Wednesday, December 5, 2012

Miracles Of Sai Baba In My Life – Sai Devotee Buvi Raj


ஸாயி அடியார் புவிராஜ் 

(Translated into Tamil by  Dr.Sankarkumar, USA)

ஸாயிராம். அனைவருக்கும் இனிய ஸாயி நாள் வாழ்த்து.
நீண்ட இடைவெளிக்குப் பின், மீண்டும் ஸாயி அடியவர்களின் அனுபவங்களைப் பிரசுரிக்கிறேன். ஸாயிபாபா எப்போதும் தன் குழந்தைகளை வழிநடத்தி, நேர் வழியில் அழைத்துச் செல்கிறார். இந்த அனுபவத்தைப் பெற்றவர் திரு. புவிராஜ். தனது அனுபவத்தைப் பகிர்வது மட்டுமின்றி, அன்றாட வாழ்வில் பாபாவின் வழி நடத்துதலைப் பெறுவதற்கான தனது ஆலோசனைகளையும் திருமதி. புவி;ஜி தெரிவிக்கிறார். ஜெய் ஸாயிராம்.
மனிஷா 

அன்பார்ந்த ஸாயி அடியவர்களே,
என் பெயர் புவி ராஜ். அமெரிக்காவில் ஜார்ஜியா மாநிலத்திலிருக்கும் ஆல்ஃபரெட்டா என்னும் நகரில் வசிக்கிறேன்.
குறுகிய காலத்துக்குள்ளேயே பாபா என்னை ஆசீர்வதித்த அதிசய அனுபவத்தைச் சொல்ல விரும்புகிறேன். ஏற்கெனவே எனது ஷீர்டி அனுபவத்தைப் பற்றிய பதிவு இங்கு வெளியாகியிருக்கிறது.
இந்தத் தளத்தை நடத்துவதற்காகவும், பலரையும் ஸாயியின்பால் திருப்புவதற்காகவும் நீங்கள் செய்துவரும் முயற்சிகளை வாழ்த்துகிறேன், மனிஷா'ஜி. ஸாயி உங்களை ஆசீர்வதிப்பாராக! எனது அனுபவம்.


