Thursday, May 28, 2015

Shirdi Sai Baba's Grace-Experience Of Sai Devotees - Part : 65

ஷீர்டி ஸாயிபாபாவின் 
பெருங்கருணை 
===================
- ஸாயி அடியார்களின் 
அனுபவங்கள் - பகுதி : 65

  ( Translated into Tamil   by : Dr. Sankarkumar, USA)


ஸாயிராம்.
அனைவருக்கும் இந்த‌ வியாழக்கிழமை இனிமையாகவும், பாபாவின் நாளாகவும் அமைய வாழ்த்துகள்.
த‌ம‌து அன்பான‌ அணைக்கும் க‌ர‌ங்க‌ளால் அடியார்க‌ளைக் காக்கும் பாபாவின் அற்புத‌ லீலைக‌ளில் சில‌வற்றை இங்கே அளிக்கிறேன்.
ஜெய் ஸாயிராம்.
மனிஷா

1. 'ஸாயிபாபா என் வாழ்வில்!'::

தம் அடியார்களின் வாழ்நாள் முழுதும் அன்புடன் காப்பவர் ஸாயி!
என் வாழ்விலும் அவர் வந்த நாள் முதல் ஒவ்வொரு நிகழ்விலும் கூடவே இருந்திருக்கிறார். நாம் யார்? எங்கே செல்கிறோம்? எனவும் நமக்கு புரிய வைக்கிறார்.
நான் செய்த, அனுபவிக்கும் கர்மா என்ன என்பதை ஸாயி நினைவூட்டுகிறார்.

முதலில் நம்மை அவரது பாதங்களின் கீழே இருக்கச் செய்து, அவர் மீது பற்றை ஏற்படுத்தி, அதன் பின் தன் வேலையைத் துவங்குகிறார். என் வாழ்வில் அப்படி நிகழ்ந்த அற்புதங்கள் ஏராளம்.

என் சொந்த மகிழ்ச்சிக்காக பல்வேறு பழக்க வழக்கங்களில் ஈடுபட்டிருந்த என்னை, அவர்பால் ஈர்த்து, கொஞ்சம் கொஞ்சமாக நம்பிக்கையை வளர்த்தாலும், என் பழக்கங்களை விடுவேனா எனத் தெரியாமல் இருந்தேன்.

இதனால் நான் பட்ட சிரமங்களும் அதிகம். விவாகரத்து வரை சென்றுவிட்டது. அப்போதுதான், 2008, ஆகஸ்ட் 21 கிருஷ்ண ஜெயந்தி அன்று, என் பழக்கங்களை அடியோடு விட்டொழித்து, ஸாயியை வேண்டத் தொடங்கினேன்.

புத்துணர்ச்சி அடைந்த நான் ஸாயி மேல் அன்பு பூண்டு, அவரது உபதேசங்களில் ஈடுபட்டு, சென்னை மைலாப்பூரில் இருக்கும் பாபா ஆலயத்திற்கு செல்ல ஆரம்பித்தேன். என் வேலையின் அடுத்த படிக்குச் செல்ல மிகவுமே கஷ்டப்பட்டேன். எல்லாவற்றிற்கும் நேரம் மிகவும் முக்கியம் என எனக்கு பாபா புரிய வைத்தார். சரியான நேரத்தில் என் பதவியையும் உயர்த்தினார். செல்வம் என்றால் என்ன எனக் காட்டினார். அனைத்திலும் அவரது இருப்பைக் காட்டினார்.

ஆனாலும், எனது திமிரினால் வேலையில் சில தொந்தரவுகள் வரவே, அதன் மூல காரணத்தை அறியாமல், எனது வேலை, செல்வம், பெயர் அனைத்தையும் இழந்தேன். ஆயினும் ஸாயி மீது கொண்ட அன்பை மட்டும் துறக்கவில்லை. 2013 வரை இந்த நிலை தொடர்ந்தது. மீண்டும் எனது வேலையைத் தொடர விரும்பினேன். ஸாயி என்னைக் கவனித்துக் கொண்டிருக்கிறார் எனத் தெரிந்தபோதிலும், இதுவரை ஷீர்டிக்கு செல்லவோ, அல்லது 9 வார விரதம் கடைபிடிக்கவோ இல்லை. ஒரு சில பழக்கங்களினால், மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டேன். அப்போதுதான் , ஸாயி என்னை ஆட்கொண்டார். எனது கனவில் வந்து, எனது அவயவங்களைத் தனித்தனியே எடுத்து சுத்தம் செய்து, என் உடல் முழுதும் உதியால் தடவி எனக்குப் புத்துண‌ர்ச்சி அளித்தார்.

