Wednesday, December 30, 2009

Sai Baba's Chavadi,Shirdi-Complete Detail With Rare Pictures and Video.

அன்பானவர்களே

2009 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சாவடியின் நூற்றாண்டு விழா நடந்து முடிந்தது. அதற்கு முன் அதை வெகு விமர்சையாகக் கொண்டாட சாயி சன்ஸ்தான் 2008 ஆம் ஆண்டு டிசம்பர் மாதமே அந்த வைபவத்தை துவக்கி வைத்தது. சீரடிக்கு செல்பவர்கள் துவாரகாமயியை மட்டும் தரிசித்தால் போதாது. சாவடிக்கும் சென்று பாபாவை வணங்க வேண்டும் . சாவடி பற்றி எழுதி உள்ள இந்த செய்திகள் பல இடத்தில் இருந்து எடுத்தவை. மேலும் பக்தர்களிடம் பல செய்திகளும் புகை படங்களும் இருந்தால் அவற்றை அனுப்பினால் பிரசுரிக்க வசதியாக இருக்கும்.
சாவடியின் அறிய புகைபடங்கள்


சாவடியின் கதை

சாவடி என்றால் கிராம அலுவலகம் என்ற பொருள் உண்டு. அந்த இடத்தில்தான் கிராமத்தின் அனைத்து பதிவேட்டுகளும் வைக்கப்பட்டு இருக்கும். கிராமத்தினர் அங்கு வந்து கூடி முக்கியமான எதையும் விவாதிப்பார்கள். முதலில் துவாரகாமாயியிலேயே இருந்து வந்த சாயி பாபா ஒரு குறிப்பிட்ட காரணத்துக்குப் பின் ஒருநாள் விட்டு ஒருநாள் சாவடியில் வந்து இரவில் உறங்கலானார். சீரடியில் இரண்டு சாவடிகள் உள்ளன. அதில் ஒன்று வடக்கு நோக்கியும் இன்னொன்று தெற்கு நோக்கியும் அமைந்து உள்ளது. வடக்கு நோக்கி அமைந்து உள்ள சாவடியில் கிராம அலுவலகம் இருக்க, தெற்கு நோக்கி அமைந்து உள்ள சாவடியில்சாயிபாபா வந்து உறங்கினார். அங்கு அவர் தன்னுடைய பக்தர்களுக்கும் தரிசனம் தந்து வந்தார்.

சாயிபாபாவுக்கு சாவடியுடன் எப்படி தொடர்பு ஏற்பட்டது என்றால், 1909 ஆம் ஆண்டில் ஒருமுறை பெரும் மழை பொழிந்து துவாரகாமாயி மசூதியில் தண்ணீர் புகுந்து வரத் துவங்கியது . சுவர்கள் பழுதடைந்து உள்ளே தண்ணீர் ஊறத் துவங்கியது . பாபாவின் பக்தர்கள் அவரை அங்கிருந்து வேறுஇடத்துக்கு செல்லுமாறு கூறியும் அவர் மழை நின்று தண்ணீர் வடிந்த பிறகே வருவேன் என அடம் பிடித்ததினால், அவரை பக்தர்கள் வலுக்கட்டாயமாக தூக்கிக் கொண்டு சாவடிக்கு சென்று அங்கு தூங்கச் சொன்னார்கள் . அன்று முதல் ஒருநாள் விட்டு மறுநாள் அவர் சாவடிக்கு சென்று உறங்கத் துவங்கினார்.

