Thursday, February 2, 2012

Shirdi Sai Baba's Grace-Experience Of Sai Devotees-Part 28 /...... continued


.........continued Part-5
ஸாயிநாத் குருவின் ஆசியும் கருணையும்....

அன்புள்ள ஸாயி அடியவர்களே,
ஸாயியின் லீலைகளையும், ஆசிகளையும் இங்கே பரிமாறிக்கொள்ள அளிக்கும் சந்தர்ப்பத்திற்காக உங்களனைவருக்கும் வந்தங்கள்.
ஸாயியை எந்த நாளிலிருந்து நம்பத் தொடங்கினேன் என்பது சரியாக நினைவில்லை. ஆனால், தெரிந்தோ, தெரியாமலோ ஸாயி எனது வாழ்வினுள் வந்துவிட்டார். நான் ஒரு தகுதியான ஆத்மா அல்ல; ஆனால், அவரது கருணையும், அருளாசியும் மட்டுமே எங்கும் நிறைந்த அந்தப் பரம்பொருளை உணரச் செய்யும் வழியினில் என்னை இட்டுச் செல்கிறது.
ஸாயியின் பல அற்புதங்களை நான் உணர்ந்திருக்கிறேன். அவற்றையெல்லாம் மீண்டும் நினைவுபடுத்தி, அவற்றை வரிசைப்படுத்த முயற்சி செய்கிறேன். இவற்றைப் படிக்கும் அன்பர்களுக்கு பொறுமை இருக்கும் என நம்புகிறேன்:
1. ஷீர்டிக்கு நான் முதன்முறையாகச் சென்றேன். மீண்டும் சென்று எனது நாதனைப் பார்ப்பேன் என ஆசைப்படுகிறேன்.
நான் அங்கு செல்வதற்காகக் கிளம்பும் முன் தினமே அவரது லீலை தொடங்கி விட்டது. ஷீர்டி செல்லத் தேவையான பொருட்களை இன்னமும் தயார் செய்துகொள்ளவில்லை. அலுவல் வேலையால் அலுவலகத்திலேயே அன்று தங்க நேரிட்டது.முந்தைய தினமே கிளம்பி விடலாம் என நினைத்தும், எனக்கு உதவியாக வரவேண்டிய இடத்திலிருந்தும், எனது வாடிக்கையாளரமிருந்தும் வரவேண்டிய 'கோ-லைவ்' மடல் [Go-live mail] வந்ததும் அலுவலகத்திலிருந்து கிளம்பலாம் என நினைத்தேன். இரவு 8:30 அல்லது 9 மணிக்குள் அது வந்ததும் கிளம்பி வீட்டிற்குச் சென்று எனது சாமான்களை அடுக்கி வைத்துக்கொண்டு, காலை 7 மணிக்கு கிளம்பத் தயாராகி விடலாம் என எண்ணினேன்.
பொறுமையில்லாமல் காத்துக் கொண்டிருந்தேன். குறிப்பிட்ட அந்த வாடிக்கையாளர் மடல் வர இரவு 11 மணிக்கு மேல் ஆகும் எனத் தெரிய வந்தது. ஸாயிக்கு அளிப்பதற்கென வைத்திருந்த விசேஷப் பொருட்களையும் சேர்த்து, பல்வேறு சாமான்களை நான் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதால், சீக்கிரமாகவே செல்ல வேண்டுமே எனத் தவித்தேன்.
'நீங்கள் இருப்பது உண்மையெனில், என்னை விடுவிக்கும் அந்த மடல் எனக்குச் சீக்கிரமாகவே கிடைக்க அருள் செய்யக் கூடாதா? நீர் என்ன செய்து கொண்டிருக்கிறீர்? உங்களைப் பார்ப்பதற்கென எனது பொருட்களை அடுக்கி எடுத்துக்கொண்டு நான் வர நினைக்கும்போது, நீங்கள் எனக்கு இத்தனைத் தொல்லைகளைக் கொடுக்கிறீர்களே. இப்படியா நீங்கள் உமது அடியவர்களைச் சோதிப்பது?' என ஸாயியிடம் வேண்டினேன். 
9 மணி ஆவதற்கு 2 நிமிடங்கள்... மணி இரவு 8.58 அப்போது. என்னை விடுவிக்கும் அந்த மடல் அதே 8.58 க்கு வந்தது. 11 மணிக்கு முடிந்தேற வேண்டிய அந்த தயாரிப்பு வேலை [Production work] 2 மணி நேரம் முன்னதாகவே நடந்தேறியது. இன்று வரையிலும் அது எப்படி நிகழ்ந்தது என எனக்குத் தெரியாது. எப்போதுமே சொல்லப்பட்ட நேரத்துக்கும் கூடுதலாகவேதான் எங்களது பணி முடிவடையும். ஆனால் இப்படி முன்னதாகவே முடிவது இதுவே முதல் முறை.  அதன் பிறகும் இது போல நிகழவில்லை. ஜெய் ஜெய் ஸாயி ராம். மகிழ்ச்சியுடன் ஸாயிக்கு எனது வந்தனங்களைச் சொல்லிக்கொண்டு நான் குறித்த நேரத்தில் கிளம்பினேன் எனச் சொல்லத் தேவையே இல்லை.
