Tuesday, December 13, 2011

Shirdi Sai Baba's Grace-Experience Of Sai Devotees-Part 22

PART -4

ஸாயி பக்தர் சிவா சொல்கிறார்: -
ஸாயிராம் மனிஷாஜி. உங்களது வலைத்தளத்துக்கு அடிக்கடி வருபவன் நான். உங்களது அரிய சேவையை நான் மிகவும் பாராட்டுகிறேன்.இந்த வலைத்தளத்தில் வருகின்ற செய்திகளைப் படிப்பதன் மூலம், எங்களைப் போன்ற ஏழை அடியவர்கள் பெறும் மகிழ்ச்சியை வார்த்தைகளால் சொல்லிவிட இயலாது. பாபா உங்களையும், உங்களது குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக‌. எனது இந்த அனுபவத்தை உங்களுக்கு வசதிப்பட்ட நேரத்தில் பிரசுரிக்கவும் என அன்புடன் வேண்டுகிறேன்.
சென்ற‌ கோடைக்கால‌த்தில், பாபாவிட‌மிருந்து ஷீர்டி செல்ல‌ ஒரு அழைப்பாணை வ‌ந்த‌து. மே, 2011-ன் கடைசி வாரத்தில், நானும், எனது பெற்றோரும் ஷீர்டி சென்றோம். அந்தப் பயணத்தின்போது பாபாவின் லீலைகளைப் பலமுறை அனுபவித்தேன். அவற்றுள் ஒரு சிறிய ஒன்றை இங்கே சொல்ல‌ப்போகிறேன். நான் சொல்லுவ‌தில் ஏதேனும் த‌வ‌றுக‌ள் இருந்தால் ம‌ன்னிக்க‌ வேண்டுகிறேன்.
க‌டும் வெயிலின் கார‌ண‌மாக‌, இந்த ஷீர்டி‌ப் ப‌ய‌ண‌த்தின் போது நான் வ‌யிற்றுப் போக்கினால் அவ‌திப்ப‌ட்டேன். அதைத் த‌டுக்க‌வென‌ச் சில‌ ம‌ருந்துக‌ளும் எடுத்துக் கொண்டேன். ஒருநாள் ப‌கல் நேரத்தில், 'பிரஸாதாலயா'வில் மதிய உணவு எடுத்துக்கொள்ள முடிவு செய்தோம். அங்கு பரிமாறப்பட்ட இனிப்புப் பண்டத்தை எனது தகப்பனார் ஏற்றுக்கொண்டபோது, அவர் ஒரு 'நீரிழிவு' நோயாளி என்பதால், அவரை அதை சாப்பிட வேண்டாம் என நான் சொன்னேன். 'இது 'அவருடைய' பிரஸாதம் என்பதால் நீ கவலைப்படாதே' என அவர் பதில் சொன்னார்.
