Thursday, May 29, 2014

Sai Charita - 24


"ஸ்ரீ ஸாயி ஸத்சரிதம்."  

[மராத்தி மூலம்: ஸ்ரீ கோவிந்த்ராவ் ரகுநாத் தாபோல்கர்]
[தமிழ் மூலம்: ஸ்ரீ சொக்கலிங்கம் சுப்பிரமணியன்.]


(Converted into Two line  Tamil verse  by : Dr. Sankarkumar, USA)

இலம்பகம் – 24


பாபாவின் தமாஷும், வேடிக்கையும் - சணா லீலை - 1] ஹேமாத்பந்த், 2] ஸுதாமர், 3] அண்ணா சிஞ்சணீகரும், மௌஷிபாயியும்.
***********

முன்னுரை:

சத்குருபாதக் கமலங்களில்நம் ஆணவத்தினை முழுவதுமாகத்
தந்தாலொழிய செயல்கள்யாவிலும் வெற்றியென்பது கிடைப்பதுமில்லை.

ஸாயிலீலையைச் சொல்லிடும்கதைகளைக் கேட்டிடுமொருவர் வாழ்வினிலக்கினைப்
பூரணமாகத் தாமேயடைந்து இகபரசுகத்தினைப் பெறுவதுதிண்ணம். [1230]

தம்மைக்கொண்டு நிகழ்ந்திடும்கேலியைப் பொதுவிலெவரும் விரும்புவதில்லை.
ஆயினும்பாபா வழிமுறையிதிலே விசித்திரமானது. அபிநயம்கலந்து

நிகழ்ந்திடும்போது ஆர்வமூட்டியே அறிவுரைசேர்ந்து நன்மைபயத்திடும்.
அதுபோல்பாபா தம்மைக்கொண்டு நிகழ்த்தியவொன்றினைச் சொல்வார்ஹேமாத்பந்த்.

சணா லீலை::

சந்தைநடக்கும் ஞாயிற்றுக்கிழமையில் ஷீர்டிவந்திடும் மக்களின்கூட்டம்
மசூதிவந்திட மூச்சுத்திணறும் அளவினில்கூட்டம் அங்கேகூடிடும்.

அவ்விதம்கூடிய ஞாயிறுஒன்றில் ஹேமாத்பந்த்தும் பாபாமுன்னே
அமர்ந்தவர்காலினைப் பிடித்துவிட்டும் இறைபெயர்சொல்லியும் பணிவிடைசெய்தார்.

ஷாமாஇடமும் வாமன்ராவ்வலமும் அமர்ந்தவேளையில், ஹேமாத்பந்த்தின்
கோட்டின்மடிப்பில் பருப்புதானியம் இருப்பதைக்காட்டி ஷாமாசிரித்தார்.

விஷயமறிந்திட முழங்கைநீட்டிட மடிப்பிலிருந்து பருப்புமணிகள்
உருண்டோடிட, இத்தனைநேரமாய் எப்படிஅவையும் ‘கோட்’டிலிருந்தன

எனவேபலரும் ஊகித்துணர்ந்திட பலவும்முயன்றும் விடையேதுமில்லை.
அப்போது பாபா, 'தனியேதின்னும் பழக்கமிவர்க்குப் பலநாளாயுண்டு!

சந்தைநாளாம் இன்றையத்தினத்தில் பருப்புமணிகளை அசைபோட்டுவந்தார்.
உருண்டிடும்மணிகளே இதற்குசாட்சி! ஆச்சரியமென்ன?' என்றேபகர்ந்தார்.

இதனைமறுத்த ஹேமாத்பந்த்தும், 'தனியேதின்னும் வழக்கமெனக்கில்லை.
சந்தையையிதுவரை கண்டதுமில்லை! அங்கேயெதுவும் வாங்கவுமில்லை.

எப்படியானும் தின்றிடமுடியும்? இருப்பதைப்பகிர்ந்தே உண்பதென்வழக்கம்.
அப்படியிருக்க வீணாயென்மேல் பழியேன்பாபா?' எனப்பதிலுரைத்தார். [1240]

'அருகிலிருந்தால் கொடுப்பதுசரிதான். இல்லாவிடின்நீர் செய்வதுமென்ன?
எதையுமுண்ணும் முன்னரென்னை நினைவிற்கொண்டு எனக்கதையளித்துப்

பின்னரேயுண்ணும் வழக்கம்நுமக்கு இதுவரையுண்டோ?' என்றார்ஸாயி!
பாபாசொன்னதன் பொருளையுணர்ந்து ஹேமாத்பந்த்தும் தலைகவிழ்ந்தார்.

