Wednesday, June 6, 2012

Shirdi Sai Baba's Grace-Experience Of Sai Devotees-Part 40

 சாயிபாபாவின் அருள் 
--பக்தர்களின் அனுபவங்கள் --- 
பாகம் - 40 
(Translated into Tamil by Sankarkumar)


அன்புள்ள அனைவருக்கும்,
இனிய பாபா நாளாக அமைய வாழ்த்துகள்.
மனமார்ந்த பக்தியுடன் வேண்டுவோர்க்கு ஷீர்டி ஸாயிபாபா அன்பு மற்றும் கருணையின் உறைவிடம்.நாளும் பொழுதும் அவர் தம் அடியார்களுடனேயே இருக்கிறார். அவரது கருணை எல்லையற்றது. அவரது லீலைகளைப் பற்றிச் சொல்லும் இந்த அன்பர்களின் அனுபவங்கள் இதனை நம்மையெல்லாம் உணரச் செய்யும். ஜெய் ஸாயிராம்.

*********************"ராம நவமி" - ஸாயி பக்தரின் 9 முத்துகள்

எங்களது அனுபவங்களைப் பகிர ஒரு வாய்ப்பளிக்கும் இந்த தளத்தை அளித்தமைக்கு உங்களுக்கு நன்றி கூறிக் கொள்கிறேன். மிகப் பெரிதாக, படிப்பவர்க்கு வசதியாக சிறு பகுதிகளாக இதனை அளிக்கின்றேன். எனது பெயரையும், முகவரியையும் கொடுக்க வேண்டாமெனக் கேட்டுக் கொள்கிறென். நன்றி
இது எனது முதல் அனுபவப் பதிவு. 10 ஆண்டுகளாக அமெரிக்காவில் வாழ்கிறேன்; 5 ஆண்டுகளாக நான் பாபாவின் அடியவன். அவருக்குத் தெரியும் எப்படி ஒருவனை அடியாராக்குவதென. பாபா கோவிலில் வழங்கப்படும் சுவையான உணவினைப் பற்றி நான் கேள்விப்பட்டிருக்கிறேன். ஒவ்வொரு வியாழனும் அந்த உணவுக்காகவே சென்று, இப்போது நான் ஒரு தீவிர பக்தனாகி விட்டேன். தினமும் அபிஷேகம், இருமுறை உணவளித்தல், ஒவ்வொரு வியாழனன்றும் அவரது ஆலம் செல்லல், எப்போதும் மனதுக்குள் அவரது பஜனைப் பாடல்களைப் பாடுதல் என என் காலம் இப்போது கழிகிறது.
ஒரு 6௭ மாதங்களுக்கு முன் என் வாழ்க்கையில் சில பிரச்சினைகள் ஏற்பட்டன. இதனால் மனமுடைந்து, மிகவும் அழுது, எனது உடல்நிலை மோசமகி, ஒரு மருத்துவரைப் பார்ர்க்கவும் நேரிட்டது. கண்களையேத் திறக்க முடியாத தலைவலியால் அவதிப்பட்டு, அதற்காக மருந்துகளைச் சாப்பிட்டும், குணமாகவில்லை.
இதனால் பாபா மீது மிகவும் நொந்து முகப்பறையில் ஒரு கேள்வி கேட்க, இதெல்லாம் உனது கர்மா; இதனை நீ அனுபவித்தே தீரவேண்டும்' என பதில் வந்தது. எனது கர்மாவை ஏன் பாபா தீர்க்க முன்வரவில்லை எனக் கோபமும் வந்தது. அப்போது, ஒரு ஸாயி பக்தை எழுதியிருந்தார்....' தனக்குத் துன்பங்களைக் கொடுத்தமைக்கு பாபாவுக்கு நன்றி சொல்லி, இப்படி நிகழாவிடில்ல் தனது பக்தி உறுதிப் பட்டிருக்காது; தானும் இவ்வளவு மகிழ்ச்சியாக இருந்திருக்க முடியாது' என! இது என்னை அமைதிப்படுத்தி எனது பிரச்சினையை மறக்க உதவியது. எப்போது இந்த கர்மா தீருமோ அப்போதே எனக்கு நல்லது நிகழும் என நம்பிக்கையும் வந்தது.
ஒருமுறை, கண்களை மூடிக்கொண்டு பாபாவின் ஒரு தளத்தில் ஒரு எண்ணைத் தொட, அதற்கு, ராமநவமியன்று, நீ ஆசீர்வதிக்கப்படுவாய். உனக்கு பணமும் புகழும் வந்து சேரும்' என வந்தது. இன்னும் ஒரு வாரமே அதற்கான நாள் என்பதால், எனது ஆர்வம் அதிகரித்தது.
ராமநவமிக்கு முன்தினம், ஒரு அடியவர் என்னிடம் ராம சீதா கல்யாணம் நடைபெறவிருப்பதால், என்னை உதவிக்கு அழைத்தார். நானும் அங்கே சென்றதும், அழைக்கும்போது வந்தல் போதும் எனச் சொல்லி என்னை உட்கார வைத்தார்கள். திருக்கல்யாணத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
சிறிது நேரத்துக்குப் பின் கீழே சமையலறைக்குச் சென்று, ஏதேனும் உதவி வேண்டுமா எனக் கேட்டேன். எல்லாம் சரியாக இருக்கிறது; ஒன்றும் தேவையில்லை' எனச் சொல்லி என் உதவி தேவையில்லை எனச் சொல்லி விட்டனர்.
