Tuesday, November 6, 2012

Shirdi Sai Baba's Grace-Experience Of Sai Devotees-Part 48.

'ஷீர்டி ஸாயிபாபாவின் அருள் - அடியாரின் அனுபவங்கள் - பகுதி 48


 
 (Translated into Tamil by :Sankarkumar, U.S.A )
 
ஸாயிராம். 
பாபாவின் அருளமுதம் அளவற்றது. அவரது குழந்தைகள் பகிரும் இந்த லீலைகளில் அது தெளிவாகத் தெரிகிறது. இன்றையப் பதிவில் வழங்கும் சில அடியார் அனுபவங்கள் இதோ. ஜெய் ஸாயிராம்.
மனிஷா
-------------------------
 
'ஸாயி ஸத் சரிதத்தைப் படிக்க 7 ஆண்டுகளுக்குப்பின் ஆசி வழங்கினார்.' 
 
கடந்த சனிக்கிழமைக்கு முன்னர், 7 ஆண்டுகளாக ஸாயி ஸத் சரிதத்தைப் படிக்க முயற்சி செய்தேன். அனால், வெற்றி கிட்டவில்லை. எந்தப் புத்தகத்தைப் படிக்கவும் எனக்கு விருப்பம் இருந்ததில்லை. ஒரு சில வரிகளைப் படித்ததும், தொடர்ந்து படிக்காமல், ஒருசில பகுதிகளைத் தாண்டி விடுவேன். இதன் காரணமாகவும், ஸாயியின் அருள் கிட்டாததாலும் இந்தப் பாராயணத்தை என்னால் செய்ய இயலவில்லை. பலமுறை இதைச் செய்ய முயன்றும், சோம்பேறித்தனம், வேலை நேரம், மறதி ஆகிய பல காரணங்களால் அரைகுறையாகவே முடிந்தன.
ஆனால் கடந்த சனிக்கிழமையன்று [ஆகஸ்ட் 4, 2012], இரு ஆண்டுகளுக்கு முன் என்னுடன் பணி புரிந்த ஒரு நண்பர் என்னை அழைத்து, 'என் அன்பான நண்பா, ஸாயி ஸத் சரிதம் படி, 21 ஏழைகளுக்கு அன்னதானம் செய்; பாபா உன்னை நன்றாகக் கவனித்து, உன்னைக் காத்தருள்வார்' எனச் சொன்னார். எனது கடந்த கால அனுபவத்தை அவரிடம் சொல்லாமல், 'முயற்சி செய்கிறேன்' என மட்டும் சொன்னேன். 'தினமும் உன்னால் முடிந்தபோது படித்தால் போதும். இதற்கென கடுமையான விதிகள் இல்லை' எனச் சொல்லிவிட்டு விடை பெற்றார். இரவு 9 மணிக்கு வந்த இந்த அலைபேசி அழைப்பில் நான் வியந்து போனேன். 'எப்போது ஆரம்பிக்கலாம்? ஆரம்பிப்பதா வேண்டாமா? வியாழன் வரை பொறுத்து அன்று ஆரம்பிக்கலாமா?' எனப் பல கேள்விகள் என்னுள் எழுந்தன.
ஆனால், இதற்குள் ஏதோ ஒரு வேகத்தில் என்னைச் சுத்தம் செய்துகொண்டு, ஸாயியை வேண்டிக்கொண்டு, எனது பாராயணத்தைத் தொடங்கினேன். ஸப்தாஹம் செய்ய முடியுமா எனத் தெரியவில்லை. இருந்தாலும் முயற்சிக்கலாம் என நினைத்து, முதல் இரு நாட்களில் 6 அத்தியாயங்களைப் படித்தேன். 3,4,5 நாட்களில் 11 வரைதான் படிக்க முடிந்தது. ஆனால் பாராயணத்தை எப்படியும் 7 நாட்களுக்குள் பூர்த்தி செய்ய வேண்டுமென முடிவு செய்து, 6-ம் நாள் அலுவலிலிருந்து விடுப்பு எடுத்து, அத். 41 வரை படித்தேன். 7-ம் நாளன்று பாராயணத்தைப் பூர்த்தி செய்தேன்.
என் ஆனந்தத்துக்கு அளவேயில்லை. அப்போதுதான், பாபாவின் ஆசி இதுவரை கிட்டாததால்தான் என்னால் இதைச் செய்ய முடியவில்லை என்பது புரிந்தது. கடந்த இரு நாட்களாக இந்தப் புத்தகத்தைப் படிக்காமல் நிலைகொள்ளாமல் தவித்தேன். ஸாயி லீலைகளைப் படித்து அவரது இருப்பினை அறிய முடிவெடுத்தேன். அவரது ஆசியுடன், வரும் வியாழனன்று ஒரு முதியோர் இல்லத்தில் அன்னதானம் செய்யப் போகிறோம்.
இந்த அரிய வாய்ப்பினை என் நண்பர் மூலம் எனக்கு அருளிய ஸாயியைப் பணிந்து வணங்குகிறேன். எனக்கு வழிகாட்டிய அந்த ஸாயி தூதரான என் நண்பரையும் வணங்குகிறேன்.
ஸாயியைப் பணிக! அனைவருக்கும் அமைதி நிலவட்டும்.


