Saturday, October 1, 2016

சாயியின் கருணை - 66

 
  ( Translated into Tamil   by : Dr. Sankarkumar, USA)
இனிய ஜென்மாஷ்டமி வாழ்த்துகள். ஸ்ரீ ஸாயி கிருஷ்ணர் நம்மை எல்லாம் ஆசீர்வதிப்பாராக! ஸாயி அடியார்கள் சிலரின் அனுபவங்களை இங்கே பகிர்ந்திருக்கிறேன். ஜெய் ஸாயிராம் ------   மனிஷா
 ----------------------------

அன்புள்ள மனிஷா தீதீ,

நலமென எண்ணுகிறேன். கீழ்க்காணும் எனது அனுபவத்தை மற்றவரோடு பகிர்ந்துகொள்ளுமாறு வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்.

சமீபத்தில் நான் அனுபவித்த இந்த நிகழ்ச்சியை உங்களுக்கெல்லாம் சொல்லாமல் இருக்க முடியவில்லை. எனது வாழ்க்கையில் பல பிரச்சினைகளை இப்போது நான் சந்தித்து வருகிறேன். அதனால் மிகவும் மனதளவில் துன்புற்றிருக்கிறேன். அன்று வெள்ளிக்கிழமை இரவு. எனது கவலைகளை என்னுடைய 'ராக்கி' சகோதரனிடம் [அவரும் பாபா அடியார்தான்] சொல்லிக்கொண்டிருந்தேன். மறுநாள் முகநூலில் ஒரு ஸாயி அன்பர் பகிர்ந்திருந்த ஒரு பதிவைப் பார்த்ததும் பேச்சிழந்து போனேன். கண்களில் நீர் நிறைந்தது.அந்தப் பதிவை சற்றும் மாற்றாமல் அப்படியே இங்கே தந்திருக்கிறேன்.


 
தனது பிள்ளைகளுக்கு பாபா அளிக்கும் செய்தி.:

ஓம் ஸாயிராம். உங்களுக்கு பாபா வழங்கும் அருளாசி: எனது பணிவன்பான வணக்கம். ஷீர்டியில் வாழும் பக்கீருக்கு எனது முழு வாழ்க்கையையும் அர்ப்பணிக்கிறேன். நானாவலி என்னும் நான் இங்கே நமது பாபாவின் அருளாசியை ஏந்தி வந்திருக்கிறேன். இன்று மதிய ஆரத்தியின்போது, பாபா என்னை அருகே அழைத்து, கீழ்க்காணும் செய்தியை உடனே தனது அன்பர்களுக்குச் சொல்லுமாறு என்னைப் பணித்தார்.

"எனதன்புக் குழந்தையே, உனது வலி மிகவும் கடுமையானதென எனக்குத் தெரியும். உனது மனம் குழப்பத்தாலும், சந்தேகங்களாலும் சூழ்ந்திருக்கிறது எனவும் தெரியும். ஆனால், ஏன்? எதற்காக வீணான கவலைக்கு உள்ளாகிறாய்? அசைக்கமுடியாத நம்பிக்கையும், முழுமையான பொறுமையும் கொண்டவரே என்னை அடைய முடியும். ஆனால், நான் ஒன்றும் கண்டிப்பு மிகுந்த ஆன்மீக குரு கிடையாது. என்னருமைக் குழந்தையே.... நான் உனது பாபா. உனது நல்வாழ்வுக்காகாவே நான் இங்கிருக்கிறேன். ஆனால், எல்லாமே சுலபமாகக் கிடைத்துவிட்டால் அதற்கு என்ன மதிப்பு இருக்கிறது, சொல். கொஞ்சம் எண்ணிப் பார். அதுவும் தவிர, நீ என் குழந்தை. என்னுடையவர். நீ மிகவும் உறுதி படைத்தவள். உன்னைத் தாக்கும் பிரச்சினைகளைத் தாங்கும் உறுதி கொண்டவள். சற்று அமைதியாக இரு. இந்த உலகே தலைகீழாகப் போகட்டுமே.... நான் கூட இருக்கிறேனே! நான் உன்னுடனேயே இருக்கிறேன். பிற‌கு எதற்காக‌ மற்றவர் சொல்வதைப் ப‌ற்றிக் கவலைப்படுகிறாய்? உனது வேலையைக் கவனமாகச் செய்து வா. மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன்.