மறுநாள் காலை எழுந்து ஏதேனும் தடயங்கள் இருக்கின்றனவா எனத் தேடினேன். பாபா ஆலயம் சென்று, எனது கர்மாவை நீக்கியதற்கு நன்றி கூறினேன். ஷீர்டி செல்லும் எண்ணம் அப்போது உதித்தது. அதே சமயம், அங்கே ஆலயத்தில் யாரோ ஒருவர் ஷீர்டி செல்வதற்கான துண்டு பிரசுரங்களை கொண்டுவந்திருந்தார். அதில் 'ஷீர்டிக்கு வா' எனும் வாச‌கம் எழுதப்பட்டிருந்தது! எனக்காகவே எழுதப்பட்டிருப்பதாக உணர்ந்தேன். உடனே எனது விரதத்தைத் தொடங்கினேன். அடுத்த 3-வது வாரம் ஷீர்டியில் இருந்தேன்!

ஆரத்தி தரிசனம் கிடைக்குமோ என எண்ணினேன். அதுவும் ஒரு குறிப்பிட்ட ஆரத்தி பாட்டை ஆலயத்தில் அமர்ந்திருக்கும் நேரத்தில் நான் கேட்கவேண்டும் என எண்ணினேன். அதே போலவே நிகழ்ந்தது.

அதன் பிறகு திரும்பி வந்ததும், எனக்கு நான் விரும்பிய இடத்திலேயே நல்லதொரு வேலையும் கிடைத்தது. எனக்கான திட்டங்களை அவர் தயாராக வைத்திருக்கிறார் எனப் புரிகிறது. என்னை ஒரு நல்ல மனிதப் பிறவியாக வைக்க வேண்டும் என வேண்டுகிறேன். எனது தேவைகள் எல்லாம் பூர்த்தியானதும், அவரது பாதங்களில் சரணடைய அவர் அருள வேண்டும். பொறுமையும், நம்பிக்கையும் கைக்கொண்டால், அவர் அனைத்தையும் நடத்தி தருவார். நிகழ்வதெல்லாம் உன் அருளாலேயே, ஓ ஸாயிநாதா!
ஜெய் ஸாயிநாத் ஓம் ஸாயி நமோ நமோ ஸ்ரீ ஸாயி நமோ நமோ ஜெய் ஜெய் ஸாயி நமோ நமோ ஸத்குரு ஸாயி நமோ நம:!


2. பாபாவின் ந‌ல்லாசி' ::

பாபாவின் ந‌ல்லாசிக‌ள் என‌க்குக் கிடைத்திருப்ப‌தாக‌ உண‌ர்கிறேன். ஆம், அவ‌ர் ஒன்றும் அற்புத‌ங்க‌ள் நிக‌ழ்த்துவ‌தில்லை. அவ‌ர‌து செய‌ல்பாடுக‌ள் அனைத்துமே ந‌ல்லாசிக‌ள்தாம்! த‌ம‌து அன்பினால் அவ‌ர் ந‌ல்லாசி வ‌ழ‌ங்குகிறார். அவ‌ற்றை எழுத‌ வார்த்தைக‌ள் போதாது.
அன்று ஃபிப்ர‌வ‌ரி மாத‌ம் 4-ம் தேதி, அதிகாலை நேர‌ம். ஷீர்டியில் சிம்மாச‌ன‌த்தில் அம‌ர்ந்திருக்கும் பாபா உருவை என் க‌ன‌வில் க‌ண்டேன். வெள்ளை சால்வை ஒளிவீச‌ப் போர்த்தியிருந்தார். செந்தூர‌த் தில‌க‌ம் நெற்றியில் மின்ன‌ அவ‌ர் அம‌ர்ந்திருந்த‌ காட்சியை இன்றும் என்னால் ம‌ற‌க்க‌ முடியாது.

