Friday, December 2, 2011

Double Grace Of Shri Sai Baba-Experience by a Sai Devotee

ஒரு அற்புதமான செய்தி 

பாபா தன் வேலைகள் தடங்கல் இன்றி தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும் என விரும்புவார். நான் கடந்த சில நாட்களாக பலவிதமான வேலைகளினால் பாபாவின் தமிழ் தளத்தில் பக்தர்களின் அனுபவங்களை தொடர்ந்து வெளியிட முடியாமல் இருக்கின்றேன். அந்த மன வருத்தத்தில் இருந்தபோதுதான் எதிர்பாராமல் ஒரு பக்தரிடம் இருந்து எனக்கு ஒரு செய்தி வந்தது. அவர் எழுதி இருந்தார்.
பெருமதிப்பிற்குரிய ஐயா,
வணக்கம். ஸாயிராம்.
தமிழில் நீங்கள் அளித்துவரும் மகத்தான ஸாயி சேவைக்கு எனது பணிவன்பான வணக்கம்.
தங்களுக்குத் தமிழில் ஏதேனும் தட்டச்சு செய்து தர வேண்டுமெனில், அதனை எனக்கு அனுப்பிவைத்தால் செய்துதரச் சித்தமாய் இருக்கிறேன் எனப் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஓம் ஸாயிராம். 

 
இந்த செய்தியைக் கண்டு பிரமித்தேன். பாபா தன்னுடைய வேலையை  முடித்துக் கொள்ள எப்படி எல்லாம்  முடிவு எடுக்கின்றார்!!! உடனடியாக அவருக்கு ஒரு கட்டுரையை அனுப்ப அவரும் தமிழாக்கம் செய்து அனுப்பினார். அதை சிறிது மாற்றம் செய்து வெளியிட்டு உள்ளேன். அந்த அன்பரின் பெயர் சங்கர்குமார் என எழுதி இருந்தார். அவர் பாபாவின் முழு அருளையும் பெற்றவர் என்பது தெரிகின்றது. இல்லை என்றால் இந்த புனித சேவைக்கு தன்னை அர்பணித்துக் கொள்ள தானாக முன் வர முடியுமா? இனி திரு சங்கர்குமாரும் என்னுடன் சேர்ந்து  தமிழாக்கம் செய்வார். அதை தேவைப்பட்டால் சிறிது எடிட் செய்து வெளியிடுவேன் .
அனைவருக்கும் சாயிராம்
சாந்திப்பிரியா 
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------

