Friday, May 30, 2014

Sai Charita - 45



"ஸ்ரீ ஸாயி ஸத்சரிதம்."  

 [மராத்தி மூலம்: ஸ்ரீ கோவிந்த்ராவ் ரகுநாத் தாபோல்கர்]
[தமிழ் மூலம்: ஸ்ரீ சொக்கலிங்கம் சுப்பிரமணியன்.]


(Converted into Two line  Tamil verse  by : Dr. Sankarkumar, USA)

இலம்பகம் – 45


காகா ஸாஹேப்பின் ஐயமும், ஆனந்த்ராவ் கண்ட காட்சியும் - மரப்பலகை பாபாவின் படுக்கைக்கானது; ‘பகத்’தினுடையதல்ல.

முன்னுரை:

பாபாமறைவைப் பற்றியவிவரணை மூன்றுஇலம்பகங்களில் நாமும்கண்டோம்.
நிலையிலாஉடலுரு காட்சியினின்று மறைந்துபோனதில் சந்தேகமில்லை.

சூட்சுமவுருவில் என்றும்வாழ்ந்து அன்றுபுரிந்த அத்தனைலீலையும்
இன்றும்நிகழும் சத்தியத்தாலே பாபாவாழ்வது இன்றும்/உறுதியே!

வாழ்ந்தநாட்களில் அவருடனிருந்தவர் அதிர்ஷ்டசாலியே ஆயினுமவர்கள்
உலகப்பற்றையும் இன்பநாட்டமும் விட்டிடாராயின் துரதிர்ஷ்டசாலியே.

புலன்களனைத்தையும் அவர்பால்திருப்பிச் சேவைசெய்வதே சாலச்சிறந்தது.
கற்புடைமாதர் கணவர்மீதுக் கொண்டிடும்அன்பினைக் குருவின்மீது

சீடன்கொண்டிடும் அன்புடனொப்புமை செய்திடின்புரியும் பின்னதன்மேன்மை.
தாயோதந்தையோ சுற்றமோநட்போ ஆத்மவுணர்வினை நாமும்பெற்றிட

உதவிசெய்திட வந்திடமாட்டார்; புலன்களையடக்கி மாயையைவென்று
பேதமுணர்ந்து சுயநம்பிக்கையுடன் நாமேஅதற்கு முயன்றிடல்வேண்டும்.

குருவேபிரம்மம்; அவரேயனைத்திலும் பரவியிருத்தலை மெய்யாயுணர்ந்து
ஜீவராசிகள் அனைத்தையும்குருவாய்க் கண்டுவணங்கலே கூட்டுப்பிரார்த்தனை.

குருநாமம்செப்பி தியானம்செய்வதே ஆன்மவுயர்வினை அளித்திடுமின்பம்.
இதனைவிளக்கிடும் கதையினையிங்கே பின்வரும்பகுதியில் நாமும்காண்போம். [2410]

'காகா ஸாஹேப்பின் ஐயமும், ஆனந்த்ராவ் கண்ட காட்சியும்' ::

பாகவதம்,பா வார்த்தராமாயணம் எனுமிருநூல்களைத் தினமுமோதிட
காகாசாஹேப் தீக்ஷித்தென்பவரை பாபாபணித்தது முன்னமறிந்ததே.

வாழுங்காலமும் தீக்ஷித்/இதனைத் தினமும்படித்துப் பிறர்க்கும்கூறினார்.
மும்பையிலுள்ள சௌபாத்தியிலே காகாமஹாஜனி என்பவர்வீட்டில்

ஏக்நாதரின் பாகவதத்தில் இரண்டாமிலம்பகம் பதினோராம்காண்டத்தை
ஒருநாளிதனைப் பாராயணம்செய்கையில் ஷாமாவுமங்கே கவனமாய்க்கேட்டார்.

ரிஷபக்குலவழி ஒன்பதுசித்தராம் கவி,ஹரி,அந்தரிக்ஷ, பிரபுத்த,பிப்பலாயன்,
அவிர்ஹோத்ர,த்ருமில், சமஸ்,கரபாஜன் என்போர்ஜனகரின் கேள்விக்குவிடையாய்

பாகவத்தர்மம் இன்னின்னதென்று உபதேசம்செய்த விளக்கம்வருமாறு:
'பாகவத்தர்மம் என்றாலென்ன என்பதைக்'கவி'யும், பக்தனின்குணநலன்

இதுவென'ஹரி'யும், மாயையை'அந்தரிக்ஷரும்', அதனைக்கடக்கும்
வழியினை'பிரபுத்தரும்', பரப்பிரம்மம் என்பதை'பிப்பலாயரும்'

கர்மத்தை'அவிஹோத்ரரும்', இறையவதாரங்களை 'த்ருமில்'என்பவரும்,
மரணமடைந்தபின் பக்தன்பெற்றிடும் கூலியை'சமஸ்'ஸும், ஒவ்வொருயுகத்திலும்

வழிபடும்முறைகளை 'கரபாஜன்'விளக்கி, கலியுகத்தினில் 'ஹரி'அல்லது
குருவின்பாதங்களை நினைவில்கொள்வதே முக்திக்குவழியென முடிவாய்க்கூறினர்.'

