Friday, May 22, 2015

Shirdi Sai Baba's Grace-Experience Of Sai Devotees - Part : 63

ஷீர்டி ஸாயிபாபாவின் 
பெருங்கருணை 
 -------

  ( Translated into Tamil   by : Dr. Sankarkumar, USA)

ஸாயிராம்.
அனைவருக்கும் இந்த‌ வியாழக்கிழமை அஷ்டமி இனிமையாகவும், பாபாவின் நாளாகவும் அமைய வாழ்த்துகள்.
துர்கா மாதாவின் அருளால் உங்கள் அனைவருக்கும் நிறைவான ஆனந்தமும், செல்வாக்கும் கிடைக்கட்டும்.
த‌ம‌து பெயர்களை வெளியிட விரும்பாத சிலரது வாழ்வில் பாபாவின் விசேஷ ஆசிகள் விளைவித்த நிகழ்வுகளை இங்கே அளிக்கிறேன்.
ஜெய் ஸாயிராம்.
மனிஷா


அன்புள்ள மனிஷா,
பாபாவின் அற்புதங்களைத் தெரிவிக்கும் இந்தப் பகுதியின் மூலம் என் வாழ்வில் நிகழ்ந்த சில அனுபவங்களை முதன்முறையாக இங்கே அளிக்கிறேன்.
 
அனுபவம் 1 :

வட இந்தியப் பெண்ணான நானும், தென்னிந்தியரான என் கணவரும் காதல் திருமணம் செய்ய எண்ணியபோது பலவிதக் குழப்படிகள் நேர்ந்தன. எனது உறவினர்களில் பலர் வராமலௌம், வந்த ஒரு சிலரும் தென்னிந்தியா சுற்றுலா எண்னத்தில் வந்ததாலும், பாபாவை எனக்குத் துணையாக இருக்க வேண்டிக்கொண்டேன்.

ர‌யிலில் செல்கையில் வ‌ண்டி ஒரு நிலைய‌த்தில் நின்ற‌து. அப்போது நிக‌ழ்ந்த‌ சில‌ வாக்குவாத‌ங்க‌ளால், ஒரு ச‌ம‌ய‌த்தில் க‌ல்யாண‌த்தை நிறுத்திவிட்டுத் திரும்பிவிட‌லாமா என‌க்கூட‌த் தோன்றிய‌து. பாபாவை ம‌ன‌மார‌ வேண்டினேன். வ‌ண்டி கிள‌ம்பும் நேர‌ம் வ‌ந்த‌து ர‌யிலில் ஏற‌ச் செல்கையில், பாபா ப‌ட‌ம் தாங்கிய‌ ஒரு ப‌த்திரிகையைப் பார்த்து வாங்கினேன். என் அதிர்ஷ்ட‌ம், அத‌னுட‌ன் கூட‌ இல‌வ‌ச‌மாக‌ பாபா டால‌ர் ப‌தித்த‌ ஒரு அழ‌கிய‌ செயினும் கிடைத்த‌து. இது ஒரு சாதார‌ண‌ நிக‌ழ்வாக‌த் தோன்றினாலும், அப்போதிருந்த‌ அந்த‌ நேர‌த்தில் இது ஒரு அற்புத‌மாக‌வே என‌க்குத் தோன்றிய‌து.

அத‌ன் பிற‌கு என் வாழ்க்கையில் என் க‌ண‌வ‌ர் வீட்டாரால் ப‌ல‌ துன்ப‌ங்க‌ள் நேர‌, நான் மன அழுத்தத்திற்கு உள்ளாகி, ஒரு சமயம் பாபாவையே திட்ட‌வும் செய்தேன். ஆனால் இந்த‌ நேர‌த்தில் என் க‌ண‌வ‌ர் ஒரு தூணைப் போல‌ என்னைத் தாங்கினார். ஏழ‌ரை ஆண்டுக‌ளுக்குப் பிற‌கு இப்போது இது போன்ற‌ ஒரு க‌ண‌வ‌ர் என‌க்குக் கிடைத்த‌து பாபாவின் அருளாசியால்தான் என‌ உண‌ர்கிறேன். என‌க்கு நேர்ந்த‌ துய‌ர‌ங்க‌ளால் பாபா என‌க்கு உத‌வ‌வில்லை என‌ நினைக்க‌வும் செய்தேன். ஆனால் நாட்க்ள் செல்ல‌ச் செல்ல‌, நிக‌ழ்ப‌வை அனைத்தும் ந‌ன்மைக்கே என‌ பாபா புரிய‌ வைத்தார்.


