Friday, May 1, 2015

Shirdi Sai Baba's Grace-Experience Of Sai Devotees - Part 59

ஷீர்டி ஸாயிபாபாவின் பெருங்கருணை
 - ஸாயி அடியார்களின் அனுபவங்கள்
 - பகுதி: 59

( Translated into Tamil   by : Dr. Sankarkumar, USA)
 

அன்பார்ந்த நேயர்களே,
அனைவருக்கும் இந்த‌ வியாழக்கிழமை இனிமையாகவும், பாபாவின் நாளாகவும் அமைய வாழ்த்துகள்.

வேகமாக ஓடும் இந்தக் காலகட்டத்தில், அடுத்த நொடியின் கர்ப்பத்தில் என்ன ஒளிந்திருக்கிறது என்பது சரிவரத் தெரியாது. இது நம் அனைவருக்குமே சாலப் பொருந்தும்.
ஏதேனும் சோதனையில் சிக்கி, என்ன செய்வதெனத் தடுமாறும் வேளையில், நமக்கெல்லாம் தெரிந்த ஒரே வழி, நம் கைகளைக் கூப்பி தெய்வத்தின் செயல்பாட்டினை வேண்டுவது மட்டுமே.
கருணையுள்ள தெய்வம் நம்மை மறப்பது இல்லை; எப்போதும் நம்மையே கவனித்துக் கொண்டிருக்கிறார்; அவரை வேண்டும்போது நம்மிடம் ஓடோடி வருகிறார்.

க‌ட‌ந்த‌ ஓராண்டு காலமா‌க‌ இந்த‌ ஆசீர்வ‌திக்க‌ப்ப‌ட்ட‌ வ‌லைத‌ள‌த்தில் நான் எதையும் ப‌கிர‌வில்லை.அதுவே பாபாவின் விருப்ப‌ம் போலும்! ந‌ம்ம‌னைவ‌ருக்கும் ப‌ய‌ன‌ளிக்கும் வித‌மாக‌ மீண்டும் இந்த‌ சேவையைத் துவ‌க்குகிறேன். என் ந‌லனைக் குறித்து கடிதமெழுதிய அனைவருக்கும் என் நன்றி. பாபா உங்களனைவரையும் ஆசீர்வதிக்கட்டும்.

‌ஸாயி அடியார்களின் ஒருசில அனுபவங்களை இங்கே பகிர்கிறேன். 
 
ஜெய் ஸாயி ராமம்.
 மனிஷா 

1. "ஸாயியுடனான எனது அனுபவம்":


டல்லாஸில் வசிக்கும் நான் ஒரு ஸாயி பக்தன். ஸாயியுடனான எனது அனுபவத்தையும், அவரது அன்பையும் இங்கே சொல்ல விழைகிறேன்.
ஹைதராபாத்தில் ஒரு நடுத்தரக் குடும்பத்தைச் சார்ந்தவன் நான்.

சிறுவயதிலிருந்தே பக்தி திரைப்படங்களைப் பார்க்கும் வழக்கமுள்ள நான், 1983-ல் வெளிவந்த ஸாயிபாபா திரைப்படத்தைப் பார்த்து, அவரைப் பற்றிய லீலைகளை அறிந்து, அவர்பால் காந்தமென ஈர்க்கப்பட்டேன். சில மாதங்களில், புத்தாண்டு வாழ்த்து அட்டை ஒன்றின் மூலம் அவர் என்னிடம் வந்தார். இன்றளவும் நான் அவரது பக்தனாக இருக்கிறேன்.

எல்1 விஸா மூலம் அமெரிக்கா வந்த நான் ஒரு மென்பொருள் அலுவலகலத்தில் பணி புரிந்து வந்தேன். எனது விஸா தீரும் நேரத்தில் ஹெச் 1
விஸாவுக்கு விண்ணப்பித்து, அனுமதிக்காகக் காத்திருந்தேன். பிரச்சினைகள் நேரும்போது பாபா முன்னால் திருவுளச் சீட்டு போட்டு முடிவெடுக்கும் வழக்கம் கொண்ட நான் இது பற்றி வேண்டியபோது, 'அனுமதி கிட்டும்' என பதில் வந்தது.

