Friday, May 30, 2014

Sai Charita - 48


"ஸ்ரீ ஸாயி ஸத்சரிதம்."  

 [மராத்தி மூலம்: ஸ்ரீ கோவிந்த்ராவ் ரகுநாத் தாபோல்கர்]
[தமிழ் மூலம்: ஸ்ரீ சொக்கலிங்கம் சுப்பிரமணியன்.]


(Converted into Two line  Tamil verse  by : Dr. Sankarkumar, USA)

இலம்பகம் – 48


1. சேவடே, 2. ஸபட்ணேகர் ஆகியோரின் கதைகள்.

முன்னுரை:

ஸமர்த்தஸாயிபாபா குருவா,ஸத்குருவா எனுமோர்கேள்விக்கு விடையாய்ஹேமத்பந்த்
ஸத்குருலட்சண அடையாளங்களைப் பின்வருமாறு மறுமொழிகூறுவார்:

வேதவேதாந்தம் ஆறையும்பிறர்க்குக் கற்பிப்பவரோ, மூச்சடக்கம்புரிபவரோ,
முத்திரைச்சின்னம் தரிப்பவரோ, பிரம்மம்குறித்து இன்சொல்மொழிபவரோ,

மந்திரோபதேசம்தந்து, அவற்றின்பலனைக் காட்டமுடியாதவரோ, ஞானவிளக்கம்
திறம்படவுரைப்பினும், சொந்தஅனுபவமோ, ஆன்மவுணர்வோ இல்லாரெவரோ

இவர்களெல்லாரும் ஸத்குருவாகார். அருளுரைமூலமாய் இகபரவின்பச்
சுவைகளின்மீது வெறுப்பையெழுப்பி, ஆன்மவுணர்வினில் திளைக்கசெய்பவரும்,

அவற்றினனுபவத் தேர்ச்சிபெற்றவரும் ஸத்குருவெனவோர்த் தகுதியும்பெறுவார்.
அடியவரிடத்தில் எவ்விதச்சேவையும் இலாபமும்வேண்டாது, உயர்ந்தவர்தாழ்ந்தவர் [2530]

என்னும்பேதம் சற்றும்கொள்ளாது சமமாய்க்கருதும் பெருநிலையாளரேஸத்குரு.
அமைதியினுறைவிடம்; கர்வமற்றவர்; வறியனும்செல்வனும் அவர்க்குஒன்றே!

முந்தையப்பிறவியின் நற்பயனாலே பாபாஅருளைப் பெற்றதாயெண்ணினார்.
எந்தப்பொருளையுமவர் சேர்த்ததுமில்லை; குடும்பமுமில்லை; நண்பருமில்லை;

வீடுவாசலோ எதுவுமேயில்லை; பதினெண்வயதுமுதல் தனியேவாழ்ந்தார்;
அசாதரணமான மனக்கட்டுப்பாடும், பயமின்மையும் கொண்டுதிகழ்ந்தார்;

ஆன்மவுணர்விலே மூழ்கியேயிருந்தார்; அடியார்விருப்பப் படியேநடந்தார்;
சரீரவுருவில் அளித்ததையெல்லாம் சமாதிக்குப்பின்னும் இன்றுமளிக்கிறார்.

பக்தி,நம்பிக்கை எனும்தீபத்தில் அன்பெனும்திரியை ஏற்றிடவங்கே
ஞானஜ்ஜோதி சுடர்விட்டெரியும். அன்பிலாஞானம் வறண்டஓடையே.!

அன்பின்றியெதுவும் ஆறுதல்தாரா. தடையிலாஅன்பராய் மாறிடல்வேண்டும்.
அன்புகொண்டிடில் அனைத்தின்பமும் நாடியேசேரும். விலையிலாததன்பு!

உண்மையார்வமும், ஏக்கமுமிருந்திட கடவுளவ்விடம் தாமேநிறைவார்.
விடுதலைநாடுவோர் அன்பைக்கொண்டிட, அதுவேவழியாய் அவ்விடம்சேர்க்கும்.

தூயமனத்துடனோ, கள்ளத்துடனோ ஞானியர்காலைப் பிடித்திடுமொருவன்
எவ்விதம்முடிவில் காப்பாற்றப்படுவான் எனுமிருகதைகளை இனிநாம்காண்போம்!

