Friday, March 16, 2012

Shirdi Sai Baba's Grace-Experience Of Sai Devotees-Part 34

ஷீர்டி ஸாயி பாபாவின் அருள்
அன்புள்ளோரே,
இனிய பாபா நாள் வாழ்த்து!
எவருடைய கருணைப் பார்வையினால் மலைபோல் திரண்டுவரும் அனைத்துப் பாவங்களும் அழிந்து போகிறதோ, நமது குணங்களைச் சூழ்ந்திருக்கும் தீய கறைகளெல்லாம் கரைந்து போகிறதோ, அந்தக் கருணாமயனான ஸ்ரி ஸாயியைப் பணிந்து, அவருடைய அன்பு மற்றும் கருணையைக் காட்டும் பலவித படிமங்களை, அவரது குழந்தைகளான அடியவர்கள் அனுபவித்த வண்ணம் இங்கே அளிக்கிறேன்.
ஜெய் ஸாயி ராம்.
மனிஷா 
-------------------


எனது ஸத்குரு தந்த பாடங்கள்: 
அன்புச் சகோதரி மனிஷா,
நீங்களும், உங்களது குடும்பத்தாரும் நலமென நினைக்கிறேன். ஜனவரி 12-ம் தேதியன்று, எனது சகோதரி பாபாவின் இருப்பிடத்தை அடைந்த நேரத்தில், நான் அனுபவித்த துயர நாட்களில் நீங்கள் எனக்கு அளித்த நல்லாதரவுக்கு எனது இதயத்தின் ஆழத்திலிருந்து எனது வந்தனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். பாபா உங்களை ஆசீர்வதித்து, உங்கள் குடும்பத்தினர்க்கு ஆரோக்கியத்தையும், மகிழ்ச்சியையும், இன்பத்தையும் கொடுக்கட்டும்.
2008-ல் பாபா என்னை இழுத்த பின்னர், நான் எப்போதுமே அவரால் போஷிக்கப்பட்டும், அன்பு செலுத்தப்பட்டும், செல்லம் கொடுக்கப்பட்டும் வந்திருக்கிறேன். நான் கேட்டதனைத்தும் கொடுத்திருக்கிறார்; எனக்குப் பிரச்சினைகளைத் தந்து, அதன் மூலம் நான் அவரை வேண்டும் சந்தர்ப்பத்தைக் கொடுத்திருக்கிறார்; அவரது தெய்வீகக் கருணையில் திளைக்கும் ஆனந்தத்தையும் கொடுத்திருக்கிறார். எனது 'நம்பிக்கையை' நான் உரிமையாக எடுத்துக் கொண்டிருக்கிறேன்' என நான் அப்போது உணரவில்லை. ஹேமந்த்பந்த் சொல்வதுபோல, 'ஆணவம்' என்பது மிக நுணுக்கமானது; அது நமக்கு இருக்கிறதென்பதைக்கூட நம்மால் உணர இயலாது.
எனது சகோதரி சென்ற மாதம் மூளை அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் இருந்தபோது, உங்களில் பலரும் அவளுக்காக வேண்டிக் கொண்டிருப்பீர்கள். பாபாவின் இனிய நாமத்தைச் சொல்வதில் நான் மிகுந்த நம்பிக்கை கொண்டவள். ஒரு லட்சம் நாமஜபம் செய்ய முடிவெடுத்து, 36 மணி நேரத்தில் அதைப் பூர்த்தி செய்தேன். ஆனால், நான் கேட்டதை பாபா எனக்குத் தராதது இதுவே முதல் முறை. அவர் எனது சகோதரியைத் தனது திருவடிகளில் சேர்த்துக் கொண்டார். எனது சகோதரியை இழந்தது குறித்தும், அதை விடவும் பாபா எனது பிரார்த்தனைகளைக் கேட்கவில்லையே என்பது குறித்தும் நான் மனமொடிந்து போனேன். நான் எவ்வளவு வேதனை அடைந்திருந்தேன் என்பதைச் சொல்ல வார்த்தைகளே இல்லை. பாபா மீது கோபமடைந்து, அவருடன் பேசுவதையும் நிறுத்தி விட்டேன். வியாழக் கிழமைகளில் வழக்கமாக நான் படிக்கும் அம்ருதவாணியைப் படித்தும், காலையில் அவருக்குக் கொடுக்கும் காப்பியை கொடுத்தும் வந்தாலும், நான் அவர் மீது மிகவுமே மனவருத்தம் கொண்டிருந்தேன்.
