Friday, September 7, 2012

Sai Baba's Plan And Miracle-Devotees Experience

ஸாயி பாபாவின் திட்டமும், 


(Translated into Tamil by Sankarkumar)

அன்புடையீர்,
அனைவருக்கும் இனிய பாபா நாள் வாழ்த்து.
தமது அடியாருக்கு முன்னதாகவே ஷீர்டி ஸாயி பாபா தனது திட்டங்களை வகுத்துவிடுகிறார். ஏதோ ஒரு வடிவில் அவர் எப்போதுமே தமது அடியார்களுடனேயே இருக்கிறார். மனித மனம் தனக்குள் என்னதான் திட்டமிட்டாலும், தமது பிள்ளைகளுக்கு எது நல்லதென பாபா அறிந்து, அதனைச் சரியான நேரத்தில் நடத்தியும் வைக்கிறார். இதே போன்ற ஒரு பக்தரின் அனுபவத்தை இங்கே பகிர்கிறேன், ஜெய் ஸாயி ராம்.
மனிஷா 
------------------------------------
'ஓம் ஸாயி ராம்'
அன்புள்ள மனிஷா தீதி,
இது எனது முதலாவது மடல். சற்று நீளமாக இருப்பினும், பாபாவிடம் நான் அளித்த உறுதிமொழிக்கிணங்க, இங்கே இதனை நமது அடியவர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
நான் ஸாயி பாபாவின் தீவிர பக்தை. பாபவே எனக்கு சகலமும்,... மாதா, பிதா, பந்து, சகா என. கடந்த 6 - 7 ஆண்டுகளாக நானும் எனது குடும்பத்தினரும் பாபாவின் நிழலில் இளைப்பாறி, அவரது ஆசிகளில் திளைக்கிறோம்.
இந்க அருமையான தளத்தை எங்களுக்கு அளித்திருப்பதற்கு எனது வந்தனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த சில மாதங்களில், என் வாழ்வில் நிகழ்ந்த அனுபவத்தை பகிர்ந்துகொள்ள வேண்டுமென எண்ணிய சமயத்தில், ராம விஜயம் என்னும் நூலைத் தேடியபோது, இந்த தளத்தைக் கண்டேன். நான் விரும்பும் பாபாவின் தர்ஷன், ஆரத்தி, பஜனைப் பாடல்கள், புத்தகங்கள், அவரது அருள் மொழிகள் என அனைத்துமே இங்கிருப்பதைக் கண்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். எது வேண்டுமென நான் பாபாவை வேண்டினேனோ, அதெல்லாமும் இங்கே கிடைக்கிறது! பாபாவுக்கு எனது வந்தனங்கள்.
2012, மார்ச் மாதம் நிகழ்ந்த ஒரு லீலையை இங்கே சொல்கிறேன்.
பாபாவின் அருளால், கடந்த 14 ஆண்டுகளாக நான் ஒரு மகிழ்ச்சியான மண வாழ்க்கை வாழ்ந்து வருகிறேன். அன்பான கணவன், ஒரு மகன், ஒரு மகள் என ஆசையாய் இரு பிள்ளைகள், அருகிலேயே வசிக்கும் அன்பான உறவுகள் என மகிழ்வுடன் இருக்கிறேன். நானும், எனது கணவரும் பன்னாட்டு நிறுவனஙளில் நல்ல சம்பளத்தில் பணி புரிகிறோம். இதற்கு மேல் கடவுளிடம் வேறென்ன கேட்க வேண்டும்? இறைவன் எனக்கு எல்லாவற்றையும் கொடுத்திருக்கிறார்.
பூ இருக்குமிடத்தில் முள்ளும் இருக்கும் எனச் சொல்வது போல, எனக்கு வீட்டிலும், பணியிடத்திலும் சில பிரச்சினைகள் முளைத்தன. பாபாவின் பெயரைச் சொல்லிக்கொண்டு அவற்றைச் சமாளித்து வந்தேன். பிரச்சினைகள் வரும்போதெல்லாம், பாபாவின் வலைதளத்துக்குச் சென்று, எனக்கான விடையைத் தெரிந்துகொண்டு, அவற்றைத் தீர்த்து வந்தேன்.