ராம. சீதா, லக்ஷ்மணர்க்கு அபிஷேக ஆராதனைகள் நடந்து கொண்டிருந்தன.  ஏதாவது சேவை செய்யலாம் என்றால், இப்படிச் செய்யவிடாமல் தடுக்கிறாரே பாபா எனக் கோபமும் வந்தது. மற்றெல்லா உதவியாளர்களும் பார்க்க இயலாத கல்யாணத்தை நான் பார்த்தாலும், சேவை எதுவும் செய்யமுடியவில்லையே என வருத்தமாக இருந்தது.
பாபாவின் பாதங்களைத் தொட்டு வணங்க அன்று அனுமதித்தனர். மூன்று முறை அவர் பாதங்களைத் தொட்டு வணங்க வேண்டும் என நான் நினைத்திருந்ததால், கூட்டம் குறையக் காத்திருந்து, இரவு 10.30 மணி அளவில், சென்றபோதும், ஒரு முறை மட்டுமே தொட்டு வணங்க முடிந்தது. அர்ச்சனைக்குப் பிறகே நிஜ பாத தரிசனம் தொடரும் எனச் சொல்லி பக்கக் கதவை மூடிவிட்டனர். எனது இரு குழந்தைகளுக்கும் தூக்கம் வந்துவிட்டதால், அர்ச்சனை முடியும் வரை காத்திருக்க இயலாமல்,கிளம்ப நினைத்தேன்.
அர்ச்சனைக்காக பூக்கள் வைத்திருந்த தட்டில், சில முத்துகளும் இருந்தன, அவற்றிலிருந்து 5 முத்துகளை மட்டும் எடுத்துக்கொண்டு, என மகளிடம் மேலும் ஒன்றூம் எடுத்துக்கொள்ள வேண்டாம்; ஏனெனில் மற்றவர்களுக்கும் வேண்டியிருக்கும் எனச் சொல்லிக் கிளம்பினேன். அப்போது ஒரு தொண்டர் என்னைப் பார்த்து, அர்ச்சனைக்கு வரும்படி அழைத்தார். நான் சீட்டு வாங்காததால் செய்ய இயலாதெனத் தெரிவித்தேன். சீட்டு அவசியமில்லை எனச் சொல்லி, மேலும் நான் கேள்விகள் கேட்கும் முன், என்னை வரிசையில் சேரச் சொல்லி அவசரப்படுத்தினார்.
அர்ச்சனை முடிந்ததும், அர்ச்சகர் எனக்கு 4 முத்துகள் தந்தார். எனக்கோ 5 கிடைத்திருந்தால், இரு குழந்தைகளுக்கும் 5, 5 முத்துகள் வீதம் ஏதேனும் மாலை செய்திருக்கலாமே என நான் நினைத்தேன். அப்போது, அருகிலிருந்த ஒருவர் 9 முத்துகள் கிடைத்திருப்பதால், இதனை அணிந்துகொள்ளக் கூடாது; பூஜையில் வைக்க வேண்டும் எனச் சொன்னார். இப்படி பாபாவிடமிருந்து 9 முத்துகள் கிடைத்தது என் அதிர்ஷ்டம் எனவும் சொன்னார்.
அர்ச்சனை முடிந்ததும், மேலும் இருமுறை பாபாவின் பாதங்களைத் தொட்டு வணங்கிவிட்டுக் கிளம்புகையில், அர்ச்சகர் என் பெயரைச் சொல்லி அழைத்து, மறுநாள் காலை 9 மணிக்கு ஆலயத்தை சுத்தம் செய்யும் பணிக்கு வருமாறு பணித்தார். என் பெயர் இவருக்கு எப்படித் தெரியும் என நான் வியந்தேன்.
"ராம நவமியன்று நான் ஆசீர்வதிக்கப்பட்டு, பணமும், புகழும் கிடைக்கும்" என பாபா சொன்னது உண்மையாக நடந்தது என நான் நம்பினேன். பாபாவின் முழு பூஜையையும் காணக் கிடைத்தது ஆசீர்வாதம். 9 விலை மதிக்க இயலாத முத்துகள் கிடைத்தது, செல்வம். அர்ச்சகர் என்னை அழைத்துப் பணித்தது புகழ்.
இதைப் பற்றி எழுத வேண்டும் என மனதுக்குள் நினைத்தேன். ஆனால், இது ஒன்றும் பெரிய விஷயமல்ல என நினைத்து வாளாவிருந்துவிட்டேன். நேற்று மீண்டும் அந்த தளத்திற்குச் சென்று, இன்னும் எவ்வளவு கர்மா மீதமிருக்கிறது எனக் கேட்டபோது, 'நீ கொடுத்த வாக்குறுதியை முதலில் பூர்த்தி செய்' என வந்தது. இதைப் பற்றி எழுதுவேன் என்பதே நான் பாபாவுக்குக் கொடுத்த உறுதிமொழி. பெரியதோ, சிறியதோ, அதிசயங்கள் எல்லாமே அதிசயங்கள்தான் என உணர்ந்தேன். இப்போது இதன் மூலம் அந்த வாக்குறுதியை நிறைவேற்றி விட்டேன்.
