Shivamma Thayee Temple Experience -By Radha Shridhar -Part 4.
( Translated into Tamil by Sankarkumar )
ஸாயிராம். சகோதரி ராதா அவர்கள் வழங்கும் அனுபவங்களின் நான்காவதும், இறுதியுமான பகுதியை இன்று உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். ஜெய் ஸாயிராம்.
மனிஷா
சிவம்மா தாயீ ஆலய அனுபவம்: 4
'க்ளாகோமா' என்னும் கண் நோயால் எனது தந்தை, பாட்டி மற்றும் அத்தை ஆகியோர் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். இது ஒரு பரம்பரை நோய் என்பதால், நான் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை கண் பரிசோதனைக்குச் சென்று சரிபார்த்து வந்தேன். மருத்துவர்களைப் பார்ப்பதென்றால் எனக்கு சற்று பயம். என்னை ஒரு நோயாளி எனச் சொல்லிவிடுவார்களொ என அஞ்சுவேன். எனவே முடிந்தவரையில் கண் பரிசோதனைக்குச் செல்வதைத் தவிர்த்து வந்தேன். ஆனால், நமது அன்பான ஸாயிக்கு எப்போது கசப்பு மத்திரைகளை நம் தொண்டைக்குள் செலுத்துவதென்பது நன்றாகவே தெரியும்.
ஒருநாள் என் வீட்டில் பழுதுபார்க்கும் வேலை நடதுகொண்டிருந்தபோது, சில ஓடுகளைப் பிரித்து வெட்டியதால், புழுதி மண்டலம் சூழ்ந்தது. ஒரு சில நாட்களுக்குப் பிறகு, எனது பார்வையில் ஒரு வெள்ளைப் படலம் தெரியத் தொடங்கியது. பயந்துபோன நான், கூகிள் தளத்துக்குச் சென்று, இதுபற்றி தேடியபோது, பலவிதமான கண் நோய்களுடன் எனது நிலை ஒத்துப் போயிருந்ததைக் கண்டு கலங்கினேன்.
இது தானாக சரியாகிவிடும் என நம்பி, உதியை நீரில் கரைத்துக் குடித்துப் பார்த்தேன். வலிய நிவாரணியான உதியும் எனக்கு உதவவில்லை. அழுது, புலம்பி பாபாவை வேண்டினேன். அதுவும் பலனளிக்கவில்லை. மருத்துவரைச் சென்று பார்ப்பதைத் தவிர வேறு வழியின்றிப் போனது.
பயந்துகொண்டே சென்றேன். கண்களின் அழுத்தம் 22 - 22 எனக் காட்டியது. 20 - 20 அல்லது அதற்குக் கீழே இருப்பதே சரியானது என்பதால் நான் மிகவும் நடுங்கி விட்டேன். என் பரம்பரைக் கதையை மருத்துவரிடம் சொன்னபோது, சரியான நேரத்தில்தான் வந்திருப்பதாகவும், உடனே கண் சொட்டு மருந்து உபயோகிக்க வேண்டுமெனவும் அவர் அறிவுறுத்தினார். மேலும் சில பரிசோதனைகளையும் செய்யவேண்டுமென அவர் சொன்னதும், லக்ஷத்து எட்டு முறை ஸாயி நாமம் சொல்வதாக பாபாவுக்கு வாக்களித்து, அங்கேயே, அப்போதே ஜபிக்கத் தொடங்கினேன்.
வீடு திரும்பியதும், சரியான நேரத்தில் என்னை மருத்துவரிடம் கொண்டு சென்றதற்கு நன்றி சொல்லாமல், எனக்கு ஏதோ விபரீதமாக நடந்துவிடுமென நினைத்து நான் அழத் தொடங்கினேன். இந்த மருத்துவரோ, அல்லது வேறொருவரோ எனக்கு 'க்ளாகோமா' இல்லை எனச் சொல்லிவிட்டால், பாபாவைப் பற்றி ஒரு புத்தகம் எழுதி பிரசுரிப்பதாக மனதில் முடிவெடுத்தேன்.