சென்ற ஆண்டு டிசம்பர் தொடங்கி எனக்கு அலுவலில் மிகவும் கடினமாக இருந்தது. ஒரு சில தீய சக்திகளின் தூண்டுதலால், நான் மிகவும் மனக் கலக்கமடைந்து, எனது பணியில் கவனம் செலுத்த முடியாமல் தவித்தேன். அவற்றிலிருந்து விலகி நிற்க நினைத்தாலும், எனது மேலாளரின் நம்பிக்கையை இழந்தேன். என் மீது பொறாமை கொண்ட சிலரது பேச்சைக் கேட்டு, ஏதோ ஒரு காரணத்தை வைத்து அவர் என்னைச் சத்தமிட்டுப் பேசுவது வழக்கமாயிற்று. 'ஸாயியை எப்போதும் நினை: நல்ல நேரம் விரைவில் வரும்' எனும் பாபாவின் மொழியில் நம்பிக்கை வைத்து இதையெல்லாம் தாங்கிக் கொண்டேன்.
ஆனாலும் நிலைமை சீராகவில்லை. ஒருநாள் காலை 7 மணி அளவில், வீட்டிலிருந்த என்னை தொலைபேசியில் அழைத்து, எனது மேலாளர் எந்தக் காரணமுமின்றி கண்டபடி பேசினார். நான் விளக்கம் அளிக்கக்கூட அவர் இடம் கொடுக்காமல் பேசி முடித்ததும் ஃபோனை 'பட்'டென வைத்துவிட்டார். மிகவும் மனவுளைச்சலுக்கு ஆளாகிய நான், அழுதுகொண்டே, என் கணவரிடம் நிகழ்ந்ததைச் சொன்னேன்.
பொறுமையாகக் கேட்ட என் கணவர், இதற்கு மேலும் இதைத் தாங்கத் தேவையில்லை எனச் சொல்லி எனது ராஜினாமாக் கடிதத்தை மறுநாளே கொடுக்கச் சொன்னார். எனது தன்மானம் கருதி நானும் அப்படியே முடிவெடுத்தேன். மறுநாள், புதன் கிழமை, எனது அலுவலகத்துக்குச் சென்று, பாபாவின் ஆலோசனையைக் கேட்டேன். 'பொறுமையாக இரு; ஆபத்து விலகும்' என பதில் வந்தது. பாபாவின் வார்த்தைகளை அப்படியே பின்பற்றுபவள் என்றாலும், அன்றென்னவோ பாபாவிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு, ராஜினாமாவை சமர்ப்பித்தேன். ஒரு பேச்சும் சொல்லாமல் எனது மேலாளரும் அதனை வாங்கிக் கொண்டார். அவர் முகத்தில் தனது செயலைக் குறித்த குற்ற உணர்ச்சி ஏதுமே இல்லை. எனினும், நான் அமைதியடைந்து, அலுவலில் இருந்து விடுப்பு எடுத்துக்கொண்டு என் கணவருடன் வீடு திரும்பினேன்.எனது சக நண்பர்களும், என் கணவரும் நான் எடுத்த முடிவு சரியே எனச் சொல்லித் தேற்றினாலும், 5 1/2 ஆண்டுகளாகப் பணியாற்றி நல்ல பெயர் வாங்கிய இடத்திலிருந்து, இப்படி வெளியேற நேர்ந்ததே என என் மனம் வாடியது.
ராஜினாமாவுக்கான காலக்கெடுவுக்காகக் காத்திருந்தேன். புதிய வேலை தேடலிலும் ஈடுபட்டேன். என் மன அமைதிக்காக பாபாவை வேண்டினேன். ஒரு மாதம் ஆகியும் ஒரு நேர்முகத் தேர்வுக்கான அழைப்பும் வரவில்லை. எது நடந்தலும் அது என் நன்மைக்கே என பாபாவின் மீது உறுதியாக இருந்தேன். வேலையே இல்லாமல் வீட்டில் உட்காரவும் தயாராக இருந்தேன்.
ஒருநாள் எனது நண்பர் ஒருவரின் அழைப்பின் பேரில் தில்லியில் நிகழ்ந்த 'ஸாயி சந்த்யா' வில் நானும் எனது கணவரும் மகிழ்வுடன் கலந்து கொண்டோம். பஜனை நடந்துகொண்டிருந்த நேரம் முழுவதும், எனக்கு ஏன் இப்படி நேர்ந்தது என பாபாவிடம் முறையிட்டுக் கதறினேன். வேலையை விட நான் தயார். ஆனால் இப்படி ஒரு அவப் பெயருடன் அல்ல பாபா! நான் குற்றமற்றவள் என நிரூபிக்க அருள வேண்டினேன்.