 
சாயிபாபாவின் இரண்டு அருட்கள்
சாயி பக்தரின் அனுபவம்.
அனைவருக்கும் ஸாயிராம்.
இன்றைய நாள் இனிய பாபா நாளாக அமையட்டும்!
இன்றைய ஸாயி அனுபவம் எனது இதயத்தின் ஆழத்தில் பதிந்து வெகுவாக நெகிழச் செய்தது. இது ஒரு ஸாயி அனுபவம் என்பதால் மட்டுமின்றி, தனது, அன்னை/பெற்றோரின் மீது அளவிலா நேசம் கொண்ட ஒரு பெண்மணியின் அனுபவத்தைப் பிரதிபலிப்பதால் மிகவுமே அதிகமாக எனது நெஞ்சைத் தொட்டது. 'பெற்றோரைப் பேணி அவர்களிடம் அன்பு செலுத்துங்கள்' என்னும் எளிய ஒரு தத்துவத்தை இது தெள்ளத் தெளிவாகப் பிரதிபலிக்கிறது. ஆனால், நம்மில் எத்தனை பேர் இந்த அனுபவத்தில் கூறி இருப்பதைப் போல நேசமும், சேவையும் காட்டுகிறோம்?
கீழ்க்கண்ட வரிகளை நான் மிகவுமே ரசித்தேன். அவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
ஜெய் ஸாயி ராம்.
மனிஷா
-------------------------------------
கடைசியாக நீங்கள் எப்போது ,.....
  • · ....'நான் உங்களுடைய குழந்தையாகப் பிறந்ததற்கு நன்றியைக் கூறுகிறேன் ' என உங்களது பெற்றோர்களிடம் சொல்லியிருக்கிறீர்கள்?
  • · ....'நான் உங்களுக்குக் கொடுத்த தொந்தரவுகளுக்கெல்லாம் வருந்துகிறேன்' என உங்களது பெற்றோர்களிடம் எப்பொழுதாவது சொல்லியிருக்கிறீர்களா ?
  • · ....உங்கள் பெற்றோர்களைப் பார்த்து 'இவர்களை பெற்றோர்களாக அடைய வழி வகுத்த இறைவா, உனக்கு நன்றி ' என உங்களுடைய இதயத்தில் மகிழ்ச்சி அடைந்து உள்ளீர்களா ?
  • · ....'நீங்கள் என்னிடம் காட்டும் அன்புக்கும், ஆதரவிற்கும் மிக்க நன்றி , நான் உங்களை மிகவுமே நேசிக்கிறேன்' என அவர்களை கட்டி அணைத்தவாறு கூறி உள்ளீர்களா ?
  • · ....அவர்களது பிறந்த நாட்களைத் தவிர, நீங்கள் அவர்களுக்கு வேறு சம்பவத்தில் கடைசியாகக் எப்போது அன்பளிப்பு கொடுத்து உள்ளீர்கள் ?
  • · ....அவர்களது நலனுக்காக ஆண்டவனிடம் வேண்டிக் கொண்டிருக்கிறீர்களா ?
  • · ....உங்களால் அவர்கள் பெருமைப்படுமாறு நீங்கள் எதையாவது செய்து உள்ளீர்களா ?
  • · ....நாம் பெற்றோர்களுடன் தனியே இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் எப்பொழுதாவது உங்களது வேலைகளை ஒதுக்கி வைத்து உள்ளீர்களா ?
  • · ....ஒரு அற்புதமான இடத்தைப் பற்றி வந்த விளம்பரத்தைப் பார்த்ததும், 'எனது பெற்றோர்களை இங்கு அழைத்துச் செல்லவேண்டும் என நினைத்து இருக்கின்றீர்களா ?
  • · ....'சரி, சரி,..கொஞ்சம் இளைப்பாறுங்கள். இன்று வீட்டைச் சுத்தம் செய்வது எனது முறை' என உங்களது பெற்றோர்களிடம் சொல்லியிருக்கிறீர்களா ?
  • · ....அவர்களது நினைவு ஒன்றைத் தவிர வேறெந்த நினைப்பும் இல்லாமல், இல்லம் திரும்பியிருக்கிறீர்களா ?
  • · ....உங்களது நண்பர்களிடம் உங்களது பெற்றோர்கள் எவ்வளவு அருமையான மனிதர்கள் எனப் பெருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள்?
· கடைசி முறையாக எப்போது நீங்கள் இந்த விஷயங்களைப் பற்றியெல்லாம் சிந்தித்திருக்கிறீர்களா ? நீங்கள் வாய் திறந்து ஒரு வார்த்தை பேசுவதற்கு முன்பே உங்களது பெற்றோர்கள் இவையெல்லாவற்றையுமே செய்து வந்திருக்கிறார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதை அவர்கள் கடமை என நினைத்து செய்யவில்லை , உங்கள் மீது கொண்ட அன்பினாலேயே அவர்கள் அப்படிச் செய்தார்கள்........மீண்டும் மீண்டும் அவர்கள் அதை செய்து கொண்டே இருப்பார்கள் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.
அன்பு பாராட்டுவது என்பது அவர்களின் மூச்சோடு கலந்த ஒன்று; அதை அவர்களால் எப்படி நிறுத்த இயலும்?
[காப்புரிமை ~ ஜோஹ்னி பங்கலிலா]
ஓம் ஸாயி ஸ்ரீ ஸாயி ஜெய ஜெய ஸாயி

---------------------------------------------------------------------------------------