அற்புதம் 1
பாபாவின் புண்யதிதி விழா

ஸுவானீயில்[ஜார்ஜியா] இருக்கும் பாபா ஆலயத்தில் அவரது 94-வது புண்யதிதி 108 கலஸாபிஷேகத்துடன் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இதன் உபயதார்களுக்கு வீட்டுக்கு ஒரு கலஸம் வீதம் ஒருவர் எடுத்துச் சென்று பாபாவுக்கு அபிஷேகம் செய்யும் புண்ணியம் கிடைத்தது. காலை 5.45 முதல் இரவு 8 மணி வரைக்கும் ஆலயத்திலேயே பாபாவுடன் இருக்கும் அரிய வாய்ப்பு பாபாவால் எனக்குக் கிடைத்தது.
அதிகாலையில் பாபாவுக்கு சாமரம் வீசும் வாய்ப்பும், அதன் பிறகு கலஸாபிஷேகம் செய்யும் வாய்ப்பும் கிடைத்தது. எனக்கென்னவோ இது மிகவும் குறைந்த நேரமாகவே பட்டது. வேலை நாள் என்பதால், அதிகம் பேர் வரவில்லை என்பதால், அங்கிருந்தவர்களுக்கே மீண்டும் ஒருமுறை கலஸாபிஷேகம் செய்ய வாய்ப்பு கிடைத்தது. இதனால் மகிழ்ந்த எனக்கு பரம தயாளுவான பாபாவின் அருளால், 15 முறை அபிஷேகம் செய்யும் பெரு வாய்ப்பு கிடைத்தது. முதல் 5 முறைகளுக்குப் பின், மீண்டும் மீண்டும் செல்லத் தயங்கிய என்னை அர்ச்சகர் அழைத்து, கலஸங்கள் இருக்கும் வரையில் எத்தனை முறை வேண்டுமானாலும் வந்து அபிஷேகம் செய்' எனச் சொன்னதால், பாபாவின் அருகில் செல்லவும், அவரது பாதங்களைத் தொட்டு வணங்கவும் இத்தகைய அரிய வாய்ப்பு எனக்குக் கிடைத்ததில் மிகவும் மகிழ்ந்தேன். என்னால் மறக்க முடியாத இனிய அனுபவம் இது.
அதன் பிறகு [பாபாவின் படங்கள் சமையலறை முழுதும் இருப்பதாலும், வேறெங்குமில்லாத ருசியுடன் சமையல் இருப்பதாலும் பாபாவே சமைக்கிறார் என நான் நம்பும்] பாபாவால் தயாரிக்கப்பட்ட மதிய உணவை உண்டோம். மதிய ஆரத்திக்குப் பின்னர் சிறிது நேரம் ஓய்வெடுத்தபின், கீழே சென்றபோது, மாலை பூஜைக்கென சில பூ அலங்காரங்கள் செய்ய உதவ முடியுமா என ஒரு சேவக் என்னைக் கேட்க, மகிழ்வுடன் ஒப்புக் கொண்டேன்.
மலர் அபிஷேகம் மாலையில் செய்ய முடிவாகியிருந்தது. அன்பர்கள் அனைவரும் மலர் இதழ்களை எடுத்து பாபாவுக்கு சமர்ப்பிக்கலாம். 200 ரோஜாப் பூங்கொத்துகள் எங்களுக்கு முன்னால் இருந்தன. பல்வேறு நிறங்களிலிருந்த அவற்றை ஒழுங்காகப் பிய்த்து, கலந்து வைத்தபோது, அதைப் பார்க்கவே மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. 3.45க்கு ஆரம்பித்து சரியாக 6 மணிக்கெல்லாம் ஆரத்திக்கு முன்னர் முடித்தோம். பாபாவின் திருவடிகளுக்குச் செல்லும் அனைத்து இதழ்களையும் தொடும் வாய்ப்பு கிட்டியது. அதன் பின்னர் ஆரத்தியில் கலந்துகொண்டு, மலர் சமர்ப்பித்து, பாபா சமைத்த இரவுணவை உண்டு மகிழ்வுடன் வீடு திரும்பினேன். இவ்வாறாக புண்யதிதி நன்னாள் இனிமையாகக் கழிந்தது.
அங்கிருந்தபோது, மௌனமாக, எனது வேலையில் எனக்கு நல்ல பெயர் கிடைக்க வேண்டுமென நான் பிரார்த்தித்ததன் பலனாக மேலும் மேலும் என் வேலையைப் பாராட்டும் செய்திகளே வந்து கொண்டிருக்கின்றன. பாபா மெய்யாகவே ஒரு அற்புதமானவர்தான்!