2. ஷீர்டியில் ஸாயியைக் கண்டதும் நான் மெய்ம்மறந்து போனேன். எங்களது குடும்பத்தில் இருக்கும் நாங்கள் 6 நபர்களைக் குறிக்கும் சாட்சியாக ஸாயி எனக்கு அந்த ஆலயத்திலேயே 6 மலர்களைத் தரவேண்டும் என ஆசைப்பட்டேன். அது இரவு ஆரத்தி சமயம். இந்த ஆசை என்னுள் தோன்றிய மறு கணமே, ஸாயி ஆலய பூஜாரி, தென்னிந்திய ஆலயங்களில் நிகழ்வது போல, நேரடியாக பக்தர்களுக்குப் பிரசாதமோ, பூக்களோ தருவதில்லை என்பதை உணர்ந்தேன். எனவே அந்த எண்ணம் அத்தோடு போயிற்று. ஸாயியிடம் எனது பிரார்த்தனைகளைச் சொல்லிவிட்டு, அவரது ஆசிகளைக் கோரினேன்.
வழிபாடுகள் முடிந்த பின்னர், வெளியே வரும்போது, அங்கிருந்த பாதுகாப்புக் காவலாளர் எனது கையில் ஒரு பூங்கொத்தைத் தந்தார். அதிசயமாக அதில் சரியாக 6 மலர்கள் இருந்தன.  மெய் சிலிர்க்க எனது சின்னச் சின்ன ஆசைகளைக் கூடக் கவனமாகக் கேட்டு நிறைவேற்றியதற்காக பாபாவுக்கு எனது வந்தனங்களைத் தெரிவித்துக் கொண்டேன். ஜெய் ஸாயி ராம்.
3. மற்றொரு லீலை நான் பணி புரியும் இடத்தில் நிகழ்ந்தது. 'பணிக் குறியீட்டு சுழற்சி' [Appraisal Cycle] நிகழும் நேரம் வந்தது. அதிக நாட்கள் ஒரே இடத்தில் வேலை செய்பவர்க்கே ஊக்கத் தொகை அளிக்கப்படும் என்பதாலும், நான் சமீபத்தில்தான் பணி மாற்றம் கேட்டு விண்ணப்பித்திருந்தமையால் நான் அதற்குத் தகுதியற்றவன் எனும் காரணத்தைச் சொல்லி எனது ஊக்கத்தொகையை அப்போதுதான் குறைத்திருந்தார்கள் என்பதால், நான் ஒன்றும் அதிகமாக சம்பள உயர்வை எதிர் பார்க்கவில்லை. மேலும், எனது மேலாளருடன் [Manager] எனக்கு அப்போது சுமுகமான உறவும் இல்லை.என்பதால், நான் சற்று மனம் தளர்ந்திருந்தேன். ஸாயி ஸத்சரிதத்தைப் படித்து வந்து, அது முடியும் தருவாயில் இருந்தது.
அதை முடிப்பதற்கு இன்னும் 2 நாட்களே இருக்கும்போது, எனது மேலாளர் என்னை அழைத்தார். எதற்காக என்னை அழைக்கிறார் எனத் தெரியாமலே போனேன். நான் வியந்து போகும் வண்ணம், எனக்கு 15% ஊதிய உயர்வு கொடுத்திருப்பதாக அவர் சொன்னார். தாங்க முடியாத ஆச்சரியத்துடன் நான் ஸாயிக்கு எனது வந்தனங்களைச் சொன்னேன்.
ஸாயி ஸத் சரிதத்தை நிறைவு செய்யும் நாளன்று, 15% ஊதிய உயர்வை அறிவிக்கும் அதிகாரபூர்வ அறிவிப்புப் பத்திரம் எனது கைக்கு வந்தது. நான் இருந்த பணியிடத்திலேயே மிகவும் அதிகப்படியான உயர்வு எனக்கே கிடைத்திருந்தது.  ஸாயியுடனான பரிச்சயம் கிடைத்த முதல் ஆண்டிலேயே இப்படியொரு ஊதிய உயர்வு, அதுவும் நான் எனது மேலாளருடன் சுமுகமாக இல்லாதபோது, கிடைத்த இந்த அதிசயத்தை கற்பனை செய்துகூடப் பார்க்க முடியவில்லை. ஜெய் ஜெய் ஸாயிராம்.
ஜெய் ஸாயிராம்.
.........................தொடரும்
( Translated into Tamil by Sankarkumar )   


Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.