Under The Guidance Of Sadguru Sai-Experiences by Sai Devotee Anandvalli.
ஷீர்டி ஸாயிபாபாவின்
பெருங்கருணை
==========================
( Translated into Tamil by : Dr. Sankarkumar, USA)
ஸாயிராம்.
அனைவருக்கும் இனிமையான பாபா நாள், மற்றும் ஹனுமத் ஜயந்தி வாழ்த்துகள்.நமது ஸாயி ஹனுமான் நம்மனைவருக்கும் நல்லாசிகள் வழங்கட்டும்.
நாடு மாற்றம், குடும்ப சூழ்நிலை எனப் பல காரணங்களை முன்னிட்டு, இந்த தளத்தில் தொடராமல் சில காலம் இருந்தேன். அதுதான் பாபாவின் விருப்பம் போலும்! இந்தக் காலகட்டத்தில் அவ்வப்போது சில அனுபவங்களை இங்கு அளித்தபோதிலும், தொடர்ச்சியாகத் தர இயலாமல் போனது. முழுவதுமாக பாபாவைச் சரணடைந்து அவர் எப்படி என்னைச் செயல்படுத்த விரும்பினாரோ அப்படியே விட்டுவிட்டேன். தொடர்ந்து எனக்கு அடியார்கள் அனுப்பிய மடல்களாலும், இதோ இப்போது தரப்போகும் இந்த மடலினாலும், மீண்டும் இந்த சேவையைத் தொடர முடிவெடுத்தேன்.
ஸாயிமா மற்றும் ஆஞ்சநேயர் பக்தையான ஆனந்தவல்லி என்பவரின் அனுபவங்களை இங்கே பதிகிறேன். இந்த மடலை அவர் எனக்கு அனுப்பியபோது 2014 அக்டோபர் 16-க்குப் பிறகு இவற்றைத் தொடர்ச்சியாக அளிக்க வேண்டுமென அவர் கேட்டிருந்தார்.
அக். 16-க்குப் பிறகு நான் எந்த பதிவும் இங்கே இடவேயில்லை. எனவே, ஆனந்தவல்லி அவர்களின் கோரிக்கையை அதிர்ஷ்டவசமாக இப்போது பாபா அருளால் தொடர்ச்சியாகப் பதிவு செய்ய முடிகிறது! அதுவும் இந்த ஹனுமத் ஜயந்தி நன்னாளில் அவரது அனுபவங்களை, எனது பல்வேறு அலுவல்களுக்கு இடையிலும் இங்கே அளிக்கிறேன்.
ஜெய் ஸாயிராம்.
மனிஷா
1. "ஸத்குருவின் வழிகாட்டலில்!" ::
ஷீர்டிஸாயிபாபாக்ருபா என்னும் இந்தத் தளத்தில் அன்பர்கள் அளிக்கும் அனுபவங்களை அனைவரும் படித்திருப்பீர்கள். பாபா அருளை அடைந்த அந்த அனுபவங்களைப் பெற்ற ஒவ்வொருவருமே பாக்கியசாலிகள்தாம். அப்ப்டிப்பட்ட பாக்கியசாலிகளில் ஒருத்தியான நானும் எனது பல்வேறு அனுபவங்களை இங்கே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். குற்றமிருப்பின் பொறுத்தருளவும் எனக்கூறி, இந்தத் தொகுப்பை பாபாவின் தாமரைப் பாதங்களில் பணிவன்புடன் அளிக்கிறேன்.
'அவரது லீலைகளைப் பற்றி எழுதுவது' ::
2014, அக். 20-24 தேதிகளில் பாபா ஒரு மாபெரும் அற்புதத்தை என் வாழ்வில் நிகழ்த்தினார். அவரது வழிகாட்டலையும், நல்லாசியையும் நான் வேண்ட, அவர் எனக்கு அவற்றை அளித்தார். எல்லாம் நல்லபடியாக நடந்தால், இந்த அனுபவங்களை இந்தத் தளத்தில் எழுதுவதாக வேண்டிக் கொண்டேன்.