இதனைப்படித்ததும் காகாஸாஹேப் மற்றிருவரிடமும் வருந்திக்கூறினார்:
'வியத்தகுஇந்த விளக்கத்தைக்கேட்டதும் செயல்முறைக்கொள்வது எத்தனைக்கடினம்!

பூரணம்பெற்ற நாதர்கள்பகன்ற பக்தியைநம்போல் அறிவிலியடைவது
சாத்தியமாமோ? எத்தனைப்பிறவி பிறந்தாலுமிதனை அடைவதும்கடினம்! [2420]

முக்தியடைந்திடும் நம்பிக்கைசிறிதும் இல்லையெனவே தோன்றுகின்றது'
ஷாமாயிதனை மறுத்துக்கூறினார்: 'வைரம்போலும் பாபாவைக்குருவாய்ப்

பெற்றிட்டவொருவர் இங்ஙனமழுதல் பரிதாபமானது. நாதர்கள்சொன்ன
நம்பிக்கையுறுதியை பாபாநமக்கு ஆணித்தரமாய் கூறவில்லையா?

பயமோ,கவலையோ ஏன்படவேண்டும்?' இத்தனைசொல்லியும் காகாஸாஹேப்
திருப்தியுறாமல் நாதர்கள்போல, பக்தியைப்பெற்றிடும் எண்ணத்திலாழ்ந்தார்.

மறுநாட்காலையில் ஆனந்த்ராவ்பாகாடே எனுமோர்பெருந்தகை அவ்விடம்வந்து
பாராயணவேளையில் ஷாமாகாதில் தாம்கண்டகனவினை மெதுவாய்ச்சொல்லிட,

காகாசாஹேப் படிப்பதைநிறுத்தி விவரம்கேட்கவும், மாதவராவும்
'நேற்றையக்கேள்வியின் விளக்கமாயிங்கே பாகாடேசொல்வதைச் சற்றேகேளுக!'

என்றவர்சொன்னதும் அதனைக்கேட்டிட அனைவருமார்வமாய் அருகேஅமர்ந்தனர்:
'ஆழக்கடலில் இடுப்பளவுநீரில் நின்றுகொண்டிருக்கையில் ஸாயியைக்கண்டேன்!

வைரம்பதித்த சிம்மாசனத்தில் நீரில்கால்பட அவரமர்ந்திருந்தார்!
கனவாயிருந்தும் நனவினைப்போலக் கண்டகாட்சியில் நான்வியந்திருக்க

மாதவராவும் அங்கேயிருந்தார்! பாபாகாலில் விழுந்திடுமாறு உணர்ச்சிப்பெருக்காய்
அவரும்கூறிட, 'நீரிலிருக்கும் பாதங்களிலே எப்படியெனது சிரஸைவைப்பது?'

எனநான்சொல்லவும், ஷாமாஉடனே பாபாவைவேண்டிட, ஸாயிதனது
கால்களையெடுக்கவும், தாமதமின்றியே அவற்றைப்பற்றி நான்வணங்கினேன்.

'இப்போதுபோ! நன்மையடைவாய்! பயமோகவலையோ கொண்டிடவேண்டா!
என்ஷாமாவுக்கு பட்டுக்கரைவேட்டி ஒன்றினைக்கொடுத்து நன்மையடைவாய்!' [2430]

எனஆசிதந்து, என்னையனுப்பிட அதுப்போல்யானும் கொணர்ந்திருக்கும்
இந்தவேட்டியை ஷாமாவுக்குத்தருக' எனபாகாடே காகாவைவேண்டினார்.

