Monday, October 3, 2016

A Life Given By Sai -Sai Devotee

  ( Translated into Tamil   by : Dr. Sankarkumar, USA)
சாயிராம்

உங்களிடமிருந்து வேறெதுவும் எனக்கு வேண்டாம், பொறுமையும், நம்பிக்கையும், அன்பும் மட்டுமே போதும்' எனச் சொல்லும் நமது ஸாயின் கரங்களில் அவற்றை ஒப்படைத்த ஒருவருக்கு அந்த வார்த்தைகளின் மஹிமை புரியவரும். தன் பெயரை வெளியிட விரும்பாத அப்படிப்பட்ட ஒருவரின் அனுபவத்தை இங்கே காணலாம்.
ஜெய் சாயிராம்
 
மனிஷா
-------------------------------------
இதை எழுதுவதற்கு முன்னால், நான் பல அனுபவங்களைக் கண்டிருக்கிறேன். அவற்றில் சிலவற்றை இங்கே எழுதியுமிருக்கிறேன். நீண்ட நாட்கள் கழிந்து, கடந்த 3 ஆண்டுகளில் எனது பிரார்த்தனைகளை ஸாயி என் வாழ்வில் நிறைவேற்றித் தந்து நான் தற்போது வாழும் வாழ்வை எனக்குத் தந்திருக்கிறார்.

7 ஆண்டு காலம் காதல்வயப்பட்டு, அதன் மூலமாக திருமணமாகாமல், பல பிரச்சினைகளைச் சந்தித்தேன். 32 வயதுவரை திருமணம் ஆகாமல்தான் இருந்தேன். எந்த ஒரு நம்பிக்கையும் இல்லாது, வேலை எதுவும் செய்யாது, வீட்டிலேயே அமர்ந்திருக்கும் ஒரு மருத்துவராக நான் இருந்தேன். ஸாயியயே நால்முழுக்கப் பார்த்துக்கொண்டு, ஏதேனும் நல்லது நடக்குமென எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். என் சொந்த ஊரில் வாழ்ந்துகொண்டு, மூன்று ஆண்டுகள் என் துணையைச் சந்திக்காமலேயே வாழ்ந்திருந்தேன். எல்லாம் தகர்ந்து வீழ்வதுபோல ஒரு உணர்வு. வேலைக்குப் போகவும் எனக்கு அனுமதியில்லை. மேற்படிப்புக்கான நுழைவுத் தேர்வுக்காகப் படிப்பதைத் தவிர வேறேதும் வழியில்லை.

இந்த ஒரு செயலில் மட்டுமே என் முழுக்கவனத்தையும் செலுத்த பாபா பணித்தும், என்னால் அது இயலவில்லை. கண்ணீரோடும், புத்தகங்களோடும் மட்டுமே தனித்திருந்தேன். படிப்பில் கவனம் செலுத்தாமல், இப்படியே ஒரு வருஷத்தைக் கழித்தேன். ஸாயி என்னைக் கைவிடமாட்டார் என நம்பி, மீண்டும் வேலைக்குச் சேர்ந்தேன். மதிப்புள்ள ஒரு கல்லூரியில் எனக்கு மேல்படிப்புக்கான அனுமதியும் கிடைத்தது. என்னை வீட்டிலேயே இருத்தி, என் உறுதியை நசுக்க நினைத்தவர்களுக்கு இது பேரதிர்ச்சியாக இருந்தது. போட்டி அதிகமிருந்ததால், இந்த அனுமதியை யாராலும் மறுக்க முடியாது.
மூன்றாண்டு காலக் காத்திருப்புக்குப்பின், என் பெற்றோரின் துணையால் மேல்படிப்பைத் தொடர்ந்தேன். எந்தக் கல்லூரியில் சேரப்போகிறேன் எனவும் முன்கூட்டியே தெரிந்துவிட்டது. எப்படியென்றால், நுழைவு அனுமதிக்காக[] செல்லும்போது, சிரித்த முகத்துடன் பாபாவின் படம் தாங்கிய ஒரு கல்லூரி வேன் என்னைக் கடந்து சென்றது! ஆனால் நான் சந்தித்த அந்தக் கல்லூரி, நாங்கள் படிக்கப்போகும் கல்லூரிகளின் அட்டவணையில் இல்லை. தங்களுக்கு இத்தனை 'சீட்' வேண்டுமென அந்தக் கல்லூரி அரசுக்கு விண்ணப்பிக்கவேயில்லை.