இந்தப் ஃபக்கீரின் அன்பைப் பாருங்களேன். என்ன சொல்ல இருக்கிறது? திட்டுகிறார்; ஆனாலும் மார்போடு சேர்த்து அணைத்துக் கொள்கிறார். எப்போதும் உங்கள் நினைவாகவே இருக்கிறார். சரி, இப்போது நான் திரும்பிச் செல்லவேண்டும். இல்லாவிட்டால், துவாரகாமாயியில் எனக்கு எடுத்து வைத்திருக்கும் மதிய உணவு ஆறிப்போய்விடும்! ஜெய் பாபா!

சில நிமிடங்கள் கழித்து, அதே அன்பர் இட்ட மற்றொரு பதிவையும் கண்டேன்.

"சரணாகதி பிரார்த்தனை":

ஏன் பதட்டப்படுகிறாய்? உனது வேலைகளை எல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன். நான் ஒருவனே அவற்றைப் பற்றி எண்ணுபவன். நீ என்னிடம் சரணடையும் நேரத்துக்காகவே நான் காத்துக்கொண்டிருக்கிறேன். அதன் பிறகு, நீ எதைப் பற்றியும் எதற்காகவும் கலங்க வேண்டாம். பயத்துக்கும், அவநம்பிக்கைக்கும் விடை கொடு. என்னை நீ நம்பவில்லை என்பதை நன்றாகவே நிரூபணம் செய்கிறாய். அதை விடுத்து, நீ என்னிடம் கண்மூடித்தனமாக நம்பிக்கை கொள்ளவேண்டும். உனது கஷ்டங்களிலிருந்தும், பிரச்சினைகளிலிருந்தும் உனது எண்ணங்களை முழுதுமாக விலக்குவதே சரணாகதி என்பது. அனைத்தையும் என் கைகளில் ஒப்படை. " பிரபு, நீங்கள் நினைப்பதே நடக்கும். எனவே நினையுங்கள்' எனச் சொல்லு. அதாவது, 'தேவா! எனது துயரங்களையெல்லாம் உங்கள் கைகளில் எடுத்துக் கொண்டமைக்காக எனது வந்தனங்கள். அவற்றை நீங்கள் தீர்ப்பீர்கள். எதைச் செய்தாலும், அது எனது மேலான நன்மைக்கே!" எனப் பொருள்.

