Wednesday, May 20, 2015

Shirdi Sai Baba's Grace-Experience Of Sai Devotees - Part 62

ஷீர்டி ஸாயிபாபாவின் 
பெருங்கருணை 
 -------
 ஸாயி அடியார்களின் 
அனுபவங்கள் - பகுதி : 62
 ( Translated into Tamil   by : Dr. Sankarkumar, USA)ஸாயிராம்.
அனைவருக்கும் இனிமையான‌ பாபாவின் நாள் வாழ்த்துகள்.
மானிட‌ராய்ப் பிற‌ந்த‌ ந‌ம‌க்கு ஏற்ற‌த் தாழ்வுக‌ள் ந‌ம் வாழ்வில் இருக்கும். ந‌ம‌து குருவின் மீது அசைக்க‌ முடியாத‌ ந‌ம்பிக்கையும், பொறுமையும் கொண்ட‌வ‌ர்க்கு வாழ்வின் துன்ப‌ங்க‌ள் அனைத்தும் தீர்க்க‌ப்ப‌டும். இங்கு இட‌ப்ப‌ட்டிருக்கும் பாபா லீலைக‌ளைப் ப‌டிக்கும்போது, இந்த‌ ந‌ம்பிக்கையும், பொறுமையும் எவ்வ‌ள‌வு அவ‌சிய‌ம் என‌ நாம் உண‌ர‌க்குடும். அவ‌ரைச் ச‌ர‌ண‌டைந்தால், அனைத்துத் துய‌ர்க‌ளும் அடியோடு தீர்க்க‌ப்ப‌டும். ஸாயி அடிய‌வ‌ர் இருவ‌ரிட‌மிருந்து பிரார்த்த‌னை வேண்டுகோள் வ‌ந்திருக்கின்ற‌ன‌. அவ‌ற்றை ம‌ன‌தில் கொள்ளுமாறு வேண்டுகிறேன்.
ஜெய் ஸாயிராம்.
மனிஷா 
 

1. 'பாபா ஆரத்தியின் அவசியமும், அதன் வலிமையும்' :


பாபா லீலைகளை இங்கே இட எனக்கு ஸாயி வாய்ப்பளிக்கிறார். இவற்றைப் ப‌டிப்பதன் மூலம் நம் நம்பிக்கை எவ்விதம் வலுவாகிறது என நாம் அறிவோம்.

கர்ப்பப்பைக் கட்டிகளால் கடந்த 10 ஆண்டுகளாய் நான் அவதிப்படுகிறேன். பாபாவின் கருணையால் ஒரு அருமையான ஹோமியோபதி மருத்துவரை நான் கண்டறிந்தேன். தனது சொந்தத் தங்கை போல என்னை அவர் கவனித்துக் கொள்கிறார். மருந்துகளின் மூலம் உபாதை ஓரளவு கட்டுக்குள் இருக்கிறது. ஆனால், கடந்த சில மாதங்களாக நான் மருந்துகளை அலட்சியப் படுத்தலானேன்.

சென்ற மாதம் மிகவும் மோசமானதாக அமைந்தது. இணையத்தின் மூலம் எனது நோயின் அறிகுறிகளைப் படிக்கும் கெட்ட வழக்கம் எனக்கு இருந்தது. எனக்கு புற்று நோய் வந்துவிட்டதோ என எண்ணி அஞ்சினேன்.அந்த சமயத்தில் இந்தியா செல்லும் வாய்ப்பு வந்தது. அதற்கு ஒரு வாரம் முன்பு, பாபாவுக்கு ஒரு வியாழனன்று நாளொன்றுக்கு 4 முறையாக ஒரு வாரத்திற்கு ஆரத்தி காட்டும் எண்ணம் பாபா மூலம் வந்தது. எனவே மறுநாள் வெள்ளி முதல் ஒரு வாரத்திற்கு தினமும் நான்கு முறை ஆரத்தி காட்டத் துவங்கினேன். அடுத்த வியாழனன்று என் நோயைக் குணமாக்கும்படி பாபாவிடம் அழுது வேண்டினேன்.

