Wednesday, March 15, 2017

Poonthamandalam Ananda Sai temple

ஆனந்த ஸாயி 
- பூந்தண்டலம் - சென்னை

{Translated into Tamil by : Dr. Sankar Kumar, USA}
(E mail:- <Sankar.Kumar@ssa.gov)  
 
அன்பார்ந்த வாசகர்களே, அனைவருக்கும் இனிய பாபா நாளான புனித குருவார வாழ்த்துகள்!

கெர்மெனி ஸாயி கோவிலைப் பற்றிய பதிவுக்குப் பிறகு நீண்ட நாட்களாக நான் கோவில் பதிவுகள் எதுவும் போடவில்லை என அறிவேன். அதற்கென விசேஷ காரணங்கள் எதுவுமில்லை. சொல்லப்போனால், கைவசம் ஒரு சில பதிவுகள் தயாராகவே இருக்கின்றன; ஆனால், அவற்றைப் பதிவிடும் வேளை இன்னும் வரவில்லை. அனைத்தும் பாபாவின் ஆணைப்படியே நடக்கும் என்பதே முடிவான முடிவு.

இதுவரை எழுதியவை எதுவும் பதிவிட வேண்டுமெனத் திட்டமிட்டு எழுதப்பட்டவை அல்ல. ஒரு சில தேடல்களுக்குப் பின்னரோ, அல்லது, பாபாவால் அவரது பக்தர்களால் அனுப்பப்பட்டோதான் அவை வெளியாயின. இங்கு நடப்பவை அனைத்துமே வினோதமான முறையில் பாபாவால் தீர்மானிக்கப்பட்டு, அவரால் நிகழ்த்தப்படும் பதிவுகளே இங்கு வெளியாவதால், நானும் அவற்ரையெல்லாம் அவர் விருப்பப்படியே விட்டு விடுகிறேன்.

ஸாயி பக்தை ஆஷாலதா அவர்கள் பாபாவின் ஆணையால் உந்தப்பட்டு, சென்னையில் இருக்கும் ஒரு பாபா கோவிலைப் பற்றிய விவரங்களை அனுப்பியிருக்கிறார். மேலும் சில கோவில்களைப் பற்றியும் விவரங்கள் சேகரித்து வருகிறார். பாபாவின் விருப்பப்படியே அவை நிகழும். சென்னை, பூந்தண்டலத்தில் இருக்கும் ஆனந்த ஸாயி ஆலயம் பற்றிய விவரணையை இங்கே படியுங்கள்.

  ஆலய வரலாறு

ஸ்ரீ ரமணன் என்னும் ஸாயி அடியவருடன் இதன் வரலாறு துவங்குகிறது.

அவரும், அவரது குடும்பத்தாரும் தீவிர ஸாயி பக்தர்கள். சென்னை, போர்ட் ட்ரஸ்டில் அவர் வேலை செய்து வந்தார். ஸ்ஹீர்டி ஸாயி படம் ஒன்றை அவரது தாயார் அவருக்கு அளித்து, தினமும் வணங்கி வருமாறு கூறினார். 1997-ல் அவரும், அவரது நண்பர்கள் சிலரும் தங்களது எதிர்காலம் பற்றி அறிந்துகொள்ள ஒரு ஜோதிடரிடம் சென்றனர். ரமணரின் ஜாதகப்படி அவர் எதிர்காலத்தில் ஆலயம் ஒன்றைக் கட்டுவார் என இருந்தது. அப்படி எதுவும் எண்ணமில்லாத அவருக்கு இது மிகப் பெரிய அதிர்ச்சியை அளித்தது. எந்த தெய்வத்தின் கோவிலைக் கட்டப்போகிறோம் என்னும் குழப்பமும் எழுந்தது.
1998-ம் ஆண்டில் சென்னை கடற்கரை அருகே ஈஞ்சம்பாக்கத்தில் இருக்கும் ஸாயி கோவிலுக்கு செல்ல நேர்ந்தது. அங்கே அவருக்கு ஸாயியின் அருட்பார்வையும், 'நான் ஒரு புது ரூபத்தில் உன்னிடம் வருவேன்; நீ எனக்கு ஒரு ஆலயம் கட்டு' என்னும் கனவும் கிடைத்தது. அதன் பிறகு, அவர் இல்லறத்திலிருந்து விடுபட்டார். காலணி அணிவதையும் விடுத்தார். ஸாயிநாதனை தன் மனக்கோவிலில் காணத் தொடங்கினார். அவருக்கு ஆலயம் அமைக்க தகுந்த ஒரு இடத்தைத் தேடலானார். மிகுந்த சிரமத்துக்குப் பின்னர், ஒரு சிறிய இடம் விலைக்கு வருவதை அறிந்தார். ஆனால், அதுவும் ஏதோ சட்டப் பிரச்சினையில் சிக்கியிருந்தது.

