Introduction and Preface-Anusthan-A Discourse By Shri Upasani Maharaj Of Sakori
ஸகோரி
ஸ்ரீ உபாஸனி மஹராஜின்
பேருரை
- ஒரு அறிமுகமும், முன்னுரையும்-
( Translated into Tamil by : Dr. Sankarkumar , USA)
(E mail: Sankar.Kumar@ssa.gov)
(E mail: Sankar.Kumar@ssa.gov)
அனைவருக்கும் இனிய, ஆசீர்வதிக்கப்பட்ட குரு பூர்ணிமா வாழ்த்துகள்!
இன்றைய குரு பூர்ணிமா நன்னாளில் குரு ஸாயி தேவரின் பரிபூரண ஆசிகள் நம்மனைவருக்கும் கிடைத்திருப்பதாக உணர்கிறேன். கீழே நான் கொடுத்திருக்கிற குறிப்புகளைப் படித்தால் நான் சொல்வது உங்களுக்கும் விளங்கும்.
இவ்வகையில் நம்மை பாபா வாழ்த்துவது மிகவும் சிறப்பானது. நம்மை என நான் சொல்லும்போது, இந்த வலைதளத்தின் வாயிலாகச் செயல்படுபவரோடு கூட, அமைதியாக இதன் வளர்ச்சிக்குப் பாடுபடும் அனைவரையும் சேர்த்தே சொல்லுகிறேன். அப்படிச் செயலாற்றுபவர்களில் ஒருவர் ஸாயிதேவரின் அன்பார்ந்த மகளாகிய, எனது அருமைச் சகோதரி ஆஷாலதா.
ஷீர்டியிலிருந்து திரும்பியபின், சில நாட்களுக்கு முன், அவரிடமிருந்து சில கடிதங்கள் வந்தன. அவற்றுள் ஒன்றில், தான் ஷீர்டி மற்றும் 'உபாஸனி மஹராஜின்ன் ஸகோரி ஆஸ்ரமத்துக்குச் சென்று வந்ததைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தார். தான் படித்த ஒரு நூலைப் பற்றிக் குறிப்பிட்டு, தன்னை மிகவும் கவர்ந்த அந்த நூலை நமது தளத்தில் பதியலாமா எனக் கேட்டிருந்தார்.
அந்த நூலைப் பற்றிக் கேள்விப்பட்டு மிகவும் மகிழ்ந்தாலும், நமது தளத்தில் அதைப் பிரசுரிப்பது உசிதமாகுமா எனச் சற்றே தயங்கினேன். இந்தக் குழப்பத்துக்கு விடைகாண வேண்டி, பாபாவிடமே அந்தக் கேள்வியை முன்வைத்தேன்.
இரு நாட்களாகியும், ஒரு பதிலும் வரவில்லை; நானும் அது பற்றி மறந்துபோனேன். மறுநாள் வியாழக்கிழமை. அன்று பல்வேறு காரணங்களால் என்னால் இணையம் பக்கமே வர இயலவில்லை. தற்செயலாக ஈ-மெயிலை நோக்கியபோது, சகோதரர் ரோஹித் பேஹலிடமிருந்து ஒரு மடல் வந்திருந்தது. 'கன்யாகுமாரி என்பவர் எழுதிய ஷீர்டியில் ஸாயிபாபாவுடன் உபாஸனி மஹராஜின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டம்' என்னும் செய்தியைக் கண்டேன்.
மேற்கொண்டு தொடரும் முன், பல ஆண்டுகளுக்கு முன்னர், நாங்கள் உபாஸனி மஹராஜின் ஆஸ்ரமத்திற்கு சென்றபோது, எங்களுடன் கூட வந்த லீலாதர்'ஜி அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆஸ்ரமத்தைப் பற்றியும், ஸ்ரீ உபாஸனி மஹராஜைப் பற்றியும் அரிய பல தகவல்களை அப்போது நாங்கள் பெற்றோம்.
பாபாவுக்குத் தன்னாலியன்ற வகையிலெல்லாம் சேவை செய்ய முன்நிற்கும் சகோதரி ஆஷாவுக்குஎனது நன்றி. அவருடைய உதவியின்றி இந்த அரிய நன்மணிகள் இணைய உலகுக்குக் கிடைத்திராது. நம்மைப் போன்ற பல்லாயிரக்கணக்கானோரும் பயனடைந்திருக்க இயலாது.
கடந்த 7.7.2009 குரு பூர்ணிமா நாளன்று 'ஸ்ரீ நரஸிம்ஹ ஸ்வாமி' அவர்களின் வாழ்க்கை சரிதமான 'பூமணம் பரவுதல்போல' என்னும் நூலை முதன்முறையாக இங்கே வெளியிட்டோம். இன்றும், அதேபோன்ற குரு பூர்ணிமா தினத்தில், ஸ்ரீ உபாஸனி மஹராஜின் அருளுரையான 'அனுஷ்டான்' என்னும் நூலை இங்கே அளிக்கிறோம்,. மராத்தி மூலத்திலிருந்து திரு. எஸ். சுப்பாராவ் என்பவரால் இந்த நூல் மொழியாக்கம் செய்யப்பட்டது.
முந்தைய நூல் வெளியீட்டின்போது, உபாஸனி மஹராஜும், ஷீர்டி ஸாயிபாபாவும் என்னும் தலைப்பில் இரண்டு பதிவுகளை இட்டிருந்தேன். படிக்க விரும்புவோருக்காக அவற்றின் சுட்டிகள் இங்கே கீழே.
- முதல் பகுதி
- இரண்டாம் பகுதி
- இனி, சகோதரி ஆஷாவின் மடலையும், முன்னுரை, மற்றும் முதல் பகுதியை இங்கே அளிக்கிறேன்.
- முன்னுரை.
- 'அனுஷ்டான்' என்றால் என்ன?
