Monday, May 14, 2018

'ஒரு யோகியின் சுயசரிதை' -- ஆஷலதாவின் அனுபவம்

'ஒரு யோகியின் சுயசரிதை'
என்னும் நூலுக்கு ஸாயி
அளித்த தெய்வீக வழிகாட்டி
ஆஷலதாவின் அனுபவம்
(ஆங்கிலத்தில்: http://www.shirdisaibabakripa.org/)
(தமிழில் மொழிபெயர்ப்பு: Dr . சங்கர்குமார், USA )


அன்பார்ந்த ஸாயி அடியார்களே,

இனிய பாபா நாள் வாழ்த்து.
பாபாவின் அருளாலும், ஆசியாலும் நமது ஸாயி மாதாவின் அதிசயமான ஆனந்த அனுபவங்களை உங்களுடன் பகிர நான் மீண்டும் வந்துள்ளேன். ஸாயிபாபா நமக்கெல்லாம் குருவாகவும், தந்தையாகவும் இருந்தாலும், அவ்வப்போது பிற குருமார்களின் தெய்வீகத்தன்மையை நாம் அறியவும், ஆனந்திக்கவும் நம்மை ஆசீர்வதிக்கிறார். அனைத்து அருளாளர்களும் ஒருமித்த கருத்துடனே செயலாற்றுகின்றனர் என்பதையும்,ஒரு பரமானந்தத் தெய்வீக சக்தியின் ஒரு அங்கமாகவே செயல்படுகின்றனர் எனவும் நமக்கு நம்பிக்கை அளிக்கிறார்.
பாபாவால் ஆசீர்வதிக்கப்பட்ட சகோதரி ஆஷா அவர்கள் அவரது இனிய அனுபவங்களைப் பலமுறை நம்முடன் பகிர்ந்திருக்கிறார்.
எவ்வாறு இன்னொரு அருட்குருவின் தெய்வீகத்தைத் தாம் உணர பாபா அருளினார் என்பதை இங்கே அவர் சொல்லியவாறே உங்களுடன் பகிர்கிறேன்.
ஜெய் ஸாயிராம்.
மனிஷா பீஷ்த்

கருணையின் வடிவமான நமது பரமபிதாவான ஸ்ரீ ஸச்சிதானந்த ஸத்குரு ஸாயிநாத் மஹராஜ் எனக்கு மற்ற குருமார்களையும், மஹான்களையும் காட்டிக்கொண்டே இருக்கிறார். எவ்வாறு நான் ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்த ஸ்வாமியின் ஈர்க்கப்பட்டேன் என்பதை இந்தப் பதிவில் எழுதுகிறேன்.

தெய்வீக அனுபவங்களால் என்னை பக்குவமாக்கிக்கொள்ள அருளும் நமது ஸத்குரு ஸாயியின் பொற்றாமரைப் பாதங்களில் என் பணிவன்பான வணக்கங்களைச் சமர்ப்பிக்கிறேன். இந்த அனுபவங்களை உங்களெல்லாருடனும் பகிர்ந்துகொள்ளும் நல்வாய்ப்பினைத் தருவதற்காக சகோதரி மனிஷாவுக்கு எனது நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பல ஆண்டுகளாக, இங்குமங்குமாய் ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தரைப் பற்றிய செய்திகளைப் படித்து வந்தபோதிலும், 'ஒரு யோகியின் சுய சரிதை' என்னும் தெய்வீக நூலைப் படிக்கும் பேறு எனக்குக் கிட்டவில்லை. கடந்த 24/9/2016 அன்று எனது மகனின் பிறந்த நாள‌ன்று இந்த நூலை எனது அன்பு சகோதரி ஹரிணிஜி பரிசாக அளித்தார். இந்த நூல் கிடைத்ததை ஒரு பாக்கியமாகக் கருதி, அதைப் பாராயணம் செய்ய விரும்பினேன். ஆனால், பல்வேறு காரணங்களால் என்னால் அதைப் படிக்கும் சந்தர்ப்பம் நேரவில்லை.
ஒரு வியாழக்கிழமை காலையில் ஸ்ரீ ஸாயி தரிசனத்திற்குச் சென்று 'காகாட்' ஆரத்தியைக் கண்டு களித்து, பிறகு ஒரு சில சேவா காரியங்களில் நானும், என் கண‌வரும் ஈடுபட்டோம். அப்போது அர்ஜுனனுக்கு கண்ணன் கீதோபதேசம் வழங்கும் காட்சியடங்கிய ஒரு படத்தைக் கண்டேன். கண்ணனின் படத்தைக் கண்டு மயங்கிய நான் அந்தப் படத்தை வைத்துக்கொள்ள விரும்பினேன். ஆலய மேலாளரின் ஒப்புதலோடு அதை எடுத்துக் கொள்ள முதலில் விரும்பினாலும், ஸாயி தனது அருட்செயல் மூலம் எனக்கு ஒரு குறிப்பு காட்டட்டும் என மனதுக்குள் முடிவு செய்தேன்.