இந்த சமயத்தில் அவரது நண்பர் ஒருவர் கட்டிய வினாயகர் ஆலய கும்பாபிஷேக நிகழ்ச்சியில் ரமணர் கலந்துகொண்டார். அங்கே அந்த நண்பர் மூலம், திரு. லியோ முத்து என்னும் பெரிய மனிதரின் அறிமுகம் கிடைத்தது. அவரிடம் தான் ஸாயி ஆலயம் கட்டுவதற்காக வாங்க நினைத்திருக்கும் நிலப் பிரச்சினையைத் தெரிவித்து உதவி கோரினார். அதைக் கேட்ட திரு முத்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். ஏனெனில், தான் கட்ட நினைத்திருக்கும் ஸாயிராம் கல்லுர்ரிக்குள் ஒரு ஆலயம் கட்ட நினைத்திருந்த அவர், சுமார் 33 ஏக்கர் நிலத்தை திரு. ரமணரிடம் அளித்து, ஆலயம் கட்டுவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய ஆதரவளித்தார்.

இங்கேதான் ஸாயி லீலை நிகழ்கிறது!

கடந்த 27 ஆண்டுகளாக துபாயில் வசித்துவந்த ஸூர்யா தம்பதியினரை பாபா இந்தக் கூட்டுறவில் இணைத்தார். அந்த அம்மையாரின் கனவில் ஸாயி வந்து, இதுவரை எங்கும் வழக்கமாகக் காணப்படும் ஸாயி உருவங்களைப் போலல்லல்லாமல், வித்தியாசமான வகையில் ஒரு சிலை செய்து பிரதிஷ்டை செய் என உத்தரவிட்டிருந்தார். பூந்தண்டலம் என்னும் கிராமத்தில் அது நிறுவப்பட வேண்டுமெனவும், இதே எண்ணம் கொண்ட ஒருவரை அங்கே சந்திக்க வேண்டுமெனவும் அதில் அவர் சொல்லியிருக்கிறார்! இந்த கிராமம் எங்கே இருக்கிறது எனக்கூட அந்த அம்மையாருக்குத் தெரியாது. யாரைத் தொடர்பு கொள்வதெனவும் தெரியாமல் தவித்திருக்கிறார். ஸாயி உருவச்சிலையை யார் வடிப்பது எனவும் தெரியாது. அது எந்த வகையில் இருக்க வேண்டுமெனவும் தெரியாது.
சென்னைக்கு வந்து, இந்த கிராமம் எங்கே எனக் கண்டுபிடித்து, அங்கே வந்தபோது, இந்த நிலத்தில் ஒரு ஆலயம் கட்டவேண்டுமென்னும் எண்ணத்துடன் அங்கேயே குடியிருக்கும் ரமனணரை அவர் சந்தித்தார். சரியான ஒரு ஸாயி சிலை கிடைக்க வேண்டுமென ரமணர் காத்திருந்தார்.

மீண்டும் சென்னை திரும்பும்வழியில், காஞ்சீபுரம் சென்று, அங்கிருக்கும் கங்கர மடத்தில் காஞ்சிப் பெரியவரை தரிசனம் செய்து செல்லலாம் எனச் சென்றபோது, ஸ்ரீ பரமாச்சார்யாளின் இரண்டரை அடி உருவச்சிலை ஒன்றை அங்கே கண்டனர். அதன் அமைப்பு சற்று வித்தியாசமாக இருக்க, அதனால் கவரப்பட்டு, அதே போன்ற உருவச்சிலையை ஸாயிக்கு வடிக்க முடிவெடுத்தனர்.சென்னையில் இருக்கும் டி.பி.ஆர். கணேஷ் என்பவரின் விலாசம் கிடைக்க, அவரது கைவண்ணத்தில், ஸாயி அருளால் ஆறரை அடி உயர் ஃபைபர் க்ளாஸ் ஸாயி உருவச்சிலை வடிவமைக்கப்பட்டது. இந்த விவரங்களை ரமணருக்கு திருமதி. சூர்யா தெரிவிக்க, 2006-ல் கோகுலாஷ்டமி நன்னாளில்சிலை அவரிடம் அளிக்கப்பட்டது. ஸாயியின் கருணா லீலையை இருவரும் எண்ணி வியந்தனர்.

திரு. கணேஷ் அவர்களைப் பற்றிய மேல்விவரம் வேண்டுவோர் ஹிந்து நாளிதழில் வெளியான இந்த சுட்டியில் அறியலாம். 

