Sai Baba's Love is Boundless-Experiences By Kamal Prasad Maskae
அன்பானவர்களே
ஜெய் சாயி ராம்
இன்று நான் பாபாவின் பக்தரான ஸ்ரீ கமல் பிரசாத் மச்சேயின் இதயத்தைத் தொடும் அனுபவங்களை வெளியிட்டு உள்ளேன். இதில் இருந்து பாபாவை நம்புபவர்களை அவர் எப்படி எல்லாம் காப்பாற்றி வருகிறார் என்பதும் அவர் அன்பின் அளவு அளவிட முடியாதது என்பதும் விளங்கும். இனி அவருடைய அனுபவங்களைப் படியுங்கள்.
மனிஷா----------------------ஸ்ரீ கமல் பிரசாத் மச்சேயின் அனுபவம் -----------------
ஜெய் சாயி ஸ்ரீ சாயி ஜெய் ஜெய் சாயி
நான் ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவன் . தற்போது தனியார் நிறுவனத்தில் வேலை செய்கின்றேன். என்னால் முடிந்த அளவிற்கு நான் தினமும் சாயி பாபாவின் பூஜைகளை செய்து வருகிறேன். எனக்கு இரண்டு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். அனைவரின் நலனுக்காகவும் நான் பாபாவை வேண்டிக் கொள்வேன். எனக்கு சிறு வயது முதலேயே பாபாவிடம் பக்தி உண்டு. அவர் மூலம் பல நன்மைகளை நான் அடைந்து உள்ளேன். அவற்றில் சிலவற்றை கீழே தந்து உள்ளேன்.
- 1962 ஆம் ஆண்டு எனக்கு மூன்று வயதாக இருக்கும்போது அப்போது நடந்து கொண்டு இருந்த யுத்தத்தினால் என்னுடைய தந்தைக்கு மீண்டும் ராணுவத்தில் வந்து சேருமாறு அழைப்பு வந்தது. என்னுடைய தாயார் அழுதாள். ரயில் நிலையத்தில் சென்று தந்தையை ரயிலில் ஏற்றி அனுப்பியப் பின் வெளியே நாங்கள் வந்ததும் அங்கு நின்று கொண்டு இருந்த ஒரு பகீர் எங்களிடம் தானாகவே வந்து பாபாவின் ஆலயத்துக்குச் சென்று ஒரு மலர் மாலையை வைக்குமாறுக் கூறினார். மேலும் என்னுடைய தந்தை எந்த ரயிலில் சென்றாரோ அதே ரயிலில் மீண்டும் திரும்பி வருவார் என்று கூறினார். ஆகவே என்னுடைய தாயார் தான் உழைத்து சம்பாதித்த பணத்தில் இருந்து 1.25 ரூபாய் கொடுத்து ஒரு மாலையை வாங்கி பாபாவின் ஆலயத்தில் சென்று அவருக்குப் போட்டாள் . அதுவே நான் முதன் முதலாக பாபாவிடம் செல்லத் துவங்கியதின் காரணம். அதன் பின் நான் படித்துக் கொண்டு இருந்தபோது பல விதத்திலும் பாபா எனக்கு அருள் புரிந்து உள்ளார். எனக்கு துன்பம் வந்த நேரங்களில் எல்லாம் அவர் எனக்கு தானாகவே வந்து துயர் தீர்த்து உள்ளார்.