இதற்குள்ளாக, நாங்கள் தற்போது இருந்துவரும் வீட்டிலிருந்து ஜூலை மாதத்துக்குள் மாற வேண்டிய கட்டாயம் நேர்ந்தது.எனது வாழ்க்கை இருந்த நிலை குறித்து நான் மிகவும் சோர்ந்து போயிருந்ததால், வீடு பார்க்கும் மனநிலையில் நான் இல்லை.இணையத்தில் ஏதோ பார்த்து, நாங்கள் இருக்கும் வீட்டுக்கு அருகிலேயே இருக்கும் ஒரு குடியிருப்பைக் [Flat] கண்டுபிடித்தேன். அந்த வீட்டின் தரகரை [agent] அழைத்து, அதைக் காணச் சென்றேன். வீடும் பிடித்திருந்தது. அன்று மாலை, பாபா இன்னமும் எனக்காக இருக்கிறார்; என்னை முழுதுமாகக் கைவிடவில்லை என்னும் நம்பிக்கை பிறக்க, நான் சற்றுத் தெம்பாக உணர்ந்தேன். ஆனால், அன்றிரவு அந்தத் தரகர் என்னை அழைத்து, வேறொரு குடும்பம் அந்தக் குடியிருப்பை எடுத்துக் கொண்டுவிட்டதாகச் சொன்னார்.
பிரார்த்திக்கவோ, அவரிடம் கூப்பாடு போடவோ எனக்குத் திராணி இல்லை. மிகவும் மனமுடைந்துபோய், 'ஒன்றுமே செய்யமாட்டாய் எனில், குரு என்று ஒருவர் இருந்து என்ன பிரயோஜனம்?' நான் இப்போது என்னதான் செய்வது என எனக்குத் தெரியவில்லை. இதை விடவும் பெரிய வீடுகளைப் பார்க்கும் அளவில் எனது பொருளாதாரமும் இல்லை. ஏற்கெனவேநான் நொந்து போயிருக்கிறேன். நீ எனக்காக இருப்பது உண்மையென்றால், நீயே எனக்கு ஒரு நல்ல வீடு பார்த்துக் கொடு. நான் இனிமேல் அதற்கென ஒன்றும் செய்யப் போவதில்லை' எனச் சொன்னேன். இப்படி சொல்லிக்கொண்டே நான் எனது தபால் பெட்டியைத் திறந்து பார்த்தேன். இன்னொரு தரகரிடமிருந்து, இப்போது நான் பார்த்த அதே வீட்டுக்கு மேல்மாடியில் ஒரு குடியிருப்பு இருப்பதாக ஒரு கடிதம் வந்திருந்தது. என்னால் என் கண்களையே நம்ப முடியவில்லை.
என் வாழ்க்கையின் மிகப் பெரிய பாடத்தை நான் கற்றுக் கொண்டேன். பாபா எப்போதுமே நமக்காக இருக்கிறார். சில சமயங்களில் நாம் விரும்பாத சில செயல்களைச் செய்வார்; ஆனால் நாம் அதை அனுபவித்தே ஆக வேண்டும். ஆனால் என்ன வந்தாலும், அவர் நம்மைக் காப்பாற்றுவார். பாபா, எனது நம்பிக்கையை உறுதிப் படுத்துங்கள். எனக்கு நானே அதைச் செய்துகொள்ள இயலாது. எங்களுக்காக நீங்களே செய்யுங்கள். ஸாயிராம்.
ராதா
-------------------------------------
ஸாயி பாபாவின் அற்புதம் - ஸாயிநாதரின் 
 ஆசிகளுடனான எனது அனுபவம்: 
அனைத்து ஸாயி அடியவர்களுக்கும்,
பாபாவைப் பற்றிய எனது கருத்தையும், அவரது அற்புதங்களையும், ஆசிகளையும் எங்களது குடும்பத்தினர் பெற்றதைப் பற்றியும் சொல்வதற்காகவே இதனை எழுதுகிறேன்.
உங்களைச் சில ஆண்டுகளுக்கு முன்னர் அழைத்துச் செல்கிறேன். எப்படி எனக்கு பாபா மீதான நம்பிக்கை பிறந்தது எனச் சொல்கிறேன். என் மனைவி ஒரு தீவிரமான பக்தையாக இருந்தபோதிலும், அவர் என்னிடம் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும், நான் அதையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஒரு சமயம், அதிகமாகக் குடித்து வந்ததால், எனக்கு வயிற்றுவலி ஏற்பட்டது. மருத்துவரைப் பார்த்ததில், பணம் செலவானதே தவிர, பலன் ஒன்றும் கிட்டவில்லை.