ஒன்றின் விளைவுகளைப்பற்றி நினைப்பது சரணாகதி ஆகாது. அதாவது, ஏதேனும் ஒரு செயல் நீ நினைத்ததுபோல நிகழவில்லை என்று நீ வருந்தினால், நான் உன் மீது கொண்ட அன்பை நம்பவில்லை எனக் காட்டுகிறாய். உனது வாழ்க்கை என் பொறுப்பில் இருக்கிறது எனவும், எதுவும் அதிலிருந்து தப்ப முடியாது எனவும் நீ நிரூபிக்க வேண்டும். இது எவ்வாறு முடியுமென ஒருபோதும் நினையாதே. என்ன நடக்குமோ என அஞ்சாதே. இதுபோன்ற எண்ணங்களுக்கு நீ ஆளானால், நீ என்னை நம்பவில்லை எனப் பொருள். நான் இதை சரி செய்ய வேன்டுமெனத்தானே நீ நினைக்கிறாய்?... உண்டா? இல்லையா/ எனச் சொல். அப்படியானால், நீ இதைப்பற்றிக் கவலைப்படுவதை நிறுத்த வேண்டும். முழுமையாகச் சரணடைந்தால் மட்டுமே நான் உன்னை வழிநடத்த இயலும். நீ நினைக்காத வேறொரு வழியில் உன்னைச் செலுத்தும்போது, நானே உன்னை என் கைகளில் தாங்கிச் செல்கிறேன். உனது எண்ணங்களும், விடாப்பிடியான கருத்துகளும், உனது கவலைகளும், உன்னை நீயே காப்பாற்றிக் கொள்ளலாம் எனும் நினைபும்தான் உன்னை தடுமாறச் செய்கின்றன. லௌகீகமோ, ஆன்மீகமோ, எதை வேண்டினாலும் சரி, என்னைப் பார்த்து, "தேவா, நீங்கள் மனம் வையுங்கள்" என ஒருவன் சொன்னால், என்னால் செய்ய முடியாத காரியங்களே கிடையாது. பிறகு அவன் தனது கண்களை மூடிக்கொண்டு, நிம்மதியாக உறங்கலாம். என் மீது முழுமையாக நம்பி வேண்டினால் மட்டுமே, உனக்கு வேண்டியதெல்லாம் நிறையக் கிடைக்கும். உனக்கு வலிக்கும்போது, உனது விருப்பத்துக்குத் தக்கவாறு மட்டுமே நான் அதில் ஈடுபடவேண்டுமென நீ நினைக்கிறாய். என்னை நம்பாமல், உனது தேவைக்கு நான் வளைந்து கொடுக்கவேண்டுமென எண்ணுகிறாய். நோய்வாய்பட்டிருக்கும்போது, ஒரு மருத்துவரிடம் தனக்கு வேண்டியவாறு சிகிச்சை அளிக்கும்படி கேட்கும் நோயாளியைப்போல இருக்காதே. அப்படி இல்லாமல், கஷ்டமான நேரங்களில்கூட, 'தேவா, இந்தப் பிரச்சினையைத் தந்ததற்காக உன்னை வாழ்த்தி வண‌ங்குகிறேன். நீ விரும்பும் வண்ணம் இதற்கானத் தீர்வை இந்த துயர் மிகுந்த, தாற்காலிக வாழ்வில் நீ அளிக்க வேண்டுமென வேண்டுகிறேன். எனக்கு எது நல்லதென உனக்கே தெரியும்' என வேண்டு. ஒருசில நேரங்களில், கஷ்டங்கள் குறைவதற்குப் பதிலாக அதிகமாகுவதாக உணரும்போதும், அதற்காகப் பதட்டப்படாமல், கண்களை மூடிக்கொண்டு, 'தேவா, நினது விருப்பமே நிகழும். நீயே அதை எண்ணுவாயாக!' எனப் பிரார்த்தனை செய். அப்படி நீ செய்யும்போது தேவையான நேரத்தில் ஒரு அதிசயத்தை நிகழ்த்திக் காட்டுவேன். என்னை நீ முழுமையாக நம்பினால் மட்டுமே நான் அப்படி நினைப்பேன். நான் எப்போதுமே நினைத்துக்கொண்டிருப்பேன், ஆனால் நீ முழுமனதுடன் நம்பினால் மட்டுமே என்னால் உதவ முடியும்....."

இதற்குமேல் இனி வாசகர்களின் கற்பனைக்கே விடுகிறேன். பாபாவிற்கு என்னால் நன்றி சொல்லவே வார்த்தைகள் இல்லை. அத்தனையும் பாபாவின் ஆசிகளே! பாபாவின் இந்தக் கருணையால் நான் மிகவும் நெகிழ்ந்துபோனேன். எனது பாபா என்னைத் தேற்றினார்.
தன் குழந்தைகள் மேல் மிகவும் கருணை கொண்ட அன்புள்ள‌வர் பாபா. நாம் எப்படி இருந்தாலும், அதை வைத்து அவர் நம்மை எடை போடுவதில்லை. தனது அன்பையும், ஆசிகளையும் எப்போதும் நம் மீது பொழிகிறார். தற்போது கஷ்டநிலையில் இருக்கும் அனைவரும் சற்றும் மனம் தளராதீர்கள். பாபா நம்முடனேதான் இருக்கிறாரவர் நம்முடனேயே இருப்பதால் நாம் சற்றும் கவலைப்படத் தேவையில்லை. ஏனெனில், அவர் நம்மைப் பார்த்துக் கொள்வார். உங்களுடைய‌ நெருக்கமான‌ அனைவருடனும் இந்தச் செய்தியைப் பகிர்ந்து கொள்ளுங்கள் என்று மட்டுமே நான் வேண்டுவேன். நம்மில் பலரும் சிரம தசையில் இருக்கலாம். சில சமயங்களில், அது சகிக்க முடியாமல்கூட இருக்கலாம். நமது பூர்வ ஜன்ம கர்மாவினால் இதையெல்லாம் அனுபவிக்கிறோம். ஆனால், பாபாவின் இந்த அருளாசி அவர்கள் அனைவருக்கும் தெம்பையும், தைரியத்தையும் கொடுத்து, பிரச்சினைகளைச் சமாளிக்க உதவி செய்யும். இதை பகிர்ந்ததில் ஏதேனும் தவறு இருக்குமானால், பாபா என்னை மன்னிப்பாராக! உங்களது ஆசிகளை எப்போதும் எங்கள் மீது அருளுங்கள்.
ஸ்ரீ அனந்தகோடி ப்ரஹ்மாண்டநாயக ராஜாதிராஜ யோகிராஜ பரப்ரஹ்ம ஸத்சிதானந்த ஸத்குரு ஸாயிநாத் மஹராஜ் கி ஜெய் ! .