 பக்தரின் அனுபவம் 
 
அன்புள்ள மனிஷா சாயிராம் ,
அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் நீங்கள் பாபாவின் வழிமுறைகளைக் கூறி உள்ளீர்கள். 'சற்று இடைவெளியை எடுத்துக் கொண்டாலும், பாபா திடீர் என தான் உள்ளதைக் காட்டிக்கொண்டு, நம் வாழ்வில் திருப்பங்களை உருவாக்குவார். நமது குடும்பத்துக்கெனச் செய்யவேண்டிய கடமைகளை இறைவன் விதித்திருக்கிறார். குடும்பக் கடமைகளும் நமது அன்றாடக் கடமைகளில் ஒன்றான சேவையே. அதைச் செய்யாமல் புனிதம் அடைவதென்பது இயலாது.
'ஸாயி ஸத்சரித யாஹூ குழுமத்தில் வெளியான ஒரு செய்தியை இங்கு அளித்து நீங்களும் ஒரு சேவையே செய்திருக்கிறீர்கள். அதனைத் தொடர்ந்து, பக்தர்களின் பலவிதமான அனுபவங்கள், ஞானிகளைப் பற்றிய நூல்களைப் பரிமாறிக் கொள்ளல், தெய்வீக இசைக் கோப்புகள் என வியக்க வைக்கும் அளவிலான சேவையை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறீர்கள்.
பாபா உங்களது குடும்பத்தினருக்கு தமது நல்லாசிகளை அளித்து, உங்களது அனைத்து விருப்பங்களையும் பூர்த்தி செய்யட்டும்.
பாபாவின் ஆணையுடன், ஒரு சில இனிய உணர்வுகளைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். தேவையானவற்கும், அறிமுகம் இல்லாதவர்களுக்கும் தானம் செய்வதை இரண்டாம் இடமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை எங்களை உணரச் செய்தார்.
நமது தவறுகளுக்காக மன்னி்ப்பு கேட்பதும், நமது குடும்பத்தினரின் நலனுக்காகப் பிரார்த்தனை செய்வதும் முதலாய கடமை. இந்த நற்பண்புகளை நாம் கடைபிடி்க்கும்போது, பாபா நம்மை மிக அருகில் அழைத்துக் கொள்கிறார். 'தருமம் இல்லத்திலிருந்து துவங்குகிறது' என்னும் வாசகத்தை ஸ்ரீ ஸாயி உறுதி செய்கிறார். அவர் அறிவுரையை செய்யத் துவங்கியதுமே , பாபா எங்களை அவருடன் நெருக்கம் ஆக்கிக் கொண்டு அருள் மழையை பொழியத் துவங்கினார்.
கடந்த ஒரு மாத காலமாக எனது தாயார் கடுமையான வயிற்றுவலியாலும், வாந்தி உணர்வாலும் அவதிப்பட்டு வந்தார். எல்லாவிதமானப் பரிசோதனைகளும், 'ஸ்கேன்' முதலானவைகளும் சரியாகவே இருந்தன. 'கல்' ஏதும் இல்லை எனவும் தெரிந்தது. தீபாவளிக்கு முன் தினம், சிறிதளவு இனிப்பு வகையைக் கூட அவரால் உண்ண முடியவில்லை. நோயைத் தணிக்கும் மருந்து வகைகளைக் கொடுத்த பின்னரும், அவரது வலி சற்றும் குறையாமல், அவர் நம்பிக்கை இழந்து போனார். பரிசோதனை முடிவுகள் எல்லாம் சரியாக இருந்தும், அவர் வலியால் துடிப்பதைக் காண என்னால் தாங்க முடியவில்லை. அவரது வலியைத் தீர்க்க பாபாவை வேண்டினேன்.
