Shirdi Sai Baba's Grace-Experience Of Sai Devotees-Part 58
(Translated into Tamil by Dr. Sankarkumar, USA)
அனைவருக்கும் இனிய பாபா நாள் வாழ்த்துகள்~ ஸாயிராம்.
தம் குழந்தைகளுடன் பாபா ஈடுபடுவது ஒரு அலாதிதான். குணமாக்கி, காப்பாற்றி, ஆசீர்வதிக்கும் அவரது தன்மை மனித மனக்களாலும் உணர இயலாத ஒன்று.
இவற்றைச் சித்தரிக்கும் சில அனுபவங்கள் இன்றையப் பதிவில். ஜெய் ஸாயிராம்.
மனிஷா.
காணும் இடமெல்லாம் பாபா எனக்கு தரிசனம் அளித்தார்!
நான் ஷீர்டி சென்றபோது, பாபா எனக்கு இருமுறை தரிசனம் தந்தார். நமது அடியார்கள் எனக்கு அனுப்பிய அனைத்து வேண்டுதல் கடிதங்களையும் பாபாவின் திருப்பாதங்களில் சமர்ப்பித்து விட்டேன்.
விமான நிலையத்திலேயே என்னைக் கூட்டிச் செல்ல பாபா வந்துவிட்டார்! பாபாவின் திருவுருவப் படத்தை செல்லும் இடமெல்லாம் நான் தேடுவது வழக்கம். ஆனால், அமெரிக்காவில் இதற்கான சந்தர்ப்பம் அதிகமில்லை. என்னைக் கூட்டிச்செல்ல வந்திருந்த என் மாமாவின் வாகனத்தில் ஒரு அழகிய பாபா படம் காட்சியளித்தது. அவரது இல்லத்துக்குச் சென்றவுடன், ஷீர்டி பிரசாதமும், உதியும் கொடுத்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். நான் சென்ற நண்பர்கள், உறவினர்கள் வீட்டிலும் பாபாவின் படம் இருந்து எனக்குக் காட்சி அளித்தது.
ஜூலை 10ந் தேதியன்று, தரிசனமும், காகட ஆரத்தி காணும் அனுமதியும் இருந்தபோதிலும், காலை 10.30 மணிக்கே நாங்கள் ஷீர்டி சென்றடைந்ததால், அவை கிடைக்காமல் வருத்தமுற்றேன். கால்வலி இருந்தபோதிலும், என் தந்தை [மதிய] ஆரத்தியில் முழுக்க முழுக்க நின்று பார்த்தார். பாபாவின் சமாதியைத் தொடமுடியவில்லையே என எனக்கு வருத்தம். ஒரு பூவாவது கிடைக்க வேண்டுமென வேண்டினேன். அதுவும் கிடைக்கவில்லை. ஆனால், சாவடி சென்றதும் அங்கிருந்த அர்ச்சகர் எனக்கு ஒரு பூ கொடுத்து என் பிரார்த்தனையை நிறையச் செய்தார். அங்கே ஒரு நாய் இருந்தது. யார் என்ன கொடுத்தாலும் அது அவற்றைத் தொடவேயில்லை. நான் கொடுத்த பேடாவுக்கும் அதே கதிதான்! ஆனால், பாபாவிடம் நான் வேண்டியதுமே, அது உடனே அந்தப் பேடாவைத் தின்று என்னை மகிழ்ச்சிகொள்ளச் செய்தது.