பாபா சிலையின் விசேஷம்

இதுதான் திரு கணேஷ் வடித்த சிலை.
ஸ்ரீ ஆனந்த ஸாயி தியான மண்டபத்தில் வைக்கப்படப்போகும் இந்த சிலை மிகவும் அபூர்வமானது.
ஆசியாவிலோ, அல்லது உலகில் வேறெங்குமோ காணப்படாத 'ஃபைபர் க்ளாஸ்' என்னும் வடிவமைப்பில் இது செய்யப்பட்டுள்ளது. மனித உடலில் ஓடும் நரம்புகளைப் போலவே இதிலும் காணலாம். தனது வீட்டு வாசலில் [போர்ட்டிகோவில்] இந்தச் சிலையை தற்போது வைத்து, ஆலய கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருக்கிறார். ஸ்ரீ ஆனந்த ஸாயி தியான மண்டபம் என இதற்குப் பெயரிட்டு, திரு லியோ முத்து அவர்கள் அளித்த நிலத்தில் மிகப் பெரிய ஆலயம் நிறுவ முனைந்திருக்கிறார்.


ரமணரின் வாழ்வில் ஸாயி நிகழ்த்திய அற்புதம்:

பல அதிசயங்கள் அவரது வாழ்க்கையில் ஸ்ரீ ஸாயி நிகழ்த்தியிருந்தாலும், ஒரு சிலவற்றை இங்கே அவர் சொல்கிறார்.

தியான மண்டபம் கட்டும்போது, ஒரு சிறு பிரச்சினை எழுந்தது. வடதிசை பகுதியை நோக்கிய மேற்கூரையில் [படம் காண்க] ஒரு சிறிய ஸாயி சிலையைக் காணலாம். கொடி அங்கே நாட்டப்படவிருந்தது. அதனருகில் 'ஓம்' என்னும் வடிவில் ஒரு பீடம் அமைக்க ரமனர் எண்ணியிருந்தார். அதற்காக ஒரு சிறு பகுதியை அங்கே மூடாமல் விட்டிருந்தனர். இந்தப் பணியைச் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டவர், அதைச் செய்யாமல் காலம் தாழ்த்தவே, திடீரென மழை பெய்தால், உள்ளிருக்கும் சிலை ஈரமாகுமே என சற்று பதட்டம் ஏற்பட்டது.. எனவே வேலையைச் சீக்கிரமாக முடிக்கும்படி பொறியாளரை இவர் அவசரப்படுத்தினார். ஏன் இப்படி தாமதமாகிறது எனவும் தெரியாமல், இதை எவ்வாறு கையாள்வது எனவும் தெரியாமல் ரமணர் ஸாயியை வேண்டினார்.

பாபா செயல்பாட்டினை பாபாவே அறிவார். பாபா தனக்கென வேறொரு திட்டம் வைத்திருந்தார். ரமணரின் கனவில் அவர் வந்து, 'தாமரை வடிவிலான அன்னையின் பீடம் இங்கே அமைக்கப்படவேண்டும்' என அவர் சொல்ல, அதன்படியே வேலைகள் துரிதமாக நடந்தேறின. தாமரை வடிவ பீடமும் அழகாக அங்கே வந்தமைந்தது. கூரையும் சரியாக மூடப்பட்டது.


மற்றொரு ஸாயி லீலை

ஒதுக்குப்புறமான இடத்தில் இந்த ஆலயம் அமைந்திருந்ததால், கட்டுமானச் செலவுக்கான பணப்புழக்கம் சரிவர அமையாமல், ஸாயியின் உதவியை ரமணர் நாடினார். அவரது கனவில் ஸாயி வந்து, இது வளமற்ற பூமி என்பதால், இங்கு பயிர் விளையும் சாதியக்கூறு கிடையாது எனவும், அதற்காக ஸ்வர்ணாகர்ஷன பைரவர் சிலையை நிறுவினால், அதன் மூலம் இந்த நிலம் வளம் பெறும் என ஆசியளித்தார். தானே 'ஸ்வர்ண' வடிவில் இந்த ஆளயத்தில் வருவதாகவும் வாக்களித்தார். [படம் காண்க]

சில நாட்களுக்கு முன் ஒரு ஆமை ஆலயத்தின் முன்னே வந்து தன்னைக் காட்ட, த்வாரகாமாயியில் இருப்பது போலவே, இங்கும் கூரம் அவதாரமாகிய ஆமை சிலையை நிறுவவும் எண்ணம் கொண்டார்.

வடக்கு, தெற்கு திசைகளைப் பார்த்த்படி ஸாயி நின்றுகொண்டு, தன்னைக் காண வருமாறு தன் அடியார்களை அழைப்பதுபோன்ற நிலையில் இந்த ஆலயம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

மனிஷாஜி, இங்கே சொல்லப்பட்டிருப்பவை யாவும் திரு. ரமணர் நேரடியாக என்னிடம் சென்ற ஆண்டு கூறியவை. என் நினைவிலிருந்து எழுதுவதால், ஒரு சில விஷயங்களை என் தாய் மூலம் 2 நாட்களுக்கு முன், அவரை சந்தித்து உறுதிப்படுத்திக்கொண்ட பின்னரே இங்கே அளிக்கிறேன். என் ஸாயி மூலம் இவற்றை இங்கே த‌ருகிறேன்.