ஜெய் ஸாயிராம்.
எனது ஸத்குரு ஸாயியின் மலரடிகளில்,
அன்புடன் மனிஷா
சகோதரி ஆஷாலதாவின் மடல்:
அன்பு சகோதரி மனிஷா,
நம் அனைவரையும் ஆசீர்வதித்து, எப்போதும் நம்முடனேயே இருக்க நமது ஸத்குரு ஸாயிராமனைப் பிரார்த்திக்கிறேன்.
கடந்த 2011-ம் ஆன்டு, மே மாதம் 25-ம் நாளன்று எனது மூத்த மகனின் பிறந்தநாளன்று பாபாவைத் தரிசித்து, அவரது பேரருளைப் பெற்றதை நீங்கள் அறிவீர்கள். அவரருளால், நேரம் வரும்போது, அந்த அனுபவங்களை விரிவாக இங்கே பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகிறேன்.
இந்த யாத்திரையின்போது, சகோரியில் இருக்கும் உபாஸனி மஹராஜின் ஆஸ்ரமத்திற்குச் செல்லும் வாய்ப்பும் கிடைத்தது. அவர் உபதேசங்கள் அடங்கிய ' அனுஷ்டான்’ என்னும் நூலையும் வாங்கினேன்.அவரது பொன்மொழிகள் அடங்கிய அந்த நூலைப் படித்து ஆனந்தம் அடைந்தேன். நமது வலைதளத்தின் மூலம் அவற்றை நமது வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டுமென ஸாயி அருளால் நிச்சயித்தேன்.
எனது இந்த ஆசையை 2 வாரங்களுக்கு முன் உங்களிடம் தெரிவித்தபோது, பதிலேதும் வரவில்லை என்பதால், மீண்டும் நினைவூட்டினேன். சரி, இல்லை என்றில்லாமல், உங்களுக்கு வந்த ஒரு மடலை எனக்கு அனுப்பி, அதன் மூலம் ஒரு அழகான பதிலை அப்போது நீங்கள் கூறினீர்கள். கன்யாகுமாரி என்பவர் அந்த ஆஸ்ரமத்துக்குச் சென்று சாயி மற்றும் உபாஸனி மஹராஜ் இருவரும் சந்தித்த நாளின் நூறாவது ஆன்டுவிழாக் கொண்டாட்டத்தின்போது, சாயி பாதுகைகளுக்கு நடத்திய பூஜையின் விவரம் அடங்கிய அந்த மடலின் மூலம், நமது இணையதளத்தின் மீதும், நாம் செய்யும் சேவையின் மீதும் ஸாயி கொண்டுள்ள அன்பினை அந்த மடல் காட்டியது. அதையே தொடக்கமாகக் கொண்டு, இந்த அற்புதமான உபதேச நூலை இங்கே பகிர்கிறேன்.
ஸாயிராம்.
ஆர். ஆஷாலதா.
ஆர். ஆஷாலதா.
அனுஷ்டான்
'ஸகோரி உபாஸனி மஹராஜின் அருளுரை'
மராத்தி மூலத்திலிருந்து மொழியாக்கம் - S. சுப்பாராவ். M.A
மேனேஜர்
உபாஸனி கன்யாகுமாரி ஸ்தான்,
சகுரி P.o., ரஹாதா
அஹமத் நகர் மாவட்டம்.
முன்னுரை
1910-14 வரை நான்காண்டுகள் ஷீர்டி ஸாயிபாபாவின் கீழ் கடுமையான தவத்தில் ஈடுபட்டபின், கரக்பூரில் பலருக்கும் நடுவே ஓராண்டு பெருமையுடன் வாழ்ந்தபின்னர், ஸ்ரீ உபாஸனி பாபா மஹராஜ் 1917-18-ல் அஹமத்நகர் ஜில்லாவில் கோர்கார்வ்ன் தாலுகாவிலுள்ள ஸகுரி என்னும் சிறிய கிராமத்தில் வசிக்கத் தொடங்கினார்.
ஊருக்கு வெளிப்புறம் இருந்த சுடுகாட்டுப் பகுதியில், ஒரு சில ஏழை விவசாயிகளின் உதவியால் ஒரு சிறு குடிசை அமைக்கப்பட்டது. அதன்பின், மூங்கில்களால் கட்டப்பட்ட ஒரு கூண்டுக்குள் தானே வலியவந்து 15 மாதங்கள் வாசம் செய்தார்.
விசேஷமான இந்துப் பண்டிகை நாட்களில் ஆயிரக்கனக்கானோர் அங்கே கூடுவது வழக்கம். அப்போது பல்வேறு தலைப்புகளில் மஹராஜ் அருளுரைகள் அருளினார். அவற்றில் ஒன்றே இந்த நூலின் கருப்பொருள்.