இதற்கிடையில், எனது கண்களில் ஒரு எரிச்சல் ஏற்பட்டது. இது அழுத்தத்தினால் அல்ல எனவும், கண்களில் நீர் வற்றிப் போனதால் என்றும் மருத்துவர் என்னைத் தேற்றினார். ஒரு வாரத்தில் இந்த எரிச்சல் தொடர்ந்து இருக்கவே, என்னைப் பரிசோதித்த மருத்துவர், இது ஏதோ தொற்று வியாதிபோல் இருக்கிறது எனச் சொன்னார். நான் மேலும் கேள்விகளால் அவரைத் துளைக்கவும், மற்றபடி, கண்ணின் உறுப்புகளும், நரம்புகளும் சரியாகவே இருப்பதாக நம்பிக்கையூட்டினார்.
திடீரென என்னைப் பார்த்து, 'ராதா, உனக்கு 'க்ளாகோமா' கிடையாது. இது 'கண்ணழுத்தம்' எனும் ஒரு ரத்தக்குழாய் சம்பந்தப்பட்ட நோயே' என அவர் சொன்னதும், நான் முன்னரே மனதில் நினைத்ததுபோல, நூல் எழுத அன்றே ஆரம்பித்தேன். அன்று ஒரு செவ்வாய்க்கிழமை. விநாயகரை வணங்கிவிட்டு தொடங்கினேன். பாபாவின் அருளால் விரைவில் அதை எழுதி முடிப்பேன்.
இதற்கும் சிவம்மா தாயீக்கும் என்ன தொடர்பு எனச் சிலர் வியக்கலாம்.
கண் மருத்துவரிடம் செல்லும்முன், சிவம்மா தாயீ ஆலயத்தில் இருக்கும் பாபாவுக்கு இரண்டு கண்மலர்கள் வெள்ளியில் செய்து சாற்றுவதாக வேண்டிக் கொண்டேன். வெள்ளி நகைக் கடைகள் இருக்கும் தெருவுக்குச் சென்றேன்.அன்று புதன் கிழமை. அன்றே வாங்கினால், மறுநாள் வியாழனன்று சாற்றலாமே என நினைத்தேன். ஆனால், அன்று எல்லா வெள்ளிநகைக் கடைகளும் மூடியிருந்தன. பாபாவுக்கு என் மீது ஏதோ கோபம் போலிருக்கிறது; அதனால்தான் இப்படி பழி வாங்குகிறார் என நினைத்தேன். 'ப்ளாஸ்டர் ஆஃப் பாரிஸ்' என்னும் பொருளும் எனக்குத் தேவைப்பட்டதால், அங்கிருந்த ஒரு மருந்துக் கடைக்குச் சென்று வாங்கினேன். அப்போது விசாரித்தபோது, அன்று அமாவாசை என்பதால், பொதுவாக மார்வாடிகள் கடை திறக்க மாட்டார்கள் என அறிந்தேன்.
விஷயம் என்னவெனத் தெரிந்துகொண்ட மருந்துக் கடைக்காரர், என்னை சற்று நேரம் காத்திருக்குமாறு சொல்லிவிட்டு யாருடனோ தொலைபேசியில் பேசினார். சற்று நேரத்தில் ஒரு இளைஞர் அங்கு வந்தார். அவரும் ஒரு நகைக்கடைக்காரரே; ஆனால், மார்வாரி அல்ல. இருந்தாலும், பொது வழக்கப்படி அவரும் கடையைத் திறக்கவில்லை என்றாலும், எனக்காக கடையைத் திறந்து கண்மலர்களைக் காட்டினார். நான் விரும்பியதுபோலவே, சிவம்மா தாயீ ஆலயத்தில் இருக்கும் பாபா, விநாயகர், ஸுப்ரமண்யர் ஆகிய மூன்று மூர்த்திகளுக்குமான வெள்ளி கண்மலர்கள் அவரிடம் இருந்தன! மகிழ்வுடன் அவற்றை வாங்கிய நான் 'எவர்' இதையெல்லாம் நிகழ்த்தினார் என உணர்ந்து மெய்சிலிர்த்தேன். விரைவிலேயே என் கண்களும் குணமாயின எனச் சொல்லத் தேவையில்லை.
பூரண நம்பிக்கையை நான் வைக்காத காரணத்தாலேயே பாபா இதுபோன்ற பூனை-எலி ஆட்டத்தை அடிக்கடி நிகழ்த்துகிறார் போலும்! ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். நாம் விழும்போதெல்லாம் தாங்கிப் பிடிக்க அவர் தயங்குவதே இல்லை. அவர் எப்போதும் நம்மையெல்லாம் ஆசீர்வதிக்கட்டும். நான் உங்களை மிகவும் நேசிக்கிறேன், பாபா.
ஸாயிராம்.
ராதா.
Loading
0 comments:
Post a Comment