My First Visit To Shirdi - Experience By Buvi Raj.
(Translated into Tamil by Sankarkumar )
ஸாயிராம். அனைவருக்கும் இனிய பாபா நாள் வாழ்த்துகள்.
இந்தப் பதிவின் தலைப்பு சொல்லுவதுபோல, புவிராஜ் என்னும் அடியவரின் முதல் ஷீர்டி பயணத்தின்போது பாபா அவரை எப்படி ஆசீர்வதித்தார் என்பதைக் குறித்தே 'இன்றைய அனுபவம்' அமைகிறது. பாபா தரிசனத்தின்போது, எப்படி பாபா அவருடனேயே இருந்தார் என்பதையும், பாபா தர்பாரின் அழகையும் அவர் இதில் விவரிக்கிறார். அன்றாட வாழ்வில் நாம் எவ்வண்ணம் பாபாவைப் பின்பற்றவேண்டும் என மேலும் அவர் அருமையாக விவரித்திருக்கிறார்.
ஜெய் ஸாயி ராம். --
மனிஷா.
-----------------------------------------------
'எது நேரினும், ஸாயியை விடாமல் உறுதியாகப் பின்பற்றுங்கள். நல்லது, கெட்டது எதற்கும் நீங்களே பொறுப்பு என எண்ணாதீர்கள். 'நான்/நாங்கள்/அவர்' அதன் பின்னர் [பாபா.. மன்னித்துக் கொள்ளுங்கள்]' எனப் பல இடங்களில் இந்தக் கட்டுரையை எழுதியிருப்பதன் காரணம், நாம் செய்தோம் எனும் எண்ணம் வரும்போதெல்லாம், பாபாவே அனைத்தையும் நிகழ்த்துகிறார் என உணர்த்தவே. பொறுமையும், நம்பிக்கையும் விடாமல் உறுதியாகக் கொண்டிருத்தலே நம் செய்யக்கூடியவை. அவரையே தியானியுங்கள்.
ஒரு நிமிடம் கூட எதையாவது நினைக்காமல் இந்த மனத்தால் இருக்க முடியாது. அவற்றையெல்லாம் ஒதுக்கி, பாபாவையும், அவரது லீலைகளையும் நினைப்பதே பாபாவை நம்முடன் இருத்தவும், நம் எண்ணங்களைத் தூய்மையாக்கவுமான ஒரே வழி. நம் வாழ்வில் நடப்பதெல்லாம் நம் முந்தைய வினைகளின் காரணமே. நிகழ்வதை அப்படியே எடுத்துக்கொண்டு, முடிவை பாபாவிடம் விட்டு, அவரிடம் சரணடைய வேண்டும். இன்ப, துன்பங்களை அப்படியே ஏற்றுக்கொள்வது விடாத பயிற்சியின் மூலமே வரும். நிகழ்வதெல்லாம் நன்மைக்கே என எடுத்துக்கொள்ள வேண்டும். பாபா மீது பூரண நம்பிக்கை கொள்ளும்போது, எந்தவித பயமோ, கவலையோ நம்மை அணுகாது. அவரை அதிகம் நெருங்க நெருங்க இதை நாம் உணருவோம். உங்கள் எல்லாருக்குமாக நான் பாபாவை வேண்டிக்கொள்கிறேன். ஜெய் ஸாயி ராம்.
அன்புள்ள மனிஷா,
பாபாவின் புகழைப் பரப்பும் உங்களுக்கு என் வந்தனங்கள். மிகவும் பாராட்டுகிறென். உங்களைப்போல பலரை உருவாக்க பாபாவை வேண்டிக்கொள்கிறேன். உங்களுடன் பாபா எப்போதும் உடனிருக்க வேண்டுகிறேன். ஸாயிராம்.