அந்நாட்களில், மங்களமூர்த்தி என்னும் ஒரு துறவி ஸகுரியில் வாழ்ந்திருந்தார். கணபதி உபாசகராகிய அவர் முத்கல புராணம் என்னும் நூலின் பகுதிகளை தினந்தோறும் பாபாவின் முன்னிலையில் அமர்ந்து படிப்பார். ஒருமுறை அவர் அவ்வாறு படிக்கும்போது, திடீரென மழை பெய்யத் தொடங்கியது. அவர் அமர்ந்திருந்த தரை சேறும், சகதியுமாக ஆனது. உள்ளே மூங்கில் கூண்டுக்குள் அமர்ந்திருந்த மஹராஜ், 'வெளியே எப்படி இருக்கிறது?' எனக் கேட்டார். மங்களமூர்த்தி ஸ்வாமியும்' நன்றாகவே இருக்கிறது' எனப் பதில் கூறினார். அப்போது பாபா பின்வருமாறு கூறினார்:
ஒருவனது உணவு அடுத்தவனுக்கு விஷமாகிறது. உனக்கு நல்லதெனப் படுவது அடுத்தவருக்குத் துன்பமாகலாம். நீங்கள் உட்கார ஒரு நல்ல இடமும், நூலை வைத்துக்கொள்ள நல்லதொரு பீடமும் இருக்கிறது. ஆகவே, மற்றவர் அஸௌகரியத்தைப் பற்றி நீங்கள் அறியவில்லை. அங்கிருக்கும் நரஸிங்க மஹராஜைப் பாருங்கள். கால்விரல் நுனியை அழுத்தி, தனது உடல் சேறாகாமலிருக்க எப்படி தவிக்கிறார் எனக் கவனியுங்கள். பொதுவாக நாம் அனைவருமே மற்றவர் அவதியை உணராமல், நமது நலனை மட்டுமே கவனிக்கிறோம்' எனக் கூறிவிட்டு, மற்ற அன்பர்களைப் பார்த்து, அங்கே சகதியாக இருந்து உட்கார வசதி இல்லாமல் இருந்தால், நீங்கள் எல்லாரும் தாராளமாக உள்ளே வரலாம்' என்றார்.
"அனுஷ்டான்" என்றால் என்ன?
ஏதேனும் புனித நூலைப் படிக்கவோ, கேட்கவோ செய்யும் ஒருவர், ஒரு சில கட்டுப்பாடுகளைக் கடைபிடிக்க வேண்டும். அவ்வாறு வரையறுக்கப்பட கட்டுப்பாடுகளே 'அனுஷ்டான்' எனப்படுகிறது.
பலவகையான 'அனுஷ்டானங்கள்' இருக்கின்றன. புனித நூலைப் படிப்பதும் அவற்றுள் ஒன்று. அனுஷ்டானம் என்னும் சொல்லின் பொருள் என்ன? 'அனு' 'ஸ்தான்' என்னும் இரு சொற்களின் கூட்டு இந்தச் சொல். இவ்விரண்டும் சேரும்போது, இலக்கண மரபுப்படி இது 'அனுஷ்டான்' என ஆகிறது. அனு என்றால் 'பிறகு'. ஸ்தான்' என்றால் இடம் அல்லது நிலை எனப் பொருள். நாம் அடையவேண்டுமென அல்லது அடையமுடியாதென நினைக்கின்ற ஒரு இடத்தை அல்லது நிலையைக் குறித்த சொல்லே 'அனுஷ்டானம்'. வேதாந்திகளும், ஆன்மீக சாதனையாளர்களும், அல்லது இவ்வுலக வாழ்வை வெறுக்கின்றவர்களும் அனைத்து ஜீவராசிகளையும் படைத்த அந்தப் பரம்பொருளின் சிறப்பியல்புகளை அனுபவிக்க வேண்டி, புனித நூல்களில் சொல்லப்பட்டிருக்கிற மூல மெய்ப்பொருளை, அரிய ஞானிகளால் கண்டுணரப்பட்ட அந்த தெய்வீகத்தைஅறிந்துகொள்ளக் கடைபிடிக்கும் முறைமையே அனுஷ்டானம் எனப்படும். எவ்வித முயற்சியும் இல்லாமல் தான் விரும்பும் ஒன்றை அடையமுடியாமல், அல்லது அதை அடையவேண்டி, அந்த அனுபவத்துக்காக இடைவிடாத கடின முயற்சிகளை, தானே தனக்குள் ஏற்படுத்திக்கொள்ளும் நிலையே அனுஷ்டானம். இப்போது, இந்தச் சொல்விளக்கம் எந்த அளவுக்குப் பொருத்தமானதெனப் பார்ப்போம்.
பகவான் கிருஷ்ணர், ராதா மற்றும் கோபியரைக் குறித்த நிகழ்வுகள் இதை நமக்குக் காட்டுகின்றன. கோபியர் அனைவரும் கிருஷ்ணன் மீது அளவற்ற அன்பு கொண்டிருந்தனர். திடீரென ஒருநாள் கிருஷ்ணன் மாயமாய் மறைந்துவிட, கோபியர் அனைவரும் என்ன செய்வதெனத் தெரியாமல் தவித்தனர். முன்னரே சொன்னதுபோல, நமக்கு ஒரு பொருள் கிடைக்கவில்லையெனின், நாம் விரும்பிய அந்தப் பொருள் குறித்த குணாதிசயங்களை நமக்குள் அனுபவித்து மகிழ நாம் முனைவோம். அதுபோலவே, ராதையும், பிற கோபியரும், கண்ணனின் பிரிவைத் தாங்கவொண்ணாமல், அவனது நடையுடை பாவனைகளைத் தங்களுக்குள் அனுபவித்து அவ்வாறே செயல்படவும் தொடங்கினர். ஆகவே, நாம் கண்ணனுடன் ஒன்றவிரும்பினால், அவருக்கு சேவை செய்து, தியாகங்கள் புரிந்து, அவரது தெவீகக் குணங்களைப் பிரதிபலிக்கும் வகைய்லான செயல்களைச் செய்ய வேன்டு. தங்களது பெண்மை நிலையை மறந்துவிட்டு, கிருஷ்ணனின் அதிசய சக்திகளையும், பெருமைகளையும் தங்களுக்குள் அனுபவித்து, அவனுடன் ஒன்றாகி, அதன் மூலம் தாங்கள் விரும்பியதை அடைந்து மகிழ்ந்தனர்.
அதுபோலவே, மெய்ப்பொருளை அடைய விரும்புபவரும், அனுஷ்டானத்தின் மூலம், அந்த நிலையை அனுபவிக்க முயற்சி செய்கின்றனர்.
அடுத்து வருவன:
*மாறுபட்ட நிலைபாடுகளை 'இறை அறிதல்' உணர்வாக அனுபவித்தல்.
*மனைவியின் அன்புணர்வைப்போல இறைவனை அடைதல்.