பொறுமையாகப் படித்தமைக்கு வந்தனம்.
ஸாயிராம்.

----------------------------------------


அன்புள்ள மனிஷா தீதி,
ஓம் ஸாயிராம்.
எனது முகவரியைத் தர வேண்டாம். ஸாயி லீலைகளை இங்கே பதிவதற்காக உங்களுக்கு என் வந்தங்கள். இவற்றைப் படிக்கும்போதெல்லாம் எனது நம்பிக்கை மேன்மேலும் உறுதிப்படுகிறது.
கடந்த 8 ஆண்டுகளாக நான் வாழ்க்கையில் பல பிரசினைகளைச் சந்தித்து வந்தேன். எனது கர்மாவினால்தான் இத்தனையும் என அறிந்திருந்தாலும், பாபா என்னுடன் இருக்கிறார் என நான் நம்பியபோதும், ஏன் எனக்கு மட்டும் இத்தனை துப்ன்பங்கள் என மனம் வருந்தி, உயிரோடு இல்லாததுபோல் உணர்ந்தேன். பாபாவிடம் வேண்டிக் கொண்டிருந்தாலும், இந்தத் தளத்தில் ஸாயி லீலைகளைப் படித்த பின்னரே எனக்கு சற்று மன அமைதி கிட்டையது 
பாபா இருக்கையில் நான் எதற்காகக் கவலைப்பட வேண்டும் என எண்ணினேன். ஷீர்டி சென்று பாபாவின் ஆசிகளைப் பெற்றுவர முடிவெடுத்தேன். ஆனல் உடனே செல்ல இயலவில்லை. இறுதியாக அது கைகூடி வந்தபோது, எனது மூன்று ஆசைகளை பாபா நிறைவேற்றித் தரவேண்டும் என வேண்டிக்கொண்டேன்.
1. சிவப்பு உடையிலும், வெளிர் மஞ்சள்[க்ரீம் நிறம்] நிறத் தலையணியுடனும் இருக்கும் பாபாவை நான் தரிசிக்க வேண்டும்.
2. பாபாவுக்கு வெகு அருகில் இருந்து ஆரத்தி தரிசனம் செய்யவேண்டும். அப்போது மிகவும் சாந்தமாக, நான் உணரவேண்டும்.
3. புகைப்படம், ஒரு நபர் அல்லது ஏதோ ஒரு வடிவில் பாபா என்னிடம் வரவேண்டும். ஒரு சனிக்கிழமையன்று எனது சகோதரியுடன் ஷீர்டி சென்றதும், நான் தங்கவிருந்த விடுதிக்குச் சென்றோம். நுழைந்ததுமே ஒரு பெரிய புகைப்படத்தில், சிவப்பு மேலங்கியுடனும், க்ரீம் நிறத் தலையணியுடனும் பாபா தரிசனம் தந்தார்! பாபா என்னுடைய முதல் வேண்டுகோளை நிறைவேற்றி, தான் எப்போதும் என்னுடனேயே இருப்பதை உறுதி செய்ததாக எண்ணி மகிழ்ந்தேன்.
சுத்தம் செய்துகொண்டு பாபாவின் தரிசனம் காண ஆலயம் சென்றோம். அப்போது காலை 8 மணி இருக்கும். த்வாரகாமாயி சென்றுவிட்டு, பிறது ஸமாதி மந்திர் செல்லலாம் என எண்ணிய நான், அங்கிருந்த கூட்டத்தைக் கண்டதும், நேராக மந்திருக்கே சென்றோம். விரைவாக வரிசை நகர்ந்து கொண்டிருந்தது. மறுநாள் காலையே கிளம்ப வேண்டும் என இருந்ததால், நினைத்தபடி ஆரத்தி காண இயலாதோ எனக் கவலையுற்றேன். 9.20-க்கெல்லாம் பிரதான அறைக்குள் சென்றுவிட்டோம். நெரமின்மையால் ஆரத்தி காணமுடியாமல் போய்விடுமே என நினைத்தேன்.