மறுநாள் மதியம் 12 மணி அளவில், ஷீர்டியிலிருந்து கிளம்பி, த்ரயம்பகேச்வர், சனி மந்திர், மற்றும் ஔரங்காபாத்தில் இருக்கும் ஒரு ஆலயத்துக்கும் செல்லத் திட்டமிட்டிருந்தோம். த்ரயம்பகேச்வரில் தரிசனம் முடிந்ததும், அங்கே சாப்பாடு சரியில்லையென்று என் தந்தை ஷீர்டி திரும்ப முடிவெடுத்தார். இரவு ஆரத்திக்குச் செல்ல இது ஒரு வாய்ப்பாக இருக்குமென நினைத்து, அது பற்றிக் கேட்டேன். அழைத்துச் செல்வதாகச் சொன்னவர், அங்கே போனதும் தூங்க ஆரம்பித்துவிட்டார். ஆனால், சற்று நேரத்தில் விழித்ததும், கூட்டம் அதிகமாக இருக்குமே எனக் கவலைப்பட்டார். 18 ஆண்டுகளுக்குப் பின் நான் இந்தியா வருவதால், அவருக்கு அத்தனை கவலை. நான் வற்புறுத்தியதின் பேரில் அங்கே சென்றபோது, அதிர்ஷ்டவசமாக கூட்டம் குறைவாகவே இருந்தது. அன்று வெள்ளிக்கிழமை. பாபாவின் சமாதியை ஒரு கண்ணாடிக் கூண்டால் மூடியிருந்தனர். அதன் விளிம்பைத் தொட்டு மகிழ்ந்தேன். இப்படி இருமுறை தரிசனம் தந்ததற்கு என் வந்தனங்களைச் சொல்லிக் கொண்டேன். பின்னர் மற்ற கோவில்களுக்கும் சென்று, அங்கேயும் பாபாவைக் கண்டு திரும்பினோம்.
விமான நிலையம் திரும்பும்போது, இரவு நேரமென்பதால், பாபா படத்தை எங்கும் காணவில்லை. ஆயினும் அப்போது எதிரே வந்த ஒரு 'டாக்ஸி'யில் பாபா எனக்கு தரிசனம் தந்து என்னை அனுப்பி வைத்தார்.
வேலை, மற்றும் மணவாழ்வில் எனக்கிருக்கும் பிரச்சினைகள் தீரவேண்டி எனக்காக வேண்டிக் கொள்ளுமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.
ஸாயிபாபா என் பிரர்த்தனையைக் கேட்டார்!
ஒவ்வொரு நாளும் இரவு 10 மணி அளவில் வேலையிலிருந்து வீடு திரும்பியதும், நேராக பாபா உருவச்சிலை அருகில் எனது அலைபேசியை வைத்துவிட்டு, அவரது பாதங்களை அமுக்கிவிட்டு வணங்கிய பின்னரே நான் அமைதி அடைவேன். அன்றும் அதேபோலச் செய்தவுடன், என் அலைபேசியில் செய்தி ஒன்று வந்து குதித்தது. என் நண்பன் ஒருவன் ஏதோ விளையாட்டாக அதை அனுப்பியிருந்தான். 'இன்னும் அழுத்து' எனப் படிப்படியாக பலமுறை அழுத்தச் செய்தபின், 'என் கால்களைப் பிடித்துவிட்டதற்கு மிக்க நன்றி. ரொம்ப வலியாயிருந்தது' எனும் வேடிக்கை வாசகம் அதில் இருந்தது. வேடிக்கையாக இருந்தாலும், நான் பாபாவுக்குச் செய்த செயலுடன் இது பொருந்தி இருந்ததுகண்டு, மிகவும் ஆச்சரியமும், மகிழ்ச்சியும் அடைந்தேன். எனது பாத சேவையை பாபா ஏற்றுக் கொண்டார் என உணர்ந்தேன். இதைப் பகிர்ந்துக் கொள்ள விரும்புகிறேன். ஜெய் ஸாயிராம்.
யாமிருக்கப் பயமேன்?