சாவடியைப் பொறுத்தவரை அந்த இடம் பாபாவின் பக்தர்களுக்கு முக்கியமான இடமாக அமைந்தது. துவாரகாமாயியில் இருந்து கிளம்பி இரவு பாபா அங்கு வந்ததும் அவருக்கு உறங்கும் முன் செய்யும் இரவு ( சேஜ் என்ற ) ஆரத்தி எடுத்தனர். காலை அவர் விழித்து எழுந்ததும் அதிகாலை ( காகட்) ஆரத்தி எடுத்தனர். சாவடியில் எழுதி வைக்கப்பட்டு உள்ள ஒரு கல்லில் காணப்படும் வாசகம் இது. ''ஸ்ரீ சாயிநாத பாபாசி லக்ஷ்மி பாய் தாமோதர் பாபரி , சின்சாநிகர் சாவடி சாகா 1859 ''
தாமோதர் பாபரி சிஞ்சானி என்ற கிராமத்தில் இருந்து தன்னுடைய மனைவியுடன் அங்கு வந்து வசித்தவர் . அவர்கள் அங்கு இருந்து கொண்டு எந்தவிதமான பிரதி பலன்களையும் பார்க்காமல் பாபாவுக்கு பணி விடைகளை செய்து கொண்டு இருந்தனர். அவர்களுக்கு குழந்தைகள் இல்லை. பாபாவிடம் அவருடைய பக்தர்கள் சிலர் அந்த குடும்பத்தினருக்கு வாரிசு இல்லையே என வருந்தியபோது பாபா கூறினாராம் ' எவராவது எதையாவது கேட்டு நான் தராமல் இருந்துள்ளேனா ?' அவருக்கு மகன் பிறந்தால் அவருடைய பெயர் சுமார் பத்து ஆண்டுகள் மட்டுமே நிலைக்கும் என்பதை அறிந்திருந்த பாபா அவர்களுடைய பெயர் நிலையாக இருக்க வேண்டும் என நினத்ததினால்தான் அவர்கள் மழலை செல்வம் பெற்றிட வழி செய்யவில்லையா ?

அந்த சாவடி இருந்த இடத்தைப் பற்றி ஒரு வழக்கு ஏற்பட்டது. அண்ணா சின்சின்கார் ( அனைவரும் தாமோதர் பாபாரேயை அப்படித்தான் அழைப்பார்கள்) அவ்வப்போது பாபாவிடம் அது குறித்துக் கேட்டால் அவர் 'அல்லா நல்லதே செய்வார் ' என்று மட்டும் பதில் கூறுவார். அந்த ஊரில் இருந்த புகழ் பெற்ற வக்கீலான அச்சுத் நாராயண காரே என்பவர் அந்த வழக்கை கையாண்டு வந்தார். ஒருமுறை அண்ணாவுக்கு எவரோ அந்த வழக்கில் அவர் தோற்றுவிட்டதாக தகவல் கொடுக்க அதை எடுத்துக் கொண்டு அவர் அச்சுத் நாராயண காரேயிடம் சென்றார். அவர்கள் இருவரும் பாபாவிடம் செய்தியைக் கூற துவாரகாமாயிக்கு சென்றனர். அவர்களைக் கண்ட பாபாவுக்கு கோபம் வந்துவிட்டது ' இந்த கிழவனுக்கு என் மீது நம்பிக்கை இல்லை. அந்த கடிதத்தை கிழித்துப் போடு' எனக் கத்தினார்.
அதன் பின் அவர்கள் அந்த வழக்கில் வெற்றி பெற்று இருந்த செய்தி மட்டும் அல்ல வழக்கு செலவுக்காக பதினெட்டாயிரத்து ஏழு ரூபாயும் நீதிமன்றம் அளித்து இருப்பதாக வக்கீல் கூறினார். அண்ணா அந்த கடிதத்தையும் பணத்தையும் பாபாவின் காலடியில் வைத்து அது அவருக்கே சொந்தம் எனக் கூறியும் தான் ஒரு பரதேசி எனக் கூறி அதை பெற்றுக்கொள்ள பாபா மறுத்தார். ஆனால் அண்ணா மிகவும் வற்புறுத்தியிதினால் பாபா அதை வாங்கிக் கொண்டார். அதை சாவடியின் சீரமைப்புக்கு உபயோகித்துக் கொள்ளலாம் எனவும் அண்ணா மற்றும் லஷ்மி பாயியின் பெயரை சாவடிக்கு வைக்கலாம் எனவும் முடிவு ஆயிற்று.
சாவடியின் உள்ளே