நீதி:

புலன்களெதையும் உணர்ந்திடுமுன்னர் மனமும்புத்தியும் அவற்றின்பலனை
உணர்ந்திடுமென்பதால், குருவைநினைந்து அவர்க்குஅதைப்படைத்தால் பற்றுகள்நீங்கி

ஆசைகோபம் வெறுப்புமுதலிய அனைத்துக்குணங்களும் நீங்கிடுமென்னும்
அற்புதக்கருத்தை இக்கதைமூலம் அங்கிருந்தவர்க்கு பாபாபோதித்தார்.

அனுபவித்திடும் பொருட்களனைத்தையும் முதலில்பாபா அருகிலிருப்பதாய்
மனதுள்நினைந்து அவர்க்குஅளித்திட நல்லதும்கெட்டதும் நன்றாய்ப்புரியும்.

தீக்குணம்மறைந்து நற்குணமோங்கிட குருவின்மீதுநம் அன்பும்வளர்ந்து
ஞானம்பிறந்திடும் நல்வழிநிறைந்து நானெனுமாணவம் முற்றிலும்மறைந்து

குருவும்கடவுளும் ஒன்றெனும்தத்துவம் நன்றாய்விளங்கி பேரின்பம் நிறைந்திடும்.
புலன்வழிச்செல்லும் பொருட்களெதையும் குருவழியின்றி உணர்வது வேண்டா.

இந்நிலைவளர்ந்திட ஸாயிநாதரின் தியானமும்ரூபமும் என்றும்நிறைந்து
புலனின்பம்துறந்து உலகமும்மறந்து அமைதியும்மகிழ்ச்சியும் என்றும்விளங்கும்.

'ஸுதாமரின் கதை'::

இந்நிலைவிளக்கும் ஸுதாமரின்கதையை ஹேமாத்பந்த்தும் இங்குரைக்கின்றார்.

'குருசாந்தீபனி'யெனும் முனிவரின்குடிலில் கண்ணனும்பலராமரும் சுதாமரென்னும்
தோழருடனே வாழ்ந்திடும்நாட்களில் விறகுகொணர்ந்திட குருவின்பத்தினி

சோதரரிருவரை முதலிலனுப்பியபின் ஸுதாமரிடத்தில் கடலைப்பருப்பினை
கட்டிக்கொடுத்து மூவருக்குமாகவே பகிர்ந்திடச்சொல்லிக் காட்டுக்கனுப்பினார். [1250]

நண்பரைக்கண்ட கண்ணனுமவரிடம் குடிக்கத்தண்ணீர் தரும்படிக்கேட்க
கடலையிருப்பதைக் கூறிடமறைத்தே வெறும்வயிற்றில் தண்ணீர்குடிப்பது

நல்லதில்லையென்றும் சற்றுநேரம்இளைப் பாறிடலாமென்றும் ஸுதாமர்கூறிட
அதனைக்கேட்ட கண்ணனும்அவர்மடி தலையைவைத்தே தூங்கத்தொடங்கினார்.

கண்ணன்தூங்கிட கடலையையெடுத்து ஸுதாமர்தின்றிட, சத்தம்கேட்டு
உறக்கம்கலைந்தக் கண்ணன்வினவிட, 'தின்றிடவொன்றும் என்னிடமில்லை

குளிரால்நடுங்கிடும் பற்களுமிங்கே தாளமடித்திட, விஷ்ணுவினாயிரம்
நாமம்சொல்லவும் முடியவில்லையே' என்றேஸுதாமர் மறுமொழியுரைத்திட

அனைத்துமறிந்திடும் கண்ணனுமவரிடம், 'மற்றவர்பொருளை உண்ணுமொருவனைக்
கனவினில்கண்டேன். அதனையவனிடம் கேட்டவேளையில் 'மண்ணாயுள்ளது

தின்றிட?'வென்றான். 'அப்படியாயின் அங்ஙனமேயாகுக' என்றேன்யானும். எனக்குத்தராமல்
தின்றிடமாட்டாய் என்பதுமெனக்கு நன்கேதெரியும். கனவிற்கண்டதால்

உன்னிடம்சொன்னேன்' என்றார்கிருஷ்ணர். அனைத்துமறிந்தவர் கண்ணனென்பதை
அறியாஸுதாமர் இவ்விதமவரும் நடந்துகொண்டதால் தரித்திரரானார்.

பின்னொருநாளில் மனைவிகொடுத்த ஒருபிடியவலைக் கண்ணனுக்களித்து
குறைவிலாநிதியமும் பொன்நகரொன்றையும் தாமும்பெற்றதை இங்கேசொல்லி

கிடைத்திடுமெதையும் கடவுளுக்களித்துப் பின்னரேதானும் உண்டிடவேண்டும்
என்னும்நீதியை நமக்குச்சொல்லி ஹேமாத்பந்த்தும் நன்னெறிபகர்ந்தார்.