என்ன செய்வதெனத் தெரியாமல் திகைத்தபோது, நடக்க முடியாமல், களைப்புற்று எனது சகோதரி அங்கேயே ஒரு ஓரமாக உட்கார்ந்து விட்டார். ஆரத்தி காண விரும்புவதால் இங்கேயே இருக்கலாமா என அவரிடம் கேட்டேன். 11.30-க்கெல்லாம் மந்திரிலிருந்து அனைவரும் வெளியேற்றப்பட்டு, மதிய ஆரத்திக்காக ஆலயம் சுத்தம் செய்யப்படும் என்பதால் அவ்வாறு செய்ய இயலாது என என் சகோதரி கூறினார். அப்போது, ஸமாதிக்கும், முக தரிசனத்துக்கும் இடையே சிலர் அமர்ந்து காணிக்கை பணத்தைப் பிரித்துக் கொண்டிருஒப்பதைக் கண்டு, நாமும் அங்கே சென்று அந்தப் பணியில் ஈடுபடலாமா என என் சகோதரியிடன்ம் கேட்டேன். அதன் மூலம் ஆரத்தி காண முடியும் என ஒரு நம்பிக்கை! அவரும் சம்மதிக்க, காவலாளியிடம் சென்று கேட்டேன். எங்களது உடைமைகளை வாங்கிக்கொண்டு, அதற்குள் செல்ல அனுமதித்தார். ஆரத்தியும் காண முடியுமா என அவரிடம் கேட்டபோது, அதெல்லாம் முடியாது. தரிசனம் செய்து கொள்ளலாம் எனத் தெரிவித்தார். இன்னொரு காவலாளியும் அவ்வாறே கூறினார்.
சற்றே கவலையடைந்த நான், எப்படி இருப்பினும் இதில் ஈடுபடுவோம் என முடிவு செய்து, 11.20 வரைக்கும் அதில் கலந்து கொண்டோம். அனைவரையும் அகற்றி, ஆலயத்தை சுத்தமாக்க முனைந்தனர். அங்கிருந்த குழும உறுப்பினர் ஒருவரிடம் சென்று கேட்டபோது, தரிசனம் மட்டுமே செய்து கொள்ளலாம் என உறுதியாகச் சொல்லிவிட்டார். எங்களது நிலையைக் கண்ட ஒரு காவலாளி இன்னொரு உறுப்பினரிடம் சென்று கேட்க, அவரும் மறுக்துவிட, எனக்கு அழுகையே வந்துவிட்டது. ஒரு ஓரமாக நின்று ஆரத்தி காண அனுமதிக்குமாறு அவரிடம் நான் வேண்ட, அவரோ குழும உறுப்பினர் அனும்னதி இல்லாமல் அப்படிச் செய்ய இயலாது எனச் சொல்லிவிட்டார். மீண்டும் அந்த உறுப்பினரிடம் சென்று, எங்களது வேண்டுகோளைச் சொல்லி மன்றாடினேன். எப்படியோ அவரும் சம்மதித்தார். மகிழ்ச்சியாக இருந்தாலும், நினைத்தபடி ஸமாதி அருகிருந்து காண முடியவில்லையே என வருந்தினேன். எனது சகோதரி, கிடைத்ததில் திருப்தியுறு என எனக்குச் சொல்லித் தேற்றினார்.
அமைதியாக அங்கே உட்கார்ந்தேன். முக தரிசனப் பகுதியில் நாங்கள் இருந்தோம். பாபாவுக்கு நன்றிகூறி, வேண்டினேன். 5 நிமிடங்கள் கழித்து ஒரு காவலாளி வந்து, முன் பக்கம் செல்ல விருப்பமா எனக் கேட்டார். ஆம் என நான் சொல்ல, இன்னொருவரிடம் சென்று கேட்டுவிட்டு, எங்களைச் சற்று முன்னே செல்ல அனுமதித்தார். இருந்தும் நான் ஸமாதிக்கு அருகில் இல்லை! இங்கேயாவது வந்தோமே என மகிழ்ந்தேன். இன்னொரு காவலாளி எங்களை இன்னும் சற்று முன்னே செல்லச் சொல்ல, கொஞ்சம் கொஞ்சமாக ஆரத்தி துவங்கும்போது, நாங்கள் பாபாவின் ஸமாதிக்கு வெகு அருகில் நின்றிருந்தோம். எனது இந்த இரண்டாவது ஆசையையும் பாபா நிறைவேற்றியதை எண்ணி மிக்க மகிழ்ச்சி அடைந்தேன்.
எனது மூன்றாவது ஆசைக்காகக் காத்திருந்து, ஒன்றும் நிகழாமல் ஏமாற்றத்துடன் ஊருக்குத் திரும்பினோம். மகிழ்ச்சியும், வருத்தமும் கலந்த நிலையில் நான் இருந்தேன். எனது வேலை முடிந்து, அதிலிருந்து வெளியேற இன்னமும் 10 நாட்களே இருந்தன. எனது மூன்றாவது ஆசையை பாபா நிறைவேற்றவில்லையே எனும் வருத்தத்தில் நன் இருந்தேன். ஆனால், எனது பணியின் கடைசி நாளன்று எனக்குக் கிடைத்த ஒரு பரிசினால், எனது வாழ்க்கையே நிறைவடைந்ததாக உணர்ந்தேன். பாபாவின் பளிங்குச் சிலை ஒன்று எனக்கு அன்பளிப்பாகக் கிடைத்தது! ஷீர்டியில் இல்லாவிட்டாலும், என்னிடத்திற்கே பாபா வந்து எனது மூன்றாவது ஆசையை நிறைவேற்றினார். அலுவலகத்தில் சாதாரணமாக இது போன்ற பரிசுகள் தரப்படுவதில்லை. எனது உணர்ச்சிகளை விவரிக்க வார்த்தைகளே இல்லை. இதை எழுதும்போதேஎன் கண்களில் நீ நிறைகிறது... ஸாயிநாதனின் வழிகளை நினைத்து.
