Monday, March 11, 2013

My Experience With Sai Baba-Sai Devotee( Translated into Tamil by Dr. Sankarkumar, U.S.A )

அனைவருக்கும் இனிய பாபா நாள் வாழ்த்து. இந்த தளத்தின் மூலம் ஸாயி என்னும் ஸாகரத்தில் மேலும் ஒரு துளி! பெயர் தெரிவிக்க விரும்பாத ஒரு அன்பர் தனது இளவயது முதல் இன்றுவரை பாபா அவருடன் இருந்து அருள்வதைக் கூறுவதைக் கேட்போம். ஜெய் ஸாயிராம்.

ஓம் ஸாயிராம் 
மனிஷா 


இந்தத் தளத்தின் மூலம் நான் பகிரும் இரண்டாவது அனுபவம் இது.
கர்மவினைகளின் காரணமாக அவதிப்படும் அடியவர்கள் இந்தத் தளத்தில் பல அடியவர்களும் கூறும் ஸாயி லீலைகளைப் படித்து, ஸாயி எப்போதும் நம்முடனே இருக்கிறார் எனும் நம்பிக்கையைக் கொள்கின்றனர். நானும் அதுபோன்ற ஒரு அடியவளே. அவ்வப்போது என் நம்பிக்கையும் குலைந்து போகும் என்றாலும், நம்மை மிகவும் நேசிக்கும் பாபாவை விட்டு நம்மால் விலக இயலாது என அறிவேன்.
சிறுவயது முதலே ஸாயியை நான் அறிந்திருந்தாலும், பிற தெய்வங்களைப் போலத்தான் அவரையும் கருதி வழிபட்டு வந்தேன். 13 வயதில் எனது தந்தை இறந்தது என் வாழ்க்கையையே புரட்டிப் போட்டது. வசதியான நிலச் சுவான்தாராக இருந்த என் தந்தை இருந்தவரை ஒரு கஷ்டமும் தெரியவில்லை. ஆனால் அவர் இறந்தவுடன், படிப்பறிவில்லாத என் தாயால் எதையும் தக்க வைத்துக் கொள்ள முடியாமல், கடைசியில் 3 ஏக்கர் நிலமும், ஒரு வீடும் மட்டுமே மிஞ்சியது. எத்தனையோ கஷ்டங்களுக்கு நடுவில், நானும் எனது சகோதரியும் மருத்துவப் படிப்பை முடித்தோம். இருந்த நகை நட்டுகள், நிலபுலன் எல்லாவற்றையும் விற்று எங்கள் தாய் எங்களது கல்வியைத் தொடரச் செய்தார். தந்தையின் இழப்பால் நான் உற்சாகம் குன்றியவளாகவே இருந்தேன். பிற மாணவர்களுடன் கேளிக்கைகளில் ஈடுபடாமல் தனித்தே இருந்தேன்.
பாபா அருளால் எனக்கும், என் சகோதரிக்கும் திருமணமானது. மணமானதும் நான் அமெரிக்கா செல்ல நேரிட்டது. ஒன்று மாற்றி ஒன்றாக ஏதோ உபாதைகளால் அவதிப்பட்டேன். மருத்துவச் செலவு அதிகமான அமெரிக்காவில், என் கணவரின் அன்பால் எப்படியோ சமாளித்தோம். தேர்வுக்காகப் படித்தாலும், இந்த உபாதைகளால் என்னால் இங்கே மருத்துவப் படிப்புக்கான தேர்வை எழுத இயலாமலே போனது. மன உளைச்சலுக்காக மருந்துகள் எடுத்துக்கொண்டாலும், அதனால் ஒரு பலனும் இல்லை. படிப்பை விட்டுவிட்டு, குழந்தை பெற்றுக்கொள்ள நினைத்தேன். அதுவும் கைகூடவில்லை. முறையான தொழிலோ, ஆரோக்கியமோ, குழந்தையோ இல்லாமல் இருந்தாலும் பாபா மீதான நம்பிக்கை மட்டும் குறையவில்லை. நிச்சயம் என்னைக் காப்பாற்றுவார் என நம்புகிறேன். 
 
 
3 மாதங்களுக்கு முன், என் கணவர் வேலை இழந்தார். எத்தனையோ இடங்களில் முயற்சித்தும், நேர்முகத் தேர்வுக்கு சென்றும், ஒரு அழைப்பும் வரவில்லை. இந்த நிலையில், ஸாயி 9 வார விரதத்தைத் தொடங்கிய முதல் வாரமே அவரது முந்தைய நிறுவனமே அவரை அழைத்து, உடனடியாக வேலையும் தந்தனர்.
சமீபத்தில் எனது வலது முழங்காலில் அடிபட்டு, சோதனை செய்து பார்த்ததில், பெரிய அளவில் ஒன்றுமில்லை எனத் தெரியவந்தது. ஐஸ் ஒத்தடம் மற்றும் மருந்து மாத்திரைகள் மூலம் சிகிச்சை மேற்கொண்டுள்ளேன். கொஞ்சம் வீக்கம் இருக்கிறது. அதுவும் சீக்கிரமே பாபா அருளால் குணமாகுமென நம்புகிறேன்.
மேலும் பல அனுபவங்கள்:
1. என் உறவினர்கள் கேலி செய்தபோதும், இப்போது நானும் என் சகோதரியும் மருத்துவர்களாக இருக்கிறோம்.
2. கொஞ்சம் தாமதமானாலும், எங்கள் இருவருக்கும் நல்ல கணவர்கள் கிடைத்திருக்கின்றனர். என் சகோதரிக்கு ஒரு குழந்தையும் இருக்கிறது.
3. சென்ற வருடம் 40 நாள் இனிப்பு பூஜை செய்தபோது, பாபா ஏதேனும் ஒரு வடிவில் வருவார் என நம்பினேன். பாபா கோவிலே இல்லாத எங்கள் மாநிலத்தில், அதுவும் அமெரிக்காவில் இது எப்படி நடக்கும் என நினைத்திருந்த வேளையில், சமீபத்தில் ஒரு 20 நாட்களுக்கு முன்னர்தான் அறிமுகமான ஒரு கிருஸ்தவ தம்பதியினர் தங்கள் குழந்தையுடன் வந்து ஒரு பாபா படத்தை அன்பளிப்பாகத் தந்தனர். அவரது குழந்தையும் ஒரு மிட்டாயைச் சாப்பிட்டு மகிழ்ந்தது.
4. கிட்டத்தட்ட ஒரே மாதத்தில் நான்கு முறைகள் பேராபத்திலிருந்து ஸாயி அருளால் காப்பாற்றப்பட்டோம்.
எங்களை பாபா காப்பாற்றுகிறார் எனத் தெரிந்தாலும், எனது தந்தையின் இழப்பை நான் மிகவும் உணர்கிறேன். அவர் இருந்திருந்தால், இவையெல்லாம் நடந்திருக்காதோ என எண்ணுகிறேன். ஆனால், பாபாதான் இப்போது எங்கள் தந்தை. அவர் என்னைக் காப்பாற்றி வருகிறார். உங்களது அன்பையும், ஆசிகளையும் எப்போதும் எங்களுக்குத் தாருங்கள் பாபா என வேண்டிக் கொள்கிறேன்.
ஸாயிராம்.

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.