*ஒரு தனிப்பட்ட அனுபவம்.
--
"ஸ்ரீ ராதாகிருஷ்ண மாயி - ஷீர்டி ஸாயி மந்திர் - கொராலே - ஷீர்டி."
அனைவருக்கும் ஸாயியின் அருள் நிறைந்த புண்யதிதி மற்றும் விஜயதசமி வாழ்த்துகள்.
நம்மனைவரையும் ஸாயி ஆசீர்வதித்து வழி நடத்தட்டும். நாம் அனைவரும் அவரது அருளுக்குப் பாத்திரராக ஆவோம்.
இந்த நன்னாளில், ஸாயியால் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவருக்கு சேவை செய்யும் பாக்கியம் பெற்ற ஒருவரைப் பற்றி எழுதுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இவரை பாபா ஆசீர்வதித்ததோடு நில்லாமல், இவரது மகளையும் தனது உபதேசங்களைப் பரப்பவும், அவரது சேவையில் ஈடுபடவும் ஆசீர்வதித்திருக்கிறார்.
புனித பூமியாம் ஷீர்டி செல்லும்போதெல்லாம் நான் அன்போடு 'தீதி' என அழைக்கும் இவரைச் சந்தித்து, உரையாடியதையும், இவரது நட்பைப் பெற்றதிலும் பாபாவின் கருணை மிகுந்திருப்பதை எண்ணி மகிழ்கிறேன். இவரதுஅனுபவங்கள், எண்ணங்கள், உணர்வுகள் மூலம் இவர் காட்டும் பரிவினைக் கண்டு, ஸாயி மீதான எனது பக்தியை இவர் மேலும் உரமூட்டி வளர்க்கிறார்.இவருடனான உறவால், நான் என்னை எடை போடவும், திருத்திக் கொள்ளவும், மேலும் என்னை உணரவும் வழிவகுத்து, எனது ஆணவத்தைக் கரைத்து, நான் எனும் இருப்பே மறைந்து போகிறது.
பாபாவின் கர்மபூமி இப்போது இவரது கர்ம பூமி ஆகிவிட்டது. அவரை தீதி என நான் அழைத்தாலும் , எனக்கும் இன்னும் எண்ணற்ற பலர்க்கும் அவர் அதை விடவும் மேலானவர்.
அவர்தான் 'மாயி' என நம்மால் அழைக்கப்படுபவர். நாள்தோறும் இடைவிடாது தன்னலமற்ற ஸாயி சேவையில் ஈடுபட்டு, பல குழந்தைகளை இந்த பணியில் ஈடுபடுத்தி, ஆன்மீக சாதனையில் மெல்ல மெல்ல அவர்கள் அடியெடுத்து வைக்க உதவுகிறார். தற்போது இவரை 'தீதி' என மட்டுமே அழைத்து, போகப்போக இவர் யார் என்பதை நீங்களே அறிந்துகொள்ள வேண்டுமென விரும்புகிறேன். அவரது இளயதுக்கால அனுபவத்தைப் பற்றி அவரே தனது புத்தகத்தில் குறிப்பிட்டிருப்பதை வாசகர்கள் படிக்க விரும்புகிறேன். அதனைத் தொடர்ந்து சகோதரி ஆஷாலதா அவரைச் சந்தித்ததைப் பற்றியும், பாபாவின் சேவையில் தனது வாழ்ப்வையே இவர் அர்ப்பணித்த விவரத்தையும் காணலாம். அந்த ஆலயத்தில் எடுத்த படங்கள் அதற்குப் பின் வரும். இந்த வலைதளத்தைத் தனது சேவையினால் அவர் புனிதப்படுத்ததுவதற்கு என மனப்பூர்வமான நன்றி. மேலொன்றும் சொல்லாமல், தீதி நடந்த பாதையில் நம்மையும் செலுத்த பாபாவை வேண்டி இதனை இங்கே அளிக்கிறேன்.
ஜெய் ஸாயிராம்.
ஷீர்டியில் அமுதம்
இதை எழுதுபவர் குறித்த ஒரு சிறு குறிப்பு.
1943-ல் தமிழ்நாட்டில் இருக்கும் நீலகிரி மாவட்டத்தில், அரவங்காடு என்னும் ஊரில் நால்வரில் இளைய குழந்தையாகப் பிறந்தேன். என் தந்தை ஒரு தீவிர நாத்திகர். என் பாட்டி இறை பக்தியுள்ள ஒரு அன்பான மாது. நான் பிறந்ததிலிருந்து என் தாய் நோய்வாய்ப்பட்டு சாவின் மடியிலேயே இருந்தா. பல மருத்துவர்களிடம் காட்டிப் பலனில்லாமல், கடைசியாக வேலூர் மருத்துவமனைக்கு இட்டுச் சென்றார். வயிற்றில் அறுவை சிகிச்சை செய்து, பல சோதனைகளும் செய்தபின்னார், அவர்களும் 'இனி தேறாது' எனக் கூறி வீட்டுக்கு எடுத்துச் செல்லச் சொல்லிவிட்டனர். ஒருநாள் ஹிந்து பத்திரிகையில், ஸ்ரீ நரஸிம்ஹ ஸ்வாமிஜி என்பவர் கோவையில் இருக்கும் நாகஸாயி மந்திருக்கு வருவதாக அறிந்தார். அவரைப் பற்றிய விசேஷக் கட்டுரை ஒன்றையும் அந்தப் பத்திரிகை வெளியிட்டிருந்தது. அவர் தீராத நோய்களையும் குணப்படுத்துவதாக அறிந்த என் தந்தை என் தாயை அங்கே எடுத்துச் செல்ல நிச்சயித்தார். நானும் கூடச் சென்றேன்.