பாபாவுக்கு ஒரு வெள்ளை சால்வை போர்த்த வேண்டுமெனத் திடீரென தோன்றியது. ஜப்பானிலிருந்து வரும்போது ஒரு அழகிய வெள்ளைச் சால்வையும், டர்பனும் வாங்கி பங்களுருவில் இருக்கும் சிவம்மா தாயீ ஆலயத்தில் அளிக்க எண்ணினேன். அது பற்றி இணையத்தில் தேடும்போது, அன்றைய தினம் சிவம்மா தாயியின் ஸமாதி நாள் எனவும், அதற்கு மறுநாள் குரு பூர்ணிமா என்றும் தெரிந்து மகிழ்ச்சி அடைந்தேன். குரு பூர்ணிமாவுக்கு மறுநாள் நான் ஆலயம் சென்று பாபாவுக்கு சால்வையை அணிவித்து மகிழ்ந்தேன்.

அந்த நேரம் ஆலயத்தில் வேறு யாருமே இல்லை! மதியம் 12 மணி ஆரத்தி வரை என்னை ஆலயத்தின் உள்ளேயே இருக்கச் செய்து வெளியே கதவைப் பூட்டிக்கொண்டு பூசாரி சென்றுவிட்டார். நான் மட்டும் இப்போது தனி ஆளாக‌ சிவம்மா தாயியுடனும், பாபாவுடனும்! சொல்ல வார்த்தையே இல்லை! சுமார் ஒன்றரை மணி நேரம் அவ்விருவரின் அருட்பார்வையில் நான் மட்டும் இருந்தேன்.

என்னைப் போன்றவரிடமும் பாபா காட்டிய இந்தக் கருணைக்கு நான் எப்போதும் நன்றியுள்ளவளாக இருப்பேன். அங்கு அமர்ந்த நேரத்தில் என் நோய் பூரணக் குணம் ஆனதாக உணர்ந்தேன். பாபாவின் ஆரத்தி மிகவும் சக்தி வாய்ந்தது. இதற்கு முன்பும் நான் இதுபோல 4 முறை ஆரத்தி செய்து பலனடைந்திருக்கிறேன். மிக அபூர்வமாக கருப்பு நிறத்தில் இருக்கும் சிவம்மாதாயீ ஆலய பாபா படத்தை இத்துடன் இணைத்திருக்கிறேன். இங்கு மட்டுமே பாபாவை நாம் பிக்ஷா கோலத்தில் தரிசிக்க முடியும் என்பதும் விசேஷம்!

நான் உங்களை மிகவும் நேசிக்கிறேன் பாபா! எப்போதும் எனக்கு ஆசி அருளுங்கள்!

ராதா ஸ்ரீதர்.2 ' உனது தெய்வீகக் கருணைக்காகக் காத்திருக்கிறேன், பாபா!' :

என் பெயர் அனிதா. சிகாகோவில் தற்போது வசிக்கிறேன். உங்களது சேவைக்கு என் மனமார்ந்த வந்தனங்கள். 7-நாள் பாராயணத்தின்போது இந்த வலைதளத்தைக் காண நேர்ந்தது. நானும் எனது அனுபவத்தை இதில் எழுத வேண்டுமென எண்னியிருந்தபோது, ஒரே வாரத்தில் நிகழ்ந்த நிகழ்வு என் வாழ்வையே மாற்றி, இப்போது அதிலிருந்து வெளியே வரத் தத்தளிக்கிறேன்.

எதிலிருந்து துவங்குவது எனத் தெரியவில்லை. பாபாதான் அருள வேண்டும். பாபா எவ்விதம் என்னை அவரது அரவணைப்புக்குள் கொண்டு வந்தார் எனத் தொடங்குகிறேன்.