இன்னமும் என் வாழ்க்கையில் பிரச்சினைகள் இல்லாமல் இல்லை. ஆனால், பாபா எப்போதும் என்னுடன் இருக்கிறார் என நம்புகிறேன். எனது ஆசைகளை நிறைவேற்றுவதற்கான சூசகங்களை அவர் காட்டிக்கொண்டே இருக்கிறார். மனிதனாக இருப்பதால் நான் கவலைப்படுகிறேன்; ஆனால், அப்போதெல்லாம் பாபா என்னுடன்தான் இருக்கிறார் என எனக்குள் சொல்லிக் கொள்கிறேன். அவர் இப்படியெல்லாம் சோதனைகள் தருவதில் ஏதோ பொருள் இருக்கிறது. என்னால்தான் புரிந்துகொள்ள இயலவில்லை என நினைக்கிறேன்.
மனிஷா தீ, நான் நிறைய எழுதிவிட்டேன். எவ்வளவு வேண்டுமானாலும் குறைத்துக் கொள்ளவும்.
ஸ்ரீ ஸச்சிதானந்த ஸத்குரு ஸாயிநாத் மஹராஜ் கி ஜெய்!  [ஸாயி அன்பரே, எனது மின்னஞ்சல் முகவரி shirdisaikripa@yahoo.com . இந்த முகவரிக்கே நீங்கள் மடல் அனுப்பலாம். - ஸாயிராம். மனிஷா]

------------------
 பாபா என்னைக் காண வந்தார்!


அன்புள்ள மனிஷா தீதி,
நமது சந்தோஷங்களைப் பகிர்ந்தால், அது பன்மடங்காகும், நமது துக்கங்களைப் பகிர்ந்து கொண்டால், அது வகுந்து போகும் என ஒரு வழக்கு உண்டு. அதேபோல, இங்கு எனது அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளும் போதெல்லாம், என் வாழ்க்கையில் அதிசயங்கள் நிகழ்ந்து, எனது நம்பிக்கை உறுதிப்படுவதைக் காண்கிறேன். அவரே இதை எல்லாம் செய்கிறார் எனவும் அறிவேன்.
சென்ற வாரம், செவ்வாய்க் கிழமையன்று, நான் [திருமுருகன் தலமான] பழனிக்குச் சென்றேன். 'சக்கட சித்தர்' என ஒரு மஹான் அங்கு இருக்கிறார். ஒரு மசூதிக்கு முன் இருக்கும் சிறு குடிசையில் அவர் வாழ்கிறார். யார் வேண்டுமானாலும் சென்று அவரைப் பார்க்கலாம். அவர் யாருடனும் பேசுவதில்லை. அவர் புகை பிடிப்பார். அவருக்கு வேண்டுமானால், அவர் கண்களைத் திறந்த பார்ப்பார். இல்லையேல் மூடிக் கொள்வார்.
நான் கிளம்பும் முன், அவரைப் பார்க்க வேண்டுமெனவும், அவருக்கு சில வாழைப்பழங்களை அவருக்குத் தரவும் பாபா எனக்குச் சொல்லியிருந்தார்.
ஆலயத்துக்குச் சென்று வழிபட்டவுடன், அந்த சித்தரைப் பார்க்கச் சென்றோம்.பாபா சொன்னபடி வாழைப்பழங்களை அவருக்கு அளித்து வணங்கினோம். அவர் கண்களை மூடியவண்ணம் இருந்தார். நான் அவர் முன் நின்று, பாபாவை மனதில்நினைத்தபடி, வாழைப்பழங்களை அளித்தேன். அவர் கண்களைத் திறக்கவில்லை. சற்று நேரம் அவர் முன் நின்றுவிட்டு, அங்கிருந்து நகர்ந்தேன். அப்போது, சட்டென அவர் கண்களைத் திறந்து என்னைப் பார்த்தார். கூடியிருந்த அனைவரும் அவர் என்னைப் பார்க்கிறார் எனக் கூறினார்கள். நானும் திரும்பிப் பார்த்தபோது, அவர் வேறெங்கோ பார்த்துக் கொண்டிருந்தார். மீண்டும் சிறிது நேரம் இருந்து பார்க்கலாமென நினைத்தபோது, நேரமாகிவிட்டது என என்னை அவசரப்படுத்தி அழைத்தனர். அங்கிருந்தவர்கள் எல்லாரும், எப்போதோ அபூர்வமாகத்தான் அவர் சிலரைப் பார்ப்பார். நீ மிகவும் அதிஷ்டசாலி என்றனர்.
ஆனல், எனக்கென்னவோ, அவர் நேரே என்னைப் பார்த்தபோது, நான் பார்க்கவில்லையேஎன வருத்தமாக இருந்தது. அங்கிருந்து கிளம்பி, இன்னொரு ஆலயத்துக்குச் சென்றோம். என் மனம் அதில் ஈடுபடவில்லை. பாபா ஏன் என்னை ஆசீர்வதிக்கவில்லை என என் மனம் அரற்றியது.