அந்த‌ அனுப‌வ‌த்துட‌னே வேலைக்குச் சென்ற‌தும், த‌ங்க‌ளை வ‌ந்து ச‌ந்திக்குமாறு வேலைவாய்ப்புப் பிரிவிலிருந்து கூற, என்னைப் போல‌ தாற்காலிக‌ப் ப‌ணியாள‌ர் ப‌ல‌ரை வேலை நீக்க‌ம் செய்திருந்த‌ப‌டியால் சற்றே பயத்துடன் அங்கே ம‌திய‌ம் சென்றேன். ஆனால், ஆச்ச‌ரிய‌ப்ப‌டும் வித‌மாக‌, முழுநேரப் ப‌ணியாள‌ராக‌ சேர‌ விருப்ப‌மா என‌க் கேட்ட‌தும், ம‌கிழ்ச்சியுட‌ன், 'ஆம்' என‌த் த‌லையாட்டினேன்.

அத‌ன்பின், என‌து வேலை விவ‌ர‌ங்க‌ளைப் ப‌ற்றிக் கூறிவிட்டு, ச‌ம்ப‌ள‌ம் எவ்வ‌ள‌வு எதிர்பார்க்கிறாய் என‌க் கேட்டுவிட்டு, நான் ப‌தில் சொல்லும் முன்பே அவ‌ரே ஒரு தொகையைச் சொன்ன‌தும் இன்னும் ம‌கிழ்ச்சி அடைந்தேன். ஏனெனில் நான் சொல்ல‌ நினைத்த‌தை விட‌வும் கூடுத‌லாக‌ அது இருந்த‌து!

2 நாட்க‌ளுக்குப் பிற‌கு, என‌து மேலாள‌ர் என்னை அழைத்து, நிரந்தர வேலை, ச‌ம்ப‌ள‌த் தொகை ப‌ற்றி த‌ன‌க்கு ஒன்றும் யாரும் சொல்ல‌வில்லை என்றும், த‌ன‌க்கு இதில் ச‌ம்ம‌த‌மில்லை என்றும் கூற‌, என்ன‌ செய்வ‌தென‌த் தெரியாம‌ல் பாபாவை வேண்டினேன். மேலும் 2 நாட்க‌ள் சென்ற‌தும், என‌து மேலாள‌ர் வ‌ந்து, அவ‌ர‌து உத‌வி மேலாள‌ர் சிபாரிசு செய்த‌ப‌டியால், தானும் இத‌ற்கு ச‌ம்ம‌திப்ப‌தாக‌ச் சொன்ன‌தும், என‌க்காக‌ பாபா ஒரு ந‌ல்ல‌வ‌ரை அனுப்பி வைத்த‌த‌ற்கு ந‌ன்றி கூறி வ‌ண‌ங்கினேன். இப்போது நானும், என் தோழியும் [உத‌வி மேலாள‌ர்] ஒன்றாக‌ வேலை செய்யும் வாய்ப்பு கிடைத்த‌து. த‌ன‌க்கு ம‌ட்டுமின்றி, என‌க்காக‌வும் இதை அவ‌ர் வேண்டிய‌தாக‌ச் சொன்ன‌போது, என் ம‌கிழ்ச்சிக்கு அள‌வே இல்லை. இப்ப‌டித்தான் ந‌ம்மைய‌றியாம‌லேயே ப‌ல‌ நிக‌ழ்வுக‌ள் ந‌ட‌க்கின்ற‌ன‌.