வடநாட்டைச் சேர்ந்த பெண்ணான நான் ஒரு தென்னிந்தியரைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டேன். திருமணமானதுமே அவர் மலேஷியா சென்றுவிட்டார். எனது மாமியாருடன் ஏற்பட்ட மோதலின் காரணமாக, அவரும் என்னுடன் வந்து தங்க மறுத்துவிட்டார். எனவே நான் தனியே வசிக்கும் சூழ்நிலை ஏற்பட்டு, மிகவும் பயந்துபோனேன். இரவு நேரத்தில் ஒரு பணிப்பெண் என்னுடன் தங்கிவிட்டு அதிகாலை 5.30க்கெல்லாம் சென்று விடுவாள்
ஒருநாள் காலை 5 மணிக்கே எழுந்தவள் பயத்தால் நடுங்கிக் கொண்டிருந்தாள். இனிமேல் இரவு வேளையில் தங்க வரமாட்டேன் எனவும் கூறினாள். என்னவென வற்புறுத்திக் கேட்டதும், யாரோ ஒரு கிழவர் அவளது கனவில் வந்து அவள் செய்யும் தீய செயல்களுக்காக அவளைக் கடிந்து கொண்டார் எனச் சொன்னாள்.
சமீபத்தில்தான் புது வீட்டுக்கு வந்திருந்ததால், பல சாமான்கள் இன்னமும் பிரிக்கப்படாமலேயே இருந்தன. பூஜை சாமான்களைப் பிரித்து, அதிலிருந்த பாபா படத்தை எடுத்து மாட்டினேன். மறுநாள் காலை வேலைக்கு வந்த பணிப்பெண் அந்தப் படத்தைப் பார்த்து அரண்டுவிட்டாள். இது யாரெனக் கேட்டாள். விவரம் அறிந்ததும், தனது கனவில் வந்து மிரட்டிய கிழவர் இவரேதான் எனச் சொல்லிவிட்டு, அவர் சொன்னதை அப்படியே திரும்பச் சொன்னாள்::
" நான் இங்கே இருக்கும்போதே, என்ன தைரியம் இருந்தால், நீ பொருட்களைத் திருடுவாய்? அடுத்த முறை இப்படிச் செய்தால், சும்மா விட மாட்டேன்!"
என் வீட்டுச் சமையலறையிலிருந்து சில பொருட்களை அவ்வப்போது எடுத்துச் செல்வது வழக்கம் என ஒப்புக் கொண்டாள். நான் வேண்டாமலேயே பாபா இவ்விதம் எனக்குத் துணையாக இருந்தார். வந்தனம் ஸாயிபாபா!
நமது அன்பார்ந்த வேண்டுதலை பாபா எப்போதும் கேட்கிறார்!
எனது உறவினர் ஒருவர் கொடுத்த ஸாயி ஸத்சரிதத்தின் மூலம் நான் முதன்முதலாய் பாபாவைப் பற்றி அறிய வந்தேன். அந்த நூலை ஒரே வாரத்தில் படித்து முடித்ததும், பாபா மேல் ஈடுபாடு கொண்டு அவரைப் பற்றிய பல விவரங்களையும் படித்தேன். இப்போது பாபா என்னுடனேயே எப்போதும் இருக்கிறார். அது குறித்த இரு அனுபவங்களை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.
1. எங்கள் பகுதியில் இருந்த ஒரு பிரபலமான பள்ளியில் என் மகனைச் சேர்க்க எண்ணினேன். அதில் இடம் கிடைப்பதென்பது மிகவும் சிரமம் என்பதால், நேர்முகத் தேர்வுக்காக அவனை தயார் செய்தேன். நிறைய விண்ணப்பங்கள் வந்திருந்ததால், அந்த ஆண்டு குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்க நிர்வாகம் முடிவு செய்தது. எல்லாருடைய பெயர்களையும் தனித்தனியே எழுதி, அவற்றை ஒரு கூடையிலிட்டு, தேவையான மாணவர்களைத் தேர்ந்தெடுக்கப் போவதாக அறிவித்தனர். ஒரு குடும்பத்துக்கு ஒரு நபர் மட்டுமே அனுமதி எனவும் அறிவித்தனர்.