" கிருஷ்ண ஜன்மாஷ்டமி தினத்தன்று [ஆகஸ்ட் 9, 2012] இந்தப் பதிவை நான் எழுத பாபா தேர்ந்தெடுத்திருக்கிறார். 2011 டிசம்பரில் என்னை முதன்முதலாக ஷீர்டி வர பாபா அழைத்தார். அதைப்பற்றி எழுத இன்றுதான் நேரம் கூடியிருக்கிறது. நவவித பக்தி என்பதை 9 குறிக்கும். இன்று வியாழக்கிழமையும் கூட! மிக்க நன்றி, பாபா.
'அழைப்பவரே அனைத்து ஏற்பாடுகளையும் செய்கிறார்.' இது என் வகையில் உண்மையானது. சென்னையில் பிறந்த நான், திருமணமானதும் அட்லாண்டா வந்தேன். 2011-ல் சென்னை செல்ல முடிவானபோது ஷீர்டி செல்வேன் என நினைத்துக்கூட பார்க்கவில்லை. ஆனால், அக்டோபர் மாதம் பாபா புண்யதிதியன்று, உள்ளூர் ஆலயத்துக்குச் சென்றபோது, ஷீர்டி செல்வது பற்றிய ஒரு எண்ணம் என்னுள் எழுந்தபோது, அதை அவரது அழைப்பாகக் கருதினேன். உடனே "அவர்" அதற்கான ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்கினார். ஒரு சுற்றுலா நிறுவனம் மூலமாக பயணத்தைப் பதிந்தபோது, 'அவரது' தயவால் எல்லா வசதிகளும் உள்ளடக்கிய ஒரு ஏற்பாடு இலகுவாக அமைந்தது. ஒவ்வொரு சின்ன ஆசைகளையும் ஒரு தாயின் பரிவுடன் பாபா கவனித்துக் கொண்டார்.
எனது ஷீர்டி அனுபவங்களைச் சொல்வதற்கு முன்னால், பாபா என் வாழ்வில் வந்ததைப் பற்றி சொல்ல விரும்புகிறேன். 'அவர்' ஏற்கெனவே முடிவு செய்ததை ஒன்றுமறியாத நாம் பிறகே உணர்கிறோம்.
சிறு வயதில் எனது காலம் எனது தாத்தா, பாட்டியுடன் கழிந்தது. எனது தாத்தாவிடம் நான் மிகவும் ஒட்டிக்கொண்டு, அவருடனேயே நேரத்தைக் கழிப்பேன். இந்தக் காலகட்டத்தில், அவர் ஒரு முறை என்னை ஒரு பாபா அடியவரிடம் [அவரும் ஒரு துறவியே] அழைத்துச் சென்றபோது, தான் கடித்த ஒரு ஆப்பிளை எனக்குப் பிரசாதமாகத் தந்தார். என்னைப் பார்க்கும் ஒவ்வொரு முறையும் என் தாத்தா இதை எனக்கு நினைவுபடுத்திக்கொண்டே இருப்பார். பாபாவின் அடியவர் கொடுத்த அந்த பிரசாதத்தால்தான் நான் படிப்பில் நல்ல தேர்ச்சி பெற்றேனாம்! பாபாவின் அருளால் எனக்கு ஒரு நல்ல வாழ்க்கையும் அமையும் என அவர் சொல்லுவார். இதை சாதாரணமாக எடுத்துக்கொண்ட நான், அப்போதெல்லாம் என் தாத்தாவை கேலி செய்வேன். ஆனாலும் அவர் விடாமல் இதைச் சொல்லிக்கொண்டுதான் இருப்பார். அண்மையில் ஒரு பாபா புண்ய திதியன்று என் தாத்தா காலமானார். பாபா பஜனைகளைப் படிக்கொண்டும், கேட்டுக்கொண்டுமே அவரது இறுதி நாட்கள் கழிந்தன. அவரது ஆன்மா சாந்தியடைய பாபாவை வேண்டுகிறேன்.
