Wednesday, May 28, 2014

Sai Charita - 21


"ஸ்ரீ ஸாயி ஸத்சரிதம்."  
[மராத்தி மூலம்: ஸ்ரீ கோவிந்த்ராவ் ரகுநாத் தாபோல்கர்]
[தமிழ் மூலம்: ஸ்ரீ சொக்கலிங்கம் சுப்பிரமணியன்.]


(Converted into Two line  Tamil verse  by : Dr. Sankarkumar, USA)

இலம்பகம் – 21


[திரு.வி.ஹெச்.தாகூர், அனந்தராவ் பாடண்கர், பண்டரிபுரத்து வக்கீல் ஆகியோரின் கதைகள்]

********************
விநாயக்ஹரி சந்த்ரதாகூர், புனேயைச்சேர்ந்த அனந்த்ராவ்பாடண்கர்
பண்டரிபுரத்து வக்கீலொருவர் ஆகியோர்கதைகளை இங்கேகாண்போம்.

சுவைமிகுக்கதைகளைக் கவனத்துடனே கற்றுணர்ந்திடப் படிப்பவர்தம்மை
ஆன்மிகவழியில் மேலுமழைத்துச் சென்றிடவுதவும் என்பார்ஹேமாத்பந்த். [1080]

முன்னுரை:

முற்பிறப்புகளிலே சேகரித்தநற் பலன்களின்விளைவே முனிவர்உறவெலாம்
என்னும்நியதியின் விளக்கமாய்த்தனது சொந்தநிகழ்வினை இங்கேயுரைக்கிறார்.

மும்பையருகே 'பாந்த்ரா'வென்னும் புறநகர்ப்பகுதியில் பல்லாண்டுகளாய்
மாஜிஸ்ட்ரேட்டாய் 'ஹேமாத்பந்த்'தும் பணிபுரிந்த நாட்களிலாங்கே

'[p]பீர்மௌலானா' எனுமோர்முனிவர் அனைவராலும் போற்றிடும்வண்ணம்
இருந்துவந்திட அவரதுதரிசனம் பெற்றிடச்சொல்லி 'இனூஸ்'என்னும்

பூசாரியொருவர் ஹேமாத்பந்தை இரவும்பகலும் கேட்டுக்கொண்டார்.
ஆயினுமவரால் முனிவரைக்காணும் நேரம்வராது காலம்போனது.

பலவருடங்கள் கழிந்தபின்னரே ஷீர்டிசென்று பாபாவைக்காணும்
நல்லூழ்வந்திட நிரந்தரமாக ஸாயிதர்பாரில் அவரும்கலந்தார்.
முனிவர்களின் நிறுவனங்கள்::

பன்னெடுங்காலமாய் பலமுனிவர்களின் ஆசிரமங்களும் இருந்ததுமுண்டு.
வெவ்வேறிடங்களில் ஒவ்வோர்விதமாய் பணிகள்செய்யினும் அவரெலாம்ஒன்றே.

அனைத்தும்வல்ல பரம்பொருளாணையின் உரிமையால் ஒத்திசைவுடனே
அவரவர்பணியை அவர்கள்செய்யினும் மற்றவரனைவரும் அதனையறிவர்.

தேவைவந்திடின் அடுத்தவர்பணியை முடித்திடும்திறனும் கொண்டிவரொளிர்வர்
இதனைவிளக்கிடும் நிகழ்ச்சியொன்றினை இங்கேநாமும் கண்டுணரலாம்.

'திரு.தாகூர்'::

வருவாய்த்துறையினில் குமாஸ்தாவாகப் பணிபுரிந்திருந்த 'வீ.ஹெச்.தாகூர்'
என்பாரோர்முறை தமதுகுழுவுடன் பெல்காமையடுத்த 'வட்கோவன்'வந்தார்.

'அப்பா'என்னும் முனிவரொருவரைக் கண்டுபணிந்து வணங்கிநின்றார்.
நிஸ்சலதாஸின் வேதாந்தம்பற்றிய 'விசாரஸாகரம்' எனுமோர்நூலின் [1090]

பகுதியொன்றினின் விளக்கவுரையை முனிவர்கூறிட அதையிவர்கேட்டார்.
விடைபெறும்போது 'அப்பா'இவரிடம், 'இந்தநூலினைநீ கற்றிடல்வேண்டும்.

கற்றுத்தெளிந்திட, விருப்பங்கள்யாவும் கைகூடிவரும். வருங்காலத்தில்
வேலைநிமித்தமாய் வடக்கேசெல்கையில் நல்லூழ்ப்பயனால் மஹானொருவரை

நீயும்காண்பாய். அவரருளாசியால் தக்கதோர்வழியை நீயுமடைந்து
மனவமைதியையும் பெற்றேமகிழ்வாய்' என்றேயருளி அனுப்பிவைத்தார்.

ஒருசிலநாட்களில் 'ஜுன்னர்'எனுமோர் நகருக்குஅவர் மாற்றலாகினார்.
'நாணேகாட்'டெனும் பெருமலைத்தொடரை எருமைச்சவாரி செய்தவர்கடந்தார்.