நானும், எனது மூத்த சகோதரியும் [ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற என் தந்தையும், ஆசிரியை வேலை பார்த்துக்கொண்டிருந்த என் தாயுமாக] எங்களது பெற்றோரின் அன்பில் மிக மகிழ்ச்சியாக வாழ்ந்திருந்தோம். திடீரென என் தந்தை இறந்ததும் சோதனைகள் சூழத் தொடங்கின. ஆயினும் அதிலிருந்து மீண்டு நாங்கள் மூவரும் வாழ்ந்துகொண்டிருந்தோம்.

10 நீண்ட ஆண்டுகளுக்குப் பின் பாபா என் வாழ்வில் வந்தார். ஸ்ரீஸாயி ஸத்சரிதத்தின் மூலம் நவ. 11 , 2010 அன்று பாபா வந்த அந்த நாளை என்னால் மறக்க இயலாது. இந்தக் கடிதம் எழுதும்போது பாபா ஆணையால் அந்த நாளும் ஒரு வியாழக்கிழமை என இன்று அறிந்து மகிழ்கிறேன். 11.11.2010 என்ன கிழமை எனத் தேடியபோது, அது ஒரு வியாழன் என அறிந்து, 'இதே புனித நாளில்தான் நான் உன்னிடம் வந்தேன் ' என பாபா சொல்லாமல் சொல்வதுபோல் இப்போது புரிந்து, என் கவலைகள் யாவும் தீர்ந்ததாக உணர்கிறேன்!

அந்த நாள், எனது பட்ட மேற்படிப்புக்கான விண்ணப்பத்தை அனுப்ப ரயில் நிலையத் தபால் நிலையம் வந்த நான், அருகில் அப்போதுதான் புதிதாகத் திறந்திருந்த பாபா ஆலயத்தின் முன் என் 'ஸ்கூட்டி'யை நிறுத்தினேன். பூட்டியிருந்த ஆலயக் கதவு இடுக்கின் வழியாக‌ உள்ளேயிருந்த பாபாவை தரிசனம் செய்தேன். அருகிலிருந்த ஒரு கடையில் ஸத்சரிதம் நூல்கள் இரண்டை வாங்கிக்கொண்டு, வீடு திரும்பினேன். இப்படித்தான் பாபா என்னுடன் வந்தார். தினமும் ஒரு அத்தியாயம் எனப் படித்து வந்தேன்.

2011-ல் எனக்குத் திருமணம் நிகழ்ந்தது. அதன் பின்னும் என் மேற்பட்டப் படிப்பைத் தொடர அவர்கள் வீட்டின் சம்மதம் பாபா, மற்றும் என் தந்தையின் மூலம் கிடைத்தது. சென்னையில் என் கணவரும், மே.வங்காளத்தில் என் படிப்புமாக இருந்ததால் முதலில் சற்று தயங்கினர். ஆனாலும் பாபாவின் அருளால் இது நிகழ்ந்த‌து.

இரண்டாம் ஆண்டு படிப்பின் போது, அறிமுகம் இல்லாத அந்த ஊரில் எனது 'ப்ராஜெக்ட்'டுக்கான உபகரணங்களை வாங்க சிரம்ப்பட்டேன். எனது மந்தமான வேகத்திற்காக என்னைக் கடிந்துகொண்டாலும், பணி முடிந்ததும், மிக நன்றாக அமைந்தது பற்றி எனது ஆசிரியர் என்னைப் பாராட்டினார்.