- 1984 ஆம் ஆண்டு. நான் அவுரங்காபாத்தில் உதவியாளர் படிப்பு படித்துக் கொண்டு இருந்தேன். ஒரு நாள் எனக்கு ஒரு கனவு. அதில் வெள்ளை நிற உடுப்பு போட்டிருந்த ஒரு இளம் அதிகாரி என்னிடம் வந்தார். நான் என்னுடைய வகுப்பில் முதலாவதாக தேறி உள்ளேன் என்றார். அதை நான் அவர் கற்பனை என நினைத்தேன். மறுநாளும் அவர் என் கனவில் வந்து அதையே கூறினார். அதையும் கற்பனை என நினைத்தேன். ஆனால் அதற்க்கு மறுநாள் நான் வகுப்புக்கு சென்றபோது என்னுடைய ஆசிரியர் அந்த செய்தியைக் கூற நான் ஆச்சர்யம் அடைந்தேன். நான் தினமும் பாபாவின் பெயரை உச்சரித்துக் கொண்டே இருந்ததினால் பாபாவே முதலில் வந்து எனக்கு அந்த செய்தியை தெரிவித்து உள்ளார் என்பதை உணர்ந்தேன்.
- 1988 ஆம் ஆண்டு. நான் ராணுவத்தில் ஒரு எல்லைப் பகுதியில் பணி புரிந்து கொண்டு இருந்தேன். அப்போது ஒரு நாள் நான் சாயி சரித்திரத்தைப் படித்துக் கொண்டு இருந்தேன். அதில் இருந்த சாயி பாபாவின் படம் என்னிடம் எனக்கு திருமணம் நிச்சயம் ஆகி உள்ளதாக ஒரு செய்தியை தெரிவித்தது போல இருந்தது. அதை என்னுடைய மனக் கற்பனை என நினைத்தேன். ஆனால் மாலை நான் வீடு திரும்பியதும் என் வீட்டில் இருந்து வந்து இருந்த கடிதத்தைப் பிரித்துப் படித்தேன். அதில் அதே விஷயத்தைப் பற்றி என்னுடைய பெற்றோர்கள் எழுதி இருந்தார்கள் !
- ஒரு முறை ஒரு வழக்கில் நானும் காரணம் இல்லாமல் சேர்க்கப்பட்டு இருந்தேன். அதில் என்னையும் சேர்த்து மூன்று பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டு இருந்தார்கள். ஆனால் நான் எந்த குற்றமும் செய்யவில்லை என்பதே உண்மை. அன்று இரவு எனக்கு ஒரு கனவு. அதில் மூன்று கட்டங்கள் இருந்தன. ஒன்றில் நானும் மற்ற இரண்டில் மற்ற இருவரும் காணப்பட்டார்கள். அப்போது ஒரு குரல் என்னிடம் வந்து 'வெளியே வர விரும்புகிறாயா ' எனக் கேட்டது. நானும் ஆமாம் எனக் கூறியதும், என்னுடைய தலை கட்டத்தில் இருந்து வெளியே வர அந்தக் கட்டம் மறைந்து விட்டது. ஆனால் மற்ற இரண்டிலும் மற்ற இவர்கள் கட்டங்களில் இருந்தார்கள். கனவும் கலைந்தது. மறுநாள் நடைபெற்ற விசாரணையில் நான் குற்றமற்றவன் என தீர்ப்பு ஆகியது. உண்மையான மற்ற இரண்டு குற்றவாளிகளும் தண்டிக்கப்பட்டார்கள்.
