Shirdi Sai Baba's Grace-Experience Of Sai Devotees-Part 22
சாயிபாபாவின் அருள்
பக்தர்களின் அனுபவம்-22
அன்புள்ளம் கொண்டோரே,
இனிய குருவார வாழ்த்துகள்.
தமது பக்தரைக் காக்கும் உயரிய சக்தியாக பாபா விளங்குகிறார் என்பதை நாமனைவரும் அறிவோம். மிகப் பெரிய நிகழ்வுகள் எல்லாம் அவரது ஆசிகளால் விளைகிறது என நாம் கவனிக்கிறோம். ஆனால், மிக மிக நுட்பமான நிகழ்வுகள் கூட அவராலேயே கட்டுப்படுத்தப்படுகின்றன என்பதை நாம் மறக்கக் கூடாது. பாபாவின் மேல் அதீத நம்பிக்கை வைத்து, மிக வினோதமான காலங்களிலும் கூட, பாபா நம்முடனேயே இருந்து நம்மைக் காக்கிறார் என்பதை உணர வேண்டும். நமக்குச் சாதகமாக நிகழ்வுகள் நடக்காதபோது நாம் நம்பிக்கை இழக்காமல், அவரது அருளாசிக்காகக் காத்திருக்க வேண்டும். ஏனெனில், விரைவிலேயோ அல்லது சற்றுத் தாமதமாகவோ, பாபா எப்போதும் தன்னுடனேயே இருக்கிறார் என்பதை ஒருவர் உணர்கிறார். இந்த அனுபவத்தைப் பல ஸாயி பக்தர்கள் அனுபவித்திருக்கின்றனர். அப்படிப்பட்ட பல்வேறு அனுபவங்களை நான் இந்த வலைத்தள வாசகர்களுடன் இந்த மடலின் மூலம் பகிர்ந்து கொள்கிறேன். [அந்தந்த பக்தர்கள் அனுப்பிய புகைப்படங்களையும் அவர்களது அனுபவங்கள் அடங்கிய பதிவுடன் இங்கே இணைத்திருக்கிறேன்.
சிறிய நினைவூட்டல்: தங்களது ஸாயி அனுபவங்களை மடல் மூலம் அனுப்பும் பக்தர்கள், தங்களது பெயர்களை அதில் வெளியிட வேண்டுமா, வேண்டாமா என்பதைத் தெளிவாகத் தெரிவித்தால் எனது பணி எளிதாக இருக்குமென அன்புடன் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். ஜெய் ஸாயிராம்.
மனிஷா
" பாபாவுடனான எனது அனுபவம்"
( பெயர் தெரிவிக்க விரும்பாத ஒரு ஸாயி பக்தர் எழுதி உள்ளது )
( பெயர் தெரிவிக்க விரும்பாத ஒரு ஸாயி பக்தர் எழுதி உள்ளது )
ஸாயிராம் மனிஷா சகோதரி .
பாபாவுடனான எனது சமீபத்திய அனுபவத்தை தயவு செய்து வெளியிடவும். எனது பெயரைச் வெளியிட வேண்டாம். சென்ற வாரம் பாபாவின் கருணையை பெற்ற என் அனுபவத்தை, உங்களது வலைத்தள வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.
ஓம் ஸாயிராம்.
1. எனது அன்னை கருவுற்றிருக்கும் எனது சகோதரி வசிக்கும் அமெரிக்காவுக்குச் செல்வதென இருந்ததால், முழுமையான ஒரு மருத்துவப் பரிசோதனைக்காக நான் அவரை அழைத்துச் சென்றேன். அங்கே அவரது 'ஈ.எஸ்.ஆர்' [ESR] அதிகமாக இருப்பதாக இரத்தப் பரிசோதனை காட்டியது.
வேறு ஏதேனும் நோயின் அறிகுறி இருக்குமோவெனச் சந்தேகித்த மருத்துவர்கள் மேலும் பல பரிசோதனைகள் செய்யுமாறு கூறினார்கள் .நான் மிகவும் கவலையுற்றேன். ஆனாலும், எனது பாபா என்னைக் கைவிட மாட்டார் என உணர்ந்திருந்தேன்.
பிரார்த்தனைகள் செய்யத் தொடங்கினேன். ஒரு வாரம் கழித்து மீண்டும் மருத்துவர்கள் கூறியவாறு , மீண்டும் ஈ.எஸ்.ஆர். பரிசோதனை செய்தபோது பாபாவின் அருளாசியால், அது குறைந்து, சாதாரணமாக இருந்தது தெரிய வந்தது . பாபாவுக்கு நன்றி.
2. அமெரிக்கா செல்லும் முன் தினம், நான் பாபா ஆலயம் சென்றேன். ஸுப்பிரமணிய பூஜை அப்போது அங்கே நடந்து கொண்டிருந்தது. "ஸாயி ஆன்மீக நிலையம்" என்னும் இந்த இடத்தில், குறிப்பிட்ட பூஜை செய்ய விரும்பும் பக்தர்களுக்கு அந்தக் கடவுளின் படமும், ஒரு பாத்திரத்தில் அக்ஷதையும் கொடுப்பது வழக்கம்.