அந்த நேரம், நான் பல நாட்களாகச் சந்தித்திராத எனது தோழி ஸ்னிக்தாஜி அங்கே வரவும், நான் மனமகிழ்ந்தேன். வழக்கமாக இந்த நேரத்தில் தான் வருவதில்லை எனவும், இப்படி ஒரு சந்திப்பு நிகழ ஸாயியின் லீலையே காரண‌ம் எனவும் நாங்கள் பேசிக் கொண்டோம். சற்று நேரம் பேசிய பின், கொஞ்சம் வெளி வேலை இருப்பதாகவும், இன்னுமொரு 10 நிமிடங்களில் திரும்பி வரும்வரை நாங்கள் இருக்கவேண்டும் எனவும் வேண்டினார். மதிய ஆரத்தி நேரம் நெருங்கி வருவதால், நாங்கள் இருப்போம்  என அவரிடம் கூறினேன்.

திரும்ப வந்த அவரது கையில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் யோக நிலையில் அமர்ந்திருக்கும் ஒரு வண்ண‌ப்படம் இருந்தது. எனக்கு அதை அளித்த அவர் கூடவே, ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தரின் பொன்மொழிகள் பதித்த பெரிய தாமரை வடிவில் இருந்த இன்னொரு படத்தையும் அளித்தார். [அதை இங்கே தந்திருக்கிறேன்].
ஆச்சரியத்தால் திகைத்துப்போன நான், விரும்பிய கண்ணன் படத்தையும், கூடவே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தரைக் குறித்த ஆசியையும் அளித்ததற்காக பாபாவுக்கு நன்றி கூறினேன். எவ்வாறு ஸாயி என் மனத்திலிருந்த ஆசையை இவர் மூலம் நிறைவேற்றினார் என்பதை விளக்கி அந்த சகோதரிக்கும் நன்றி தெரிவித்தேன்.
அதைக் கேட்டு அவரும் ஆச்சரியமடைந்து, இந்த இரு படங்களையும் எனக்குத் தருவதற்காக அவர் சேமித்து வைத்திருந்தார் எனவும் இன்று என்னைக் கண்டதும் அதைத் தர ஒரு எண்ணம் வந்ததாகவும் கூறினார். கண்களில் நீர் மல்க, அவ்விரு படங்களையும் கொண்டு வந்து பூஜையறையில் வைத்தேன். டிசம்பர் 2017ல் விடுமுறையாக ஃப்ளோரிடா செல்ல முடிவெடுத்தோம்.  கிளம்பும் முன், அந்தப் புத்தகத்தை எடுத்து வந்து 'நீ வழியில் படி' என‌ என் மகனிடம் கூறினேன். வழக்கமாக என்னை மறுத்துப்பேசாத அவன், இந்த முறை 'வேண்டாம், பிறகு பார்த்துக் கொள்ளலாம் எனச் சொன்னான்!' நான் மீண்டும் வற்புறுத்தியதும், அப்படியானால் 'நீ ஏன் படிக்கக் கூடாது' என்றான். அவனை வற்புறுத்துவதற்குப் பதில் நானே என்ன் படிக்கக்கூடாது என உடனே எண்ணி, அந்தப் புத்தகத்தை என் கைப் பையில்  வைத்துக் கொண்டேன்.