மே, 2013-ல் படிப்பை முடித்தேன். அதே சமயம் என் கணவரும் வேலை நிமித்தமாக அமெரிக்கா வரவே, நானும் அதற்கான ஏற்பாடுகளை முடித்து, செப்டெம்பர் மாதம் அவருடன் சேர்ந்தேன். ஏப்ரல், 2014 வரை எல்லாம் நன்றாக நிகழ்ந்தது, குழந்தை பெற்றுக் கொள்ளவும் முடிவெடுத்தோம். ஸப்தாஹ பாராயணம் செய்யத் தொடங்கினேன். மூன்றாம் நாளே நல்ல பலன் தெரிந்தது. ஆனால் பாராயணம் முடித்தவுடன், எனது அடி வயிற்றில் வலி வந்து, மருத்துவரிடம் காண்பித்தேன். ஒன்றும் பயப்படத் தேவையில்லை எனச்சொல்லி சில ரத்தப் பரிசோதனைகள் செய்துகொள்ளச் சொன்னார்.

வீட்டிற்கு வந்தும் வலி குறையவில்லை மேலும் பரிசோதனைகள் செயதபோது, இது ஒரு அபாயகரமான கர்ப்பம் [Ectopic Pregnancy] எனத் தெரிந்து உடனடி அறுவை சிகிச்சை செய்யவேண்டும் எனச் சொன்னார். நான் என்ன‌ த‌வ‌று செய்தேன் என‌ இப்ப‌டி சோதிக்கிறீர்க‌ள் பாபா என‌ அழுதேன். அன்று இர‌வே அறுவை சிகிச்சையும் ந‌ட‌ந்த‌து. மேலும் 15 நாட்க‌ள் அங்கே த‌ங்க‌வும் நேர்ந்த‌து. என‌து க‌ர்ப்ப‌க் குழாய் ஒன்றை எடுக்க‌ நேரிட்ட‌தாக‌வும், அடுத்த‌ பிர‌ச‌வ‌த்திலும் இதே போல‌ நேர‌ வாய்ப்பு இருப்ப‌தாக‌வும் ம‌ருத்துவ‌ர் கூறினார். என்னால் என் அழுகையைக் க‌ட்டுப்ப‌டுத்த‌ முடிய‌வில்லை.என்ன செய்வதென்றே தெரியவில்லை.

நேர‌ம் கிடைக்கும்போது, என‌க்காக‌ பிரார்த்த‌னை செய்யுமாறு உங்க‌ளை எல்லாம் வேண்டுகிறேன்.. ஜூலை 3 முத‌ல் 9 வார‌ விர‌த‌ம் தொட‌ங்கியுள்ளேன். பாபா த‌ன‌து குழ‌ந்தைக‌ளைக் கைவிட‌ மாட்டார் என‌த் தெரியும். இன்னொரு விஷயம்... என்னிடம் மிகக் குறைந்த அளவு உதியே இருக்கிறது. இப்போதெல்லாம் தூங்கும்போது என் கணவருக்கு அடிக்கடி தூக்கிவாரிப் போடுகிறது. பாபாவின் அனும‌தியுட‌ன், ஊதுப‌த்தி சாம்ப‌லை எடுத்து என் க‌ண‌வ‌ரின் நெற்றியில் த‌ட‌வி அவ‌ர‌து த‌லைய‌ணையின் கீழும் வைத்த‌தில் ந‌ல்ல‌ ப‌ல‌ன் தெரிந்த‌து! இப்போதெல்லாம் அதைத்தான் உப‌யோகிக்கிறோம்.

பாபாவுக்கு வ‌ந்த‌ன‌ம். எங்க‌ளை ஆசீர்வ‌தியுங்க‌ள் பாபா.
ஓம் ஸாயி ராம்.

.
3. 'பாபா எப்படி என்னைக் காப்பாற்றினார்!':


பாபா எப்போதும் என்னுடனேயே இருக்கிறார் என்பதற்கு இதுவே சாட்சி. இன்று நான் எழுதும் இக்கடிதத்தில் உள்ள வார்த்தைகள் எவ்விதம் பாபா என்னைக் காப்பாற்றி கரையேற்றினார் என்பதைச் சொல்லும் என் சோகத்தின் வெளிப்பாடு எனலாம். நான் பட்ட துயரங்களைச் சொல்ல வார்த்தைகள் போதாது. பாபாவே என் பாதுகாவலர்.

