Friday, July 13, 2012

Shirdi Sai Baba's Grace-Experience Of Sai Devotees-Part 44




(Translated into Tamil by Sankarkumar) 


ஸாயிராம்.
அனைவர்க்கும் இனிய பாபா நாள் வாழ்த்துகள்.
பல்வேறு ஸாயி அடியார்களின் அனுபவங்களை இந்தப் பதிவில் வலையேற்றுகிறேன். ஒவ்வொரு அனுபவமும் விசேஷமானவை என்றாலும், ஒவ்வொன்றுமே பாபா தனது குழந்தைகளின் மீது கொண்டிருக்கும் அன்பினையும், எவ்விதம் பாபா அவர்களுக்கு உதவி, வழிநடத்தி, அவர்களைக் காப்பாற்றினார் என்பதையும் செவ்வனே விளக்குகிறது. மேலதிகமாக வேறேதும் சொல்லாமல், இதோ, அந்த அனுபவங்கள் இங்கே. 
ஜெய் ஸாயி ராம்.
 மனிஷா 
 
 
ஷீர்டி ஸாயி பாபாவே எனக்கு எல்லாமும்!
எனது உறவினரின் மனைவி மூலமாக பாபா எனது வாழ்வில் வந்தார். இதற்காகாக அவருக்கு நான் என் வாழ்நாள் முழுதும் கடைப் பட்டுள்ளேன். 2011-ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், அவர் என்னிடம் பாபாவை உறுதியாகப் பிடித்துக்கொள்ளும்படியும், அப்படிச் செய்தால் பாபா எனக்கு எல்லா வழிகளிலும் உறுதுணையாக இருப்பார் என வலியுறுத்தினார். 'பாபாவின் கருணையை ஓதும் தினசரி தியானம்' என்னும் புத்தகத்தையும் அனுப்பி வைத்தார். 24.08.2011, வியாழக்கிழமைக்கு ஓரிரு தினங்களுக்கு முன்னர் அது என் கையில் கிடைத்தபோதிலும், நான் உடனேயே அதனைப் படிக்கத் தொடங்கவில்லை. பாபா மீது இன்னமும் வலுவான நம்பிக்கையோ, பக்தியோ போதுமான அளவில் வராததே காரணம்.
பாபா நிகழ்த்திய அற்புதங்களைப் பற்றி, அவரது அடியார்களிடமிருந்து கேட்டுத் தெரிந்துகொண்டபின், செப்டெம்பர் மாதம் 1-ம் தேதியன்று விநாயகர் சதுர்த்தியும் சேர்ந்து வருவதால், அன்று முதல் பூஜையைத் தொடங்கலாம் என முடிவு செய்தேன். அந்த ஒரு வாரமும் அந்தப் புத்தகத்தைப் புரட்டிப் பார்த்து, அதில் இருந்த அழகிய பாபா படங்களைப் பார்த்து மகிழ்ந்தேன். ஒரு நல்ல படம் கிடைத்தவுடன் பூஜையை ஆரம்பிக்கலாம் என நினைத்தேன். அதைப் பற்றியே நினைத்துக் கொண்டு, புத்தகத்தைப் புரட்டியபோது, 'பைண்ட்' செய்யப்பட்டிருந்த அதிலிருந்து, பாபா படம் அடங்கிய ஒரு தாள் மட்டும் தனியே நழுவி, என் கையில் கிடைத்தது. அதுவரை, பலமுறை அந்தப் புத்தகத்தைப் புரட்டியிருக்கிறேன். எல்லாப் பக்கங்களும் ஒழுங்காகவே இருந்தன. இன்று இப்படி நிகழ்ந்தது பாபாவின் கருணையே என உணர்ந்தேன். இருந்தும், இன்னும் சந்தேகம் என்னுள் இருக்கவே, எனது அண்ணியிடம், அவர் இப்படித் தனியே ஒரு படத்தை வைத்து அனுப்பினாரோ எனக் கேட்டேன். ஆனால், அவரோ அப்படி ஏதும் செய்யவில்லை என்றும், கடையிலிருந்து வாங்கியதும், நேரே எனக்கு அனுப்பி வைத்ததாகவும் தெரிவித்தார். சந்தேகம் தீர்ந்து, பாபா என் மீது காட்டிய கருணையில் மகிழ்ந்தேன். இந்தப் படமே இப்போது என் பூஜையறையை அலங்கரிக்கிறது.