1949-ல் இது நிகழ்ந்தது. அதற்கு முந்தைய நாள் என் தாய் ஒரு கனவு கண்டார். பல அடியார்கள் புடைசூழ, தாடி வைத்த கிழவர் ஒருவர் பல்லக்கில் அமர்ந்திருப்பதாகக் கண்டார். நீண்ட அங்கி ஒன்றை அவர் அணிந்திருந்தார். அவரைத்தான் நாளை பார்க்கப்போகிறோம் என அறியாமல், தான் கண்ட கனவை என் தந்தையிடம் கூறினார். 'பதவி உயர்வா/ பணமா?, குழந்தைகளா? புகழா? எது வேண்டும்?' என ஸ்வாமிஜி மறுநாள் என் தந்தையைக் கேட்டார். என் தாயைக் காட்டி, 'அவள் மிகவும் நோய்வாய்ப்பட்டிருக்கிறாள். எனக்கு இன்னொரு மனைவி கிடைப்பாள். ஆனால், என் குழந்திகளுக்கு இன்னொரு தாய் கிடைக்கமாட்டாளே' என என் தந்தை கூறினார்.
சாரி என்னும் மருத்துவரை அழைத்து என் தாயைப் பரிசோதிக்கச் சொன்னார். என் தாயின் நாடி மிகவும் பலவீனமாக இருந்தது. பிறகு ஸ்வாமிஜி தனது உள்ளங்கையை என் தாயின் தலை மீது வைத்தார் அது பனிக்கட்டி போல குளிர்ச்சியாக இருந்ததாக என் தாய் கூறினார். மீண்டும் தனது கையை வைக்க, இப்போது அது சூடாக இருப்பதை உணர்ந்தார். 'ஆஹா!' எனச் சொல்லிவிட்டு, பாபாவின் உதியைக் கொடுத்து, 'அச்யுதா, அனந்தா, கோவிந்தா' என்னும் மந்திரத்தை உபதேசித்து, அதனை தினம் 21 முறையாக 21 நாட்களுக்கு சொல்லுமாறும், உதியை நெற்றியில் இட்டு, பிறகு சற்று நீரிலும் கலந்து குடிக்கவேண்டுமெனவும் அருளினார்.
இதெல்லாம் நிகழ்கையில் நான் கதவோரம் நின்றிருந்து அந்த வெண்தாடி வேந்தரையே பார்த்துக் கொண்டிருந்தேன். எனக்கு அவர் ஸான்டா க்ளாஸ் போலத் தோன்றினார். அவரது தாடியைப் பிடித்து இழுக்க வேண்டுமென ஒரு ஆசை பிறந்தது. என்னை அவர் அழைத்து, என்னைத் தூக்கித் தன் மடியில் இருத்திக் கொண்டார். மிகவும் இதமாக உணர்ந்தேன். அவது மார்பில் சாய்ந்துகொண்டு அவரது தாடியை வருடினேன். பிறகு அவர் என் தலை மீது கை வைத்து எனக்கு ஆசி அளித்தார். அவரது, மற்றும் பாபாவின் அருளால், என் தாய் பூரண குணம் அடைந்தார். என் தந்தியும் ஒரு தீவிர பாபா பக்தரானார்.
சில காலம் கழித்து அவருக்கு நன்றி சொல்ல சென்னை சென்றோம். ' நான் ஒன்றும் செய்யவில்லை. எல்லாம் பாபாவின் உதியும், அவரது அருளுமே. அவரையே வணங்கி, அவருக்கே நன்றி சொல்லுங்கள். கூடவே, மத்திய பாரதம் சென்று பாபாவின் புகழை அங்கே பரப்புங்கள்' எனக்கூறி பாபாவின் திருவுருவப் படம் ஒன்றை அளித்தார். அவர் சொன்னதைக் கேட்டு என் தந்தை ஆச்சரியமுற்றார் ஆனால், சில நாட்களிலேயே மத்தியப் பிரேதச மாநிலம், ஜபல்பூர் தாலுகாவிலுள்ள கமாரியா என்னும் ஊருக்கு என் தந்தை மாற்றலானார். அங்கே வியாழக்கிழமை பூஜைகள் செய்யத் தொடங்கினோம். பின்னாளில் என் தந்தை அங்கே ஒரு பாபா கோவிலைக் கட்டினார்.
அடிக்கடி ஸ்வாமிஜியின் பொன்மொழிகளை எங்களுக்கு எங்கள் தந்தை நினைவூட்டுவார். பாபாவைக் குறித்த கடுகளவிலான பிரசாரமும், சேவையும் மதிப்பு வாய்ந்தது எனக் கூறுவார். தன்னளவில், ஷீர்டி யாத்திரை, பாபாவைப் பற்றி எழுதுவது, ஸத்சங்கம் நடத்துவது என ஈடுபட்டிருந்தார். என் படிப்பை முடித்துவிட்டு, ஜபல்பூர் மருத்துவக் கல்லூரிய்7இல் சேர்ந்தேன். 1963-ல் ஒருமுறை நாங்கள் ஷீர்டி சென்றோம். ஸாயிநாத் மருத்துவமனை அப்போது அங்கே கட்டப்பட்டு வந்தது. அங்கே சேவை செய்வதென நான் நிச்சயித்தேன். மருத்துவப் படிப்பை முடித்ததும், தில்லியில் இருக்கும் கலாவதி சரண் மருத்துமனையில் மேற்படிப்பை முடித்து, பிறகு அமெரிக்கா சென்றேன். குழந்தை நல மருத்டுவராக அங்கே சிறப்பாகப் பணியாற்றினேன். ஆண்டுகள் நகர, என் பிரதிக்ஞையை மறந்துபோனேன். ஆனால், 'இதெல்லாம் அவசியமா?' என்னும் உள்குரல் ஒன்று கேட்டுக்கொண்டே இருந்தது. என் தந்தை கூறிய வார்த்தைகள் என்னைச் சுற்றிவந்தன. அவற்றை நான் ஒதுக்கினாலும், அவை என்னை விடவில்லை. பாபா அருளிருந்தால், என் வேலையை விட்டுவிட்டு, ஷீர்டி வந்து சேவை செய்ய உறுதி பூண்டேன்.