பயணத்தின்போது அதைப் படிக்கலானேன். அதில் பொதிந்திருந்த அற்புதக் கருத்துக்களில்  மனம் ஆழ்ந்து போனது. அதன் காந்த சக்தி என்னை மிகவும் கவர்ந்தது. ஃப்ளோரிடாவில் புஜகேஷ்வர் ஆலயத்தில்  திங்கட்கிழமை பூஜை, அபிஷேகம் முதலியன கண்டு கழித்தப் பின் ஸ்வாமி விஜயானந்த ஸரஸ்வதி, மற்றும் திவ்யானந்தாஜி அவர்களுடன் பரமஹம்ஸர் உள்ளிட்ட பல்வேறு மஹான்களைக் குறித்து ஸத்சங்கம் நிகழ்ந்தது.

[மேலும் இரு ஸாயி ஆலயத்தையும்  தரிசித்தோம். அதைப் பற்றி பிறகு எழுதுகிறேன்.]

விடுமுறையிலிருந்து திரும்பிய உடனேயே  ஸ்னிக்தாஜியை அழைத்து, அவர் தந்து பரிசுகளுக்காகவும், அதன் மூலம் யோகியின் சுயசரிதையைப் படிக்கும் வாய்ப்பினைத் தந்ததற்காகவும் என் நன்றியையும் தெரிவித்தேன். அதற்கு அவர் கூறிய பதில் என்னை மேலும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அவரும், அவரது குருமார்களும் கடந்த சில மாதங்களாக இந்த நூலைப் பாராயனம் செய்து வருவதாகவும், ஜனவரி 5-ம் தேதி வரும் யோகியாரின் பிற‌ந்த நாளுக்கு முன்பாக அதை முடிக்கும் எண்ணத்தில்  இருப்பதாகவும் கூறினார். இது பற்றி ஏதும் அறியாமலேயே நானும் 10 நாட்களுக்கு முன்னர் பாராயண‌த்தை ஆரம்பித்திருந்தேன். இதுவரை 30 அத்தியாயங்களை முடித்து, ஜனவரி 5-க்குள் இன்னும் 20 அத்தியாயங்களை முடிக்க வேண்டியிருந்தது. நமது சத்குரு ஸாயியிடம் இதை முடிக்கின்ற மனோதிடத்தை அருளுமாறு வேண்டினேன். அவ்வாறே, ஜன. 5 இரவு 11 மணியளவில் பாராயணத்தை முடித்தேன். அந்த நேரத்தில் என்ன பிராசாதம் அளிப்பது என நினைத்தபோது, குளிர்பதனப் பெட்டியில் வைத்திருந்த ஸ்ட்ராபெரி பழங்கள் நினைவுக்கு வந்தது. அவற்றை அலம்பி, ஒருவேளை புளிப்பாக இருக்குமோ என எண்ணி, அதன் மீது சிறிது சர்க்கரை தூவினேன். [யோகி முதன்முறை அமெரிக்கா வந்தபோது முதல் உணவுக்குப் பின் இதைத்தான் தந்திருந்தார்களாம்!] ஆரத்தியின் பின் அவற்றை  உண்டபோது, தேன் போல இனிப்பாக இருந்தன! சர்க்கரை தூவாத ஒரு சில பழங்களையும் சாப்பிட்டுப் பார்த்தேன். அவையும் இனிப்பாகவே இருந்தன. ஸாயி எங்களுக்கு அளித்த இந்த நல்லாசிக்கு அவருக்கு நன்றி கூறினேன்.