1953 ஆம் ஆண்டில் குஜராத்தில் இருந்த அம்பாராம் என்பவருக்கு பாபா தன்னுடைய மகாசமாதிக்கு பிறகு தரிசனம் தந்ததினால் அவர் பாபாவின் படத்தை வரைந்தார். அப்போது அம்பாராமுக்கு பதினெட்டு வயதே ஆயிற்று. தனக்கு பாபா எந்த ரூபத்தில் கனவில் காட்சி தந்தாரோ அதே ரூபத்தில் அதை அவர் வரைந்து இருந்தார். நவ்சாரி என்ற அந்த கிராமத்து மக்கள் பாபாவின் பெருமையை கேள்விப்பட்டதினால் பணம் திரட்டி அம்பாராம் வரைந்த ஓவியத்திற்கு பிரேம் செய்து பாபாவின் சன்ஸ்தானிடம் தந்து விட அவர்கள் அதை சாவடியில் பாபா எந்த இடத்தில் அமர்ந்தவாறு காலை மற்றும் இரவு ஆரத்தியை ஏற்றுக் கொண்டாரோ அந்த இடத்தில் வைத்தனர். அந்த படத்தின் இடப்புறமாக பாபா எந்த கட்டிலில் கடைசியாக குளிப்பாட்டப்பட்டரோ அதை வைத்து உள்ளனர். அந்த கட்டிலின் மீது பல்லக்கை வைத்து வியாழக் கிழமைகளில் ஊர்வலமாக அதை எடுத்துச் செல்கின்றனர்.
ராஜ உபசாரம்
அந்த மையத்தின் வலது புறத்தில் உள்ள இடத்தில் கால்களை மடித்துக் கொண்டு பாபா அமர்ந்து உள்ள அருமையான படம் ஒரு வெள்ளி நாற்காலியில் வைக்கப்பட்டு உள்ளது. அந்த படத்தையே வியாழக் கிழமை ஊர்வலத்தில் எடுத்துச் செல்கின்றனர். அந்த வெள்ளி சிம்ஹாசனம் வைக்கப்பட்டு உள்ள இடத்தில்தான் பாபா படுத்து உறங்குவாராம். ஆகவே அந்த இடத்திற்கு பெண்கள் செல்ல அனுமதிக்படவில்லை. அந்த பழக்கம் இன்றும் கடை பிடிக்கப்படுகின்றது. வியாழக் கிழமை மதிய ஆரத்திக்கு பிறகு அதை தரிசனத்துக்கு வைக்கிறார்கள் . அதன் பிறகு அதை சமாதி ஆலயத்திற்கு கொண்டு சென்று ராஜ உபசாரம் என்ற நிகழ்சியை செய்கின்றனர். சாவடிக்கு எடுத்துச் செல்லும் அதற்கு அதற்கு சில்லும் என்ற களிமண்ணால் செய்த புகை பிடிக்கும் குழாயை வைத்து மரியாதை செய்தபின் மீண்டும் சமாதி ஆலயத்திற்கு இரவு ஆரத்திக்கு கொண்டு வருகின்றனர். மறுநாள் காகட ஆரத்திக்குப் பின் அதை மீண்டும் சாவடிக்கு எடுத்து வருகின்றார்கள். சாவடியை காலை ஐந்து மணிக்கு திறந்த பின் இரவு பத்து மணிக்கு மூடிவிடுகின்றனர்.
பாபா பயன்படுத்திய கட்டில்

1918 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பதினைந்தாம் தேதியன்று பாபா மறைந்த பிறகு அவருடைய சடலத்தை மூன்று நாட்கள் ஒரு கட்டிலில் வைத்து இருந்தார்கள். இறுதி காரியம் செய்யும் முன் அவரை எந்த இடத்தில் வைத்து இருப்பது என அவருடைய பக்தர்களிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் அவரது சடலம் அந்த கட்டிலிலேயே வைக்கப்பட்டு குளிப்பாட்டப்பட்டது. அதன் பிறகு அதை தற்போது உள்ள சமாதி ஆலயத்திற்கு ஊர்வலமாக எடுத்து வந்து இறுதி காரியங்களை செய்தனர் . முதலில் துவாரகாமாயியில் இருந்த அந்த கட்டில் தற்போது சாவடியில் வைக்கப்பட்டு உள்ளது.