அனைத்து ஸாயி அடியார்களுக்கும் ஓம் ஸாயி ராம்.

விஜய் ராமசாமி என்னும் எனது முதல் பதிவு இது. இங்கே வருவதைப் படிக்கவும், எனது அனுபவத்தைப் பகிரவும் மிக ஆனந்தமாக இருக்கிற‌து. நவீன ஸாயி ஸத்சரித்ரம் ஒன்றை தற்போதைய அடியார்களின் அனுபவங்களின் மூலம் பகிர்ந்துகொள்ளும் அற்புத உணர்வை இந்தத் தளம் ஏற்படுத்தித் தந்திருக்கிறது. அதற்காக எனது வந்தனங்கள் ஸாயி அனுபவங்களைப் பகிரும் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்கிறேன்.

எனது அனுபவம் ஒன்றை இப்போது சொல்கிறேன். 2001 மாடல் 'ஸான்ட்ரொ' கார் ஒன்றை நான் வாங்கினேன். அதிகம் பழக்கம் இல்லாத ஒரு ஓட்டுநர் நான்; இப்போதும் அப்படித்தான்! விரைவில் எனக்கு நல்ல திறமையை பாபா அருளுவார் என நம்புகிறேன். முன்னனுபவம் அதிகம் இல்லாதிருந்தும், ஏதோ ஒரு குருட்டு நம்பிக்கையில் அந்தக் காரை எடுத்துக்கொண்டு ஒரு சுற்று சென்றுவரலாம் எனக் கிளம்பினேன். முன்பே சொன்னதுபோல, அனுபவம் இல்லாத நான் வீட்டை விட்டுக் கிளம்பிய சிறிது நேரத்திலேயே, ஒரு மோட்டார் சைக்கிளை இடித்துவிட்டேன். வழக்கம்போல, எல்லாரும் என்னைச் சூழ்ந்துகொள்ள, பயந்துபோன நான் ஸாயிபாபாவை உதவிக்கு அழைத்தேன்.....

இன்னும் பலர் வந்து சேரவே, நான் மிகவும் கலங்கிப்போனேன். இது 2013-ல் நிகழ்ந்தது. போக்குவரத்து காவலர் வந்து யார் மீது தவறு என முடிவு செய்யத் தொடங்கினர். ஏதோ மோசமாக நடக்கப்போகிறதோ என நினைத்து, நானும், எனது மனைவியும் பயந்து நின்றோம். அப்போது யாரும் எதிர்பாராதவிதமாக ஒரு 20 வயது இளைஞன் அங்கே வந்து, தான் விபத்து நடந்ததைப் பார்த்ததாகவும், மோட்டார்சைக்கிள்காரர் தவறான பாதையில் வந்ததாலேயே இது நிகழ்ந்ததாகவும் சொன்னார். கூடியிருந்தவர்களில் சிலரும் எனக்கு ஆறுதலாகச் சொல்லி, என்னைக் காப்பாற்றுவதாகச் சொன்னார்கள்.

