Monday, September 2, 2013

Sai Satcharitra Parayan In Metro And How Baba Rescued Me Out of Trouble-Sai Devotee Suman
 (Translated into Tamil by Dr. Sankarkumar, U.S.A)

ஸாயிராம்.
அனைவருக்கும் இனிய பாபாநாள் வாழ்த்துகள்.
நமக்குப் பழக்கமான ஒரு வாசகரும், மற்றொரு ஸாயி சகோதரியும் தங்களுடைய அனுபவங்களை இதில் சொல்கின்றனர். இவற்றைப் படிக்கும்போது, நமது மனம் பாபாவின் அன்பை உணர்ந்து நெகிழ்வதோடு, தமது குழந்தைகளை எவ்விதம் பாபா எப்போதும் உடனிருந்து காக்கிறார் எனவும் புரிகிறது. ஜெய் ஸாயி ராம்.
 -- மனீஷா

...........

இது என்னுடைய மூன்றாவது பதிவு. ஸாயி ஸத்சரிதப் பாராயணத்தின் பெருமையை விளக்கும் இந்த என்னுடைய அனுபவத்தில், ஏதும் அதிகமாகவோ, தவறாகவோ சொல்லிவிடாமல் இருக்க, பாபாவை வணங்கி வேண்டுகிறேன்.

ஜெய் ஸாயிராம். என் பெயர் சுமன். உத்தகாண்ட்டைச் சேர்ந்தவன். பாபாவின் ஒரு எளிய அடியவன். அவர் சொன்னவற்றின்படி நடக்க முற்பட்டாலும், அடிக்கடி தவறுகள் செய்து, அவருடைய மன்னிப்பைக் கோருபவன். என்னுடைய முந்தையப் பதிவில் சொல்லியவாறு, கடந்த 7 ஆண்டுகளாக நான் சில சோதனைகளைச் சந்தித்து வருகிறேன். அவற்றை மீண்டும் சொல்லாத‌தற்காக என்னைப் பொறுத்தருள வேண்டுகிறேன்.

சிறுவயது முதலே நான் ஸாயி வழியைப் பின்பற்றி வந்தபோதிலும், சமீப காலமாக இந்த பக்தி எனக்கு நல்ல பாடங்களைக் கற்றுக் கொடுத்திருக்கிறது. இதன் மூலமாக, எனது பிரச்சினை இன்னும் தீராத போதிலும், நான் ஸாயிக்கு நெருக்கமானவனாகவே இருக்கிறேன்.

எனது பிரச்சினை தொடர்பாக, ஸாயியின் ஆணைப்படி தில்லியில் இருக்கும் ஒருவரைச் சென்று பார்த்தேன். அந்தப் பெண்மணி அடுத்த 9 மாதங்களுக்கு மாதம் ஒரு முறை 7 தினங்களுக்குத் தன்னை வந்து பார்க்குமாறு சொன்னார். அதனால், மாதமொரு முறை தில்லி வந்து என் சகோதரனின் வீட்டில் தங்கி, மெட்ரோ ரயில் மூலம் இவர் இருக்கும் இடத்துக்குச் செல்லவேண்டியதாயிற்று. இது ஒரு 40 நிமிடப் பயணம் என்பதால், இந்த நேரத்தில் ஸாயி ஸத் சரிதப் பாராயணம் செய்ய முடிவெடுத்தேன். இப்படிச் செய்கையில் அந்த 7 நாட்களில் நான் ஸாயி ஸத்சரிதப் பாராயணத்தைப் பூர்த்தி செய்ததை அறியவில்லை. அடுத்த மாதத்திலிருந்து இதை உணர்ந்து, நான் செய்தபோது பாபாவின் ஆசீர்வாதம் எனக்குப் பல வகையிலும் கிடைத்ததை உணர்ந்தேன்.

ஒருமுறை எங்கள் தெருவின் வழியே ஸாயி பால்கி வந்தபோது நான் 10 ரூபாய் கொடுத்தேன். உதி, அக்ஷதை மற்றும் ஒரு பூ எனக்குக் கிடைத்தது. அன்று மாலை பூஜைக்குப் பின், ஸத்சரிதத்தைப் புரட்டியபோது, அப்பாசாஹேப் குல்கர்னி என்பவர் பாபாவுக்குப் பத்து ரூபாய் தக்ஷணை கொடுத்ததும், அவர்க்கு உதி, அக்ஷதை, மலர் பிரசாதம் கிடத்த நிகழ்வைப் படித்து, இரண்டிற்கும் இடையே உள்ள பொருத்தத்தைக் கண்டு நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்.