அடுத்த அதிசயம் அல்லது கருணை என்னவென்றால், 2011, ஆகஸ்ட்டில் எனது தெருவில் இருந்த நாய் ஒன்று என்னைக் கடித்து விட்டது. நான் 'சைக்கிளில்' செல்லும் போதெல்லாம், இது என்னைத் துரத்தும். செப். 9 அன்று, நான் பாபாவிடம், 'இன்னும் எத்தனை நாளைக்கு இந்த நாயின் ரௌத்ரம் என் மீது இருக்கும் பாபா?' என முறையிட்டேன். அன்று மதியம், ஒரு நாய் என்னைத் துரத்துவது போலவும், அப்போது வெண்தாடி அணிந்த ஒருவர் அந்த நாயின் காலைப் பிடித்துத் தூக்கி, 'இனி இது போலச் செய்யக்கூடாது' என அதட்டுவதுபோல ஒரு கனவு கண்டேன். அன்று முதல் அந்த நாய் என்னைத் துரத்துவதை நிறுத்தி விட்டது! இது எப்படி நிகழ்ந்ததென எனக்குப் புரியவில்லை. என்னைப் பார்த்ததும், அது தன் முகத்தை வேறு பக்கமாகத் திருப்பிக் கொள்ளும்!
இது பாபாவின் கருணையே என்பதை நான் புரிந்திருக்க வேண்டும்; ஆனால், ஒரு நாள் காலை வேளையில் நான் பல் துலக்கிக் கொண்டிருந்தபோது, 'எப்போது என் கனவில் வந்து ஆசீர்வதிப்பீர்கள், பாபா?' என நினைத்தேன். அன்றும் அந்த நாய் என்னைச் சீண்டவில்லை. தேகப் பயிற்சி செய்து திரும்பியதும், எனது பெற்றோரிடம் இது பற்றிச் சொல்லி, இது பாபாவின் செயலா எனத் தெரிந்துகொள்ள விரும்பிக் கேட்டேன். அப்போது, உறங்கிக் கொண்டிருந்த எனது அண்ணன் மகள், விழித்துக்கொண்டு, என்னைப் பார்த்து, 'உங்க கனவில் பாபா வந்தது உங்களோட அதிர்ஷ்டம்' எனச் சொன்னாள். அப்போதுதான், காலையில் நான் கேட்ட கேள்விக்கான பதிலை பாபா இப்போது தந்தார் எனப் புரிந்து கொண்டேன். மிகவும் சந்தோஷமாக இருந்தது. இப்போதும் கூட, அந்த நாய் என்னைத் தொந்தரவு செய்வதில்லை. இனி எந்த ஒரு நாயும் என்னைத் தொல்லை செய்யாது எனவும் உணர்ந்து கொண்டேன்..... எல்லாம் பாபாவின் கருணையே!
ஓம் ஸாயி ராம்.


போக்குவரத்து அதிகாரி
பாபாவின் இனிய குழந்தைகளுக்கு என் வாழ்த்துகள்! பாபா உங்களை மிகவும் நேசிக்கிறார். இப்போது நான் சொல்லப்போவது பாபா நிகழ்த்திய ஒரு அற்புதமான செயலைப் பற்றி! இந்த நிகழ்வுக்குப் பின்னர், பாபாவின் மீதான எனது நம்பிக்கை பன்மடங்காக உயர்ந்து விட்டது. கடவுளின் மறு அவதாரமே பாபா. தயவுசெய்து படியுங்கள்.
ஓம் ஸாயிராம்.
சின்னச் சின்ன விஷயங்களுக்கெல்லாம் பாபாவைத் தொல்லைப்படுத்துவது என் வாடிக்கை. பேருந்தில் ஏற, நல்ல உணவு விடுதியில் சாப்பிட எனப் பலவற்றிற்குமாக! இப்படியெல்லாம் அவரைத் தொந்தரவு செய்தாலும் கூட, நாம் அவரை அன்புடன் பார்க்கும்போது, அவரும் நம்மை அன்புடனெயே நோக்குகிறார். இதையெல்லாம் அவர் பொருட்படுத்துவதில்லை. ஒரு தாய் எங்ஙனம் தன் பிள்ளைகளின் குறும்பைப் பொறுத்துக்கொள்ளாமல் இருப்பார்? மாறாத தாயன்புடனேயே அவர் நான் அழைக்கும்போதெல்லாம் வந்து அருள் புரிகிறார். எனது வீடு தாணேயில் மிகவும் உட்புறமான பகுதியில் இருக்கிறது. ரயில் நிலையத்திலிருந்து வீட்டை அடைய 20 - 30 நிமிடங்களுக்கு மேல் ஆகும். காட்பரி ஜங்ஷனில் இருக்கும் கோரம் அங்காடிக்கு அருகில் எனது ஸ்கூட்டரை நிறுத்திவிட்டுச் செல்வது வழக்கம்.
இதுதான் அன்று நடந்தது......