இர‌ண்டு ஆண்டுக‌ளுக்கு முன்,ஒரு சில‌ சொந்த‌க் கார‌ண‌ங்க‌ளால் ம‌ன‌வ‌ருத்த‌ம் கொண்டிருந்த‌ நான் என‌து ம‌ல்லிகைச் செடிக‌ளுக்கு நீரூற்ற‌ ம‌ற‌ந்து போனேன். இலைக‌ளெல்லாம் உதிர்ந்து, கிளைக‌ள் முறிந்துகிட‌க்க‌ என் பிழையை உண‌ர்ந்தேன். என் க‌வ‌லைக‌ள் அவ‌ற்றை பாதிக்க‌க்கூடாது என‌ நினைத்து, அவ‌ற்றுட‌ன் அன்பாக‌ப் பேசினேன். உதியை நீரில் க‌ல‌ந்து செடிக‌ளுக்கு ஊற்றினேன். என்னை ம‌ன்னிக்குமாறு அன்புட‌ன் வேண்டினேன். என் வேண்டுகோளுக்குச் செவி சாய்த்து அவை மீண்டும் துளிர்த்து வ‌ர‌க் க‌ண்டு மிக‌வும் ம‌கிழ்ந்தேன். அவை பூத்துக் குலுங்கும்போது, அவ‌ற்றைத் தொடுத்து ஒரு மாலை க‌ட்டி பாபாவுக்கு ச‌ம‌ர்ப்பிக்க‌ நினைக்கிறேன்.

ச‌த‌கோடி ப்ர‌ணாம் ஸாயிபாபா.


3. 'ஐ.டி. பெண்கள் - நடுத்தர வகுப்பு' ::

நடுத்தர வகுப்பைச் சேர்ந்த நான் தகவல் தொடர்பு சம்பந்தப்பட்ட மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்கிறேன். நன்றாகச் சம்பாதித்தாலும், ஏற்கெனவே இருந்த கடன் தொல்லையால் குடும்பத்தைச் சமாளிக்க கடினமாக இருந்தது. ஒவ்வொரு மாதமும் இதற்காக மிகவுமே சிரமப்பட்டேன். வெளிநாடு சென்று வேலை பார்க்க எனது நிறுவனம் என்னை அனுப்பத் தீர்மானித்திருந்த போதிலும், அதுவும் ஏதோ காரணங்களால் தடையாகிப் போனது.

ஸாயி நவ வார விரதம் தொடங்கினேன். கேளம்பாக்கத்தில் இருக்கும் பாபா ஆலயம் சென்று அங்கிருந்த துவாரகாமாயியை வணங்கினேன். அவரது ஒளி மிகுந்த படத்தின் முன் சென்று அவர் பாதங்களில் என் தலையை வைத்தேன். அதே சமயம், எனது அலைபேசி ஒலிக்க, அதில் எனது மேலாளர் உடனே ஒரு வேலை வாய்ப்பு வந்திருப்பதாக் கூறி என்னை வரச் சொன்னார். அதன் பின் அனைத்தும் சுமுகமாக அடந்து இங்கிலாந்துக்கு வந்து சேர்ந்தேன்.

அந்த நொடியை என்னால் மறக்கவே முடியாது. தம் அடியார் படும் துயர்களைத் தீர்க்க பாபா எப்போதும் தயாராக இருக்கிறார். இதோ நான் வணங்கிய அந்த கேளம்பாக்கம் துவார‌காமாயி படத்தை இத்துடன் இணைத்திருக்கிறேன். 100% அவரை நம்புங்கள் .

ஓம் ஸாயி ஸமர்த்த.


4. 'எனது சகோதரன்' ::

என் சகோதரனுக்கு 12-வது வகுப்பு தேர்வில் இன்னும் ஒரே ஒரு தேர்வு மட்டுமே எழுத வேண்டி இருந்தது. நீண்ட நாட்களுக்குப் பிறகு இதை எழுத அவன் நிச்சயித்திருந்ததால், சற்று பயந்தான்.வழக்கமாக இது போன்ற நேரங்களில் நாங்கள் சென்று கேட்கும் www.யுவர்ஸாயிபாபா.காம் என்னும் தளத்திற்குச் சென்று, பரிட்சை முடிவு எப்படி இருக்கும் எனக் கேட்க, 'பயப்படாதே. பரிட்சையில் தேர்வு பெறுவாய்' என வந்தது. இப்படி வெளிப்படையாக நேருக்கு நேர் பேசுவது போல வந்த பதிலைக் கண்டு மிகவும் ஆச்சரியம் அடைந்தோம். அதே நம்பிக்கையில் தேர்வும் எழுதி வந்தான். ஓரிரு மாதங்களுக்குப் பின் தேர்வு முடிவுகள் வந்தபோது, பாபா சொன்னது போலவே, அவர் தேர்வில் வெற்றி பெற்றுவிட்டான்! ஒரு அன்னை போல எங்களைக் காக்கும் பாபாவின் அன்பு மகத்தானது. இதை இங்கே எழுதியதில் ஏதேனும் குற்றம் இருந்தால் மன்னிக்குமாறு பாபாவை வேண்டுகிறேன்.