-------------------------------------

 
'எனக்கும், என் குடும்பத்தினருக்கும் ஸாயி அருளினார்... ஸாயி... ஸாயி'

'என் வாழ்நாளின் வெற்றி'
அன்புள்ள மனிஷா'ஜி. இந்தத் தளத்தை அமைத்தமைக்கு என் வந்தனங்கள். சென்ற மாதம் நான் எழுதி அனுப்பிய அனுபவம் பற்றிய பதிவைப் படிக்க இயலவில்லை. அதை எங்கே பார்ப்பது எனத் தெரிவிக்கவும். பாபாவின் அருளாசி எப்போதும் எங்களுடனேயே இருக்கிறது. அவரை முழுமையாக நம்ப வேண்டும். எனது அன்றாட வாழ்வில் நடக்கும் சில அனுபவங்களைப் பகிர விரும்புகிறேன்.
ஒவ்வொரு வியாழனன்றும் நான் பாபா கோவிலுக்குச் செல்வது வழக்கம். என் அலுவலகத்துக்கு அருகில் இருந்ததால் ஒருமுறை கூட தவறியதில்லை. ஆனால் திடீரென வேறு வேலை தேடவென என் சொந்த ஊரை விட்டு, மும்பைக்குச் செல்ல நேரிட்டது. என் மாமாவின் வீட்டில் தங்கினேன். பாபாவைப் பார்க்க முடியவில்லையே என மிகவும் வருந்தினேன். புது இடமென்பதால், அங்கே ஒன்றும் சரிவரப் புரியவில்லை. முதல் 8 நாட்கள் வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடந்தேன். வேலையும் இல்லாமல், ஸாயி ஆலயத்துக்கும் செல்ல முடியாமல் தவித்தேன்.
ஒருநாள், என் உறவினரின் தோழி வந்து என்னைத் தன்னுடன் வருமாறு அழைத்தாள். அக்கம் பக்கம் இடங்களையெல்லாம் சுற்றிக் காட்டுவதாகச் சொன்னாள். அவளுடன் கொஞ்சம் தொலைவு சென்றதுமே அங்கே ஒரு பாபா கோவில் இருப்பதைக் கண்டு மகிழ்ந்தேன். ஸாயிக்கு நன்றி சொல்லிக்கொண்டே அங்கே சென்று பிரார்த்தித்தேன். அதன்பின் வழக்கம்போல, வியாழக்கிழமைகளில் செல்லத் தொடங்கினேன். சீக்கிரமே ஒரு வேலையும் கிடைத்தது. அந்த வேலை எனக்குத் திருப்தி அளிக்கவில்லை. சம்பளமும் மிகக் குறைவு. 3 மாதங்களிலேயே அதை விட்டு விட்டேன். ஆலயம் சென்று பாபாவிடம் என் நிலையைக் கூறி அழுதேன். வீடு திரும்பியதும், மறுநாளே எனக்கு ஒரு நேர்முகத் தேர்வுக்கு ஒரு அலுவலகத்தில் இருந்து எனக்கு அழைப்பு வந்ததாக என் மாமா மகள் தெரிவித்தாள். என்னால் நம்பவே முடியவில்லை.
மறுநாள் அங்கே சென்று, தேர்வை நல்லபடி முடித்து வேலையும் கிடைத்தது. ஊதியமும் அதிகமாகவே அமைந்தது. ஸாயியின் அன்புதான் இதை அருளியது. பொறுமையும், நம்பிக்கையுமே தேவையானது. என்னுடைய எல்லா பிரச்சினைகளிலும் ஸாயி இப்படியே அருள் புரிகிறார். சென்ற மாதத்திலிருந்து நானும், என் சகோதரியும் 9 வார ஸாயி விரதம் தொடங்கியிருக்கிறோம். முதல் வியாழன் முதலே நான் விரும்பியதெல்லாம் நடக்கிறது. என் அண்ணி நீண்ட நாட்களாகக் காத்திருந்த திருமணப் பதிவுப் பத்திரம் அவருக்குக் கிடைத்தது. இதுபோல இன்னும் பல!
இரண்டாம் வாரம் ஆலயத்துக்கு சென்றபோது, நான் செய்யும் இந்த விரதம் உங்களை அடைகிறதென்றால், எனக்கு உங்கள் காலடியிலிருந்து ஒரு பூ கிடைக்க வேண்டுமென மனதுக்குள் வேண்டினேன். ஆலயத்தை 11 முறை சுற்றிவந்து அமர்ந்தேன். பாபா எப்படி பூவைத் தரப்போகிறார் என ஆவலுடன் காத்திருந்தேன். அப்போது என் சகோதரி வந்து, என்னருகில் அமர்ந்து தன் கையில் இருந்த ஒரு ரோஜாப்பூவை எனக்குத் தந்தாள். அவள் வேறொன்றும் சொல்லாமல் என்னைப் பார்த்துச் சிரித்தாள். வியந்துபோன நான் அவளிடம் நடந்ததைச் சொன்னேன். அவளுக்கும் ஒரே ஆனந்தம்.
இந்த அனுபவம் பிரசுரிக்கப்படுமென நம்புகிறேன்.