கடந்த 12 ஆண்டுகளாக என் கணவர் மற்றும் அவர் குடும்பத்தாரால் நான் மிகுந்த தொல்லைகளுக்கு ஆளாகி வருகிறேன். சில சமயங்களில் நல்லவராக இருந்தபோதிலும், கேட்பார் பேச்சு கேட்டு அடிக்கடி என் கணவர் எனக்கு எதிராகத் திரும்பிவிடுவார். இது ஏன், எப்படி எனத் தெரியவில்லை. என் பெற்றோர்களும் இவர்களிடம் ஏச்சுப்பேச்சுக்கு ஆளாகி இருக்கின்றனர்.

கடந்த ஆண்டு இந்தக் கொடுமை உச்சத்துக்கே சென்றுவிட்டது. 9-வார பாபா விரதம் துவங்கினேன். ஆனால் வாரா வாரம் கொடுமை அதிகரித்தே வந்தது. என்னிடமும், என் குழந்தைகளிடமும் மிகக் கடுமையாக நடந்துகொள்ள ஆரம்பித்தார். என்ன செய்வதெனத் தெரியாமல் திகைத்தேன். ஒவ்வொரு வாரமும் பாபா மற்றும் ஹனுமான் கோவிலுக்குச் சென்று வேண்டுவோம். என்னுடன் பேசுவதையே நிறுத்திவிட்டார் . அப்படியே ஏதாவது பேசச் சென்றாலும், சாமான்களை விட்டெறிந்து கடுமையாக என்னையும், என் பெற்றோரையும் என் கணவர் திட்டுவார். பாபா மட்டுமே என் குறிக்கோள் என அவரையே வேண்டி வந்தேன்.

விரதம் பூர்த்தி ஆகியும், கணவரின் கொடுமைகள் குறையவில்லை. மாறாக இன்னும் அதிகரித்தது. சுமார் 6 மாதங்கள் அப்படியே தொடர்ந்தது. என்னை விட்டுப் பிரியப் போவதாக நான் அறிந்து திடுக்கிட்டேன். அழுது புலம்பினேன். இது போல வேறு எவருடைய வாழ்விலாவது பாபா வந்து உதவினாரா என பல வலைதளங்களுக்குச் சென்று தேடினேன். ஆனால், அப்படி ஒன்றும் தெரியவில்லை.

என்னையும் என் குழந்தைகளையும் காப்பாற்ற பாபாவை வேண்டினேன். வீட்டுக்குச் செல்ல அச்சப்பட்டுக்கொண்டு, பல கோவில்களுக்குமாகச் சென்று இரவு மட்டுமே வீடு சென்றேன். என் பெற்றோரும், என் உற்ற நண்பர்கள் இருவரும் என் நிலையைக் கண்டு மிகவும் வருந்தினர்.
ஒருநாள் பாபா கோவிலில் ஒரு பெரியவர் , இதுபோல நிகழும்போது வேறு யாருடனாவது இது பற்றி கலந்துரையாட வேண்டும் எனச் சொல்வதைக் கேட்டேன். அப்போதுதான் என் பக்கத்து வீட்டு குடும்பத்தாருடன், 12 ஆண்டுகளுக்குப் பிறகு, முதன்முறையாக கலந்து பேசினேன்.