சக்கர நாற்காலி

1886 ஆம் ஆண்டில் பாபாவுக்கு கடுமையான ஆஸ்துமா நோய் வந்து அவதிப்பட்டார். அதற்காக அவர் 72 மணி நேர சமாதியை மேற்கொண்டார். அப்போது அவருடைய உடலை மகால்சபாதி பாதுகாத்து வந்தார். பாபா நடுநடுவே இருமினார். அவ்வளவுதான். பாபாவின் வயதான நிலையைக் கண்ட ஒரு பக்தர் அவருடைய உபயோகத்துக்கென ஒரு சக்கர நாற்காலியைத் தந்தார். பாபா அதை உபயோகிக்கவே இல்லை. நடுநடுவே அதை அவர் தொடுவது மட்டும் உண்டு. தன்னுடைய பக்தர்களின் துணையைக் கொண்டு நடப்பார். இப்போது அந்த நாற்காலி சாவடியில் வடகிழக்குப் புறத்தில் பார்வையாளர்களுக்காக வைக்கப்பட்டு உள்ளது .
ராதாக்ருஷ்ண ஆயி என்பவர் பண்டார்புரில் இருந்து வந்து சீரடியில் வந்து தங்கியவர். அவர் பாபாவுடனேயே தங்கினார். பாபாவை ராஜாவை போல வைத்து இருக்க வேண்டும் என விரும்பியவர் வருபவர்களை விலை உயர்ந்த பொருட்களை வாங்கி வருமாறு கூறுவார். காகா மகாஜானி என்பவர் பாபாவுக்காக விளக்குகளுக்குப் போடும் விலை உயந்த கண்ணாடி மூடிகளை வாங்கித் தந்து இருந்தார். கோவர்த்தன் தாஸ் என்பவர் பாபாவுக்கு குடை பிடித்தபடி செல்லும் தொண்டர்கள் போட்டுக்கொள்ள விலை உயர்ந்த உடுத்தும் துணிகளையும், சில்க் சுவர் தடுப்புகளையும் வாங்கித் தந்தார். சாவடியின் மண் சுவர் புதுப்பிக்கப்பட்டு பெரிய பெரிய முகம் பார்க்கும் கண்ணாடிகள் பதிக்கப் பட்டு, தரையில் பளிங்கு கற்கள் புதைக்கப்பட்டு, மேல் சுவற்றில் இருந்து அழகான கண்ணாடி விளக்கு குடுவைகள் தொங்க விடப்பட்டன.
பாபாவின் ஊர்வலம்

பாபாவை புரிந்து கொள்வது கடினம். அவர் தன்னை பகிர் என்று கூறிக்கொண்டு எளிமையான வாழ்வை வாழ்ந்து கொண்டு இருந்தாலும், சாவடியில் இருந்த பொது மிகவும் செல்வந்தரைப் போல வாழ்கையை வாழ்ந்து வந்தார். ஹெமன்ட்பன்ட் என்பவர் பாபாவின் ஊர்வலத்தைப் பற்றி எழுதி உள்ளார் . அது இதோ: " மக்கள் பஜனைகளைப் பாடிக்கொண்டு இருக்க, சிலர் பல்லக்கை அழகு படுத்தி கொண்டு இருக்க, விளக்குகளை மற்றும் சிலர் எரிய விட்டுக் கொண்டு இருக்க, தத்யா பாடீல் என்பவர் சிலருடன் வந்து பாபாவை எழுந்து வருமாறு கூறியும் பாபாவினால் எழுந்து நிற்க முடியவில்லை. ஆகவே தத்யா பாடீல் வந்து பாபாவின் கைகளுக்கு அடியில் தன் தோளை வைத்து அவரைத் தூக்கி நிறுத்தினார்.
பாபா சாதாரண காப்பினியைதான் அணிந்து இருந்தார். தன் கைக்கு கீழே வைத்து இருந்த சிறு தடியை எடுத்துவிட்டு, புகை பிடிக்கும் குழையும் புகையிலையையும் எடுத்துக் கொண்டு கிளம்பினார். அதன் பின் எரிந்து கொண்டு இருந்த விளக்கை கையினால் அணைத்துவிட்டு, காலடியில் கிடந்த கட்டைகளை காலினாலே தள்ளி விட்டு கிளம்பினார். ஆடல்களும் பாடல்களும் கொண்ட கூட்டத்தில் சிலர் ஆடிக்கொண்டு இருக்க சிலர் பாபாவின் பெயரைக் கூறி வாழ்க என்ற கோஷத்தை எழுப்ப ஊர்வலம் மசூதியை நெருங்கியது. பாபாவின் இரு புறத்திலும் இருவர் நின்றுகொண்டு விசிறியால் வீசிக்கொண்டு இருக்க பக்தர்களின் கைகளை பிடித்துக் கொண்டு பாபா நடந்தார். தத்யபா பாபாவின் இடது கையையும் மாலச்பதி வலது கையையும் பிடித்துகொண்டு இருக்க பாபுசாஹெப் ஜோக் என்பவர் பாபாவின் தலை மீது வெண்சாமரைக் குடையை பிடித்துக் கொண்டு நடந்தார். அருகில் இருந்த மாருதி ஆலயத்தை அடைந்ததும் பாபா என்றும் நிற்பது போல நின்றார். அங்கு நின்றபடி கைகளால் எதோ ஹனுமானை நோக்கி சமிக்கை செய்தார். அது என்ன என்பது பாபாவுக்கு மட்டுமே தெரியும்.