கடினமானஇப் பயணக்களைப்பால் உடல்நோவுற்று மனமிகநொந்தார்.
ஆங்கிருந்தவர் பதவிவுயர்வினால் கல்யாண்நகருக்கு மாற்றப்பட்டார்.

நானாஸாஹேப் சந்தோர்க்கரெனும் ஸாயிஅடியவரின் நட்பினைப்பெற்றார்.
ஸாயியைக்கண்டிட விருப்பமுற்றவர் ஷீர்டிசென்றிட எண்ணங்கொண்டார்.

மறுநாட்காலையில் ஷீர்டிசென்றிட நானாகிளம்பிட வேலைநிமித்தமாய்
தாகூர்அவருடன் சென்றிடவியலா நிலையால்வருந்தி 'தாணே'சென்றிட

விசாரணையன்று தள்ளிப்போனதால் தனியேஷீர்டி நகரினையடைந்தார்.
நானாஅங்கே இல்லாதிருந்தும் அவரது நண்பரால் மசூதிசென்றார்.

தரிசனம்கண்டதும் மயிர்க்கூச்செறிந்து கண்ணீர்மல்கியே பாதம்பணிந்தார்.
அன்புடன்பாபா அவரைநோக்கி, 'அப்பா'சொல்லிய போதனைபோன்றோ,

எருமைச்சவாரி போலிதுவொன்றும் எளிதானதன்று; கடினவழியிது;
சீரியமுறையில் முயற்சிகள்செய்தல் மிகவும்அவசியம்!' எனஸாயிசொன்னதும் [1100]

அதனுட்பொருளை உடனேயறிந்து ஆனந்தக்களிப்பினில் தாகூர்மூழ்கினார்.
கரங்களைக்கூப்பிப் பாதம்பணிந்து தம்மைக்காத்திட தாகூர்வேண்டினார்.

'அப்பா'சொன்னதை மனதிற்கொண்டு முறையாய்ப்பயின்றிட நலமேமிகுக்கும்.
ஏட்டுக்கல்வியாற் பயனேதுமில்லை. கற்றதையுணர்ந்து அதன்படிநின்றிடல்

மிகவும்முக்கியம். குருவருளின்றியும், தன்னறிதலின்றியும் எதுவும்பயனிலை.'
விசாரஸாகரம் சொல்லியகல்வியின் செயல்முறைவடிவினை பாபாதந்தார்.

'அனந்த்ராவ் பாடண்கர்'::

முன்னர்சொல்லிய கதையினைப்போலவே இந்தக்கதையும் இதனைவிளக்கிடும்.
புனேவைச்சேர்ந்த 'பாடண்கர்'என்னும் பெருந்தகையொருவர் ஷீர்டிவந்து

பாபாவைப்பணிந்து ' நூல்பலகற்றும் மனவமைதியில்லை; கல்வியறிவினால் பலனேதுமில்லை; பக்திசெலுத்தும் எளியமக்களே என்னிலும்சிறந்தவர்;

மனமடங்கிடும் வழியறிந்தாலன்றி வேறுவகையினாற் பயனேதுமில்லை.
பலவிதமுறைகளில் அடியவர்க்கருளை நீங்கள்வழங்கிடும் முறைமையைக்கேட்டு

யானிவண் வந்தேன்; இரக்கம்காட்டி எனக்கொருவழியைத் தந்திடல்வேண்டும்'
எனவேண்டியதும் பாபாஅவரிடம் உருவகக்கதையொன்று சொல்லியருளினார்.

'ஒன்பது லத்தி உருண்டைகளின் கதை' [நவவித பக்தி]::

'இவ்விடம்வந்த வணிகனொருவன் அவனதுகுதிரை இட்டலத்திகளைக்
கவனத்துடன்தன் வேட்டிமுனையை விரித்துப்பிடித்து அவற்றைச்சேர்த்தான்.

அவ்விதமவனும் செய்தவுடனே அவனதுமனமும் அமைதியுற்றது!'
பாபாகூறியக் கதையின்பொருளைப் புரியாபாடண்கர் 'கணேஷ்தாமோதரெனும்

தாதாகேல்கரிடம்' இதனுட்பொருளைத் தெரிந்திடவேண்டிக் கேட்டிடஅவரும்
'பாபாசொன்னதன் பொருளையறிந்திடும் திறனெனக்கில்லை எனினுமவரது [1110]

அருட்தூண்டுதலினால் தெரிந்தவளவில் சொல்லிடமுனைவேன்! இறையருளேகுதிரை!
ஒன்பதுவுருண்டைகள் பக்தியின்நவவித ரூபங்களாகும்! ஸ்ரவணம்கீர்த்தனை

ஸ்மரணம்,பாதசேவனம், அர்ச்சனை,நமஸ்காரம், தாஸ்யா,சக்யத்வா, ஆத்மநிவேதனமெனும்
கேட்டல்,வேண்டல், நினைவிற்கொள்ளுதல், திருவடிதொழுதல், பூஜை,வணக்கம்