என்னைக் குணமாக்கும்படி பாபாவை வேண்டிக்கொள்ளச் சொன்னார் என் மனைவி. அப்படியே நானும் வேண்டிக்கொள்ள, ஒருநாள் அந்த அதிசயம் நிகழ்ந்தது. என் கனவில் கையில் சக்கரத்துடன் கூடிய கிருஷ்ணர் உருவில் ஒருவர் வந்து, 'ஸப் கா மாலிக் ஏக் ஹை' எனச் சொல்ல, நான் கண் விழித்துப் பார்க்கையில் அங்கு யாரும் இல்லை. ஆனால் பாபா இப்படி வழக்கமாகச் சொல்வார் என அறிந்தேன். சில நாட்கள் கழித்து, என் மனைவியின் கனவிலும் பாபா வந்து, என் உடல் முழுதும் தன் கரங்களால் தடவிக் கொடுத்துச் சென்றாராம். அன்றிலிருந்து இன்று வரை, எனக்கு அந்த வலியே இல்லாமல் போனது. ஜெய் ஸாயிராம்.
அதன் பின்னர் நல்லதொரு எதிர்காலத்துக்காகவும், பணத்துக்காகவும் நாங்கள் நியூஸிலாந்து சென்றோம். குடியுரிமை கிடைப்பது கடினமாக இருந்ததால், வேறு வழியின்றி சொந்த ஊருக்குத் திரும்ப வேண்டியிருக்கும் என நினைத்தோம். எத்தனையோ வேலைகளுக்கு விண்ணப்பித்திருந்தாலும், இரண்டே இடங்களில் இருந்து மட்டும் அழைப்பு வந்து அதில் ஒன்றில்தான் தேர்வடைந்தேன். அதுவும் குடியுரிமை பெறத் தகுதியில்லாதது. ஒரு ஆண்டு அங்கு வேலை செய்தேன். மீண்டும் பாபாவின் அற்புதம்.
எனது முதலாளியிடன் என் நிலைமை குறித்து விவரித்து, அவரால் உதவ முடியுமா எனக் கேட்க, அவர் தன்னாலியன்றதைச் செய்வதாக வாக்களித்தார். ஒரு சில மாற்றங்கள் என் பணியில் செய்து, எனது சம்பளத்தையும் அதிகரிக்க, மூன்று மாதங்களிலேயே எனக்குக் அதிக சிரமமில்லாமலேயே குடியுரிமை கிடைத்தது.
இந்த சமயத்தில், நானும் என் மனைவியும் சைவ உணவுக்கு மாறி, ஸாயி ஸத் சரிதத்தைப் படிக்க ஆரம்பித்தோம். அதில் சொல்லியிருப்பதுபோல, நம்பிக்கையுடன் படிப்பவர்க்கு ஸாயியின் ஆசிகள் கிட்டி, கனவில் அவரது தரிசனமும் கிடைக்கும் என நினைத்தோம். ஆனால் அது முடியும் தருவாயிலும் கூட, அப்படி நிகழவில்லை. பாபா எங்களை விரும்பவில்லையோ என நினைத்தேன்.
சரிதத்தைப்படித்து முடிக்க இரு நாட்கள் இருக்கையில் எனக்கு ஒரு கனவு வந்தது. அதில் நான் எனது பெற்றோருடன் காரில் செல்லும்போது, அது விபத்துக்குள்ளாகி, ஒரு மலையுச்சியிலிருந்து விழுவது போலவும், நாங்கள் இறந்து போவோம் எனும் நிலையில், நான் எனது பெற்றோரிடம் ஸாயி, ஸாயி என ஜபிக்கும்படி சொல்வதாகவும் கனவு கண்டேன்.
அப்போது யாரோ ஒருவர் அந்தக் காரைத் தாங்கிப் பிடித்து, ஒரு அழகிய சமவெளியில் பத்திரமாக இறக்கி வைக்கிறார். ஜன்னல் கண்ணாடி வழியே நான் நோக்க, ஒரு பாறை மீது தன் கால்களை ஒன்றின் மீது ஒன்று போட்டுக்கொண்டு, பாபா அமர்ந்திருக்கிறார். நான் உடனே ஓடிச் சென்று, அவரது கால்களைப் பிடித்துக்கொண்டு கதறுகிறேன். எனது சகோதரனும் அப்போது அங்கிருக்க, 'எல்லாம் சரியாகி விடுமா பாபா?' என நான் கேட்கிறேன். 'உனது குடியுரிமை உனக்குக் கிட்டும்' என பாபா சொல்ல, ' என் எதிர்காலம்?' என நான் கேட்கிறேன். 'அதை இனிமேல்தான் நான் எழுதணும்' எனச் சொல்கிறார் பாபா. கண் விழித்துப் பார்த்தேன். என் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது. ஜெய் ஸாயிநாத்.
