Thursday, June 6, 2013

Shirdi Sai Baba's Grace-Experience Of Sai Devotees - Part 54(Translated  into  Tamil by Dr. Sankarkumar, USA)

அன்பான உங்களுக்கெல்லாம் இனிய பாபா நாளாக அமையட்டும்.
தமது பக்தர்களிடம் பாபா எவ்வளவு அன்பு கொண்டிருக்கிறார் என்பதே இன்றையப் பதிவின் முக்கியக் கருத்து. நமது ஷீர்டி ஸாயிபாபா கருணையின் இருப்பிடம். தமது அடியார்கள்பால் எல்லையற்ற அன்பு கொண்டிருக்கும் அவர் எப்போதும் அவர்களுடனேயே இருக்கிறார். அவர் இவ்வுலகின் அசையா, அசையும் பொருட்களின் ஒவ்வொரு அணுக்களிலும் வாசம் செய்கிறார். தீவிர நம்பிக்கை கொண்டோருக்கு அவர் எப்போதும் தரிசனம் தருகிறார். தனது இனிய தரிசனத்தின் மூலமே பாபா அடியார்களின் துன்பங்களையெல்லாம் அகற்றி, அவர்களது பாதுகாவலராக இருக்கிறார். ஜெய் ஸாயிராம்.
 மனிஷா.


--------------------------------
பாபாவின் ஆரத்தி

முறையான பிரார்த்தனைகளின் அவசியம் பற்றி பாபா எனக்குப் பாடம் சொல்லித் தந்தார். ஆரத்தியின் மஹிமை பற்றி சென்ற வாரம் அவர் எனக்குப் போதித்தார். கடந்த இரு ஆண்டுகளாக என் கணவர் ஒழுங்காக மருத்துவப் பரிசோதனை செய்துகொள்ளவில்லை. வேலைப் பளு, நேரமின்மை எனக் காரணம் காட்டி அதைத் தவிர்த்திருந்தார். மேலும் தனது உடல்நிலை நன்றாகவே இருப்பதால், தேவையில்லை எனவும் கருதினார். இது எனக்கு மன உளைச்சலைத் தந்தது.

சில ஆண்டுகளுக்கு முன்னென்றால், நான் இதைப் பற்றி பெரிய சண்டையே போட்டிருப்பேன். ஆனால், இப்போதெல்லாம், எல்லாவற்றையும் பாபாவிடமே விட்டுவிட்டு, அவர் பார்த்துக் கொள்வார் என நம்புகிறேன். எனவே, சென்ற புதனன்று மாலை, வழக்கமான பிரார்த்தனைக்குப்பின், 'அவரை எப்படியாவது உடல் பரிசோதனைக்குச் செல்லச் செய்யுங்கள் பாபா, நாளை முதல் நான்கு வேளை ஆரத்தியும் ஒரு வாரத்துக்குத் தொடர்ந்து செய்கிறேன்' என வேண்டிக்கொண்டேன்.

அன்று மாலை என் கணவர் அலுவலிலிருந்து வந்ததும், என் முக வாட்டத்தைக் கண்டு காரணம் கேட்டார். எனது மனக்கவலையை அவரிடம் சொல்லிவிட்டு, குறைந்தது உங்களது ரத்த அழுத்தத்தையாவது அடிக்கடி பரிசோதித்துக் கொள்ளலாமே' எனக் கேட்டதும், மறுக்காமல் ஒப்புக்கொண்டார். பரிசோதித்துப் பார்த்ததில் 181/111 என வந்தது. பயந்துபோன நான் மீண்டும் சோதிக்க, 160/98 எனக் காட்டியது. என் கணவரும் பயந்துபோய், மறுநாள் மருத்துவரைப் பார்க்க ஒப்புக்கொண்டார். மறுநாள் காலை பாபாவுக்கு அபிஷேகம் செய்துவிட்டு மருத்துவரைப் பார்க்கச் சென்றோம். மதிய ஆரத்திக்குள் வந்துவிடலாம் என நினைத்தேன். செல்லும்போது நல்ல மழை! ஓட்டமாக ஓடி மருத்துவரைப் பார்த்தோம். அங்கே பரிசோதித்தபோது ரத்த அழுத்தம் அளவாகவே இருந்தது. முழுப் பரிசோதனையும் செய்து, ரத்தப் பரிசோதனையும் செய்ய ஏற்பாடு செய்துவிட்டு, முடிவைத் தானே அழைத்துச் சொல்வதாகச் சொல்லி அனுப்பிவைத்தார். சனிக்கிழமையன்று மருத்துவர் அழைத்து, எல்லாம் சரியாகவே இருப்பதாகச் சொன்னார். அப்போதுதான் என் மனம் நிம்மதி ஆயிற்று. ஒரு வாரம் ஆரத்தியைச் செய்யவைத்து மேலும் அமைதி தந்தார் பாபா. இதற்கும் மேலாக, அடுத்த வியாழனன்று, ஜப்பானுக்குத் திரும்பிய ஒரு நண்பர் மூலம் ஷீர்டி பிராசதமும் கிடைத்தது. இதைவிட வேறென்ன வேண்டும்? பாபாவின் ஆரத்தி மிகச் சக்தி வாய்ந்தது. மிக்க வந்தனம் பாபா. ஸாயிராம்.