அந்த அற்புதம் நிகழ்ந்து 5 மாதங்களாகிறது. நானும் இவற்றை எழுதாமலேயே இருந்தேன். இந்த வலைதளத்திற்கு வந்து பார்க்கும்போதெல்லாம், அக். 16-க்குப் பிறகு புதிதாக எதுவும் பதியவில்லை என்றறிந்தேன். உடனே இங்கே அடுத்து வரப்போகும் பதிவு அக். 20-24-ல் நடந்ததாகவே இருக்க வேண்டும் என முடிவு செய்தேன்.
இருந்தபோதிலும், எப்படி இதையெல்லாம் தொகுத்து எழுதுவது என்னும் மலைப்பால் நாட்களைக் கடத்தினேன். கடைசியாக எப்படியோ அவரது அருளால் அனைத்தையும் எழுத முனைந்தேன். இதோ எனது முதல் அனுபவம்!
'யாரிந்த பாபா?'
2011க்கு முன் ஷீர்டி ஸாயிபாபாவைப் பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாது. சிறு வயதிலிருந்தே நான் ஒரு ஆஞ்சநேய பக்தை அவர்தான் எனக்கு எல்லாம்! முதன்முதலாக அவரைப் பற்றிக் கேள்விப்பட்டபோது, 'ஓ உட்கார்ந்த நிலையில் இருக்கும் அந்த தாத்தா சாமியா?' என எண்ணினேன். 2007-லிருந்து எங்கள் வீட்டில் இருந்த ஒரு சிறு ஸாயிபாபா சிலையைப் பார்த்து, மற்ற தெய்வங்களை வேண்டுவதுபோல், 'தாத்தா சாமி, எல்லாரையும் காப்பாத்து' என மட்டும் வேண்டிவருவேன்.அவரும் ஒரு கடவுள் என்பதைத் தவிர வேறொன்றும் எனக்குத் தெரியாது.
ஆனால் பல்வேறு காரணங்களால் அலைக்கழிந்த அந்த நேரத்தில் பாபாவும் என் கூடவே இருந்தார் என அறிவேன். மற்ற தெய்வங்களிடம் முறையிட்ட பின்னர், 'தாத்தா சாமி, ஈயாவது என் அமைதிக்காக ஏதாவது செய்யேன்' என வேண்டியிருக்கிறேன். ஆஷாலதா என்னும் பாபா அருள் பெற்ற ஒருவரின் அனுபவங்களை இங்கே படித்திருப்பீர்கள். அதிர்ஷ்டவசமாக அவர் எனது பக்கத்து வீட்டுக்காரர். 'இன்றைய நாள் எப்படி?' என நான் கேட்கும்போதெல்லாம், முகத்தில் தேஜஸுடன் , 'மிக அருமையாக இருந்தது இன்று!' என அவர் சொல்லுவார். தெய்வத்துக்காக தான் செய்யும் பணிகளால் மன நிறைவுடன் இருப்பதாக அவர் சொல்லுவார். எந்தக் கடவுள் எனக் கேட்டால், 'ஷீர்டி ஸாயிபாபா' என்பார். அவர் மூலமாகத்தான் இந்த தளத்தின் முகவரி எனக்குக் கிடைத்தது. ஆயினும், அதிகம் இங்கு வந்து படித்ததில்லை.
"முதன்முறை பாபாவின் திவ்ய தரிசனம்"::
2012, ஏப்ரல் 6 அன்று பாபா கோவிலுக்குச் செல்லவேண்டியிருப்பதால் சற்று முன்னதாகச் செல்ல என் அனுமதி கேட்ட என் சக பணியாளரை அனுப்பியபின், யதேச்சையாக இந்த தளத்தில் ஒரு சில அனுபவங்களைப் படிக்கலானேன். அதிலேயே மெய்ம்மறந்து அநேகமாக அனைத்து பதிவுகளையும் படித்துவிட்டேன். தன் பக்தர்களுக்காக இப்படியெல்லாம் அருள் செய்யும் இந்த மஹானைப் பற்றியே நினைந்து, நினைந்து, ஒரு முறையாவது அவரது தரிசனம் கிடைக்க விரும்பினேன். ஆனால், என் கணவரைக் கேட்கத் தயங்கினேன்.