ஆனால், அனுமதி மறுக்கப்பட்ட செய்தியே எனக்குக் கிட்டியது. பாபா சொன்னபோதும் ஏன் இப்படி நிகழ்ந்தது என நான் குழப்பமடைந்தேன். ஏமாற்றத்துடனும், மீண்டும் திரும்பும் எண்ணமின்றியும் நான் இந்தியாவுக்குக் கிளம்பினேன். ஆனால், கொடுத்த வாக்கை காப்பாற்றுவார் என‌ பாபா மீது கொண்ட நம்பிக்கை மட்டும் குறையவில்லை. இந்தியாவில் மீண்டும் வேலைக்குச் சேர்ந்து ஓராண்டுக்குப் பின்னர், ஹெச் 1பி விஸாவுக்கு உள்ளூரிலிருக்கும் நிறுவனம் மூலம் விண்ணப்பித்தேன். கிடைப்பது கஷ்டம் என நன்றாகத் தெரிந்தபோதும் பாபாவின் கருணையால் வெகு சுலபமாக அது எனக்குக் கிடைத்தது. தற்போது அமெரிக்காவில் நல்லதொரு வேலை தேடிக்கொண்டிருக்கிறேன். அவரது கருணையால் அதுவும் கிடைக்கும் என நம்புகிறேன். இந்தியாவில் இருந்த நாட்களில் அங்கு ஒரு வீடு கட்டினேன். ஒருவேளை அதற்காகத்தான் பாபா என்னை இந்தியாவுக்கு அனுப்பினார் என நம்புகிறேன்.

பொறுமையும், நம்பிக்கையும் கொண்டு, நமக்கு எப்போது எதைத் தர வேண்டும் என பாபா
நன்கறிவார் என்பதை நன்குணர்ந்து, அவரை வேண்டுவதே நல்ல வழி என அனைவரையும் வேண்டுகிறேன். ஜெய் ஸாயிராம்.

 
2. "பாலகிருஷ்ணர்' ரூபத்தில் என் கனவில் பாபா வந்து என்னைக் கட்டியணைத்தார்!"

அன்பு மனிஷா'ஜி,
இந்தத் தளத்தின் மூலம் பாபாவின் லீலைகளைப் பாரறியச் செய்யும் தங்களை வாழ்த்தி, 'நீங்கள் பாபாவால் ஆசீர்வதிக்கப்பட்டவர்' எனவும் சொல்லிக் கொள்கிறேன். பாபாவின் கருணையால் எனது இந்த அனுபவங்களை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.

வார்த்தைகள் கிடைக்காமல், அவரது லீலைகளை எங்கிருந்து சொல்லத் துவங்குவது என திகைக்கிறேன். எனது எல்லாப் பிரார்த்தனைகளௌக்கும் அவர் செவி சாய்த்திருக்கிறார். என் அனுபவங்களை இங்கே பகிர்வது இது மூன்றாவது முறை.

எனது இன்ப துன்பங்கள் அனைத்திலும் ஒரு தூணாக நின்று என்னைக் காப்பது பாபாவே. நான் அவது ஒரு எளிய பக்தை. இன்று காலை நான் கண்ட கனவு இது!

பாபாவைக் கட்டியணைப்பது அல்லது அவர் என் தலையில் கை வைத்து ஆசீர்வதிப்பது போன்ற ஏதாவது ஒன்றை நான் மிகவுமே வேண்டியிருந்தேன். ஆனால் அப்படி எதுவுமே நிகழாததால் ஏன் இப்படி இந்த ஆசையை மட்டும் பாபா நிறைவேற்றவில்லை என நான் வருத்தமடைந்தேன். ஆனால் இன்று அதுவும் பூர்த்தியானது.