யோகியைப் பற்றி மேலும் படிக்க என்னுள் ஆசை மிகுந்தது. ஜன். 27 அன்று கூகுலில்  தேடியபோது, ஸ்வாமி கிரியானந்தா அவர்கள் பரமஹம்சரைப் பற்றிப் பேசிய 2 மணி நேர யூட்யூப் விடியோ கிடைத்தது. யோகியுடனான தனது அனுபவங்களை அவர் விவரித்ததைக் கேட்டு நான் மெய் சிலிர்த்தேன். உடனே அந்த இணைப்பை எனது பிற தோழிகளுக்கும் அனுப்பி வைத்தேன். அப்போது ஸ்னிக்தாஜி தான் அமேஸான் மூலம் அனுப்பியிருக்கும் ஒரு பொருளை என் வீட்டு வாசலில் பார்க்கச் சொன்னார். அதை எடுத்து சாயியின் பாதங்களில் வைத்து, ஸ்னிக்தாஜிக்கும் எனது நன்றியைத் தெரிவித்தேன்.
அதைத் திறந்து பார்த்தபோது, பரமஹம்ஸர் அருளிய நல்லுரைகளின் தொகுப்பு அடங்கிய ஸி.டி. ஒன்று இருந்தது. எனது விருப்பத்தைப் பூர்த்தி செய்யும் ஸாயீயை நினைத்து, அந்த ஒலித் தகடை அணைத்துக் கொண்டேன். அதை ஸாயியின் பாதங்களில் வைத்து விட்டு, அடுத்த அறைக்குச் செல்லும்போது, எனது வலது கரமும், தலையும் பாரமாவதையும், ஏதோ ஒரு சக்தி என்னை முன்னே தள்ளுவது போலவும் உணர்ந்தேன். எனது வலது கை மிக வேகமாக முன்னும் பின்னுமாய் ஆடியது. நான் அணிந்திருந்த முழுக்கைச் சட்டை நீளமானது. எனது தலைமுடி மேலும் அடர்த்தியானது. உடனே நான் பரமஹம்ஸ‌ரின் பெயரைக் கூறி அழைத்தேன். அவர் அங்கே இருக்கிறாரோ எனவும் பார்த்தேன். ஆனால் அவர் தென்படவில்லை. ஆனால், அவர் என் மீது வந்திருக்கிறார் எனப் புரிந்தது. கண்ணாடி முன் நின்று என்னைப் பார்த்தேன். என் முகம், என் தலைமுடி, என் கை எல்லாம் அப்படியேதான் இருந்தன. அப்படியானால், அவர் எங்கே போனார்? எப்படி என்னுள் அவர் வந்தார்? ஓ ஸாயி, பரமஹம்ஸர் ஒரு கணம் என்னுள் பரவியதை என்னால் உணரமுடிந்தது. ஆனால் அவரைக் காணவில்லை. ஆச்சரியத்தில் என் மெய் சிலிர்த்தது.

பரமஹம்ஸரின் ஆலயத்துக்குச் செல்லும் ஆசை என்னுள் வளர்ந்தது. அடுத்த ஞாயிறன்று செல்ல முடிவு செய்தோம். எனது பூஜையறையில் 6 குருமார்களும் இருக்கும் படத்தை வைக்க எண்ணினேன். அந்த வியாழனன்று,  தொண்டைவலி, மற்றும் காய்ச்சல் காரணமாக எனது இளைய மகன் பள்ளியிலிருந்து திரும்பினான். வரும் ஞாயிறுக்குள் அவன் சுகமாக வேண்டுமென சாயியிடம் பிரார்த்தித்தேன். ஆனால் சனிக்கிழமை இரவு வரையிலும் காய்ச்சல் குறையவில்லை. பிப்ரவரி 4-ம் தேதி ஞாயிறு காலை, அன்று, எனது தோழி புஷ்பாவிடமிருந்து ஸ்ரீ யுக்தேஷ்வர் கிரி அவர்களின் படமும், அவரது செய்தியும் எனக்கு வந்தது. நாங்கள் அன்று ஆலயம் செல்லப் போவதின் அறிகுறி என மகிழ்ந்தேன். எனது மகனை நான் எழுப்பாமல், அவனே எழுந்து வரவேண்டுமென ஸாயியிடம் வேண்டினேன். அப்படியே அவனும் எழுந்து, பல் துலக்கிக் குளித்து வருவதாகச் சொன்னான். நானும் மகிழ்ச்சியடைந்து காலை உணவு தயார் செய்யத் துவங்கினேன். ஆனால், அப்போது எனது மகன் வந்து தன்னால் பல் துலக்க முடியவில்லையென்றும்,  தலை சுற்றுவதாகவும் சொல்லிப்  படுத்து விட்டான்.