அன்று மாலை என் கணவர் வீடு திரும்பியதும், சில பொருட்கள் வாங்குவதற்காக கடைக்குச் செல்ல ஆயத்தமானோம். அப்போது, 'எனக்கு உங்களைக் காண ஆவலாக இருக்கிறது, அதற்கு நீங்களே ஏற்பாடு செய்யுங்கள் பாபா!' என மனதுக்குள் வேண்டிக் கொண்டேன். ஆயினும் இது எப்படி நிகழக்கூடும் எனும் எண்ணமும் கூடவே இருந்தது.
சாமான்களை வாங்கியபின்னர், அங்கே இருந்த ஒரு அலமாரியில் பல கடவுட் சிலைகள் இருந்ததைக் கண்டேன். ஆனால், அவற்றில் பாபா சிலை ஒன்று கூட இல்லை. என் கணவர் அவசரப்படுத்தியதால் கிளம்பும்போது, சட்டென என் கண்கள் மேல் தட்டை நோக்கின. சுமார் 2 அடி உயரத்தில் பாபாவின் வெண்கலச் சிலை கம்பீரமாக அமர்ந்திருந்தது. அதன் முன் ஒரு அழகிய நந்தியும் கூட! 'ஆச்சரியத்தில் வாய் பிளந்து 'ஒ மை காட்' என வியந்து போனேன். எங்கும் நிறை பாபா எனக்கு அங்கேயே தரிசனம் கொடுத்தார். பலமுறை அந்தக் கடைக்குச் சென்றிருந்தும் இதுவரை காணாத அந்த அற்புத தரிசனத்தைக் கண்டு பாபாவை மிகவும் நேசிக்கலானேன். அந்த அனுபவம் இன்றும் என் மனதில் பசுமையாக இருக்கிறது.... இனியும் இருக்கும்!
2. "ஸத்குருவின் வழிகாட்டலில்!" ::
பாபாவின் தரிசனம் கிடைத்த அன்று மாலை மன திருப்தியுடன் வீடு வந்து, வேலைகளையெல்லாம் முடித்தபின், பாபாவைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள இணையத்தில் தேடினேன். அப்போது ஸ்ரீ ஸாயி குருசரித்ரா என்னும் நூலின் மூலம் இன்னும் அதிகமாகத் தெரியவந்தது. முதமுதலாக அந்தக் கோப்பைப் படிக்கத் திறந்தபோது, என் கண்ணுக்கெதிரே தோன்றிய முதல் உருவம் இந்தப் படம் தான்! அப்படியே நேரடியாக என்னை ஊடுருவிப் பார்க்கின்றதுபோலத் தன் கண்களை மட்டும் காட்டியிருக்கும் இந்தப் படம் என்னை மிகவும் கவர்ந்தது.
அன்றிரவே அதை முழுதுமாகப் படித்து முடித்துவிட்டு, மறுநாள் என் தோழி ஆஷாவைக் காணச் சென்றபோது, அவரது பூஜையறையிலும் இதே படத்தைக் கண்டு வியந்தேன்! முதல் தினம் எனக்கு பாபா அளித்த அற்புத தரிசன அனுபவத்தை அவருடன் பகிர்ந்து கொண்டேன். அதைக் கேட்டு நெகிழ்ந்துபோன ஆஷா எனக்குக் கொஞ்சம் உதி தந்தார். வேலை நிமித்தமாக அமெரிக்கா வந்ததால் அதிகம் சாமான்களைக் கொண்டு வராததால், எனது பூஜையறையில் குறைந்த அளவே சாமி சிலைகள் இருந்தன. எனவே இந்த விபூதி பொட்டலத்தையே பாபாவெனக் கருதி அதையும் பூஜையறையில் சேர்த்தேன். உதி வடிவில் பாபாவை வழிபடலானேன்
3. "ஸத்குருவின் வழிகாட்டலில்!" ::
2012-ல் எங்களது 'கிரீன் கார்ட்' பெற விண்ணப்பித்தோம். அதே சமயம் ஒரு புது வீடு வாங்கவும் நினைத்திருந்தோம். கிரீன் கார்ட் வந்துவிட்டால், வீடு வாங்கலாம் என முடிவெடுத்து, என் கணவர் அனைத்து படிவங்களையும் பூர்த்தி செய்தார். நான் பாபாவை வேண்டியதோடு சரி! மே மாதம் விண்ணப்பிதோம். ஆச்சரியகரமாக, ஆகஸ்ட் மாதமே எங்களது I 140 வந்துவிட்டது.... அதுவும் ஒரு வியாழனன்று! அன்று முதல் ஒவ்வொரு வியாழனன்றும் ஏதாவது நல்ல சேதிக்காகக் காத்திருக்கலானேன். நமக்காக அவர் எல்லாமே செய்துவந்தபோதிலும், என்னுடைய பலவீன மனதின் காரணம், ஒவ்வொரு நிகழ்வுக்கும் அவரது இருப்பைக் கானும் உத்திரவாதம் தேடினேன். அவற்றையும் தவறாது அவர் தருகிறார்.இந்த I 140 வந்ததும் அப்படிப்பட்ட ஒரு சாட்சியமே!