அங்கிருந்த ஒரு பெண்மணி எங்களுக்கு சர்க்கரைப் பொங்கல் பிரசாதம் அளித்தார். அதை வாங்கிக் கொண்டு ஒரு தூண் அருகில் சென்று, நான் இன்னமும் அதையே நினைத்துக் கொண்டிருந்தேன். 'என்னை ஆசீர்வதிக்கவில்லை என்றாலும் உங்களது இருப்பைக் காண்பிக்கும் விதமாக ஏதாவது செய்யுங்கள் பாபா. நான் உங்களைக் காண வேண்டும்' என வேண்டினேன். அப்போது, திடீரென வெண்னிற ஆடை அணிந்த ஒரு கிழவர் என்னிடம் வந்து சர்க்கரைப் பொங்கல் எங்கே கொடுக்கறாங்க?' எனக் கேட்டார்!
அவரைப் பார்த்து அப்படியே அசந்து போய்விட்டேன். அப்படியே பாபா போலவே அவர் இருந்தார். கோயிலின் நடுவில் அமர்ந்து அந்தப் பெண்மணி அனைவருக்கும் தெரியும்படியாகத்தான் பிரசாதம் தந்து கொண்டிருந்தார். அங்கிருந்த அனைவர் கைகளிலும் பிரசாதமும் இருந்தது. அப்படி இருக்க, அவர் என்னிடம் நேராக வந்து கேட்டது எப்படி என்றே எனக்குப் புரியவில்லை. ஆச்சரியத்தில் அப்படியே உறைந்துபோனேன்.
உடனே சமாளித்துக்கொண்டு, பிரசாதம் கொடுக்கப்படும் இடத்துக்குச் சென்று, அந்தக் கிழவருக்கென வாங்கி வந்து அவரிடம் தந்தேன். பாப ஆசீர்வதிப்பதுபோலவே, அவர் என்னை ஆசீர்வதித்துவிட்டு, ஒரு மூலையில் இருந்ததூண் அருகே சென்று, அதை உண்ணத் தொடங்கினார். நான் அவரையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தேன். பாபா என்னைக் காண வந்து என்னை ஆசீர்வதித்துத் தனது ஸர்வவியாபித்துவத்தைக் காட்டியதை உணர்ந்தேன். அப்போது என் தாய் என் கையைப் பிடித்து இழுத்து, எங்கே போனாய் எனக கத்தினார்.
 ஆனல் நானோ மிகவும் சந்தோஷமாக உணர்ந்தேன். சர்க்கரைப் பொங்கலே பிடிக்காத நான் அன்று, அந்த பிரசாதம் அனைத்தையும் உண்டு முடித்தேன். பக்தன் வேண்டினால் எங்கிருந்தாலும் அவனைத் தேடி வந்து தரிசனம் தருவார் பாபா என்பதை உணர்ந்து, அவரது பெருமையை எண்ணி வியக்கிறேன்.
ஆயிரம் வந்தனங்கள் பாபா!
க்ரீதா.
------------------------------------
ஸாயிபாபா மெய்யாகவே பக்தர்களைத் தன்பால் இழுக்கிறார்!


ஓம் ஸாயிராம்.
எனது கஷ்டகாலம் தீர்ந்ததும் எனது அனுபவத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வேன் என பாபாவுக்கு நான் கொடுத்த வாக்கின்படி, எப்படி அவரது அருளாசியால் அதிசயங்கள் நிகழ்ந்தன எனச் சொல்ல விழைகிறேன். 'ஒரு அறையைச் சுத்தம் செய்து கொண்டிருக்கையில், 'மெரூன்' நிற அட்டை போட்ட ஸாயி ஸத்சரித்ரம்' என்னும் புத்தகத்தை நான் காண்பதாக' 2011-ல் நான் ஒரு கனவு கண்டேன். இது நிகழ்ந்த சமயத்தில் எனக்குத் திருமணமாகி, நான் அமெரிக்காவுக்குக் குடியேறினேன். ஸாயி ஸத்சரித்ரப் புத்தகத்தை என்னுடன் எடுத்து வந்திருந்தேன். ஆனால் அதைப் படிக்கவில்லை. அதுவரை இந்தப் புத்தகத்தைப் பற்றி நினைக்காத நான் ஆச்சரியமடைந்து, அதைப் படிக்க முடிவு செய்தேன். ஆனால், அதை முறையாகப் படிக்கவில்லை. அலுப்பாக இருந்ததால், பக்தியின்றி, தொடர்ந்து படிக்கவில்லை. ச்ரி குரு சரித்ரத்தை நான் பக்தியுடன் படித்திருக்கிறேன். எனக்கென்னவோ, ஸாயி ஸத்சரித்ரம் சுவையற்றதாகப் பட்டது.
