை மாற்றிடவேயவர் ரூபமெடுத்தார்.

இரவிலும்பகலும் பூரணஆத்ம சரணாகதியுடன் ஸாயியைநினைந்து
தியானம்புரிபவன் சர்க்கரையினிப்பும் கடலுமலையும் கண்ணுமொளியும்போல் [1010]

அவருடன்கலந்து ஐக்கியமாவான். பிறப்பிறப்பென்னும் சுழலையொழித்து
அமைதியைவேண்டுவோன் நேர்மையானதோர் வாழ்க்கையைமெய்யாய் நடத்திடவேண்டும்.

மனதையடக்கி அமைதியிற்கலந்து புண்படாச்சொற்களைப் பிறரிடம்பேசி
நல்வினையதனில் ஈடுபடுத்திக் கடமையைச்செய்து உடலுமுயிரும்

அவருக்கென்றே நிறைவுடன்கொடுத்து சரணடைந்தவர்க்குப் பயமேதுமில்லை.
இவ்வழிசென்றிடத் தன்னைக்கொடுப்பவன் ஆத்மானுபூதியை அடைவதும்திண்ணமே!

தம்பெயரொன்றையே நினைவிலிறுத்தி சரணடைந்திடசிலர்க்கும், ஸ்ரவணமும்மனனமும்
பயின்றிடச்சொல்லி ஒருசிலபேர்க்கும், கடவுளின்பெயரைச் சொல்லிடச்சொல்லி

ஒருசிலபேர்க்கும், லீலைகள்சிலதை நினைந்திடச்சொல்லி ஒருசிலபேர்க்கும்,
புனிதநூல்களைப் படித்திடச்சொல்லி இன்னும்பிறர்க்கும், திருவடியருகே

அமர்ந்திடச்சொல்லி ஒருசிலபேர்க்கும், கண்டோபாகோவில் தரிசனம்செய்திட
ஒருசிலபேர்க்கும், விஷ்ணுவினாயிரம் நாமத்தைச்செபித்திட ஒருசிலபேரையும்

கீதோபநிஷத் நூற்பாராயணத்தைச் செய்திடச்சிலரையும், இன்னும்பலர்க்கு
நேரிலும்கனவிலும் இன்னபிறமுறையிலும் வரைமுறையின்றி பாபாபணித்தார்.

மதுவினையருந்தும் பழக்கம்கொண்ட அடியவரொருவர் கனவினில்வந்து
மார்மேலமர்ந்து அவரையழுத்தி மதுவையினிமேல் தொடுவதில்லையெனும்

சத்தியம்பெற்றே அவ்விடமகன்றார். மந்திரவிளக்கம் கனவினில்தோன்றி
பாபாஅருளினார். ஹடயோகத்தை விட்டொழித்தே பொறுமையைப்பயின்றிட

ஒருவர்க்கருளினார். அவர்தம் செயல்முறை விரித்துச்சொல்லிட யாராலியலும்!
உலகவாழ்விலும் முன்னுதாரணமாய் பாபாநிகழ்த்திய ஒருகதையிங்கே! [1020]

'உழைப்புக்குக் கூலி'::

மதியவேளையில் ஓர்நாள்பாபா 'ராதாகிருஷ்ணமாயி' வீட்டினருகே
வருகைதந்து ஏணியொன்றையே கொணரச்சொல்லி அதன்மேலேறி

வாமன்கோந்த்கரின் கூரைவழியே மாயியின்கூரை மீதில்நடந்து
மறுமூலையின்வழியே கீழேயிறங்கினார். பாபாசெயலைப் புரிந்தவரெவருமிலர்!

காய்ச்சலில்நடுங்கிய மாயியைக்காத்திட இவ்விதம்பாபா செய்துமிருக்கலாம்.
இறங்கியவுடனே ஏணியைக்கொணர்ந்தவர்க்கு இரண்டுரூபாய்கள் பாபாகொடுத்தார்.

அதிகத்தொகையைக் கொடுத்ததுஏனெனக் கேள்விகேட்டவர்க்கு உழைப்புக்கூதியம்
குறைவேதுமின்றிக் கொடுப்பதன்மூலம் வேலைசெய்பவர் மனமிகமகிழ்ந்து

இன்னும்சிறப்பாய் பணிகளைப்புரிந்திட வேலைகொடுப்பவரும் வேலைசெய்பவரும்
லாபமடைவர்; வேலைநிறுத்தமென எதுவுமிராது என்றேபகர்ந்தார்பாபா! [1025]


ஸ்ரீ ஸாயியைப் பணிக! அனைவர்க்கும் சாந்தி நிலவட்டும்!
[நீ யுணர்த்த உணர்ந்தே சொல்வது அல்லால், என்னறிவால் சொல்ல வல்லேன் அன்றே!]
(To be continued)

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.