- 1994 ஆம் ஆண்டு, மார்ச் மாதம் பதினேழாம் தேதி. நான் விடுமுறையில் வீடு வந்திருந்தேன். அப்போது ராங்கியா ரயில் நிலையத்துக்கு வந்து வண்டியைப் பிடித்தபோது ஒரு சாது என்னிடம் வந்தார். சிறிது உணவு தருகிறாயா எனக் கேட்க நானும் அவருக்கு உணவு தந்தேன். அதை உண்ட அவர் எனக்கு ஒரு சிறிய சிவப்புக் கல்லைத் தந்தார். அது என்ன எனக் கேட்டபோது தன்னுடைய தலையில் இருந்து முடி ஒன்றைப் பிடுங்கினார். அந்தக் கல் மீது அதை சுற்றிவிட்டு தீ வைத்தார். ஆனால் அந்த முடி பொசுங்கவும் இல்லை, உடையவும் இல்லை. அப்படியே இருந்தது. இதுவே இதன் மகத்துவம் என்றார். அதை பத்திரமாக வைத்துக் கொண்டேன். வீடு சென்று சேர்ந்ததும் சில நாளில் எனக்கு என் விரோதிகளில் எவரோ ஒருவர் உணவில் விஷம் வைத்துக் கொடுக்க அது தெரியாமல் அதை உண்ட நான் நான் மயங்கி விழுந்து விட்டேன். என் மீதும் என் வீட்டின் மீதும் கெரசினை ஊற்றி வீட்டை கொளுத்தி விட்டுச் சென்று விட்டார்கள். வீட்டிற்குள் நான் மயங்கிக் கிடந்தேன். சற்று நேரத்தில் மயங்கிக் கிடந்த நான் உணர்வு பெற்று எழுந்தேன். எரிந்து கொண்டு இருந்த வீட்டில் இருந்து தீயின் நடுவே புகுந்து வெளியில் வந்தேன். எனக்கும் ஒன்றும் ஆகவில்லை. என்னுடைய உடலில் இருந்து ஒரு மயிர் கூட பொசுங்கவில்லை. என்னிடம் இருந்த சாயி சரித்திர புத்தகம் மற்றும் பாபாவின் படத்துக்கும் கூட ஒன்றுமே ஆகவில்லை. என்னிடம் இருந்த அந்த சிவப்புக் கல்லே என்னைக் காப்பாற்றி உள்ளது. இந்த நிகழ்ச்சியை நம்புவது நம்பாததும் உங்களைப் பொறுத்தது. ஆனால் இது நடந்தது சத்தியமான உண்மை. இப்படியாக பல அற்புதங்கள் என்னுடைய வாழ்கையில் நடைபெற்று உள்ளன.
- அந்த தீ விபத்திற்குப் பின்னால் நான் சீரடிக்குச் சென்றேன். குருஸ்தானில் நடந்து கொண்டு இருந்தபோது 25-30 வயது இருக்கும், ஆப்ரிக்கா நாட்டை சேர்ந்த ஒரு பெண்மணி என் அருகில் வந்தாள் . என் காதில் '' சாயி ராம் போலா கி '' எனக் கூறிவிட்டுச் சென்று விட்டாள் . அதன் பின் அவளைத் தேடினேன் எங்குமே அவளைக் காணவில்லை. அவளைப் பற்றி பலரிடமும் கேட்டேன். எவருக்கும் அவள் இருந்த இடம் தெரியவில்லை. ஆனால் அவள் பலரது காதுகளிலும் எதையோ கூறி விட்டு மறைந்து விட்டுள்ளதாகத் தெரிந்தது. நான் அந்த நேரத்தில் பல காரணங்களினால் மன நிலை உளைச்சலில் இருந்திருந்தேன். எனக்கு பெற்றோர்கள், உறவினர், நண்பர்கள் என யாருமே உதவவில்லை. சாயி பாபாவை மட்டுமே நான் நம்பிக் கொண்டு இருந்தேன். அந்த விஜயத்திற்குப் பின்னர் நான் மெல்ல மெல்ல நல்ல நிலைக்கு மீண்டு வந்தேன். என்னுடைய மகள்கள் , மகன் மற்றும் மனைவி என அனைவரும் சாயி பாபாவிற்கே நன்றி கூறினார்கள். நாங்கள் பாபாவிற்கு என்றுமே நன்றிக் கடன்பட்டவர்கள். நான் அனைவருக்கும் கூறுவது என்ன என்றால் நீங்கள் தினமும் சாயி சரித்திரத்தைப் படித்து வந்தால் உங்களுக்கு அனைத்து நன்மைகளும் தன்னால் கிடைக்கும் என்பதே.