2009-ல் சில நண்பர்கள் மூலம் நானும் பாபா ஆலயத்தில் நடக்கும் பஜனையில் கலந்துகொண்டேன். பிரசவ காலத்தில் ஏற்பட்ட இடுப்புவலியால், நான் தொடர்ந்து அவதிப்பட்டேன். அப்போடு ஒருநாள் கோவிலில் பாபாவைப் பார்த்து, இதைத் தீர்க்கும்படி வேண்ட, அன்று முதல் எனது வலி தீர்ந்து போயிற்று. அவ்வப்போது லேசாக வரும். இதுவே பாபா மீது நான் நம்பிக்கை கொள்ள 'அவர்' விதைத்த முதல் விதை. அன்று முதல் இந்த நம்பிக்கை என்னுள் மிகவும் தீவிரமானது.
அதுவரை எப்போதாவது பாபா ஆலயத்துக்குச் சென்றுகொண்டிருந்த நான், அது முதல், [2009] ஒவ்வொரு மாதமும் செல்லத் தொடங்கினேன். பாபா இன்னும் சற்று நெருங்கிவர, அது மாதம் இருமுறையாகவும், வாரம் ஒருமுறையாகவும் [2011] ஆகிவிட்டது. வாராவாரம் பாபா என்னை அழைத்து, அவரது ஆரத்தியில் கலந்துகொள்ளச் செய்து, 2 - 3 மணி நேரம் தியானத்திலும் ஆழ்த்தி, அவரது இருப்பையும், அருளையும் எனக்குத் தருகிறார். சிறப்பு நாட்களில் முழு நாளும் அங்கேயே இருப்பேன். 2009-ல் 'அவர்' எனக்களித்த பெரிய பரிசு 'ஸாயி ஸத் சரிதம்'. முதலில் இது மெதுவாகவே தொடங்கினாலும், விரைவிலேயே என் உள்ளம் அதில் ஈடுபட்டு விட்டது. 2009 தொடங்கி, இதுவரையில் சுமார் 18 முறை அதைப் படித்து விட்டேன். சென்ற மாதத்திலிருந்து தினமும் ஒரு அத்தியாயம் எனவும், விடுமுறை நாட்களில் ஒன்றுக்கும் மேலாகவும் படிக்க நான் [மன்னிக்கவும்... பாபா அப்படிப் பணித்தார்] தொடங்கியிருக்கிறேன்.
அதில் வரும் லீலைகளில் ஆழ்ந்து அதைப் பற்றியே நினைத்துக் கொண்டிருப்பேன். அவரது ஆணையின்படி, அன்றாட வேலைகளை நான் செய்தாலும், அவரது சரிதத்தைப் படிப்பதிலும், அவரது நாமத்தைச் சொல்வதிலும் என் மனம் ஆழ்கிறது. அவரிடம் சரணடைந்து, அவரது புகழ் பாடி, அவரது லீலைகளில் ஈடுபட்டு, அவர் தங்கும் நம் இதயத்தில் அவரை நினைப்பதே இந்த அல்ப வாழ்க்கையைக் கடக்க எளிய வழி. பாபா என்னிடம் மிகவும் கருணை கொண்டு, எனது ஆன்மீக முன்னேற்றத்தை அதிகப்படுத்தி, வெகு விரைவிலேயே என்னை அவருடன் சேர்த்துக்கொண்டு விட்டார். என்னை மட்டுமல்ல, என் குடும்பத்தினரையும் தான்.
