Thursday, January 6, 2011

Shirdi Sai's way are exciting-Experience by a Sai devotee.


அன்பானவர்களே
இன்று புது வருடத்தில் நான்  மற்றொரு சாயி பக்தரின் அனுபவத்தை வெளியிடுகிறேன். ஜெய் சாயி ராம்
மனிஷா
--------------------
ஒரு சாயி பக்தர் எழுதியது:-
மனிஷாஜி
உங்களுடைய புது வருட வாழ்த்துகளுக்கு நன்றி. நான் இன்று எழுதி உள்ள என் அனுபவத்தை சாயியின் அனுமதியோடு வெளியிடுமாறு கேட்டுக் கொள்கிறேன். நான் இந்த வருட புத்தாண்டில் சென்னையில் சாயி பாபாவின் ஆலயத்துக்கு சென்று அவரை தரிசிக்க விரும்பினேன். ஆனால் அன்று எந்த அளவு கூட்டம் இருக்கும் என்பதை எண்ணிப் பார்க்கவில்லை. நான் ஆலயத்துக்கு சென்றபோது மாலை மணி ஏழு ஆகிவிட்டது. பாபாவின் தரிசனத்துக்காக மக்கள் வரிசையில் நின்று கொண்டு இருந்தார்கள். ஆலயத்தில் துவங்கி அடுத்த தெரு வரை மக்கள் வரிசையில் நின்று இருந்தார்கள். அத்தனை நீண்ட வரிசையாக இருந்தது. அனைத்து இடங்களிலும் தடுப்புக்கள் போடப்பட்டு காவலர்களால் மக்கள் ஒழுங்கு படுத்தப்பட்டு நகர்ந்தபடி இருந்தார்கள். உள்ளே நுழைய பல மணி நேரம் ஆகும் என்பது தெரிந்தது. 
நான் ஆலயத்தின் முன் புறம் வந்து உள்ளே செல்ல வேறு மார்க்கம் உண்டா அல்லது வெளியில் இருந்தே சாயி பாபாவை தரிசிக்க முடியுமா எனப் பார்த்துக் கொண்டே இருந்தேன். கூட்டம் கட்டுக்கு அடங்காமல் இருந்தது. வரிசையில் நின்றால் தவிர உள்ளே நுழைய சாத்தியமே இல்லை. அப்போது சிலர் வந்து வேறு வழியில் உள்ளே சென்றார்கள். அவர்களிடம் விசேஷ நுழைவு சீட்டு இருந்தது. 
நான் போய் காவலாளியிடம் நுழைவு சீட்டு எங்கே கிடைக்கும் எனக் கேட்டபோது அவன் அன்றைக்கான சீட்டுகள் அனைத்தும் மூன்று நாட்களுக்கு முன்னரே தரப்பட்டு விட்டதாகக் கூறினான்.   மணி 7.30 ஆயிற்று. வரிசையில் போய் நின்றால் உள்ளே செல்ல குறைந்தது இரண்டு மணி நேரம் ஆகும் எனத் தெரிந்தது. என்ன செய்வது? பாபாவை தரிசிக்காமல் போக வேண்டியதுதான என எண்ணினேன்.
அங்கு நின்றபடி நான் மனதில் எண்ணினேன் " சாயி, நீ பணம் மற்றும் வசதி உள்ளவர்கள் மற்றும் உள்ளே உள்ள சிலரிடம் சிநேகிதம் உள்ளவர்கள் போன்றவர்களை எந்த சிக்கலும் இல்லாமல் உள்ளே வந்து உன்னைப் பார்க்க அனுமதிக்கின்றாய். எனக்கோ உன்னைத் தவிர வேறு யாரையும் தெரியாது. என்னை இந்த காவலாளிகள் எங்கே அனுமதிப்பார்கள்" அடுத்து நடந்தது சாயியின் லீலை. எனக்கு திடீரென எதோ ஒரு எண்ணம் வர இன்னொரு காவலாளியிடம் சென்று நன்கொடை பிரிவில் உள்ள ஒருவரைப் பார்க்க வேண்டும் எனக் கூற அவனோ கோபத்துடன் உனக்கு அவரையா இப்போது பார்க்க வேண்டும். சீக்கிரம் போ.. என கடுகடுத்தபடி என்னை உள்ளே விட்டான். நான் உள்ளே நுழைந்தேன். 
நடுக் கூடம். பாபா கம்பீரமாக காட்சி தந்து கொண்டு இருந்தார். உள்ளே நுழைந்த என்னால் பாபாவின் சிலையின் ஐந்து அடி தூரத்தில் தள்ளி  நிற்க முடிந்தது. அங்கு நின்றபடித்தான் அனைவரும் சாயிக்கு பிரசாதத்தை பூசாரியிடம் தந்துவிட்டு அங்கிருந்து சாயியை வணங்கிவிட்டுச் செல்ல வேண்டும். என் கையிலும் இனிப்புப் பிரசாதம் இருந்தது. அதை பூசாரியிடம் தர மனம் வரவில்லை. என்னால் உள்ளேயும் நுழைய முடியவில்லை. ஆனால் பெரிய மனிதர்கள் பாபாவ்ன் அருகில் சென்று அவரை தொட்டு வணங்க அனுமதிக்கப்பட்டு இருந்ததைக் கண்டதும் மனதில் அது போல அவர் அருகில் செல்ல என் மனதிலும் ஆசை வந்தது.
ஆகவே நான் நன்கொடை தரும் இடத்துக்குப் போய் எனக்கு  தெரிந்தவரை பார்க்க எண்ணினேன். ஆனால் அன்று அவர் வரவில்லை. விடுமுறையில் இருந்தார்.