சியாமகாம என்ற அலங்கரிக்கப்பட்ட குதிரை வாத்தியக் குழுவினரையும் பஜனை பாடல்களை பாடியவண்ணம் செல்பவர்களையும் பின் தொடர்ந்து போக ஹரி நாமா கோஷம் விண்ணைப் பிளக்குகின்றது. சாவடியை அடைந்ததும் பாபா சாவடியைப் பார்க்க அவருடைய முகம் ஜொலிக்கும் சூரியன் போல பிரகாசித்தது . அங்கிருந்து வடக்கு பக்கம் நோக்கியபடி திரும்பிய பாபா எவரையோ கை அசைத்துக் கூவினார் . அவருடைய கைகளை உயர்த்தியும், தாழ்த்தியும் கையை அசைத்தார். அப்போது காக்கா சாஹேப் தீட்சித் வந்து அவர் மீது மலர்களையும் குங்குமத்தையும் தூவினார்.
வாத்திய முழக்கங்கள் அப்போது அதிகரிக்க பாபாவின் முகம் இன்னமும் பிரகாசித்தது. அதை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. மாலச்பதி நடனம் ஆடத் துவங்கினார். அனாலும் பாபாவின் சிந்தனை வேறு எங்கோ இருந்தது.
விளக்கை கையில் எடுத்துக் கொண்டு தத்தியா படீல் இடபுறம் வர மாலச்பதியோ வலப்புறத்தில் வந்து நின்றார். என்ன அருமையான ஊர்வலக் காட்சி அது. ஏழைகள், பணக்காரர்கள் என்ற எந்த வித்யாசமும் இன்றி அனைவரும் ஒன்று சேர்ந்து நடந்து வந்தனர். மெல்ல மெல்ல ஊர்வலம் சாவடியை அடைந்தது.
சாவடி முழுவதும் அலங்கரிக்கப்பட்டு இருந்தது . அங்கு சென்றதும் தத்ய பாபாவிடம் கோட்டு ஒன்றை தந்து அதை போட்டு கொள்ளுமாறு கூறினார் . ஒரு சிலர் அவருக்கு தலைபாகை அணிவித்தனர் . சிலர் மாலைகளைப் போட்டனர் . நெற்றியில் சந்தானம் மற்றும் திலகம் இட்டனர் . அவை அனைத்தையும் பக்தர்களுடைய சந்தோஷத்திற்காக பாபா அமைதியாக இருந்து கொண்டு ஏற்றுக்கொண்டார் .
நானாசாஹெப் நிமோன்கர் என்பவர் அழகு செயபட்ட குடையை பிடித்துக் கொள்ள, பாபு சாஹேப் ஜோக் என்பவர் பாபாவின் கால்களை வெள்ளித் தட்டில் வைத்து அலம்பி விட்டார் . கைகளிலும் கால்களிலும் சந்தனத்தைத் தடவினர் . வண்டியில் பாபா ஏறிக் கொண்டதும் பக்கத்தில் உள்ள மக்கள் சாமரம் வீசியபடி ச சென்றனர் . பாபாவிடம் புகையிலை அடைக்கப்பட்ட குழாயை தீயினால் ஏற்றிக் கொடுக்க அதை அவர் ஒரு முறை உள்ளே இழுத்தப் பிறகு மலாச்பதியிடம் கொடுக்க அவர் அதை ஒருமுறை புகைத்து விட்டு மற்றவரிடம் கொடுக்க , அடுத்தவர் அதற்கு அடுத்தவர் என அது பிரசாதம் போல கை மாறிக்கொண்டே இருந்தது . அதன் பின் பக்தர்கள் மீண்டும் அவருக்கு மலைகளை அணிவித்தனர் . பூக்களை முகர்ந்து பார்க்கத் தந்தனர். நகை போன்றவற்றை வெறுத்து வந்த பாபாவோ அன்று பக்தர்களுடைய சந்தோஷத்திற்காக அவற்றை ஏற்றுக்கொண்டார் .