எங்களது ஏற்றத் தாழ்வுகள் அனைத்தையும் வாழ்நாள் முழுவதும் பொறுத்துக் கொண்ட எங்களது பெற்றோருக்கு, பிள்ளைகளான எங்களால், நன்றியறிதலைக் காட்ட இயலவில்லையே எனும் நினைவால் நான் உள்ளுக்குள்ளேயே அழுதேன். பொதுவாக வாழ்வில் நிகழ்கின்ற நல்ல நடப்புகளைச் சுட்டிக்காட்டி, எங்களுக்கு அதுபோல இல்லையே என பாபாவிடம் முறையிட்டேன்.
எனது தாயாரின் வயிற்று வலியைத் தீர்க்கும் மார்க்கம் ஏதும் தெரியவில்லையே என மிகவும் தளர்ந்து போனேன். அருகிலிருந்த ஷீர்டி ஸாயிபாபா ஆலயத்துக்கு, அவரது வலி தீரவெனப் பிரார்த்தனை செய்யப் பல்வேறு நாட்கள் சென்றேன். தங்களது கோரிக்கைகள் நிறைவேறவும், பிரார்த்தனை செலுத்தும் விதமாகவும் பல பக்தர்கள் தங்களது முட்டிக் கால்களால் பிரதர்ஷணம் செய்வதைப் பலமுறை பார்த்திருக்கிறேன். அதனை நினந்தபடியே, என் தாயாரின் நலனுக்காக நானும் அப்படியே செய்து பாபா அருள வேண்டுமெனப் பிரார்த்தித்துக் கொண்டேன்.
நம்பவே முடியாத விதமாக, இந்தக் கடினமான பிரதர்ஷணத்தை நானும் செய்ய பாபா அருள் புரிந்தார். ஆலயத்தின் பிராகாரம் அதிக நீளமாக இருந்ததால், என்னால் ஒரு முறை மட்டுமே முட்டியைப் போட்டபடி வலம் வர முடிந்தது. ஆனால், வியாழக்கிழமை நீங்கலாக, இதர தினங்களில் இதனைச் செய்து வந்தேன். ஒரு நாள, பாபாவின் சன்னதி சிலைக்கு முன்னால் பக்தர்கள் சிலர் பிரார்த்தனை செய்துகொண்டிருந்ததால், என்னால் முட்டி பிரதர்ஷணத்தை தொடர முடியவில்லை. அதிசயமாக, 'துனி/துவாரகாமாயி' இருந்த இடம் அமைதியாகவும், தொந்தரவு ஏதுமில்லாமலும் இருந்தபடியால், துனியைச் சுற்றி முட்டிக்கால் வலம் செய்ய முடிந்தது என் மனதுக்கு நிறைவாகவும் இருந்தது. அங்கிருக்கும் தரை கடினமாக இருந்தாலும்,மனத் திருப்தியுடன் பல நாட்கள் அங்கே வலம் வர பாபா உதவினார் . அப்படிச் செய்யும்போது, வலியும், சங்கடமும் இருந்தாலும் அவையெல்லாம் விரைவிலேயே மறைந்து போயின.
இதைப் போன்ற நோயினால் அவதிப்பட்ட சாயிபாபாவின் பக்தர் ஒருவர் தனது அனுபவத்தை இணையதளத்தில் எழுதி இருந்ததை படித்துவிட்டு அதைப் போலவே எனது தாயாரை 'உதி'யைத் தன் வயிற்று பாகத்தில் தடவிக்கொள்ளச் செய்தார் பாபா. இப்படிச் செய்ததினால், கடுமையான பாதிப்பு ஏதுமில்லாமல், நோய் முற்றிலும் மறைந்து போனதாக அந்த அன்பர் குறிப்பிட்டிருந்தார்.
எனது அன்னைக்கு நம்பிக்கை பிறப்பதற்காக, எழுந்து உட்கார வைத்து, அவரையே அந்த அனுபவத்தைப் படிக்கச் செய்தேன், 'குருஸ்தான்' அருகிலிருந்த வேப்பமர இலைகளைப் பறித்து வந்து, வென்னீரில் அதைப் போட்டுக் காய்ச்சி, அந்தக் கசப்பான மருந்தை அவரைக் குடிக்கச் செய்தேன். புனித ' ஸாயி ஸத்சரிதத்தில்' சொல்லியிருக்கும் வண்ணம், தயிர் சாதம் தயார் செய்து, நாய்களுக்கு அதனை அளித்தேன். இந்தப் பிரார்த்தனைகளையும், முயற்சிகளையும் பாபா அன்புடன் ஏற்று, எனது தாயாரின் வயிற்றுவலியைப் போக்கி, ஆறுதல் அளித்தார்.