அற்புதம் 2 
மறக்கவொண்ணா பரிசுக் குலுக்கல் 

சுமார் 1500 சீட்டுகள் கொண்ட ஒரு மாபெரும் பரிசுக் குலுக்கல் எங்கள் ஆலயத்தின் விரிவாக்க வேலைகளுக்காக நடந்தது. மே மாதம் ஒன்றும், சமீபத்தில் ஒன்றுமாக இரண்டு சீட்டுகள் வாங்கினேன். 'எந்தப் பரிசு வென்றாலும், என்னை அதில் வெற்றி பெறச் செய்வ‌தற்குத் தேர்வு செய்ததே பெரிய கௌரவம் என நீங்கள் நினைத்தால், என்னையும் தேர்ந்தெடுங்கள்' என மனதுக்குள் வேண்டிக் கொண்டேன். மெர்செடிஸ் கார், ரோலெக்ஸ் கடிகாரம், தங்க நகை, உல்லாசக் கடல் பயணம், 60" தொலைக்காட்சிப் பெட்டி எனப்ம்12 பரிசுகள் அந்தக் குலுக்கலில் அறிவிக்கப்பட்டிருந்தன.
புண்யதிதிக்கு ஒரு வாரத்துக்கு முன், கோவிலின் தலைவர் என்னைச் சந்தித்தபோது [இதுவும் பாபாவின் லீலையே] கோவில் நிதிக்கு மேலும் நன்கொடை அளிக்குமாறு கேட்க, அன்று 12 சீட்டுகள் வாங்கினோம்.
இப்போது வருகிறது பாபாவின் லீலை! அக். 28 அன்று குலுக்கலில் வெற்றி பெற்றவர் பட்டியல் வெளியிடப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை அன்று. நாங்கள் ஆலயத்துக்குச் செல்லவில்லை. அங்கிருந்து ஒரு தகவலும் வராததால் எங்களுக்கு ஒரு பரிசும் கிடைக்கவில்லையென நினைத்தோம். ஆனால், பாபா எங்களை வியாழக்கிழமை வரை காத்திருக்கச் செய்தார். அன்றுதான் நாங்கள் புண்யதிதியன்று வாங்கிய சீட்டுகளில் ஒன்றுக்கு 60" எல்சிடி டிவி பரிசு கிடைத்த செய்தி கிடைத்தது. அதை ஆலயத்துக்கே கொடுக்க முடிவு செய்துவிட்டோம். இந்த நிதி வசூலி ல் எங்களையும் பங்கு பெறச் செய்தமைக்கு பாபாவுக்கு எங்கள் வந்தனங்கள்.
குறிப்பிடத்தக்க விஷயம்: பாபா என் கனவில் படமாகவும், பளிங்குச் சிலையாகவும், ஷீர்டியில் நான் என் குடும்பத்தாருடன் இருப்பது போலவும் இதற்கு முன் மூன்று முறை வந்தபோதிலும், எங்களுக்குப் பரிசு கிடைத்த செய்தி கிடைத்த வியாழனறு காலையில் என் கனவில் மீண்டும் வந்து, நான் ஏதோ ஒரு போட்டியில் பரிசு பெற்றதாக்ச் சொல்ல நான் அவருடன் [ஷீர்டியில்] பேசிக் கொண்டிருப்பது போன்ற கனவினைக் கண்டேன். இதைப் பற்றி எழுதுவதற்காக நான் ப்ளாக் பக்கம் வந்தபோது இந்த 'மறக்கவொண்ணா பரிசுக் குலுக்கல்' பற்றிய சேதி அறிந்தேன். தலைப்பைப் போலவே இது எனக்கு ஒரு மறக்கவொண்ணா குலுக்கலே!. ஜெய் ஸாயிராம்.

