Thursday, January 10, 2013

Divine Dream With Sai Murlidhar-Sai Devotee Sourav Kumar


(Translated into Tamil by Sankarkumar, USA)
ஸாயிராம். 
உல‌கெங்கும் வாழும் ஸாயி ம‌க்க‌ளுக்கு இனிய‌ புத்தாண்டு வாழ்த்துக‌ள். அவ‌ர‌து நிழ‌லில் நாம் அனைவ‌ரும் ஸாயி காட்டிய‌ வ‌ழியில் செல்வோமாக‌. ந‌ம‌து எண்ண‌ம், செய‌ல், சொல் அனைத்தும் அவ‌ர‌து விருப்ப‌ப்ப‌டியே நிக‌ழ்ந்து அவ‌ரைப் ப‌ணிவோமாக‌.
திரு. ஆர்.கௌஸிகான் ஜி அனுப்பியுள்ள‌ இரு க‌ணினித்திரைப் ப‌ட‌ங்க‌ளை இத்துட‌ன்  மேலே  இணைத்துள்ளேன். ஸாயி ஏசு ந‌ம்மை ஆசீர்வ‌தித்து ந‌ம்மை ந‌ல்வ‌ழிப் ப‌டுத்துவாராக‌.
க‌ருணையின் வ‌டிவ‌மான‌ ந‌ம் ஸாயி, ந‌ம்மிட‌ம் அள‌விலா அன்புகொண்டு, எப்போதும் ந‌ம் ப‌க்க‌மே பாதுகாவ‌லாக‌ இருக்கிறார். ஒவ்வொரு அணுவிலும் அவ‌ர் இருந்து வ‌ருகிறார். உள்ள‌ன்புட‌ன் வேண்டுவோர்க்கு அவ‌ர் காட்சி த‌ந்து அருளுகிறார். ந‌ம‌து ஒரே ப‌ட‌கோட்டியான‌ அவ‌ர‌து த‌ரிச‌ன‌ம், ந‌ம‌து க‌வ‌லைக‌ளைப் போக்கி, பிர‌ச்சினைக‌ளைத் தீர்த்து, ந‌ம் வ‌லிக‌ளைப் போக்க‌டிக்கிற‌து. இதே உண‌ர்வினை வெளிப்ப‌டுத்தும் திரு. ஸௌர‌வ் குமாரின் அனுப‌வ‌த்தை இங்கே ப‌கிர்ந்துகொள்கிறேன். ஜெய் ஸாயிராம்.
ம‌னிஷா.

ஸ்ரீ ச‌ச்சிதான‌ந்த‌ ஸ‌ம‌ர்த்த‌ ஸ‌த்குரு ஸாயிநாத் ம‌ஹராஜ் கி ஜெய்!


ஓ ஸாயி கிருஷ்ணா! 

முத‌லில் உங்க‌ளைப் ப‌ணிகிறேன். க‌ருணைக் க‌ட‌லே! க‌ட‌வுளின் அவ‌தார‌மே! ப‌ர‌ப்ர‌ஹ்ம‌ யோகேஸ்வ‌ர‌ரே! என‌து ஆண்வ‌ம், க‌ர்வ‌ம் இவ‌ற்றை அறுத்து, உங்க‌ளைத் த‌ரிசிக்க‌ வேண்டுகிறேன். உங்க‌ள‌து அனுமதியின்றி, ஒரு வார்த்தையும் என்னால் எழுத இயலாது என்பதைப் புரிந்திருக்கிறேன்.
இதற்கு முன் எப்போதுமே சொல்லிடாத ஸாயி கிருஷ்ணா என்னும் பதத்தை மேலே சொல்லி ஆரம்பித்திருக்கிறேன். ஸாயிபாபா, ஸாயிராம் எனச் சொல்லியிருந்தாலும், அவரே எல்லாக் கடவுள்களின் அம்சம் எனவும் அறிந்திருக்கிறேன். எத்தனையோ இஷ்ட தெய்வங்களை நாம் ஒவ்வொருவரும் வணங்கி வருவது அவரவர் விருப்பப்படியே எனவும் தெரிந்திருக்கிறேன்.
'யார் இந்த ஸாயிபாபா?' என்னும் கேள்வி எனது 16 வயதிலிருந்தே தொடங்கி விட்டது. அவர் கடவுளா இல்லையா எனும் கேள்வி என் உள்ளத்தில் பல நாட்களாக எழும்பி இருந்தது. நான் எவ்வளவு பெரிய முட்டாள் என இப்போது புரிகிறது. மற்றவர்களைக் கேட்க நினைத்து, எதிர்மறையான பதில் வருமோ என் அஞ்சி, நான் மௌனமாக இருந்தேன். 2010-, மே மாதத்தில் ஒரு அற்புதம் நிகழ்ந்து இந்தக் கேள்விக்கான விடை கிடைத்தது.
தயவுசெய்து கீழ்க்கண்ட சுட்டிக்குச் சென்று படிக்கவும்.