முடிவாக பாபு சாஹேப் ஜோக் வாத்தியங்களின் முழக்கத்துடன் ஆரத்தி எடுக்க மக்கள் களைந்து செல்வார்கள். தத்ய பாடீல் பாபாவுக்கு சில்லும், அத்தர், பன்னீர் போன்றவற்றை தந்தபின் பாபா கூறினார் ' முடிந்தால் என்னை காப்பாற்று, இரவு வந்து என் நலத்தை கவனி. '' தத்தியா திரும்பிப் போக பாபா ஐம்பது அல்லது அறுபது படுக்கை விரிப்புக்களை படுக்கை போல தானே படுக்கையை விரித்துக் கொண்டு படுத்துவிட்டார் .

காலை வேளையில் பக்தர்கள் மீண்டும் சாவடிக்கு வந்து பாபாவை துவாரகாமாயிக்கு அழைத்துச் செல்வார்கள். அனைவரிடமும் அன்பு செலுத்தி கருணை புரிந்த அந்த மகானுக்கு அது மீண்டும் மீண்டும் அது நடந்தது.
என்ன அற்புதமான ஊர்வலம். எத்தனை பக்தி பெருக்குடனான கூட்டம். அந்த காலத்தில் நடந்த அந்த அற்புதமான பக்திபூர்வமான ஊர்வலத்தை மீண்டும் அதே மாதிரியான உணர்ச்சி பூர்வமான காட்சியுடன் காண முடியாது .
சாவடியில் தற்போது நடைபெறும் ஊர்வலம்

நாம் இன்னமும் அதிஷ்டசாலிகள்தான். இன்றும் வியாழக் கிழமைகளில் அப்படிப்பட்ட விமர்சையான ஊர்வலம் நடைபெறுகின்றது. உங்களால் முடிந்தால் அந்த ஊர்வலத்தில் நீங்களும் சென்று கலந்து கொள்ளுங்கள். வியாழக் கிழமைகளைத் தவிர ராம நவமி, குரு பூர்ணிமா மற்றும் தசராவிலும் அந்த ஊர்வலம் நடை பெறுகின்றது.
மாலையில் 7.30 மணிக்கு பாபா பயன்படுத்திய தோல்களினால் செய்யப்பட்ட இரண்டு பாதுகைகளையும் சட்காவையும் மக்களுடைய பார்வைக்கு வைப்பார்கள். அதன் பின் அவை இரவு ஒன்பது மணிக்கு நடைபெறும் ஊர்வலத்தின் ஆரம்பத்தில் எடுத்துச் செல்லப்படும். அதில் உள்ளூர் கிராமத்தினர் இனிமையான பஜனைப் பாடல்களைப் பாட வேறு சிலர் மத்தளங்கள் அடித்தவாறு செல்வார்கள். பாபாவின் பெயரைக் கூறிக்கொண்டே பல ஆயிரக்கணக்கான மக்கள் ஊர்வலத்தில் கலந்து கொள்வார்கள். வழி முழுவதும் உள்ள இடங்கள் பசு சாணத்தினால் மெழுகப்பட்டு வண்ணமயமான கோலங்களுடன் காட்சி தரும். திருமணமான பெண்கள் ஆரத்தியும் எடுப்பார்கள். வேறு பல வாத்திய கோஷ்டிகளும் சேர்ந்து கொண்டு தெய்வீக நிலையை இன்னும் அதிகமாகி விடுவார்கள்.
9.15 மணிக்கு ஊர்வலம் சமாதி ஆலயத்தை அடையும். பாபாவுடம் மிகவும் நெருக்கமாக இருந்த தத்ய கோடே படேல் பக்தியுடம் மாலைப் போட்ட பாபாவின் படத்தை தூக்கிக்கொண்டு நடப்பார்.