கோவிலில் கண்ட பெரியவர் பாபா உதியைக் கொடுத்திருந்தார். அதைக் குடிநீரில் கலந்துவிட்டேன். அது செய்த மாயமோ என்னவோ, இப்போதெல்லாம் என் கணவர் கொஞ்சம் சாந்தமாகி இருக்கிறார். அவ்வப்போது உன்னை விட்டுப் பிரிந்துவிடுவேன் என பயமுறுத்தினாலும், குழந்தைகள் நலன் கருதி அதைப் பொருட்படுத்துவதில்லை. சில சமயம் மூர்க்கத்தனமாக அவர் சண்டை போட்டாலும், பாபாவை நினைத்துக்கொண்டு சும்மா இருக்கின்றேன். என் கர்மவினையின் காரணமாகவே பாபா என்னைக் கவனிக்கவில்லை என உணர்கிறேன். ஏன் இப்படி நிகழ்கிறது எனக் கேட்கும்போதெல்லாம், இதை விடவும் பெரிய துன்பம் வந்து இதை சாதாரணமாக ஆக்கிவிடுகிறது!

என்னை மன்னித்து எனக்கு அருள் செய்யுங்கள் பாபா. எனக்கு மன அமைதியைக் கொடுங்கள் பாபா. இதுபோல இனி நிகழாவண்ணம் தடுத்தாட்கொள்ளுங்கள் பாபா. எனக்கு மனோதைரியம் கொடுத்து, நான் கோழையாகவும், உணர்ச்சிவசப்படுபவளாகவும் இல்லாதவளாகச் செய்யுங்கள் பாபா. துர்க்காமாதா போல என்னைக் காத்தருள்க பாபா! தன் வீட்டாரின் தீய குணத்தை என் கணவர் உணர்ந்து அவரை நல்லவராகச் செய்யுங்கள் பாபா! அன்புள்ளம் கொண்ட பாபா அடியவர்களே! இந்த அபலையை உங்கள் பிரார்த்தனையில் எப்போதும் நினைத்து எனக்காக பாபாவிடம் வேண்டிக் கொள்ளுங்கள். என்னிடமும், என் பெற்றோரிடமும் என் கணவர் நல்லதனமாக நடந்துகொள்ள வேண்டிக் கொள்ளுங்கள். என்னை உங்கள் பிள்ளை போல் நினைத்து வேண்டிக்கொள்ளுங்கள்.


4. 'ஸாயிபாபாவின் லீலை -- வேலை, திருமணம், உடல்நலம்.' :


2002-ல் ஸாயி என்னை அவர்பால் இழுத்தார். வேலை இல்லாம இருந்ததால், பெற்றோருடன் சண்டை போட்டுக்கொன்டிருந்த என்னைத் தேற்றுவதற்காகத் தன் கோவில் பக்கம் வருமாறு ஸாயி என்னை இழுத்தார்.

என்னை ஒரு ஆரம்ப நிலை வேலையில் தன் கருணையால் சேர்த்தார். என் நண்பன் ஒருவன் கூறியதால், 2006-ல் ஒரு பெரிய நிறுவனத்தில் சேர விண்னப்பித்தேன். ஆனால், நேர்முகத் தேர்ர்வில் தோல்வியுற்றேன். மனம் தளர்ந்து ஸாயியை நான் வேண்ட, அவர் அருளால் ஒரு ஆறு மாதத்திலேயே அதே நிறுவனத்தில் நேர்முகத் தேர்வு மீண்டும் வந்தது. அதற்குச் செல்லும் முன், ஸாயி கோவிலில் வேண்டிய பின், அங்கு செல்ல, அந்த வேலை எனக்குக் கிடைத்தது. என் திருமணமும் உடனே நிச்சயமானது.

திருமணத்திற்கு முன் என்னை ஸாயி ஷீர்டிக்கு இழுத்தார். அவரது ஸமாதியில் என் திருமணப் பத்திரிகையை வைக்கும் பாக்கியமும் தந்தார். மணமாகி 4 ஆண்டுகள் ஆனபின்னும் குழந்தை பாக்கியம் இல்லாததால் ஸாயி ஆலயத்திற்கு 6 வாரங்கள் சென்றேன். இப்போது எங்களுக்கு 2 வயதில் ஒரு குழந்தை இருக்கிறது.

