Friday, May 14, 2010

Sai ,Sai, Every where-Experience By Archana.

அன்பானவர்களே
இன்று நாம் சாயி பக்தையான அர்ச்சனாவின் சாயியின் அனுபவத்தைப் படிக்கலாம். தனக்கு வந்த கனவு நிஜமானது பற்றி அவர் கூறி உள்ளதை படிக்கையில் மிகவும் ஆச்சர்யமாக உள்ளது. மேலே காணப்படும் படம் அர்ச்சனா தானாகவே ஒரு படத்தை தனது கம்ப்யூட்டரில் உரு மாற்றி செய்தது. அவர் முன்னர் எழுதி இருந்த சென்னை சீரடிபுற ஆலயம் பற்றி படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
மனிஷா
அர்ச்சனாவின் அனுபவம்

எங்கள் வீட்டினர் விடுமுறையில் திருப்பதி செல்ல விரும்பினர். நான் சீரடிக்கு செல்ல விரும்பினாலும் அவர்களோ நீ இப்போதுதானே சமீபத்தில் சீரடிக்கு சென்றாய் எனக் கூறி திருப்பதி பயணத்துக்கு ஏற்பாடு செய்து விட்டனர். நான் பாபாவிடம் தான் சீரடியிலும் உள்ளேன், திருப்பதியிலும் உள்ளேன் என்பதை அவர்களுக்கு எடுத்துக்காட்டி அவர்களின் மனத்தை மாற்றச் சொல்லி வேண்டிக் கொண்டாலும் அது நடக்கவில்லை. பாபா என்ன நினைத்தாரோ?
நாங்கள் செவ்வாய் கிழமை கிளம்புவதாக இருந்தது, ஆனால் அது மாறி புதன் காலை கிளம்பலாம் எனவும், அன்று மாலையே ஏழு மணிக்கு திருப்பதியில் தரிசனத்துக்கு ஏற்பாடு செய்து உள்ளதாகவும் என்னுடைய ஒன்றுவிட்ட சகோதரன் கூறினான். நாங்கள் தரிசனம் செய்ய இருந்த நாள் உகாதி பண்டிகைக்கு முதல் நாள் என்பதினால் அங்கு கூட்டம் மிக அதிகமாக இருக்கும் எனவும் கூறினான்.

அதற்கு முன் ஒரு செய்தி. எனக்கு ஐந்து மாதங்களுக்கு முன்னால் ஒரு கனவு வந்திருந்தது. அதில் சிவபெருமான் பார்வதியின் மடியில் தன் தலையை வைத்துப் படுத்து உள்ளது போல காணப்பட்டார். எங்குமே படுத்துள்ள நிலையில் விஷ்ணு மட்டுமே இருப்பார். ஆனால் சிவபெருமான் படுத்துள்ள நிலையில் உள்ளாரா? விடிந்ததும் நான் இன்டர்நெட்டில் சிவன் படுத்து உள்ள காட்சியில் ஆலயம் உள்ளதா எனத் தேடினேன். சென்னையில் இருந்து திருப்பதி செல்லும் வழியில் சுருளிப்பள்ளி என்ற ஊரில் அப்படி ஒரு ஆலயம் உள்ளதாகத் தெரிந்தது. அந்த ஆலயத்தில் உள்ள சிவ பெருமானின் பெயர் பள்ளி கொண்டேஸ்வரர் .

அந்த கனவு வந்து ஐந்து மாதங்கள் ஆகி விட்டன. அதை பற்றி நான் மறந்தே போய் விட்டேன். நாங்கள் திருப்பதிக்கு சென்றபோது நினைவுக்கு வர வழியில் அந்த ஊர் எங்கேனும் தென்படுகின்றதா என பார்த்துக் கொண்டே வந்தேன். அப்படி ஒரு இடம் தென்படவே இல்லை. நாங்கள் திருப்பதியை சென்று அடைந்தோம்.

திருப்பதி மலை அடிவாரத்தில் அழகான சாயி பாபா ஆலயம் இருந்தது. நல்ல சகுனம் என நினைத்தேன். மேலே செல்லச் செல்ல சீரடியில் இருந்ததைப் போலவே வழி எங்கும் கடைகள். பல கடைகளில் பாபாவின் படங்கள். நாங்கள் சென்ற இடங்களில் எல்லாம் சாயி பாபாவின் படங்கள். கார்களிலும் பாபாவின் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருந்தது. எங்களுக்கு முன்னால் சென்று கொண்டு இருந்த வண்டியில் பாபாவின் படம். அது எங்களுக்கு வழி காட்டிக்கொண்டே செல்வது போல இருந்தது.

நாங்கள் எங்கள் இடத்துக்கு சென்று தங்கினோம். எங்களை அழைத்துப் போக வந்தவர், தரிசனத்தை மறு நாள் காலை ஏழு மணிக்கு வைத்து உள்ளதாகக் கூறினார். மறு நாள் வியாழக் கிழமை. பாபாவின் நாள். வியாழக் கிழமைகளில் நான் எப்படியெல்லாம் பாபாவை பூசிப்பேன் என மனதில் எண்ணினேன். ஆலயத்துக்குச் சென்று வரிசையில் நின்று ஆலயத்துக்குள் நுழைந்தோம். அது வரை என் மனதில் சாயிராம், சாயிராம் என்ற மந்திரம் ஓடிக்கொண்டே இருந்தது. உள்ளே நுழைந்த எனக்கு பாபாவின் சமாதி ஆலயத்துக்குள் நுழைவதைப் போன்ற எண்ணம் தோன்றியது. வழியில் சாயிபாபாவின் பெரிய உருவ சிரித்த நிலையில் இருந்தது கண்ணில் பட்டது.