சுமார் 4 வாரங்களுக்கு முன், அந்தேரியிலிருந்து தாணேவுக்கு தரை மார்க்கமாக வந்துகொண்டிருந்தேன். இரவு 9 மணிக்கு மேல் ஆகிவிட்டது. இரவு உணவுக்குத் தாமதமாகிக் கொண்டிருந்தது. வயிற்றுக் கோளாறின் காரணமாக நான் என் வீட்டில்தான் உணவு உண்பேன். எனவே, கஞ்சுர் மார்க் என்னுமிடத்தில் இருக்கும் ரயில் நிலையத்துக்குச் சென்று, அங்கிருந்து ஒரு ரயிலைப் பிடித்து, சீக்கிரமாக தாணே சென்றடையத் திட்டமிட்டு இறங்கினேன். நினைத்தபடியே ஒரு 15 - 20 நிமிடங்களில் தாணே வந்து சேர்ந்தேன். 100 - 150 பேருக்குக் குறையாமல் அவரவர் ரிக்ஷா பிடிப்பதற்காக வரிசையில் காத்திருந்தனர். தாணே ரயில் நிலையத்தில் இந்தக் காட்சி ஒன்றும் புதிதல்ல. அந்த வரிசையைப் பார்த்ததும், பசி, களைப்பு, தூக்கம் இன்னும் அதிகமாகி, இங்கு காத்திருக்காமல், சற்றுத் தள்ளி நடந்து, வழியில் ஏதேனும் ரிக்ஷா பிடிக்கலாம் என எண்ணி நடக்கத் தொடங்கினேன். சற்றுத் தொலைவில் 2 - 3 ரிக்ஷாக்கள் நின்றிருந்தன. ஆனல், அவர்கள் நான் செல்லும் இடத்துக்கு வர இயலாது என மறுத்து விட்டனர். நான் இன்னமும் களைப்படைந்தேன். 'பாபா! எப்படியாவது நான் விரைவாக வீடு செல்ல கருணை காட்டுங்கள்' என வேண்டிக் கொண்டேன். இப்படி வேண்டியதுமே, புதுத் தெம்புடன் இன்னும் சற்று தூரம் நடக்கலாம் என எண்ணி, அருகிலிருந்த ஒரு அனுமார் கோவிலை அடைந்தேன். அங்கு நின்றிருந்த இரண்டு ரிக்ஷாக்களுமே ஏற்கெனவெ சவாரி ஏற்றி வந்திருந்ததால், வரமுடியாது எனச் சொல்லிவிட்டனர். அந்த சமயத்தில் என்னருகில் ஒரு மோட்டார் சைக்கிள் வந்து நின்றது! அதில் அமர்ந்திருந்த இளைஞர் என்னைப் பார்த்து, ' எங்கே போகணும்?' எனக் கேட்டதும், என் உடலெங்கும் மின்சாரம் பாய்ந்தது போலிருந்தது. எனது களைப்பெல்லாம் பறந்துபோய், புதிய உற்சாகம் பிறந்தது. கோரம் அங்காடிப் பக்கம் செல்ல வேண்டுமென நான் தெரிவித்தேன். அதற்கு அந்த இளைஞர், ' அங்கு செல்ல இயலாது. ஆனால், அதற்குப் பக்கத்தில் இறக்கி விடுகிறேன்' எனச் சொல்லி ஏறிக்கொள்ளச் சொன்னார். அவர் சொன்ன இடத்திலிருந்து நான் ஸ்கூட்டரை நிறுத்திய இடம் ஒரு 5 நிமிட நடைதான் என்பதால், நானும் உடனே தொற்றிக் கொண்டேன். சொன்ன இடத்தில் இறக்கிவிட்டு அவர் கிளம்ப, நான் அவருக்கு மனமார என நன்றியறிதலைச் சொன்னேன். பாபாவையும் போற்றினேன். வரும் வழியெல்லாம் என் மனம் பாபாவின் கருணையை நினைந்து ஆனந்தத்தில் துள்ளியது. தனது அடியவரான திரு. ராம்கீர்புவாவுக்கு டோங்கா அனுப்பி அருளிய பாபாவின் கருணைக்கு எந்த விதத்திலும் இது குறைந்தது அல்ல என நினைத்து மகிழ்ந்தேன். ஸ்கூட்டரை நிறுத்திய இடத்தருகே சென்றபோது, ஏதோ தண்ணீர்க் குழாய் உடைந்து சாலையெல்லாம் வெள்ளமாக நீர் ஓடிக் கொண்டிருந்தது. அதனால் போக்குவரத்தும் பாதிக்கப் பட்டிருந்தது.