இன்னொரு முறை,பாராயணத்தை முடித்து நான் வீடு திரும்பியதும், மற்றொரு அதிசயம் நிகழ்ந்தது. காலையும், மாலையும் பாபாவுக்கு அளிக்கும் நீரையே நான் அருந்துவது வழக்கம். ஒரு நாளிரவில், அப்படி அந்த நீரைக் குடிக்கச் சென்றபோது, அதில் ஒருசில சொட்டுக்கள் மட்டுமே இருந்தது. வீட்டிலிருந்த வேறு யாரும் அதைத் தொடவே இல்லையெனச் சொன்னார்கள். இதுமாதிரி நேரங்களில் நான் பாபாவிடமே நேரிடையாகச் சீட்டுப் போட்டுக் கேட்பது என் வழக்கம். அப்படிக் கேட்டபோது, 'ஆம், நானே அதைக் குடித்தேன்' என வந்ததும் என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

மற்றொரு முறை, பாராயணம் முடித்த அன்று என் தோழி ஒருவர் வீட்டுக்குச் சென்று பேசிக்கொண்டிருந்தபோது, பாதியில் எழுந்து சென்று அவள் ஒரு அழகிய பாபா சிலையை எனக்கு அளித்தாள். 'அவளது சகோதரன் ஷீர்டி சென்றபோது, இரண்டு சிலைகளை வாங்கியதாகவும், அந்த இன்னொன்றுதான் இது என்றும், அதை முறையாகப் பூஜை செய்யும் ஒருவருக்குத் தர எண்ணி, என்னிடம் அளித்ததாகவும் அவள் சொல்லி என்னை வியப்பில் ஆழ்த்தினாள். அதன் பின்னர் ஸ்கூட்டரில் இருவருமாகச் சென்றபோது, எங்கு போகலாம் என என்னைக் கேட்டுவிட்டு, அருகிலிருக்கும் பாபா கோவிலுக்கே செல்லலாம் எனச் சொன்னாள். அவள் ஒன்றும் பாபா பக்தை அல்லள். மகிழ்ச்சியுடன் அங்கே சென்று ஸாயி தர்பாரை கண்ணாரக் கண்டு, 10 ரூபாய் தக்ஷணை அளித்துவிட்டு, வீடு திரும்பிய பின்னரே, நிகழ்ந்த அனைத்தின் பெருமையும் புரிந்தது.

அடுத்த தடவை, நான் மெட்ரோவில் செல்லும்போது, வழக்கமாகப் படிக்காமல், பாட்டு கேட்கலாம் என நினைத்து, என்னிடமிருந்த 'ஐ-பாட்'-இல் கேட்கலானேன். அதை முன்னிரவுதான் முழுதுமாக 'சார்ஜ்' செய்திருந்தேன். ஆனால், இரண்டு பாட்டுகளுக்குப் பின்னர், அது வேலை செய்ய ஒத்துழைக்கவில்லை. வேறு வழியில்லாமல், நான் அன்றைய ஸத்சரித அத்தியாயங்களைப் படித்துவிட்டு, வீடு திரும்பினேன். ஆனால், என் மனம் என்னவோ அமைதியாகவே இல்லை. மதிய உணவை முடித்ததும், மீண்டும் எனது 'ஐ-பாட்'ஐ அழுத்த, இந்த முறை அது முழு நேரத்துக்கும் [40 நிமிடங்கள்] தொடர்ந்து ஒலித்தது. எனது சகோதரியுடன் இதைப் பகிர்ந்தபோது, 'உனது தினசரி பாராய‌ணத்தை நீ ஒதுக்கி பாட்டு கேட்கக்கூடாது என்றுதான் பாபா இவ்வாறு செய்திருக்கிறார்' எனத் தெளிவுபடுத்தினாள்.

பாபாவின் படம் ஏதாவதொரு ஆட்டோவிலோ, அல்லது வேறு இடத்திலோ காட்சி அளித்து என்னை மகிழ்த்துவதும் வாடிக்கையாக நிகழும். ஆனால், ஒருநாள் [அன்று வியாழக்கிழமை] அதுபோல எங்கும் தெரியாமல் நான் நம்பிக்கை இழந்துபோன நேரத்தில், ஒரு பஸ் நிறுத்தத்தில் ஒரு பையன் மிகப் பெரிய சமாதி புகைப்படத்தைத் தனது கைகளில் வைத்திருப்பதைக் கண்டு ஆனந்தத்துடன் தரிசனம் செய்துகொண்டேன்.