2013-ல் ஏதோ காரணத்தால் வேலையை ராஜிநாமா செய்ய நேர்ந்தது மனம் தளர்வுற்று இருந்த சமயம், ஒரு டீ கடையில் தேநீர் அருந்தும்போது அங்கே ஒருவர் மூலம் எனக்கு ஸாயியின் உதி கிடைத்தது.

இப்படியாக 2002-ல் இருந்து ஸாயி என்னைக் கவனித்துக்கொண்டு வருகிறார்.

அகிலாண்ட கோடி ப்ரஹ்மாண்ட நாயக ராஜாதிராஜ யோகிராஜ ஸத்குரு ஸாயிநாத் மஹராஜ் கி ஜெய்!


5. 'குரு கடாக்ஷம்' :


எனக்கு நேர்ந்த ஒரு அனுபவத்தை முதன்முறையாக இங்கே பகிர்ந்து கொள்கிறேன். என் குழந்தையின் முதல் பிறந்த நாளன்று அவனுக்கு கடுமையான காய்ச்சல் வந்து மறுநாள் அவனை மருத்துவ மனையில் சேர்க்க நேர்ந்தது. இரண்டு நாட்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து அவன் வேதனையில் தவித்தான். ஏன் பாபா என்னைக் கவனிக்கவில்லை என நான் என்னையே நொந்துகொண்டேன்.

என்னைக் காண வந்த என் சகோதரி, இது பாபாவின் விளையாட்டு எனச் சொல்லி, அவர் மீது பூரண நம்பிக்கை கொள்ளச் சொன்னாள். என் கடமையை மட்டும் பார்த்துக்கொள்ள‌ச் சொன்ன அவளது ஆலோசனையின் பேரில் அப்படியே செய்தேன். திடீரென என் மகன் குணமடையலானான். மருத்துவரால் கூட இது எப்படி எனப் புரிய இயலவில்லை.

இதன் மூலம் என் குருவைச் சரணடைந்து அவரிடமே அனைத்தையும் ஒப்படைக்க நான் கற்றுக் கொண்டேன்.

என் குரு ஸாயி பாபா எப்போதும் என்னைக் காப்பார்.
ஸாயி கிருபா.


6. 'ஸாயியின் கருணை':


நான் ஸாயி பக்தை அல்லள். என் தோழி ஒரு முறை ஷீர்டி சென்று சில ஸாயி சிலைகளை வாங்கி வந்தாள். தன்னைக் காண வருவோர்க்கு அவற்றில் ஒன்றைக் கொடுத்து வந்தாள். ஒரு மாதம் கழித்து நான் அவளைக் காணச் சென்றபோது, தன்னிடம் கடைசியாக இருந்த ஒரு சிலையை என்னிடம் தந்தாள்.. அது எனக்கெனவே விதிக்கப்பட்டது எனவும் கூறினாள். அதைக் கேட்டு நான் மகிழ்ந்தேன்.

பி.எட். [B.Ed] பட்டப் படிப்புக்கு பணம் கட்டி இருந்தேன். ஏதோ காரணத்தால் என் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. முதல்வரைச் சந்தித்தபோது, எனக்கு அதில் சேரத் தகுதி இல்லையெனச் சொல்லிவிட்டார். மறுநால் வந்து பணத்தைப் பெற்றுச் செல்லுமாறும் கூறினார். மிகுந்த வருத்தமடைந்த நான் முதன்முறையாகா பாபாவை வேண்டினேன். மறுநாள் துணை வேந்தரைச் சந்தித்தபோது, என் சேர்க்கை உறுதிப்படுத்தப் பட்டது.

இப்போது நான் எம்.எட்.[M.Ed.]டும் முடித்து என் சொந்தப் பள்ளியையும் நடத்தி வருகிறேன்.
எனக்காக என் உதவிக்கு வந்த பாபாவுக்கு என் வந்தனம்

ஸாயிராம்.

(Uploaded by : Santhipriya)   

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.