எனவே ஏமாற்றத்துடன் வெறுங்கையுடன் வீடு திரும்பினேன். ஆனால், அன்றைய தினம் நடக்கவிருந்த அந்த பேட்டி, குறைந்த அளவு சீட்டுகளே அனுமதிக்கப்பட்டதால், ரத்து செய்யப்பட்டது என்பது ஆறுதல் அளித்தது. மாணவர்கள் வேலைநிறுத்தம் செய்ததால், அந்தப் பேட்டி ரத்தானது. இது ஒன்றும் அதிசயமல்ல. இரண்டாம் முறை பேட்டிக்கு அழைத்தபோது, இப்போது நான் விரும்பிய அந்தக் கல்லூரியும் 3 சீட்டுகள் கேட்டு விண்ணப்பித்திருந்தது! ஆனால், அது அரசுப் பணி சமம்பந்தப்பட்டது என்பதால், நான் அதற்குத் தகுதியானவளாக இல்லை. ஆனால், அந்த 3 இடங்கள்: பூர்த்தி செய்யப்படவில்லை. மூன்றாவது பேட்டியின்போதும், அவை நிரப்பப்படவில்லை. நானும் தேர்வு செய்யப்படவில்லை. 

திடீரென ஓர்நாள் என் நண்பரிடமிருந்து அழைப்பு வந்து, நான் மீண்டும் ஒரு பேட்டிக்குச் செல்ல, நான் விரும்பிய அந்தக் கல்லூரியில் இருந்த ஒரே ஒரு சீட்டுக்கு நான் தேர்வு செய்யப்பட்டேன் எனச் சொல்லவும் வேண்டுமோ!
ஆனால், அது தனியார் கல்லூரி என்பதால், கட்டணம் அதிகமாக இருந்தது எனக்குச் சிரமமாகிப் போனது. என் திருமணத்துக்காக வைத்திருந்த நகைகளை என் தந்தை விற்க நேர்ந்தது. நானும் கல்லூரியில் சேர்ந்தேன். வீட்டில் இருந்த பட்ட கஷ்டத்தை விடவும், மிக அதிகமான சிரமங்களை அடுத்த மூன்றாண்டுகள் நான் இங்கே சந்தித்தேன்.

இரண்டாமாண்டு படிக்கையில் எனது திருமணம் திடீரென நிச்சயிக்கப்பட்டது. மூன்றாண்டுகளுக்குமாக மொத்தம் 30 நாட்கள் மட்டுமே விடுப்பு எடுக்கமுடியும். நான் இப்போது 10 நாட்கள் விடுப்பு எடுத்தேன். தெய்வாதீனமாக எல்லாம் முறையாக நடந்தேறியது. என் கணவரின் பிடிவாதக்காரத் தந்தை மனமிரங்கி எங்கள் காதலை அங்கீகரித்து திருமணத்துக்குச் சம்மதம் வழங்கினார். ஆனால் அவர் கலியாணத்துக்கு வரவில்லை.என்னைத் திருமணம் செய்தால், வீட்டை வீட்டெ மகனைத் துரத்திவிடுவதாக அவர் பயமுறுத்தியிருந்தார். தந்தை மீதிருந்த பிரியத்தாலும், தாய் இல்லாத காரணத்தாலும், தந்தையும், மகனும் சேர்ந்து வியாபாரம் செய்துவந்ததாலும், அவரால் வீட்டைவிட்டு வெளிவர முடியவில்லை.

திடீரென ஒரு நாள் அவர் மகனை அழைத்து, தான் இந்த விஷயத்தில் தலையிட மாட்டேன் எனச்சொல்லி கலியாணத்துக்குச் சம்மதம் தந்தார். வியாபாரத்தை மட்டும் தொடர்ந்து கவனிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். கண்ணிமைக்கும் நொடியில் எனக்கு மணமானது! 8 ஆண்டுகாலப் போராட்டத்துக்குப்பின், இது எப்படி நடந்தது என இன்னமும் வியக்கிறேன். திருமணமான 6-ம் நாள் வேலைக்குத் திரும்பினேன். அப்போதுதான் பேரிடி ஒன்று இறங்கியது. 

எனக்குக் காசநோய் பீடித்தது. இடிந்துபோனேன். ரத்தவாந்தி எடுத்தேன்.வேறு யாரிடம் நான் செல்வேன்? நான் காத்திருந்து பெற்ற மணவாழ்வு முடிந்தது என அஞ்சினேன். ஆனால் ஸாயியோ, 'உன்னிடமிருந்து பறிக்கவா நான் உனக்கு இதைக் கொடுத்தேன்?நான் கொடுத்தது நிரந்தரமானது!' எனச் சொன்னார். என் கணவரிடம் இந்த நோயைப் பற்றிக் கூறினேன். ஆழ்ந்த அக்கறையும், பரிவும், நேசமும் மிகுந்தவர் அவர். எனக்கு அவரே ஸாயிபோலத்தான்! என் சகோதரனுக்குத் தெரிந்த ஒரு மருத்துவரிடம் என்னை அழைத்துச் சென்றார்.