அவர் ஸர்வ வியாபி; உலகில் நீ எங்கிருந்தாலும் அனைத்தையும் அவர் பார்க்கிறார். அவரது ஆசியால் எங்களது வாழ்க்கை இப்போது சரியாகி விட்டது. 6/7/2011 அன்று எங்களுக்கு ஒரு அழகிய பெண் குழந்தையும் பிறந்தது.
ஸாயியை நம்புவோர்க்கு, அவர் எப்போதும் உடனிருக்கிறார். எந்தத் தொந்தரவு வந்தாலும் காக்கிறார். இன்னும் எழுத ஆசையிருப்பினும், இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன். மேலும் அற்புதங்கள் நிகழும்போது, அவற்றை எழுதுகிறேன்.
ஜெய் ஸாயிராம்.
அவிநாஷ்.
---------------------------------------


ஸாயிநாத் குருவார விரத அற்புதம்: 
மனிஷாஜி, எனது முகவரியை வெளியிட வேண்டாம். உங்களது சேவைக்கு என் வந்தனம்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக நான் வேலை தேடிக் கொண்டிருக்கிறேன். அனுபவம் இல்லாததால் நல்ல வேலை கிடைக்காமல் நான் மனம் வாடினேன்.பல இடங்களில் விண்ணப்பித்திருந்தாலும், ஒன்றும் அமையவில்லை. பொய்யான தகவல் அளித்து வேலை தேட விரும்பவில்லை. பாபாவிடம் வேண்டினேன். ஸத்சரிதம் படித்தேன். பலனில்லை. நம்பிக்கை இழந்து போனேன். 'ஏதாகிலும் ஒரு வேலை கிடைத்தால் போதும் பாபா; அதிகச் சம்பளமெல்லாம் எதிர்பார்க்கவில்லை' என வேண்டினேன்.
எனது நண்பனின் பணியிடத்தில் ஒரு இளநிலை[junior post] வேலை காலியிருப்பதாகச் சொல்ல, உண்மை நிலையை, .......நான் 2 ஆண்டுகளாக எந்த அனுபவமும் கிடைக்காததை, ......சொல்லி விண்ணப்பித்தேன். நேர்முகத் தேர்வுக்கு அழைத்தனர். எனக்கு பயமாக இருந்தது. 'அதிகமாகத் தெரியாததால், தொழில் நுணுக்கக் கேள்விகள் [technical questions] எதுவும் கேட்காமலிருக்க அருள்செய் பாபா' என வேண்டினேன். அப்படியே நிகழ்ந்தது!
தேர்வு முடிந்து அந்த மாதம் [ஜனவரி] முழுதும் சென்று பிப்ரவரியும் வந்தது. இன்னும் ஒரு தகவலும் வரவில்லை. பிப். 2-ம் தேதியன்று வியாழக் கிழமை விரதத்தை ஆரம்பித்தேன். அரை நாள் உபவாசம், பாபா ஆலயம் செல்லுதல், 108 முறை பிரதக்ஷிணம் செய்தல் என வியாழக்கிழமைகளில் கடைபிடித்தேன். எனது சான்றிதழ்களைக் கேட்டு மேலாளரிடமிருந்து முதல் குருவாரம் ஒரு கடிதம் வந்தது. உடனே அனுப்பியும், ஒரு பதிலும் கிடைக்கவில்லை.
'ஏன் இவ்வளவு தாமதமாகிறது, இந்த வேலைக்கு நான் தகுதியில்லையா?' என பாபாவைக் கேட்டு, ஏதேனும் ஒரு சமிக்ஞை தருமாறு வேண்டினேன். அடுத்த வாரம் எனது நண்பன் என்னைப் பார்த்து, மேலாளருக்கு என் விஷயத்தில் அக்கறை இருப்பதாகச் சொன்னதாகச் சொன்னான். ஆனாலும் ஒன்றும் நிகழாததால், ஸாயி லீலைகளைப் படித்தும், நேரடி தரிசனங்கள் [Live dharshans]பார்த்துக் கொண்டும் காலத்தை ஓட்டினேன்.