 ஸாயியை நாடினால், நிச்சயம் கிடைப்பார்

எனக்கும், பாபாவுக்குமான உறவு:- சிறு வயது முதலே பாபாவின் இருப்பு என்னைச் சுற்றிலும் இருந்தது. அவரது பக்தையாக இல்லாவிடினும், அவரது சிறப்பு எனக்குத் தெரிந்தே இருந்தது. அவரை நான் வழிபட்டதில்லை. ஓராண்டு கால மன அழுத்தத்தின் பிறகு, 2012-ல் எனது தோழி ஒருவர் பாபாவின் 9 வார விரதம் பற்றிய மஹிமையைச் சொன்னார் அவரது காதலரை மணக்க வீட்டில் எதிர்ப்பு வந்தபோது இந்த விரதத்தைச் செய்ததும், தடை விலகியதாம். அதேபோல இன்னொரு தோழிக்கும் நிகழ்ந்தது எனவும் அறிந்தேன்.

எனவே சற்று நம்பிக்கையுடன் நானும் இதைத் தொடங்கினேன். ஆரம்பத்தில் ஒரு குறிப்பிட்ட ஆசையுடன் இதைத் தொடங்கினாலும், 5-ம் வாரத்தின்போது, வாழ்க்கையில் மகிழ்ச்சியைத் தர மட்டுமே வேண்டிக்கொண்டேன். எனது உண்மையான அன்பை பாபா எனக்குக் காட்டினார். 9-ம் வாரம் முடிவதற்குள்ளாகவே அந்த அன்பர் தன் காதலைச் சொல்லி என்னை மணந்துகொள்ள விருப்பம் தெரிவித்தார். 9-வது வாரம் பாபா ஆலயத்துக்குச் சென்று, என் மனதுக்குப் பிடித்த காதலருடன் எனக்கு ஒரு மகிழ்ச்சியான வாழ்வைத் தர பாபாவிடம் வேண்டிக் கொண்டேன். ஆனால், அதன் பிறகு, கடந்த ஒரு வருஷமாக நான் கோவிலுக்குச் செல்லவில்லை. [இது என்னை இன்றும் உறுத்துகிறது.]

எங்கள் இருவருக்குள்ளும் பல பிரச்சினைகள் வரத் தொடங்கின. ஒருநாள் என் காதலர் குண்டன்ஹல்லியில் ஒரு சாலையைக் காட்டி, அங்கே ஒரு பாபா கோவில் இருப்பதாகச் சொன்னார். [அவர் மூலமாக பாபா காட்டிய இந்த அடையாளத்தை நான் பொருட்படுத்தவில்லை.] இதன் பிறகு எங்களது உறவு இன்னும் மோசமாகியது. ஒருநாள் என் காதலர் இனிமேல் தன்னால் பொறுத்துக்கொள்ள இயலாதென்றும், எனது கோபபமும், ஆத்திரமும் எங்களது உறவை பாதிக்கிறது எனவும் சொன்னதும் நான் மனமுடைந்துபோனேன். இன்னொரு வாய்ப்புத் தருமாறு அவரிடம் கெஞ்சினேன். ஆனால் ஏற்கெனவே பல முறை தந்துவிட்டதாகவும், இனி இயலாதென்றும் சொல்லிச் சென்றுவிட்டார். அதுவே அவர் என்னுடன் கடைசியாகப் பேசியது. என் தாய் அவரிடம் பேசியபோதும் அதனால் பலனேதுமில்லை.