ஸாயியிடமும், யோகியிடமும் மானசீகமாக, சென்ற சனியன்று யோகி என்னை ஆட்கொண்டது உண்மையெனில், இன்று அவருடைய தரிசனத்துக்கு என்னை கொண்டு செல்ல வேண்டுமெனவும், இல்லாவிடில், நான் கண்ட அனுபவங்கள் யாவும் என் கற்பனையே என என் தோழிகளிடம் சொல்லப்போவதாகவும் வேண்டிக்கொண்டேன். எனது இந்த இரு குருமார்களும் என் மகனுக்குத் தேவையான சக்தியை அளிக்கும்வரை நானாக அவனை எழுப்பப்போவதில்லை எனவும் முடிவெடுத்தேன். பகல் 12 மணிக்கெல்லாம் அந்த ஆலயத்தில் வழிபாடுகள் முடிந்துவிடும். என் மகன் அடுத்த 5 நிமிடங்களில் தானே எழுந்து, குளிக்கச் சென்றான். என் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. இருவருக்கும் மீண்டும் என் நன்றிகளைச் சொன்னேன். அந்த ஆலயத்தின் வழிபாடு முறைகள் எனக்குத் தெரியாததால், பழங்கள் கொண்டு செல்லமுடியுமோ என நினைத்தேன். குளிர் பதனப் பெட்டியில் இன்னும் ஒரு ஸ்ட்ராபெரி பழக் கூடை இருந்தது.

அங்கே செல்லும் வழியெல்லாம் யோகியாரின் தெய்வீக லீலைகளைப் பற்றியே சிந்தித்திருந்தேன். அங்கே தியான நேரம் முடிந்ததும், என் கண்கள் புகைப்படங்கள் இருக்கும் இடத்தைத் தேடின. புத்தகக் கடையில் படங்கள் வாங்க இயலுமா என ஸ்னிக்தாஜியிடம் கேட்டு அறிந்து கொண்டு, குருமார்கள் படங்கள் அடங்கிய இரு வாழ்த்தட்டையைப் பார்த்து, அதை எடுக்கச் செல்லும்போது, 'அனைத்து குருமார்களும் ஒரே படத்தில் இருப்பதுபோல வேண்டுமா அல்லது தனித்தனியாக வேண்டுமா' என ஸ்னிக்தாஜி கேட்டார். எப்படி இருந்தாலும் பரவாயில்லை என நான் சொல்லவும், அவர் என்னை உடனே கார் நிறுத்துமிடத்துக்கு வரச் சொன்னார். தனது கார் கதவைத் திறந்த அவர், 'இதோ ஆறு குருமார்களும் உனக்காக இங்கே காத்திருக்கின்றனர், பார்' எனச் சொன்னார். ஆச்சரியத்துடான் அங்கிருந்த ஒரு படத்தை எடுத்தேன். அது ஸ்ரீ யுக்தேஷ்வர் கிரியின் படம்! அப்படியே அனைத்து குருமார்களின் படங்கள் அடங்கிய ஒரு அட்டைப் பெட்டியை அவர் என்னிடம் தர, நான் ஏதோ ஆறு குழந்தைகளைப் பெற்றவள்போல் மகிழ்ந்தேன். இந்தப் படங்கள் பற்றிய கதையை நாளை சொல்வதாக அவர் சொன்னார்.
அங்கிருந்து அருகிலிருந்த மஹாலக்ஷ்மி ஆலயத்துக்கு  சென்றோம். அந்த ஆலய தேவியின் படம், இந்தியாவில் என் வீட்டருகே இருக்கும் மஹாலக்ஷ்மி தேவியின் உருவை ஒத்திருந்தது கண்டு மகிழ்ந்தேன். அந்தப் படத்தையும் வாங்கினேன். 