சிவராத்திரி அன்று, சிவன் கோயிலுக்குச் சென்று, பிறகு பாபா ஆலயத்துக்குப் பிரசாதம் எடுத்துச் சென்றேன். பாபாவை வலம் வந்து வீடு திரும்பியதும், எனது நண்பன் என்னை அழைத்து, சம்பள விஷயமாகப் பேச மறுநாள் என்னை மேலாளர் வரச் சொன்னதாகத் தெரிவித்தான். மகிழ்ச்சியுடன், அதிகம் பதட்டப் படாமல் அவரைப் பார்க்கச் சென்றேன்.
சம்பளம் மிகக் குறைவு என்றாலும், அனுபவமே இல்லாத எனக்கு ஒரு வேலை கிடைத்ததே என மகிழ்ந்தேன். எல்லாவற்றையும் ஸாயியிடமே விட்டு விட்டேன். விரைவில் பணியில் சேரப் போகிறேன். இன்னும் 7 வாரங்கள் விரதம் மீதமிருக்கின்றன. 'பாபாவைக் கேள்' என்னும் வலைதளத்தில் நேற்று எனது வேலை பற்றிக் கேட்டபோது,'நீ பிரபலமடைவாய். நேர்வழியில் செல். வெற்றி உனதே' என வந்தது. இதைவிட வேறென்ன நான் கேட்க முடியும்!
எனது தேவைகள் இத்தோடு நிற்கப் போவதில்லை. மேலும் கேட்பேன். ஆனால் இனி ஸாயி முடிவுக்கே அனைத்தையும் விடுகிறேன். அடுத்த முறை ஷீர்டி செல்லும்போது, 2 - 3 நாட்கள் அங்கேயே தங்கி, ஸத்சரிதத்தை த்வாரகாமாயியில் அமர்ந்து படிக்க வேண்டும் என்பதே என் ஆசை. ஸாயியின் இருப்பை நான் உணர விரும்புகிறேன். எனது தேவைகளைக் கவனித்துக் கொள்வதற்காக ஸாயிக்கு எனது வந்தனம். எப்போதும் என்னுடனேயே இருங்கள்.
ஓம் ஸாயி ஸ்ரீ ஸாயி ஜெய ஜெய ஸாயி.


'ஸாயிதேவரின் ஆசிகளால் எனது வாழ்க்கை': 
எனது 12-வது வயதிலிருந்தே ஸாயி பாபாவின் பக்தனாக இருந்து, இடையில் ஒரு சில சந்தர்ப்பங்களால் எனது பக்தியைத் தொடரமுடியாமல், பின்னர் 10 - 12 ஆண்டுகளுக்குப் பிறகு, எனது தந்தையின் உந்துதலால் மீண்டும் ஸாயி அடியவனானேன்.
எனது முதல் ஸாயி அனுபவத்தில் தொடங்கி, என் வாழ்வில் இதுவரை, குறிப்பாக 02/24/12 அன்று நிகழ்ந்த அனுபவம் வரை, இங்கே பகிர விரும்புகிறேன். இந்த வாய்ப்பினைக் கொடுத்த மனிஷா'ஜிக்கு எனது வந்தங்கள்.
எனது தந்தை ஒரு ஸாயி பக்தர். அதனால், நாங்களும் ஸாயியைப் பணியவும், 12 வயதிலேயே அஷ்டோத்தரம் சொல்லும் அளவுக்கு அவருடன் ஈடுபாடு கொண்டேன். ஸாயி என்பவர் யார் எனத் தெரியாமலேயே, எனது தந்தையின் மதிப்பில் உயரவேண்டியும், தேர்வுகளில் வெற்றி பெறவும் மட்டுமே நான் அப்படிச் செய்தேன்.
இதற்கிடையில் எனது தந்தை வேலைவாய்ப்புக்காக அரபுநாட்டுக்குச் செல்ல, சரியான வழிகாட்டி இல்லாமல், அவர் அங்கிருந்த 15 ஆண்டுகளில் நான் திசை தடுமாறி, தீய வழிகளில் நேரத்தைச் செலவிட்டு, ஸாயியிடமிருந்து விலகிப் போனேன்.உடல்வாகு சிகிச்சை[Physio-therapy]யில் எப்படியே ஒரு பட்டமும் பெற்றேன்.