அற்புதம்-3 
வாகனக்களில் ஸாயியின் திருநாமம்

இந்தியாவிலுள்ள ஸாயி அடியார்கள் ஏதேனும் வாகனங்களில் ஸாயியின் படம் அல்லது பெயரைப் பார்த்து மகிழ்கின்றனர். அமெரிக்காவில் இது அபூர்வமாகவே கிடைப்பதால், ஏசுநாதரின் படம், பெயர் அல்லது SAIA என்னும் பெயர் பொறித்த பெரு வாகனங்களைப் பார்த்து திருப்தியுறுகிறோம். எனது சகோதரி இதுபோன்ற அனுபவத்தைப் பற்றி இந்தியாவிலிருந்து எழுதும்போதெல்லாம் எனக்கும் இத்தகைய வாய்ப்பு கிடைக்காதா என உள்மனதுள் வேண்டுவேன். தங்கள் குறைகளைச் சொல்லி வேண்டி, பாபா இப்படி தன்னைக் காட்டிக்கொள்ள வேண்டுமென அடியார்கள் விரும்புவர். இதுபோல பாபாவை வேண்டியபோது SAIA என்னும் லாரியைக் கண்டு மகிழ்ந்ததாக ஒரு பெண்மணி எழுதியதைப் படித்ததும், நானும் அதேபோல வேண்ட, மறுநாள் காலை நான் வீட்டை விட்டு வெளியே வந்தபோது, ஏசுநாதரின் பெயர் தாங்கிய ஒரு வாகனம் என்னைக் கடந்து சென்றது! சில மாதங்களுக்கு முன், அலுவலகம் சென்றுகொண்டிருந்தபோது, SAIA பெயர் பொறித்த லாரி எனக்கு எதிரே வந்தது. அதைக் கண்டு மகிழ்ந்தபடியே அலுவலகத்துள் நுழைய, அதே லாரி திரும்பிவந்து அதுவும் எனது அலுவலகத்துள் நுழைந்து எனக்குப் பக்கத்தில் நின்றது. ஆசைதீரப் பார்த்துக்கொள் என பாபா சொல்வதுபோல் இருந்தது. பிறகு அது எனக்கு வழிவிட்டு என்னைச் செல்ல அநுமதித்து, என் பின்னே அதுவும் உள்ளே வந்தது.
சென்றமுறை இந்தியா சென்றபோது, இல்லம் செல்ல நான் காரில் ஏறியதும், பாபா திருவுருவம் தாங்கிய ஒரு ஆட்டோ எனக்கு முன்னே வந்தது. ஸாயி ஸத் சரிதத்தில் சொல்லியவண்ணம், தன்னை வேண்டும் அடியவர்க்காக அவர்களுக்கு முன்பே பாபா அங்கே சென்று காத்திருக்கிறார் என்பதுபோல, இது அமைந்தது. அமெரிக்காவில் இருக்கும் ஒரு பெரிய பல்பொருள் அங்காடியில் [Mall] பாபாவின் பெரிய திருவருவப் படம் ஒன்றைக் கண்டேன். இதற்கு முன்னர் அதை அங்கே கண்டதில்லை. வசதியான ஒரு இடத்தில் அமர்ந்து தேநீரைப் பருகியபடியே அவரை ஆசைதீர ரசித்துப் பார்த்தேன்.
இதுபோலச் சின்னச் சின்ன ஆசைகளைக்கூட நிறைவேற்றும் பாபா உண்மையிலேயே அற்புதமானவர்தானே! ஜெய் ஸாயிராம்.

அற்புதம்-4
 பாபா அளித்த இனிய ஆச்சரியம்

நம்பினால் நம்புங்கள்.... பாபா தனது எங்கும் நிறைத்தன்மையைப் பல விதங்களில் எனக்கு உணர்த்தியிருக்கிறார். சரிதத்தில் அன்று படிக்கப்போகும் ஒருசில வார்த்தைகளை முன்னமேயே ஒரு மின்னல் போல உணர்த்துவார். ஸத் சரிதத்தை தினமொரு அத்தியாயம் வீதம் வேலை நாட்களிலும், வார இறுதியில் பலவுமாக அன்றாடம் படித்து, இப்போது 22-வது முறையாகப் படிக்கிறேன்.
சனிக்கிழமைகளில் நான் பாபா ஆலயம் செல்வேன். அன்றொருநாள் நான் ரோஜா வண்ண சுடிதார் அணிந்திருந்தேன். பாபாவும் அதே வண்ண ஆடை அணிந்திருப்பார் என என் உள்மனம் சொன்னது. அதே போலவே அவரும் அணிந்திருந்தார்.
உனக்கும் எனக்குமிடையே வேறுபாடு கிடையாது என பாபா சொல்வார். எனது வேலைகளைச் செய்யவே நீ பிறந்திருக்கிறாய்' என்பது போல நலிவுற்றோர்க்கு உதவி செய்து, என்னாலியன்றவரை பாபாவின் சொற்படி நடப்பதே என் லட்சியம்.