1994-லிருந்து நான் ஷீர்டியில் வசிக்கலானேன். மருத்துவமனையில் சேர்ந்து பணியாற்ர இயலவில்லை. நான் ஏதோ சேவை செய்தாலும், அவையெல்லாம் பாபா பிரசாரமாக அமையவில்லை. நான் மிக விரும்பும் பாபா பக்தர்களின் படங்களை ஒருநாள் எடுத்துச் சென்றேன். போஸ் அண்ணா என்பவர் அதைப் பார்த்ததும், நாம் ஏன் இவற்ரையெல்லாம் வைத்து ஒரு புகைப்படக் கண்காட்சி நடத்தக்கூடாது?' எனக் கேட்டார். அவ்வாறு தொடங்கியதுதான் இந்தப் பணி. அதன்பின் நான் திரும்பிப் பார்க்கவே இல்லை! - ஸாயி பக்தை வின்னி.
ஆஷாலதா தரும் விளக்கம்
ஸாயிராம்.
15/8/2012 அன்று ஸத்குரு ஷீர்டி ஸாயி தரிசனம் கிடைக்கும் வாய்ப்பு பெற்றோம். அவரது அருளால் ஆக. 17-ம் தேதிவ் வரை அங்கே தங்கினோம்.
இந்தப் பயணத்தின்போது, அவரது மிகச் சிறந்த அடியார்களில் ஒருவரது அறிமுகம் கிடைக்க அருள் செய்தார். சகோ. ராமநாதன், மற்றும் சகோ. மனிஷா அவர்களுக்கு தீதிமா குறித்த விளக்கம் தந்ததற்கு நன்றி சொல்கிறேன். தீதிமா வடிவில் நான் ராதாகிருஷ்ண மாயியைப் பார்த்தேன் எனத் தெளிவாகச் சொல்லமுடியும். கற்பனையல்ல! அவருடன் இருந்தபோது இப்படி உணரவில்லை. எனக்கு அவரைப் புகழவேண்டும் என்னும் அவசியமும் இல்லை; ஆனால் இந்த நொடியில் நான் அப்படி உணர்கிறேன். இது ஸாயியின் அருளே! அவரே இந்த எண்ணத்தை இப்போது என் மனதில் விதைத்திருக்கிறார். இதை எண்ணும்போதே மயிர்க்கூச்செறிகிறது. மிகவும் அற்புதமாக இந்த நொடியில் நான் உணர்கிறேன்.
ராதாகிருஷ்ண மாயியைப் பற்றி நான் படித்தது கொஞ்சமேயானாலும், அவை ஒரு அற்புத ஆனந்த உணர்வைத் தருகின்றன. அவர் மீது சற்றுப் பொறாமையாகவும் இருந்தது! இப்படியும் ஒருவர் இருக்க முடியுமா என்று! தனது ஈடுபாடு, அன்பு, குருபக்தி முதலானவற்றிலும், குருவுக்கு முழு சக்தியுடன் சேவை செய்வதிலும், கீழ்ப்படிதல், கடின உழைப்பு, ஸாயி குறித்த பிரசாரம், எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு தாயன்பு இவற்றுக்கெல்லாம் நிகராக நான் இந்த குணங்களை தீதிமாவிடம் கண்டேன். ஸ்ரீ நரஸிம்ஹ ஸ்வாமி பாபாவிடமிருந்து நேரடியாக ஆசி பெற்ர பேரனுபவம் இவருக்குக் கிட்டியது. [மேலே பார்க்கவும்]. அவருக்கு சக்தியையும் தனது ஆசியையும் ஸாயி அருளப் பிரார்த்திக்கிறேன். ஸாயிபாபா தனது அடியார்களை ராதாகிருஷ்ண மாயியிடம் அனுப்பி வைப்பார் எனப் படித்திருக்கிறேன். தீதிமா என அன்புடன் அழைக்கப்படும் வின்னி சிட்லூரி அவர்கள் இப்போது தன்னிடம் வரும் அடியார்களை, ஸாயிநாதர் வாழ்ந்த பல இடங்களுக்கும் அனுப்பி, அந்த இறையனுபவத்தை நமக்குத் தருகிறார் . இந்த இடங்களெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்துவருகின்றன. வணிகக் காரணங்களுக்காக இதுபோன்ற புனித இடங்கள் அழிவது வேதனையான விஷயம். கோலாரே மந்திரையும் ஸ்ரீ ராதாகிருஷ்ண மாயி எனப் பெயரிட்டதற்கு ஸாயிநாதரே காரணமாக இருந்திருக்க வேண்டும். ஏனெனில், அவர் செய்ததுபோலவே, இவரும் இங்கே சேவை செய்கிறார். என்ன ஒரு ஒற்றுமை!
ஆம்! [ என் சொந்த அனுபவத்தின் பேரில்] மாயியை மீண்டும் இந்த மண்ணிலே கண்டேன். அவரது அன்பின் அதிர்வலைகளை இவரிடம் கண்டேன். ஓ ஸாயி, அவரிடமிருக்கும் அந்த நற்குணங்களில் ஒரு சதவிகிதமாவது எனக்கும் அருளுக! எனது பாவங்களை மன்னித்து, அவரது நற்பண்புகளில் கொஞ்சமாவது எனக்கும் தருக. என் சுயநலத்துக்காக என்னை மன்னியுங்கள். ஷீர்டியில் சாவடி முன்பாக தீதிமா எனன்னைக் கட்டியணைத்தபோது எனக்குள் எழுந்த எண்ணங்கள் இவை. பெயர், புகழுக்ககு ஆசைப்படாத அவரது பெயரை நான் உபயோகிக்கக்கூடாது. ஆனால் அவர் ஆற்றிவரும் செவைகளை இந்த வலைதளம் வாயிலாக அனைவருக்கும் கூற அனுமதிக்கப்பட்டுள்ளேன்.