எனது தந்தை இந்தியா வரும்போதெல்லாம் ஷீர்டி யாத்திரைக்குச் செல்வார். எவ்வித விருப்புமின்றி நானும் அவருடன் செல்வேன். 'எனது த்வாரகாமாயியில் காலடி வைத்தவர்க்கு எவ்விதத் துன்பமும் அணுகாது' என்னும் பாபாவின் மொழிக்கேற்ப, நானும் அவரது அருளால், பட்டப் படிப்பை முடித்தேன். வேலை தேடி அலைகையில், எனது தந்தை சொன்னதற்கிணங்க, அவர் பணி புரியும் குவைத்துக்குச் சென்றேன். 'முதலுதவிச் சிகிச்சை' [First-Aid] பிரிவில் ஒரு தாற்காலிக வேலை ஒரு சிலமாதங்களுக்குக் கிடைத்தது.
குவைத்தில் நான் இருந்த முதல் நாளே நான் ஒரு உண்மையான மனிதனான நாள் எனச் சொல்லலாம். அன்றுதான் நான் ஸாயி ஸத் சரிதத்தைப் படிக்கத் தொடங்கினேன். அன்று முதல், பாபா தான் என்னை வாழ்க்கையில் நடத்திச் செல்கிறார். அந்த வேலைக்குப் பிறகு, வேறு சில நிரந்தரமில்லாத வேலைகளைச் செய்து வந்தேன். எனது தந்தை என்னை ஒரு நிரந்தரப் பணியில் அமர்த்த எவ்வளவோ முயற்சித்தும், ஒன்றும் சரியாக அமையவில்லை. பாபா ஒரு மேலான வாழ்க்கையை நிச்சயித்திருக்கிறார் என அப்போது தெரியவில்லை.
இதற்கிடையில், எனது நடவடிக்கைகள் பாபாவின் அருளால் முற்றிலுமாக மாறிப்போயின. ஸத்சரிதத்தை இரு முறை படித்து முடித்தேன்.பாபா மீதான எனது நம்பிக்கை நாளுக்கு நாள் வளர்ந்தது. பாபவின் அருளால், எனது தந்தை என்னை அமெரிக்காவுக்கு அனுப்ப முடிவெடுத்தார்.
அமெரிக்க மண்ணில் வந்திறங்கிய நாள் முதலாய் எனது குடும்பத்தின் மதிப்பே நல்லபடியாக மாறிவிட்டது. எனது தேவன் என் வாழ்விலிருந்த தடைகளை எல்லாம் நீக்கலானார். என்னைப் போன்றவர்களால் எளிதில் முடிக்க இயலாத தேர்வில் என்னை வெற்றி பெறச்செய்து, ஆறே மாதங்களில் எனது பணிக்கான 'லைஸென்ஸ்' கிடைக்க வகை செய்தார்.
அன்று முதல் பாபா எப்போதுமே என்னுடன் இருப்பதாக உணர ஆரம்பித்தேன். இது நிகழ்ந்து இப்போது 4 ஆண்டுகளாகி விட்டது. இப்போது நான் இருக்கும் நிலை என்னலேயே நம்ப முடியாத ஒன்று. பாபா எனக்கு அனைத்தும் தந்திருக்கிறார்.
மடல் நீண்டுகொண்டு போவதால் இப்போதைக்கு இத்துடன் முடிக்கிறேன். மனிஷா'ஜிக்கு மீண்டும் எனது வந்தங்கள்.
சத்யா.
----------------------------------


'எனது வாழ்வில் ஸாயியின் அற்புதம்'
இந்தத் தளத்தில் நீங்கள் செய்துவரும் பணிக்கு என் வந்தனங்கள். அடியவர்களின் அனுபவங்களை அடிக்கடி இங்கே படித்துவருகிறேன். இதன் மூலம், பாபா எப்போதும் நமக்கென இருக்கிறார் என்பது புரிகிறது. என்னுடைய இந்த முதல் பதிவையும் பிரசுரிக்க வேண்டுகிறேன். எனது மின்னஞ்சல் முகவரியைத் தர வேண்டாம். பெயரை இட்டால் மட்டும் போதும். இந்த நீள மடலைப் பொறுமையாகப் படிக்க வேண்டுகிறேன்.
2009-ல் பாபாவைப் பற்றி நான் அறிந்தேன். 15/2/2012-ல் முதன் முறையாக ஷீர்டி சென்று வந்தேன். ஸாயி மீதான எனது நம்பிக்கை பன்மடங்காக உயர்ந்துள்ளது.
ஸாயியின் இருப்பைப் பலமுறை நான் அனுபவித்திருந்தாலும், ஒரு சிலவற்றை மட்டும் இங்கே பதிகிறேன்.
