Friday, May 8, 2015

Shirdi Sai Baba's Grace-Experience Of Sai Devotees -Part 61

ஷீர்டி ஸாயிபாபாவின் 
பெருங்கருணை 
 -------
 ஸாயி அடியார்களின் 
அனுபவங்கள் - பகுதி : 61


 ( Translated into Tamil   by : Dr. Sankarkumar, USA)

ஸாயிராம்.
அனைவருக்கும் இந்த‌ வியாழக்கிழமை இனிமையாகவும், பாபாவின் நாளாகவும் அமைய வாழ்த்துகள்.
த‌ம‌து அன்பான‌ அணைக்கும் க‌ர‌ங்க‌ளால் அடியார்க‌ளைக் காக்கும் பாபாவின் அற்புத‌ லீலைக‌ளில் சில‌வற்றை இங்கே அளிக்கிறேன்.
ஜெய் ஸாயிராம்.
மனிஷா

1. 'வடிவமைத்து என்னைச் செதுக்கினார் ஸாயி!'

இறைவனின் இருப்பை உணர்த்தும் சாட்சியாக நான் இருக்கிறேன் என அனைத்து நாத்திகர்களுக்கும் அறைகூவிச் சொல்கிறேன்.
என்னை அவரிடம் முழுமையாக ஒப்புவித்தேன். அவர் என்னைத் திருத்தினார்.

திருத்த முடியாத புகைப் பழக்கம் கொண்டவன்

இடைவிடாது புகைபிடிக்கும் வழக்கம் கொண்டவன் நான். அதிலிருந்து மீள ஒருபோதும் நினைத்ததும் இல்லை. எனது நலம் விரும்பிகள் அனைவரும், வேண்டி, கெஞ்சி, எச்சரித்து, கடிந்து கொண்டபோதும் நான் வருந்தவோ, அல்லது என்னை மாற்றிக் கொள்ளவோ இல்லை. எனது தகுதி பற்றி எனக்குத் தெரிந்திருந்ததால், ஒரு புகை பிடிப்பவனாகவே என் வாழ்நாள் முடியும் என எண்ணினேன். இறந்த பின்னர், எப்படி ஒரு சுருட்டைப் பெறுவது என்பதே என் நினைப்பாக இருந்தது.

பாபாவிடம் வேண்டியது:
நான் என்றாவது திருந்துவேன் என என் பெற்றோர் நம்பியதே எனது வருத்தம்! எனவே நான் பாபாவிடம், " இதனால் வரக்கூடிய தீங்குகள் எனக்கு வரும் வரையிலும் என்னைப் புகை பிடிக்க அனுமதியுங்கள். நான் எப்போது நிறுத்த வேண்டும் என்பது தங்களுக்கு நன்றாகத் தெரியும். அந்த நேரத்தில் இந்தப் பழக்கத்தை நீங்களே நிறுத்துங்கள்' என வேண்டிக் கொண்டேன்.


காரணி தயாரானது - முதல் சோதனை!

பாபா என்னை நன்கறிவார். என்னை நேசிப்போரின் பேச்சை அலட்சியம் செய்துவிட்டு, எனது ஆரோக்கியத்தைக் குன்றச் செய்யும் நிலையையும் அலட்சியம் செய்தேன். ஒருநாள் எனது நண்பர்களுடன் கடவுள் இருக்கிறாரா இல்லையா எனும் வழக்கமான விவாதம் நிகழ்ந்தது. 'பாபாவை நீ நம்புவது உண்மையானால், , நீ அவரது அடியவன் என்பது உண்மையானால், எங்கே உனது இந்த புகை பிடிக்கும் பழக்கத்தை அவரால் நிறுத்தச் செய்யச் சொல் பார்க்கலாம்' என ஒருவன் சவால் விட்டான். நானும் அவனிடம், 'ஆம் அவரால் முடியும். அந்த நாளுக்காகத்தான் நானும் காத்திருக்கிறேன்' எனச் சொன்னேன். 'அதெல்லாம் கிடையாது. இதுவே அவரது இருப்பைக் காட்டும் சோதனைச் சவால் என வைத்துக்கொள்' என நண்பன் பதிலுக்குச் சொல்லவே, குழம்பிப்போன நான், என அறைக்குச் சென்று, பாபாவிடம், 'நான் இந்தப் பழக்கத்தை விடுவேன் எனத் தெரியவில்லை. நீங்கள் இதை நிறுத்த விரும்பினால், எனது இருப்பையே இல்லாததாகச் செய்துவிடுங்கள். அப்போது உங்களது பெயரும் காப்பாற்றப்படும்; உங்களையே நம்பி இருக்கும் கோடானு கோடி பக்தர்களும் ஆறுதல் அடைவார்கள்' என வேண்டிக்கொண்டேன்.