வெகு நாட்களாக ஒத்திவைத்திருந்த 9 வார ஸாயி விரதத்தையும் இந்த ஆண்டு பாபா நிறைவேற்றி வைத்தார். ஒருநாள் தியானத்தில் ஆழ்ந்தபோது, இந்த விரத நூலை ஒரு அன்பர் பாபா அருகில் வைத்துச் சென்றார். என்னால் தியானத்தைத் தொடர முடியவில்லை. பாபா ஏதோ சொல்ல விழைகிறார் என நினைத்து காகா ஸாஹிப் செய்வதுபோல பாபா முன், 'உடனே தொடங்கு',// '6 மாதங்களுக்குப் பின் தொடங்கு' என எழுதி, சீட்டு போட்டுக் கேட்டேன். 'உடனே தொடங்கு' என வந்தது. அதன்படியே செய்தும் முடித்தேன். ஏழைகளுக்கு அன்னதானம் அளிப்பது பாபாவுக்கு மிகவும் முக்கியம் என்பதால் எப்படி செய்வது என எண்ணினேன். அப்போது, ஆலயத்தில், 'ஏழைகளுக்கு அன்னதானம்' என ஒரு திட்டத்துக்கு உதவ தொண்டர்களைத் தேடி அழைப்பு விடுத்திருந்தார்கள். இது பாபாவின் கருணையே என எண்ணி, அதில் இணைத்துக்கொண்டு, இந்த நிகழ்ச்சியை பல முறை ஒருங்கிணைத்து நடத்தினேன். சுவையான, சூடான உணவு உண்ணும் அந்த ஏழைகளின் முகத்தில் நான் பாபாவைக் கண்டேன்.
இதுபோல கணக்கற்ற அற்புதங்கள் என் வாழ்வில் பாபாவால் நிகழ்கின்றன. எனது அனுபவங்கள் மூலம் என்னை ஒரு கருவியாகப் பயன்படுத்தி, பாபா பலரையும் தனது அணைப்புக்குள் கொண்டுவரச் செய்திருக்கிறார். இதற்காக நான் பெருமையும், பாபாவுக்கு நன்றிக்கடனும் பட்டிருக்கிறென்.
இப்போது எனது ஷீர்டி அனுபவங்கள் பற்றி.....
3 நாட்கள் ஷீர்டியில் தங்கினோம். சென்னையிலிருந்து விமானம் மூலம் புனே சென்று, அங்கிருந்து கிளம்பி, மதியம் போல் ஷீர்டி சென்றடைந்தோம். விமானப் பயண அலுப்பால் எனது கணவரும், மகனும் ஓய்வெடுக்க விரும்பினர். எனக்கும் களைப்பாக இருந்தாலும், பாபாவின் முதல் தரிசனம் காண என் மனம் விழைந்தது. எனவே நான் மட்டும் தனியே [பாபா என்னுடன் கூட இருப்பதால்] சென்றேன். பூஜைக்குத் தேவையான பொருட்கள் எல்லாம் வாங்கி, பாபாவுக்கு ஒரு போர்வையும் வாங்கிக்கொண்டு, தரிசன வரிசையில் நின்றேன். விடுமுறைக்காலம் என்பதால், கூட்டம் அதிகமாயிருந்தது. கூட்ட நெரிசலில் நான் முன்னும், பின்னுமாகத் தள்ளப்பட்டேன்,. அப்போது எனக்குப் பின்னே நின்றிருந்த ஒரு அன்பர் [வெள்ளை உடை உடுத்திருந்தார்] என்னிடம் மிக அன்பாக நடந்துகொண்டு, என்னை வழி நடத்திக் கூட்டிச் சென்றார். தள்ளுமுள்ளு வேண்டாமென மற்றவரைக் கேட்டுக் கொண்டார். இந்தியில் உற்சாகமாகப் பேசிக் கொண்டிருந்தார் அவர்.
பாபாவுக்கு முன்னே இருந்த தூண்களைக் காட்டி, 'பாரம்மா, தங்கத்தால் ஆன தூண்கள்' எனச் சொல்லி, 'அதோ பாருங்க, பாபா எவ்வளவு அழகாக இருக்கிறார்' எனவும் சொன்னார். பாபாவே நேரில் அவர் வடிவில் வந்து, எனது முதல் தரிசனத்தின்போது, எனக்கு சுற்றிக் காட்டியதுபோல் இருந்தது.