[இந்த நிகழ்வு பத்திரிகைகளும் வந்திருந்தது. வெள்ளமாக ஓடிய நீரினால் மூழ்கிய சாலையின் படம் இங்கே இணைத்திருக்கிறேன் [லிங்க்]
அந்த இளைஞர் மட்டும் அந்த இடம் வரைக்கும் வந்திருந்தால், அவரும் அந்த நெரிசலில் மாட்டிக்கொண்டு தாமதமாகி இருப்பார். ஆனால், நானோ இப்போது கவனமாக நடந்து சென்று, என் ஸ்கூட்டரை எடுத்துக்கொண்டு, மாற்றுவழியில் விரைவாக வீடு சேர்ந்தேன். பாபா அனைத்தையும் திட்டமிட்டு, மிகக் கவனமாக எல்லா ஏற்பாடுகளையும் எனக்கும், அந்த இளைஞருக்கும் செய்து தந்தார். மிகவும் நெகிழ்ந்து போனேன் நான். பாபா ஒரு திறமையான போக்குவரத்து அதிகாரிதான் !!
ஓம் ஸாயிராம்.:))

பாபா என் வாழ்வைக் காப்பாற்றினார்
எனது பெயரையோ, மின்னஞ்சல் முகவரியையோ வெளியிடவேண்டாமென வேண்டிக் கொள்கிறேன். ஷீர்டி ஸாயி பாபாவின் லீலைகளைப் பகிர்ந்துகொள்ள இப்படி ஒரு தளத்தை அளித்ததற்காக உங்களுக்கு நன்றி கூறுகிறேன். தங்களது அனுபவங்களை இங்கே பகிர்ந்து கொள்வதன் மூலம், தங்களை அறியாமலேயே பிறர்க்கும் உதவி புரிய இது வழி செய்கிறது. எனது இந்த அனுபவத்தைப் பிரசுரிக்க வேண்டுகிறேன்.
நாகரிகமற்ற, திமிர் பிடித்த ஒரு பெண்ணின் தலைமையில் நான் பணி புரிந்து வந்தேன். காரணமின்றியே மற்றவர் மீது வசை பாடுவது இவர் வழக்கம். இவரைப் பற்றி அடுக்கடுக்காகப் புகார் எழுந்தபோதும், எங்களது மேனேஜர் இதைக் கண்டு கொள்ளவில்லை.
அதிலும் குறிப்பாக என்னை நோக்கியே அவரது சீற்றம் இருந்தது. அவரருகில் எனது இருக்கை இருந்தது காரணமாயிருக்கலாம். மென்மையானவாளாகவும், அதிகம் பேசாமல் இருப்பதாலும் நான் மிகவுமே இவரால் பாதிக்கப் பட்டேன். சுமார் ஒன்றரை ஆண்டுகள் இவரது ஏச்சுப் பேச்சுகளுக்கு ஆளாகிப் பலமுறை அழுதிருக்கிறேன். எனது பொருளாதார நிலையும், இன்னும் ஒரு வருடம் இருந்தால்தான் வேலையை விடமுடியும் என்பதாலும் அமைதியாகப் பொறுத்துக்கொண்டு உள்ளுக்குள் வருந்தினேன். எனது கணவரிடம் முறையிட்டபோது, இன்னும் ஓராண்டு பல்லைக் கடித்துக்கொண்டு பொறுத்துக் கொண்டால், எங்களது வீட்டுக் கடன் அடைய உதவும் என என்னைத் தேற்றினார். ஏதும் செய்ய இயலாத நிலையில் மிகவுமே கஷ்டப் பட்டேன். நான் மிகவும் நேசிக்கும் எனது கணவருக்காக இந்தத் துன்பத்தைப் பொறுத்துக்கொண்டு, அங்கேயே பணி புரிந்தேன். எனது தன்மானத்தை இழந்து இப்படி ஏன் இருக்க வேண்டும் எனப் பலமுறை பாபாவிடம் அழுதிருக்கிறேன்.
இந்த சமயத்தில் 9 வார ஸாயி விரதம் பற்றிக் கேள்விப்பட்டேன். அதைத் தொடங்கவும் செய்தேன். ஆனால், எனது மாமியார் இதற்குத் தடை போட்டார். என் மூலமாகத் தனது மகனும் பாபாவை வணங்குவது அவருக்குப் பிடிக்கவில்லை. ஆனால், அவருக்குத் தெரியாமல் இதைச் செய்யத் தொடங்கி, இரண்டு வாரங்களையும் முடித்து விட்டேன். எனது கணவர் இருக்கும் ஊருக்கே எனக்கு மாற்றல் உத்தரவு வந்தது! எனது வேண்டுகோளை மேனேஜர் ஏற்று இந்த மாற்றலுக்குச் சம்மதித்தார். ஆனால், இதுவும் எனக்குத் தீர்வாக இல்லை. ஏனெனில், இன்னமும் நான் அந்தப் பெண்ணின் கீழ்தான் வேலை செய்ய வேண்டியிருந்தது. எனவே எனது வேலையை விட முடிவு செய்து என் கணவரிடம் தெரிவித்தேன். பாபாவின் கருணையால், இன்னொரு கம்பெனியில் கூடுதல் சம்பளத்தில் எனக்கு வேலை கிடைத்தது. ஸாயி விரதத்தை 9 வாரங்கள் பூர்த்தி செய்தேன்.