அவரது திருநாமத்தைச் சொல்லாமல் ஒரு நிமிடம் கூட இருக்க என்னால் முடியாது. இது அவருடைய அருளே. இது வாழ்நாள் முழுதும் தொடர அவரை வேண்டுகிறேன்.
இந்தப் பதிவில் ஸாயி கிருஷ்ணா என நான் அழைத்ததைப் பற்றிச் சொல்ல விரும்புகிறேன். இதைச் சாதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டாமெனக் கேட்டுக் கொள்கிறேன்.
6 மாதங்களுக்கு ஒருமுறை நாங்கள் ஷீர்டி செல்லுவோம். அவரது அனுமதியில்லாமல் ஒருவரும் அங்கே கலடி வைக்க முடியாது என அறிந்திருப்பதால், இது அவரது அருளே. பாபாவைப் பற்றி அறிந்த 30 மாதங்களுக்குள்ளாகவே, இதுவரை 3 முறை சென்று வந்தோம். 


பாபா சிம்மாஸனத்தில் அமர்ந்திருக்கும் கோலம் எனக்கு சிவனை நினைவூட்டும். என் கற்பனையாக இருப்பினும், இது எனக்கு மகிழ்ச்சி தந்தது. என் தாயிடம் தவிர வேறு எவரிடமும் இதைச் சொன்னதில்லை. என்னைக் கேலி செய்வார்களோ என நினைத்தேன். நான் என்ன சொன்னாலும் அதை அப்படியே, ஆராய்ச்சி செய்யாமல் கேட்டுக்கொள்வார் என் தாய். ஸாயிராம் எனும் பாபாவே ஸாயி சிவாவும். அனைத்து வடிவங்களும் தாமே என்பதையே அவர் இப்படி உனக்கு வெளிக்காட்டுகிறார் என அவர் விளக்கம் தந்தார்.
ஒவ்வொரு நாளும் குளித்துவிட்டு, ஹனுமான் சாலீஸா, விஷ்ணு ஸஹஸ்ரநாமம், பகவத் கீதை, மற்றும் ஸாயி ஸத் சரித்ரம் படிப்பது என் வழக்கம். படிக்கத் தொடங்கும்போது, ஸரஸ்வதியையும், விநாயகரையும் வணங்குவேன். இரவு படுக்கும்போது என் தாய் கற்றுக்கொடுத்த மஹா ம்ருத்யுஞ்ஜ‌‌ய மந்திரத்தை ஜபிப்பேன். எல்லாவிதமான ஆபத்துகளிலிருந்தும் இது என்னைக் காக்கும் என என் அன்னை சொன்னார். 7 வயதில் என் தந்தை சொல்லிக்கொடுத்த விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தை 9 வயதிலேயே மனப்பாடமாகக் கற்றுக் கொண்டேன். காலையில் குளித்த பின்னர் இதை ஓத வேண்டுமென அவர் எனக்குச் சொல்லித் தந்தார். சிறுவயது முதலே என் பெற்றோர் நான் ஒரு தெய்வ நம்பிக்கையுள்ள நல்லவனாக வளர வேண்டுமென விரும்பி இதையெல்லாம் செய்தனர். என் தந்தை ராம் சரித மானஸ் படிக்கும்போது அவரருகிலேயே அமர்ந்து, 7, 8 வயதிலேயெ ஹனுமான் சாலீஸாவையும் மனப்பாடமாகக் கற்றேன். 