என‌து எல்லா நேர‌ங்க‌ளிலும் பாபா என்னுட‌ன் இருக்கிறார். சிறுவ‌ய‌து முத‌லே அவ‌ர‌து ப‌ட‌த்தை நான் எப்போதும் என்னுட‌னேயே வைத்திருப்பேன். ஒரு பென்சில் ட‌ப்பாவில் அதை வைத்து, ப‌டிக்கும் நேர‌த்தில் அதை என் ப‌டுக்கையில் வைத்திருப்பேன். அது த‌வ‌றா என‌க் கூட‌த் தெரியாது. ஒருநாள் பாபா என் க‌ன‌வில் வ‌ந்தார். அவ‌ர் வ‌ந்த‌ அதே தோற்ற‌த்திலான‌ ப‌ட‌த்தை இங்கே இணைத்திருக்கிறேன். த‌ன் கையை த‌லை மீது வைத்த‌ப‌டி ஒருக்க‌ளித்துப் ப‌டுத்திருந்த‌ நிலையில், என்னைப் பார்த்து சிரித்து, மெதுவான‌ குர‌லில், 'தெய்வீக‌ப் பொருட்க‌ளைப் ப‌டுக்கையின் மீது வைக்க‌க்கூடாது' என்றார். திடுக்கிட்டு எழுந்த‌ நான் பாபாவுட‌ன் பேசிய‌தை எண்ணி மிக‌வும் ம‌கிழ்ந்தேன். இப்ப‌டித்தான் அவ‌ர் என்னை வ‌ழி ந‌ட‌த்துகிறார். என்னுட‌ன் எப்போதும் இருப்ப‌த‌ற்கு மிக்க‌ வ‌ந்த‌ன‌ம் பாபா!


4. 'க‌ண் நோயால் அவ‌ஸ்தை' ::

க‌ட‌ந்த‌ 4 ஆண்டுக‌ளாக‌க் க‌ண் நோயால் அவ‌திப் ப‌ட்டிருந்தேன். இரு முறை அறுவை சிகிச்சையும் ந‌ட‌ந்த‌து. ஆயினும் ஒன்றும் குண‌மாக‌வில்லை. பாபாவை மிக‌வும் வேண்டினேன். ஃபிப்ர‌வ‌ரியில் ஷீர்டி சென்று வ‌ந்தேன். 'ஆஸ்க் ஸாயிபாபா.காம்' எனும் த‌ள‌த்தில் பாபாவைக் கேட்ட‌போது, 'உன‌து துய‌ர‌ம் ஒரு முடிவுக்கு வ‌ரும். மோர் நைவேத்திய‌ம் செய். அத‌ன் பிற‌கு பார்!' என‌ வ‌ந்த‌து. உட‌னேயே அதுபோல் செய்தேன். அடுத்த‌ நாளே எனது ம‌க‌ன் என்னிட‌ம் வ‌ந்து ஒரு த‌லை சிற‌ந்த‌ க‌ண் ம‌ருத்துவ‌ர் வ‌ந்திருப்ப‌தாக‌வும், சென்னையில் அவ‌ரைச் ச‌ந்திக்க‌ ஏற்பாடு செய்வதாக‌வும் சொன்னான். அதைக் கேட்ட‌தும் நான் அழ‌த் தொட‌ங்கினேன். என‌து க‌ண் நோய் தீர‌ வ‌ழிமுறைக‌ளை பாபா துவ‌க்கி விட்டார் என‌ உண‌ர்கிறேன்.

ஸாயிராம்.

(Uploaded by : Santhipriya)    

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.