பொதுவாக, பாபா சிலைக்கு முன்னே இருக்கும் சமாதி, கண்ணாடிக் கதவுகளால் மூடப்பட்டிருக்கும். எப்போதாவதுதான் அவை திறக்கப்பட்டு, சமாதியைத் தொட்டு வணங்க இயலும். அன்று, பாபா என்னை சமாதியைத் தொட்டு வணங்க அனுமதி தந்தார். கூடவே நான் வணங்கி முடிக்கும்வரை பூஜைக்கான பொருட்களை சமாதியிலிருந்து எடுக்காமலும் பார்த்துக் கொண்டார். பாபாவின் சமாதியைத் தொட்டு வணங்கியபோது, உணர்ச்சி மிகுந்து நான் அழுதுவிட, அதைக் கவனித்த ஆலயப் பூசாரி[ மன்னிக்கவும் பாபா] என்னை விரட்டாமல் [அப்போது நல்ல கூட்டம்] இன்னும் சற்று நேரம் இருக்க அனுமதித்தார். கிடைத்தற்கரிய அந்த அற்புதத் தருணங்களுக்காக நான் பாபாவுக்கு வந்தனம் சொல்லிக் கொள்கிறென்.
முக்கியமான பகுதி இப்போது வருகிறது! நாங்கள் ஷீர்டி செல்லும் முன், எங்களது உறவினர் ஒருவர், நாங்கள் வெளிநாட்டிலிருந்து வந்திருப்பதால், எங்களது பாஸ்போர்ட்டைக் காட்டினால், தரிசன வரிசையில் அதிக நேரம் நிற்காமல் இருக்கும் சீட்டுகள் கிடைக்கும் எனச் சொல்லியிருந்தார். இதைப் பயன்படுத்தி, மறுநாள் நான், என் கணவர், என் மகன் மூவரும் சீட்டுகளை வாங்கிக்கொண்டு, தரிசனமும், மதிய ஆரத்தியும் கண்டு களித்தோம். இந்த ஆரத்திக்கான அனுமதிச் சீட்டு நான் மிகவும் வேண்டிக் கேட்டுக்கொண்டதாலேயே அரை மனதுடன் கொடுக்கப்பட்டது! மறுநாள் வியாழக்கிழமை என்பதால், காகட் ஆரத்தியைக் காண வேண்டி அதற்கான அனுமதிச் சீட்டைக் கேட்டபோது, மாலை நேரத்தில் வந்தால் நிச்சயம் கொடுப்பதாகச் சொன்னார்கள். அதேபோல் மாலையில் சென்று கேட்டபோது, மறுநாள் கிருஸ்துமஸ் தினம் என்பதால் கூட்டம் அதிகமிருக்கும் எனவும், முக்கிய விருந்தினர்க்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்றும் சொல்லி, வியாழக்கிழமை முழுவதுமே அனுமதிச் சீட்டு தர இயலாது எனக் கவிரித்தனர்.
மனம் நொந்துபோன என்னைப் பார்த்து, வேண்டுமானால், மேலாளரைப் பார்த்துக் கேட்கும்படி ஆலோசனை கூறினர். கடைசி முயற்சியாக அவரைச் சென்று பார்த்து, எனது நிலைமையையும், எனக்கிருக்கும் ஈடுபாட்டையும் கண்ணீர் மல்க எடுத்துக்கூறி, எப்படியாவது இந்த வியாழக்கிழமையில் ஏதாவது ஒரு ஆரத்திக்காவது அனுமதித்து, கிடைத்தற்கரிய வாய்ப்பினைத் தருமாறு விளக்கிக் கூறினேன். தன்னால் ஒன்றும் செய்ய இயலாது என அவரும் சொல்லிவிட்டார். எனவே மறுநாளைக்கென எந்த ஏற்பாடும் செய்யாமல், அலாரம் கூட வைக்காமல் படுக்கச் சென்றுவிட்டேன்.