1] பொங்கல் பண்டிகைக்கு முந்தைய வாரம் எனது தாயார் வீட்டைச் சுத்தம் செய்யும்போது கீழே விழுந்து அடிபட்டார். அதே சமயம் என் வீட்டிலிருந்த பாபா சிலையும் விழுந்து இரண்டு துண்டாக உடைந்தது. அம்மாவுக்குத் தெரியாமல் இது நிகழ்ந்தது என நான் நினைத்தபோது, எனது சகோதரி என்னைத் தொலைபேசியில் அழைத்து, 'விளக்கேற்றும்போது பாபா படம் தீப்பிடித்துக் கொண்டது' எனச் சொல்ல, இதெல்லாம் ஏதோ தீய சகுனங்களின் அறிகுறி எனப் பயந்தேன். அதே சமயத்தில், எனது உறவினர் ஒருவருடன் ஒரு தகராறும் நிகழ நான் அழுதே விட்டேன். நிச்சயமாக ஏதோ தீயது நடக்கப் போகிறது என நம்பினேன்..'ஏன் இப்படியெல்லாம் நிகழ்கிறது?' என பாபாவிடம் வேண்டினேன்.
இந்த நேரத்தில், ஒரு பாபா அடியவர் என்னை அழைத்து, அருகிலிருக்கும் பாபா கோயிலில் காகட் ஆரத்திக்குச் சென்றுவருமாறு சொன்னார். ஆனால் என்னால் போக இயலவில்லை. பின்னர்தான், அது குறித்தும் வருந்தினேன். எனது அந்த உறவினர் எனக்கும், என் குடும்பத்துக்கும் அவப்பெயரைத் தரவென, பொய்யான தகவல்களைப் பரப்பினார் எனத் தெரிய வந்தது. அதன் அறிகுறியாகவே அந்தத் தீய சகுனங்கள் நிகழ்ந்தன எனப் புரிந்து கொண்டேன். இப்போதும் அந்த நபர் என்னை விடவில்லை. பாபா எனக்கு உதவுவார் என நம்புகிறேன்.
இந்த நிகழ்வுகளினால் வருத்தமுற்று, பொங்கலைக் கொண்டாடச் செல்லும் மனநிலையில் நான் இல்லை. எனது உறவினர் ஒருவர் மூலமாக 'தத்காலில்' பதிவு செய்து செல்வது வழக்கம். இந்த முறையும் அப்படியே செய்யச் சொல்ல, அவரும் பண்டிகைக்கு வீட்டுக்குச் சென்று இன்பமாகக் கழிக்குமாறு சொன்னார். நான் அப்படியே செய்யச் சொல்லிவிட்டு, முடிவை பாபாவிடம் விட்டுவிட்டேன். எனக்கு 'காத்திருப்போர் வரிசையில்' [waiting list] தான் இடம் கிடைத்தது. நான் ஊருக்குச் செல்வதில் பாபாவுக்கு விருப்பம் இல்லை போலும் என நினைத்தேன். அப்போதுதான் அந்த அற்புதம் நிகழ்ந்தது. எனது உறவினர் என்னை அழைத்து, மற்றொரு புகைவண்டியில் இடம் வாங்கித் தரமுடியும் என்றும், ஆனால் நான் அலுவலில் இருந்து சீக்கிரமே வர வேண்டியிருக்கும் எனவும் தெரிவித்தார்.
எப்படி இது நடந்தது என நான் கேட்டேன். பயணச் சீட்டு கிடைப்பது கடினமாக இருந்ததல் இன்னொரு நண்பரின் தயவில் கிடைத்தது எனச் சொன்னார். பாபாவின் கருணையால் இது கிடைத்ததென்றால், நான் பயணம் செய்யும்போது அவரது உருவப்படத்தைக் காண வேண்டும் என வேண்டிக் கொண்டேன். எனது உறவினர் நான் பயணத்தின்போது படிக்கவென சில பத்திரிகைகளை வாங்கித் தந்தார். அதைப் பிரித்தபோது, அதில் ஒரு அழகிய பாபா படம் இருந்தது. 'தத்கால்' சீட்டு கிடைக்காதபோது, எப்படி இந்தச் சீட்டு மட்டும் கிடைத்தது?' என நான் மீண்டும் கேட்க, தனது நண்பரிடம் அதைப் பற்றி விசாரித்து, நான் திரும்பி வந்ததும் சொல்வதாகச் சொன்னார்.
அதேபோல அவர் விசாரித்தபோது, அந்த நண்பருக்கு பாபா கோவிலில் கிடைத்த இன்னொரு நண்பரின் மூலம் பயணச்சீட்டு கிடைத்ததாகச் சொன்னார். இந்த அற்புதத்தை என்னவெனச் சொல்வது! அதைக் கேட்டதும் பாபா எப்போதும் என்னுடனேயே இருக்கிறார் எனும் மகிழ்ச்சியில் நான் ஆனந்தக் கண்ணீர் விட்டேன்.