திரு. சேவடே ::

அக்கல்கோட்டில் வாழ்ந்த'ஸபட்ணேகர்' வழக்கறிஞராகப் படித்துவருகையில்
அவருடன்படித்த 'சேவடே'என்பவர் பிறரைக்காட்டிலும் பரீட்சையெழுதத்

தயாரற்றநிலையில் இருப்பதையுணர்ந்து அவரைமற்றவர் கேலிசெய்தபோது,
ஸாயியினருளால் வெற்றிநிச்சயம் எனச்சொன்னதைக் கேட்ட'ஸபட்ணேகர்' [2540]

ஆச்சரியமுற்று ஸாயியைப்பற்றிய விவரம்வினவிட, ஷீர்டிவாழும்
மஹானைப்பற்றி 'ஒப்புயர்வற்ற ஸாயியைக்காண்பது முந்தையபிறப்பின்

நற்பயனாலே மட்டுமேவிளையும். அவரைநம்பிட வெற்றியும்நிச்சயம்.
அவர்மொழிந்திடும் அனைத்துமேசத்தியம்! தேறிவிடுவேன் என்றவர்சொன்னது

நிச்சயம்பலிக்கும்! அவரதுகருணையால் தேர்ச்சியும்பெறுவேன்' என'சேவடே'கூற,
அவரையும்ஸாயியையும் ஸபட்ணேகரும் ஏளனம்செய்து சிரிக்கலானார்.

ஸபட்ணேகர் ::

இதற்குப்பின்னர் பரீட்சையில்தேறி அக்கல்கோட்டில் ஸபட்ணேகர்
வழக்கறிஞராய் தொழில்செய்கையில், ஆயிரத்தொள்ளா யிரப்பதின்மூன்றில்[1913]

அவரதுஒரேமகன் தொண்டவியாதியால் மாண்டதைக்கண்டு உள்ளம்நொந்து
அமைதியைநாடி பண்டரீபுரம், கங்காபூரெனும் தலங்களில்திரிந்தும்,

வேதாந்தம்கற்றும் பயனேதும்தாராமல், முந்தையநண்பர் 'சேவடே'கூறிய
மொழிகளைநினைந்து ஷீர்டிசென்று ஸாயியைக்கண்டிட எண்ணம்கொண்டார்.

தம்பியுடன்சென்று தொலைவிலிருந்தே ஸாயியைக்கண்டதும் மகிழ்ச்சியடைந்தார்.
அருகேசென்று தேங்காயொன்றைப் பணிவுடன்வைத்து வணக்கம்செய்ததும்

'போ வெளியே!' எனுமொரு கூச்சலால் பாபாவிரட்டிட, குனிந்தத்தலையுடன்
பின்னாலமர்ந்தார். 'பாலா சிம்பி' எனுமொருஅன்பரைக்கண்டு உதவியைவேண்டிட,

இருவருமாக ஸாயியின்படங்களை வாங்கிக்கொண்டு மசூதிசென்று, பாலாசிம்பி
அவற்றிலொன்றை பாபாகைகளில் கொடுத்திவர்யாரெனக் கேட்டதும்பாபா,

ஸபட்ணேகரைச் சுட்டிக்காட்டி, ‘இந்தப்படமவர் காதலன்ஃபோட்டோ'
எனச்சொல்லிச்சிரித்தார்! அனைவரும்கேட்டுச் சிரித்திடும்வேளையில் [2550]

பாலாகாட்டிய சமிக்ஞையினாலே ஸபட்ணேகரும் அருகில்வந்ததும்
மீண்டுமந்தக் கூச்சலையெழுப்பி 'போவெளியே!' எனத்துரத்தினார்.

செய்வதறியா ஸபட்ணேகரும் தொலைவிலமர்ந்து பிரார்த்தனைசெய்தும்
முடிவாயவரும் சென்றிடவேண்டும் என்னுமாணையால் இல்லம்திரும்பினார்.

திருமதி. ஸபட்ணேகர் ::

ஓராண்டுசென்றும் அமைதியைவேண்டி கங்காபூர்சென்றும், அமைதிபெறாமல்
ஓய்வுக்காக மதேகாங்வ்சென்று முடிவாய்க்'காசி' சென்றிடநினைத்தார்.

புறப்படஇருதினம் இருக்கும்வேளையில் அவரதுமனைவி கனவொன்றுகண்டாள்.
நீரெடுக்கமண்பானையுடன் கிணற்றருகேசெல்லுகையில் தலையிற்துண்டுகட்டி

வேப்பமரத்தடியில் அமர்ந்திருந்தபக்கிரி, ஆதரவாய்த்தானே நீர்நிரப்பித்தருவதாகச்
சொன்னதைக்கேட்டுப் பயமுற்றுக்காலியான பானையுடன்திரும்பிவிட்டாள்.