எனது கஷ்ட காலத்தில் என்னுடன் கூட இருந்த பாபாவுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன். 'அடுத்தவரை வருத்தும் முன் அது அவர்களை எந்த அளவுக்குப் பாதிக்கும் என ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும்; அடுத்தவரின் தன்மானத்தைக் குறைக்கும் செயல்களைச் செய்யக் கூடாது; எந்தத் தகுதியும் பாராமல் அனைவரையும் நேசிக்க வேண்டும்; மனிதப் பண்புகளுக்கும் மனித உணர்வுகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும்' என இந்த நேரத்தில் அனைவரையும் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.
ஓம் ஸாயி ராம்.

 
பாபா நமக்கு நினைவூட்டுகிறார்!
ஓம் ஸாயி ராம்.
அன்புள்ள மனிஷா தீதி,
பாபாவுக்கு நாம் செய்த வாக்குறுதியை நிறைவேற்ற மறந்துபோனால், அவர் அதை நமக்கு நினைவூட்டுவது மட்டுமின்றி, நம்மை மன்னித்தும் அருள்வார் என ஸாயி ஸத் சரிதத்தில் நாம் படித்திருக்கிறோம். எனக்கும் அது போலவே ஒன்று நிகழ்ந்தது.
என் சொந்தப் பிரச்சினையால் நான் மனம் வருந்திய ஒரு சமயம், நான் பாபாவிடம் இது பற்றி முறையிட்டு வேண்டிக் கொண்டேன். வழக்கமாக நான் செல்லும் www.yoursaibaba.com என்னும் தளத்திற்குச் சென்று கேட்டபோது, 21 நாட்கள் சர்க்கரை நிவேதனம் செய்தால், என் பிரச்சினை தீரும் என வந்தது. மறுநாள் [ஏப்ரல் 23] முதல் அதைச் செய்யத் தொடங்கினேன். 2 நாட்களுக்கு முன்னர், நான் காலையில் எழுந்து பாபா ஆலயம் சென்று, சற்றுத் தாமதமாகத் திரும்பினேன்.எனவே, எனது பணிப்பெண்ணிடம் [அவரும் பாபா அடியவரே] சர்க்கரை நைவேத்யம் செய்யுமாறு சொல்லிவிட்டு அலுவலுக்குச் சென்றுவிட்டேன். வேலைப் பளுவின் காரணத்தால், அவளும் அதை மறந்து போனாள். மதியம் வீடு திரும்பியபோது, நான் அது பற்றி சுத்தமாக மறந்து போனேன். களைப்பாக இருந்த நான் மதிய உணவு உண்டுவிட்டு, ஓய்வெடுக்கச் சென்றேன். இதற்குள்ளாக பாபா எனக்கு இருமுறை இது குறித்து நினைவு படுத்தினார். ஆனால் அவரே என்னை நேரடியாகக் கேட்கும்வரை நான் இதை நினைக்கவே இல்லை.

முதல் நினைவூட்டல்:
ஓய்வெடுக்கச் சென்றபோது, எனது நண்பர் ஒருவர் என்னை அழைத்து, பகவதி அம்மன் கோவிலுக்குச் சென்றபோது, அங்கு ஒரு பாபா திருவுருவச் சிலையை வாங்கியதாகவும், எனக்கும் ஒன்று வாங்க நினைத்தபோதும், அடுத்த வாரம் அவர் ஷீர்டி செல்லும்போது, அங்கிருந்தே ஒன்றை வாங்கித் தர முடிவு செய்ததாகவும் தெரிவித்தார். பாபாவைப் பற்றி அவர் சொன்னபோது, என் பணிப்பெண்ணிடம் "சர்க்கரை" பற்றிக் கேட்கத் தோன்றவில்லை.

இரண்டவது நினைவூட்டல்:
அவர் பேசி முடித்ததும், மீண்டும் தூங்க நினைத்தபோது, திடீரென ஒரு இனிப்புப் பண்டம் [முந்திரிப் பருப்பும், "சர்க்கரையும்" சேர்த்த ஒரு இனிப்பு வகை]சாப்பிட வேண்டுமெனத் தோன்றியது. உடனே சமையலறைக்குச் சென்று,நானும் எனது பணிப்பெண்ணுமாக அதைச் செய்ய ஆரம்பித்தோம். 'சர்க்கரை' அளவு சரியா எனப் பார்க்கும்படி அவள் சொல்லவும், அப்படியே சரி பார்த்தேன். குறைவாகத்தான் இருந்தது! இருந்தாலும் பரவாயில்லை என்று, அதில் 2, 3 தேக்கரண்டி அளவு எடுத்து ருசித்தேன். ஏன் கொஞ்சமாகச் சாப்பிடறீங்க? என பணிப்பெண் கேட்டபோது, பிறகு சாப்பிடுகிறேன் எனச் சொல்லிவிட்டு போய்விட்டேன். அப்போதும், "சர்க்கரை" நிவேதனம் பற்றிய நினவு வரவில்லை!