பாபாவை மிகவும் வேண்டிக்கொண்டு, அவரை வணங்கிவிட்டு, நான் திரும்பிவரும்வரை, விளக்கு அணையாமல் நெய் ஊற்றிக் கொண்டிருக்க வீட்டில் சொல்லிவிட்டுச் சென்றேன். குலுக்கல் முறையும் தொடங்கியது. எங்களுள் இருந்த யாரோ ஒருவரை அழைத்து ஒரு சீட்டை எடுக்கச் சொன்னார்கள். அப்படி அழைக்கப்பட்ட ஒரு நபர் தன் கையை கூடைக்குள் விட்ட கணத்தில் பாபாவே தன் கையை அதற்குள் விட்டதுபோல் நான் உணர்ந்தேன். அப்படி எடுக்கப்பட்ட முதல் சீட்டைப் பிரித்து அவர் படித்தார். என் மகனின் பெயர்! முதல் சீட்டிலேயே என் மகனுக்கு இடம் கிடைத்ததை அறிந்து அப்படியே உறைந்துபோனேன். அவர் மீண்டும் அந்தப் பெயரைப் படித்ததும், அவசர அவசரமாக எழுந்து நின்றேன். "எப்போதும் நான் உன் கூடவே இருக்கிறேன்" என பாபா காட்டிய இந்தச் செயல் என்னால் மறக்கவே முடியாத ஒன்று!
2. என் கணவருக்கு அடுத்த ஒரு மாநிலத்துக்கு மாற்றலானதால், அங்கே ஒரு நல்ல வீடு பார்த்துக் குடி புகுந்தோம். அருகிலேயே ஒரு பாபா ஆலயமும் அமைந்தது. என் உறவினர்களில் பலரும் அந்த ஊரிலேயே வசித்ததால், மிகவும் வசதியாகப் போயிற்று. என் மகனின் பிறந்த நாளுக்கு இவர்களை எல்லாம் அழைக்க எண்ணினேன். ஆனால், என் கணவர் அதற்கு உடன்படவில்லை.
பிறந்த நாளுக்கு முன் தினம் வியாழக்கிழமை பாபா ஆலயம் சென்று, அவரை முதலில் மானசீகமாக விழாவுக்கு அழைத்துவிட்டு, விழா நல்லபடியாக நான் நினைத்தவாறே அமைய வேண்டுமென வேண்டிக் கொண்டேன். எவராவது அழைத்தால் பாபா கண்டிப்பாக வருவார் என ஸத்சரிதத்தில் படித்திருப்பதால், அப்படியே நம்பினேன்.
என் கணவர் எப்படியோ மனம் மாறி உறவினர்களை அழைக்க ஒப்புக் கொண்டார். அன்று மாலையே அனைவரையும் அழைத்தேன். மறுநாள் காலை என் மகனை ஆசீர்வதிக்க வேண்டி பாபாவுக்கு என் வீட்டிலேயே பூஜை செய்தபின், விழா ஏற்பாட்டில் ஈடுபட்டேன். பாபாவை அழைத்ததை சுத்தமாக மறந்து போனேன்.
அன்று மாலை முதன் முதலாய் வந்தவள் என் தோழி. அவள் அப்போதுதான் ஸாயி விரதத்தைப் பூர்த்தி செய்திருந்தாள். எனவே விரத புத்தகமும், பிரசாதமும் கொண்டு வந்திருந்தாள். அதை வாங்கி பாபா அருகில் வைத்துவிட்டு, விழாவில் மும்முரமானேன். எல்லாம் நல்ல விதமாக முடிந்து, வந்திருந்த அனைவரும் விடைபெற்றுச் சென்றதும், அசதியாய் படுக்கையில் படுத்தவுடன், 'ஏன் பாபா வரவேயில்லை?' என நினைத்தேன். அப்போதுதான், அவர்தான் முதன் முதலாக வந்து ஆசி அளித்தார் எனச் சட்டெனப் புரிந்தது! நாம் மறந்தாலும், அவர் மறப்பதே இல்லை! ஓம் ஸாயிநாதாய நம:
Loading
0 comments:
Post a Comment