நான் என்றுமே சாயி பாபாவின் உண்மையான பக்தனாக இருக்கவே விரும்புகிறேன். அவர் உலக மக்கள் அனைவருக்கும் வாழ்வில் அமைதியையும் வளத்தையும் தந்து அருள் புரியட்டும் என வேண்டுகிறேன்.
அன்பானவர்களே ,
கமல்ஜி அவருடைய மேலும் பல அனுபவங்களையும் அவருடைய சகோதரருடைய அனுபவத்தையும் கூறி உள்ளார். அதையும் படியுங்கள்.
மனிஷா
---------------------
சாயி பாபா என்னுடைய சகோதரரை மகராஷ்டிராவில் உள்ள பாண்டாக்கில் இருந்து சீரடி வரை நடந்தே வரவழைத்து உள்ளார்.
என்னுடைய சகோதரர் ராணுவத்தில் இருந்து ஒய்வு பெற்று சந்தார்பூர் ஆயுத தொழில் சாலையில் உள்ள SBI பாங்கில் காவலாளியாக பணி புரிகிறார். ஒரு முறை அவர் அங்கிருந்த ஹனுமான் ஆலயத்தில் இருந்த ஒரு ஆவியுடன் பேசி உள்ளார். அவர் என்னவெல்லாம் பேசிக்கொண்டு இருந்தார் என்பதைக் கூறவில்லை. ஆனால் அந்த ஆவியிடம் அவர் தான் நடந்தே சீரடிக்கு செல்வதாக வாக்கு தந்திருந்தார். அதன்படி அவர் தனது நண்பர்கள் சிலருடன் 2011 ஆண்டு ஜனவரி மாதம் 26 ஆம் தேதி பண்டாக் (பின் 442 902) என்ற கிராமத்தில் இருந்து சீரடிக்கு கிளம்பினார். வழியில் அவர் பாபாவை இரண்டு முறை சந்தித்தாராம். அவருடன் சென்ற 45 பேர்களும் 20 கிலோமீட்டர் தூரத்தையும் நடந்தே சென்று சீரடியை 2011 ஆம் ஆண்டு பிப்ருவரி மாதம் 18 ஆம் தேதியன்று அடைந்தார்கள். அவர்களை நான் பூனாவில் சந்திக்க இருந்தேன். ஆனால் எனக்கு விடுமுறைக் கிடைக்கவில்லை. பாபா தன்னிடம் வருபவர்களை யார் சந்திக்கலாம் என ஏதாவது விதிமுறை வைத்து இருந்திருந்தாரோ என்னவோ தெரியவில்லை. ஆனால் என்னுடைய குடும்பத்தில் இருந்த ஒருவரை 700 கிலோமீட்டர் தொலைவையும் காலில் காலணிக் கூட அணியாமல் நடந்து வந்து தன்னை தரிசிக்க வைத்துள்ளதைக் கண்ட நான் பெருமைப் பட்டேன்.