இப்போதுதான் பாபாவின் லீலை நிகழ்கிறது. தனது பிள்ளையை மனம் கலங்கச் செய்வாரா பாபா? நிச்சயமாக மாட்டார். முன்பே கூறியதுபோல, பயணக் களைப்பால் சரியாகத் தூக்கம் பிடிக்காத என் மகன் அதிகாலை 2.30 மணிக்கே எழுந்துவிட்டான். என்னைத் தனது மடியில் வைத்த்குக்கொண்டு, என்னைத் தூங்கச் செய்வது அவனுக்குள்ள வழக்கம். அன்றும் அது போலவே அவன் செய்ய நினைத்து, என் தலையை லேசாகத் தட்டினான். பிறிதொரு மொழியில், [எனது தாய், தந்தை, குரு] பாபா என் மகன் மூலம் என்னை எழுப்பினார்!
இருந்தாலும், தூக்கக் கலக்கத்துடன் மணி என்ன என என் கணவரைக் கேட்க அவர் காலை 2.30 எனச் சொன்னார். பாபா அழைப்பதுபோல நான் உணர்ந்தேன். உடனே எழுந்த நான், ஹோட்டல் மேலாளரை அழைத்து, ஆலயத்துக்குச் செல்ல வாகனம் ஏற்பாடு செய்யுமாறு சொல்ல, அவரும் அப்படியே செய்வதாகச் சொல்லிவிட்டு, குளிக்க வெந்நீரையும் மேலே அனுப்பி வைத்தார். விரைவாகத் தயாராகிய நான் ஆலயம் சென்றடைந்தேன். தரிசன வரிசையில் நிற்க விரைந்தபோது, முன் தினம் பூஜை சாமான்களை வாங்கியபோது அந்தக் கடையில் இருந்த ஒரு சிறுவன் அங்கே ஓரிடத்தில் நிற்பதைப் பார்த்தேன். அவன் என்னிடம் வந்து அவனது நண்பர்களில் ஒருவன் காலை ஆரத்திக்கு வேண்டிய சீட்டை வாங்கித் தர உதவுவான் எனச் சொன்னான். கிடைக்குமா என சந்தேகத்துடன் நான் கேட்க, அவன் நிச்சயம் கிடைக்கும் என உறுதியளித்து, அங்கே நின்றுகொண்டிருந்த ஒரு குடும்பத்தினருடன் என்னையும் சேர்த்து அனுப்பினான். ஆரத்தி தொடங்க ஒரு சில நிமிடங்கள் வரை அனுமதி கிடைக்குமா என்பது நிச்சயமில்லாமலே இருந்தது. ஆனால், அப்போது நான் சேர்ந்திருந்த குடும்பத்தினரின் பெயர் அழைக்கப்பட்டு, அவர்களுக்கு அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டது. எங்களைப் போலவே முன்பதிவு செய்திருந்த பலரும் அங்கே இருந்தனர். ஆனால், அவர்களுக்கெல்லாம் கிடைக்காதது எங்களுக்குக் கிடைத்தது. மிகுந்த மகிழ்ச்சியுடன், உள்ளே சென்ற நான், பாபாவுக்கு வெகு அருகிலேயே சென்று நின்றுகொண்டேன். பாஸ்போர்ட் மூலம் அனுமதி கிடைத்திருந்தால்கூட, இவ்வளவு அருகில் சென்றிருப்பேனா என்பது நிச்சயமில்லை. எனக்காகவே விசேஷமாக அனுமதி தந்ததுபோல் இருந்தது. பாபாவின் கருணையினால் கண்ணிர் மல்கி, மனமுருக பாபாவுக்கு என் வந்தனங்களைத் தெரிவித்தேன்.