'சிறுவர்களுக்கான ராமாயணம்' என்னும் புத்தகத்தையும் படித்தேன். கீத கோவிந்தமும் அப்படியே என் தந்தை மூலம் கற்றேன். அதன் 15-வது அத்தியாயம் [புருஷார்த்த யோகம்] மிக முக்கியம் வாய்ந்தது என அவர் சொன்னதே என் ஆர்வத்தின் காரணம். எனது ஆங்கில ஆசிரியர் திரு. கிஷோர் சந்திர மொஹ‌ந்தி இதற்கு பெரிதும் உதவியாக இருந்தார். அவரே எனது குரு. எனக்கு தைரியத்தையும், நம்பிக்கையையும் ஊட்டி, என்னை இன்று இந்த அளவில் வளரச் செய்ததில் அவரது பங்கு மிக அதிகம். அவர் மூலம் கீதையின் அடிப்படையில் வாழ நான் கற்றுக் கொண்டேன்.
முன்னரே சொன்னதுபோல, ஸாயி கிருஷ்ணர் ரூபத்தைத் தவிர மற்றெல்லா வடிவிலும் நான் பாபாவைப் பார்த்திருக்கிறேன். கீதையைப் படிக்கும் எனக்கு இந்தக் காட்சி கிட்டவில்லையே என ஆச்சரியப்பட்டேன். எத்தனை முயன்றும் இது கிட்டவில்லை. 'ஏன் இப்படிச் செய்கிறீர்கள், பாபா? கிருஷ்ணர் வடிவில் நீங்கள் வராவிட்டால், நான் கிருஷ்ண வழிபாட்டையே விட்டுவிடுவேன்' என அவரிடமே சொல்லி, அதுபோலவே செய்தேன். இது என் முட்டாள்தனமே.
ஆறு மாதங்களாகியும் ஒரு பயனும் கிட்டவில்லை. கணேஷ் சதுர்த்தி முடிந்த சில நாட்களுக்குப் பின் ஒரு விடிகாலையில் வந்த கனவில், எங்கோ பயணம் செய்ய ரயிலில் செல்லும்முன், சாப்பிட ஏதும் வாங்கிவரட்டுமா என என் தந்தையிடம் கேட்டு, சிற்றுண்டி வாங்கச் சென்றேன். செல்லும் வழியில் ஆலமரங்கள் நிறைந்த ஒரு ஆலயத்தைக் கண்டேன். அது ஒரு சிவாலயம். அங்கே ஒரு குகை போலத் தெரிய, அதனுள்ளே சென்றதும், இன்னும் கீழே இறங்கிச் செல்ல வேண்டுமெனத் தெரிந்தது. அப்படியே சென்றதும், அங்கே த்வாரகாமாயி படத்தில் ஸாயி காட்சி தந்தார். அவருக்கு எதிரே ஒரு கண்ணாடி இருந்தது. அதைப் பார்த்தபோது, அதில் கணபதி வடிவம் தெரிந்தது. இது எப்படி சாத்தியம் எனக் குழம்பினேன். அதன்பின் நடந்தது எதுவும் நினைவிலில்லை. கண்ட கனவை என் தாயிடம் சொன்னேன். பொறுமையுடன் காத்திரு என அவர் எனக்கு நம்பிக்கை அளித்தார். இப்படியே சில மாதங்கள் சென்றன. 