வழக்கமாக அங்கிருந்து ஸாயி ஆலயம் செல்வோம். ஆனால் அன்றென்னவோ திருமதி ஹரிணிஜியின் வீட்டிற்குச் சென்றோம். ஸ்ரீ பூண்டி மஹான் ஆலயத்திலிருந்து வந்த பிரசாதமும், பித்தளை ப்ரேஸ்லெட்டும் திருவண்ணாமலையில் இருக்கும் ஸ்கந்தாசிரமத்துக்கும் விரூபாக்ஷர் குகைக்கும் செல்லும் பாதையிலிருந்து ஒரு சிறு கல்லையும் எனக்கு அளித்தார்.

ஓம் எனும் மந்திரம் பொறித்த ஒரு வெள்ளி மோதிரத்தை வாங்கி எனக்களித்தார். இதன் தனித்துவம் கண்டு நான் வியந்துபோனேன். [ஓம் எனும் மந்திரத்தை ஸத்குரு ஸாயி எனக்கு உபதேசம் செய்த நிகழ்வை அவர் அருளிருப்பின், பிறகு சொல்கிறேன்.]
அத்துடன் நில்லாது, நமது ஸாயி அன்னை எனக்கு முன்னதாகவே என் பிறந்தநாள் பரிசாக அனுப்பியிருக்கிறார் என ஒரு சேலையைப் பரிசளித்தார். ஸத்குரு ஸாயியை அலங்கரித்த சேலை அது! ஆக மொத்தம் அன்று எனக்கு 10 குருமார்கள் பரிசாகக் கிடைத்தனர். ஸர்வாந்தர்யாமியான ஸ்ரீ ஸத்குரு ஸாயியை வணங்கிப் போற்றியபடி நான் மகிழ்வுடன் வீடு திரும்பினேன்.