இவ்வளவு சிரத்தையுடன் இந்த விவரங்களை இங்கே அளித்த ஆஷலதாவிற்கும், அவரது தாயாருக்கும் எனது நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஜெய் ஸாயி ராம்.

1. பூந்தண்டலம் ஸாயி மந்திர் 
கால நேரம்
காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை. 
கட்டுமான வேலைகள் இன்னமும் நடந்துகொண்டிருப்பதால், யாராவது ஒரு அடியார் அங்கே எப்போதும் இருப்பார். இல்லாவிட்டாலும், திரு. ரமணரின் இல்லம் 5 தப்படிகள் அருகிலேயே இருப்பதால், உடனே வந்து ஆலயத்தைத் திறந்து விடுவர்.

2. ஆரத்தி நேரம் 

ஷீர்டி மந்திர் நேரப்படியே.
காகட் - காலை 5 மணி
மத்யான - நண்பகல் 12 மணி
தூப் - அந்திப் பொழுது
ஷேஜ் - இரவு 10 மணி

3. பண்டிகை தினம்

ஸாயி புண்யதிதி
குரு பூர்ணிமா
ஸ்ரீ ராம நவமி
ஆலய ஆண்டுவிழா ஏப்ரல் 20

[சித்ரா பவுர்ணமி தினத்தை ஏப்ரல் 20க்குப் பதிலாகக் கொண்டாட திட்டம். ஏனெனில், இது ஸாயிக்கும், ஸ்வர்ணாகர்ஷண பைரவருக்கும் உகந்த நாள். ஸாயி உருவச்சிலை ஆலயம் வந்த நாள் ஜனவரி 26 பிரதிஷ்டை தினம்]

4. நிர்வாகக் குழு:

ஷீர்டி ஸ்ரீ ஸாயி சிரஞ்சீவி நிறுவனம்.
இது ஒரு குழுவாகச் செயல்பட்டு வருகிறது. மேலும் சிலரை இதில் இணைக்க திட்டம் உண்டு.

5. அன்னதானம் 

எல்லா பண்டிகை தினங்களிலும் அன்னதானம் உண்டு. ஏனைய நாட்களில் இருக்கும் பிரசாதம் அனைவருக்குமாகப் பங்கலிக்கபடும். ஆலயத் தேவைக்கேற்ப இதை விரிவுபடுத்தும் எண்ணம் இருக்கிறது.

6. எதிர்கால 'சமூக நலத்' திட்டங்கள்:

35 ஸெண்ட் நிலத்தில் கட்டவே சட்ட அனுமதி இருக்கிறது. ஆனால், 70 ஸெண்ட் நிலம் கைவசம் இருப்பதால், 'துவாரகாமாயி முதியோர் இல்லம்' மற்றும் வேறு சில திட்டங்கள் துவங்க எண்ணம்.

நிறுவன இயக்குநர்

என்.வி. ரமணன்
தொடர்பு கொள்ள வேண்டிய ஆலய முகவரி :
எண் 4
11, ஸாயிபாபா நகர்,
பூந்தண்டலம்,
நந்தம்பாக்கம் போஸ்ட்,
குன்றத்தூர் [வழி],
சென்னை 600069
தமிழ்நாடு
இந்தியா
தொலைபேசி:
044-27178156 - 65468816
அலைபேசி
9840219388


வரைபடம்

தாம்பரத்திலிருந்து கிஷ்கிந்தா வழியாக 12 கி.மீ
பாண்ட்ஸ், பல்லாவரத்திலிருந்து திருநீர்மலை & பழந்தண்டலம் வழியே 12 கி.மீ.
குன்றத்தூரிலிருந்து நந்தம்பாக்கம் வழியே 10 கி.மீ.
ஸ்ரீபெரும்புதூரிலிருந்து, 12 கி.மீ. ஸ்ரீ ஸாயிராம் பொறியியல் கல்லூரி பின்பக்கம்.

மாற்றுவழி

குன்றத்தூர் பேருந்து நிலையத்திலிருந்து ஆட்டோ மூலம் - பயண நேரம் 30-45 நிமிடங்கள். [மாதா பொறியியல் கல்லூரி வழியே]. nஆலயத்தின் அருகிலேயே பேருந்து நிறுத்தம் அமைய ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. செயலாக்க காத்திருக்கிறோம்!


ஆலய இணையதளம்
 

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.