 
'எல்லா நேரங்களிலும் பாபா என்னுடனேயே நின்றார்'
 
ஸாயிபாபாவை என் குருவாக எனக்குக் காட்டிய என்பெற்றோருக்கு என் நன்றி. என் பெற்றோர் எனக்குத் திருமணம் செய்ய விரும்பினர். ஆனால் அவர்கள் கொண்டுவந்த எந்த வரனும் எனக்குப் பிடிக்கவில்லை. பதவி ஓய்வு வருவதாலும், என் திருமணம் இன்னும் முடிவாகாமல் இருப்பதாலும் ஒருநாள் என் தந்தை மிகவும் மனமுடைந்து போனார். அடுத்து வரும் வரனை நான் ஒப்புக்கொண்டே ஆகவேண்டுமென என்னை வற்புறுத்தலானார். ஆனால் மாப்பிள்ளை அழகாக இல்லாததாலும், பார்ப்பதற்கு முரட்டுத்தனமாக இருந்ததாலும் எனக்கு அவரைப் பிடிக்கவில்லை. ஆனால் அவரது பெற்றோர் நல்லவர்களாகத் தெரிந்தனர். அதனால், ஒப்புக்கொள்ள நினைத்தேன்.
மாப்பிள்ளையை அழைத்து இந்தியாவில் கல்யாணம் நடத்த முடியுமா எனக் கேட்டார். அதற்கு அவர் அமெரிக்காவில்தான் நடக்க வேண்டுமெனச் சொல்லிவிட்டார். அதிகச் செலவாகுமே, உறவினர்கள் எல்லாரும் வரமுடியாதே என என் தந்தை அஞ்சினார். அவரது பெற்றோரிடம் இந்த முடிவு தனக்கு ஒத்துவராததால், திருமணத் திட்டத்தைக் கைவிடுவதாகச் சொல்லிவிட்டார்.
ஒரு மாதம் கழித்து மேலுமொரு வரன் வந்தது. அவரும் அமெரிக்காவிலேயே இருந்தார். நான் இந்தியா சென்றுதான் பெண் பார்க்கும் படலம் நிகழ விரும்பினேன். ஆனால், அவரும் நான் வேலை செய்த துறையிலேயே இருந்ததால், அவருடன் அலைபேசியில் பேசியபோது, மிகவும் தன்மையாகப் பேசினார். என் வேலையிலும் எனக்கு உதவி செய்தார்.
இதனால் கவரப்பட்ட நான் அவரைச் சந்திக்க ஒப்புக் கொண்டேன். நேரில் சந்தித்தபோது, மிகவும் அமைதியாகவும், பண்புடனும் பழகினார். அவருக்கும் என்னைப் பிடிக்கவில்லை என்றே தோன்றியது. ஆனால், எப்படியோ எங்கள் இருவரின் பெற்றோரும் கூடிப்பேசி, எங்களது திருமணம் இந்தியாவில் நடந்தது. மீண்டும் அமெரிக்கா செல்லும் நேரம் வந்தபோது, அவரது விசா தாமதமின்றிக் கிடைக்க, என் விசா மட்டும் தாமதமானது. எவ்வளவு நாட்கள் ஆகுமெனத் தெரியவில்லை.