மதிய ஆரத்திக்கும் மீண்டும் மேலாளரைப் பார்த்து, எங்கள் குடும்பத்தினர்க்காக அனுமதிச் சீட்டு கேட்க, பாபாவின் கருணையால், அதுவும் கிடைத்தது. இதுபோன்ற அனுமதிச் சீட்டு கிடைத்தவர்கள் ஓரிடத்தில் உட்கார வைக்கப்பட்டு, ஆரத்தி சமயத்தில் உள்ளே அனுமதிப்பது வழக்கம். ஆனால், நாங்கள் சென்றபோது, அங்கு யாரும் இல்லை என்பதால், நேரகச் சென்று எங்களது சீட்டை காவலாளியிடம் காட்டினோம். அதைப் பார்த்த அவர், ஒன்றும் பேசாமல் அதை வாங்கிக்கொண்டு, எங்களை உள்ளே செல்ல அனுமதித்தார். ஆனால், அங்கே சென்றபின்னரே, அது தரிசனத்துக்கான வரிசை என்பதும், ஆரத்திக்கு முன்னால், அனைவரும் வெளியேற்றப்படுவர் என்பதும் தெரிந்தது. திடுக்கிட்ட நான், காவலாளியிடம் சென்று சீட்டைத் தருமாறு கேட்க, அவர் அப்படி ஒன்றும் இல்லை எனச் சொல்லி விட்டார். மீண்டும் அலுவலகத்துக்குச் சென்றுதான் முறையிட வேண்டும் எனச் சொன்னதால் அங்கே வேகமாக நான் ஓடினேன். ஆனால், அதற்குள் அது மூடப்பட்டுவிட்டது. மீண்டும் திரும்பிவந்து, அந்தக் காவலாளியிடம் சீட்டைச் சரி பார்க்குமாறு வேண்டியும், அவர் மறுத்துவிட்டார். பாபாவை வேண்டிய நான், முன் தினம் பார்த்த ஒரு அதிகாரி அங்கே நிற்பதைக் கண்டு அவரிடம் சென்று முறையிட்டேன். அவர் என்னை உற்றுப் பார்த்தார். பாபாவே பார்ப்பதுபோல் இருந்தது. அவர் மனதில் என்ன தோன்றியதோ, நேராக அந்தக் காவலாளியிடம் வந்து எங்களை உள்ளே செல்ல அனுமதிக்குமாறு கட்டளையிட்டார். சரியான நேரத்தில் உள்ளே சென்று மதிய ஆரத்தியையும் கண்டு மகிழ்ந்தோம்.
மறுநாள் கிளம்ப வேண்டுமென்பதால், என் நண்பர்களுக்கும் உறவினர்க்குமாக பிரசாதங்கள் வாங்கிக் கொண்டோம். பாபாவிடம் அவற்றைச் சமர்ப்பித்து, எடுத்துச் செல்ல நினைத்தேன். மதியம் 3 மணி அளவில், தரிசனத்துக்குச் சென்று, கூட்டம் அதிகம் இல்லாததால், பாபாவிடம் சென்று, நேரடியாகச் சமர்ப்பித்து, பின்னர் இரு வரிசைகளுக்குமிடையே இருந்த இடத்தில் அமர்ந்தேன். அப்போது ஒரு வயதானவரும், அவரது மகளும் என்னருகில் இருந்தனர். என் கையில் இருந்த பேடாக்களைப் பார்த்த அவர், சிரித்தபடியே, தனக்கும் சில பேடாக்கள் தரமுடியுமா எனக் கேட்டார். பாபாவே இந்த வடிவில் வது கேட்பதாக நினைத்து, மகிழ்ச்சியுடன் அவருக்குக் கொடுத்தேன். பாபா எதிரிலேயே அவற்றை அவர் சுவைத்து சாப்பிட்டார். வழக்கமாக விரட்டும் காவலாளிகள் கூட இவையெல்லாம் நிகழும்போது எங்களை அகற்றவில்லை. அந்தக் கிழவர் மீண்டும் என்னிடம் வந்து இனிப்பு மிக நன்றாக இருந்ததென்றும், எங்கே வாங்கினேன் எனவும் கேட்டார். அவருக்கு மேலும் சில பேடாக்களை நான் கொடுக்க, அவரும் அதை வாங்கிக்கொண்டு சென்றார்.