70 வயது மதிக்கத்தக்க ஒரு பெரியவரும் வந்து ஆறுதல் கூறினார். பைக்கில் வந்த இரண்டு பேர்களில் ஒருவருக்கு மட்டும் கையில் லேசாக அடிபட்டதால், அவர் மருத்துவமனைக்குச் சென்று, கட்டுபோட்டுக்கொண்டு வந்தார். நானும் அவர் கூடச் சென்றுவந்தேன். நான் அவரிடம் மனிப்பு கேட்க, அவரும் பெருந்தன்மையாக மன்னித்தார். பெரிதாக ஒன்றும் நடக்காததில் மகிழ்ந்தேன்.

இதற்கிடையே, தனது காரிலும் அடிபட்டிருப்பதாக்ச் சொல்லி வேறொரு ஓட்டுநர் வந்து என்னிடம் பணம் கேட்டு மிரட்டினார். ஆனால், காவலர்கள் அசைந்து கொடுக்கவில்லை. கூட இருந்தவர்களும் எனக்கு ஆதரவாகவே குரல் கொடுத்தனர்.

சுற்றியிருந்த மக்களாலும், காவலரின் துணையாலும், ஸாயிபாபாவின் அருளாலும், அபராதம் ஏதும் இல்லாமல் விஷயம் முடிந்தது. காவலரில் ஒருவர் வழக்கில்லாமல் தப்பிக்க 500 ரூபாய்கள் கேட்டார். நானும் சந்தோஷமாகக் கொடுத்துவிட்டு, வீடு திரும்பினேன்.

இரண்டு நிகழ்வுகள் தெளிவாகத் தெரிந்தன. அந்த 20 வயது இளைஞன் எங்கிருந்தோ வந்து காப்பாற்றினான். தன்னை ஒரு கேபிள் ஆப்பரேடர் எனச் சொல்லிக்கொண்டான். அதற்கு முன்னுமோ, பின்னுமோ அவனை நான் பார்த்ததே இல்லை. அடுத்து அந்த 70 வயதுக் கிழவர், எனக்கு ஆறுதல் கூறிச் சென்றது.

அந்த நிகழ்வுக்குப் பிறகு அவ்விருவரையும் நான் காணவில்லை. நமதருமை ஸாயிபாபாதான் இரண்டு உருவங்களை எடுத்துக்கொண்டு வந்து, எனக்கு உதவினார் எனும் முடிவுக்கு நான் வந்தேன். இந்த உதவிக்காக நான் பாபாவுக்கு என்றென்றும் கடன்பட்டிருக்கிறேன். எனக்கிருந்த பதட்டத்தில் இதை உணர்ந்துகொள்ள அப்போது என்னால் இயலவில்லை. ஸாயிபாபாவுக்கு கோடி கோடி வந்தனங்கள். எனது ஆபத்துக் காலத்தில் எனக்கு உதவ வந்த பாபாவுக்கு என் வணக்கம்.

இன்னும் கார் ஓட்ட சரியாகக் கற்றுக்கொள்லவில்லை. பாபாவின் அருளால் அதுவும் சீக்கிரமே கைகூடுமென நம்புகிறேன். இன்றுதான் இதை எழுதவேண்டுமெனத் தோன்றியது. தவறிருந்தால் மன்னிக்கவும். நமது அன்பான ஸாயி தனது பக்தர்களை எந்த நிலையிலும் கைடாமல் காப்பார் என உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

இந்த நிகழ்வுக்குப் பிறகு பாபா மீது நான் கொண்டிருந்த நம்பிக்கை இன்னமும் அதிகமாயிற்று. உங்களுக்கும் அப்படியே என நினைக்கிறேன். இதில் ஏதாவது விட்டுப்போயிருந்தல் பாபா மன்னிப்பாராக! இதை எழுத நீங்களே காரணியாக இருந்தீர்கள். ஒவ்வொரு நாளும் நான் ஆசீர்வதிக்கப்பட்டவனாக உணர்கிறேன்.

ஸ்ரீ அனந்தகோடி ப்ரஹ்மாண்டநாயக ராஜாதிராஜ யோகிராஜ பரப்ரஹ்ம ஸத்சிதானந்த ஸத்குரு ஸாயிநாத் மஹராஜ் கி ஜெய் ! .

Loading
Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.