அந்த மருத்துவர் என் கவலையை அரை நொடியில் போக்கிவிட்டார். மருந்துகள் எடுத்தால் குணமாகிவிடும் எனத் தேற்றினார். ஓராண்டு காலம் சிகிச்சை எடுத்தேன். ஆனால், அந்த மருந்துகள் எனக்கு ஒத்துக்கொள்ளவில்லை. 4 மாத்திரைகள் சாப்பிட்டதுமே வயிற்றுபோக்கு தானாக வந்துவிடும். அடிக்கடி இப்படி நேர்ந்ததால் நான் பாபாவிடம் கண்ணீருடன் சென்று பார்த்தேன். என்னால் இதைச் சாப்பிட முடியாது எனச் சொல்லி, உதியை எடுத்து, தண்ணீரில் கரைத்துக் குடித்துவிட்டு வந்து உட்கார்ந்துவிட்டேன்.

அதன்பின் என் தொந்தரவுகள் அனைத்தும் நீங்கின. ஓரண்டுகாலம் முறையாக மாத்திரைகளைச் சாப்பிட்டேன். முழுதுமாகக் குணமானேன். இது மருந்தினாலா?

அடுத்த இடி எனது ஆராய்ச்சி மற்றும் தேர்வின் மூலம் வந்தது. உயிரைக் கொடுத்து நான் ஆராய்ச்சிக் கட்டுரை எழுதியபோதும், மருத்துவ விடுப்பினால் எனக்குத் தேவையான வருகைப்பதிவு [attendence] கிடைக்கவில்லை  எனக் கூறி தேர்வு எழுத முடியாதெனச் சொல்லி விட்டனர். பலரிடம் சென்று முறையிட்டும், யாரும் கேட்கவில்லை. எல்லாமே எனக்கு எதிராக இருந்தன. நான் அழுதேன். இன்னின்னாரைப் போய்ப் பார் எனச் சொன்னதையெல்லாம் பொருட்படுத்தாமல், ஸாயியிடம் சென்று, 'நீ அனுமதித்தால் மட்டுமே நான் தேர்வு எழுதமுடியும். இல்லாவிட்டால் நான் இப்படியே இருக்கிறே. நான் தகுதியானவளா இல்லையா என்பதை நீயே தீர்மானி' எனச் சொல்லிவிட்டு, வழக்கம்போல என் அன்றாட வேலைகளைக் கவனிக்கத் தொடங்கினேன். என்னிடம் தேர்வு பற்றி விசாரித்த அனைவரிடமும் எனக்கு ஒன்றும் தெரியாது எனச் சொல்லிவிட்டேன்.

தேர்வுநாள் நெருங்கியது. எனக்கு அனுமதிச் சீட்டும் வந்தது! கல்லூரியில் யாரோ எனக்கு உதவி செய்திருக்கிறார்.தேர்வுக்குச் சென்றேன். ஆனால், விடைத்தாளிலும், செய்முறைத் தேர்விலும் மிக மோசமாகச் செய்திருந்தேன். இருந்தாலும் விடாமுயற்சியுடன் தொடர்ந்து தேர்வெழுதி முடித்தேன். சொம்பேறித்தனம் பாபாவுக்குப் பிடிக்காது. எது வரினும் வரட்டுமென என் வேலையைச் செய்தேன். முடிவுகள் வந்தபோது, நான் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றேன்! கனவில் மட்டுமே இது சாத்தியம்.
நான் இப்போது என் ஸத்குருவின் பாதங்களருகே அமர்ந்திருக்கிறேன். இனி என்ன கேட்பது? என் தேவைக்கும் மீறி அவர் எனக்குத் தந்திருக்கிறார். அன்பான கணவர். ஆரோக்கியமான வாழ்க்கை. அடுத்து ஒரு குழந்தை வேண்டும். அதையும் ஸாயியே தருவார். இது சற்று நீளமான பதிவென்றாலும், ஸாயிபாபா ஒருவரே உங்களுக்கு மக்ழ்ச்சியைத் தரமுடியும் எனச் சொல்வதற்காக இத்தனையும் எழுதினேன்.

எது நேர்ந்தாலும், பாபாவின் முன்னே கையேந்துங்கள். அவர் உங்களை வெறுங்கையுடன் போக விடமாட்டார். இதை எழுதவேண்டுமெனப் பலநாட்களாக நினைத்திருந்தேன். இன்று வியாழக்கிழமை. பாபாவின் ஆணைப்படி இன்று இதனை எழுதினேன்.

வாழ்வில் பிரச்சினைகளால் மனம் நொந்து, வாடியிருக்கும் யாரொ ஒருவருக்கு நம்பிக்கை தரவே பாபா இதை எழுதத் தூண்டியிருக்கலாமென நினைக்கிறேன். ஸாயி மீது எந்தக் கஷ்டம் வந்த நேரத்திலும் இளைப்பாறுங்கள். அவரையே விடாமல் பிடித்துக் கொள்ளுங்கள்.

ஓம் ஸாயி ராம்.

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.