'அண்ணா சிஞ்சணீகரும், மௌஷிபாயியும்'::

சமாதானம் செய்திடும்வேலையும் பாபாமிகவே நன்கேசெய்தார்
'தாமோதர்கன ஷ்யாம்பாபரே' என்னும்'அண்ணா சிஞ்சனீகர்'எனும் [1260]

எளிமையும்முரடும் கலந்தவோரடியார் கரவின்றிப்பேசிக் கைமேல்காசில்
குறியாயிருப்பினும் நல்லதோர்பண்பும் கள்ளமின்றியும் இருந்ததால்பாபா

அன்பிற்குரியராய் குருபாதசேவையில் இடப்புறக்கையை நீவிக்கொண்டிருந்தார்
'மௌஷிபாயி'யெனும் 'அம்மா'யென்பவர் வலப்புறமமர்ந்து வயிற்றுப்பகுதியைக்

கைவிரல்கோத்து அமுக்கிப்பிடித்துப் பிசைந்துகொடுத்துச் சேவைசெய்தார்
அமுக்கியவேகத் துக்கிதமாகவே இப்படியப்படி அசைந்துகொடுத்து

பாபாபுரண்டு கொண்டிருந்தவேளையில் அவளதுமுகமும் அண்ணாவருகே
வந்தநேரத்தில், வேடிக்கையாக மௌஷிபாயியும் 'அண்ணாஎன்னை

முத்தமிடவே நெருங்கிவருகிறான்! தலைநரைமிகுந்தும் ஆசைகொண்டவன்!
கெட்டகிழவனிவன் வெட்கமின்றியே நெருங்கிவந்து இவ்விதம்செய்கிறான்!"

என்றேயுரைத்திட, கோபங்கொண்ட சிஞ்சணீகரும், 'கெட்டகிழவன் என்றோகூறினாய்?
என்னுடன்சண்டையைத் தொடங்கிவிட்டாய்நீ' என்றேகூறி முஷ்டியைமடக்கினார்.

அனைவரும்ஆவலாய் ரசித்தஇச்சண்டையை நிறுத்திடவேண்டி பாபாஅன்புடன்
அவரைப்பார்த்து, 'வீணாய்நீயேன் குழப்பமடைகிறாய்? தாயைமுத்தமிடத்

தயக்கமேன்அண்ணா?' என்றவர்மொழிந்ததும் இருவரும்ரசித்து அமைதியடைந்தனர்.
கூடியிருந்த அனைவருமிதனை மிகவும்ரசித்து பலமாய்ச்சிரித்தனர்.

'பாபாவின் குணாதிசயம் - பக்தர்கள்பால் அவரின் சார்பு'::

அவரவர்வழியே சேவைசெய்திட பாபாமுற்றிலும் அனுமதியளித்தார்
கடுமையானதோர் வழியில்மௌஷி பாயிஒருமுறை அடிவயிற்றினை

அழுத்திப்பிசைந்த வேகம்கண்டு கூடியிருந்த அனைவரும்மிகவும்
கலக்கமுற்றே மெதுவாய்ச்சேவையைச் செய்திடஅவரை வேண்டியபோது [1270]

கோபமடைந்த ஸாயிபாபா ஸட்காவைத் தரைமீதேயடித்து நெருப்புத்துண்டமாய்
விழிகளையசைத்து ஸட்காஒருமுனை வயிற்றினிலழுத்தி மறுமுனை கம்பம்பொருத்தி

மேலுமேலுமதை அழுத்தித்தள்ளிட வயிற்றினைக்கிழித்தே வெளியேவந்திடும்
நிலையிலிருந்ததைக் கண்டவரனைவரும் பீதியிலுறைந்து செய்வதறியாது

திகைத்திட்டவேளையில், நல்லமனத்துடன் மற்றவரெல்லாம் நினைத்திட்டபோதும்
அடியார்சேவையில் பிறர்குறுக்கீடு இருப்பதைப்பொறுக்கா பாபாஇவ்விதம்

மற்றவர்க்கெல்லாம் காட்சியைக்காட்டிப் பின்னரவரே சாந்தம்கொண்டு
குச்சியைவிடுத்து இருப்பிடமமர்ந்திட அனைவருமங்கே நிம்மதியாயினர்.

அடியவர்செய்திடும் சேவையிலெவரும் குறுக்கிடலாகாச் செய்தியையனைவரும்
இவ்விதம்பாபா செய்ததன்மூலம் அறிந்துகொண்டே பாடம்கற்றனர்.

அவரவர்சேவையின் தகுதியினளவினை அளந்திடவல்லவர் பாபாஒருவரே
பிறரைமதிப்பிடும் பணியினைச்செய்தல் தவறுதலென்றே அனைவருமுணர்ந்தனர். [1276]

ஸ்ரீ ஸாயியைப் பணிக! அனைவர்க்கும் சாந்தி நிலவட்டும்!
[நீ யுணர்த்த உணர்ந்தே சொல்வது அல்லால், என்னறிவால் சொல்ல வல்லேன் அன்றே!]
(To be continued)

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.