மறுநாள் காலை ஸ்னிக்தாஜியை அழைத்து, படங்கள் பற்றிய லீலையைக் கேட்டேன். இந்தப் படங்கள் சுமார் 40 ஆண்டுகள் பழைமையானவை எனவும், பல துறவிகள் இவற்றின் முன் அமர்ந்து தியானம் செய்திருக்கின்றனர் எனவும், 2 ஆண்டுகளுக்கு முன்பு, புதிய படங்கள் வாங்க ஆலயத்தில் முடிவு செய்தபோது, தானும் அதற்கு உதவி செய்ததால், பழைய படங்களைத் தன்னிடம் தந்ததாகவும், ஆனால் அவற்றை எடுத்துச் செல்லாமல், அந்த சர்ச்சில் இருக்கும், 'ஸண்டே ஸ்கூலில்' அவற்றைப் பிரிக்காமலேயே வைத்திருந்ததாகவும், இவற்றை யாரோ ஒரு அடியவருக்குத் தரவேண்டுமென ஒரு உள்ளுணர்வு கூறியதாகவும், அதன்படியே மற்றொரு குரு ஒருவர் கூறியதற்கேற்ப அவற்றைத் தன் வீட்டிற்கு கடந்த நவம்பர் 2017-ல் கொண்டு சென்றதாகவும், பிப்ரவரி 2018-ல் பரமஹம்ஸர் என் மீது வந்த அனுபவத்தை நான் சொன்னபோது, ஆறு குருமார்களும் அவரது கண் முன்னே வந்ததாகவும், அதுவே இவற்றை எனக்கு அளிக்க அவர்கள் காட்டிய அறிகுறி என நினைத்ததாகவும், இருந்தாலும் மேலுமொரு அடையாளம் காட்ட வேண்டுமென அவர் வேண்டியதாகவும், மறுநாள் தியானத்தின்போது, இதுபோன்ற படங்களை பிறருக்கு அளிப்பதால், அவர்களுக்கும் இதன் மூலம் நல்லதிர்வுகள் போய்ச் சேருமென ஒரு எண்ணம் தோன்றியதாகவும், அதுவே இன்னுமொரு நல்ல அறிகுறி என நினைத்ததாகவும், தனது குரு ஒரு சில படங்களைத் தானும் வைத்துக்கொண்டு, மற்றவற்றைக் கொடுத்தால் போதும் எனச் சொன்னபோதிலும், குரு பரம்பரையைப் பிரிக்க வேண்டாமெனக் கருதி, அவற்றை எடுத்தபோது, ஒரு சில‌ படங்களின் சட்டங்கள் விரிசல் விட்டிருந்ததால், புதிதாக மாற்றலாமென நினைத்து அதைப் பிரித்தபோது, ஒவ்வொரு சட்டத்துக்குள்ளும் ஒரு கருப்பு-வெள்ளை, மற்றும் வண்ணப்படங்கள் இருந்ததாகவும், யுக்தேஷ்வர் கிரியின் சட்டத்துக்குள் வண்ணப்படம் படம் மட்டுமே இருந்ததாகவும்,  இந்த தெய்வீக லீலையைக் கண்டு தான் வியந்துபோனதாகவும் கூறினார்.
'சர்ச்சுக்குள்' சென்று, ஸ்ரீ யுக்தேஷ்வர் கிரியின் கருப்பு-வெள்ளைப் ப‌டம் கிடைக்குமா என விசாரித்தபோது, பல ஆண்டுகளாக அவை பதிப்பிடப்படவில்லை எனவும், ஆனால், உள்ளே ஏதோ ஒரு இடத்தில் தான் ஒரு படத்தைப் பார்த்த ஞாபகம் இருப்பதாகவும், அது இவருடைய படம்தானா எனத் தெரியவில்லை எனவும் ஒரு அன்பர் கூறினாராம். அப்படியே ஸ்னிக்தாஜி தேடியபோது, அந்தப் படம் கிடைத்து, அதுவும் ஸ்ரீ யுக்தேஷ்வர் கிரியின் படமே எனவும், அதனால் தற்போது அனைத்து குருமார்களின் கருப்பு-வெள்ளை, மற்றும் வண்ணப்படங்கள் இருப்பதாவும், யோகி தனது கருணையினால் அவரது வீட்டுப் பூஜையறையில் ஒன்றும், எனக்கென ஒன்றும் தர அருளியிருப்பதாகச் சொன்னார். அவற்றுக்கான சட்டங்கள் வாங்கச் சென்றபோது, நான்கு சட்டங்கள் மட்டுமே கிடைத்ததாகவும், மற்ற இரு சட்டங்களையும் தானே வாங்கித் தருவதாகவும் கூறினார். அவரைத் தொந்தரவு செய்ய வேண்டாமென நான் எவ்வலவோ தேடியும், அவை எனக்குக் கிடைக்கவில்லை. ஆனால், ஒரு மாதம் கழித்து, அதே கடையில் மேலும் இரு சட்டங்கள் கிடைத்ததெனக் கூறவும் அதே கடையில் இவற்றை வைப்பதற்கான மரப்பலகையும் அளவெடுத்ததுபோல் கிடைத்தது மிக மிக ஆச்சரியமே!
இவ்வாறு இந்த அருள் கிட்டியது எங்கும் நிறை அருளாளர் ஸ்ரீ ஸாயியின் கருணையினாலேயே! அவரது பொற்பாதங்களை என் கண்ணீரால் கழுவி, என்னை ஆசீர்வதித்து, என்றும் என் கூடவே இருக்க வேண்டுமென வேண்டுகிறேன்.

ஓம் ஸ்ரீ ஸாயிராம் ஜெய் குரு தேவா

ஆஷா ராஜு.

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.