அதுவும் சரியே எனச் சொல்லிவிட்டு, எனக்கு கார ஊறுகாய் மிகவும் பிடிக்குமென்பதால், நானும் கார ஊறுகாயை நிறைய வாங்கிக் கொண்டேன். எனது தந்தை என்னைப் பார்த்து, 'வயிற்றுப் போக்கினால் நான் அவதிப்படுவதால், ஊறுகாய் அதிகம் சாப்பிட வேண்டாம்' எனச் சொன்னார். 'இதுவும் 'அவர்' பிரஸாதம் என்பதால், கவலைப்பட வேண்டாம்' எனச் சட்டென நான் சொன்னேன். எனது தாயும், அத்தையும் எனது இந்த சாதுர்யமான பதிலைக் கேட்டுச் சிரித்தனர். ஆனால், நான் கொஞ்சம் அதிகமாகவேதான் ஊறுகாயை எடுத்துக் கொண்டுவிட்டேன் எனப் பிற்பாடு உணர்ந்தேன்.
ஒரு சில‌ நோய்க‌ளுக்கு பாபா அளிக்கும் சிகிச்சை முறை வினோத‌மாக‌ இருக்கும் என‌ 'ஸாயி ஸ‌த் ச‌ரித‌த்தில்' ஒரு சில‌ அத்தியாய‌ங்க‌ளில் நான் ப‌டித்திருப்ப‌தை நினைவு கூர்ந்தேன். பாபாவைப் பார்த்து, நான் என‌க்குள் ,"என‌து த‌ட்டில் இருக்கும் ஊறுகாயை நான் சாப்பிட்டு விடுகிறேன்.அனேகமாக, அவ‌ர் என்னைக் குண‌மாக்குவார் என‌ நான் ந‌ம்புகிறேன். அப்ப‌டி ந‌ட‌க்காவிட்டால், நான் ம‌ருந்துக‌ளை எடுத்துக்கொண்டு, ஷீர்டியில் இருக்கும்வ‌ரை எந்த‌ ஆப‌த்தும் வ‌ராம‌ல் பார்த்துக் கொள்கிறேன்' என‌ச் சொல்லிக் கொண்டேன். அதன்படியே, எந்தவிதமான மருந்துகளும் எடுத்துக் கொள்ளாமலேயே, எனது நோய் குணமாகிப் போனது.
எனது நம்பிக்கை நூறு சதவிகிதம் என நான் சொல்ல மாட்டேன். ஆனால் இதுபோன்ற நிகழ்வுகள் அவர்மீதான‌ நம்பிக்கையை உண்டுபண்ணுகிறது.பாபா, உங்க‌ளுக்கு என் நன்றி.
இந்த லீலையைப் படிப்பதற்காக உங்களுக்கும் நன்றி சொல்லிக் கொள்கிறேன். நேரம் கிடைக்கும் போதெல்லாம், இதுபோன்ற அனுபவங்களுடன் உங்களைச் சந்திக்க விரும்புகிறேன்.
அனைவருக்கும் பாபா மகிழ்ச்சியை அருளட்டும்!
ஓம் ஸாயிநாதாய நம:
---------------------------------------------