நேரடியான நினைவூட்டல்:
அன்று மாலை வெளியே சென்று இரவு 7 மணிக்கு வீடு திரும்பினேன். அன்றைய "ராம விஜயம்" அத்தியாயத்தைப் படித்துக் கொண்டிருந்தேன். படித்து முடித்ததும், அந்தத் தளத்துக்குச் செல்ல வேண்டுமெனத் தோன்றியது. "உடனே சர்க்கரை நிவேதனம் செய்து, மன்னிப்புக் கேள். உனது ஆசை பூர்த்தியாகும்" என அது சொன்னது. இதைப் படித்ததும் எனக்கு மெய் சிலிர்த்துப் போனது. உடனே பூஜையறைக்குச் சென்றபோது, அன்றைய தினம் சர்க்கரை நிவேதனம் செய்யப்படவில்லை எனத் தெரிந்தது. மிகவும் மனம் வருந்திய நான், என்னை நொந்துகொண்டு, உடனே அதைச் செய்து, 1000 முறை அவரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டேன்.
நாம் செய்துகொடுத்த வாக்குறுதியை நினைவூட்ட பாபா எப்படியெல்லாம் முயற்சி செய்கிறார்; நமது ஒவ்வொரு அசைவையும் அவர் எப்படிக் கண்காணிக்கிறார் என்பது இதன் மூலம் புரியவரும். எங்கும் நிறைந்தவர் பாபா. இன்று வரை எனக்கு அந்தப் பதில் வருவதற்காக நான் கொடுத்த எண் நினவுக்கே வரவில்லை! உடனே இந்த அனுபவத்தை உங்களது வலைத்தளத்தில் பகிர்ந்துகொள்ள வேண்டுமென அடுத்த வாக்குறுதியை பாபாவுக்குக் கொடுத்தேன்.
இன்னுமொரு விஷயம் [மே 17, நண்பகல் 12.00 மணி]! இதை தட்டச்சு செய்துகொண்டிருக்கும்போது, இதை அனுப்பலாமா என பாபாவை www.mysai.org என்னும் தளத்திற்குச் சென்று கேட்டபோது, 'நீ கொடுத்த வாக்குறுதியை உடனே நிறைவேற்று!' என வந்தது. உடனே தொடர்ந்து தட்டச்சு செய்து முடித்தேன். அவருக்கு எல்லாமும் தெரியுமென்றாலும், தினமும் அவரது படத்தின் முன் அனைத்தையும் சொல்லுகிறேன். நான் செய்யும் அனைத்துக்கும் அவரது ஒப்புதலைக் கேட்கிறேன். தகுந்த பதிலை அவர் இந்தத் தளத்தின் மூலம் தருகிறார். எப்போதும் என்னை வழி நடத்துகிறார். அவரது இருப்பை எப்போதுமே உணர்கிறேன்.
சர்க்கரை அளிக்க மறந்து போனதற்கு மீண்டும் என் மன்னிப்பைக் கோருகிறேன். வந்தனங்கள் பாபா. என்னை மன்னித்து, எப்போதும் உங்களது அன்பை என் மீது காட்டுங்கள் பாபா.