அதன்பின், ஒரு 6 நாட்களுக்கு நான் அதைப் பற்றி நினைக்கவேயில்லை. 7-ம் நாளன்று எனது புகைப் பழக்கத்தை கொஞ்சம் மட்டுப் படுத்தலாம் என நினைத்து வழக்கத்தை விடக் குறைவாகவே 8 சுருட்டுகள் மட்டுமே புகைத்தேன்.எனது நண்பன் ஒருவன் இதைப் பார்த்து 'உன்னாலெல்லாம் இயலாது. சும்மா ஆகாசக் கோட்டை கட்டாதே' எனக் கேலி செய்தான்.உடனே ஏதோ ஒரு வேகத்தில், 'இதோ இதுவே எனது கடைசி இழுப்பு'. இதற்கு மேல் இனி பாபா செயல்' எனச் சவடால் விட்டேன்.


'அந்த நாள்!'

மறுநாள் தொடங்கியது. வேலையிலேயே ஆழ்ந்திருந்து புகை பிடிக்காமல் இருந்தேன். எப்படிப் போகுமோ எனும் அச்சத்தாலும், பாபாவின் பெயரை இதில் இழுத்திருந்ததாலும் எனது 3 நண்பர்களைத் தவிர இந்த விஷயம் வேறு யாருக்கும் தெரியாது. என்னைக் காணவந்திருந்த என் தாய் [ஆகஸ்ட் 2008]மதியம் மூன்று மணியிலிருந்து 10 நிமிடங்களுக்கு ஒரு முறை என் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார். சற்றுத் தயக்கத்துடன் 'வெளியே எங்கும் போகலியா?' எனவும் கேட்டார். வழக்கமாக ஒரு 5 முறையாவது அந்த நேரத்துக்குள் நான் புகை பிடிப்பதற்காகச் சென்றிருப்பேன். ஆனால் நான் விட்ட சவாலைக்கூட மறந்துபோய், புகை பிடிக்கும் எண்ணமே எனக்கு வரவில்லை. மற்ற எவருக்கும் சொல்லவில்லை என்றபோதும், கொஞ்ச‌ம் கொஞ்சமாக ஏனைய நண்பர்களும் நான் இப்போதெல்லாம் புகை பிடிப்பதில்லை எனப் புரிந்துகொண்டனர்.

அனைத்தும் அறிந்த பாபாவைப் பந்தயம் வைத்து சவால்விட எனக்கு என்ன தகுதி இருக்கிறது?எவ்வளவு பெரிய முட்டாள் நான்! இதெல்லாம் அவரது லீலையே! நேரம் வந்தது.... மற்றது நிகழ்ந்தது ... அவ்வளவே! ஏதேதோ உளறுவதற்கு என்னை மன்னிக்கவும். இப்போது நான் பாபாவையே காண்கிறேன். ஓம் ஸாயிபாபா!


2. 'பாபா என் தாயைக் காப்பாற்றினார்'

என் பெயரை வெளியிட வேண்டாம். இதற்கு முன் சில அனுபவங்களை எழுதியிருக்கிறேன். இப்போது மீண்டும் அவரால் நிகழ்த்தப்பட்ட சில லீலைகளை அவ்வப்போது எழுத நினைக்கிறேன்.

நீரிழிவு நோயால் அவதிப்படும் என் தாய் முறையான‌ உணவுக் கட்டுபாடை மேற்கொள்ளவில்லை. மருத்துவத் துறையில் இருக்கும் அவரது மக்களாகிய நாங்கள் மூவருமே இது பற்றிக் கவலையுற்றிருந்தோம். எங்களது ஆலோசனைகளை அவர் கேட்கவுமில்லை. பாபாவை வேண்டி அவரிடம் முறையிடுவதைத் தவிர வேறு வழி ஒன்றும் எனக்குப் புலப்படவில்லை.

நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு விடுமுறையில் என் தாய்வீடு சென்றேன். மிகவும் நலிவுற்றிருந்தார். எடை குறைந்து, பார்வையும் பழுதாகிப் போனதைக் கவனித்தேன். நிகழ்வதைப் பற்றிய சரியான மனநிலை அறிவும் அவருக்கு இல்லை. அடுத்த வாரத்தில் என்னுடன் கிளம்பி மருத்துவப் பரிசோதனைகளுக்காக வரும்படி வேண்டினேன்.