ஆயினும்ஷாமா 'இதனைப்பெற்றிடும் குறிப்பொன்றினையே பாபாதராமல்
வேட்டியைப்பெற்றிட மாட்டே'னென்றிட, ஐயம்வருகையில் திருவுளச்சீட்டுப்

போட்டுப்பார்த்து அதன்படிநடக்கும் வழக்கம்கொண்ட காகாசாஹேப்பும்
'ஏற்றுக்கொள்க', 'தள்ளிவிடுக' எனுமிருசீட்டுகள் பாபாபடத்தின்

அடியில்வைத்தொரு குழந்தையின்கையால் ஒன்றினையெடுக்க, 'ஏற்றுக்கொள்க'
என்றேவந்திட, மகிழ்வுடன்ஷாமா வேட்டியைவாங்கிட பிரச்சினைதீர்ந்தது!

ஞானியர்கூற்றினை மதித்திடவேண்டும் என்னும்கருத்தே இக்கதையுரைக்கும்.
குருவின்மீது நம்பிக்கைகொண்டு அவரதுமொழியை மதித்திடவேண்டும்.

நம்நலனறியும் பாபாயிதனைக் குறித்துச்சொன்னதை ஆழப்பதிப்போம்:
'ஞானியர்பலரும் இவ்வுலகிருப்பினும் குருவேநமக்குத் தந்தையாவார்.

குருவின்மொழிகளை மறந்துவிடாமல் முழுமனதுடனே அவரைநேசி.
பயபக்தியுடன் அவரைவணங்கிச் சரணமடைந்தால், ஆதவன்முன்னே

பனிமறைவதுபோல் உங்களின்முன்னே நெடிதாய்நீளும் உலகவாழ்வெனும்
கடலும்மறைந்து பேரானந்தப் பேரொளிதெரியும் அற்புதம்காண்பீர்!'

'மரப்பலகை - பாபாவின் படுக்கைக்கானது; பகத்திபுடையதல்ல!' :

ஆரம்பநாட்களில் நாலுமுழநீளம் ஒருமுழுஅகலமும் உள்ளதோர்பலகையின்
நான்குமூலையும் அகல்விளக்கெரிய அதன்மீதுபடுத்து பாபாஉறங்கினார்.

இலம்பகம்பத்தில் கூறியவண்ணம் பிறிதொருநாளில் பாபாஅதனைத்
துண்டுதுண்டுகளாய் உடைத்தெறிந்தார். பலகையின்பெருமையை [2440]

காகாசாஹேப் தீக்ஷித்திடத்தில் ஒருமுறையுரைத்திட வேறோர்பலகையை
மசூதியில்மாட்டித் தொங்கவிடுவதாய் தீக்ஷித்கூறிட, ‘மஹால்ஸாபதியைக்

கீழேவிட்டுவிட்டுத் தான்மட்டும்மேலே படுத்துறங்கிட விரும்பவில்லை’
என்றேபாபா உரைத்திடகாகா மஹால்ஸாபதிக்கென வேறோர்பலகையை

ஏற்பாடுசெய்வதாய் சொன்னதும்பாபா, 'எங்ஙனமவனும் பலகையில்படுத்து
உறங்கிடமுடியும்? பலகையிலுறங்கிட நல்லபண்புகளும் அகலவிழித்திருக்கும்

நிலையினிலுள்ளவன் ஒருவன்மட்டுமே தூங்கிடவியலும்! உறங்கிடும்போது
என்நெஞ்சினில்கையை வைத்துக்கொண்டு நாமஸ்மரணம் கேட்டிடும்படியும்,

தூங்கினாலென்னை எழுப்பும்படியும் சொன்னாலவனால் முடிந்திடவில்லை!
தூக்கமயக்கத்தில் அவனதுகையொரு பாறையைப்போல கனப்பதையுணர்ந்து,

'ஓ!பகத்! எனநான்கூவிட அசைந்துவிழிக்கிறான்! தரையினில்கூடச்
சரியாயமர்ந்திட முடியாதவனும், தூங்கவொண்ணாமல் தடுமாறுபவனும்,

நிலையாயில்லாது, தூக்கத்திற்கு அடிமையானவன் உயரப்பலகையில்
எவ்விதமவனால் தூங்கிடவியலும்?' என்றேஸாயியும் பதில்கூறினார்.

நம்முடையதெதுவோ, நன்மையோதீமையோ அதுவேநம்மிடம் இருந்திடக்கூடும்.
மற்றவனுடையது அவனவனிடமே இருந்திடுமென்றும் பாபாகூறுவார்.. [2448]

ஸ்ரீஸாயியைப் பணிக! அனைவர்க்கும் சாந்தி நிலவட்டும்!
[நீ யுணர்த்த உணர்ந்தே சொல்வது அல்லால், என்னறிவால் சொல்ல வல்லேன் அன்றே!]
(To be continued)

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.