தத்த ஜயந்தி நெருங்கிக் கொண்டிருந்தது. தத்த ஸப்தாஹம் செய்ய நினைத்திருந்தேன். ஆனால், முதலில் ஸாயி ஸத்சரிதத்தை முடித்துவிட்டு, பிறகு தத்த சரிதம் படிக்கலாம் என ஒரு நினைப்பு வந்தது. ஆனால், அதையும் செய்யமுடியாமல் சோம்பேறித்தனம் வரவே, பிறகு படித்துக் கொள்ளலாம் என நினைத்து, குரு சரிதம் படிக்க ஆரம்பித்தேன். மூன்றே நாட்களில் முறையான விரதம் இருந்து, அதை முடித்துவிட்டு, எனது விசாவைப் புதுப்பிக்க வேண்டி, இந்தியா சென்றேன். அமெரிக்காவுக்குத் திரும்பி வந்ததும் அதை முடித்துவிடலாம் என எண்ணினேன்.
டிசம்பர் 13-ம் தேதியன்று இந்தியாவுக்குக் கிளம்பும்போது, எங்களது விசாவில் ஒருசில பிரச்சினைகள் இருப்பதாகவும், இருந்தாலும் திட்டமிட்டபடி இந்தியா செல்லும்படியும், அதற்குள் அதற்கான ஆவணங்கள் அனுப்பப்பட்டுவிடும் எனவும் தகவல் வந்தது. பிப்ரவரி 13 வரையிலும் எங்களுக்கான ஆவணங்கள் வந்து சேரவில்லை. பாபாவின் கருணையினால், ஜனவரி 1-ம் தேதி முதலே இந்தியாவிலிருந்து வேலை செய்ய என் கணவரை நிர்வாகம் அனுமதித்தது. சற்று வருத்தமக இருந்தாலும், அதை வெளியில் காட்டிக்கொள்ளாமல், எனது கணவர் இருந்தார்.
பிப்ரவரி 1-ம் தேதி முதல் குரு சரிதம் படிக்கத் தொடங்கினேன். அதை முடித்தபோது, அனுப்பவேண்டிய ஆவணத்தை எங்களது வக்கீல் அனுப்ப மறந்துபோய், எப்படியோ சரியான நேரத்தில் அதை அனுப்பிவிட்டதாகவும் தெரிவித்தார். என் கணவருக்கு இதைக் கேட்டதும் கொஞ்சம் கோபம் வந்தாலும், எல்லாம் விதிப்படி நடக்கிறது எனத் தேற்றிக் கொண்டோம். அதே சமயம், அவரது வேலையில் அவர் திறம்படச் செய்து வெற்றியை நாட்டி, அது பத்திரிக்கைகளிலும் வந்தது கொஞ்சம் ஆறுதலாக இருந்தது.
கடவுளிடம் நான் உண்மையாக நடக்கவில்லை என ஏதோ ஒன்று என் மனதுக்குள் சொல்ல, உடனேயே நான் ஸாயி ஸத்சரிதத்தைப் படித்து முடிக்க முடிவெடுத்தேன். மார்ச் 5 தொடங்கி 11 வரை பக்தியுடன் படித்தேன். தொடர்ந்து பாராயணம் செய்ய வேண்டும் எனவும், குறைந்தது மூன்று முறையாவது விடாமல் படிக்க வேண்டுமெனவும் முடிவு செய்தேன்.
அதுவரை தினசரி கணினியில் எங்களது நிலை குறித்து பார்த்துக் கொண்டிருந்த நான், இனி எல்லாம் பாபா விட்ட வழி என பார்ப்பதையும் நிறுத்தி விட்டேன். மார்ச் 12-ம் தேதி எனது கணவர் சென்று பார்த்தபோது, எங்களது விசா தேர்வு பெற்ற செய்தி கண்டு பாபா நிகழ்த்திய இந்த அதிசயத்தில் மெய் சிலிர்த்துப் போனேன். வாக்களித்தபடியே மூன்று முறை பாராயணத்தையும் செய்து முடித்தேன்.
இப்போதெல்லாம், எதைச் செய்தாலும், எதனை உண்டாலும் பாபாவை நினைக்காமல் செய்வதே இல்லை. இந்தக் குணம் எப்போதும் என்னிடம் இருக்க வேண்டுமென வேண்டுகிறேன். அவரைப் பற்றி நினைப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அவருக்கும் பிரசாதம் தினமும் வைக்கிறேன்.
ராமநவமிக்குள் எங்களது விசா எங்கள் கைக்குக் கிடைக்கும் என ஒரு கனவு வந்தது. அதை நான் பொருட்படுத்தவில்லை. 'பாபா பதில் சொல்லும்' தளத்திற்குச் சென்று கேட்டபோது, 'ராமநவமிக்குள் இனது பிரச்சினைகள் சரியாகும். நீ ஒரு புனித விழாவில் கலந்து கொள்வாய்' என வந்தது.
அப்போதுதான் நான் கண்ட கனவு எனக்கு நினைவுக்கு வந்தது. ராமநவமிக்கு இரு தினங்களுக்கு முன்னர் [மார்ச் 29] விசா வந்து சேர்ந்தது. மூன்றாவது பாராயணம் முடிக்கும்போது, எல்லா ஆவணங்களும் எங்களை வந்தடைந்தன.
அந்தப் புனித நிகழ்சி எனது தாத்தாவின் திதி. ஒரு புரோஹிதர் வந்து நிகழ்த்திக் கொடுத்தார்.