இதைப் படிக்கும் அனைவருக்கும் ஒரு அறைகூவல் விடுக்கிறேன். நான் கண்டனுபவித்ததையே இங்கே எழுதுகிறேன். அவை எவ்விதம் உங்கள் வாழ்வை மாற்றப்போகிறது என்பதை உங்கள் முடிவுக்கே விடுகிறேன். 'அடுத்தவர் இதை அடையத் தகுதியானவரா இல்லையா என்பதை ஆராயாமல், முழுமனதுடன் அளியுங்கள். குறைந்த பட்சம் கடுமையான வார்த்தைகளை உபயோகிக்காமல், இனிமையாகப் பேசுங்கள்' என பாபா கூறுவதை இங்கே நினைத்துப் பார்க்கிறேன்.
அதேபோல, இதைப் படித்ததும் யாராவது அங்கே உதவி செய்யவோ, அல்லது சேவை செய்யவோ நினைத்தால், அவர்களைத் தொடர்பு கொள்ளுங்கள். குறிப்பாக மருத்துவர்கள் இந்தச் சேவையில் எவ்விதத்திலாவது ஈடுபட விரும்பினால், அந்த கிராம மக்களுக்கு நன்மை பயப்பதாகும். ஊட்டச்சத்துக் குறைபாடால், கண்பார்வை மற்றும் காது கேளாமை போன்றவற்றால் அவதிப்படும் அந்த கிராமத்து சிறுவர், சிறுமியர்க்கு இது பேருதவியாக இருக்கும். அவர்கள் நல்லமுறையில் படிப்பில் கவனம் செலுத்த வழி வகுக்கும்.
ஸ்ரீ ராதாகிருஷ்ண மாயி - ஷீர்டி ஸாயிபாபா மந்திர் - கொராலெ - ஷீர்டி.
பாபாவின் உருவச்சிலை கொண்ட ஆலயமாக இல்லாமல், ஒரு சிறிய சாவடியும், துவாரகாமாயியும், நின்ற நிலையில் பாபாவின் முழுவுருவத் தோற்றப்படம் ஒன்றைக் கொண்ட ஒரு பெரிய ஹாலும் அடங்கியதாக இது இருக்கிறது. இந்த ஹாலில்தான் பல்வேறு சேவை நிகழ்வுகள் நிகழ்கின்றன. வருமானவரிச் சலுகை இன்னமும் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர்.
'அன்னதானம்' - சுவையான அவல் உப்புமாவும், தேநீர், பிஸ்கட்டுகளும் தங்களைப் பற்றிக் கவலைப்படாமல், ஸ்ஹீர்டியில் வாழும் ஸாயிபாபாவை மட்டுமே இலக்காக வைத்து நடக்கும் பாதசாரிகளுக்கு வழங்கப்படுகின்றன. இரவு வேளையில் தங்க நேரிடும் யாத்ரீகர்களுக்கு இரவு உணவும் தரப்படுகிறது. இதைத் தவிர முக்கிய பண்டிகை நாட்களில் கிராமத்தினருக்கு பாபா பிரஸாதம் வழங்கப்படுகிறது.
'முதலுதவி' - ராம நவமி சமயத்தில் வரும் மும்பையிலிருந்து ஷீர்டி செல்லும் கிராமத்தினருக்குத் தேவையான முதலுதவிகளும் செய்யப்படுகின்றன. பக்தர்களுக்கு வசதிகள் செய்து தரப்படுகின்றன. ஒரு சமயத்தில், கிராமத்தில் காலரா நோய் பரவியபோது, மருத்துவமனைக்குச் செல்ல வசதியில்லாத மக்களுக்காக, மருத்துவர்களை வரவழைத்து, ஹாலிலேயே அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஒவ்வொரு அடுத்த வியாழனன்றும் மருத்துவர்கள் இங்கே வந்து சேவை செய்கின்றனர்.
'இரத்த தானம்' - முகாம்கள் நடத்தப்படுகின்றன.
'கல்வி' - பக்கத்து ஊர்களில் இருக்கும் பள்ளிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் தரப்படுகின்றன. ஆரம்பக் கல்வி பெறுவதற்காக, சிறுவர்களுக்குத் தேவையான உபகரணங்களை விரும்புவோர் இங்கே அளிக்கலாம். பெண் குழந்தைகளை இந்த ஆலயமே தத்து எடுத்துக்கொண்டு, அவர்களுக்கான தேவைகளைச் செய்து தருகிறது.
'அவசர ஊர்தி' - பாம்புக்கடி போன்ற அவசர சிகிச்சைக்காக மக்களை அருகிலிருக்கும் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்ல வசதி செய்துதரப்படுகிறது.இதற்கு நன்றி தெரிவிக்கும் வாயிலாக அறுவடையின்போது, மக்கள் தானியங்களாக உதவுகின்றனர். வறட்சி காலத்தில் லாரிகள் மூலம் நீர் கொண்டுவரப்பட்டு, மக்களுக்கு வழங்கப்பட்டது.
13000 - 14000 நபர்களுக்கு மாதந்தோறும் இந்தச் சேவைகள் அளிக்கப்படுகின்றன. இவர்களில் 6000 பேர்களுக்கு உணவும், 7000 பேர்களுக்கு தேநீர், பிஸ்கட்டுகளும் தினமும் வழங்கப்படுகின்றன. சுமார் 200 பேர் இரவில் தங்குவர்.
ஸாயி சம்பந்தப்பட்ட பல புனித இடங்களுக்கு அவரது பகக்தர்களில் பலரை அழைத்துச் செல்லவேண்டும் என்பதே வின்னி தீதியின் ஆசை.