கிளம்பும் முன், பூஜை அறைக்குச் சென்று, விளக்கேற்றி, பாபா திருவுருவின் ' என் தாயை காப்பாற்றுங்கள், பாபா. அவருக்கு என்ன நோய் எனத் தெரியவில்லை. குடும்ப பிரச்சினைகளாலும் மன அழுத்தத்தில் இருக்கிறார். எல்லாவற்றையும் சரியாக்குக' எனக் கதறி வேண்டினேன்.

என் விடுதிக்குச் சென்ற அன்று மாலை, என் தாயின் உடல்நிலை மோசமாகி, அவர் வலிப்பு வந்து மயங்கிக் கிடக்கிறார் என்னும் செய்தி வந்தது. தாள முடியாத சோகத்துடன், பாபா படத்தைக் கெட்டியாகப் பிடித்தபடி, என் தாய்க்காக வேண்டி அழுதேன்.

அன்றிரவே சென்னை கிளம்பி என் தாயைக் கண்டேன். அடிக்கடி வலிப்பு வந்து படுத்த படுக்கையாகக் கிடக்கும் அவரது நிலை மிகவும் வருத்தமளித்தது. 'சி.டி. ஸ்கேன்' எடுத்த மருத்துவரிடம் விசாரித்தபோது, வலதுபக்க மூளையில் பாதிப்பு இருக்கலாமெனத் தெரிவித்தார்.

மருத்துவ விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாமல், உதியை நீரில் கரைத்து என் தாயைக் குடிக்கச் செய்தேன். பின்னர், இன்னும் சற்று வசதிகள் கூடிய மருத்துவமனைக்கு அவரை மாற்றினேன்.அங்கும் சில சோதனைகள் செய்த பின்னர் வலிப்பு முற்றிலுமாக நின்று போனது. அவர் குணமடைவதாக எனக்குப் புரிந்தது. மெல்ல எழுந்து நடக்கவும் ஆரம்பித்தார். சோதனை முடிவுகள் அனைத்துமே முறையாக இருப்பதாகத் தெரிந்தது. நான்காம் நாள் முதல் நிலைமை சரியாகியது.

பாபாவுக்கு எப்படி நன்றி சொல்வது எனத் தெரியாமல், அங்கேயே கதறி அழுதேன். 'அடியார்களின் அனுபவங்கள்' என்னும் நூலில் கீழ்க்காணும் இரு நிகழ்வுகளைப் படித்திருக்கிறேன். முதல் நிகழ்வில், 'எனது வலது பக்கத் தலை கை, கால்களில் வலியை உணர்கிறேன். ஆனால் அது 2, 3 தினங்களில் சரியாகிப் போகும்' என ஒரு பக்தரிடம் கூறுவார். அந்த அடியார் வீடு சென்றபோது, அவரது தாய்க்குப் பக்கவாத நோய் வந்து, பாபாவின் உதியைக் கொடுத்ததும் சில நாட்களில் சரியாகிப் போனதாம். இரண்டாவது நிகழ்வில், ஷீர்டி சென்ற ஒரு சிறுவன் வலிப்பு நோயால் மயக்கமுற்று வீழ, உதியைக் கொடுத்ததும் சரியாகிப் போனது. 'சற்று நேரத்திற்கு முன் வலிப்பு வந்து மயங்கிக் கிடந்த அந்தச் சிறுவன் தனது கை, கால்களை ஆட்டிக்கொண்டு, மசூதி முன்னால் விளையாடிக்கொண்டிருந்தான்' என அதில் எழுதியிருக்கும்.

மருத்துவ மனையிலிருந்து வீடு திரும்பியதும், எனது குடும்ப மருத்துவரைக் காணச் சென்றிருந்தோம். அவர் வர நேரமானதால், அருகிலிருக்கும் மைலாப்பூர் பாபா கோவிலுக்குச் சென்று தன் கைகளாலேயே ஒரு அழகிய மலர் மாலையை என் தாய் பாபாவுக்கு அணிவித்தார்.
என் தாயைக் குணப்படுத்தி, நடக்க வைத்து, மீண்டும் எனக்கெ தந்தார் பாபா. நடப்பதெல்லாம் அவர் ஆணைப்படியே என இதன் மூலம் எனக்குப் புரிய வைத்தார் பாபா! என் பயத்தைப் போக்கி, என் கைகளைப் பிடித்தபடியே என் கூடவே இருந்தார் பாபா! மிக்க வந்தனம் ஸாயி பாபா!