செப்டெம்பர் மாதம் எங்களது EAD வந்து சேர்ந்தது. அதுவும் ஒரு வியாழனன்றே! இது குறித்து என் கணவரிடம் சொன்னபோது, ஏதோ ஒரு குறிப்பிட்ட நாளில் அவர்கள் அனுப்ப, வியாழனன்று வந்து சேர்கிறது என சமாதானம் கூறுவார்!
அது உண்மையாக இருக்கலாம்; ஆனாலும் இது தெய்வச் செயல் எனவும் நான் நம்பினேன். இது கிடைத்தபடியால், புது வீடு வாங்க முடிவு செய்தோம்.பாபா அருளால், கட்டி முடிக்கப்பட்ட விட்டுக்கு கிரஹ பிரவேசம் செய்ய அக், 24, 2012 என நிச்சயித்தோம். அன்றுதான் பாபாவின் புண்ணிய திதி/விஜயதசமி நாள்!
இதை விடவும் புனித நாள் கிடைக்குமா என்ன!
எல்லாம் பாபா அருளே! இதற்கு மேல் என்ன சொல்வதெனத் தெரியவில்லை. அவரது பாதுகாப்புக்குள் வந்துவிட்டால், அவர் நம்மை உயரப் பறக்கச் செய்வார். நமக்காக ஒரு அன்னை போல் நம் காரியங்களைச் செய்து முடிப்பார். பொறுமை, நம்பிக்கை இவை இரண்டு மட்டுமே தேவை!
இன்னமும் கிரீன் கார்ட் வந்து சேராததால், வீட்டு விலாசம் மாறி, அதனால் ஏதேனும் குளறுபடி வரவேண்டாம் என நினைத்து, புது வீட்டுக்கு இன்னமும் செல்லாமல் இருந்தோம். டிச.20 [வியாழக்கிழமை] அன்று, எங்களுக்கு அது அனுப்பப்பட்டதாக இணையத்தில் கண்டறிந்து அப்போது இந்தியா சென்று, அங்கே திருப்பதிக்கு ரயிலில் சென்றுகொண்டிருந்த என் கணவரிடம் ஆசையாசையாகத் தெரிவித்தேன்! அவரும் மிக மகீழ்ந்து பாலாஜிக்குத் தன் நன்றியறிதலைச் சமர்ப்பித்தார். அந்த ஆண்டு பாபா எங்களுக்குச் செய்த அருளாசியைச் சொல்ல வார்த்தைகளே இல்லை!
இப்படியாக எங்கள் வாழ்வில் வந்த பாபா எங்களுக்குத் தேவையான அனைத்தையுமே தந்து எங்களை மகிழ்ச்சியால் நிரப்பினார். அடுத்த செவ்வாயன்று வருமென எதிர்பார்த்த எங்களது கிரீன் கார்ட் அடுத்த வியாழனன்றுதான் [27] எங்கள் கையில் கிடைத்தது!
இதை எழுதுவதற்கு முன்,எங்கிருந்து தொடங்கி என்ன எழுதுவது எனத் திகைத்திருந்தேன். திவ்ய தரிசனம், தெய்வீக உதி, புனித வியாழன் என வரிசையாக அனைத்தையும் எழுதவைத்த பாபாவை வணங்குகிறேன்.
(Uploaded by : Santhipriya)
Loading
0 comments:
Post a Comment