பாபாவுக்கு எங்களது நன்றியைத் தெரிவித்தோம். புதன் கிழமையன்று, மளிகைச் சாமான்கள் வாங்கும்போது, பாபாவுக்கு எந்த இனிப்புப் பண்டம் பிடிக்குமென தெரிவித்தால் , அதையே வாங்கி அளிப்பதாக மனதுக்குள் வேண்டிக் கொண்டேன். ஹல்திராம் இனிப்புப் பெட்டிகள், கடலை மிட்டாய் பர்ஃபி போன்றவை அங்கிருந்தன. ஆனால், எந்தவொரு சிந்தனையுமில்லாமல், சர்க்கரை, ரவை, முந்திரிப் பருப்பு, கேஸரித் தூள், ஏலக்காய்த் தூள், நெய் இவைகளை வாங்கி, கோவி்ல் அர்ச்சகரிடம் அவற்றைக் கொடுத்து, ரவா கேஸரி பிரஸாதம் தயார் செய்து ஏதேனும் ஒரு நாளி்ல், அ்ல்லது,அடுத்த வியாழர் கிழமையன்றே அதை பிரசாதமாக பாபாவின் பக்தர்களுக்கு விநியோகிக்கச் சொல்லி வேண்டுகோள் விடுத்தேன்.
எனது பிரார்த்தனைகளை முடித்து விட்டு, ஒரு ஓரமாக அமர்ந்து பாபாவின் திருவுருவச் சிலையை ரசித்துக் கொண்டிருந்தேன். சற்றும் எதிர்பாராத விதமாக, ஏதோ எழுதிக் கொண்டிருந்த அந்த ஆலயத்தின் பொறுப்பாளர் [ட்ரஸ்டி] ஒருவர் என்னை அழைத்து, பௌர்ணமியை முன்னிட்டு, மறுநாள் நடக்கவிருக்கும் ஸ்ரீ ஸத்யநாராயண பூஜைக்கு எனது தாய், தந்தையரை அழைத்து வருமாறு சொல்லி, இது பாபா அவர்களை ஆசீர்வதிக்க விடுத்த அழைப்பு எனக் கூறினார். அவர் சொன்னதை நான் முதலில் ஏற்கவில்லை. ஆனால் அவரோ, பாபாவின் இந்த ஆசையை உடனடியாக எனது பெற்றோர்களிடம் நான் சொல்ல வேண்டுமென என்னை வற்புறுத்தினார். உணர்ச்சி வசப்பட்ட நான் ஸத்யநாராயண பூஜைக்காக, குறிப்பாக எனது ரவா கேஸரியை பாபா அன்புடன் ஏற்றுக்கொள்ளத் திருவுளம் கொண்டதை எண்ணி அழுதே விட்டேன். இரட்டிப்புப் பரிசு எனக்கு! இரட்டிப்பு ஆசிகள்!
நமது எண்ண அளவைகள் மிகக் குறைந்த அளவில் இருக்கும்போது, திடீரென அதிசயங்களை நிகழ்த்துவதில் பாபா வல்லவர்.'என்னவகையான இனிப்புப் பண்டம் வேண்டும்'என நான் பாபாவிடம் கேட்டபோது, பௌர்ணமி வியாழக் கிழமைக்குத் தேவையான அனைத்துப் பொருட்களையுமே என் மூலமாக வாங்கிக்கொள்ள பாபா நிச்சயித்து விட்டார். மிகவும் உணர்ச்சி வசப்பட்ட நான் மறுநாள் எனது பெற்றோரை அழைத்துச் செல்ல , பௌர்ணமி பூஜையில் நாங்கள் அனைவரும் கலந்துகொண்டு அவரது ஆசிகளைப் பெற்றோம். ரவா கேஸரி பிரஸாதம், புனித தீர்த்தம், பால் பிரஸாதம் என அனைத்துமே கிடைக்கப் பெற்றோம். இப்படியாக, பாபா எங்களை ஸத்யநாராயண பூஜைக்கு வரவழைத்து, தமது ஆசிகளும், அரவணைப்பும் எங்களது குடும்பத்துக்கு உண்டு என்பதை உறுதி செய்தார்
ஸ்ரீ ஸாயி ஸத்யநாராயண ஸ்வாமிக்கு வெற்றி உண்டாகட்டும்! 

(Article translated into Tamil by : Sankarkumar 
 Edited and posted by :Santhipriya)

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.