தத்ய கோடே படேலுக்கு முன்னால் ஆலய சேவகர்கள் சட்கா மற்றும் பாதுகையை எடுத்துக் கொண்டு நடக்க அவர்களைத் தொடர்ந்து மற்றவர்கள் செல்வார்கள் . மகாராஷ்ரிய மக்களைப் போன்ற தலைப்பாகையை கட்டிக் கொண்டு வழி எங்கும் பாடல்களும் ஆடல்களும் பாடிக்கொண்டு நடந்து செல்வார்கள். அந்த படத்தைக் காண மக்கள் முண்டி அடித்துக் கொண்டு வந்து அதன் மீது மலர்களைத் தூவுவார்கள்.
துவாரகாமயியை ஊர்வலம் அடைந்ததும் அந்த படத்தை வெள்ளி பல்லக்கில் இறக்கி வைத்து பஜனைகள் நடக்கும். அந்த சடங்கு சுமார் பதினைந்து நிமிடங்கள் நடக்க அதன் பின் ஆலயத்தின் சேவகர்கள் அதை சாவடிக்கு எடுத்துச் செல்வார்கள்.
சாவடியை பல்லக்கு அடைந்ததும் அதை கீழே இறக்கி வைப்பார்கள். தங்க வேலைபாடுகள் கொண்ட சில்க் துணியினால் சுற்றி வைக்கப்பட்டு உள்ள பாபாவின் படத்தை பாபாவே இறங்கி சாவடிக்கு உள்ளே நுழைவது போலக் கருதி பெரும் கரகோஷம் எழுப்பப்படும். வழி நெடுக இடம் இருந்தால் மக்கள் பாபாவின் பெயரை கூறிக் கொண்டே கீழே விழுந்து நமஸ்கரிப்பார்கள். ஆரத்தியும் எடுப்பார்கள்
முடிவாக அனைவரும் சமாதி ஆலயத்துக்கு திரும்பிவர அங்குள்ளவர் சட்காவையும் பாதுகைகளையும் திரும்ப பெற்றுக் கொள்கின்றார். கோடே சகோதரர்கள் படத்தையும் திரும்பத் தந்தபின் தேங்காயை பிரசாதமாகப் பெற்றுக்கொண்டு செல்கின்றனர். இரவு பத்து மணிக்கு நடக்கும் ஆரத்தி வரை பிரசாதம் பாபாவின் மூர்த்திக்கு பின்னால் வைக்கப்பட்டு இருக்கும். மறுநாள் காலையில் அந்த படம் காலை ஆரத்திக்கு சாவடிக்கு மீண்டும் கொண்டு செல்லப்படும்.
ஊர்வலத்தின் போது வழி முழுவதும் பாபாவின் பெருமையைக் கூறும் விதத்தில் கோஷங்கள் எழுப்பப்படும். உற்சவத்தின் பொழுது அது மூன்று இடங்களில் நூறு வருடங்களுக்கு முன் பாபா நடந்து சென்ற இடத்தில் இன்றும் நடைபெறுகின்றது.
இன்றும் வியாழக் கிழமைகளில் ஊர்வலம் நடைபெறுகின்றது.

Chavadi Procession Video:View by Clicking Here


(Translated into Tamil by Santhipriya)
Image and video hosting by TinyPic© Shirdi Sai Baba Stories In Tamil.

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.