 "ஸாயி ஸத்சரிதத்தைப் படிக்கும்போது 'ஆஸிஷ்' என்பவருக்கு ஏற்பட்ட அனுபவம்"
அனைத்து ஸாயி அடியார்களுடனும் எனது அனுபவத்தைப் பகிரும் முன், ஸாயியிடமிருந்து ஆசிகளை எடுத்துக்கொள்கிறேன்.
ஸாயி ஸத்சரிதத்தைப் படிக்கும்போது பக்தர்கள் அவரது லீலைகளை  அனுபவிக்கின்றனர் என்பது உண்மையே. என்னை நம்பினாலும், நம்பாவிட்டாலும் சரி; அவரது லீலைகளைப் பற்றிப் படிக்கும், கேட்கும் ஒவ்வொருவருடனும் கூட ஸாயி எப்போதுமே இருப்பார்.
ஸாயி ஸத்சரிதத்தைப் படிப்பதை இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கினேன். பாபாவே எனக்கு எல்லாமும் எனும் அளவுக்கு நான் பாபாவைப் போற்றுகிறேன். அவருக்கு முதலில் அளிக்காமல் நான் எதையுமே உண்பதில்லை. எல்லாரையும் போலவே எனக்கும் சில பிரச்சினைகள் என் வாழ்வில் இருந்தன. பாபா எனது விருப்பங்களைப் பூர்த்தி செய்யும்வரையில், விடாது ஸத்சரிதத்தைப் படிப்பேன் என பாபாவுக்கு உறுதிமொழி கொடுத்தேன்.
2011ல் ஸ்ரீ ராம நவமி தினத்தன்று யாரோ என்னைப் படுக்கையிலிருந்து எழுப்பித் தள்ளி, சீக்கிரமாகக் கோவிலுக்கு வரும்படிச் சொல்வதுபோலக் கேட்டுக் கண் விழித்தேன். எழுந்த நான் அன்றைய ஸாயி சரிதத்தைப் படித்துவிட்டு, ஆலயத்துக்கு உடனே சென்றேன்.
ஆனால், எல்லாரையுமே ஆச்சரியத்தில் ஆழ்த்தும்படியாக, ஆலயத்துக்கு நான் சென்றபோது, நீண்ட ஆடையும், தலையில் ஒரு துணியைக் குல்லாய் போல வைத்துக்கொண்டு, பாபா வைத்திருப்பதுபோலக் கையில் ஒரு தடியும் [ஸட்கா], துணியாலான ஒரு பையைத் தோளிலும் போட்டுக்கொண்டு ஒருவர் இருப்பதைக் கண்டேன். இப்படிப்பட்ட ஒரு காட்சியைக் கண்டு ஆச்சரியத்தால் பேச்சிழந்து போனேன்! ஆலயத்தை விட்டு வெளியில் வரும்வரை, அவரை அடிக்கடி பார்த்துக் கொண்டே இருந்தேன். ஆலயத்தின் மசூதியில் இருக்கும்போதும், அவரைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தேன்.
நான் த‌ரிச‌ன‌ம் செய்து முடிக்கும்வ‌ரையிலும் அவ‌ர் என்னுட‌னேயே இருந்தார். நான் வெளியே வ‌ரும்போதும் என்னுட‌னேயே கூட‌ வ‌ந்தார். அன்று முழுவ‌தும் அவ‌ரையே நான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால், ம‌றுநாள் ஆல‌ய‌த்துக்குச் சென்று அங்கிருந்தவர்களிடம், அப்படிப்பட்ட ஒரு நபரைப் பார்த்தீர்களா என‌க் கேட்டபோது, பாபாவைப் போலத் தோற்றமளித்த எவருமே நேற்றைய தினம் வந்ததாக‌ப் பார்க்கவில்லை எனத் தெரிவித்தனர். தினமும் ஸத்சரிதம் நான் படிப்பதால், எனது பிரார்த்தனைக்குச் செவிமடுத்து பாபா தானே நேரில் [எனக்கு மட்டும்] வந்ததாக அவர்கள் சொன்னார்கள்.
வினோதமாக இல்லை? எப்படி ஒரு நபர் எனக்கு மட்டும் காட்சியளித்து, நான் தரிசனம் செய்யும்போதும் கூடவே இருந்து, என்னைப் பின்தொடர்ந்து, நான் செல்லும் வரை காத்திருக்க முடியும்? அப்படி என்னுடன் இருந்தவர் பாபாதான் எனப் பலரும் சொல்வதைக் கேட்கும்போது, என் கண்களில் நீர் நிரம்பியது. பாபாவை இன்னமும் அதிகமாக நேசிக்கத் தொடங்கினேன். தினந்தோறும் ஆரத்தியில் கலந்துகொண்டேன். மேல் படிப்பைத் தொடர வேண்டும் எனும் ஒரு ஆசையை பாபா என் கனவில் வந்தபோது கேட்டிருக்கிறேன். என்னைப் பாதியிலேயே விடமாட்டார் என்பதை நான் நன்கறிவேன்
உங்களை மிகவும் நேசிக்கிறேன், பாபா. நீங்களே எனது அன்பான தாயும், தந்தையும், ஸத்குருவும். அனைவரையும் ஆசீர்வதியுங்கள் பாபா!
ஸாயிநாத் மஹராஜருக்கு வெற்றி உண்டாகட்டும்
அல்லாவின் ஆணை [இன்ஷா அல்லா]
அனைவருக்கும் அமைதி கிட்டட்டும்.
ஸாயியைப் பணிக. அனைவருக்கும் அமைதி கிட்டட்டும்.




Translated into Tamil by: Sankarkumar
Published by : Santhipriya 

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.