அனுப‌வ‌ம் - 2:

2007-ல் திரும‌ண‌ம் ஆன‌தும், என் க‌ண‌வ‌ர் உட‌னே ம‌லேஷியா சென்றுவிட‌, மாமியார் கொடுமைக்கு உள்ளானேன். என‌க்குத் துணையாக‌ வ‌ந்து த‌ங்க‌க்கூட‌ விரும்ப‌வில்லை அவ‌ர்.

நான் வ‌சித்த‌ இட‌ம் அவ்வ‌ள‌வு பாதுகாப்பான‌தாக‌ இல்லாத‌தால், ந‌ண்ப‌ர்க‌ள் ஆலோச‌னையின்ப‌டி, ஒரு வேலைக்காரியைத் துணைக்கு வைத்துக் கொண்டேன். இர‌வு என்னுட‌ன் த‌ங்கிவிட்டு காலை 6 ம‌ணிக்கு த‌ன் வீட்டுக்குச் சென்றுவிடுவாள்.

ஒருநாள் காலை 5 மணிக்கு அலறி அடித்து எழுந்த அவள் இனி இரவு தங்க வரப்போவதில்லை எனச் சொன்னாள். காரணத்தைக் கேட்டபோது, அவளது கனவில் ஒரு வயதானவர் வந்து அவளுடைய மார்பின் மேல் உட்கார்ந்து அவள் செய்த தீய குணங்களுக்காக அவளைக் கடிந்து கொண்டதாகச் சொன்னாள்.

இன்னும் பிரிக்காத சில சாமான்களைப் பிரித்தபோது, அதிலிருந்த பாபா படத்தையும் சில புஜைப் பொருட்களையும் பூஜையறையில் வைத்தேன். மறுநாள் வந்த வேலைக்காரி, கனவில் வந்து ' என்ன தைரியம் இருந்தால் இந்த வீட்டிலிருந்து சாமான்களைத் திருடிக்கொண்டு போவாய் நீ? அடுத்த முறை இப்படிச் செய்தால், உன்னைத் தண்டிப்பேன்' எனக் கடிந்தவர் அந்தப் படத்தில் இருக்கும் கிழவர்தான் எனக் கூறி, தான் செய்த தவற்றையும் ஒப்புக் கொண்டாள். 


நான் அவரை வேண்டாதபோதும், 
அவர் என்னைக் கவனித்துக் கொண்டார்.
ஸாயிபாபாவுக்கு வெற்றி உண்டாகட்டும்.

அன்புள்ள மனிஷாஜி. 
ஸாயிராம். எனது முந்தைய அனுபவங்களை ஏற்கெனவே இதில் நீங்கள் 6/9/2012 அன்று பிரசுரித்துள்ளீர்கள். அதில் எனது வைட்டமின்- டி குறைபாடினால் எனது தசை வலிமை குறைந்தது பற்றியும், அதனால் அதிகம் நிற்கவோ, நடக்கவோ முடியாத நிலை குறித்தும் எழுதியிருந்தேன். பாபாவின் அருளால் இது குண‌மான‌ பின்பே மீண்டும் எழுதுவேன் என‌வும் சொல்லியிருந்தேன்.

கேள்வி உன‌து; ப‌தில் ஸாயியுடைய‌து எனும் த‌ள‌த்தின் மூல‌ம் 'உன‌து நோய் முற்றிலுமாக‌க் குண‌மாகும்' என‌ வ‌ந்திருந்த‌து.

இப்போது நான் 75-80% குண‌மாகி, முழு குண‌ம் அடைவேன் எனும் நிலையில் இருக்கிறேன். இங்கிலாந்தில் நாங்க‌ள் குடியிருக்கும் வீட்டு வாடகை பாதிக்கும் குறைவாக பாபாவின் அருளால் கிடைத்தபடியால், ஓரளவு வசதியாக வாழ முடிந்தது. இதற்கிடையில் எனது தாயின் மறைவு இந்தியாவில் நிகழ்ந்தது என்னை மிகவும் பாதித்தது.

தனது கடைசி காலத்தில் என்னுடன் பேசியபோது பாபாவின் 11 உறுதிமொழிகளை படித்துக் காண்பித்தார். இதற்கு ஒரு மாதத்திற்கு முன் என் கனவில் வந்த ஒரு யோகி 'விரைவில் கெட்ட நாட்கள் உனக்கு சம்பவிக்கும்' எனச் சொல்லியிருந்தார்.

என் தாய் ஒரு மிகச் சிறந்த மனிதரும் கூட! ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியை ஆன‌ அவர் கடவுள் நம்பிக்கை மிகுந்தவரும் கூட. கொடுக்கும் குணம், பெரியோரை மதிப்பது, போன்ற நல்ல குணங்களை உடையவர் அவர். 71 வயதிலும் அழகிய தோற்றம் கொண்டவர். இறப்பதற்குச் சில தினங்களுக்கு முன்னர் தனது குடும்பத்தார் அனைவரையும் சந்தித்தார். தன் கணவருக்கு முன் தன் மரணம் நிகழும் என உறுதியாக நம்பினார்.