அற்புதம்-5: 
பாபாவுடன் தீபாவளி

தீபாவளியன்று பாபாவுடன் அதைக் கொண்டாட ஆலயம் சென்றேன். சுமார் 200 விளக்குகள் ஏற்றுவதற்குத் தயாராக‌ வைக்கப்பட்டிருந்தன. அவையனைத்தும் ஏற்றப்பட்டு, பாபா அந்த ஒளியில் திகழ்வதைக் காண ஆவலுடன் காத்திருந்தேன். ஆரத்தி முடிந்ததும் அனைவருக்கும் பிரசாதம் வழங்கும் பணி எனக்களிக்கப்பட்டதை பாபாவின் ஆசியாக உணர்ந்தேன். ஆனால் பாபா வேறு ஒரு அதிசயத் திட்டமும் வைத்திருந்தார். பாபாவின் முன்னிருந்த விளக்குகளை ஏற்றும் பணி எனக்களிக்கப்பட்டது! இந்த வாய்ப்பு கிடைத்த ஐந்து பேர்களில் நானும் ஒருத்தி என்றபோது என் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.
அன்று மூன்றாவதாக ஒரு அதிசயமும் பாபா வைத்திருந்தார். கிளம்பும்போது, சனிக்கிழமை நடைபெறவிருக்கும் 'அன்னகூட்' நிகழ்ச்சிக்கு வரும், சுமார் 200க்கும் மேற்பட்ட பிரசாதத் தட்டுகளை அடுக்கி வைக்கும் பணிக்கு வருமாறு என்னிடம் சொன்னார்கள். பாபாவின் நேரடிக் கட்டளையாக இதனைக் கொண்டேன். சனிக்கிழமையும் பாபாவுடன் இருக்க நேர்ந்த இந்த அதிர்ஷ்டத்தில் மகிழ்ந்தேன். ஜெய் ஸாயிராம்.