எதையும் விடாமல் சொல்லவேண்டும் என்பதால் நீளமாகிப் போன இந்த மடலுக்காக என்னை மன்னிக்கவும்.
ஜெய் ஸாயிராம்.


3. 'பாதுகாவலர் ஸாயி!' 

10 ஆண்டுகளுக்கு முன்பே ஸாயியின் ஆசீர்வாதம் கிடைத்த்போதிலும், 5 ஆண்டுகளாகத்தான் நாங்கள் அவர் நிழலில் ஒதுங்கினோம்.2003-ல் நிகழ்ந்த ஒரு சம்பவத்துடன் எனது அனுபவங்களைத் தொடங்குகிறேன்.நல்ல ஆரோக்கியத்துடன் இருந்துவந்த எனது 10 வயது மகள் திடீரென ஒருநாள் மாலை மயங்கி விழுந்தாள். அதன் பின்னர் இது காலை நேரப் பள்ளிக் கூட்டத்தின் போது அடிக்கடி தொடரலாயிற்று.

இதற்கான காரணம் பிடிபடாத நிலையில், ஷீர்டி, ஔரங்காபாத் ஆகிய இடங்களுக்கு விடுமுறையில் செல்ல முடிவெடுத்தோம். ஷீர்டியில் பாபா முன்னர் முறியிட்டு வேண்டியபின்னர் ஔரங்காபாத், அஜந்தா, எல்லோரா, நாஸிக், த்ரயம்பகேச்வர் ஆகிய இடங்களுக்குச் சென்றோம்.

ஷீர்டி விஜயத்துக்குப் பிறகு, இதுவரை என் மகளுக்கு அந்த பாதிப்பு நிகழவேயில்லை. பாபா என் மகளைக் காத்தது போலவே அனைவரையும் காக்கட்டும். வேறு பல நிகழ்வுகளை இதே தலைப்பில் ஒவ்வொன்றாக எழுதுவேன்.

அனைவரும் பாபாவின் அருளை நினைந்து வணங்குவர் என நம்புகிறேன்.

ஓம் ஸாயிராம்.
DB


4. 'பாபாவின் பெருங்கருணை' 

பாபாவின் அடியவன் நான் என்றாலும், எனது பக்தி அவ்வளவு உறுதியாக இல்லாததால், பாபாவின் அன்பு இன்னமும் கிட்டவில்லை என எண்ணுகிறேன். பாபாவின் குழந்தை எனச் சொல்லிக்கொள்ளும் தகுதி எனக்கு இல்லை எனவே எண்ணுவேன். ஆனால், அவரது அன்புக்கும், கருணைக்கும் ஏங்குகிறேன். இன்று நிகழ்ந்த ஒரு நிகழ்வின் மூலம் அவர் எப்போதும் என்னுடனேயே இருக்கிறார் எனப் புரிகிறது!
காலில் அடிபட்ட எனது மகனைப் பரிசோதித்த மருத்துவர், ஒரு சிறு எலும்பு முறிவால் 6 முதல் 8 வாரங்களுக்கு அவனால் விளையாட இயலாது என நேற்று தெரிவித்தார். எக்ஸ்ரே முடிவ்வு சாதகமாக வந்தால், இதைப் பற்றி ஸாயி அடியார்களிடம் எழுதுகிறேன் என பாபாவிடம் வேண்டிக் கொண்டேன். அதே போலவே, இன்று எலும்பு முறிவு ஏதுமில்லை; வெறும் சுளுக்குதான் எனும் செய்தி வந்தது.
அவனுக்கு ஏற்பட்ட வலி, வீக்கத்தைப் பார்த்தபோது, இது வெறும் சுளுக்காக இருக்கும் என நினைக்கவே முடியவில்லை! எல்லாம் பாபாவின் கருணையே!
முழு நம்பிக்கையுடனும், பக்தியுடனும் ஸாயி, ஸாயி, ஸாயி என அழைத்தால், அவர் நிச்சயம் வருவார்; நம்மைக் காப்பாற்றி, நம் துயர் தீர்ப்பார்! வந்தனம் பாபா!

ஜெய் ஸாயிராம்

(Uploaded by : Santhipriya)  

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.