Shirdi Sai Baba's Grace-Experience Of Sai Devotees - Part : 64
ஷீர்டி ஸாயிபாபாவின்
பெருங்கருணை
==========================
ஸாயி அடியார்களின்
அனுபவங்கள் - பகுதி : 64
( Translated into Tamil by : Dr. Sankarkumar, USA)
ஸாயிராம்.
அனைவருக்கும் இனிமையான பாபாவின் நாள் வாழ்த்துகள். இன்னும் சில அடியார்களின் அனுபவங்களை இங்கே அளிக்கிறேன்.
ஜெய் ஸாயிராம்.
மனிஷா
1. 'குழந்தை இல்லா வாழ்விலிருந்து, மகிழ்வான வாழ்க்கைக்கு!' :
பாபாவின் அருகாமை நம் அனைவராலும் உணரப்படும் ஒன்று. வேலை வாய்ப்புக்காக 8 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்கா வந்த நான், துரதிர்ஷ்டவசமாக முக்கியமான தேர்வு ஒன்றில் தோல்வியுற்று, வாய்ப்புகளை இழந்தேன். என் படிப்பு முடியும் வரை எனக்கு உதவுவதாக வாக்களித்த என் தோழி ஒருவரின் வீட்டில் தங்கினேன். ஆனால், அவர் என்னை மோசமாக நடத்தியதால் அங்கிருந்து வெளியேறி, எங்கெல்லாம் இடம் கிடைத்ததோ, அந்த நண்பர்களின் வீடுகளில் தங்கி வந்தேன்.
இந்தியாவுக்குத் திரும்புமாறு என் பெற்றொர் அழைக்கவில்லை. நான் பணம் கேட்பேனோ எனப் பயந்து என்னுடன் பேசுவதையும் குறைத்து விட்டனர். என் சகோதரன் ஒருவன் மட்டுமே அவ்வப்போது எனக்கு உதவி செய்தான். அவனது நண்பர் ஒருவர் வீட்டில் தங்கியபோது, பாபாவின் அருளால் அவர் என்னை மணக்க விரும்பினார். பாபாவின் படம் ஒன்று மட்டுமே என் துணையாக இருந்தது. தினமும் பல முறை அவரது திருநாமத்தை எழுதி வந்தேன். தேர்வுகள் எல்லாம் முடித்தும், வேலை வாய்ப்பு ஒன்றும் கிட்டவில்லை.
என் திருமண வாழ்வும் சரியாக அமையவில்லை. அவரது பெற்றோர் பேச்சைக் கேட்டுக்கொண்டு ஊரில் இருந்த நிலங்களை வரதட்சணையாகக் கேட்டு கொடுமைப் படுத்தினார். திருமண உறவு ஒருநாள் கூட இருக்கவில்லை. என் தாய் இது பற்றி கவலைப்படவும் இல்லை. நான் எப்படி இருக்கிறேன் எனக்கூட கேட்டதுமில்லை.
பாபா மீது அவ்வளவாக நம்பிக்கை இல்லாவிடினும், அவரது பெயரை எழுதியும், ஸாயி ஸத்சரிதத்தைப் படித்தும் வந்தேன். கடைசியில், ஒரு பல்கலைக் கழகத்தில் படிக்கவும், சற்று சம்பாதிக்கவும் நேர்ந்தது. இந்த நேரத்தில் எனது மாமனார் மரணம் அடைந்தார். அப்போதுதான் அவரது கெட்ட குணங்கள் என் கணவருக்குத் தெரிய வந்தது. என் மீது சற்று அக்கறை காட்டவும் தொடங்கினார். ஆயினும் பெரிதாக ஒன்றும் நிகழ்ந்து விடவில்லை.
ஒரு நாள் நியூயார்க்கில் இருக்கும் பாபா ஆலயம் சென்று வந்ததிலிருந்து, அவரே எனக்கு சகலமுமாக ஆகிப்போனார். அவரது உதவியுடன் என் படிப்பைத் தொடர்ந்தேன். இடையில் ஏற்பட்ட சோதனைகளைத் தாங்கிக் கொண்டேன். 6 ஆண்டுகளுக்குப் பின், இப்போது நான் கர்ப்பமாகி, ஒரு அழகிய ஆண் மகவைப் பெற்றெடுத்தேன். என் வாழ்க்கைக்கும் அவனால் ஒரு அர்த்தம் கிடைத்தது. படிப்பை முடித்து இப்போது ஒரு நல்ல வேலையில் இருக்கிறேன்.
எந்த நிலையிலும் பாபாவைக் கைவிடாதீர்கள் என உங்களையெல்லாம் கேட்டுக் கொள்கிறேன். அவரே நமக்கெல்லாம் தந்தை, தாய், நண்பன் எல்லாமும். எனது அடுத்த பிறப்பில் இன்னும் சீக்கிரமாகவே பாபா என் வாழ்வில் வரவேண்டுமெனப் பிரார்த்திக்கிறேன். நமது கர்மவினை தீரும்வரை சோதனைகள் இருந்தாலும், பாபாவை மறக்காமல் இருந்தால் நம் வேதனைகளை அவர் நிச்சயம் குறைப்பார் என உறுதியாகச் சொல்கிறேன். அவர் மிகவும் உயர்வானவர்!
கடந்த காலத்தைப் பற்றிக் கவலைப்படாமல், பாபாவைத் துணையெனக்கொண்டு வாழ்வில் முன்னேறுங்கள். ஒரு தயவுமின்றி வாழ்ந்திருந்த என் வாழ்வில் பாபா எவ்விதம் ஒளியேற்றினார் என்பதை ஒரு கணம் நினைத்துப் பாருங்கள். உங்களை மிகவும் நேசிக்கிறேன், பாபா! என்னையும், என் குடும்பத்தையும் ஆசீர்வதியுங்கள்!
2. 'பாபா இன்று என்னுடன்!' ::
ஒரு பெரிய சோஃபாவை மாடியிலிருந்து கீழே கொண்டுவருவதற்காகத் தனி ஒருத்தியாக முயற்சி செய்தபோது, எக்குத்தப்பாக இழுத்ததில் அது மாடிப்படியில் வசமாகச் சிக்கிக் கொண்டுவிட்டது. ஒரு அங்குலம் கூட அசைக்க முடியவில்லை. என் கணவர் வேலையில் இருந்ததால் அவரை அழைக்க இயலவில்லை. செய்தி தெரிந்தால் கோபிப்பாரே எனவும் பயம்!
பாபா ஒருவரே என் துணை என அவரை அழைத்தேன். அவரருளால், சோஃபாவின் கைப்பிடித் துணியைச் சற்றுக் கிழித்தால், அதன் மூலம் ஒரு பிடிப்பு கிடைத்து அடுத்த படிக்குத் தள்ளலாம் எனும் யோசனை உதித்தது! அப்படியே கீழே கொண்டு சேர்த்தேன். இதே உத்தியைப் பயன்படுத்தி இன்னொரு சோஃபாவையும் கீழே கொண்டுவந்தேன். அப்போது சுவற்றில் ஏற்பட்ட சிறு கீறல்களையும் சரி செய்துவிட்டேன்!
தனியொருவளாகச் செய்யமுடியாத இந்தக் கடினமான வேலையை அவரருளால் செய்து முடித்தேன். இது ஒரு அற்ப விஷயமாக இருந்தாலும், அவரது துணை எப்போதும் நம்முடன் இருக்கிறது என்பதையே காட்டுகிறது.
ஜெய் ஸாயிராம்.
Loading
0 comments:
Post a Comment