கிருஷ்ண‌ர் மீதும் எனக்கு பக்தி உண்டு. நேற்றிரவு படுக்கச் செல்கையில் பல்வேறு காரணங்களால் நான் மன அமைதி குன்றியிருந்தேன். அதிகாலை நேரத்தில் ஒரு சிறுவன் அழுதுகொண்டிருப்பது போலவும், என்னிட வர வேண்டுமெனச் சொல்வது போலவும் கனவு கண்டேன். அருகில் சென்றபோது சுருட்டை முடி, கரிய நிறம், ஒளிவீசும் கண்கள் என‌ அவனது அங்க அடையாளங்கள் எல்லாம் பாலகிருஷ்ணரை ஒத்திருந்தது.
அவனைக் கட்டியணைத்ததுமே அவனது அழுகை நின்றுவிட்டது! நானும் அவனும் ஒருவரை ஒருவர் இறுகத் தழுவிக் கொண்டோம்.

கனவு கலைந்து எழுந்ததும் கிளம்பும் மும்முரத்தில் இந்தக் கனவைப் பற்றி மறந்து போனேன். அலுவலில் இருந்தபோது, மீண்டும் இது பற்றிய நினைவு வந்தது.வந்தது கிருஷ்ணனா அல்லது எனது பிரமையா எனச் சந்தேகம் எழுந்தது. வழக்கப்படி அவர் முன் சீட்டு போட்டுக் கேட்டபோது 'வந்தது நான்!' எனப் பதில் வந்தது. எனது மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. இன்று வியாழக்கிழமையும் கூட!

மிகுந்த மகிழ்ச்சியுடன் இன்றைய நாள் அமைந்தது மாலை பாபா கொவிலுக்குச் சென்று ஆரத்தியில் கலந்துகொண்டேன். ஷீர்டியில் இருப்பது போலவும், அவரது தாயன்பை உணர்வது போலவும் மகிழ்ந்தேன். என் கூடவே இருந்து, எனக்கு எல்லாமாகவும் இருந்து அவர் காட்டும் அன்புக்கு நான் மிகவும் கடப்பாடு உடையவள். நான் உங்களை மிகவும் நேசிக்கிறேன் பாபா. உங்கள் அடியார் அனைவரையும் இதேபோல ஆசீர்வதியுங்கள். நான் எழுதியதில் ஏதேனும் குறையிருப்பின் மன்னிக்கவும். 
ஜெய் ஸாயிராம்.


3. "ஒவ்வொரு நொடியும் ஸாயி நம்மைப் பார்க்கிறார்; கேட்கிறார்!" - ஸாயி மஹராஜின் மற்றுமொரு லீலை.

ஜெய் ஸாயிராம் , மனிஷா'ஜி.
என் தந்தையின் சார்பாக ஸாயி மஹராஜின் ஒரு அற்புதத்தை இங்கு பகிர்ந்து கொள்கிறேன். நமது அன்றாட ஒவ்வொரு செயல்களிலும் ஸாயி எவ்வாறு உதவி புரிந்து காப்பாற்றுகிறார் என்பதை இது விளக்கும்.

எங்களது சொந்த ஊரில் இருக்கும் வீட்டுக்கு என் தந்தை 3 மாதங்களுக்கு முன் சென்றிருந்தார். இவ்வாறு செல்லும்போதெல்லாம், வீட்டில் இருக்கும் சிறு சிறு மராமத்து வேலைகளைப் பழுதுபார்ப்பது வழக்கம். இந்த முறை, கிணற்றிலிருந்து தண்ணீர் உறிஞ்சும் பம்ப் பழுதாகிப் போனது. பழுது பார்ப்பவர் வந்து பார்த்து, ஆழ்துளை இன்னும் 100 அடிக்குச் செல்ல வேண்டும், மோட்டாரையும் சரி செய்ய வேண்டுமெனச் சொல்லி 8000 முதல் 1000 வரை செலவாகும் எனச் சொன்னார்.