திருப்பதி ஆலயம் மிகவும் பணக்கார ஆலயம். ஆண்டவருக்கு அட்டகாசமாக நகைகளினால் அலங்கரித்து இருப்பார்கள். அந்த புகைப் படங்களையும் நான் பார்த்து இருந்தேன். உள்ளே நுழைந்தால் பகவான் வெறும் வெட்டி மட்டுமே அணிந்த மிக எளிமையான காட்சியில் பாபாவைப் போல காட்சி தந்தவண்ணம் இருந்தார். முழுமையான அமைதி. எனக்கு அவரைப் பார்த்தபோது பாபாவைப் பார்ப்பது போலவே இருந்தது. தரிசனம் முடிந்து வெளியில் வந்ததும் என்னுடைய தாயார் 'உனக்கு பிடித்து இருந்ததா' எனக் கேட்டாள். நான் அவளிடம் கூறினேன் ' அம்மா, நான் சீரடியில் இருந்ததைப் போலவே இருபதாக எண்ணினேன்'.

அறையை காலி செய்துவிட்டு ஊருக்கு கிளம்பினோம். எதிரில் ஒரு பெரிய கார். பாபாவின் படத்துடன்!. எங்களை வழி அனுப்ப வந்தது போல இருந்தது. நாங்கள் சென்ற இடங்களில் எல்லாம் - சாப்பாட்டு இடம், தேவி ஆலயம் என அனைத்திலும் பாபாவின் படங்களைப் பார்த்தேன். நான் மனதில் நினைத்தேன், ' பாபா நீதானே எனக்கு உறங்கும் சிவனை கனவில் காட்டினாய். இங்கு எவருக்கும் அது உள்ள இடம் தெரியாது. நீ விரும்பினால் அதை எனக்குக் காட்டு' . வண்டியில் ஏறிய நான் தூங்கத் துவங்கினேன். என் ஒன்று விட்ட சகோதரன் வண்டியை வந்த வழியிலேயே ஓடிக்கொண்டு இருந்தான். என்னுடைய தாயார் வழியில் ஒரு இடத்தில் இருந்த சுருளிப்பள்ளி என்ற பெயர் பலகையை படிக்க திடீரென கண் விழித்தேன். நானும் எழுந்து அமர்ந்து கொண்டு என் கனவில் வந்த ஆலயம் எங்கேனும் தென்படுகின்றதா எனப் பார்த்தேன். தூரத்தில் ஒரு ஆலயம் தெரிந்தது. அதில் சிவன் உறங்கும் காட்சியில் இருந்தார். நான் சொல்ல முடியாத மகிழ்ச்சியை அடைந்து வண்டியை உடனே அந்த ஆலயத்தின் முன் நிறுத்துமாறு கூறினேன்.

ஆலயத்தின் வெளியில் பாபாவின் பல படங்கள் காணப்பட்டன. நான் இன்ப அதிர்ச்சி அடைந்தேன். என்னை என்னுடைய பாபா தான் கனவில் காட்டிய ஆலயத்துக்கு அழைத்து வந்து என்னுடைய வேண்டுகோளை நிறைவேற்றி விட்டார். ஆலயத்தை அப்டைந்ததும் காரில் இருந்து இறங்கி உள்ளே அவசரம் அவசரமாகச் சென்றேன் . என் கனவில் வந்த அதே காட்சியில் சிவ பெருமான் பார்வதி மடியில் தலை வைத்து உறங்கிக்கொண்டு இருந்தார். அந்த அற்புதக் காட்சியை என் போனிலும் படம் பிடித்துக் கொண்டேன். அந்த ஆலய விவரங்களை சேகரித்துக் கொண்டு அங்கு சற்று அமர்ந்து இருந்துவிட்டுக் கிளம்பினோம்.

என்னை என் பாபா கைவிடவில்லை. மனதார அவருக்கு நன்றி கூறினேன்.
சென்னை திரும்பியதும் என்னுடைய தந்தையும் சகோதரனும் தாங்கள் எப்படி வந்த பாதையை விட்டு விலகி அந்த பாதை வழியே வந்தோம் என்பதை பற்றி விவாதித்துக் கொண்டு இருந்தனர். அங்கு சென்ற நான் அவர்களிடம் மெல்ல கூறினேன், 'உங்களை அந்த ஆண்டவன் தன்னைப் பார்க்க வருமாறு அழைத்து இருந்தாரோ என்னவோ' . என் மனது மகிழ்ச்சியால் நிரம்பியது என்பதே உண்மை.
(Translated into Tamil by Santhipriya)

Image and video hosting by TinyPic© Shirdi Sai Baba Stories In Tamil.

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.