அற்புதம் - 6: 
என்னைச் சுற்றிலும் ஸாயி பக்தி காட்டுத்தீயாகப் பரவுதல்

பாபாவைப் பின்பற்றத் தொடங்கி 2 ஆண்டுகள்தான் ஆகின்றன. ஆனால், என்னைச் சுற்றிலும் நல்ல விஷயங்களே வேகமாகவே நிகழ்கின்றன.
எனக்குப் பிறகு பாபாவைப் பின்பற்றத் தொடங்கிய எனது மூத்த சகோதரி சாயி விரதத்தை இரு முறைகள் முடித்து, பாபா அவளை ஷீர்டிக்கு வரவழைத்துப் பல அதிசயங்களை நிகழ்த்திக் காட்டினார். எனது அக்காவின் மகள் [வயது 13] ஒரு முறை ஸாயி விரதம் முடித்து விட்டாள். என் கணவர் ஸாயி ஸத் சரிதத்தை மூன்று முறைகளும், எனது 7 வயது மகன் முதல் முறையும், எனது தாயார் முதல் முறை முடித்துவிட்டு, தற்போது ஸாயி விரதத்தையும் பூர்த்தி செய்திருக்கின்றனர். எனது மாமியாரும் என் சொல்படி ஸாயி பாராயணம் செய்யத் துவங்கி, அவரால் நிலையாகப் படிக்க முடியாத நேர‌த்தில் இங்கே என்னிடம் வந்தபோது, பாபாவுக்கென என் குடும்பத்தில் ஒருவர் போலவே அவருக்கு அமைக்கப்பட்டிருக்கும் அறையில் உட்கார்ந்து படிக்கச் சொல்ல, ஒரே வாரத்தில் அவர் பாராயணத்தை முடித்து விட்டார். என் கணவரின் இரு அத்தைமார்களும் ஸாயி விரதத்தை நல்லபடியாக முடித்து, நற்பலன்களைப் பெற்று, தொடர்ந்து செய்வதாக சொல்லியிருக்கின்றனர். என் அலுவலக நண்பர்கள் சிலரும் ஸாயி சரிதப் பாராயண‌த்தையும், ஸாயி விரதத்தையும் செய்யத் துங்க்கியிருக்கின்றன்ர். புதிதாக வேலைக்குச் சேர்ந்த பெண்ணும்கூட ஒரு ஸாயி பக்தை. இந்த டிசம்பரில் ஷீர்டி செல்லவிருக்கிறார்.
இப்படி என்னைச் சுற்றிலும் நிகழ்வதில் எனக்கு மகிழ்ச்சி இருந்தாலும், எல்லாப் பெருமையும் ஸாயியையே சாரும். அவரே இவற்றின் பின்னணியில் இருந்து நடத்துகிறார். ஸாயி பக்தை என்னும் முறையில் அவரது புகழைப் பரப்புவதே நம் வேலை. எனது முந்திய நல்வினைகளே இதற்குக் காரணம். சொல்லப்போனால், ஸாயி மாதாவே என்னை நாளுக்கு நாள் அவர் பக்கம் இழுத்துக் கொள்கிறார்.
'ஸாயி பக்தர்களுடன் மேலும் ஒருசில விஷயங்களைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்'::
பாபாவிடம் பூரண‌ சரணாகதி அடைந்து அவரே அனைத்தையும் நிகழ்த்துகிறார் என நம்புங்கள். நீங்கள் செய்யும் எந்தவொரு செயலுக்கும் பெருமை தேடிக் கொள்ளாதீர்கள். விரைவிலேயே தீய எண்ணங்கள் அகன்று நல்லெண்ணங்களே மலர்வதைக் காண்பீர்கள். தீய எண்ணங்கள் என்னும் உணர்வு வருவதே ஒரு நல சகுனம்.
மனிதர்களாகிய நாம் தவறு செய்வது இயல்பே. பாபாவின் அருளால், விரைவிலேயே அவை குறைந்து அமைதியும்,சாந்தமும் மலரும். அப்போது நல்லதே நிகழும். தீய எண்னங்களோ, செயலோ செய்தால் உடனே பாபாவிடம் அவற்றைச் சொல்லி முறையிடுங்கள். பொறுமையும், விடா முயற்சியும் மிகவும் அவசியம். நாம் எண்ணியவாறு உடனே நிகழாமல் போகலாம். நமது கர்ம வினைகளைப் பொறுத்தே அவை அமையும். நமது பாவங்களைக் கழுவும் மனப்பான்மையே மிகவும் முக்கிய‌ம். 