ஸாயிபாபாவின் 'உதி' என் தோழியைக் குணமாக்கியது
" பாபா எப்போதும் என்னருகில் இருப்பது போலவே, அவரது உதியும் என்னுடன் எப்போதும் இருக்கிறது. என்னுடன் விடுதியில் தங்கிப் படித்துக் கொண்டிருக்கும் எனது தோழி ஒருவருக்கு சனிக்கிழமையன்று திடீரென காய்ச்சல் வந்கது. வேலைப் பளுவாலும், அலைச்சலாலும் இது வந்ததென எண்ணிய அவள் சில மருந்துகளை எடுத்துக் கொண்டாள். குணமானதுபோல இருந்தது. ஆனால், மறுநாள் மீண்டும் காய்ச்சல் அதிகமாக வந்துவிட்டது. மருந்து சாப்பிட்டதும் அது குறைந்தாலும், மீண்டும் இரவு 8 மணிக்கு திரும்ப வந்துவிட்டது. மீண்டும் மருந்து! ஆனால் குறையவே இல்லை. இரவு 11 மணி ஆகிவிட்டது. இரவு நேரம் ஆனதால் எனக்குக் கவலையாகிப் போனது. கைவைத்தியமாக ஈரத் துணியை அவள் நெற்றியின் மீது வைத்து ஒத்தடம் கொடுத்தபோது, துணிதான் சூடானதே தவிர, ஜுரம் குறையவில்லை. இரவு 3 மணிக்குத்தான் 'அது' எனக்கு உறைத்தது! பாபாவின் 'உதி' என்னிடம் இருப்பதை ஞாபகப்படுத்தி, உடனே அதை எடுத்து தண்ணீரில் கலந்து அவளைக் குடிக்க வைத்தேன்.சிறிது உதியை அவள் நெற்றியிலும் பூசினேன். பாபாவிடம் வேண்டிக் கொண்டேன். ஒரு மணி நேரத்தில் அவளது காய்ச்சல் முற்றிலுமாக நீங்கியது. விடிகாலை 5 மணியளவில் நிம்மதியாக உறங்கத் தொடங்கினாள். மறுநாள் காலை துளிக்கூட காய்ச்சலின் அறிகுறியே இல்லாமல் எழுந்தாள். இருந்தும் அவளை நான் மருத்துவரிடம் கூட்டிச் சென்றேன். அவளைப் பரிசோதித்த மருத்துவர் ஒரு மருந்தும் இனித் தேவையில்லை எனச் சொல்லிவிட்டார்! எல்லாம் பாபாவின் அருள்! ஸாயிராம் எனக்குக் கிடைத்ததில் நான் எவ்வளவு பாக்கியவதி என்பதை என்னால் சொல்லவே இயலவில்லை! அனைவரையும் பாபா ஆசீர்வதிக்கட்டும்.
ஓம் ஸாயிராம்.

 
ஷீர்டி அனுபவம்
மார்ச் மாதம் ஞாயிற்றுக்கிழமையன்று நானும், எனது மகளும் ஷீர்டி சென்றபோது நல்ல வெயில் கொளுத்தியது ! நாங்கள் படும், பட்டுக் கொண்டிருக்கும் கஷ்டங்களுக்கு நடுவே, வேண்டிய பணத்தைச் சேமித்து, மூன்று வாரம் இந்தியா வந்ததே பெரிய அதிசயம். மலேசியாவிலிருந்து வந்த ஒரு நண்பர் குழாத்துடன் இந்தப் புனித யாத்திரையை மேற்கொண்டோம். சென்னை வந்த பின்னர், 03/24/2012 அன்று கொளுத்தும் வெயிலில் ஷீர்டி வந்து சேர்ந்தோம்.
அன்று மாலை ஓய்வெடுத்த பின், மறுநாள் நாங்கள் அடைந்த அனுபவத்தை, ஸாயிபாபாவின் பேரருளை என்னால் மறக்கவே முடியாது.
காலை 9 மணி அளவில் பூஜைக்குத் தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டு, தரிசனத்துக்குச் சென்றோம். கம்பீரமாக அமர்ந்துகொண்டு, தனது அழகிய புன்னகையைத் தவழவிட்டுக்கொண்டு, எனக்காக, என் மீது அன்பைப் பொழியவென பாபா அமர்ந்திருந்த காட்சியைக் கண்டதும் நான் அழத் தொடங்கி விட்டேன். என் நிலையைக் கண்ட காவலாளிகள் கூட, என்னை அவசரப்படுத்தாமல் இருந்தனர்.
வெளியே வந்ததும், ஸாயி சம்பந்தப்பட்ட அனைத்து இடங்களுக்கும் செல்ல முடிவெடுத்தோம். கிளம்பும் முன்னர் பாபா என்னைக் கேட்டுக் கொண்டதற்கிணங்க, ஒரு முழுத் தேங்காயை தானம் அளித்தேன். எங்களுடன் வந்திருந்த ஒரு தம்பதியினரும் கூடச் சேர்ந்து கொண்டனர். தரிசனத்திற்கு வெளியில் இருந்த மருத்துவ அறையில், அவர் ரத்ததானம் அளித்தார். அருங்காட்சியகம், த்வாரகமாயி சென்றுவிட்டு, பாபாவுக்கு நெருக்கமான சிலரது சமாதிகளுக்கும் அஞ்சலி செலுத்தினோம். லக்ஷ்மி பாயின் சமாதியைத் தேடி நடந்து கொண்டிருந்தபோது, 'எப்போதாவது ஸாயியைக் காண நேரிட்டால், அவருக்கு இனிப்பு தருவதாக' எனக்குள் சங்கல்பித்துக் கொண்டேன். எனக்கிருக்கும் பிரச்சினைகள் தீர அவரைச் சரணடைவதே ஒரே வழி என விண்ணப்பித்தேன்.