எனது முக வாட்டத்தைக் கவனித்த சில நண்பர்கள், இதன் காரணத்தைக் கேட்டறிந்து, பாபா இங்கிருந்து ஒரு நல்ல செய்தி இல்லாமல் அனுப்ப மாட்டார் எனத் தேற்றினர். பாபாவின் பால்கியை நான் சுமந்து செல்லவும் [இப்படிச் சுமப்பவரின் பாரத்தை பாபா ஏற்றுக் கொள்வதாக ஐதீகம்] அழைத்தனர். அங்கிருந்து கிளம்பும்போது 'கஷ்ட நிவாரண மந்திரம்' எனும் நூலையும் அளித்தனர். பாபா என்னுடன்தான் இருக்கிறார் எனும் புத்துணர்ச்சியுடன் அங்கிருந்து வீடு திரும்பினேன்.
அடுத்த நாள் [வியாழக்கிழமை] அலுவலுக்கு வழக்கம்போல் சென்று பணியில் ஈடுபட்டேன். இப்போதுதான் அந்த அதிசயம் நிகழ்ந்தது. மேல்நிலைக் கண்காணிப்பாளர் ஒருவரிடமிருந்து எனக்கு ஒரு அழைப்பு வந்தது.
எதற்காக அழைக்கிறார் எனப் புரியவில்லை. இருந்தாலும், சென்றேன். என்னை அன்புடன் வரவேற்ற அவர், நிறுவனத்தை விட்டு நான் விலக முடிவெடுத்ததின் காரணத்தைக் கேட்டார். உணர்ச்சிவசப்பட்ட நான் நடந்ததனைத்தையும் அவரிடம் கொட்டிவிட்டேன். எனக்கும் என் மேலாளருக்குமிடையே ஏதோ தவறான புரிதல் நிகழ்ந்ததாகவும், இப்போது அவையனைத்தும் சரி செய்யப்பட்டு விட்டதாகவும், நான் குற்றமற்றவள் எனவும் அவர் எனக்குத் தெரிவித்தார். கூடவே, எனது மேலாளர் தன் செய்த தவற்றுக்கு மன்னிப்பு கேட்க வெட்கப்படுவதாகவும், நான் மீண்டும் வேலையில் தொடர வெண்டுமென விரும்புவதாகவும் சொன்னர். எனது ராஜினாமாவைத் திரும்பப் பெற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொண்டார். இது பாபாவின் லீலை எனப் புரிந்த நான், எனது கணவருடன் இதுபற்றி ஆலோசித்து, ஒரு முடிவு சொல்வதகச் சொல்லிவிட்டு எனது இருக்கைக்கு வந்து பாபாவின் கருணையை நினைந்து கண்ணீர் மல்கினேன். மிக்க வந்தனங்கள் பாபா!
வேறு வேலை எதுவும் இன்னும் அமையாததால், இது பற்றி முடிவெடுக்க ஒரு வாரம் எடுத்துக் கொள்ளும்படி என கணவர் கூறினார். அடுத்த வியாழனன்று அலுவலிலிருந்து மீண்டும் என்னைத் தொடர்புகொண்டு என் முடிவு என்னவெனக் கேட்டனர். பாபாவை நினைத்துக்கொண்டே நான் 'சரி' எனச் சொல்லிவிட்டேன். ஆனால் உள்மனதுள் இப்படி அவர்கள் மனம் மாறியது சரியில்லையோ எனப் பட்டது.
மீண்டுமொரு வியாழனன்று, இன்னொரு அதிசயம் நிகழ்ந்தது. மற்றொரு பெரிய பணியிடத்திலிருந்து எனக்கு தேர்வழைப்பு வந்தது. வியாழனன்று வந்ததால், இது நிச்ச்யம் கிடைக்குமென நம்பிய நான், அதில் கலந்துகொண்டு, 2, 3 சுற்றுக்களுக்குப் பிறகு தேர்வானேன். எல்லாம் பாபாவின் அருளே! எனது புதிய மேலாளரின் பெயர் ஸாயிபாபா என இருந்தது, ஆச்சரியத்திலும் பெரிய ஆச்சரியம். ஏப்ரல் மாதம் 12-ம் தேதியன்று எனது புதிய வேலையில் நான் சேர்ந்தேன். அதுவும் ஒரு வியாழக் கிழமையே!
பாபா எப்போதும் எங்களுடனேயே இருக்கிறார் என நானும் எனது கணவரும் நம்புகிறோம். நிகழ்ந்ததெல்லாம் வியாழனன்று என்பது ஏதோ தற்செயலாக நடந்ததல்ல; அவரது ஆசியே!
எங்களது வேண்டுதல்களைக் கேட்டு நிறைவேற்றும் பாபாவை நான் மிகவும் நேசிக்கிறேன். எங்களுடன் எப்போதும் இருங்கள். நீங்களில்லாமல் நான் ஒன்றுமே இல்லை. எனது தங்கைக்கு ஒரு நல்ல வரன் கிடைக்கவும், எனது குடும்பம் நலமாக வாழவும், எனது பிள்ளைகள் நன்கு படிக்கவும் வேண்டிக் கொள்கிறேன்.
அனைவரும் பாபா மீது 100% நம்பிக்கை வையுங்கள். அவர் நிச்சயம் உங்களைக் கவனித்து, ஆசைகளை நிறைவேற்றி வைப்பார்.
ஓம் ஸாயிராம்.

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.