நானும் வேலை செய்ய வேண்டுமென என் கணவர் விரும்பியதால், அதற்கான ஹெச்.1 விசா வரும்வரை என்னைக் காத்திருக்கச் சொன்னார். கணவரைப் பிரிந்து வாழ நான் விரும்பாமல், முடிவை பாபாவின் கைகளிலேயே விட்டுவிட்டேன். ஒரே மாதத்தில் எனக்கு விசா கிடைத்தது. நல்லபடியாக என் திருமணத்தை நடத்தி, எனக்கு விசாவும் கிடைக்கச் செய்த பாபாவுக்கு என் வந்தனங்கள். பாபா, எனக்கு உங்களை விட்டால் வேறெவரும் கிடையாது. எப்போதும் என் அருகிலேயே இருங்கள் என் குருவாக எனக்கு நீங்கள் வேண்டும்.
ஓம் ஸாயிராம்.

_________________

'பாபா காட்டிய அதிசயம்'


என் முகவரியை வெளியிட வேண்டாம். ஓம் ஸாயிராம். சில சமயங்களில் பாபா செய்யும் அற்புதங்கள் நமக்கு அவர் மீதான நம்பிக்கையை அதிகரிக்கச் செய்கிறது. எனக்குப் பெண் குழந்தை பிறந்தபோது என் கணவர் எனக்கு ஒரு தங்கச் சங்கிலியை அன்பளிப்பாக்கத் தந்தார். அவரிடமிருந்து நான் பெற்ற விலையுயர்ந்த பரிசு என்பதாலும், குழந்தை பிறந்ததால் கிடைத்த பரிசு என்பதாலும் இரட்டிப்பு மகிழ்சி அடைந்தேன்.
10 மாதங்களுக்கு முன், அதைத் தொலைத்து விட்டேன். எங்கு வைத்தேன் என நினைவுக்கே வரவில்லை. கடைசியாக எப்போது பார்த்தேன் எனவும் தெரியவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை. யாரைக் கேட்டும் பலனில்லை. எவ்வளவோ வேண்டியும் பயனில்லை. நாளாக நாளாக அது கிடைக்குமென்ற நம்பிக்கை போய்விட்டது. அதற்காக மிகவும் அழுதேன்.
2012] ஸாயி பூஜை செய்து 9 வார வியாழக்கிழமை விரத நூலைப் படித்தேன். பூஜை முடிந்ததும் அந்தச் செயினைப் பற்றிய நினைப்பு வந்தது. அன்று மதியம் யாரையோ அழைப்பதற்காக என் அலைபேசியை அதன் உறையிலிருந்து எடுத்தேன். அப்போது உறையின் அடியில் ஏதோ தட்டுப்படுவதுபோல் பட்டது. என் சங்கிலி! கடந்த 10 மாதங்களாக நான் அதைப் பலமுறை உபயோகித்திருந்தும், அப்போதெல்லாம் தட்டுப்படாத சங்கிலி இப்போது எப்படி அதற்குள் இருந்தது? இது பாபாவின் அற்புதமே அன்றி வேறேதும் இல்லை. அவரே என் சங்கிலியை எனக்குத் திருப்பித் தந்திருக்கிறார்.
என்னைக் கவனித்துக்கொள்ள அவர் எப்போதும் இருக்கிறார் எனும் நம்பிக்கை என்னுள் மேலும் உறுதிப்பட்டது.