மாலை ஆரத்திக்கும் எனது அதிர்ஷ்டத்தைச் சோதிக்க நினைத்தேன். அலுவலகம் சென்றபோது, இதற்குள்ளாக [பலமுறை அங்கே சென்று வேண்டியதால்] பல அதிகாரிகளும் என்னைத் தெரிந்தவர்களாகவே இருந்தனர். அதில் ஒருவர் என்னிடம் வந்து, 'மதிய ஆரத்திக்கு அனுமதிச் சீட்டு வாங்கினீர்கள் அல்லவா? இப்படி ஒருவரே எல்லா ஆரத்திக்கும் வந்தால், மற்றவர் கதி என்ன?' என என்னைக் கேட்டார். சுயநலமே என்றாலும், மீண்டும் இந்த வாய்ப்பு எப்போது கிடைக்குமோ என எண்ணிய நான், அவரிடம் வேண்ட, என்னிடம் கோபித்துக் கொண்டாலும், 'இதுவே கடைசி' எனக் கூறி, சீட்டைக் கொடுத்து அனுப்பினார். கூட்டம் மிக அதிகமாக இருந்தது. மூச்சுத் திணறினாலும், பாபாவுக்கு அருகில் நிற்க இடம் கிடைத்தது. விடுதிக்குத் திரும்பும்போது, பாபா எப்படி அனைத்தையும் மாற்றி விடுகிறார் என நினைத்துக் கொண்டேன். முந்தைய தினம் அந்த மேலாளர் பயமுறுத்தியதுபோல் இல்லாமல், வியாழனன்று மூன்று ஆரத்திகளைக் காண வகை செய்த பாபாவின் கருணையை எண்ணி மனமுருகினேன். என் வாழ்வில் இது ஒரு மறக்கமுடியாத திருநாள்.
மறுநாள், வெள்ளிக்கிழமை, அறையைக் காலி செய்தபோது, ஆரத்திக்கான அனுமதிச் சீட்டு கிடைப்பது இன்று கஷ்டம் என்றாலும், தரிசனமாவது செய்துவிடலாம் என நினைத்தேன். அப்போதுதான், தரிசனத்துக்கான அனுமதிச் சீட்டு கிடைப்பது சுலபம் எனச் சொன்னது நினைவில் வந்தது. விடை பெற்றுச் செல்லும் முன்பிரிவுப் பரிசாக பாபா என்னை மீண்டும் வரச் சொல்வதாக உணர்ந்தேன். [எங்களுக்குள் பிரிவே இல்லை என்பது வேறு விஷயம்!] தரிசன்ச் சீட்டு வாங்கிக்கொண்டு, ஆசைதீர தரிசனம் செய்துகொண்டு, பிரிய மனமில்லாமலே ஆலயத்தை விட்டு நகர்ந்தபோது, பூசாரி என்னை அழைத்து, எக்ளர் சாக்கலெட்டுகளை அளித்து அனுப்பினார். சந்தோஷமாக பாபா அனுப்பி வைத்ததுபோல் உணர்ந்தேன்.
'பாபாவைப் பற்றிய [அவரது வாழ்க்கை, அறவுரை] அனைத்துமே இனிப்பானவையே' என்னும் ஸாயி ஸத் சரித வரிகளை நினைத்துக் கொண்டேன். அதே இனிப்பை தனது பிரிவுப் பரிசாக பாபா அளித்ததாக உணர்ந்தேன். அனைத்தும் வழங்கிய பாபா, உங்களுக்கு என் வந்தனங்கள். நான் உங்களை மிகவும் நேசிக்கிறேன்.
Loading
0 comments:
Post a Comment