ஸத் சரிதத்தில் சொல்லியவாறு, நமக்கும், பாபாவுக்கும் இடையே உள்ள திரையை அறுத்து விடுங்கள். தனது பக்தர்களை அவர் தன்னைப் போலவே மாற்றிவிடுவார், எப்படி இது நிகழும்? முதலில் நாம் ஆசை, கோபம் வெறுப்பு, பேராசை முதலியவற்ரை விலக்கினால் நாமும் பாபாவுடன் ஒன்றலாம். பாபாவைப் பற்றி தியானித்து எப்போதும் அவரது இருப்பை உணர்வது ஒன்றேஏ வழி. தீவிரப் பயிற்சியின் மூலம் இது கைகூடும். அதிகாலையில் உறங்கி விழிக்கும் நேரம் இதற்கு நல்லது. அவரைத் தியானித்து, அவர் திருநாமம் சொல்லி, அவரது லீலைகளில் சிலவற்ரை நினைவு கூர்ந்தால், அன்றையப் பொழுது நல்லதாக அமையும்.
நமக்கு விதித்த வேலையைச் செய்துகொண்டே பாபாவையும் நினையுங்கள். அவரது பஜனைப் பாடல்களைக் கேளுங்கள். 'என்னையே எப்போதும் நினைத்துக் கொண்டிருந்தால் நீங்கள் பரப்பிரம்மத்துடன் ஒன்றுவீர்கள்' என பாபா சொன்னதை நினைவில் கொள்ளுங்கள். முதலில் 30 நிமிடங்கள் எனத் தொடங்கி, படிப்படியாக முன்னேறி, இப்போது எல்லா நேரமும் அவர் நினைவிலேயே வாழ்கிறேன். ஏதேனும் பிரச்சினைகள் வந்தால், அவரது படத்தைப் பார்ப்பேன். உடனே எனக்கு ஒரு நல்ல வழியைக் காட்டுவார். அவரது பெயரை நான் உள்ளுக்குள் சொல்லிக்கொண்டிருக்காவிடின், என்னால் வேலையையே செய்ய முடியாது. அவர் எப்போதும் என்னுடனேயே இருக்கிறார்.
இவையனைத்தும் பாபாவின் அருளாலேயே சாத்தியமாகும். அவர் மீது நிபந்தனையற்ற அன்பு நாம் கொள்வதும் மிகவும் அவசியம். அவரைப் பொறுத்தவரை, நல்லது/கெட்டது எல்லாமே ஒன்றுதான். காலையில் விளக்கேற்றி, சிறு பிரசாதம் கொடுப்பது, வேலையைத் தொடங்கும் முன் அவரது இணையதளத்தைப் படிப்பது, தினம் ஒரு அத்தியாயம் படிப்பது, நான் சாப்பிடும் முன், அவருக்குப் படைப்பது, வாரம் ஒரு முறை தவறாமல் அவர் ஆலயம் செல்வது, ஆலயத்தில் குறைந்தது 2-3 மணி நேரமாவது ஆரத்தி/தியானம் இவற்றில் செல்விடுவது என அன்றாடக் கடமைகளாக, அவர் கேட்காமலேயே நான் செய்து வருகிறேன். நம் வாழ்வில் அவர் வந்தபின்னர், மூச்சு விடுவது/சாப்பிடுவது போல அவரை நினைப்பதும் ஒன்றாகி விடுகிறது. இப்படிச் செய்ய ஆரம்பித்ததும், இது இயல்பாகிப் போகிறது. நம் வாழ்க்கை இன்பமயமானதாகி, பாபா விரும்புவது போலவே நாமும் வாழத் தொடங்குகிறோம். அவரை நினைக்க மறந்தால், பயம், பதைபதைப்பு, கோபம், பொறாமை என்னும் வடிவங்களில் மாயை நம்மைச் சூழ்கிறது. உலக இன்பங்களில் ஆசை கொண்டால், அது முதலில் இனித்தாலும், அவையெல்லாம் தாற்காலிகமானதே. பாபாவிடம் நெருங்கிச் செல்லச் செல்ல, அது தரும் இன்பத்தைச் சொல்ல வார்த்தைகளே இல்லை.
பாபாவிடம் நான் வேண்டுவது இது ஒன்றே -- எனது முந்தைய வினைகள் இந்தப் பிறவியுடன் தீர்ந்து, நான் முக்தி அடைந்து பாபாவின் திருவடிகளை அடைவேனோ என்னவோ தெரியாது; அடுத்த பிறவி என ஒன்றிருந்தால், அதில், இந்தப் பிறவியில் நான் 33 வருடங்கள் காத்திருக்க வேண்டியது போலில்லாமல், இன்னும் சிறிய வயதிலேயே என்னை ஆட்கொள்ள‌ வேண்டுகிறேன், பாபா!
எல்லா ஸாயி பக்தர்களும் தங்களைச் சீக்கிரமே வந்தடையவும், என்னை ஆசீர்வதித்தது போலவே அவர்களும் பிறப்பின் பலனை உணரவும் ஆசீர்வதியுங்கள் பாபா!
ஸத்குரு ஸாயிநாத் மஹராஜ் கி ஜெய்!

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.