அர்ச்சகர் ஸுப்பிரமணிய ஸஹஸ்ரநாமம் சொல்லும்போது, பக்தர்கள் அக்ஷதையால் அர்ச்சனை செய்வார்கள். இந்தப் பூஜையில் கலந்துகொண்டு முருகனின் திருவுருவப் படத்தை நான் பெற விரும்பினேன். ஸுப்பிரமணியர் எனது குலதெய்வம் என்பதால், வெளிநாடு செல்லும் எனது தாய், நல்லபடியாக பயணம் செய்ய, அதை எடுத்துச் செல்வது ஒரு நல்லது என நினைத்தேன். ஆனால், பூஜையை செய்து முடிக்க 1 - 2 மணி நேரம் ஆகும் என்பதால் என்னால் அதில் கலந்து கொள்ள முடியாத நிலமை . அப்போது திடீரென அந்தக் கோவிலைச் சேர்ந்த ஒரு கமிட்டி உறுப்பினர் என்னை அழைத்துப் பேசினார்.
மிகவும் சந்தோஷமடைந்த நான், 'எனக்கு ஒரு படம் கிடைக்குமா?' என அவரைக் கேட்டேன். என்னிடம் ஒரு படத்தைத் தந்துவிட்டு, அவர் உடனே சென்றுவிட்டார். எனது அன்னைக்கும், எனக்குமென இரண்டு படங்கள் வேண்டுமென என் உள்ளம் விரும்பியது. ஆனால் அவரிடம் கேட்க முடியவில்லை! அவருக்கு எனது நன்றியறிதலைச் சொல்லி விட்டு ஆலயத்தை விட்டு வெளியே வந்து பார்க்கும்போது, அவர் கொடுத்ததில் இரண்டு படங்கள் இருப்பது தெரிய வந்தது. பாபாவின் இந்த அற்புதமான நல்லாசிகளுக்காக நான் கண்ணிர் மல்க நன்றி கூறினேன் .
3. அமெரிக்கா செல்லும் முன்பாக, எனது தாயார் மிகவும் சங்கடமாகவும், பலவீனமாகவும் உணர்ந்தார். தனியே அமெரிக்கா செல்வதென்பது இதுவே முதல் முறை என்பதும், பேருந்தில் செல்லும்போது கூட தனியே சென்றதில்லை என்பதுமே அவளுடைய பயத்தின் காரணம் . எனக்கும் அதே உணர்வு தான் இருந்தது. அவரது உடல் நிலை இதனால் கொஞ்சம் தளர்ந்தது. கொஞ்ச நேரத்தில் 'எல்லாம் சரியாகி விட்டது' என அவர் என்னிடம் சொன்னார். ஏனோ, நான் பதட்டமாகவே இருந்தேன். விமானத்தில் அவர் ஏறிய பின்னர், அவரை அழைத்துப் பேசினேன். நடுக்கமாகவும், சங்கடமாகவும் இருப்பதாக அவர் மீண்டும் சொல்ல நான் செய்வதறியாது கலங்கினேன்.
அதே சமயத்தில், எனது சகோதரி எனது தாயை தொலைபேசியில் அழைத்து, அருகில் உட்கார்ந்திருக்கும் நபரிடம் அதைக் கொடுக்கும்படி சொன்னார். எனது தாயின் அருகில் அமர்ந்திருந்தவர் ஒரு மருத்துவர்! பாபாவின் கருணையைப் பாருங்கள்! எனது சகோதரி அவருடன் பேசினார். எனது தாயிடம் பேசிக் கொள்வதாகவும், அவருக்கு ஒன்றும் ஆகாது எனவும் மருத்துவர் உறுதியளித்தார். அதேபோல அவர் பேச, எனது தாயும் தைரியம் அடைந்தாள் .
ஒரு நாளுக்கும் மேற்பட்ட பயணம் என்பதால் வேறு விமானம் மாறிச் செல்ல வேண்டிய பயணம் அது. நான் தொடர்ந்து பிரார்த்தனை செய்து கொண்டே இருந்தேன். எனது தாயைக் கவனித்துக் கொள்ளும்படி பாபாவை வேண்டியபடி 'ஸாயிபாபாவின் கேள்வி - பதில்' புத்தகத்தைப் புரட்டினேன். 'மேலும் அதிகமாகச் சிந்திக்காதே! குருவிடம் நம்பிக்கை கொள். அனைத்தும் நல்லபடி நடக்கும் ' எனப் பதில் வந்தது. எப்போதெல்லாம் எனக்குப் பிரச்சினைகள் வருகின்றனவோ, அப்போதெல்லாம் இப்படிப் பார்ப்பது வழக்கம். அது எப்போதுமே எனக்குப் பலனளித்திருக்கிறது.
பாபாவின் அளவற்ற கருணையால் எனது தாய் பத்திரமாக அவள் செல்ல வேண்டிய இடத்தை அடைந்தாள் . ஸாயிதேவனுக்கே எல்லா நன்றிகளும்.
ஜெய் ஸாயிராம்.
Translated into Tamil by: Sankarkumar
Edited and published by : Santhipriya
.................Part -2 to be continued
Loading
0 comments:
Post a Comment