அதற்கு முன் ஒரு சிறிய செய்தி. நான் தீபாவளி அன்று 1500 சாயி படம் போட்ட கார்டுகளை எடுத்துக் கொண்டு அதே ஆலயத்துக்குப் போய்  அதை பக்தர்களுக்கு விநியோகம் செய்யுமாறு அங்கிருந்த ஒருவரிடம் கேட்டுக் கொள்ள அவரும் அதில் பாதியை தன்னிடம் வைத்துக் கொண்டு மீதியை சற்று தள்ளி நின்று கொண்டு இருந்த இன்னொருவரிடம் தருமாறுக் கூறினார்.
நானும் அதை கொண்டுபோய் அங்கு நின்று கொண்டு இருந்த இன்னொருவரிடம் தர அவரும் மகிழ்ச்சியுடன் அதை வாங்கிக் கொண்டு அனைவருக்கும் தரத் துவங்க நானும் அவர் பக்கத்தில் நின்று கொண்டு சிலருக்கு தந்தேன். நான் அவர் பக்கத்தில் நின்றுகொண்டு இருந்தபோது அங்கு வந்த வேறு ஒருவர் தன் நண்பரிடம் அவர்தான் இந்த ஆலய நிர்வாகி என நான் எவரிடம் கார்டுகளை தந்து இருந்தேனோ அவரைக் காட்டி அறிமுகம் செய்து கொண்டு இருந்தார். அதைக் கண்ட எனக்கு வெட்கமாகி விட அவரைப் பார்த்து சிரித்துவிட்டு அங்கிருந்து சென்று விட்டேன்.
இது நடந்தது தீபாவளி அன்று. இப்போது புது வருடம். உள்ளே ஹாலில் நின்று கொண்டு இருந்த நான் அங்கிருந்த ஒரு ஆலய சேவகரிடம் சாயியை பக்கத்தில் இருந்து தரிசிக்க உள்ளே நுழையும் பாஸ் எங்கே கிடைக்கும் எனக் கேட்டேன். அவனோ நான் பாஸைக் காட்டியே உள்ளே வந்துவிட்டதாக நினைத்துக் கொண்டு ஒரு மூலையில் இருந்த அறையைக் காட்டினார். நான் விரைவாக அந்த அறைக்குள் சென்றேன். 
அங்கு அந்த ஆலய இயக்குனர் அமர்ந்து இருந்தார். அவரைக் கண்ட நான் அவருக்கு வணக்கங்களை தெரிவித்துக் கொண்டப் பின் தீபாவளி அன்று நான் கொடுத்த படத்தை நினைவு படுத்தி என்னை நினைவில் உள்ளதா எனக் கேட்டேன். அவரும் என்னை புரிந்து கொண்டு எனக்கு என்ன வேண்டும் எனக் கேட்டார். நான் புது வருடத்தின் அன்றைய தினத்தில் சாயியை தொட்டு வணங்க வேண்டும் எனக் கூறினேன். சிறிது நேரம் அமருமாறு கூறியவர் யாரையோ அழைத்து அவருடன் என்னை அனுப்பி வைத்தார். வந்தவர் என்னை சாயியின் மூர்த்தி இருந்த இடத்தின் அருகே அழைத்துச் செல்ல பூசாரி என்னை சாயி பாபாவுக்கு சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செயுமாறுக் கூறினார். அதை செய்தப் பின் அவரிடம் நான் கொண்டுபோய் இருந்த இனிப்புப் பெட்டியைத் தர அதை அவர் பாபாவின் காலடியில் வைத்துவிட்டுத் தந்தார். அங்கு சுமார் மூன்று நிமிடங்கள் நின்று சாயியை தொட்டு வணங்கியப் பின் நான் அங்கிருந்து கிளம்பி வந்தேன்.
அன்றைக்கு நன்கொடை கவுண்டரில் இருந்தவரை நான் பார்த்து இருந்தால் பாபாவை இப்படி என்னால் தொட்டு தரிசித்து இருக்க முடியுமா? ஆகவேதான் அன்று என்னை சாயிபாபா தன்னை தரிசிக்க வரவழித்து ஆலய நிர்வாகியிடம் அனுப்பி உள்ளார். நான் தரிசனம் செய்து முடித்தப் பின் வெளியே வந்தபோது மணி எட்டு ஆகி இருந்தது. அத்தனை கூட்டத்தின்   மத்தியிலும்  என்னை உள்ளே வர சாயியே வழி வகுத்ததை எண்ணி அவருக்கு மனதார நன்றி கூறிக் கொண்டேன். நான் அதுவரை செய்த தவறுக்கெல்லாம் அவர் மன்னிப்பு தந்து என்னைக் காக்க வேண்டும் என வேண்டிக் கொண்டேன். சாயி சரித்திரத்தில் கூறி உள்ளது போல மனிதர்கள் மட்டும் அல்ல உயிர் இல்லாதவைக்  கூட சாயியின் அசைவிலேயே நடக்கின்றன.
ஜெய் ஜெய் சாயி ராம்...ஸ்ரீ சத் சிந்த ஆனந்த சத்குரு சாயிநாத் மகராசுக்கு ஜெய். 
(Translated into Tamil by Santhipriya)

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.