இதுபோல பாபா எப்போதும் என் கூடவே இருந்து, என்னைப் பாதுகாத்து, என‌க்கு நம்பிக்கையை ஊட்டுகிறார். இதைச் சொல்ல அனுமதித்தமைக்கு என் பணிவன்பான வணக்கம். 

 
 ஒரு தந்தையைப் போல பாபா என்னை 
இக்கட்டிலிருந்து காப்பாற்றினார்!

எனக்கு நிகழ்ந்த ஒரு சிறிய சம்பவத்தின் மூலம், அன்பான ஒரு தாய் தந்தையைப் போல பாபா எப்போதும் என்கூடவே இருந்து இக்கட்டான நேரத்தில் காப்பாற்றி ஆசி அளிக்கிறார் என்பதைப் புரிந்துக்கொண்டேன்.

[புது தில்லி] ரஜௌரி கார்டனுக்கு மெட்ரோ ரயிலில் செல்வதற்காக, ராணி பாக் எனும் இடத்திற்கு ஆட்டோவில் செல்வது என் வழக்கம். புது இடம் என்பதால் முதலில் பயமாக இருந்தாலும், நாளடைவில் இது பழகிவிட்டது. செல்லும் வழியெல்லாம் நாம ஜபம் செய்து கொண்டிருப்பேன். ஸாயி என்னுடனேயே இருப்பதுபோல ஒரு தைரியத்தை இது அளித்தது.

வழக்கமாக இந்த இடத்திற்குச் செல்ல ஆட்டோக்காரர் 50 ரூபாய்கள் கேட்பார். மீட்டர் எல்லாம் போடமாட்டார். ஆனால், அன்று நான் ஏறிய ஆட்டோக்காரரோ மீட்டரைப் போட்டுவிட்டார். அவருக்குக் கொடுப்பதற்கான பணத்தை முன்னதாகவே எடுத்து வைத்துக் கொள்லலாம் என எனது ஜீன்ஸ் பாக்கெட்டிலிருந்து பணத்தை எடுத்தேன். நான் எடுத்து வந்ததாக நினைத்த தொகையை விடவும் அது குறைவாகவே இருப்பதை உணர்ந்தேன். ரயில் பயணத்துக்கான கட்டணத்தைத் தவிர அதிகப்படியாக வழக்கமாக அவர்கள் கேட்கும் 50 ரூபாய்கள் இருக்காது எனப் பட்டது. என்ன செய்வதெனத் தெரியாம‌ல், பாபாவை மனமுருகிப் பிரார்த்தனை செய்யத் தொடங்கினேன். எனக்கு நம்பிக்கை ஊட்டுவதுபோல, ஒன்றன்பின் ஒன்றாக மூன்று ஆட்டோக்கள் பாபாவின் படம், உபதேசம் ஆகியவற்றைத் தாங்கி என்னைக் கடந்து சென்றன. இது என‌க்கு மகிழ்ச்சியாக இருந்தது.

ரயில் நிலையத்துக்கு சற்று முன்னதாகவே, மீட்டர் 42 ரூபாய் எனக் காட்டியபோது, ஆட்டோவை நிறுத்தி, இறங்கி ஆட்டோக்காரரிடம் அந்தத் தொகையைக் கொடுத்துவிட்டு நடக்கலானேன். மீதி கையில் இருந்த பணம் எனது மெட்ரோ ரயில் டிக்கெட்டுக்குப் போதுமானதாக இருந்தது. 20 அடி தூரமே ரயில் நிலையத்துக்கு இருக்கும்போது, அவ்வாறு நான் நிறுத்தி நடப்பதைக் கண்டு ஆட்டோக்காரரே வியந்தார்.

இதில் பாபாவின் லீலை என்னவென்றால், வழக்கம்போல நான் மீட்டர் இல்லாத வாகனத்தில் ஏறியிருந்தால், அவர்கள் கேட்கும் அந்த 50 ரூபாய்களைக் கொடுத்துவிட்டு, எனக்கு வீடு திரும்ப, ரயில் பயணம் செல்லும் கட்டணம் இல்லாது போயிருக்கும். அன்றைக்கெனப் பார்த்து, மீட்டர் பொருத்திய ஆட்டோவில் என்னை அழைத்துச் சென்று பாபா என்னை அந்த இக்கட்டான நிலையிலிருந்து [பழக்கமில்லாத இடத்தில் நான் அலைந்து விடாமல்] காப்பாற்றினார். தில்லி இன்னும் எனக்கு அதிகப் பழக்கமில்லாத ஊர் என்பதால் பாபா இவ்விதம் அருள் செய்தார்.

ஜெய் ஸாயி ராம்.

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.