பாபாவுக்கு உணவளிப்பது என்பது நடக்கவியலாத செயல் என எண்ணி, அவர் அறவுரையின்படி, ஏழைகளுக்கோ, அல்லது தேவையானவர்க்கோ இனிப்பு வழங்கலாம் என முடிவு செய்து, எதிரில் வந்த எல்லாருக்கும் இனிப்பு வழங்கலானேன். ஆனால், என் மகளுக்கு இது பிடிக்கவில்லை; வாங்கிக் கொள்பவர்கள் ஏழைகளோ அல்லது தேவையானவர்களோ அல்ல என்பது அவள் வாதம். அதனால் நான் இனிப்புப் பொட்டலத்தை என் கைப்பைக்குள் வைத்து விட்டேன்.
பாபாவின் 'உதி'யை இன்னும் நாங்கள் வாங்கவில்லை என்பதை உணர்ந்து, அதை வாங்கிக்கொள்ள வரிசையில் நின்றோம். எங்களுடன் வந்த தம்பதியினரும், அவரது மாமியாரும் சேர்ந்து கொண்டனர். இப்படியாக நின்று ஒருவர் பின் ஒருவராக உதி பொட்டலங்களை வாங்கிய பின்னர், இன்னும் கொஞ்சம் வாங்கலாம் என எனது மகளும், அந்த மாமியாரும், மருமகளும் சென்றனர். நாங்கள் இருவரும் வெளியில் வந்து இளைப்பாறினோம். த்வாரகாமாயியின் உள்ளிருந்த நாய்களில் ஒன்று, திடீரென எங்களை நோக்கி வந்து முன்னால் நின்றது. தாயன்புடன் நான் அந்த நாயை நோக்கி அது பசியாக இருக்கிறதா எனக் கேட்டேன். அது நேராக என்னை உற்றுப் பார்த்தது. என் கைப்பைக்குள் இருந்த இனிப்பின் நினைவு எனக்கு வர, உடனே அதை எடுத்து அதில் ஒரு மூன்று துண்டங்களை அந்த நாய்க்கு அளித்தேன். பசியுடனிருந்த நாய் அதை உடனே விழுங்கியது. என்னிடம் இருந்த [பாபாவுக்கென வைத்திருந்த] அனைத்து இனிப்புகளையும் ஒன்றன் பின் ஒன்றாக அதற்குக் கொடுத்தேன். சாப்பிட்டு முடித்ததும் மற்ற நாய்களைப் போல பசியால் உறுமாமல், அது திருப்தி கலந்த சிரிப்பு ஒன்றை என் மீது வீசிவிட்டு, த்வாரகாமாயிக்குள் சென்றுவிட்டது! அங்கிருந்த நூற்றுக்கணக்கான பக்தர்களுக்கு இடையே, என்னிடம் அது நேராக வந்து பசியோடு கேட்டது ஒரு ஆச்சரியமான விஷயமே.
என்னைப் பீடித்திருந்த அனைத்து பாரங்களும் என் தோள்களிலிருந்து கீழிறங்கியதாக அந்த நொடியில் உணர்ந்தேன். எனது குருவிடமிருந்து நேரடியாகக் கிடைத்த இந்த அற்புத அனுபவத்தை என் வாழ்நாள் உள்ளளவும் நான் மறக்க மாட்டேன்.
ஸாயிராம்.


பாபாவின் அற்புதங்கள்
அனைவருக்கும் ஸாயிராம்.
பெங்களுருவிலிருந்து இந்து எழுதுகிறேன். நான் ஒரு பாபா பக்தை. திருமணமாகி சந்தோஷமாக இருக்கிறேன். 4 வயதில் ஒரு மகள் இருக்கிறாள். இந்தத் தலை சுற்றல் நோவு வரும்வரை எனது வாழ்க்கை மகிழ்ச்சியாகவே போய்க் கொண்டிருந்தது. கடந்த ஓராண்டு காலமாக இதனால் நான் மிகவும் அவதியுற்றேன். எத்தனையோ மருத்துவர்களைப் பார்த்தும் தீரவில்லை.
ஒருநாள் எனது நண்பர் ஒருவர் இந்த 9 வார ஸாயி விரதம் பற்றிச் சொன்னார். முறையாக விரதமிருந்து வழிபட்டால் எனது பிரச்சினை தீருமெனச் சொன்னார். இதை ஆரம்பித்து இன்னும் ஒரு மாதம் கூட முடியவில்லை. அதற்குள்ளாகவே நான் மிகவும் குணமானதாக உணர்கிறேன். பாபா இதை அறவே நீக்கி குணமாக்குவார் என பரிபூரணமாக நம்புகிறேன். நாம் அனைவரும் சேர்ந்து ஸாயிபாபா ஸாயிபாபா என அவர் நாமத்தைத் துதிப்போம்.
ஓம் ஸாயிராம்.

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.