அதற்கு முன்னால் இன்னொரு சம்பவம் 2011 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15 ஆம் தேதி நடந்தது. நான் ரயிலில் பயணம் செய்து கொண்டு இருந்தேன். அஹ்மத்நகர் ரயில் நிலையத்தில் இருந்த பிளாட்பாரத்தில் வண்டி நின்றது. இரவு மணி மூன்று. நான் மட்டுமே விழித்துக் கொண்டு இருந்தேன். அந்த பிளாட்பாரத்தில் பெரிய செய்திப் பலகை இருந்தது. அதில் எழுதி இருந்த வாசகம் '' பாபாவின் பக்தர்கள் அனைவருக்கும் நல் வரவு''. பிளாட்பாரம் முழுவதும் காலியாகக் கிடக்க நான் அமர்ந்து இருந்தப் பெட்டி அந்த பலகை முன்னால் வந்து நின்று இருந்தது. பாபா எனக்காகக் காத்து இருபது போல அந்த நிகழ்ச்சி எனக்குத் தோன்றியது. அதன் பின் நான் விடுமுறையில் இருந்து வந்தப் பின் சீரடிக்கு சென்றேன். அங்கு பாபாவின் நல்ல தரிசனம் கிடைத்தது. சமாதி ஆலயத்தில் நான் கொண்டு சென்று இருந்த மாலையை பாபாவுக்கு அணிவித்தப் பின் எனக்குப் பின்னால் இருந்தவருக்குத் தந்தார்கள். அது போல துவாரகாமாயிக்கு நான் கொண்டு சென்ற மாலையை அங்கிருந்த சிலைக்குப் போடாமல் அதற்குப் பின்னல் வைத்து இருந்த சாயியின் படத்துக்குப் போட்டார்கள். ஆனாலும் என் மனம் திருப்பதி ஆயிற்று. பாபா தனக்கு எப்படி வேண்டுமோ அப்படியே செய்து கொள்வார் என்பதை உணர்ந்தேன். அது போலவே நான் பூனாவில் இருந்து மகராஷ்டிரா எக்ஸ்பிரஸ் வண்டியில் சென்று கொண்டு இருந்தேன். நேரம் விடியற்காலை மூன்று மணி. வண்டி நின்றது. என் பெட்டி எங்கு நின்றது தெரியுமா? பாபாவின் பெரிய படம் இருந்த இன்னொரு செய்திப் பலகை எதிரில்தான். எனக்கு அன்று நடு இரவில் பாபாவை நேருக்கு நேர் பார்த்தது போன்ற பிரமை ஏற்பட்டது.
சாயி பக்தர்களே, என்னை நம்புங்கள். பாபாவை நீங்கள் எந்த ரூபத்தில் பார்க்க விரும்புகிறீர்களோ அந்த ரூபத்தில் பார்க்க முடியும். அங்கிருந்து நான் அம்பிகாபூர் எனும் இடத்தில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் இருந்த சாயி தாமிற்கு சென்றேன். அங்கு டோண்டு சவான் என்ற மகன் இருந்தார். அவர் என்னிடம் கூறினார் '' நீ உன் வாழ்கையில் ஜீரோவாக இருந்து உயர்வு அடைந்தாய். நீ சாம்பலில் இருந்து மேலே எழுந்து வந்துள்ளாய். கவலைப்படாதே. பாபா உன்னைக் கைவிட மாட்டார்''. அவர் எப்போதுமே பாபாவை தியானித்தபடி இருப்பவர். அனைவரிடமும் பேச மாட்டார். அவர் எவருடன் பேசுவார் என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் அவர் பாபாவின் தீவீரமான பக்தர்.
இன்னொரு சம்பவம். 1994 ஆம் ஆண்டு. அன்று விஜயதசமி தினம். என்றாவது ஒருநாள் பாபாவின் பல்லக்கைத் நானும் தூக்க வேண்டும் என்ற ஆசை என் மனதில் அன்றுவரை இருந்து கொண்டே இருந்தது. திடீரென சீரடிக்கு செல்ல ஆசை எழ நான் உடனே கிளம்பி அங்குச் சென்றேன். நான் அங்கு சென்றபோது பாபாவின் பல்லக்கு ஊர்வலம் சென்று கொண்டு இருந்தது. அந்த பல்லக்கை தூக்கிக் கொன்று சென்ற ஒருவர் '' நான் உனக்காகத்தான் இத்தனை நேரமும் காத்துக் கொண்டு இருந்தேன். வா, வந்து தூக்கு '' என்றார். என் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. பாபாவே எனக்கு அந்த பாக்கியத்தை தந்து இருந்துள்ளார். பாபா இன்னமும் உயிருடன்தான் இருந்து நம்மைக் காப்பாற்றி வருகின்றார் என்பதே உண்மை.
--சாயி பக்தன் கமல் பிரசாத் .
(Translated into Tamil by Santhipriya)
Loading
0 comments:
Post a Comment