நேர்முகத் தேர்வுக்கான நாள் வியாழக்கிழமையில் வந்தால் நலமென நினைத்தேன். அதேபோல ஏப்ரல் 12 அன்றே அதுவும் கிடைத்தது. வழக்கமான தேர்வு பயம் என்னைத் தொற்றிக்கொள்ள, மீண்டும் அந்த தளத்திற்குச் சென்று கேட்டேன். 'ஓம் ஸாயி ஸமர்த்த' என 21 நாட்கள் விடாது ஜபித்தால் பிரச்சினைகள் தீரும் என வந்தது. புனித நூல்களைப் படிக்கத் தொடங்கியதுமே எனது பிரச்சினைகள் தீரத் தொடங்கிவிட்டன எனத் தெரிந்தாலும், இதையும் செய்ய ஆரம்பித்தேன். தேர்வுக்குச் செல்லும் போது கூட இதையே ஜபித்துக் கொண்டிருந்தேன். செல்லும் வழியில் பாபாவின் திருவுருவப் பட தரிசனம் கிட்ட வேண்டுமென நினைத்தேன். அதே போலவே, ஒரு ஆட்டோவின் பின்புறம் பாபா படம் இருந்ததைக் கண்டு மகிழ்ந்தேன். இருவருக்குமான தேர்வு என்றாலும், என்னை ஒரு கேள்வி கூட கேளாமல், எல்லாக் கேள்விகளையும் என் கணவரிடமே கேட்டார் அந்த அதிகாரி.
அன்று மாலை அங்கிருந்த ஒரு பாபா ஆலயத்துக்கு தூப் ஆரத்தி சமயத்தில் சென்றோம். இதுவரை ஒலிவடிவில் மட்டுமே கேட்டிருந்த அந்தப் பாடல்களை நேரில் பலர் பாடக் கேட்கும்போது என்னையுமறியாமல் அழுதுகொண்டே நானும் பாடினேன். ஆலயத்திலும் முதல் வரிசையிலேயே எங்களுக்கு இடம் கிடைத்தது. பாபாவின் மீதான நம்பிக்கை இப்போது மேலும் உறுதிப்பட்டது. என்னால் சொல்ல முடிந்ததெல்லாம் 'ஓம் ஸாயிராம்' மட்டுமே.
அதிதி.
---------------------


எனது படிப்பை முடிக்க ஸாயிபாபா உதவி செய்தார்

ஜெய் ஸாயிராம். ...ஷீர்டி ஸாயிநாதனுடனான அனுபவங்கள் பல எனக்கு உண்டு.
அதில் ஒன்றை இங்கே அளிக்கிறேன். எனது முதுநிலைப் படிப்பை நான் படித்துக் கொண்டிருக்கிறேன். அதில் ஒரு நிலையில் செயல்திறன் மட்டுமே செய்ய வேண்டும். நான் ஒரு சாதாரணமான மாணவன். வேறொரு நிலையத்தில் செய்யப்பட்ட ஒன்றை வாங்கிவந்து அதையே எங்களது கல்லூரியில் காட்டவேண்டும். இப்படித்தான் இந்தக்காலக் கல்விமுறை அமைந்திருக்கிறது.
எனது துரதிர்ஷ்டம், நான் வாங்கிய செயன்பாட்டுத் திறன் எந்தவித விளக்கமும் இல்லாமல் என் கையில் வந்து சேர்ந்தது. எனக்கும் அதைப் பற்றி வேறொன்றும் தெரியாது. எதுவும் தோன்றாமல், பாபாவின் முன் வணங்கி அவரிடம் எனது நிலைமையைக் கூறினேன்.
அதைக் காட்டவேண்டிய அந்த நாளும் வந்தது. பதட்டத்துடனேயே பாபாவை வணங்கிவிட்டு, கல்லூரிக்குச் சென்றேன். ஏதோ எனக்குத் தெரிந்ததைச் சொல்லி, செய்தும் காட்டினேன். எனது ஆசிரியர் திருப்தியாக இருந்தது எனத் தெரிவித்தார்.
இறுதியாக வாய்வழித் தேர்வு. வந்திருந்தவரோ வெளிக் கல்லூரியில் இருந்து! நான்தான் கடைசி ஆளாகச் சென்றேன். அவரோ எனக்கு முன் சென்ற மாணவர்களை எல்லாம் பாதிக் கணக்கிலிருந்து தொடரச் சொல்லி கஷ்டப்படுத்தினராம்! எனக்கோ அதெல்லாம் ஒன்றுமே தெரியாது. ஸாயியை வேண்டியபடியே உள்ளே சென்றேன். நானே ஆச்சரியப்படும் வண்ணம், அவர் என்னை ஒன்றுமே கேள்விகள் கேட்கவில்லை. நான் செய்த செயன்பாடு பற்றி சொல்லச் சொன்னார். நானும் தெரிந்ததைச் சொன்னேன். எல்லாமே ஸாயிநாதன் நிகழ்த்திய அற்புதமே! அவருக்கே எனது வந்தனம் எல்லாம்!
ஜெய் ஸாயிராம்.

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.