---------------------

'ஓம் ஸாயிராம் பாபா என் கணவரின் வேலையைக் காப்பாற்றித் தந்தார்.'

நான் ஸாயிபாபாவின் மகள். ஸாயிபாபாவின் 40 நாளைய இனிப்பு பூஜையை [] நான் செய்து வருகிறேன். ஒருநாள் என் நண்பர்கள் சிலர் எனக்கு பாபாவின் பல்வேறு திருவுருவங்கள் கொண்ட அழகான ஒரு பெரிய படத்தை அன்பளிப்பாக வழங்கினர். என் வீட்டில் முறையான பாபா படம் இல்லாததால் இந்த அன்பளிப்பில் நான் மிகவும் மன மகிழ்ந்தேன். அவர்கள் இந்தியா சென்றபோது எனக்காக வாங்கினார்களாம். பாபாவை நான் எப்போதுமே வேண்ட, அவர் என் விருப்பங்களைப் பூர்த்தி செய்கிறார்.
சில நாட்கள் கழித்து, என் கணவரின் அலுவலகத்தில் நிதிப் பற்றாக்குறையால் 20% ஆட்குறைப்பு செய்யப்போவதாக அறிவித்தனர். அவருக்கு இது நிகழ்ந்தால், நான் இந்தியா செல்லவேண்டியிருக்கும். மேலும் இப்போதுதான் நாங்கள் ஒரு குழந்தை பெற்றுக்கொள்ள முடிவு செய்து, அதற்கான ஆயத்தங்களில் இறங்கி இருக்கிறோம். எனவே நாங்கள் இருவரும் மிகவும் கவலையுற்று, 'பாபாவின் அற்புதங்கள்' எனும் நூலில் அவரைக் கேட்க, 'வீணாக கவலைப்படாதே; ஷீர்டி பாபா உனக்கு உதவுவார்' என வந்தது. மனதுக்கு சற்று ஆறுதலாக இருந்தாலும், கூடவே கொஞ்சம் பயமும் இருந்தது.
சென்ற திங்கட் கிழமையன்று என் கணவர் அலுவலுக்குச் சென்றார். அவரது வேலைக்கு ஒரு ஆபத்தும் கிடையாது என சற்று நேரத்தில் அவரிடமிருந்து எனக்கு ஃபோன் வந்தது. வேலை இழந்தவர்களைப் பற்றி வருந்தி அவர்களுக்காக வேண்டினேன். நேற்றுத்தான் இது நடந்தது. உடனே இதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
நம்பிக்கையும், பொறுமையுமே ஒவ்வொருவருக்கும் மிகத் தேவை. நான் இன்னமும் எனது 400 நாள் விரதத்தை முடிக்கவில்லை. மிக்க நன்றி, பாபா.....
-- ஸாயி மகளும், அடியாரும்.

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.