இந்த நிலையில்தான் எனக்கு மீண்டும் ஸாயி நினைவு வந்தது! [வெட்கப்படுகிறேன்!] மீண்டும் விரதத்தைத் தொடங்கினேன். தனது அற்புதத்தை பாபா காட்டுவார் என நம்பினேன். இந்த நிலையில், பாபாவைப் பற்றிய அடையாளங்களை நாள்தோறும் தேடினேன். ஏதோ ஒரு வகையில் பாபாவைத் தினமும் பார்த்துவிடுவேன். அவரைப் பார்க்காத நாட்களில் எதையோ இழந்ததுபோல் உணர்ந்தேன். அவர் காட்டிய சில அடையாளங்கள்::
1. கோபம் வந்து நான் மிகவும் கீழ்மையாக உணரும்போது, பாபாவின் படம் தெரிந்து என்னை அமைதிப்படுத்தும்.

2. என் காதலருடன் நான் கழித்த இனிய நாட்களை நினைவுகூரும்போது, மீண்டும் பாபா எப்படியோ காட்சி அளித்து, என்னைத் தைரியப்படுத்துவார்.
3. பாபாவின் படத்தை, வாகனங்கள் எதிலும் காணாது திகைத்த ஒரு நாள், அலுவலுக்குச் சென்றதும், திருமணம் ஆகித் திரும்பிய என் தோழி ஒருவரின் கையில் அணிந்திருந்த மோதிரத்தில் பாபா காட்சி தந்தார்.
4. அதேபோல், இன்னொருநாள், இருக்கைகளை மாற்றியதால் என்னருகில் அமர்ந்த தோழியின் மேஜை மேல் ஸாயி திருவுருவப் படம் காட்சி தந்தது.
5. என் அலுவலகத்துக்கு அருகில் புதிதாகக் கட்டப்படும் பாபா ஆலயத்தில், [நான் இரு வார விடுமுறைக்குப்பின் திரும்பியபோது,] பாபாவின் இரு சிலைகள் கட்டப்பட்டுக் கொண்டிருந்தன. [இந்த ஆலயம் கட்டி முடிக்கப்பட்டதும், பாபா என்னருகிலேயே வந்துவிடுவார்!]
6. இந்த விடுமுறையின்போது, நானிருந்த கிராமத்தில் பாபா ஆலயம் இல்லாததால், வியாழக் கிழமைகளில் நான் செல்லமுடியாமல் இருந்தபோது, என் அத்தை ஒருவர், தன் மகளுக்காக் வைத்திருந்த சிறிய [பாபா] வெள்ளிச் சிலையை எனக்குத் தந்தார். நாம் விரும்பும் கடவுளின் சிலை மற்றொருவர் மூலம் தரப்படும்போது, அதன் சக்தி இன்னமும் அதிகமாகிறது!
7. நான் விரும்பிக் கேட்கும் வானொலி நிலையத்தில் நடத்தப்படும் போட்டி ஒன்றில் கலந்துகொள்ள எத்தனையோ முறை முயற்சித்தும் அழைப்பு செல்லவில்லை. ஒருநாள் இதைப் பற்றி எண்ணிக்கொண்டிருந்தபோது, ஸாயி படத்தைத் தாங்கிய வாகனங்களை இரு முறை கண்டேன். எனக்கு ஆசி அளித்ததுபோல் நான் உணர்ந்து, அன்றைய தினம் முயற்சி செய்தபோது, என் அழைப்பு உடனே கிட்டி, ஒரு பரிசையும் வென்றேன்!
8. இது எனக்கு மிகவும் பிடித்தமான ஒரு அடையாளம்:: ஒருமுறை வாகனம் ஒன்றில் பாபாவின் படத்தைக் கண்டேன். அதன் கீழே என் காதலரின் பெயரான 'ஸ்ரீ'யும் எழுதப்பட்டிருந்தது! இப்படி எத்தனையோ இருக்கலாம். ஆனால், அந்த நேரத்தில் அந்த இடத்தில் இப்படிக் கண்டது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

நான் கூறுவது சற்று அதிகப்படியாக இருக்கலாம். ஆனால் இதன் மூலம் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இதுவே பாபா எனக்கு அருள்வது! என் காதலர் மீண்டும் என்னிடம் வருவாரா என எனக்குத் தெரியாது. இது என்னை வருத்தப்படுத்துகிறது என்றாலும், பாபா எப்போதும் எனக்காக இருக்கிறார்; அவர் நிச்சயம் எனக்கு உதவுவார் என நம்புகிறேன். வாழ்க்கையில் நல்லதொரு பாடம் கற்றுக்கொண்டேன் என்னும் நினைவில் மீண்டும் பாபாவுடன் இணைவதில் மகிழ்ச்சியே. நான் செய்துவரும் விரதத்தின் முடிவு எப்படி இருந்தாலும், நான் பாபாவுக்கு விசுவாசமாக இருப்பேன். ஜெய் ஸாயிராம்.

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.