அந்நேரம்விழிப்புற்றுத் தன்கண்டகனவுபற்றிக் கணவனிடமவர்கூற, நல்லதோர்சகுனமாய்
அதையவருமேற்றுக்கொண்டு, அப்போதேஷீர்டிக்கு இருவருமாய் விரைந்தனரே!

லெண்டித்தோட்டம் சென்றுதிரும்பிய பாபாவரும்வரையில் மசூதியிற்காத்திருந்து
பாபாவின்காலடியில் பெண்மணியும்வணங்கியதில், பாபாமிகமகிழ்ந்து கதையொன்றுகூறலானார்.

'புயமிடுப்புஅடிவயிறு அனைத்திலும்வலிமிகுந்து அதற்கெனவேமருந்துண்டும் குறையாதநிலையினிலே
இப்போதுஅவ்வலியும் போய்மறைந்தமாயமென்ன?' தன்கதையை அப்படியேபாபாவும்

கூறுவதைக்கண்டவளும் மகிழ்வடைந்தாள். ஸபட்ணேகர் முறைவரவே
அவர்சென்று அடிபணிய மீண்டுமந்தப்'போவெளியே' வந்துமவர்தளராமல்

பாபாவின்பாதத்தில் தன்தலையை வைத்தவுடன்பாபாவும் தம்கையாலாசீர்வதித்தார்.
ஸபட்ணேகர்கால்பிடிக்க ஆடுமேய்க்கும் பெண்ணொருத்தி இடுப்பைப்பிடித்துவிட, [2560]

ஸபட்ணேகர்வாழ்வினில் நிகழ்ந்ததையே கதைபோல பாபாசொன்னார்.
அனைத்துமறிந்தவர் ஸாயிநாதரென்கின்ற உண்மையைப்புரிந்தவர் பாபாவைப்பார்த்தபோது,

ஆடுமேய்க்கும் பெண்ணிடத்தில் 'இவர்மகனைக் கொன்றதாக என்மீதுபழிசொல்லி
இந்தநபர்திட்டுகிறார். ஊர்மக்கள்குழந்தைகளை யானோகொல்கின்றேன்? இங்குவந்து அழுகின்றார்.

இவர்க்கொன்று சொல்கின்றேன். இப்போதேஅச்சிசுவை இவர்மனைவிகர்ப்பத்தில்
யானிங்குவைக்கின்றேன். தொன்மையானயிப்பாதம் கவலையெல்லாம் போக்கிவிடும்.

நம்பிக்கைநீகொண்டால் இலட்சியமுமீடேறும்.' எனச்சொல்லி ஸாயிதேற்றினார்.
மகிழ்வுடனடிபணிந்து, தினந்தோறும்தரிசித்துப் பிரசாதமும் பெற்றுவந்தார்.

கூட்டமானமசூதியில் தலையோடுதலைமோத, ஸபட்ணேகர் வணங்குகையில்,
'பணிவோடுநீசெய்யும் ஒருவணக்கம்போதுமென' பாபாஅருள்செய்தார். சாவடிஊர்வலத்தைக்

கண்ணாரக் கண்டபின்னர் மறுநாளில்கிளம்புகையில், மனதுக்குள் எண்ணியவண்ணமே
மேலுமொருரூபாயை தக்ஷிணையாய் பாபாகேட்க, மகிழ்வுடன் கொடுத்தப்போது,

தேங்காயொன்றை அவர்க்களித்து 'மனைவியின்முந்தானையில் போட்டுவிட்டு
மகிழ்வுடனே நீசெல்லு!' எனச்சொன்னதும், 'எளியவராமெங்களுக்கு நின்திருப்பாதமே

ஒரேபுகல்! பணிகின்றயெங்களையே எப்போதும்காத்திடுவீர்!கனவிலும்நனவிலும்
எங்களைவருத்திடும் கவலயைத் தீர்த்தருள்க' ' எனவேண்டிக்கிளம்பினர்.

முரளீதர் எனும்மகனும் அதன்பின்னர் பாஸ்கர்,தினகர் எனமேலும்இருமகவும்
அவர்க்குப்பிறந்து, பாபாவின்மொழியனைத்தும் மெய்யெனவே யுணர்த்தியன! [2569]

ஸ்ரீஸாயியைப் பணிக! அனைவர்க்கும் சாந்தி நிலவட்டும்!
[நீ யுணர்த்த உணர்ந்தே சொல்வது அல்லால், என்னறிவால் சொல்ல வல்லேன் அன்றே!]
(To be continued )

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.