நான் காத்திருந்த அந்த நாளும் வந்தது! இன்று [22.11.12. வியாழக்கிழமை] அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில், என் கேள்விக்கான விடை கிடைத்தது. நான் கண்ட கனவு பின்வருமாறு:
பூரி ஜகன்நாதர் ஆலயத்துக்கு நான் இன்னும் ஒரு 4,5 பேருடன் சென்று கொண்டிருந்தேன். ஓட்டுநருக்கு பக்கத்தில் அமர்ந்திருந்ததால் என்னால் நன்றாகப் பார்க்க முடிந்தது. 'அதோ ஜகன்நாதர் கோபுரம் தெரிகிறது. இங்கிருந்தே வணங்குவோம். இன்னும் சிறிது நேரத்தில் அங்கு சென்றுவிடுவோம்' என நான் கூறினேன். எல்லாரும் களிப்படைந்தோம். அப்போது ஒரு சிறு ஆலயத்தை நாங்கள் கடந்தோம். அது ஒரு பாபா ஆலயம். ஷீர்டியில் இருப்பதுபோலவே சிம்மாசனத்தில் பாபா அமர்ந்திருக்க, மத்தியான ஆரத்தி நடை பெற்றது. உடனே அங்கு செல்ல விரும்பி டிரைவரை காரை நிறுத்தச்சொல்லி, நான் இறங்கிச் சென்றேன்.
பொதுவாகவே எனக்கு பாபா ஆரத்தி மிகவும் இஷ்டம். அப்படியே அதில் உருகிப் போய்விடுவேன். நீயே வாழ்வின் உண்மை எனும் எண்ணம் என்னுள் சூழ நான் மெய்மறந்து போவேன். எனவே கதவைத் திறந்துகொண்டு உள்ளே சென்றேன்.
அங்கே நான் கண்ட காட்சியை யாரும் நம்ப மாட்டார்கள். அங்கே கரிய வண்ண ராத, கிருஷ்ணர் சிலை இருந்தன.என்னால் அதை நம்பவே முடியவில்லை. சற்றுமுன் பாபாவைக் கண்ட நான் இப்போது இந்தச் சிலையைக் காண்கிறேன். அங்கிருந்த அனைவரும் 'ஹரே கிருஷ்ணா, ஹரே கிருஷ்ணா கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே' எனப் பாடிக் கொண்டிருந்தனர். பாபாவின் படம் கூட அங்கு இல்லை. காரில் வந்தபோது இதைக் கண்டிருந்தால் நான் இறங்கி இருக்க மாட்டேன். இதற்கு மேல் எதுவும் சொல்லாமல், இதைப் படிப்பவர்களின் கருத்துக்கே விட்டுவிடுகிறேன். இது கனவா அல்லது லீலையா என நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.
என் அன்னையிடம் இதைச் சொன்னேன். அப்படியே பேச்சிழந்து, என்னைப் பார்த்து, 'இன்று என்ன நாள் தெரியுமா ?' எனக் கேட்டார். அம்ல நவமியன்று ராதா பாத தரிசன நாளில் இதைக் கண்டது மிகவும் சிறப்பு என அவர் சொன்னார். இந்த நாளில் பல லட்சம் பக்தர்கள் பூரி ஆலயத்துக்கு வருவார்கள். இந்த நாள் காசியிலும் கொண்டாடப் படுகிறது.
தனது பல லட்சோப லட்ச பக்தர்களை விட்டுவிட்டு, எனக்கு இப்படி ஒரு காட்சி கொடுக்க பாபா வந்தது என் புண்ணியமே. இப்போது நீங்களே ஸாயி கிருஷ்ணர் என்பதில் எனக்கு எந்தவொரு ஐயமும் இல்லை, பாபா!
பிரம்மத்தின் அவதாரமான ஸாயிபாபா முடிவற்றவர். அவர் எல்லாருள்ளும் வசிக்கிறார். எப்போது ஒரு பக்தனை அவர் அழைப்பார் என்பது அவருக்கு மட்டுமே தெரியும். அவர் கருணையே வடிவானவர். அவரது ஸ்தூல வடிவம் மறைந்தாலும் அவர் இன்னமும் நமக்கு அருள் செய்கிறார். அவரது லீலைகள் எண்ணற்றவை. அவரைச் சரணடைந்து பாதங்களில் வீழ்ந்தால் அவர் நிச்சயம் அருள் புரிவார்.
இன்று நான் கண்டது ஒரு கனவல்ல; அவரது லீலாம்ருதத்தின் ஒரு துளியே. இதைப் பருகுபவ‌ருக்கு இதன் இனிமை புரியும். ஸாயியின் மெய்யடியார்கள் இதன் அருமையை உணர்வார்கள். அவர்களது நம்பிக்கையை அதிகரிக்கச் செய்யும் இந்தப் பணியை நான் தொடர்ந்து செய்வேன். இதன் முழுப் பெருமையும் ஸாயிபாபாவையே சாரும். கனவு கண்ட அதே நாளில் என்னையும் எழுதச் செய்து அருள் செய்தது அவரது கருணையே. ஓ ஸத்குரு ஸாயி, உம்மைப் பணிகிறோம்.
நாங்கள் உங்களது சேவகர்கள். உங்கள் பாத தூளிகளில் எங்களுக்கு அடைக்கலம் தாருங்கள். உங்களது கருணை இவ்வுலக ப‌யத்தைப் போக்கி, விடுதலைக்கான வழியைத் திறந்து, எங்களது துயரங்களைப் போக்குகிறது.
ஓம் ஸாயி ஸ்ரீ ஸாயி ஜெயஜெய ஸாயி. ஸ்ரீ சச்சிதானந்த ஸத்குரு ஸாயிநாத் மஹராஜ் கி ஜெய்!

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.