2] முதன்முறையாக நான் ஷீர்டி சென்றேன். பாபா படம் பொறித்த ஒரு பேனா வாங்கினேன். அதை எனது கைப்பையில் வைத்தேன். ஷீர்டியில் இருந்து சென்னை திரும்ப 'புனே'வில் ரயிலிலிடம் கிடைத்தது. வழக்கம் போல, எனது கைப்பையை என் தலைக்கு அடியில் வைத்து, படுத்தேன்.
கீழிருக்கையில் நானும், மேலிருக்கையில் எனது உறவினருமாக படுத்துறங்கினோம். நள்ளிரவில் அவர் என்னை எழுப்பி, யாரோ எனது கைப்பையை எடுக்க முயற்சிப்பதாகச் சொன்னார். அப்போது யாரோ ஒருவன் ஒரு கைப்பையுடன் அவசரமாகச் செல்வதைப் பார்த்தேன். எனது உறவினர் சத்தம் போட்டதால், அவன் எனது கைப்பையை எடுக்காமல் சென்றதை உணர்ந்தேன். மறுநாள் காலை, அந்த ஆள் பலருடைய உடைமைகளை அன்றிரவு திருடியதாக அறிந்தேன். என் உடைமையைக் காப்பாற்றியதற்காக பாபாவுக்கு நன்றி சொன்னேன். வழக்கமாக நல்ல உறக்கத்தில் ஆழும் எனது உறவினர் அன்றிரவு மட்டும் எப்படி விழித்துக் கொண்டார் எனக் கேட்க,' அந்தத் திருட்டு நிகழும் நேரத்தில் கழுத்து வலி ஏற்பட்டு, அதனால் கண் விழித்தபோது அந்தச் சம்பவத்தைக் கண்டதால் குரல் கொடுத்தேன்' என அவர் பதில் சொன்னார். 'பாபா உன்னுடனேயே இருக்கிறார். அவர் நம்மை எப்போதும் காப்பார்' எனவும் தைரியம் கொடுத்தார்.
பாபாவுக்கு வந்தனம் சொல்லிவிட்டு,' அவரது இருப்பைக் காட்டும் விதமாக ஒரு படத்தைக் காட்ட வேண்டும் பாபா' என வேண்டினேன். பிறகு ஏதோ ஞாபகத்தில் எனது கைப்பையைத் திறக்க பாபா உருவம் பொறித்த அந்தப் பேனா என் கண்ணில் பட்டது. நடப்பதெல்லாம் நன்மைக்கே என நினைத்து மகிழ்ந்தேன்.
3] ஷீர்டி சென்றபோது காகட் ஆரத்தி, தூப் ஆரத்தி இரண்டையும் பார்க்கும் பேறு கிட்டியது. காகட் ஆரத்தியின் போது, மற்றவர்கள் எல்லாரும் பாடிக் கொண்டிருந்தபோது, நான் மட்டும் கண்களில் நீர் வழிய, ஏதேனும் ஒரு அற்புதத்தை நிகழ்த்துமாறு பாபாவை வேண்டினேன். கூட்டம் அதிகமாயிருந்ததால், பாபாவை முழுதுமாகப் பார்க்க இயலவில்லை. கண்களைத் திறந்து பார்த்தபோது, பாபாவின் திருவுருவம் தனது இதழ்களைப் பழுப்பு நிறத்தில் காட்டிக்கொண்டு [brown lips]என்னைப் பார்த்துச் சிரிப்பதாக உணர்ந்தேன். ஒரு சில நிமிடங்களுக்கு இந்தக் காட்சி நீடித்து, பிறகு எப்போதும் இருப்பதுபோலவே சாதாரணமாக மாறிவிட்டது. பாபாவின் இந்த அற்புதத்தைக் கண்டதும், தன்னைக் காண ஷீர்டி வரும் எவரையும் பாபா ஏமாற்ற மாட்டார் என உணர்ந்தேன்.
4] 9 வார ஸாயி விரதம் அனுஷ்டித்தபோது இன்னும் பல அற்புதங்கள் நிகழ்ந்தன. எனது அடுத்த பதிவில் அவற்றை எழுதுவேன்.
பாபாவின் கருணையால், ஸாயி விரதத்தை இரண்டாம் முறையாகத் தொடங்கப் போகிறேன்.
ப்ரியா.
(Translated into Tamil by Sankarkumar and 
uploaded by Santhipriya) 

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.