ஜூன் 26-ம் தேதி காலை எனது சகோதரிக்கு 'ஸாயி விரதம்' நூலைக் கொடுத்துவிட்டு, என் தந்தையுடன் காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். நன்றாகப் பேசிக் கொண்டிருந்தவர் திடீரென மூச்சுத் திணறல் எடுத்து என் தந்தையின் மடியில் சரிந்து வீழ்ந்து உயிரை விட்டார். பாபாவுடன் அவர் சேர்ந்துவிட்டார் எனும் ஒரு நினைப்பே ஆறுதல் தருகிறது.

தேவையான அமைதியை அளித்து, அவரை நன்றாகப் பார்த்துக் கொள்ளும்படி பாபாவை வேண்டிக் கொள்கிறேன். பாபா விரும்பினால், மேலும் சில அனுபவங்களை இனி வருங்காலத்தில் பகிர்ந்து கொள்வேன். 

ஸாயிதாஸி ஓம் ஸாயிராம்! .

ஸாயி ஸத்சரிதம் படித்தால், அதில் நிகழ்ந்தது போலவே நம் வாழ்விலும் நடக்கும் எனச் சொல்வார்கள். எனக்கும் அது போலவே நிகழ்ந்தது.

சில மாதங்களுக்கு முன் ஒரு கருத்தரங்கில் கலந்துகொள்ள விஜயவாடா சென்றிருந்தேன். செல்லும் வழியில் எங்காவது பாபா படம் தெரிகிறதா எனப் பார்ப்பது என் வழக்கம். நான் தங்கியிருந்த விடுதிக்கு அருகே பல கடைகளில் அவரது படத்தைக் கண்டு மகிழ்ந்தேன். விடுதிக்கு அருகிலேயே ஒரு பாபா கோவில் இருப்பதாக அறிந்தேன். நானும் எனது தோழியுமாக ஒரு நாள் மாலை அங்கு செல்ல முடிவுசெய்தோம்.

என்னுடன் வந்த மற்றவர்கள் வேறொரு கோவிலுக்குச் செல்ல எண்ணினர். அவர்களை நான் வற்புறுத்தாமல் விட்டுவிட்டேன். ஆனால், மாலை நேரத்தில் அவர்கள் எண்ணிய கோவிலுக்குச் செல்ல ஒரு ஆட்டோவும் கிடைக்காததால், அவர்களும் வேறு வழியின்றி எங்களுடன் வரச் சம்மதித்தனர். பாபாவின் லீலையை எண்ணி நானும் எனது தோழியும் சிரித்துக் கொண்டோம்.

கோவிலுக்குள் சென்றதும் பாபாவைப் பார்த்து, 'எங்கிருந்தோ வந்த எங்களை இங்கே உட்கார்ந்துகொண்டு ஒரு குருவியின் காலில் நூல் கட்டி இழுப்பதுபோல என்னை இழுத்தீர்களா, பாபா? எங்களைக் காண நீங்கள் முடிவு செய்து விட்டீர்கள்தானே?' என எண்னினேன். அப்போது என் காலில் ஏதோ நூல் ஒன்று தட்டுப்படுவதாக உணர்ந்தேன். கோவிலின் வெளியிலிருந்து ஏதோ ஒரு நூல் என் கால் கட்டைவிரலில் மாட்டிக்கொண்டு உள் வரை வந்திருக்கிறது!

நிஜமாகவே ஒரு நூலைக் கட்டி இழுத்திருக்கிறாரே என ஆச்சரியம் அடைந்தேன். அதே சமயம் பூஜாரி வந்து என் கையில் உதியை அளித்தார். அது எனக்கு அவர் ஆம் எனச் சொல்வது போன்ற பரவசத்தைத் தந்தது.

கூட வந்திருந்த என் தோழியுடன் இந்த லீலையைப் பகிர்ந்துகொள்ள, அவள் முகத்திலும் மகிழ்ச்சி பரவியது. அனுபவிப்பவர்க்கு மட்டுமல்லாது, கேட்பவர்க்கும் அதே மகிழ்ச்சியை பாபா அளிக்கிறார் எனப் புரிந்தது. இதைப் படிக்கும் உங்களுக்கும் அதுபோலவே இருக்குமென எண்ணுகிறேன்.
ஜெய் ஸாயிராம்.
(Uploaded by : Santhipriya)   

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.