சேவை,நட்பு, தன்னைக்கொடுத்தல் இவையேபக்தியின் ஒன்பதுவிதங்கள்.
ஏதேனுமொன்றை நம்பிக்கையுடனே தான்கைக்கொண்டால் இறைவன்மகிழ்ந்து

தன்னுருக்காட்டித் தரிசனம்தருவார். சாதனையெதுவும் பக்தியிலாவிடின்
பயனெதும்தாரா. வணிகனைப்போன்று கவனத்துடனே அனைத்தையும்சேர்த்திட

நீங்கள்தேடிடும் மனவமைதியெல்லாம் நிலையுறுதியுடனே தாமேமுன்வரும்'
என்றேசொல்லிட, மகிழ்ச்சியடைந்து மறுநாட்காலையில் தரிசனம்கண்டிடச்

சென்றிட்டபோது, பாபாஅவரிடம், 'ஒன்பதுலத்திகள் சேகரித்தீரோ?' எனக்கேட்டதுமே,
குருவருளின்றி எளியவனென்னால் எங்ஙனம்சேர்த்திட இயலுமாதலால்

தனக்கருள்செய்திட ஸாயியைவணங்கிட மகிழ்வுடன்பாபா ஆசியளித்தார்.
குருவருள்கிடைத்த மகிழ்ச்சியில்பக்தரும் அளவிலாவின்பமும் அமைதியுமெய்தினார்.

'பண்டரிபுரத்து வக்கீல்'::

பண்டரிபுரத்து வக்கீலொருவர் ஷீர்டிவந்து தரிசனம்செய்து,
அவரடிபணிந்து கேளாமலேயே தக்ஷிணைதந்து ஆங்கேயமர்ந்து

அருளுரைகேட்டார். பாபாஅவரது பக்கமாய்த்திரும்பி, 'மக்களெத்தனை
வஞ்சநெஞ்சராய் இருக்கிறார்பாரும்! பாதம்பணிந்தும், தக்ஷிணையளித்தும்,

அந்தரங்கமாய்க் காணாவிடத்தே அவதூறுபேசியும் வாழ்ந்திருப்பதும்
எத்தனையற்புதம்!' என்றவர்சொன்னதும் அதன்பொருளுணர்ந்து வக்கீல்மட்டும் [1120]

அமைதியாய்மூலையில் அமர்ந்திருந்திட விவரமறிந்திடா மற்றவர்விழித்தார்.
வாதாசென்றதும் 'காகாஸாஹேப் தீக்ஷித்'திடத்தில், ' பாபாசொன்னது

முற்றிலும்சரியே! எய்தகணையும் என்னைநோக்கியே! நூல்கரென்னும்
பண்டரிபுரத்து முன்சீப்பொருவர் வந்தசமயத்தில் வக்கீல்களறையில்

'மருந்துகளின்றி பாபாவைப்பணிவதால் மட்டுமேநோய்கள் தீர்ந்திடுமென்பது
எவ்விதம்சரியோ? முன்சீப்போன்ற படித்தவர்கூட இவ்விதம்செல்வது

படித்தவர்க்கழகோ?' எனுமோர்வாதம் பாபாவைக்குறித்து நாங்கள்செய்தோம்.
அதையேபாபா இன்றிவ்விதமாய் சொல்லிக்காட்டியென் புத்தியிலுரைத்தார்.

பிறரைத்தூற்றலும் அவர்பணிகளிலே மூக்கைநுழைப்பதும் முறையிலைதானே!'
எனமனமுருகிச் சொல்லிடக்கேட்டு தீக்ஷித்துமே வியப்பிலாழ்ந்தார்.

ஷீர்டி,பண்டரி இருநகர்க்கிடையே முன்னூறுமைல்கள் இடைவெளியிருந்தும்
எங்கோநடந்ததை இங்கேபாபா துல்லியமாகச் சொன்னதும்வியப்போ!

இரகசியமென்று எதுவுமவர்க்கிலை! அனைவரிதயமும் பாபாஅறிவார்.
எத்தனைதொலைவில் எவரிருந்தாலும் பாபாவின்பார்வைக்குத் தப்பிடக்கூடுமோ!

தம்குறையுணர்ந்த அந்தஅடியவர் நல்வழிதிரும்பி குருவருள்பெற்றார்.
வக்கீலுக்குச் சொன்னதெனினும் அனைவருமிதனை அகத்தேயுணர்ந்து

அதனால்வந்திடும் பயன்களையறிந்து நேர்வழிசென்றிட முயன்றிடவேண்டும்.
ஸாயியின்பெருமை ஆழங்காண இயலாததொன்று! அவரதுலீலையும் [1129]

வாழ்க்கைமுறைமையும் அங்ஙனமேயாகும் ! ஏனெனில்பாபா பரப்பிரம்மவதார்!

ஸ்ரீ ஸாயியைப் பணிக! அனைவர்க்கும் சாந்தி நிலவட்டும்!
[நீ யுணர்த்த உணர்ந்தே சொல்வது அல்லால், என்னறிவால் சொல்ல வல்லேன் அன்றே!]
(........to be continued)

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.