"தேவைகள்"
சேவை செய்ய விரும்பும் கரங்களே இன்றைய முதல் தேவை. எவ்வகையிலாவது உதவ நினைக்கும் மருத்துவர்கள் தீதிமாவை அணுகவும். எந்தவொரு நன்கொடையும் வரவேற்கப்படுகிறது. முன்னரே சொன்னதுபோல, வருமானவரி விலக்கு இன்னமும் கிடைக்கவில்லை என்பதை மனதில் கொள்ளவும்.
யாத்ரீகர்கள் தங்கும் அறைகளும், கழிப்பறை வசதிகளும் மேலும் தேவையாகிறது. ஷீர்டியிலும், ரஹாதா, நீம்காவ்ன் போன்ற தலங்களையும் தரிசிக்க வாய்ப்பளித்த ஸாயிமாதாவின் திருப்பாதங்களில் தலைவைத்து வணங்குகிறேன். எல்லாவற்றுக்கும் மேலாக, ஒரு உண்மையான அடியார் எப்படி இருக்க வேண்டும் என்பதை கொராலெ மந்திரில் தீதிஜியிடம் நாங்கள் கண்டோம். ஸாயி ஸத்சரித்திரத்தில் சொல்லிய வண்ணமே அதை உணர்ந்தோம். தனது குருவின் லட்சியங்களை அடைய இவர் அயராது உழைக்கிறார். அவரது சேவையைக் கண்டு எங்கள் கண்களில் ஆனந்தக் கண்ணீர் வருகிறது.
ஸாயி உலகத்துக்கு இவரை அறிமுகப்படுத்தியதன் மூலம் நான் ஏதாவது தவறு செய்திருந்தால், அதற்காக அவரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். மிகவும் எளிமையான அவர், தன்னைப் பற்றிய இந்தப் புகழுரைகளை விரும்ப மாட்டார். ஆனால் நான் அவரைப் பற்றி அறிந்து உணர்ந்ததில் இது ஒரு சிறு துளியே. அவரைப் பற்றி நன்கறிந்தவர்கள் இதை ஒப்புக்கொள்வார்கள்.
கீழ்க்காணும் படங்கள் அங்கே கொராலெ மந்திரில் எடுக்கப்பட்டவை. அவற்றுக்கான விளக்கங்களும் இணைக்கப்பட்டிருக்கின்றன.
ஸாயி எப்போதும் நம்முடனிருந்து, நம்மை ஆசீர்வதித்து வழி நடத்தட்டும். ஸாயிராம்.
ஆஷாலதா.ஆர்.
"கொராலெ ஸ்ரீ ராதாகிருஷ்ண மாயி - ஷீர்டி ஸாயிபாபா மந்திரில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்"
1. பாபாவின் படமும், கல்லாலான பாதுகைகளும்.
2. மேலே உள்ள படமும், பாதுகைகளும் இருக்கும் மண்டபம்.
3. தீதிமா அக்கறையுடன் குழந்தைகளைக் கவனித்துக்கொள்ளும் இந்த ஆலயத்தின் முகப்பு.
4. ஸாயிபாபாவின் பாதுகைகள்- பாபா [ஷீர்டியில்] இதன்மீது நின்றுகொண்டு பறவைகளுக்குத் தீனி போடுவார்.
5. ராதாகிருஷ்ண மாயியின் பெயரையும் இந்த மந்திர் தாங்கி நிற்கிறது. -- தீதிஜியும் அவரைப் போலவே ஒரு சிறந்த சேவகி என்பதை எனக்கு உணர்த்தியது.
6. துவாரகாமாயி படம்.
7. ஸாயிபாபா நின்றுகொண்டிருக்கும் படம். இது அசலான படம், பிரதி எடுத்தது அல்ல என தீதிமா நுணுக்கமான பல இடங்களைக் காட்டிச் சொன்னார். கிழிந்த இடத்தில் தையல் போடப்பட்டிருந்த கஃப்னி, வெயில் அதிகமாயிருந்ததால் குறுகலான பாபாவின் கண்கள், கால்களுக்கிடையே கப்னியின் கிழிந்த நூல் தொங்கிக்கொண்டிருந்தது. இந்தப் படமும், வெள்ளிப் பாதுகைகளும் பிரதான ஹாலில் வைக்கப்பட்டிருக்கின்றன.
8. கண்பார்வை இழந்ததால் தன் யஜமானனுக்கு உபயோகம் இல்லாமல் போன 'லக்ஷ்மி' என்னும் பசுமாடு. இப்போது இங்கே பராமரிக்கப்படுகிறது. பின்புலத்தில் ஆம்புலன்ஸ் வண்டியைக் காணலாம்.
தீதிமாவின் மகனின் தொடர்பு குறிப்புகள்:
ஈமெயில்: ..... sadaghode@yahoo.com
தொலைபேசி : 982 285 6666, 997 545 5835
தீதிமா எழுதிய ஆங்கில நூல்கள்:
• Ambrosia in Shirdi
• Baba’s Rinanubandh
• Baaba’s Vani
• Baba’s Gurukul
• Baba’s Anuraag
வாசகர்கள் வின்னி தீதிக்கு தங்களது கருத்துகளை இங்கே எழுதலாம்.
ஜெய் ஸாயிராம்.
Loading
1 comments:
இந்த புத்தகங்களை சென்னையில் எங்கு வாங்குவது. Saima foundation சாா்பில் library தொடங்க உள்ளோம். சாய் பக்தர்கள் பலர் இந்த புத்தகங்களை படித்து அவர் லீலைகள் பற்றி மற்றவர்களுக்கு எடடுத்துரைக்க எங்களுக்கு உதவுவீர்களா ஓம் சாயிராம்
gowriprabakar@gmail.com
Post a Comment