எதிர்பாராது வந்த இந்த செலவினத்தால் வருந்திய என் தந்தை 'ஏனிப்படி நிகழ்கிறது? இதை உங்களால் 10000 ரூபாய் செலவில்லாமல் தீர்க்க முடியாதா பாபா?' என உரக்கச் சொல்லிவிட்டு, மறுநாள் உபகரணங்களோடு வரும்படி மெக்கானிக்கை அனுப்பி வைத்தார்.

மறுநாள் அதிகாலையிலேயே மெக்கானிக் வந்துவிட்டார். எனது தந்தை ஏதோ நினைவில் மோட்டாரை 'ஆன்'செய்ய அதுவும் ஒரு குறையில்லாமல் வேலை செய்தது மட்டுமின்றி, தண்ணீரையும் நன்றாக உறிஞ்சிக் கொடுத்தது. என் தந்தையின் அறைகூவலை பாபா கேட்டு நிவர்த்தி செய்தார். சில நாட்கள் கழித்துச் சென்றபோதும் , நன்றாகவே மோட்டார் வேலை செய்கிறது!

நம் அனைவரின் வேண்டுதல்களையும் ஒவ்வொரு நொடியும் பாபா கேட்கிறார். நமக்கு உதவியும் புரிகிறார். அவரது கருணை எப்போதும் நம்முடன் இருக்கட்டும். ஜெய் ஸாயி ராம்.

ரேவதி.


4. "பாபாவின் அன்பு பற்றிய அனுபவம்"


2008-ல் வேலை நிமித்தமாக நான் ஜெர்மனி சென்றபோது, ஃப்ரான்க்ஃபர்ட்டில் பாபா ஆலயம் இருப்பதாக அறிந்தேன். அயல்நாட்டில் இருக்கும் ஆலயத்தைக் காண ஆவல்கொண்டு அங்கு சென்று உள்ளே நுழைந்த‌தும், மிகப் பெரிய பாபா உருவச்சிலையைக் கண்டு அவரே எதிரில் இருப்பதாக உணர்ந்தேன்.

சுமார் 2 மணி நேரம் நடந்த பாபா ஆரத்தியில் கலந்து கொண்டது மிகப் பெரிய தெய்வானுபவம். அதுமுதல், ஒவ்வொரு வியாழக்கிழமையும் அங்கு செல்வதை வழக்கமாகக் கொண்டேன். பாபாவை மனப்பூர்வமாக வேண்டினேன். ஒருமுறை, மிகவும் பின்னால் உட்கார்ந்திருந்த என்னை அழைத்து பாபாவின் ஆரத்தியில் பங்குகொள்ளுமாறு, அந்தக் கோவில் நிறுவனர் அழைத்து, பாபாவே அப்படிக் கேட்டுக் கொண்டதாகச் சொன்னதும், பாபாவின் கருணையை எண்ணி நெகிழ்ந்து போனேன். இதேபோல மேலும் சில முறை நிகழ்ந்தது. பாபா என்னைக் கவனிக்கிறார்; எனக்காக இருக்கிறார் என்னும் நம்பிக்கை மேலும் உறுதியானது.

எனது பிரச்சினைகளுக்கெல்லாம் விடை கிடைக்கத் தொடங்கியது. அவர் என் கூடவே இருப்பதை உணர ஆரம்பித்தேன். ஏதேனும் சோதனைகள் வந்தாலும் அதுவும் என் நன்மைக்கே என நம்புகிறேன். நான் ஜெர்மனியில் இருந்த 2 ஆண்டுகளிலும் ஒவ்வொரு வியாழக்கிழமையிலும் கோவிலுக்குத் தவறாது சென்று வந்தேன்.

இப்போது நான் அமெரிக்காவில் இருக்கிறேன். பாபா மீதான நம்பிக்கை தற்போது பத்து மடங்காக அதிகரித்துள்ள‌து. என் கூடவே இருந்து எப்போது சரியான வழியையே அவர் காட்டி வருகிறார். அவர் மீதிருக்கும் நம்பிக்கை அசைக்க முடியாதது.ஓம் ஸாயிராம்.

(Uploaded by : Santhipriya)

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.